Tag: மேகலா இராமமூர்த்தி

  • படக்கவிதைப் போட்டி 47-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குரிய புகைப்படத்தை எடுத்துத்தந்திருக்கும் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணனுக்கும், இப்படத்தைப் போட்டிக்கு ஏற்றது என்று தேர்வுசெய்துதந்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமையின் நன்றி.

    sleeping buddha

    புவிவாழ் மாந்தர்கூட்டம் நித்தமும் படுந்துயர்கண்டு புத்தரும் மனம்சோர்ந்து நித்திரை கொண்டனரோ? என்ற கேள்வி நமக்குள் எழுகின்றது இந்தப்படத்தைப் பார்க்கும்போது!

    புத்தரின் துயில்கோலம் நம் கவிகளின் மனங்களில் எத்தகைய சிந்தனை அலைகளை எழுப்பியிருக்கின்றது என்று அறிந்துவருவோம்!

     ***

    ”அடடா…! மக்களெல்லாம் ஆசையைத் துறந்திட்டார்; அன்பை அணைந்திட்டார்; சமூகமெங்கிலும் சமாதானப் பூக்களின் மணம்! எனும் சுகமான கனவொன்று காண்கின்றார் புத்தர்” என்று விளம்புகிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அடடா,
    அகிலத்து மாந்தரெல்லாம்
    ஆசை துறந்திட்டார்,
    அன்பைத் துணைகொண்டார்..

    மாறிவிட்டனர் மனிதர்கள்,
    வேறுபாடுகள் இல்லை
    வெட்டுகுத்துகளும் இல்லை,
    எங்கும் எதிலும் சமாதானம்..

    மனிதனிடம் நோய்நொடி இல்லை
    மரணமும் இல்லை அவனுக்கு,
    நிரந்தரமாகிவிட்டான் மண்ணில்..

    இருந்துகொண்டே கனவுகாண்கிறார்
    புத்தர்,
    இதழில் புன்னகை மிளிர…! 

    *** 

    ”ஆசை அறுமின்காள்!” என்று வையத்தைப் பார்த்து நான் அறைகூவல் விடுக்கின்றேனே…! மக்களின் ஆசைகள் அறுபடவேண்டும் என்று நான்மட்டும் ஆசைப்படல் முறையோ?!” என்று தன் அறியாமையை எண்ணித் தன்னுள் நகைக்கும் புத்தரை நம்முன் நிறுத்துகின்றார் திரு. மெய்யன் நடராஜ். 

    ஆசைகளைத் துறக்கவேண்டும் என்று 
    ஆசைதானே பட்டிருக்கிறேன் நான் 
    ஆழ்ந்து சிந்திக்கும் எனக்கே  
    என் அறியாமையைப் பற்றி 
    சிரிப்பாக இருக்கிறது.

     *** 

    ”மோகனப்புன்னகை பொலியும் புத்தரின் திருமுகம் மோனத்துயில் கொண்டதேன்? எத்தனை போதித்தும் இத்தரை மானுடர் எள்ளளவும் திருந்தவில்லையே… எனும் விரக்தியால் இருக்குமோ?” என்று ஐயுற்று வினவுகின்றார் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.

     
    சித்தார்தரா அவரைப் பின்தொடரும்
    பக்த பிக்குணியா பால
    தேரோவா! பல கேள்விகள்
    தேரோடின காட்சியால் என்னுள்.
    எதுவும் கடக்குமெனும் சாந்தம்
    பொதுப் போதனை வதனம்
    மதுமிகு மோகனப் புன்னகை
    அது இறவாப் புன்னகை.

    அத்யந்த சயனம் கொண்ட
    அரசமரத்தடிப் புத்தர் எப்போது
    அமர்ந்த நிலையில் மறுபடி
    அழகு சயனம் கொண்டார்!
    தீராத நாட்டுப் பிரச்சனையால்
    பாராத முகமாய் அவர்
    இவர்கள் திருந்தார்கள் என்று
    நிகர்வில்லா ஆழ்ந்த உறக்கமா!

    மோனப் புத்தன் தூக்கம்,
    தானம் வாங்கும் தேரோக்கள்
    வானம் வெளிக்குமா! தமிழ்
    கானம் இலங்கையெங்கும் கேட்க!
    புத்தன் போதனை நாட்டில்
    சத்தின்றிப் போனது ஏன்!
    உத்தம புத்தம் ஏனோ
    மொத்தமாய்ப் பின்பற்றப் படவில்லை!

    ***

    ”தன்னுடைய பல்லையும் அங்கியையும் கேசத்தையும் புனிதப்படுத்தியோர், தான்போதித்த நேசத்தையும் நல்லறத்தையும் சேதித்து மனிதத்தை மரணிக்கவைத்துவிட்ட ஆயாசத்தில் புத்ததேவனும் நீடுதுயில் கொண்டான் போலும்!” என்பது திரு. இளவல் ஹரிஹரனின் அனுமானம்! 

    இளைப்பாறுதல்
    போதி தேவனுக்கும் தேவை….
    கால்கள் நோவ
    கால தேசங் கடந்து
    போதனைகள் பரவிய அளவு
    புனிதம் பெருகவில்லை
    என்ற ஆயாசம்….

    பல்லையும் முடியையும்
    அங்கியையும் அடியினையும்
    புனிதப்படுத்திய அளவு
    மனிதத்தை மறந்து
    புனிதத்தை இழந்தனரே
    என்ற ஆயாசம்….

    புத்தமும் சங்கமும்
    தர்மமும் போயினவோ
    பழங்கதையாய்…….

    யுத்தமும் பிரிவினையும்
    அதர்மமும் பெருகினவோ
    புதுக்கதையாய்……

    பட்டுப்போன போதிமரம்
    பால்சுரக்காதோ எனும்
    பரிவின் ஏக்கப் பெருமூச்சில்
    இன்னும் கொஞ்சம்….
    இன்னும் கொஞ்சம்….
    ஆயாசம் நீண்டு
    நீள்துயில் கொள்ள வைத்ததோ
    புத்த பகவானே.
         

    ***

    புத்தரின் அறிதுயில் காட்டும் மோனத்திருவுரு, நம் கவிஞர்களுக்குள் உறங்கிக்கிடந்த பல அரிய சிந்தனைகளைத் தட்டியெழுப்பியிருப்பதைக் கண்ணுற்று மகிழ்ந்தேன். பாராட்டுக்கள்! 

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரையும், பாராட்டுக்குரிய கவிதையையும் அடுத்துக் காண்போம்! 

    ஞானி என்பவன் தன் அகத்துள்ளே மட்டும் தன்னைத் தேடுவதோடு நின்றுவிடுவதில்லை! அவன் தேடலின் பயணம்,

    ”நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
    நீரினும் ஆரள வின்றே…” எனும் சங்கக்காதலுக்கு ஒப்பான அகலமும் ஆழமும் உயரமும் கொண்டதாய்ப் புறத்தேயும் விரிந்து பரந்தது. அவ்வாறு தன்னைத்தேடித் தானே பயணிக்கும் புத்தனின் முடிவற்ற தேடுதல் பயணத்தைப் பாடுபொருளாக்கியிருக்கும் கவிதை என்னைக் கவர்ந்தது.

    அக்கவிதை… 

    திசை வேண்டாத
    பறவையாய்
     
    ஒரு மாய பயணத்தில்
    புன்னகை மாறாமல்
    அமர்ந்திருக்கிறான் அவன்…

    அவனின்
    இருத்தலில்
    அன்பென்ற பூக்கள்
    ஆகாயம் வரை
    வளர்ந்து கொண்டேயிருக்கிறது…

    கேட்டதற்கு
    புத்தனைத் தேடி
    பயணம் என்றான்
    தொடர்ந்தபடி…

    நன்றாக தெரியும் 
    போதியில் போதனை
    சொன்ன புத்தன்
    இவன் தானென்று…!

    இருந்தும் தன்னை
    வெளியில் தேடுவதும்
    தொடர்வதும்
    எதற்கான தொடக்கம்
    என்று
    யோசித்தேன்…

    சட்டெனப் புரிந்ததில்
    காலம் உதறி,
    கர்வம் உதறிப்
    பின்தொடர்ந்தேன்,
    ஒரு புத்தனாக…! 

    காலமும் கர்வமும் உதறி, தன்னைக் கண்டடைதல் எனும் புண்ணியப் பாதையில் புத்தரின் பயணத்தை நீட்டித்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. கவிஜியைச் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்துள்ளேன். பாராட்டுக்கள் கவிஞரே!

     ***

    இந்தியத் திருநாட்டில் கருவாகி, உருவாகி, உச்சந்தொட்ட புத்தம், ஈழத்து மண்ணில் சருகாகிக் கருகி மரணித்த அவலத்தை அலசியிருக்கும் கவிதையொன்று நாடி நரம்புகளில் வேதனை மின்னலைத் தெறிக்கவிட்டது.

    அக்கவிதை…

    துக்கமுற்று, துயருற்று
    புத்தர் மகான்
    துஞ்சுகிறார் நிரந்தரமாய்,
    ஏக்கமுற்று மனது 
    வீக்கமுற்று! 
    இந்தியாவில் பிறப்பு!
    ஈழத்தில் மரிப்பு! 
    நீதி, நெறி வற்றிப் போன 
    இலங்கா புரியிலே
    ஈவு, இரக்க மின்றி
    பல்லாயிரம் தமிழ் மக்கள் 
    மானம் இழந்தார்!
    ஊனம் உற்றார்!
    உயிரிழந்தார்!
    உடல் உறுப்பிழந்தார்!
    உடைகள்
    உறிஞ்சப் பட்டார்!  
    கற்பிழக்கப் பட்டார்! 
    கால், கைகள்
    வெட்டப் பட்டார்!
    முலை அறுக்கப் பட்டார்!
    தலைகள் 
    துண்டிக்கப் பட்டார்! 
    விடுதலை
    வேண்டிப் போராடி யதற்கு!
    ஆண்டாண்டு 
    தோறும்
    சரித்திர  நாயகி 
    கண்ணீர் கொட்டி நமக்குக்
    கதை சொல்வாள் !
    ஈழத் தீவில்
    மீளாத் தூக்கத்தில்
    விடை பெறுகிறார்
    போதி மரப்
    புத்தர்! 

    சிங்களத்தீவு, புத்தர் வகுத்த அன்புக்கும் அகிம்சைக்கும் மங்களம் பாடி, பவுத்தத்தை மீளாத் தூக்கத்தில் ஆழ்த்தியிருப்பது உள்ளுந்தொறும் வேதனையை மிகுவிக்கும் ஒன்றாகும். அதனை உள்ளந்தொடும் வண்ணம் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கும் திரு. ஜெயபாரதனின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியது என அறிவிக்கின்றேன்.

    சொல் புதிதாய்ச் சுவை புதிதாய்ச் சோதிமிக்க நவகவிதை படைத்துவரும் கவிஞர் குழாத்துக்கு மீண்டும் என் பாராட்டும் நன்றியும்!

     

     

     

    Share
  • நல்வழியில் நடக்கும் தொல்குடி!

    -மேகலா இராமமூர்த்தி

    மனிதகுலம் தோன்றிய தொடக்ககாலத்தில் மனிதர்கள் தனித்தனியாகவே வாழ்ந்தனர். காலப்போக்கில் விலங்குகளிடமிருந்தும், மழை, காற்று, தீ முதலிய இயற்கைச் சக்திகளின் இடர்களிடமிருந்தும் தம்மைக் காத்துக்கொள்வதற்காகவே அவர்கள் குழுக்களாய் வாழத்தொடங்கினர். எப்போது குழுக்கள் தோன்றினவோ அப்போதே யார் அதனை வழிநடாத்திச் செல்வது? எனும் கேள்வியும் பிறந்து, ”உடல்வன்மையும் மனத்திண்மையும் வாய்ந்தவொருவனே அதற்குத் தகுதியானவன்” என்ற தீர்வையும் அவர்கள் கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தியிருக்கவேண்டும்.

    பின்னர், மாந்தகுலவளர்ச்சி காரணமாய், ஒரே இடத்தில் அனைவரும் வாழ்வதற்கு இயலாமல் மக்கள் இடம்பெயர்ந்தும், புலம்பெயர்ந்தும் குடியேறினர். அவ்வாறு அவர்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் தொழிலடிப்படையிலான பிரிவுகள் தோன்றின. அவ்வவ்விடங்களில் அவர்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலைவர்களும் தோன்றலாயினர். இதுவே நாளடைவில் முடியாட்சிமுறையை முகிழ்க்கச் செய்தது எனலாம்.

    தலைவன் ஒருவன்கீழ் ஏனையோர் அடங்கிவாழும் இத்தகைய ஆண்டான் அடிமைமுறைக்கு என்று கால்கோள் நடப்பட்டதோ அன்றே போரும் பூசலும் வேர்கொள்ளத்தொடங்கிவிட்டன. யார் அடுத்துத் தலைவனாகி அனைவரையும் அடக்கியாள்வது? யார் வையமனைத்தையும் தன் கையகப்படுத்துவது? என்ற போட்டியில் ஒற்றுமையும் சகிப்புத்தன்மையும் சகமனிதரையும் தன்னைப்போல் நேசிக்கும் அன்புடைமையும் மனிதர்களிடம் காணாமற்போயின. இன்றோ… பேராசையற்றவரை, உலகத்தோடு ஒட்டவொழுகும் உயர்ந்தோரை, நிபந்தனையின்றி அனைவரிடமும் அன்புபாராட்டும் நல்லுளம் கொண்டோரைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கின்றது! 

    இத்தகைய சூழலில், அன்பும் அமைதியும் அறவாழ்வும் வாழ்வோரை இனிக் காணவே வாய்ப்பில்லையோ என்று நாம் கவலும் வேளையில்… ”ஏன் காணமுடியாது? இதோ நாங்கள் இருக்கிறோம்!” எனும் குரல்கள் நம் காதுகளில் அமுதத்துளிகளாய் விழுகின்றன.

    ஆம்! அறத்தையும் அமைதிநெறியையும் கைக்கொண்டுவாழும் மக்கள் இன்னும் புவிப்பந்தைவிட்டு முற்றாய் அழிந்துபோய்விடவில்லை. அங்குமிங்குமாய்ச் சிலர் இன்னும் இந்நற்பண்புகளுக்கு நீர்பாய்ச்சி வளர்த்துவரவே செய்கின்றனர் என்றறியும்போது நமக்கு ஏற்படும் களிப்பு அளப்பரியது. அம்மேன்மக்கள் யார்? அவர்கள் எந்த நகரத்தில் வசிக்கின்றனர் என்று சிந்திக்கின்றீர்களா?

    அவர்கள் யாரும் நகரத்தில், நவநாகரிக உலகில்வாழும் மேட்டுக்குடியினரல்லர்; கல்வியில் கரைகண்ட அறிஞர்களும் அல்லர். பின்னர் யார்?

    Orang_Asliஅவர்கள் மலேசிய தீபகற்பத்திலுள்ள (Peninsular Malaysia) காடுகளில் வாழும் பழங்குடியினர்! என்ன வியப்பாயிருக்கின்றதா? அவர்கள் வாழ்க்கைமுறையை அறிந்தால் இன்னும் அதிகமான வியப்புக்கு நாம் ஆளாவோம்!

    அப்பழங்குடியினரின் வாழ்க்கைமுறையை அறிந்துவருவோம்! வாருங்கள்!

    ’ஓரங் அஸ்லி’ (Orang Asli = Native people/Aboriginal people) என்றழைக்கப்படும் மலேசியப் பழங்குடியினரில் 18 வகைகள் (18 types of tribes) இருப்பதாய்த் தெரிகின்றது. இவர்கள் 3 பெரும் பிரிவுகளில் அடக்கப்பட்டுள்ளனர். அத்தகைய பிரிவுகளில் ஒன்று ‘செமாங்’ (Semang). இந்தச் செமாங்கின் ஓர் உட்பிரிவுவே ’பெடக்’ (Batek) என்பது. இப்பிரிவினர் மலேசிய தீபகற்பத்திலுள்ள (Peninsular Malaysia) காடுகள், தாமான் நெகாரா தேசியப்பூங்கா (Taman Negara National Park) மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கின்றனர்.

    பொருளாதாரம்: காட்டிலிருந்து வேட்டையாடியும் சேகரித்தும் கிடைக்கின்ற காடுபடுபொருள்களை விற்றும், அரிதாக, மிகச்சிறிய அளவில் பயிர்த்தொழில் செய்தும் ஈட்டும் பொருளே இம்மக்களின் வாழ்வாதாரம். பொதுவுடைமையின் தந்தையான ’கார்ல் மார்க்ஸ்’ வந்து போதிக்காமலேயே பொதுவுடைமைத் தத்துவத்தைப் பின்பற்றுவதைத் தம் கடமையாகக் கொண்டிருப்பவர்கள் இம்மக்கள். ஆம்! தனியொருவன், (இவர்கள்) அனைவருக்கும் பொதுவான நிலத்தைத் தனதென்று உரிமைகோரும் ’ஏகபோக’ முதலாளித்துவக் கொள்கையே இவர்களிடம் கிடையாது. அவ்வளவு ஏன்… அந்தச் சிந்தனையே கேலிக்குரியது எனக்கருதுபவர்கள் இம்மக்கள்! காடும், அதிலுள்ள வளங்களும் அனைவர்க்கும் பொதுவானவை என்பதே இவர்கள் சித்தாந்தம்.

    Batek_girl_and_brotherநம்பிக்கைகளும் கொள்கைகளும்:  ஒரு மனிதன் இன்னொருவனிடம் எவ்வித நியாயமான காரணமுமின்றிச் சினங்கொள்வது, தம்மினத்தவருக்குக் காய்ச்சல், மூச்சுத்திணறல், உடல் பலவீனம், மனவுளைச்சல் முதலியவற்றைத் தருகின்ற ’கெஓய்’ (ke’oy) எனும் நோயைப் பரப்பும் என்று நம்புகின்றனர் இவர்கள். இந்த நோயால் பீடிக்கப்பட்ட ஒருவனை, இதனைப் பரப்பியதாய் மக்கள் நம்பும் இன்னொருவன், நாட்டுவைத்திய முறைகளைக் கையாண்டும், நோயாளியின் மார்பில் குளிர்ந்தகாற்றை ஊதியும் அவனுடலில் குடியிருக்கும் ’கெஓய்’ நோயை விரட்டவேண்டும்.

    இவ்வாறு, முறையற்ற ’வெகுளி’யால் சமூகத்திற்குத் தீங்குசெய்வோர் இச்சமூகமக்களின் ஆதரவை இழப்பர். ’பெடக்’ சமூகமக்களைச் ’சமாதானச் சகவாழ்வை விரும்பும் வேட்டைச்சமூகத்தினர் – 2011’-ஆக (Batek, a peaceful foraging society – 2011) என்று அறிவித்தார் அமெரிக்காவின் நியூ ஹாம்ஷையரிலுள்ள டார்ட்மவுத் கல்லூரியின் மானுடவியல்துறையின் கவுரவப் பேராசிரியரும், (Emeritus Professor, Dept. of Anthropology, Dartmouth College, New Hampshire, U.S.A.), பழங்குடியினர் குறித்த ஆராய்ச்சியில் ஆர்வத்தோடு ஈடுபட்டுவருபவருமான பேரா. கிர்க் எண்டிகாட் (Porf. Kirk Endicott)  என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

    போரைத் தவிர்த்தலும், தீர்த்தலும்: இம்மக்களிடையே கருத்துவேற்றுமைகள் ஏற்படுவது மிகக்குறைவு. அவ்வாறு ஏற்படுமாயின், பொதுமன்றில் தங்கள் பிரச்சனை குறித்து விவாதித்துத் தம் கருத்துக்கு ஆதரவு திரட்டுவது இவ்வினத்தாரின் வழக்கம். அம்முறை வெற்றிதராதாயின், கருத்துவேற்றுமை ஏற்பட்ட குழுக்களில் ஒன்று, மற்றொரு குழுவோடு தமக்கு விளைந்த கசப்புணர்வும் அதிருப்தியும் மாறும்வரை – மறையும்வரை, சிறிதுகாலம் தம் சமூகத்தைவிட்டு வெளியேறிவிடுமாம். சிறிதுகாலம் சென்றபின்பே மீண்டும்வந்து தம் மக்களோடு இணையுமாம். ’காலமெனும் மாமருந்து… கோபத்தையும் விரோதத்தையும் ஆற்றும் அருமருந்து’ என்று கண்டறிந்து செயற்படும் இம்மக்களின் உளவியலறிவு பிரமிப்பை ஏற்படுத்துகின்றது.

    சமூகத்தில் ஆண், பெண் நிலை: இக்குடியினரில், ஆடவரே பொதுவாக வேட்டைத்தொழிலைச் செய்வோராகவும், பெண்டிர் காய்கனிகளைச் சேகரிப்போராகவும் விளங்குகின்றனர். எனினும், இருவரின் உழைப்பும் சமமாகவே மதிக்கப்படுகின்றது. அரிதாக, வேட்டையில் பெண்டிரும், காய்கனி சேகரிப்பில் ஆடவரும் ஈடுபடுவதுண்டு. ’இந்தத் தொழிலை இவர்தான் செய்யவேண்டும்’ எனும் கடுமையான வரையறையோ, ஆடவரையும் பெண்டிரையும் பால் அடிப்படையில் பிரித்துப்பார்க்கும் நடைமுறையோ இவர்களிடம் இல்லை.

    திருமணங்களும் ஆண், பெண் இருவரின் அன்பின் அடிப்படையிலும் அவர்களிடம் காணப்படும் ஒத்தகுணங்களின் (பொருத்தத்தின்) அடிப்படையிலுமே அமைகின்றன. சமூகத்தின் அடக்குமுறையும், ஆதிக்கமும் காதலுக்குக் குறுக்கேநின்று குந்தகம் செய்வதில்லை. ஒத்த தலைவன் தலைவியருக்கிடையே அமையவேண்டிய ’பத்துவகைப் பொருத்தங்கள்’ குறித்து ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியம் சொல்வதை இங்கே நாம் பொருத்திப்பார்க்கலாம்.

    ”பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
    உருவு
    நிறுத்த காம வாயில்
    நிறையே
    அருளே உணர்வொடு திருஎன

    முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” (தொல்: பொருள்: 488)

    தொல்காப்பியம் அறியாத்தொல்குடியினரான இவர்கள் அந்நெறி நிற்பது வியப்பே!

    இத்தகைய உளமொத்த காதல்வாழ்விலும், அத்திபூத்தாற்போல், கணவன் மனைவியரிடையேயான உறவில் விரிசல்கண்டுவிடுமானால் அவர்கள் இருவரும் மணவிலக்குப் பெறுவதையும் இச்சமூகம் அனுமதிக்கின்றது. அவ்வாறு மணவிலக்கு நிகழ்ந்துவிடும் சூழலில், மணவிலக்குப்பெற்ற பெண் தன் சுற்றத்தையும் நட்பையும் சார்ந்துவாழ வேண்டியவளாகின்றாள்.

    குழந்தை வளர்ப்பு: ’பெடக்’ சமூகத்தைச்சேர்ந்த பெற்றோர் தம் Batekman1குழந்தைகளைக் கொண்டாடுவதிலும், கொஞ்சுவதிலும், அவர்களோடு நேரம் செலவழிப்பதிலும் மிக்க ஆர்வம் உடையவர்கள். இதில், ஆண்குழந்தை பெண்குழந்தை எனும் பேதமில்லை அவர்களிடம்! பெற்றோர், குழந்தைகளை அடிப்பதும் தாக்குவதும் அரிதினும் அரிது. ஏனெனில் தாக்குதல், கொல்லுதல் எனும் பொருள்களில் கையாளப்படும் ’சேகல்’ (sakel) எனும் சொல், இச்சமூகத்தினரால் கடுமையாக வெறுத்து ஒதுக்கப்பட்ட சொல்லாகும். தாக்குதல் எனும் சொல்லையே வெறுப்பவர்கள் அதனைச் செயலில்காட்ட முனைவரா? குழந்தைகள்விளையாட்டில்கூட முரட்டுத்தனமோ, வன்முறையோ ஒருவரோடு ஒருவர் போட்டியிடுவதோ கூடாது என்றெண்ணுபவர்கள் இவர்கள். இவ்வினமக்களைப் பெற்றோராகப் பெறும் பிள்ளைகள் பேறுபெற்றோரே என்று எண்ணத்தோன்றுகின்றது!

    சமுதாய நடைமுறைகள்: இச்சமூகத்தினரில், ஒத்தசெயல்களில் ஆர்வம்கொண்ட பலர் ஒன்றுகூடி அச்செயல்களில் ஈடுபடுதல் வழக்கம். அவற்றிலொன்று மீன்பிடித்தல். எப்போதும் சுறுசுறுப்புடன் திகழும் இம்மக்கள் சோம்பித்திரிவதை விரும்புவதில்லை. ஏனெனில், ஒருவருடைய சோம்பல் இன்னொருவருக்கு வேலைப்பளுவைக்கூட்டும் என நினைக்கின்றனர்.

    சுயமதிப்பீடு: ’கானகமே தம் உறைவிடம்’ என்றெண்ணும் இவ்வினத்தார், தம்மைக் ’கானவராய்’ அடையாளப்படுத்துவதையே விரும்புகின்றனர். காட்டில் எந்த இடத்தில் தங்க விழைகின்றனரோ அங்கே குடிசைபோட்டுத் தங்குவதைத் தம் வழக்கமாய்க்கொண்டிருக்கின்றனர். கானகவாசம் குளிர்ச்சியையும், நல்ல உடல்நலத்தையும் தமக்குத்தருவதாய்க் கருதுகின்ற இம்மக்கள், மரங்களடர்ந்த காட்டைவிட்டு, வெப்பம்மிகுந்த திறந்தவெளிகளில் தங்குவதை விரும்புவதில்லை.

    பகிர்ந்துண்ணல்: ’பெடக்’ சமூகத்தைப் பொறுத்தவரை, தாங்கள் வேட்டையில் சேகரித்த உணவுப்பொருள்கள் அனைத்தையும் பகுத்துண்டுவாழும் பண்புகொண்டோராய்த் திகழ்கின்றனர். தம் இல்லங்களில் சமைக்கப்படும் உணவைத் தட்டிலிட்டு அதனைத் தம் பிள்ளைகளின் தளிர்க்கரங்களில் தந்து, மற்றவருக்கும் பகிர்ந்தளித்து உண்ணுதல் என்பது இவர்களின் வாழ்க்கைமுறையாய் இருக்கின்றது. பகுத்துண்ணலின் மகத்துவத்தைக் குழந்தைகளும் அறியவேண்டும் என்பதற்கான ஏற்பாடே இது. உணவு மட்டுமல்லாது, இவர்களுக்குப் பரிசிலாய்க் கிடைக்கும் பொருள்களையும்,  வணிகத்தின் வாயிலாய்ப் பெறும்/வாங்கும் பொருள்களையும் இவர்கள் பிறரோடு பகிர்ந்துகொள்ளத் தயங்குவதில்லை.

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
     (322) என்ற வள்ளுவத்தை இவர்கள் எங்குக் கற்றனர்?

    போருக்கும் வன்முறைக்கும் எதிரான அணுகுமுறை: இத்தொல்குடி மக்கள் வன்முறைக்கு முற்றிலும் எதிரானவர்கள். யாரேனும் பகைவர் தம்மைத் தாக்கவந்தால், எதிர்த்தாக்குதல் தொடுக்காமல் அவர்களிடமிருந்து தப்பியோடிவிடுவதையே தம் வழக்கமாய் வைத்திருக்கின்றனர். இது பயத்தினால் அன்று! பகைவனுக்கும் அருளும் இவர்தம் நன்னெஞ்சில் விளைந்த பாசத்தினால்!

    1988-ஆம் ஆண்டு, பெடக் மக்களை அவர்கள் வசிக்கும் காட்டுப்பகுதிக்கே சென்று சந்தித்த பேராசிரியர் எண்டிகாட், இவ்வினத்தைச்சார்ந்த மனிதன் ஒருவனிடம், “உம்முடைய முன்னோர் ஏன் தம்மைத் தாக்கியோரைத் துப்பாக்கியால் சுடவில்லை?” (“Why didn’t his ancestors shoot the attackers?”) என்று வினவியுள்ளார். அதற்கு அம்மனிதன் சற்று அதிர்ச்சியோடு, ”ஏனெனில், அவ்வாறு தாக்குவது அவர்களைக் கொன்றுவிடுமே!” (“Because it would kill them”) என்று பதிலிறுத்திருக்கின்றான். இப்பதில் அந்தப் பேராசிரியரை மட்டுமன்று…நம்மையும் திகைக்கவைக்கின்றது!

    ”வன்முறை, மற்றவருக்குத் துன்பமிழைத்தல், பழிவாங்குதல் போன்ற இழிகுணங்களை முற்றாய் வெறுத்தொதுக்கிய மக்கள் இவர்கள்!” என்று இவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கும் பேராசிரியர் எண்டிகாட், அண்டையில் வாழும் மலேசிய மக்களால் தமக்கு ஏற்படும் தொந்தரவுகளைத்தவிர்க்க இம்மக்கள் அவ்விடங்களைவிட்டு அகன்றுசெல்கின்றனரேயொழிய அவர்களை எதிர்த்துத் தாக்குதலோ, போரோ புரிவதில்லை என்று பதிவுசெய்திருக்கின்றார் (It was recorded in 1988).

    வான்புகழ் வள்ளுவரின் தெய்வக்குறள் போதிக்கும் இன்னாசெய்யாமை, சான்றாண்மை, ஈகை, ஒப்புரவு, அன்புடைமை, விருந்தோம்பல் உள்ளிட்ட அனைத்து அறப்பண்புகளையும் தம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கின்றனர் மலேசியக் கானகவாசிகளான பெடக் மக்கள்.

    நகரங்களில் வாழ்ந்தால்தான் நாகரிகம் வளரும்; பண்பாடு மிளிரும் என்ற எண்ணத்தில் நகரங்களை நாடிச்சென்று வாழ்ந்துவரும் நாகரிக மனிதர்களிடத்தும், அனைத்து அறநூல்களையும் எழுத்தெண்ணிப் படித்துவிட்டோம் என்று தருக்கோடும் செருக்கோடும் செப்பித் திரியும் மெத்தப்படித்த மேதைகளிடத்தும் காணக்கிடைக்கா அரும்பண்புகள், ’கானவர்’ என்று தம்மைப் பெருமிதத்தோடு புகலும் படிப்பறியா, உலகின் பாடறியா இத்தொல்குடியினரிடம் நிறைந்து கிடக்கின்றது!

    காட்டில் வாழ்ந்தாலும், கல்வியில் (நகர்வாழ் மக்களினும்) தாழ்ந்தாலும், நயத்தகு நாகரிகத்திலும், வியத்தகு (மாந்தப்) பண்புகளிலும் நாடுவாழ் நல்லறிஞரினும், காடுவாழ் இத்தொல்குடியினர் பன்மடங்கு உயர்ந்துநிற்கின்றனர். இத்தகையோராலேயே மானுடம் வெல்கின்றது!

    *** 

    கட்டுரைக்கு உதவியவை:

    https://en.wikipedia.org/wiki/Orang_Asli
    https://en.wikipedia.org/wiki/Batek_people
    https://cas.uab.edu/peacefulsocieties/societies/batek/

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (47)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12506951_942661739121359_512540480_n
    ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    134429018@N04_rஇந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (9.01.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 46-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. வாசகன் பாலசூரியனின் வண்ணப்படத்தை இவ்வாரத்தின் போட்டிப்படமாகத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் வல்லமை இதழின் நன்றி!

     boy in a swing

    ’யாரிடமும் பூசலின்றிப் பிணக்கின்றி ஊசலாடி மகிழ்ந்திருந்தால் வாழ்வே பூக்கோலந்தான்!’ என்று தன் புன்னகையால் புரியவைக்கின்றான் இந்தப் பாலகன். கள்ளமற்ற அவன் காந்தப்புன்னகை உள்ளம் தொடுகின்றது!

    அடுத்து, போட்டிக்கு வந்துள்ள கவிதைகளைக் கண்ணுறுவோம் வாருங்கள்!

    ***

    ஊனமான பொம்மையும், உடைந்த ஊஞ்சலுங்கூட வஞ்சமிலா நெஞ்சு படைத்த பிஞ்சுக்குழந்தைகட்குக் குதூகலத்தையும் மகிழ்வையும் தந்துவிடுகின்றன. பெரியவராகும்போதுதான் ’போதும்’ எனும் பெருந்தனம் நம்மிடமிருந்து காணாமல் போய்விடுகின்றது என்று வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வஞ்சித்துவிட்டாலும் வறுமை,
    வஞ்சம் கொஞ்சமுமில்லை
    பிஞ்சுகள் நெஞ்சினிலே,
    அதனால்
    பஞ்சமில்லை சிரிப்புக்கு..

    ஊனமான பொம்மையிலும்,
    உடைந்த ஊஞ்சலிலும்
    கிடைத்துவிடுகிறது பேரானந்தம்..

    அடைத்துவிடுகிறது இந்த
    அமுத நீரூற்று,
    போதுமென்ற பெருந்தனம்
    போய்விடுகிறது,
    பிள்ளை
    பெரியவன் ஆனதும்..

    மாறுவானா மனிதன்
    மழலையரைப் பார்த்தாவது…!

    ***

    கற்பனைச் சிறகில் விரிகின்ற புதுஉலகினை விதைப்பது இச்சிறுவனின் முறுவலோ? என்று வியக்கிறார் திரு. கவிஜி.

    இல்லாத தேசத்தில்
    இரை தேடும்
    பறவையொன்றின்
    தொலைந்து போன
    ஒரு பாதை
    நீண்டு கிடப்பதான
    கற்பனையில்
    உதிர்க்கின்ற ஒரு இறகு
    புது உலகை
    விதைக்கத் தொடங்குகிறது,
    அது இவன் புன்னகையாகவும்
    இருக்கலாம்…

    ***

    ஆணி கழற்றிய பலகையில் ஆணிக்கையாய் ஆடுகின்றான் சிறுவன். இந்தப் பலகையின் பழுதை நீக்கி அதனைக் குழந்தைகள் ஆடுதற்கேற்ற ஆசனமாய் மாற்றிடல் வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.

    நாணிட வேண்டிய விடயம்
    பேணிப் பாதுகாக்காத விளையாட்டிடம்!
    ஆணி களட்டிய பலகையது
    ஆணிக்கையாகத் துணிந்து ஆசனமாக்கியது.

    பட சட்டத்தின் நடுவில்
    அடக்கிக் கட்டி, அமர்ந்து
    படபடப்பின்றி ஆடுகிறான் ஊஞ்சல்!
    அடடா! ஏழைக்கேற்ற எள்ளுருண்டை!

    விழுந்திடாது பிடிக்கும் உறுதியும்
    வழுகும் பலகையைக் கால்களால்
    அழுத்தும் சாதுரியச் சிரிப்பும்
    வாழ்வின் சவாலின் ஏற்பு!

    துள்ளும் மகிழ்வில் ஆடுகிறான்
    உள்ளதை வள்ளிசாக அனுபவித்துப்
    பிள்ளைகள் மகிழ்வாரவர் குணமது!
    அள்ளும் வாழ்க்கைப் பாடமது!

    பிள்ளைகள் விளையாட்டிடத்தை வளமாக
    பிரிதியுடன் பராமரித்தல் அவசியம்
    பிற்போக்கு நிலைமை மாறட்டும்!
    பிரதான கடமை மேலிடத்திற்கு! 

    (ஆணிக்கை – உறுதி)

    ***

    சிறுவனின் ஊ(ஞ்)சலாட்டம் உணர்த்திடும் வாழ்வியல் உண்மைகளைப் பாங்குறப் பதிவுசெய்திருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது எது, அதன் ஆசிரியர் யார் என்று காண்போம்!

    கள்ளமற்ற வெள்ளை உள்ளம் பிள்ளைகளுடையது. அவர்களால் மட்டுமே சிறிய விஷயங்களில்கூடப் பெரிய இன்பத்தைக் காணமுடிகின்றது. தம் மனத்தைத் துயரின்றிப் பேணமுடிகின்றது. இந்தக்கலையை பெரியவர்களும் கற்றால் ’பேராசை’ எனும் வார்த்தையே வையத்தில் வழக்கொழிந்து போகுமே!

    ”இதோ ஒரு சிறுவன் உடைந்த ஆசனத்தையும் அரியாசனமாய் எண்ணி ஆடுகின்றான்! முகத்தில் மகிழ்ச்சியோ கரைபுரண்டு ஓடுகின்றது. அவன் ஊசலை உந்தி முன்னேறுவது போலவே நாமும் வாழ்வில் உந்துதலோடு முயன்றால் அனைவரையும் முந்தலாம் என்கிறது ஒரு கவிதை; தருகிறது மனத் தெளிவை!

    போகி யால்
    யாரோ போக்கிய
    உடைந்த ஊஞ்சல்
    பழைய இரும்பு
    எடுப்பவனிடம் சிக்கப்
    பழசானாலும்
    புதிதாய்த் தெரிந்தது
    அவன் மகனுக்கு
    அடுத்த நாளே அதை
    அரசு கட்டிலாக்கி
    அரியணனை ஏறினான்
    ஆனந்தமாய் வீசிவீசிஆட
    தூசியாய் தெரிந்தது துயரம்
    மகனின் உல்லாசம்
    பெற்றவனையும்
    தொற்றிக்கொண்டது
    சுடுபட்ட வாழ்க்கை
    விடு பட்டதுபோல்
    ஊஞ்சல் ஆட்டம்
    உல்லாசமானதுதான்
    சிதறிக்கிடக்கும்
    சீர் கெட்டவாழ்க்கை
    உதறி உந்தி உந்தி ஆடி
    உவகை அடைந்தான்
    கிடைப்பதைக் கொண்டு
    திருப்திப்படும் வாழ்க்கை
    புரிந்து சகித்து
    பொருந்தியே வாழும்
    பாடம் எல்லோருக்கும்
    பொருந்தும்தானே!

    ’கிடைப்பதில் நிறைவாய் வாழ்வதே வாழ்க்கை’ என்று முத்தாய்ப்பாய்த் தன் கவிதையை முடித்திருக்கும்  திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    ***

    ’ஆண்டவன் ஆட்டுவிக்கும் ஊஞ்சலே இம்மானுட வாழ்க்கை; இதனை ஆடும் வகையில் ஆடினால் வாழ்வு பொருள்படும்; இல்லையேல் வாழ்வே இருள்படும்’ எனும் தத்துவ முத்தைத் தந்திருக்கும் கவிதையொன்று சிந்தை கவர்ந்தது.

    இருப்பதைக் கொண்டு
    மகிழ்வுடன் இங்கு
    இருப்பதே வாழ்க்கை…..இதைக்
    கருத்துடன் கூறும்
    சிறுவனின் சிறுமுகம்
    சிந்தனை நோக்கை.

    எத்தனை துயரம்
    இடரெது வரினும்
    இலேசாய்க் கொண்டால்…மனமே
    அத்தனைத் துயரையும்
    அழிந்திடச் செய்யும்
    அகத்தில் குழந்தை ஆனால்.

    ஊஞ்சல் என்பது
    ஆடிடும் வாழ்க்கை
    யார்க்கும் எளிதாய் அமைவது…அதை
    ஆடும் விதத்தில்
    ஆடி மகிழ்ந்தால்
    அற்புதமாகும் வாழ்வது.

    சிதைந்த ஊஞ்சல்
    அறுந்த சங்கிலி
    சிந்தையில் காட்டும் பாடமிது…இந்தத்
    திறந்த வெளியே
    பாடம் புகட்டும்
    சிறந்த பள்ளிக் கூடமிது.

    பூக்கள் மலரும்
    குழந்தையின் சிரிப்பில்
    பூங்காவாகும் நாட்கள்….கவிப்
    பாக்களில் வளரும்
    பருவங்கள் தோறும்
    வாழ்க்கைப் புத்தகத் தாள்கள்.

    எல்லாம் அறிவோம்
    எதுவும் அறியோம்
    என்பது தானிங்கு வாடிக்கை….இதை
    எண்ணி ஒவ்வொரு
    மணித்துளிஂவாழ்ந்தால்
    வாழ்க்கை வாண வேடிக்கை. 

    ’ஊஞ்சலில் அமர்ந்து வாழ்வியலை உபதேசிக்கின்றான் இந்தச்சிறுவன். இவன் மனநிலையை நாமும் பெற்றால், வாழ்வே வண்ணம் சிந்தும் வாணவேடிக்கைதான்’ எனும் திரு. இளவல் ஹரிஹரனின் கவிதை பாராட்டுக்குரியதாய்த் தேர்வுபெறுகின்றது.

    பங்குபெற்ற அனைவருக்கும் என் நன்றி!

     

     

    Share
  • விளையாட்டிலும் வெளிப்பட்ட வீரம்!

    -மேகலா இராமமூர்த்தி

    வீரமும் காதலும் தமிழர்வாழ்வின் இருகண்கள் என்பது நாம் அடிக்கடிக் கேட்கும் வாசம்தான்! ஆம்! அன்றையமக்களின் வாழ்வில் வீரமும் காதலும் இணையில்லா இருபெரும் உணர்வுகளாகவே காட்சியளித்திருக்கின்றன என்பதற்கு நம்இலக்கியங்கள் சாட்சிகூறுகின்றன. காதலைப் பாடும் அகத்திணைப்பாடல்கள் எண்ணிக்கையில் மிகுதி; எனினும், வீரத்தை விதந்தோதிய பாடல்களுக்கும் பஞ்சமில்லை. முடிமன்னர் கோலோச்சிய அன்றைய தமிழகத்தில், ’(போர்செய்து) விழுப்புண்படாத நாளெல்லாம் வீண்நாளே!’ என்பதே தமிழக வீரர்களின் எண்ணமாயிருந்திருப்பதை வான்புகழ் வள்ளுவரும் திருக்குறளில் தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

    விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள்
    வைக்கும்தன் நாளை எடுத்து.
    (776)

    போரற்ற காலங்களில் ‘போரடிக்காமல்’ (not to get bored) பொழுதுபோக்குவதற்குக்கூட வீரவிளையாட்டுக்களையே நாடியிருக்கின்றனர் நம்மவர்! அவ்வாறு அவர்கள் விளையாடிய வீரவிளையாட்டுக்கள் சிலவற்றை இங்கே நாம் நினைவுகூர்வோம்!

    ஏறுதழுவுதல்: ஏற்றினைத் தழுவி அதன் திமிலைப்பிடித்து வீரஆடவர் அடக்குதலே ஏறுதழுவுதல் அல்லது ஏறுகோளாகும் (it is a bull-taming sport). இவ்விளையாட்டு ஆநிரைகளைத் தம் செல்வமாய்க்கொண்டிருந்த முல்லைநிலத்து மக்களிடையே அன்று மிகச்சாதாரணமாய் நடந்த ஓர் நிகழ்வு என்பதைச் சங்க இலக்கியம் நமக்கு அறியத்தருகின்றது. காளைகளின் கொம்பைப்பிடித்தல் ஆண்மை, வாலைப்பிடித்தல் தாழ்மை என்பது தமிழர்கொள்கை.

    முல்லைநிலத்துக் காரிகையரின் கைத்தலம்பற்ற அப்பகுதியைச்சார்ந்த ஆடவர் ஏறுதழுவுதல் எனும் வீரவிளையாட்டில் வென்றேயாகவேண்டும் என்பது நியதி. வளமான புல்லையுண்டுத் தளதளவெனக் கொழுத்துநின்ற ஏறுகள், கொடும்புலிகளையும் குத்திக்கொல்லும் வீரமும் ஆற்றலும் மிக்கவை. ஆதலால், அவற்றைக் ’கொல்லேறு’ என்று குறிப்பிட்டனர் மக்கள். அந்தக்கொல்லேற்றின் கொம்பைக்கண்டு அஞ்சாத வீரமறவரையே அந்நிலத்துமகளிர் மணப்பர். அவ்வாறில்லாது, ஏற்றைக்கண்டஞ்சித் தோற்றோடுவோனின் தோள்களை இம்மை மட்டுமின்றி மறுமையிலும் தழுவ மாட்டார்கள் அப்பெண்டிர்!

    இதைத்தான்,

    கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
    புல்லாளே ஆயமகள்
    என்கின்றது முல்லைக்கலி.

    Madurai-alanganallur-jallikattuஅற்றைநாளைய ஏறுதழுவுதலே இற்றைநாளைய ’சல்லிக்கட்டாகும்.’ மதுரை மாவட்டத்தைச்சார்ந்த அலங்காநல்லூர் எனும் ஊர் தமிழ்மரபின் எச்சமான இவ்வீரவிளையாட்டை அழிந்துவிடாமல் காக்கும் ஊராய்த் திகழ்ந்துவருகின்றது. சில்லாண்டுகளாக, இவ்விளையாட்டில் விதிமீறல்கள், அரசியல் போன்றவை (விரும்பத்தகாதவகையில்) உள்நுழைந்ததால் உச்சநீதிமன்றம் இவ்விளையாட்டுக்குப் ’பிராணிவதை’ என்று முத்திரைகுத்தித் தடைவிதித்துவிட்டது. அத்தடையைவென்று, நம்மறவரின் மாண்பைக்காட்டும் இவ்வீரவிளையாட்டு தமிழ்மண்ணில் மீண்டும் உயிர்த்தெழும் என்று நம்புகின்றனர் சல்லிக்காட்டு ஆர்வலர்கள்!

    மல்லாடல்: மற்போர் (wrestling) என்ற பெயரில் அன்று நடைபெற்றுவந்த மல்லாடலும் ஓர் வீரவிளையாட்டே! தமிழகத்தில் வீரமல்லர்கள் பலர் அன்றிருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவன் உறந்தையிலிருந்த (உறையூர்) வேளிர்தலைவனான தித்தனின் மகனான பெருநற்கிள்ளி. அழகும் ஆற்றலும் ஒருங்கே பொருந்திய வீரஇளைஞனான பெருநற்கிள்ளி, ’போரவை’ என்று அழைக்கப்பட்ட மற்போர் பயிற்சிக்கூடமொன்றை நடாத்திவந்தமையால் ’போரவைக் கோப்பெருநற்கிள்ளி’ என்றே இவனை அழைத்தனர் புலவோர். யாது காரணத்தாலோ, ’நொச்சிவேலித் தித்தன்’ என்று பரணரால் புகழந்துபோற்றப்பட்ட (அகம்.122) தித்தனுக்கும், அவனுடைய வீரமைந்தனான பெருநற்கிள்ளிக்கும் மனவேறுபாடு வந்துவிட்டது. அதனால், மகனென்றும் பாராது கிள்ளியை ஊரைவிட்டு வெளியேற்றிவிடுகின்றான் தித்தன்.

    அத்தனால் (தந்தை) வெளியேற்றப்பட்ட பெருநற்கிள்ளி பலவிடங்களில் சுற்றிவிட்டு ஆமூர் எனும் ஊரில்வந்து தங்கியிருந்தான். அவ்வூரில் புகழ்பெற்ற மல்லன் ஒருவன் இருந்தான். அவன் பெருநற்கிள்ளி மல்லாடலில் வல்லவன் என்றறிந்து அவனை மல்யுத்தத்துக்கு அறைகூவியழைத்தான். சிலிர்த்தெழுந்த கிள்ளி, அந்த மல்லனின் மார்பின்மீது ஒருகாலும், முதுகின்மீது மற்றொருகாலும் வைத்து அவன் மதவலியை முருக்கி, பசித்த யானை மூங்கிலைத் தின்பதுபோல், அவன் தலையையும் காலையும் முறியமோதி அவனை வென்றான். இந்தக் காட்சியைக்கண்டு வியப்பும் பெருமிதமும் அடைந்த புலவர் சாத்தந்தையார், “மகன்புரிந்த இந்த அற்புதப்போரினை தித்தன் (விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்) கண்டிருக்கவேண்டுமே!” என்று மெய்புளகித்துப் பேசுகின்றார்.

    …. ஆமூர் ஆங்கண்
    மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
    ஒருகால் மார்பொதுங்கின்றே; ஒருகால்
    வருதார் தாங்கிப் பின்னொதுங்கின்றே
    நல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்
    போர் அருந்தித்தன் காண்கதில் அம்ம
    பசித்துப் பணைமுயலும் யானை போல
    இருதலை ஒசிய எற்றிக்
    களம்புகு மல்லர் கடந்தடு நிலையே. (புறம் – 80)

    வேட்டையாடல்: வேட்டையாடுதல் அன்று சிலருக்குத் தொழிலாகவும் சிலருக்குப் பொழுதுபோக்கான வீரவிளையாட்டாகவும் விளங்கிற்று. வேட்டையைத் தொழிலாகக்கொண்டோர் ’வேடர்’ என்றும் ’வேட்டுவர்’ என்றும் அழைக்கப்பட்டனர். குறுநிலமன்னர்களான வேளிரும், பெருநிலமாண்ட வேந்தரும் இதனைப் பொழுதுபோக்காய்க் கொண்ருந்தனர். கொல்லிமலைத் தலைவனான ’வல்வில்’ ஓரி, ஓர் அம்பிலேயே யானை, புலி, மான், முள்ளம்பன்றி, உடும்பு என ஐந்து விலங்குகளை வீழ்த்தும் வில்லாளனாய்த் திகழ்ந்தான். அதன்காரணமாய், வில்லிலே வல்லவன் எனும்பொருள்பட ‘வல்வில்’ ஓரி என்று விளிக்கப்பட்டான்.

    விலங்குகளுக்கு வீடுபேறளிக்கும் கொலைத்தொழிலாக வேட்டம் விளங்கியபோதினும், அதிலும் ஓர் அறநெறியைப் பேணினர் வேட்டுவர் என்பதைக் கண்ணப்பநாயனார் புராணம் கவினுறக் கழறுகின்றது. ஆம்! விலங்குகளின் குட்டிகளையும், கருவுற்று வயிறலைத்து ஓடும் பெட்டை விலங்குகளையும் கொல்லாது விடுத்து, வலிய விலங்குகளை வேட்டையாடுவதையே வேட்டுவர் தம் வழக்கமாய்க்கொண்டிருந்தனர் என்றறியும்போது, வீரத்திலும் வெளிப்படும் அவர்தம் ஈரம் நம்மை நெகிழ்ச்சியுறச்செய்கின்றது.

    இச்செய்தியைப் பெரியபுராணம் மிடுக்கான சொற்களில் எடுத்தியம்புவதைக் காணுங்கள்.

    துடியடியன மடிசெவியன  
       துறுகயமுனி தொடரார்
    வெடிபடவிரி சிறுகுருளைகள்
     
       மிகைபடுகொலை விரவார்
    அடிதளர்வுறு கருவுடையன
     
       அணைவுறுபிணை அலையார்
    கொடியனஎதிர் முடுகியும்உறு
     
       கொலைபுரிசிலை மறவோர்   (பெ.புராணம் – கண்ணப்பநாயனார் புராணம்)

    இவ்வேட்டைக்கலை சங்ககாலத்தோடு மங்கிவிடவில்லை. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்து, வெள்ளையரை எதிர்த்து வீரமரணடைந்த மருதுசகோதரர்களில் மூத்தவரான பெரியமருது மிகச்சிறந்த வேட்டைக்காரராய்த் திகழ்ந்திருக்கின்றார். இச்செய்தியை, அவர்களோடு நெருங்கிப்பழகிய ஆங்கிலஅதிகாரி ஒருவர் தன்நூலில் பதிவுசெய்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ஆனைப்போர்: மனிதரும் மனிதரும் புரிந்துவந்த போர் போதாதென்று விலங்கினங்களையும் மோதவிட்டு வேடிக்கைப்பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர் பண்டைத்தமிழர். அவற்றில் ஒன்று ஆனைப்போர். கருமலை போன்ற ஆனைகளை ஒன்றோடொன்று பொருதச்செய்து கண்டுகளித்திருக்கின்றனர் சீமான்களும் கோமான்களும். இப்போரைப் பாதுகாப்பாய்க் காண்பதற்கென்றே அரசர்களின் தலைநகரங்களில் அன்று தனிமாடங்கள் இருந்தனவாம்.

    வள்ளுவரும், செல்வத்தைத் தன்னிடமுடைய ஒருவன் ஒருசெயலைத் தொடங்குவது, குன்றிலே ஏறிநின்று (கீழேநிகழும்) யானைப்போரைப் பார்ப்பதுபோல் பாதுகாப்பானது என்று கூறுவதை இங்கே நாம் நினையலாம்.

    குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
    உண்டாகச் செய்வான் வினை
    .  (758)

    ஆட்டுப்போர்: ஆனைப்போரைப்போலவே ஆட்டுக்கடாக்களை மோதவிட்டுக் களித்திருக்கின்றனர் தமிழ்க்குடியினர். அதற்கென்றே ஆட்டுக்கடாக்களைச் சிலர் வளர்க்கவும் செய்திருக்கின்றனர். இவற்றைப் ’பொருதகர்’ என்கின்றார் தெய்வப்புலவர்.

    ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
    தாக்கற்குப் பேருந் தகைத்து.
    (486)

    (ஊக்கமுடையவன் (காலம்பார்த்து) ஒடுங்கியிருப்பது, ஆட்டுக்கடா தாக்குவதற்குக் காலம்பார்த்து எவ்வாறு பின்வாங்குமோ அதனை ஒக்கும்.)

    சேவற்போர்: பறவையினங்களையும் போரின்றி இருக்கவிடவில்லைcock fight நம்மனோர். கோழிச்சேவல்கள், காடைகள் போன்றவற்றையும் போரில் ஈடுபடுத்தி அவற்றை ஆர்வத்தோடு கண்டுகளித்திருக்கின்றனர். சேவல்களின் கால்களில் முள்ளையோ கத்தியையோ கட்டிச் சற்றுக்கோரமாய்ப் போரிடச்செய்திருக்கின்றனர் என்று அறிகின்றோம்.

    கறுப்புறு மனமும் கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி
    உறுப்புறு படையின் தாக்கி உறுபகை இன்றிச் சீறி
    வெறுப்புஇல களிப்பின் வெம்போர் மதுகைய வீரவாழ்க்கை
    மறுப்பட
    ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும்;

    என்று சேவற்போரின் தன்மையைக் கம்பகாவியம் பேசும்.

    அந்நாளில், சோழரின் பழையதலைநகரான உறையூரில் வீரக்கோழிகள் மிகுந்திருந்தமையால் அதற்குக் ’கோழியூர்’ என்ற பெயரும், அதனையாண்ட சோழருக்குக் ’கோழிச்சோழர்’ என்றபெயரும் ஏற்பட்டன.

    இவ்வாறு, பொருதலில்லா வாழ்க்கை பொருளற்ற வாழ்க்கை எனும் கொள்கையுடையோராய் வாழ்ந்து, வீரவரலாற்றை வடித்துச்சென்றிருக்கும் தமிழரின் மறம் – அவர்தம் போர்த்திறம் நம்மை மலைக்கவைக்கின்றது அல்லவா? 

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (46)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12463850_939138782806988_1760068728_n

    வாசகன் பாலசூரியன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (9.01.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 45-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணனின் கைவண்ணத்தில் உருவான புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்கான படமாகத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞருக்கும், தேர்வாளருக்கும் வல்லமைஇதழ் நன்றி நவில்கின்றது.

    headstand kids

    தாம் சாதிக்க நினைப்பதைத் தலைகீழாக நின்றாகவேனும் சாதித்துவிடத் துடிக்கும் இந்த இளஞ்சிறார்களின் அரியமுயற்சி திருவினையாகட்டும்!

    இனி, இவ்வாரப் போட்டிக்கான கவிதைகளில் நம் கருத்தைச் செலுத்துவோம்!

    ***

    பட்டம்போலப் பறந்து பரவசத்தில் திளைக்கும் பிள்ளைகளுக்கு அழகிய ‘பிள்ளைத்தமிழ்’ பாடியிருக்கின்றார் திரு. வ.க. பரமநாதன்.

    பட்டம்   போலப்  பறக்கிறார்
    …
    பரவ சத்தில் மிதக்கிறார்
    கட்டி நிழலை இழுக்கிறார்
    …
    களிப்பி லாடிக் கிடக்கிறார்
    எட்டி நின்று பார்ப்பதில்
    …
    எழுந்து ஓடத் துடிப்பதில்
    சுட்டிப் பிள்ளை யிவர்போலச்
    …
    சுகிக்க மனதும் ஏங்குதாம்

    ***

    ’தலைகீழ் விகிதங்களாய் வாழ்க்கை இருக்கையில் இருகையை ஊன்றிச் சிரசாசனம் செய்துதானே சிம்மாசனம் பிடிக்கவேண்டியிருக்கின்றது’ என்று இந்தப் பிள்ளைகளின் சார்பில் வாதிடுகின்றார் திரு. இளவல் ஹரிஹரன்.

    தலைகீழ் விகிதங்களாய்
    வாழ்க்கை இருக்கையில்
    சிரசாசனம் செய்தே
    சிம்மாசனம் பிடிக்க வேண்டியுள்ளது…

    சூரியனும்
    எங்கள் நிழலைச்
    சுட்டெரிக்குமோ……
    மகிழ்ச்சிக் கடல்
    பொதுவன்றோ எல்லோருக்கும்
    அந்த வானம் போல….

    கைநிறைய அள்ளுவோம்,
    களிப்பில் துள்ளுவோம்…
    தொடுவானம் போலத்
    தொலைதூரம் செல்வதல்ல
    வாழ்க்கை……

    தொட்டுவிடும் தூரந்தான்,
    கையூன்றி நிலத்தைக்
    கைப்பிடிப்போம்…
    நமக்கான இடம்
    எப்போதும் உள்ளது…
    வாருங்கள் வாழலாம்….
    எல்லோரையும வாழ்த்தலாம்,
    வாழவைப்போம் என்றென்றும்..

    ***

    ’மண்ணில் தலைகீழாய் நின்றேனும் விண்ணைத்தாண்டிப் பறக்கவிழையும் இச்சிறாரை, பாசமெனும் வலைவிரித்து அடக்கிவிடாதீர்! அவர்தம் முன்னேற்றத்தை முடக்கிவிடாதீர்!’ என்று வேண்டுகோள் விடுக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வஞ்சமெனும் பெரும்பாரம்
    நெஞ்சில் புகாதவரை,
    பிஞ்சுக் குழந்தைகள் இதயம்
    பஞ்சுபோல் மெல்லியதுதான்..

    அதனால்,
    இறக்கைகள் இல்லாமலே
    பறப்பரிவர் விண்ணைத் தாண்டியே..

    பறக்கட்டும் இந்தப்
    பட்டாம்பூச்சிகள்,
    பாசவலை விரித்து
    முடக்கிவிடாதீர்கள் இவர்கள்
    முன்னேற்றத்தை..

    பறக்கட்டும் பறக்கட்டும்
    இந்தப்
    பட்டாம்பூச்சிகள்…!

    ***

    ’சிறுவர்காள்! துள்ளிவிளையாடும் பிள்ளைப்பருவ விளையாட்டுக்கள் உள்ளம் தொடுபவைதாம்! ஆயினும் இவற்றோடு நின்றுவிடாது எதிர்கால வாழ்வையும் சீராய்த் திட்டமிடுங்கள்! சிகரம் தொடுங்கள்! என்று இன்னுரை பகர்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    உண்மை உணர்க !
    உருண்டு திரண்டு
    உழன்று சுழன்று
    மண்ணில் இருந்து
    விண்ணில் பறக்க
    முயன்று பார்ப்பது
    பள்ளிசெல்லும் வயதில்
    துள்ளிப் பறப்பதும்
    இயல்புதான் இது
    விளையாட்டுதான் !
    ஆனால் வாழ்க்கையில்
    கெட்ட வழியில்
    சொத்து சேர்த்து உயராமல் நல்
    முத்தாய் பெயர் பெற
    நயம்பட உழைத்தும்
    சுயமாய் நேர்பட நின்றும்
    உயரம் ஏறி
    சிகரம் தொட்டு
    உயரும் நிலைதான்
    பிறப்பின் சிறப்பே
    எந்த நிலையிலும்
    உயர உயரப் பறந்தாலும்
    ஓர் நாள் பறவை கீழிறங்கும்
    உண்மைதனை உணர்க பிள்ளைகளே

    ***

    சுட்டித்தனம் செய்யும் இந்தக்கெட்டிக்காரச்சிறுவர்களுக்கு மண்ணில் நீந்துவதும் தலைகீழாய் நடப்பதும் சர்வசாதாரணந்தான்! என்கிறார் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.

    கடற்கரையில் சிரசாசனம் யோகாசனம்
    படம் தலைகீழான பதிவினம்
    வானம் கீழே கைமுட்டியின்று
    வாலாய உடலின் சாகசம்.
    மனமொரு நிலைப்படுத்தும் ஆசனம்
    தனம் தலையோடிணைந்து உறுப்புகளிற்கு
    உயிர்சத்து, தடையற்ற இரத்தோட்டம்
    உயர் ஞாபகசக்தி, குரலினிமையுருவாகும்.

    சிட்டுக் குருவிகள் சிறகடிப்பாய்
    சுட்டித்தனச் சிறுவருக்கிது சர்வசாதாரணம்.
    தண்ணீரில் நீந்துவது போன்றிவர்
    மண்ணில் நீந்துமிது கைநடை.
    தலைகீழ் நடையொரு சாகசம்
    விலையேதுமில்லை சுட்டிச் சிறுவருக்கு.
    கையால் சாகசம் செய்யுமிவருக்கு
    வாழ்க்கையொரு விளையாட்டுச் சதுரங்கம்.

    *** 

    தலைகீழாய் நின்று தவம்புரியும்(!) இந்தச் சிறுவர்களின் சாகசத்திற்குச் சிறந்த விளக்கங்களைத் தம் பாக்களின்வழி வழங்கியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    நம் அடுத்தவேலை…இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைச் சந்திப்பது!

    இன்றைய இளையபாரதத்தினர் நாளைய உலகை நன்முறையில் சமைக்கப்போகும் நவயுகத்தின் சிற்பிகள்! ஆதலால், கட்டுறுதிமிகு உடல்திறனை அவர்கள் இளமையிலேயே பெறுதற்குப் பெரியோர் துணை நிற்கவேண்டும். மண்ணிலும் கல்லிலும் மலையிலும் மழையிலும் துள்ளிவிளையாடினாலன்றோ உடல் உறுதிபெறும்? அதற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில், சிறார்களின் உலகை வீட்டுக்குள்ளேயே முடக்கிவிடாது, சிட்டுக்குருவிகளைப்போல் அவர்களைச் சுதந்திரமாய்த் திரிந்து பறந்துவரப் பெரியோர் அனுமதிக்க வேண்டும். ’கல்விப்பட்டங்கள்’ மட்டுமே வாழ்க்கை என்று எண்ணிவிடாது, சிறுவர்கள் வானைநோக்கி ஏவும் வண்ணப்பட்டங்களுக்குள்ளும் அவர்களின் மகிழ்ச்சியும் இன்பமும் மறைந்திருப்பதைப் பெரியோர் அறியவேண்டும்.

    அவ்வாறு, சிறுவர்களின் உலகத்தில் பயணித்து அவர்களின் உணர்வுகளைப் பொருளுள்ள வார்த்தைகளில் பொதிந்து தந்திருக்கும் கவிதையொன்று வாசித்தேன். அதில் இடம்பெற்றுள்ள… “நீங்கள் நினைக்கலாம் எங்கள் கைகளில் இருப்பது பட்டமென்று… பட்டமல்ல அது! விழுந்துவிட எத்தனிக்கும் பூமியைப் 
    பிஞ்சுக் கரங்களால் தாங்கிப் பிடிக்கும் காகிதச் சும்மாடு” என்ற வரிகளை மிகவும் நேசித்தேன்.

    அக்கவிதை…

    நம்பிக்கைச் சிறகுகள் போதும் எமக்கு.
    விண்ணை மண்ணாய் மாற்றும்
    வித்தைகள் கற்ற நாங்கள்
    வார்த்தைகள் கொண்டு தம்பட்டம்  அடியாமல்
    வானத்தில் பறந்து  எம் பட்டம்  விடுவோம் !

    நீங்கள் நினைக்கலாம்
    எங்கள் கைகளில் இருப்பது
    பட்டமென்று ,
    பட்டமல்ல அது.
    விழுந்துவிட எத்தனிக்கும் பூமியை
    பிஞ்சு கரங்களால் தாங்கிப் பிடிக்கும்
    காகிதச் சும்மாடு .

    எங்களை  எங்கள் உலகத்தில் நின்று பாருங்கள்
    உங்களிலிருந்து உதிர்ந்துபோன
    எங்களின் காலம் உங்களை
    எங்கள் உலகத்துக்கே
    மறுபடியும் அழைத்துப் போகக்கூடும் .

    வாருங்கள் எம்மோடு வந்து
    விளையாடுங்கள்.
    உங்கள் வறட்டுப் பிடிவாதங்களை
    எடுத்து வீசிவிட்டு
    எங்கள் மனதோடு எங்களிடம் வரும் உங்களை
    இந்த வானம் மட்டுமல்ல
    எந்த வானமும் நிராகரிக்காது.

    பெரியோர்களைச் சிறார்களின் உலகிற்கு இருகரம்நீட்டி வரவேற்கும் இந்தக் கவிதையைத் தீட்டியிருக்கும் திரு. மெய்யன் நடராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுசெய்துள்ளேன்.

    ***

     

    சிறாருக்கும் அவர்தமைவிட்டு விலகியே நிற்கும் பெரியோருக்கும் இடையேயுள்ள வாழ்வியல் முரண்பாடுகளை அழகாய் விவரிக்கும் மற்றொரு கவிதையும் கண்டேன்! ”காடுகள் மரங்களோடு கடவுளையும் வளர்க்கத் தெரிந்தவர்கள் நீங்கள்!” என்று பெரியோரின் செயலைச் சரியாய்ச் சுட்டும் அறிவார்ந்த சிறுவர்களை இக்கவிதை நமக்கு அடையாளம் காட்டுகின்றது!

    எங்கள் உலகை
    உங்கள் சாவிகள்
    ஒருபோதும் திறக்காது…

    அது மலைகள் வளர்ந்த
    தேசமாக இருக்கையில்
    உங்கள் கழுத்து ஓர்  எல்லையில்
    நின்று விடும்…

    அருவிகள் செய்பவர்கள் நாங்கள்
    என்பதால் உங்கள்
    கேள்விகள் எங்களை
    நனைப்பதில்லை…

    காடுகள் மரங்களோடு
    கடவுளையும் வளர்க்கத்
    தெரிந்தவர்கள் – உங்கள்
    பிரார்த்தனைகளை நாங்கள்
    உதைத்துத் தள்ளுகிறோம்…

    புல்வெளிகள் புதிது என்பது
    எங்கள் தத்துவம், மாயங்கள் என்பது
    உங்கள் முகம்..
    அது ஒப்பனை– எங்களுக்கு வேண்டாம்..

    எந்தப் பூட்டிலும் எங்கள்  உலகம்
    நுழைந்து
    வெளி வந்து விடும்–அதற்கு
    உங்கள் சாவிகள் தேவையில்லை..

    காரணமற்ற எங்களை
    முறைத்து விட்டு நீங்கள்
    சென்றால்
    சரி என்று குட்டிக்கரணம்
    போட்டு விட்டு
    கடந்து
    விடுவோம் …
    பிறகு காட்டாறு என்று
    கூறுவது உங்கள் இஷ்டம்…
     

    ஒப்பனைநிறைந்த பெரியோரின்உலகை வெறுக்கும் சிறாரையும், அவர்தரப்பு நியாயங்களையும் நிரலாய்ப் பட்டியலிட்டுள்ள திரு. கவிஜியின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்த் தேர்ந்தெடுத்துள்ளேன். 

    மலர்ந்துள்ள இந்தப் புதியஆண்டில் கவிஞர்தம் கற்பனைகள் மேன்மேலும் சிறக்க என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்!

     

    Share
  • நல்வாழ்வை அள்ளித்தரும் வள்ளி!

    -மேகலா இராமமூர்த்தி

    மாந்தஇனம் முதன்முதலில் தோன்றி வாழ்ந்தஇடம் மலையும் மலைசார்ந்த பகுதியுமே என்பது மானுடவியலாளர்களின் கருத்து. இப்பகுதியைத்தான் ’குறிஞ்சி’ என்று குறிப்பிட்டனர் தமிழ்ச்சான்றோர். வானுயர்ந்த மலையும், அம்மலைமீது காய்கதிர்ச்செல்வன் பாய்ச்சிடும் பொன்னொளிக் கிரணங்களும், வெள்ளைப் பட்டாடையைக் கீழே விரித்ததுபோல் மலைமீதிருந்து பாய்ந்துவீழும் அருவிகளுமாய் இயற்கையன்னையின் படைப்புக்கலையின் உச்சம் இந்தக் குறிஞ்சி எனலாம்!

    மலைச்சாரலில் வானுயர ஓங்கிவளர்ந்திருக்கும் மரங்களில் தூங்கிக்கொண்டிருக்கும் நறுந்தேனின் இறால்கள், ”என்னைக்கொஞ்சம் அருந்தேன்! அருந்தேன்! என்று நம்மை வருந்தியழைப்பது போலிருக்கும். கொடிகளில் கணக்கின்றிக் காய்த்துக்கிடக்கும் வள்ளிக்கிழங்குகள், காண்போர் நாவின் சுவையரும்புகளைச் சுண்டியிழுக்கும்! (வள்ளி என்ற பெயரால் நாம் கிழங்கை அழைத்தாலும் அஃது உண்மையில் அதனை விளைவிக்கும் கொடியின் பெயரேயாகும். சினையாகுபெயராய் அதுவே கிழங்குக்கும் வழங்கலாயிற்று.)

    வள்ளிக்கிழங்கு என்றதுமே குறிஞ்சிக் கபிலரின் நறுந்தமிழ்ப்பாட்டு ஒன்று நினைவுக்கு வருகின்றது. அதனைப் பார்ப்போம்!

    குறுநிலமன்னர்களில் பெரும்புகழ்பெற்றவனாய்த் திகழ்ந்தவன் பறம்புமலைத் தலைவன் பாரி. அவனுடைய வள்ளன்மையும், அதனால் அவனடைந்துவரும் வான்புகழும் கண்டு அழுக்காறுகொண்ட தமிழகத்தின் மூவேந்தரும், அவன் பறம்புமலையை முற்றுகையிட்டனர். மலைமீது குடியிருக்கும் பாரியும் அவன் கூட்டத்தாரும் எப்படியும் உணவுதேடி அடிவாரத்திற்கு வந்துதானே ஆகவேண்டும். அப்போது அவர்களை வளைத்துப் பிடித்துவிடலாம் என்பது அவர்களது மனக்கோட்டை. ஆனால் வாரங்கள் கடந்தன; அவை மாதங்களாக மாறின. பாரியோ அவன் குடிகளோ அடிவாரம்நோக்கி அடியெடுத்தும் வைக்கவில்லை. கீழே, மரத்துக்கு மரம் யானையைக் கட்டிவிட்டு மேலேயே அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த மாமன்னர்களின் வியப்புக்கோர் அளவில்லை! ”ஈதென்ன அதிசயம்! பாரியும் பிறரும் உணவுக்கு என்ன செய்கின்றனர்? எவ்வளவுதான் உணவுப்பொருள்களைச் சேமித்து வைத்திருந்தாலும் இதற்குள் அவை தீர்ந்துபோயிருக்கவேண்டுமே!” என்று யோசித்துயோசித்து மனங்குழம்பிக்கொண்டிருந்தனர் மாமன்னர் மூவரும்.

    இவர்களின் குழப்பத்தைத் தெளிவாய் உணர்ந்த பாரியின் ஆருயிர் நண்பரான கபிலர், “தாய்த்தமிழ் வேந்தர்களே! ஈண்டு, நீங்கள் மூவரும் ஒருங்கேகூடி முற்றுகையிடினும், மாவீரன் பாரியை வெல்லவும் முடியாது; அவன் பறம்பைக் கொள்ளவும் முடியாது. உண்டிக்கு நாங்கள் திண்டாடுவோம்; உங்களிடம் உதவிகேட்டு மன்றாடுவோம் என்பதுதானே உங்கள் எண்ணம். அது ஒருநாளும் ஈடேறப்போவதில்லை. என்ன திகைக்கிறீர்! பறம்புமலையின் வளப்பத்தை நீங்கள் அறியமாட்டீர். உழவன் விளைவிக்காமலேயே நான்குவகையான உணவுப்பொருள்களை விளைவிக்கக் கூடியது எங்கள் பறம்பு. ஆம்! வித்திடாமலே இங்குள்ள மூங்கிலின் இலைகளில் நெல்விளையும்; பலா மரங்கள் தீஞ்சுவைக்கனிகளை ஊழ்க்கும்; கொழுவிய வள்ளிக்கொடிகள் கிழங்குகளை வீழ்க்கும்; திணிநெடுங்குன்றமோ தேனை வார்க்கும். ஆதலால் அரசர்களே…!எங்களுக்கு என்றும் வாராது உணவுப்பஞ்சம்! அடையமாட்டான் பாரி உம்மிடம் தஞ்சம்!” என்று கம்பீரமாய் முழங்கினார்.

    …உழவர் உழாதன நான்குபய னுடைத்தே
    ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே

    இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே
    மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க்கும்மே
    நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
    திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே…. (புறம்: 109)

    வள்ளிக்கிழங்குகள் மூன்று வகையின. 

    அவை:
    1. மாவள்ளிக்கிழங்கு

    2. மரவள்ளிக்கிழங்கு
    3. சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகியன.

     

    sarsaparillarootஇதில் முதலாவது வகையைச் சார்ந்த மாவள்ளிக் கிழங்கே (Smilax ornata or sarsaparilla) நாளடைவில் மாவலிக்கிழங்காகத் திரிந்து, பின்பு மா’காளி’க்கிழங்காகவும் மாற்றம் பெற்றுவிட்டது (எதையுமே கடவுள் பெயரோடு பொருத்திப்பார்ப்பதில் நம் தமிழ்மக்களுக்கு ஓர் அலாதி விருப்பம் போலிருக்கின்றது!).

    இந்நாளைய மக்கள் மாவள்ளி எனுமிந்த மாகாளிக்கிழங்கை ஊறுகாய்ப் போடுவதற்கும், குளிர்பானங்களுக்குமே பெரிதும் பயன்படுத்துகின்றனர். நன்னாரி சர்பத் என்று நாவினிக்கப் பருகுகின்றோமே அதில் ’நன்னாரி’யாய்க் காட்சியளிப்பவர் சாட்சாத் மாகாளியார்தான்!

    தோல்நோய்களைத் தீர்ப்பதிலும், வயிற்றுக்கோளாறுகளைப் போக்குவதிலும்  இக்கிழங்கு திறன்வாய்ந்தது. ஆயுர்வேத மருத்துவத்தில் நீண்டகாலமாகவே பயன்பாட்டிலிருக்கும் கிழங்கு இது. உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு இரத்தத்தையும் சுத்திகரிக்கின்றது இக்கிழங்கு. பால்வினை நோய்களைக் குணப்படுத்துவதிலும், டெஸ்டோஸ்ட்ரோன் (Testosterone) எனும் ஹார்மோன் சுரப்பை அதிகப்படுத்துவதிலும் இதன் பங்கு மகத்தானது.

    வள்ளிக்கிழங்கின் மற்றொருவகையே மரவள்ளிக்கிழங்கு (Cassava or tapioca). மாவள்ளியைப் போன்றே இதற்கும் பலபெயர்கள் வழக்கத்தில் உள்ளன. மரச்சீனிக்கிழங்கு என்று நாட்டார்மக்களும், மரவள்ளிக்கிழங்கு என்று நகரத்து மக்களும், கப்பக்கிழங்கு என்று கேரள மக்களும், தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியர்களும் வாஞ்சையோடு அழைப்பது இக்கிழங்கையே. இவையேயன்றி, ‘ஏழிலைக்கிழங்கு’ எனும் எழிலான பெயரும் இதற்குண்டு!

    கிழங்குகளிலேயே மாவுச்சத்து (carbohydrate) அதிகம்கொண்டது cassavaஇந்தக் கிழங்குதான். மிகக்குறைந்த கொழுப்புச்சத்தும், மிகஅதிக அளவிலான புரதச்சத்தும் கொண்ட இக்கிழங்கிலிருந்து கிடைக்கும் புரதத்தில் ‘சிலியாக்’  எனும் நோயை ஏற்படுத்தும் ஒருவிதத் தானியப் புரதமான ‘குளூட்டின்’ இல்லை என்பது குறிப்பிடவேண்டிய ஒன்றாகும். (Gluten is a form of protein found in some grains, which creates an auto-immune disorder Celiac.)

    வர்த்தகத்திற்காகப் பெருமளவில் மாவுப்பொருள் (starch) மரவள்ளிக் கிழங்கிலிருந்தே தயாரிக்கப்படுகின்றது. ஜவ்வரிசி (பாயசம், வடகம் போன்றவற்றிற்குப் பயன்படுவது) தயாரிக்கப்படுவதும் இந்தக் கிழங்கிலிருந்துதான். இக்கிழங்கு புற்றுநோயை ஒழிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றது என்று சொல்லப்படுகின்றது. (More evidences are needed to confirm the anti-cancer activity of Cassava). இக்கிழங்கின் தோல், வேர் மற்றும் இலைகளில் நச்சுத்தன்மைமிக்க சயனைடு இருப்பதால் அவற்றை உண்ணக்கூடாது. (Cassava roots, peels and leaves should not be consumed raw because they contain two cyanogenic glucosides, linamarin and lotaustralin. They liberate hydrogen cyanide (HCN)).

    Ipomoea_batatasவள்ளிக்கிழங்கின் மூன்றாவது வகைதான் இனிப்புச்சுவை நிறைந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு (Ipomoea batatas). இக்கிழங்கில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. நோய்எதிர்ப்புச்சக்தியை மிகுவிக்கக்கூடிய ஆண்டி-ஆக்ஸிடென்டுகள் (anti-oxidants), உடலுக்குத் தேவையான தாதுஉப்புக்களான இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், சோடியம் போன்றவையும் இதில் நிறைந்துள்ளன. இக்கிழங்கில் காணப்படும் பீட்டா காரட்டீன் (β-Carotene) எனும் கரிமக் கூட்டுப்பொருள் (oraganic compound), முதுமையில் மனிதர்களுக்கு வரக்கூடிய கண்நோய்களைத் தடுக்கின்றது (age-related macular degeneration). இதிலுள்ள கார்போஹைட்ரேட் எளிதில் சீரணிக்காத சிக்கலான வகையைச் சார்ந்திருப்பதால் (complex carbohydrates) இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும். ஆகவே, நீரிழிவு நோயாளிகளும் குறைந்த அளவில் இக்கிழங்கை உண்டுவரலாம். உலகில் நீண்ட ஆயுள்படைத்த மனிதஇனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஜப்பானிலுள்ள ஒகினாவா தீவு (Okinawa Island – Land of longevity) மக்களின் உணவுப்பட்டியலில் சர்க்கரைவள்ளிக்கிழங்குக்கோர் நிரந்தர இடமுண்டு!

    இத்துணை நன்மைகளை அள்ளித்தரும் வள்ளிக்கிழங்குகளைத் தள்ளிவைத்துவிட்டு, நம்மக்கள் உடலுக்குத் தீங்குபயக்கும் விரைவு உணவுகளையும், பிஸ்ஸா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவுவகைகளையும் அரவணைத்துக்கொண்டிருப்பது வருந்தத்தக்கதே.

    உடல் நலத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் உத்தரவாதம் தருகின்ற வள்ளிக்கிழங்குகளை நம்மனோர் விரும்பியுண்டால் மறலியை வென்று வாழலாம் நன்றாய்!

    Share
  • படக்கவிதைப் போட்டி (45)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12398954_930453380342195_1941367938_n
    134429018@N04_rராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (2.01.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 44-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி 

    ’வல்லமை’ வாசகர்கள், படைப்பாளர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பசியும் பிணியும் பகையும் நீங்கி
    அன்பும் அருளும் அறனும் ஓங்குக!

    ***

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தை எடுத்திருப்பவர் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. இப்படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் வல்லமையின் நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும் உரியதாகுக!

    smiling baby

    முறுவலிக்கும் முகத்தோடு சிறுவிரலால் தாளமிடும் சின்னஞ்சிறு கிளியே! உனைக் காணும்போது என் உள்ளத்தில் எழுகின்றது ஆனந்தக் களியே!

    இனி, நம் கவிஞர்கள் கோத்திருக்கும் கவிதை மலர்ச்சரத்தின் சுகந்தத்தைச் சுவாசித்து வருவோம்… புறப்படுங்கள்!

    ***

    ’ஆவாரம் பூவாய்ச் சிரித்துக்கொண்டு, இந்தப் பாப்பா நாவாரப் பாடும் பாடல் காதில் தேன்பாய்ச்சுதே!’ என்று உளம்பூரிக்கிறார் திருமிகு. சியாமளா ராஜசேகர்.

    பாவாடைச் சட்டை போட்ட
    ****
    பாப்பாவும் பார்க்குது !
    ஆவாரம் பூவைப் போல
    ****
    அழகாகச் சிரிக்குது !
    நாவாரத் தானும் பாடும்
    ****
    நாடகமும் நடத்துது !
    நோவாமல் தாளம் போட்டு
    ****
    நுள்ளியுள்ளம் இழுக்குது !!

    கால்கொலுசின் சலங்கைச் சத்தம்
    ****
    காதில்தேன் பாய்ச்சுது !
    பால்வடியும் பிள்ளை முகமும்
    ****
    பாங்குடனே இருக்குது !
    மேல்மாடி வீட்டிற் குள்ளே
    ****
    மெய்சொக்க வைக்குது !
    வேல்முருகன் அருளி னாலே
    ****
    விளையாடி மகிழுது !

    *** 

    ’குட்டிக் கவிதையே! உன் நகங்களில் பிறைநிலாக்கள் முகங்காட்டும்; உறக்கத்திலும் குறுஞ்சிரிப்பு சிந்தும் மென்மலரே! இப்போதைய பெருஞ்சிரிப்புக்கு யாது காரணம்?’ என்று வினயமாய் வினவுகின்றார் திருமிகு. கார்த்திகா.

    …மழலையின் மொழி
    குறுஞ் சிரிப்பென்று
    உறக்கத்திலும் புன்னகை வீசும் நீ
    உரக்கச் சிரிப்பது எதைக் கண்டோ

    செல்லச் சிட்டுக்கு
    பட்டு வண்ணப் பூச்சி
    கண்ணில் பட்டதோ
    […]

    தலை கொள்ளா
    உன் கேசம்
    தென்றலின் நேசமடி

    நீ சிணுங்கிச் சிரிக்கையில்
    கொலுசொலிகள் தோற்குமடி
    வெட்கத்தில் பூக்கும்
    விரலோடு பிறை நிலாக்கள்

    வளை குலுங்கும்
    உன் பிஞ்சுக் கரங்கள்
    பூக்கள் தொடச் சிவக்குதே
    பூவிதழ்கள் மோட்சமடையுதடி

    சங்குக் கழுத்தில் தொங்க
    என்ன தவம் செய்துவிட்டது
    இந்த மின்னும் பொன் சங்கிலி

    குட்டிக் கவி நீ
    சிரிக்க ஹைக்கூக்கள்
    சிதறுமடி என் செல்லமே!

     *** 

    இரண்டே சொற்களில் இந்த மழலையின் மணிச்சிரிப்பை வருணித்திருக்கின்றார் திரு. கவிஜி. 

    சித்திரம்
    சிரிக்குதடி…!

    ***

    ’மழலையே…இந்தப் புன்னகை இருக்கப் பொன்னகை எதற்கு? தேங்குரல் இருக்கப் பூங்குழல் இசைதான் எதற்கு?’ என்று அருமையாய் வினவுகின்றார் திரு. ஜெயபாரதன்.

    புன்னகை உள்ள போது
    பொன்னகை வேறெதற்கு ?
    தேங்குரல் கேட்கும் போது
    பூங்குழல் இசை எதற்கு ?
    கொஞ்சும் சிசு ஆடும் போது
    தஞ்சாவூர் பொம்மை எதற்கு ?
    பிள்ளைச் செல்வம் உள்ள போது
    பேரின்பம் வேறெதற்கு ?

    ***

    மழலைச் செல்வத்தின் மனங்கவரும் அழகுகள் அனைத்தையும் ஒவ்வொன்றாய்ச் சொல்லி வியக்கின்றார் திரு. இளவல் ஹரிஹரன். 

    சின்னக் குழந்தை சிரிக்கும் அழகு
    தெய்வம் காட்டும் பேரழகு…..அதன்
    கன்னக் குழியில் கனியும் அழகு
    கவிதை காட்டும் ஓரழகு.
    முன்னஞ் செய்யும் குறும்பு களாலே
    முற்றம் பெறுமே சீரழகு…..மெல்ல
    வண்ண மாகத் தத்தித் தவழ்ந்து
    வரும்போது தோற்கும் தேரழகு.

    முத்தா யுதிர்க்கும் ம்மா வென்னும்
    மொழியில் தோன்றும் தமிழழகு

    […]

    எண்ணத் தொலையா ஏட்டில் விளையா
    மழலைச் சொல்லின் மொழியழகு ….நலம்
    பண்ணும் குறும்பில் தெரியும் அரும்பின்
    பட்டுத் தெறிக்கும் விழியழகு.
    மண்ணும் விண்ணும் மறுக்க வியலா
    மாபெரும் படைப்பின் ஒளியழகு….தெய்வப்
    பண்ணும் கொடுக்கா பலவிசைப் பாட்டில்
    கேட்கும் இன்பக் களிப்பழகே.

    *** 

    ’உன் சிரிப்பே பூபாளம்; தட்டு நீ மிருதுவாய்த் தாளம்!’ என்று சின்னக் கண்மணியைப் பார்த்துப் பண்ணிசைக்கின்றார் திரு. மெய்யன் நடராஜ்.

    தட்டு மிருதுவாய்த் தாளம்
    தரலாம் இசைக்கருவி ஓசை வேதாளம்
    தத்தை உன் மிருது வாய் சிரிப்போ
    தந்திடுமே எப்போதும் ஆசை பூபாளம் 

    *** 

    தன் பாடலுக்குத் தானே தாளம்போட்டு நாட்டியமும் ஆடும் இந்தக் கவின்மழலையைக் கண்டு மலைக்கின்றார் திருமிகு. பி. தமிழ்முகில்.

    கொஞ்சும் கொலுசொலியும்
    மழலை மொழியும் இசையாக
    கேட்போர் மனதை மயக்கி
    சுற்றம் அனைத்தையும்
    தன்வயப் படுத்திக் கொண்ட
    அழகுக் கிள்ளையே !
    உந்தன் இனிய பாடலுக்கு
    நீயே தாளமும் போட்டு
    காலை உதைத்து
    நாட்டியமும் ஆடுகிறாயே !
    உந்தன் புன்னகையில்
    சொக்கிப் போய்
    கண்கொட்ட மறந்து
    கட்டியணைத்து உச்சி முகர
    ஓடிவரும் அன்னையைக் கண்டு
    உந்தன் விழியிரண்டும் விரிகிறதோ ?
    கள்ளமறியா சிறு கிள்ளையே !

    ***

    ’இசைபாடிப் புன்னகைக்கும் இந்தப் பூவின் இன்சொற்கள், மலரும் புத்தாண்டில் நல்ல மாறுதல்களைக் கொணரும்!’ என்று நம்பிக்கை விதைக்கின்றார் திரு. கொ. வை. அரங்கநாதன்.

    பூவொன்று
    இசைப்பாடி
    புன்னகைக்கிறது
    புத்தாண்டை வரவேற்று
    கண்ணசைக்கிறது

    […]

    கற்பத்தில் விளைந்த
    கவிதையொன்று
    முரசு கொட்டி
    கலாமின் கனவுகள்
    நனவாகப் போகுதென்று
    கட்டியம் கூறுகிறது

    மழலையிவள் சொற்கள்
    மலருகின்றப் புத்தாண்டில்
    மாற்றத்தை உண்டாக்கும்
    மகேசனின் மந்திரமட்டுமல்ல
    கனவுகளை நிஜமாக்கும்
    காலதேவனின்
    கட்டளைகளுமாகும்!

     ***

    ’பொக்கைவாய்ச் சிரிப்புடன் ஞானச்சுடரேற்றும் இக்குழந்தை இறைவனின் அருட்கொடையே!’ என்று இன்மொழி பகர்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    பொக்கை வாய் சிரிப்புடன்
    புதுக்கவிதையாய் புறப்பட்டு
    கள்ளங் கபடமின்றி என் செல்லம்
    தப்புத்தாளங்களில் வாசித்தாலும்
    ஏதோ ஞானச்சுடரென்றோ
    என்முன் விரிந்து தெரிகிறது
    நல்ல பண்புகள் ஓடி விட்ட காலத்தில்
    தீமைகள் ஆட்டம் போடும் உலகத்தில்
    மெல்ல தமிழ் ஊட்டி உன்
    அருளால் அறிவை ஊட்டி
    நாவும் கையும் நல்லனவற்றில்
    துலங்கச் செய்த இறைவா நீ
    ஈந்த இந்த அருட்கொடைக்கோ
    இனிதாய் சொன்னேன் நன்றியடா

    *** 

    மழலையின் மந்தகாச அழகில் மனங்கனிந்து, கவிமலர்களை அள்ளியிறைத்திருக்கும் கவிஞர் பெருமக்களுக்கு நன்றியும், பாராட்டும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை இனிச் சந்தித்து வருவோம்!

    குழந்தையின் குதலை மொழிகளும், துறுதுறு விழிகளும் மாந்தர்தம் உள்ளங்களை அள்ளுபவை; கொள்ளை கொள்ளுபவை. அதன் மெய்தீண்டலால் உண்டாகும் பேரின்பமோ வார்த்தைகளில் வடிக்கற்பாலதன்று! கள்ளமில்லா குழந்தையின் உள்ளமே இறைவன் குடிகொள்ளும் ஆலயமாகும். சின்னஞ்சிறு கிளிகளாய், பேசும் பொற்சித்திரங்களாய் இல்லங்களில் உலாவரும் குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்!

    அவ்வகையில், பேசுந்தெய்வமான இந்தச் சிறுகுழந்தை தன் செங்கனிவாய் திறந்து பாடுகையில், அதன் தளிர்க்கரங்கள் போடும் தாளங்கள் சுருதி பிசகினாலும் அவை சுந்தரத் தாளங்களே! வஞ்சமற்ற அதன் பிஞ்சுக் குரலோசையில் விளையும் தேவகானத்திற்குமுன் பக்திப் பாசுரங்களும் பலனின்றிப் போகின்றன!’ என்று குழந்தையைக் கொண்டாடும் ஓர் கவிதை மனவயலில் மகிழ்ச்சியை நட்டது!

    அக்கவிதை…

    பேசும் தெய்வமொன்று
    பாட ஆரம்பித்தது,
    தாளம் போட்டிடும்
    தளிர்க் கரங்கள்..

    இதில்
    பொய் வேடமில்லை
    போலிப் புனைவுகளில்லை..

    தப்புத் தாளங்கள்
    இலக்கணப் பிழைகள்,
    தலைமறைவாயின
    மழலையின் ஆட்சியில்…

    நெஞ்சில் வஞ்சமின்றி
    கொஞ்சும் மொழியில்வரும்
    பிஞ்சுக் குரலிசையின்முன்,
    பக்திப் பாசுரங்கள்
    பலனின்றிப் போகின்றன..

    இதோ,
    இதைரசிக்க வந்துவிட்டான்
    இறைவனும் நம்முடன்…!

    இக்கவிதையில், இறைவனையும் குழந்தையின் ரசிகனாக்கியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன்.

    ***

    குழந்தாய்! நீ ’ஆ’ காட்டும் அழகில் நான் அப்படியே விழுந்தேன்; உன் ’பா’ கேட்டுக் கைதட்ட ஓடிவந்தேன்! பொக்கைவாய்ச் சிரிப்பில் சொக்கவைக்கும் சொக்கத் தங்கம் நீயடி! என்று இந்தப் பெண்மகவைத் தொழுதுபோற்றும் இனிய கவிதை ஒன்று…

    பட்டுப் பாவாடைச் சட்டை மீனாட்சியே!
    குட்டிக்   கொலுசும் கட்டுதடி என்னையே!
    கெட்ட  திருஷ்டியை  வெட்டக் கறுப்பாய்
    பொட்டிட்ட  குட்டிச் சுட்டி ராணியே!
    எடுப்பாய் அமர்ந்த எழிலான தேவதையாய்
    அடுக்கடுக்காய் தாளமிட துடுக்காய்த் தயாரானாய்.
    ”
    ஆ” காட்டுமழகில் அப்படியே விழுந்தேன்.
    ”
    பா ” கேட்டுக் கைதட்டி ஊக்கிட வந்தேன்.

    பொக்கைவாய்ச் சிரிப்பு சொக்கு வித்தையடி!
    சொக்கத் தங்கமே! பெண் பிள்ளையென்றடி
    பொசுக்கவில்லை உலகமுன்னை பெரிய நன்றியடி!
    பெண் பெருமையையேற்று பண்ணிசை ராணியே!
    குழலினும் இனியது குழந்தை மொழி
    மழலையின் மயக்கமது இன்ப வழி
    தொழ வேண்டும்! மழலையின் அரங்கேற்றம்!
    தழலாய் உயரட்டும் தரணியில் புகழுடன்!
     

    பெண் குழந்தையைக் குடும்பச் சுமையாய் நினைக்கும் மனப்போக்கு, நம் சமூகத்தில் இன்னமும் முற்றாய் மாறிவிடவில்லை. இச்சூழ்நிலையில், பெண்குழந்தையைப் போற்றுவதோடு, அதனைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் தன் கவிதையில் நினைவுறுத்திச் சென்றிருக்கும் திருமிகு. வேதா. இலங்காதிலகத்தின் கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விழைகின்றேன்.

    மீண்டும் சந்திப்போம்!

     

     

    Share
  • அகந்தையின்றி அரந்தை தீர்ப்போம்!

    -மேகலா இராமமூர்த்தி

    மானுட உயிர்கள் அனைத்திற்கும் பிறப்பு ஒத்தவகையில் அமைந்திருந்தபோதினும், பணம், பதவி, வசதிவாய்ப்புக்கள் இன்னபிறவற்றில் உள்ள வேறுபாடுகள் காரணமாக அனைத்து உயிர்களும் ஒரே வகையான சிறப்பையும், மதிப்பையும் சமுதாயத்தில் பெறுவதில்லை. இன்று நேற்றல்ல…வள்ளுவர் காலத்திலேயே நம் சமூகம் இப்படித்தான் இருந்திருக்கின்றது. அதனால்தான் அவர்,

    ”பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்”
    என்று குறள் எழுதவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

    வளமையும் வறுமையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்போல் சமூகத்தில் என்றுமிருப்பவை. வளமான வாழ்வுபெற்றோர் அனைவரும் எளியோர்க்குதவும் வளமான மனத்தையும் பெற்றிருப்பர் என்று கூறுவதற்கில்லை. அப்படியே உதவிசெய்யப் புகுவோரும் பெரும்பாலும் தம் பெயருக்குக் கிடைக்கப்போகும் விளம்பரத்தையும், தங்கள் கணக்கில் சேரப்போகும் புண்ணியத்தையும் எண்ணியுமே அறச்செயல்களும் தொண்டும் புரிவதாய்த் தோன்றுகின்றது.

    ”அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
    ஆலயம் பதி னாயிரம் நாட்டல்
    பின்ன ருள்ள தருமங்கள் எல்லாம்
    பெயர்வி ளங்கி ஒளிர நிறுத்தல்”
    என்று தருமவான்களின் உட்கிடையை வெளிப்படையாய்த் தன் பாட்டில் கூறுகின்ற பாரதி, இதுபோன்ற தருமங்கள் யாவும் அதைச் செய்வோரின் பெயரை ஒளியோடு நிறுத்த உதவுகின்றனவேயன்றி வேறுபயனில்லை என்று கூறுவதை நாம் எண்ணிப் பார்க்கலாம்.

    ஆலயம் கட்டுபவரை விடுங்கள்! ஆலயத்திற்குக் குழல்விளக்கு போட்டுத்தரும் இறைத்தொண்டர்கூட, அந்தக் குழல்விளக்கின் வெளிச்சம் தவறியும் வெளியில் கசிந்துவிடாதபடி அதில் தன்னுடைய ’பீடும் பெயரும்’ (நடுகல் போன்று) எழுதிவிடுகின்றார். இதனால், அத்தொண்டரின் புகழொளியின்முன் விளக்கின் ஒளியும் குன்றிப்போய்விடுகின்றது.

    அப்படியானால் உண்மையான இறைத்தொண்டு என்பது என்ன?

    இதற்கு விடைபகர்கின்றது தெய்வச்சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணம். இறைபக்திச் செல்வர்களான தொண்டர்கள் எவ்வாறிருக்கவேண்டும் என்பதை இதன் வாயிலாய் நாமும் தெரிந்து தெளியலாம்.

    thiru”இறைவனின் உண்மைத் தொண்டர்கள் தமக்கு வரும் ஆக்கத்தையும், கேட்டையும் ஒன்றாகவே எண்ணும் இயல்பினர்; அவர்கள் (உலகியல் சார்ந்த) எந்தப்பொருள்மீதும் பற்றுவைப்பதில்லை; அவர்களுக்கு மண்ணாலான ஓடும், விலைமதிப்பில்லா செம்பொன்னும் ஒத்த தன்மையனவே. இத்தொண்டர்களின் பற்றும், பாசமும் பற்றுக்களை அறுக்கும் சிவபரம்பொருள்மீது மட்டுமே! அதைத்தாண்டி, வீடுபேற்றுக்கும் ஆசைப்படாத விறல்வீரர்கள் இவர்கள்” என்று தொண்டர்களின் நல்லியல்பை நமக்கு விண்டுரைக்கின்றார் தொண்டர்சீர் பரவுவார்.

    கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
    ஓடும்
    செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
    கூடும்
    அன்பினில் கும்பிடலே அன்றி
    வீடும்
    வேண்டா விறலின் விளங்கினார் (திரு.தொ.புராணம்– திருக்கூட்டச்சிறப்பு)

    ’ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும்’ தொண்டர் கூட்டமெல்லாம் கதைகளிலும் காவியங்களிலும் மட்டுமே காணக்கூடியவை; நிஜத்தில் அப்படி யாரேனும் இருப்பரோ? என்றொரு ஐயமும் நமக்கு எழுகின்றது அல்லவா?

    நம் ஐயம் நியாயமானதே! தொண்டர்களில் அநேகர் செம்பொன்னையும் ஓட்டையும் ஒன்றாய் நினைக்கும் அளவிற்கு வாழ்வியல் இன்பங்களை வெறுத்தவர்களில்லை; பொன்னாசையை ஒழித்தவர்களில்லை.

    பின், சேக்கிழார் தொண்டர்தம் இயல்பை இவ்வாறு வரையறுத்தது ஏன்?

    சற்றே சிந்தித்தால் இதற்கான விடை புலப்படுகின்றது. ஆம், சேக்கிழாரின் வரையறைக்கு முற்றாய்ப் பொருந்தக்கூடிய இறைத்தொண்டர் ஒருவர் அன்று இருக்கவே செய்தார். மங்கையர்குலதிலகமும், சிவநேசச் செல்வியுமான திலகவதியாரின் அருமைத் தம்பியான ’மருள்நீக்கியாராய்’ப் பிறந்து, சமண மதத்தைச் சிலகாலம் சார்ந்திருந்து, பின்பு தமக்கையின் வழிகாட்டுதலில்படிச் சைவநெறிக்குத் திரும்பிய அருள்நெறிச் செல்வரான திருநாவுக்கரசப் பெருமானே அந்த உண்மைத் தொண்டர்! 

    அந்த அருளாளர், தம் வாழ்வின் இறுதிப்பகுதியில் திருப்புகலூர் எனும் சிவத்தலத்தில் திருமடம் ஒன்றை நிறுவிச் சிவத்தொண்டும், உழவாரப்பணியும் (கோயிலையும் அதன் சுற்றுப்புறங்களையும் குப்பைகளின்றிச் சுத்தம் செய்தல்) புரிந்துவந்தார். தூவெண்மதிசூடிய பிரானின் பெருமையினை அருந்தமிழ்ப் பாக்களாய் இயற்றி, தேவாதி தேவனான அவனுக்கு ஆரமாய்ச் சூட்டி அழகுபார்த்திருந்த வாகீசரின் உலகாயதப் பற்றற்ற நிலையைக் குவலயத்துக்கு உணர்த்தவிரும்பிய இறையனார், நாவுக்கரசர் உழவாரப்பணி செய்துவந்த இடத்தில் மண்ணோடு பொன்னையும் நவமணிகளையும் கலந்திருக்கச்செய்தார்.

    உழவாரம் செய்துவந்த அப்பர்பெருமான், பொன்னும் விலையுயர்ந்த மணிகளும் மண்ணில் மின்னுவதைக் கண்டார். ஆன்மபலங் கொண்ட அந்த வீரர் அவற்றைக்கண்டு சற்றேனும் சித்தத்தில் சபலம் கொண்டாரில்லை. அவையும் அவர் கண்களுக்குக் கோயிலின் தூய்மையைக் கெடுக்கும் குப்பைகளாகவே தோன்றின. ஆதலால் மற்ற குப்பைகளோடு அவற்றையும் தன் உழவாரத்தில் வாரியெடுத்துத் தூரவீசினார்.

    செம்பொன்னும்  நவமணியுஞ் சேண்விளங்க ஆங்கெவையும்
    உம்பர்பிரான் திருமுன்றி ல் உருள்பருக்கை  உடனொக்க
    எம்பெருமான் வாகீச ர் உழவாரத் தினிலேந்தி
    வம்பலர்மென் பூங்கமல வாவியினில் புகவெறிந்தார். (திரு. தொ. புராணம் – திருநாவுக்கரசு நாயனார் புராணம்) என்று நாவுக்கரப்பெருமானின் தூய்மையான தொண்டுளத்தை நாவினிக்கப் பாடிய சேக்கிழார், உண்மைத் தொண்டரென்பவர் இவ்வாறு உயர்வு தாழ்வு பாராச் சமநோக்குச் சிந்தனையாளராகவே இருக்கவேண்டும் எனும் முடிவுக்கு வந்திருக்கவேண்டும்.

    இன்றைய இறைத்தொண்டர்களிடம் இத்துணைத் தியாகவுள்ளத்தையும், பற்றற்ற நிலையையும் நாம் எதிர்பார்க்கவியலாது. எனினும், சுயவிளம்பரமும், தம் தொண்டு குறித்த அகந்தையும் அவர்கள் மனத்தைவிட்டு அகலாதிருப்பதுதான் வியப்பையும் வேதனையையும் ஒருங்கே விளைக்கின்றது.

    அதற்கான சான்று ஒன்றும் சமீபத்தில் நமக்குக் கிடைத்தது. தமிழகத்தில் மழைவெள்ளத்தால் ஏற்பட்ட பேரிடரில் பாதிப்படைந்த மக்களுக்கு உதவிசெய்த சிலர், தங்களுடைய தொண்டு மனப்பான்மையை, தயாள குணத்தைத் தங்கள் மதத்தின் அடிப்படையில் விளம்பரப்படுத்திக்கொண்டது, அவர்கள் மனத்தில் மண்டியிருக்கும் ஆணவத்தை, அடங்காத மதவெறியை அவனிக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதாய் அமைந்திருந்தது!

    தொண்டு செய்யுமிடத்தில் மதத்திற்கு என்ன வேலை? அங்கே மனிதம் மட்டுமே அல்லவா மலர்ந்திருக்க வேண்டும்! அப்போதுதான் செய்திடும் அறச்செயல் புனிதமடையும். அதற்கு மனிதனை ஆட்டிப்படைக்கும் ’தான்’ எனும் அகந்தையும், அவனைப் பீடித்திருக்கும் அறியாமை இருளும் முழுமையாய் ஒழியவேண்டும். அவ்வாறு, அகந்தையின்றித் தொண்டுசெய்து ஏழை எளியோரின் அரந்தையைப் (துன்பத்தை) போக்குவோரின் உள்ளத்தில் இறைவன் வாழ்கின்றான்! அங்கே கோயில் கொள்கின்றான்!

    Share
  • படக்கவிதைப் போட்டி – 44

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12395466_930420910345442_335089823_n
    32535581@N07_lபிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (26.12.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 43-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. யெஸ்மெக் எடுத்துள்ள இந்தப் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்கான படமாகத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள்.

     a man with two kids

    மழலைச் செல்வங்களை இடையில் இடுக்கிக்கொண்டு விரைந்தேகும் இந்த மனிதனின் மறுபக்கம் நம் பார்வைக்குப்படுகின்றது. பிஞ்சுக் குழந்தைகளின் கள்ளமற்ற கனிந்த முகம் கவனம் ஈர்க்கின்றது.

    எங்கே செல்லும் இந்தப் பாதை? என்ற வினாவோடு இதற்கான விடையை நம் கவிஞர்களிடம் தேடிக் கண்டடைவோம்!

    ***
    காட்டுவழி நோக்கிப் பயணிக்கும் இவர்களின் ’காடடைதல்’தான் (வாழ்வைக்) ’கண்டடைதல்’ என்று சுவையான புதிய விளக்கம் தருகின்றார் திரு. கவிஜி. 

    நகத்தின் கண்களில்
    இரவின் பிளிறல்…
    இருந்தும் நுழைந்த
    நொடி–விரிந்தது
    கீற்று…
    விலகியது திறப்பு,
    ஒளிர்ந்து மிளிர்ந்த
    காட்டுக்குள்
    பேய் பிடித்து மயங்கியது
    பயணம்….
    மீண்டும் தொடரும்
    காடடைதல்
    என்பது கண்டடைதல்….
    அது அப்படித்தான்,
    ‘
    ஆ’வென திறந்திருக்கும்
    அத்துமீறலின் சுரப்பு…
    புரியாவண்ணம் நிறைந்த
    கிண்ணம்..
    அது ஏந்தும்
    பாத்திரத்தின் ஆத்திரம்,
    இருந்தும் இனிக்கும்
    இன்னிசை வலை..
    பின் அது கீறும்
    நகம் முழுக்க,
    கண்கள்…
    மீண்டும் இரவின்
    பிளிறலில்
    நனையும் எதிர் வினையும்..!

    ***
    ’மழைவெள்ளத்தில் சிக்கித் துன்புற்று செய்வதறியாது நின்ற சின்னஞ்சிறு மழலையரை ’மனிதாபிமானம்’ எனும் பண்பு இந்தப் பெரியவர் உருக்கொண்டு காப்பாற்றியது’ என்று உருகுகின்றார் திரு. மெய்யன் நடராஜ். 

    சென்னை மழைக்குள்ளே சிக்குண்டு சீர்குழைந்த
    அன்னைதந்தைக் குற்ற  தறியாதச் – சின்னக்
    குழந்தைகள் செய்வதற்று நின்றிருக்கக் கண்டு
    கிழவர் மனம்பதைத்து காப்பாற்றும் காட்சி
    மனிதாபி மானத்தின் சான்று.

    ***
    தன் வாழ்வுப்பாதையில் துணையாக வரும் உறவுகளைத் துவளாது காக்கும் மனிதரைத் தன் கவிதையில் நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் திருமிகு. பி. தமிழ்முகில்.

    மகிழ்வான தருணங்களில்
    தலையில்  தூக்கி வைத்து
    கொண்டாடி மகிழ்ந்து
    துவண்ட பொழுதுகளில்
    கைகொடுத்து தூக்கியே
    உற்சாகமூட்டி உறுதுணையாகி
    வாழ்வின் ஒவ்வொரு தருணமதிலும்
    சுமையாக ஓர்பொழுதும் எண்ணாது
    சுகமாக ஏற்றுக் கொண்டு
    எந்தன் வாழ்வின் பாதைதனில்
    துணையாக வரும் உறவுகள்
    அனைவரையும் சுமக்கிறேன்
    எந்தன் நெஞ்சமதில் சுகமாக !
    ஏற்றத் தாழ்வுகள் – மேடு பள்ளங்கள்
    அனைத்தையும் கடக்கின்றேன்  – அந்த
    அன்பு உள்ளங்களின் துணையுடனே !

    ***
    இயற்கைப் பேரிடரின் கோரக்கரங்களில் தஞ்சமடைந்த இந்தப் பிஞ்சுகளை, இரக்கமெனும் இனியகுணத்தால் அணைத்துநிற்கும் ஏழைமனிதனிவன்!’ என்று மனம்பூரிக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    இயற்கை விதைத்த
    வஞ்சத்தில் பெற்றமகனின்
    உயிர் இழந்தான்
    உடமை இழந்தான்
    எஞ்சியதுஅவன்உயிர் மட்டுமே
    கஞ்சிக்கே வழியில்லாதபோது
    பிஞ்சுகள் இரண்டு வெள்ளத்தில்
    தஞ்சம் ஆகின அவனிடத்தில்
    பஞ்சப் பராரியான அவனோ
    அஞ்ச வில்லை அள்ளியெடுத்து
    கொஞ்சி மகிழ்ந்து நெஞ்சோடுஅணைத்து
    பிஞ்சுகள் இரண்டும்
    பஞ்சாகவும்
    நஞ்சாகவும் கீழ்மைபடாமல் வளர்க்க
    நெஞ்சு நிமிர்த்தி நடந்தான்
    ஈரமான ஏழை மனிதன்
    வெள்ளச்சேதத்தில் செழித்து வளர்ந்தது
    மனிதாபிமானம்.

    ***

    ’இயற்கைக்கு எதிரான எம் வாழ்க்கைக்கு மழையே நீ தந்த பரிசுதான் இந்த அழிவு என்பதை உணர்கின்றோம். ஆயினும், பெரியவர்கள் செய்த பிழைக்கு ஏதுமறியாத பிஞ்சுகளும் அல்லவோ பலியானார்கள்? தீமையிலும் ஓர் நன்மையாய், எம் வாழ்க்கை இருண்டபோது மனிதாபிமானம் மத்தாப்புக் கொளுத்தியதைக் கண்டோம்’ என்று நெகிழ்கின்றார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

    இருண்டு நீ
    திரண்டபோது
    இருளப்போகிறது
    எம் வாழ்க்கை யென
    எள்ளளவும் எண்ணவில்லை

    இருபதாண்டு உழைப்பினை
    இரண்டே நாட்களில்
    இல்லையெனச் செய்தாய்
    இதென்ன நியாயம்

    நீ ஓடுகின்ற வழியெல்லாம்
    வீடுகளை கட்டியது
    எங்கள் தவறுதான்
    அதற்காக
    எய்தவர்களை விடுத்து
    அம்புகளை ஏன் அழித்தாய்

    பாலுக்கு குழந்தைகள் அழுததையும்
    பச்சை நீர் வேண்டி
    முதியோரகள் கெஞ்சியதையும்
    பார்த்தப் பின்னரும்
    உன் பயங்கரவாத பயணத்தை
    ஏன் தொடர்ந்தாய்

    பித்தம் தலைக்கேறி
    நீ ஆடிய ஆட்டத்திலும்
    புத்தம்புது நம்பிக்கைகள்
    எங்களுக்குள் பூத்திருக்கிறது

    நீறு பூசிய நெருப்பாய்
    மறைந்திருந்த மனிதம்
    விஸ்வரூபம் காட்டி
    வியக்க வைக்கிறது

    இடருற்ற நேரத்தில்
    இளைஞர்களின் எழுச்சி
    நாளைய தேசத்தின் மீது
    நம்பிக்கைக் கொள்ள வைக்கிறது

    […]
    மறுபடியும்
    முகிழ்த்தெழுவோம்
    இம்முறை
    இயற்கை கூறுகளுக்கு
    இடையூறின்றி!

    ***
    புனர்வாழ்வை நோக்கிப் புதுப்பயணம் மேற்கொள்ளும் மனிதனை நம்முன் காட்சிப்படுத்தியுள்ளார் திருமிகு. வேதா இலங்காதிலகம். 

    மேட்டுக் காணி நோக்கியே
    காட்டு வழியென்று ஆண்டவனையே
    கேட்டுச் செல்கிறேன், எஞ்சிய
    பட்டுச் செல்வங்களுடன் புனர்வாழ்விற்கு!
    எட்டுவேன் என்னால் இயன்றவரை!

    எசமானின் பிள்ளையோடென் பேரனையும்
    நிசமாக உயிராய் வளர்ப்பேன்!
    உப்பிட்டவரை உள்ளளளவும் நினையென்று
    செப்பியது அன்று உண்மையோ!
    தப்பாத ஒரு தருணமிதோ!

    பிரளய வெள்ளம் ஊரோடென்னையும்
    புரட்டிப் போட்டது எதுவுமின்றி.
    இரண்டு செல்வங்களோடு என்னையும்
    அரங்கநாதன் வாழச் செய்கிறான்!
    இரட்சகனின் தீர்ப்போடு செல்கிறேன்!

    ***

    தைரியத்தை ஒருபுறமும் நம்பிக்கையை மறுபுறமும் சுமந்துகொண்டு வசந்தத்தைத் தேடி நடைபயிலும் மனிதனைப் பாடுபொருளாக்கியிருக்கின்றார் திரு. சத்தியமணி.

    வறண்ட காடு
    இருண்ட வானம்
    தளர்ந்த கால்கள்
    உலர்ந்த உதடு
    தவிக்கும் பார்வை
    நடுங்கும் தோள்கள்
    சுருங்கும் நெஞ்சம்
    சுவாசம் கெஞ்சும்
    சலித்த சொற்கள்
    தொலைத்த உறவு
    முதிர்ந்த வயது
    முடிந்த பாதை
    இருந்த போதும்
    என் அரவணைப்பில்
    நம்பிக்கை ஒருபக்கம்
    தைரியம் மறுபக்கம்
    ஏளனமாக்க பார்க்காதே என்னை
    இன்னும் என்வசம் வசந்தம்தான்

    ***

    சமீபத்திய மழைவெள்ளப் பாதிப்பைக் கவிஞர்களின் கவிதைகள் நெடுகிலும் காணமுடிகின்றது. மனிதவாழ்வோடு இரண்டறக் கலந்துசெல்லும்போது கவிதைகள் மேலும் கவித்துவம் பெறுகின்றன. பாராட்டுக்கள் கவிஞர்களே!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்து கவிஞரைக் கண்டுவருவோம்! 

    தேடிச் சோறுநிதந் தின்று – பல
    சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
    வாடித் துன்பமிக உழன்று – பிறர்
    வாடப் பலசெயல்கள் செய்து – நரை
    கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
    கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
    வேடிக்கை மனிதரைப் போலே – நான்
    வீழ்வே னென்று நினைத் தாயோ? என்றார் மகாகவி. ஆம்! தேடிச் சோறு தின்பதும், வீண்கதைகள் பேசித் திரிவதுமன்று மானுட வாழ்வின் நோக்கம். வாடிய உயிர்களைக் கண்டு வாடுவதும், அவர்தம் இன்னல் நீக்கி இன்பம் சேர்ப்பதுமே அதன் உண்மை நோக்கம்!

    அவ்வகையில், தாயிழந்து தவித்து நிற்கும் மழலைகள் இருவருக்குத் தானே தாயுமான ஆண்மகன் ஒருவனின் தன்னலமற்ற சேவைகளை, “சுருண்ட வாழ்வின் சுருக்கம் நீக்கும் இழையுமானவன்;  மருண்ட கண்களின் மயக்கம் போக்கும் மருந்துமானவன்” போன்ற சிறந்த சொற்களால் செம்மையாய் விளக்கிச்செல்லும் கவிதையினைக் கண்டு உளம் நெகிழ்ந்தேன்.

    அக்கவிதை…

    தாயைத்தேடிப் பயணம் செல்லும்
    தாயுமானவன்……இரு
    சேய்களை இடுப்பில் ஏந்திச் செல்லும்
    நாயகனானவன்…..பசித்த
    வாயினுக்கமுதம் வழங்கச் செல்லும்
    தாய்மடியானவன்…கிடைக்கும்
    காயினும் மேலாய்க் கனியச் செய்யும்
    காலம் ஆனவன்.

    இருண்ட மேகம் திரண்ட வான்பொழி
    மழையுமானவன்…..எழில்
    சுருண்ட வாழ்வின் சுருக்கம் நீக்கும்
    இழையுமானவன்.
    மருண்ட கண்களின் மயக்கம் போக்கும்
    மருந்துமானவன்….சுவை
    அருந்தும் அமுதம் வயிற்றுக்கீயும்
    விருந்துமானவன்.

    யாரும் இங்கே அனாதை யில்லை
    என்றே சொல்லுபவன்……பெற்றோர்
    பேரும் அறியாப் பிள்ளைகள் சொல்லும்
    பெயரும் ஆனவன்.
    வேரைத் தேடி விருட்சம் என்றும்
    வியர்த்துப் போகுமோ….மனம்
    சேரும் இடத்தைச் சிந்தனையின்றிச்
    சேர்தல் கூடுமோ…

    வாழும் வரைக்கும் பூமி நமக்கு
    வாழ இடங்கொடுக்கும்….உணர்வு
    சூழும் வரைக்கும் சாமி இங்கு
    சுகத்தை நமக்களிக்கும்
    பாழும் எண்ணப் பாழ்கிணற்றினில்
    பார்வை விழவேண்டாம்….நாம்
    வாழ்வோம் என்னும் மந்திரச் சொல்லே
    வாழ்க்கைப் பாடம் ஆகட்டும்.

    பாதை நீளும் பயணம் தொடரும்
    என்றே காட்டுபவன்….அவன்
    பார்க்கும் பார்வையில் சோர்வை நீக்கிச்
    சுடரைக் கூட்டுபவன்.
    வாதை அழிக்கும் வாழ்வைக் காட்டும்
    வழியுமானவன்……எல்லோர்
    வேதனை ஒழிக்கும் வேதஞ் சொலுந்தாய்
    மொழியுமானவன்.

    இந்த இனிய கவிதையை வடித்துத் தந்திருக்கும் திரு. இளவல் ஹரிஹரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவிக்கின்றேன்.

    ***

    கிராம வாழ்வை வெறுத்து நகரமெனும் நரகம் சென்று வாழ்வைத் தொலைக்கும் இளைய சமுதாயத்தின் அவலம் பேசுகின்றது மற்றொரு கவிதை.

    ”ஒரு நாட்டின் இதயம் அதன் கிராமங்களில்தான் வாழ்கின்றது” என்றார் மகாத்மா காந்தியடிகள். நம் இளைஞர்கள் அதனை மறந்ததேனோ?

    பாடுபட்டுப்
    படிக்கவைத்தேன் மகனை..

    படித்த படிப்புக்கு வேலைதேடிய
    பட்டணத்தில் கிடைத்தது,
    வேலையுடன்
    வாழ்க்கைத்துணையும்..

    தாயில்லாப் பிள்ளையெனத்
    தன்போக்கில் விட்டதாலே,
    இன்று
    தாய்மண்ணையே மறந்துவிட்டான்..

    பட்டிக்காடு வேண்டாமாம்,
    பட்டணத்தில் வீடுகட்டி
    பகட்டாய் வாழ்ந்திடவே
    காடுமேடு நிலத்தைவிற்று
    காசுகொடு என்றுவந்தான்..

    கேட்டபடி
    கொடுத்துவிட்டேன்,
    குடிசையொன்று எனக்காக
    வைத்துக்கொண்டு
    கிராமத்திலே தங்கிவிட்டேன்..

    பட்டணத்தில் மழைவெள்ளம்
    பேரழிவு என்றார்கள்,
    பதறி ஓடினேன்..

    பார்த்ததங்கே–
    எங்கும் ஓலம்,
    எல்லாம் அழிந்த கோலம்..

    எனக்கு,
    எல்லாம் போச்சு
    கிடைத்தது
    என்னிரு பேரப்பிள்ளைகள்தான்..

    இவர்களாவது
    என்பேச்சு கேட்பார்களா
    இனிய வாழ்வு வாழ்வார்களா..

    கண்ணீர்க் கடலில்
    நம்பிக்கைப் படகில்
    நான் போகிறேன்
    கிராமம் நோக்கி…!

    கிராம வாழ்வின் அருமை பேசும் திரு. செண்பக ஜெகதீசனின் இந்தக் கவிதையைப் பாராட்டுக்குரியது என்று தெரிவிக்கின்றேன்.

    பங்குபெற்ற அனைவருக்கும் என் நன்றி!

    Share
  • கானப்பேர் தந்த மானவீரர்கள்!

    -மேகலா இராமமூர்த்தி

    சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த பாண்டிய நாடு வீரத்துக்கும் விளைநிலமாய்த் திகழ்ந்தது. அந்நாட்டில் ஆட்சிபுரிந்த குறுநில மன்னர்கள் பலர் பெருவீரமும், அதற்கிணையான ஈரமும் மிக்கவர்களாய் வாழ்ந்திருந்தனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாய் அறிகின்றோம்.

    அவ்வீர மண்ணில் நிலவளமும் நீர்வளமும் நிறைந்த ஊர்கள் பலவுண்டு. அத்தகைய வளமிகு ஊர்களில் ஒன்றுதான் ‘கானப்பேர்.’ எழிலால் மட்டுமின்றி எயிலாலும் (மதில்) சிறப்புப்பெற்றது அவ்வூர். அப்பகுதியை ஆண்டுவந்தான் குறுநில மன்னன் ஒருவன். அவன் பெயர் ’வேங்கைமார்பன்’ என்பதாகும். தோள்வலியும் வாள்வலியும் கொண்ட பெருவீரனான அவன், வான்தொடும் உயரத்தோடு கூடிய எயிலையும், காவற்காடுகளையும் அரணாய்க் கொண்ட வளமனையில் வாழ்ந்துவந்தான். வன்மையும் வனப்பும் மிக்க அந்த எயிலானது ‘கானப்பேரெயில்’ என்று இலக்கியங்களில் குறிக்கப்படுகின்றது.

    அந்நாளைய அரசர்கள், தம்மோடு முரணியோரிடமிருந்து (பகைவர்) தம்மையும், தம் நாட்டையும் காப்பதற்காகப் பல்வேறு அரண்களைக் கொண்டிருந்தனர். அவற்றில் சில இயற்கையாய் அமைந்தவை; சில செயற்கையாய் அரசர்களால் அமைக்கப்பட்டவை.

    ”மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
    காடும் உடைய தரண்”
    என்று அரண்களை அழகாய் வகைப்படுத்துவார் வள்ளுவப் பெருந்தகை. அவ்வகையில், நாட்டைச் சுற்றியிருக்கும் கடல், மலை, காடு போன்றவை இயற்கையாய் ஒரு நாட்டிற்கு அமைந்திருக்கும் அரண்கள். அவையேயன்றி, பெரிய மதில்கள், அகழிகள் (எனும் செயற்கை நீர்நிலைகள்) முதலியவற்றை ஏற்படுத்தியும் தங்கள் நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்துவர் அரசர்கள்.

    பேரெயிலைப் பாதுகாப்பாய்க் கொண்டு ஆட்சி புரிந்ததாலேயே தருக்கும் செருக்கும் மிக்கவனான் வேங்கைமார்பன். அப்போது மதுரையில் ஆட்சிபுரிந்துவந்தான் பாண்டிய மன்னன் ’உக்கிரப்பெருவழுதி’ என்பான். உக்கிரமான கோபத்தோடு பகைவர்களைப் பந்தாடும் மாவீரம் பொருந்தியவன் அவன். இப்பாண்டிய மன்னன் காலத்தில்தான் அதிசயிக்கத்தக்க வகையில் தமிழகத்தின் மூவேந்தரும் ஒற்றுமையாய் இருந்திருக்கின்றனர்(!). இதனைக் கண்ணுற்று மகிழ்ந்த அவ்வையார் எனும் பெண்பாற்புலவர் இதுபோன்ற ஒற்றுமையோடு இவர்கள் என்றும் வாழவேண்டும் என்று வாழ்த்திப்பாடிய பாடலொன்று புறநானூற்றில் (புறம்: 367) இடம்பெற்றுள்ளது.

    வீரமும், பெருவேந்தர்களின் நட்பும் கொண்ட வழுதியோடு யாது காரணத்தாலோ வேங்கைமார்பனுக்குக் கடும்பகை ஏற்பட்டுவிட்டது. அதன் விளைவு பெரும்போராய் வெடித்தது!

    கானப்பேரில் நிகழ்ந்த அப்போரில் உக்கிரப்பெருவழுதி வலிமைமிகு கானப்பேரெயிலை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றிவிட, வேங்கைபோல் வீரப்போர் புரிந்தும் தன் வீரம் வென்றியை விளைவிக்காததை உணர்ந்த வேங்கைமார்பன், மாறுகோலம் பூண்டு கானப்பேரைக் கடந்து ஓடிமறைந்தான்!
    வெற்றிவாகை சூடிய பாண்டியனின் மீனக்கொடி கானப்பேரில் உயரப் marudu brosபறந்தது!

    ”உக்கிரப் பெருவழுதியால் கைப்பற்றப்பட்ட கானப்பேர், கொல்லனுடைய காய்ச்சிய இரும்பில்பட்ட நீர்த்துளி போன்றது; வெம்மையான இரும்பால் உண்ணப்பட்ட நீர் எவ்வாறு மீளாதோ அதுபோல் கானப்பேரும் இனி வேங்கைமார்பனிடம் மீளாது!” என்று வழுதியின் வெற்றிச் சிறப்பை வியந்து பாடியுள்ளார் ஐயூர் மூலங்கிழார் எனும் நல்லிசைப் புலவர்.

    புலவரை யிறந்த புகழ்சால் தோன்றல்
    நிலவரை இறந்த குண்டுகண் அ‌கழி
    வான்தோய் வன்ன புரிசை விசும்பின்
    மீன்பூத் தன்ன உருவ ஞாயில்
    கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
    அருங்குறும்பு உடுத்த
    கானப் பேரெயில்
    கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
    இரும்புண் நீரினும் மீட்டற்கு அரிதென
    வேங்கை மார்பன் இரங்க வைகலும்
    ஆடுகொளக் குறைந்த தும்பைப் புலவர்
    பாடுதுறை
    முற்றிய கொற்ற வேந்தே
    இகழுநர் இசையொடு மாயப்
    புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே. (புறம்:21)

    அதுமுதல், உக்கிரப்பெருவழுதி ’கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி’ என்று போற்றப்பட்டான். போரில் வெற்றித் திருமகளைத் பற்றிடத் தவறினாலும், கானப்பேர் தந்த வேங்கையாம் வேங்கைமார்பனின் வீரம் வழுதியின் வீரத்துக்குக் குறைந்ததன்று!

    எயிலால் பெயர்பெற்ற கானப்பேர், ’திருக்கானப்பேர்’ எனும் பெயரோடு பாண்டிநாட்டுச் சிவத்தலங்களுள் ஒன்றாகவும் விளங்கும் பெருமைக்குரியது.

    காலம் மாறியது; கூடவே கானப்பேரின் பெயரும் மாற்றம் கண்டது. ஆம், சங்க காலத்தில் கானப்பேராக இருந்த அவ்வூர், பின்னாளில் ’காளையார்கோயில்’ என்று வழங்கப்படுவதாயிற்று. பெயர் மாறியபோதினும் அப்பகுதி மக்களின் வீரம் மாறவில்லை!

    காளையார்கோயிலின் வீர வரலாற்றிற்குச் சிறப்புச் சேர்த்தனர் சகோதரர்கள் இருவர்! 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராகப் புரட்சிசெய்துப் பரங்கியரை எதிர்த்த முன்னோடிகளாய்த் தமிழத்தில் திகழ்ந்தவர்கள் இவர்களே. அஞ்சாமையைத் தம் உடைமையாய்க் கொண்டிருந்த இவ்வீரர்கள், தம் நெஞ்சுரத்தாலும் நாட்டுப்பற்றாலும் வெள்ளையருக்குச் சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்தனர்.

    அவர்கள் வேறுயாருமல்லர்! சிவகங்கைச் சீமையின் சிங்கங்களாய் இன்றளவும் போற்றப்படும் ’மருது சகோதரர்களே’ அவர்கள்! இவ்விருவரில் மூத்தவர் ’பெரிய மருது’ (இவருக்கு வெள்ளை மருது என்ற பெயருமுண்டு) என்றும், இளையவர் ’சின்ன மருது’ என்றும் மக்களால் அழைக்கப்பட்டிருக்கின்றனர். (In his book ‘A History of Tinnevelly’, Bishop R. Caldwell says, Marudu was their family title, not a personal name). காட்டுவேட்டையில் ஆர்வம் மிக்கவராயிருந்த பெரிய மருது, நாட்டு நிர்வாகத்தில் சிறிதும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆகவே, ஆட்சிப்பொறுப்பை மாட்சியோடு செய்துவந்தவர் சின்ன மருதுவே!

    காளையார்கோயில் வட்டத்திலுள்ள ’சிறுவயல்’ எனும் ஊரில் அரண்மனை அமைத்து ஆட்சிசெய்துவந்த சின்ன மருது, குடிகள் போற்றும் கோனாய்த் திகழ்ந்திருக்கின்றார். மருதுவை நாடித் தமிழ்ப்பாவலர்கள் பலரும் வந்து பாடிப் பரிசில் பெற்றுச் சென்றிருக்கின்றனர். மருது சகோதரர்கள் ஆட்சியில் காவல் சிறப்பாய் இருந்தமையால் மக்கள் கவலையேதுமின்றிக் களிப்போடு வாழ்ந்திருந்தனர். ”வெள்ளிநிலா வானில் விளையாடும் நள்ளிரவு வேளையில் காட்டுவழியில் சென்றால்கூடக் கள்ளர்பயம் ஏதுமில்லை எம் தலைவனின் ஆட்சியில்” என்று குடிகள் சின்ன மருதுவைக் கொண்டாடினர். சகோதரர்களை ’மருதுபாண்டியர்’ என்றே மக்கள் அன்போடு அழைத்துவரலாயினர்.

    மருதுபாண்டியர், காளையார்கோயிலில் ஆட்சிபுரிந்துவந்த அதேசமயத்தில், நம் இந்தியாவோ அந்நியரான ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. மருதுவின் ஆட்சியின்போது, அவர் மாளிகையில் விருந்தினனாய்த் தங்கியிருந்த ஜெனரல் வெல்ஷ் (General Welsh) எனும் ஆங்கிலப் படைத்தலைவன் ஒருவன் தன்னுடைய நூலில் சின்ன மருதுவைப் பற்றிப் பின்வருமாறு செப்புகின்றான்:

    ”சின்ன மருது காட்சிக்கு எளியவர்; கடுஞ்சொல் அற்றவர்; கருணை மிக்கவர். இவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர் மக்கள். இவருடைய அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யார் வேண்டுமானாலும் உள்ளே செல்லலாம்; வெளியே வரலாம். அத்துணைச் சுதந்திரம் அங்கே நிலவியது!”

    அடையா நெடுங்கதவமாய் அனைவருக்கும் திறந்தே இருந்திருக்கின்றது மருதுவின் அரண்மனைவாயில் என்பதை மேற்காணும் விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன அல்லவா?

    நாற்பது மைல் சுற்றளவுள்ள மருது சகோதரர்களின் நாட்டின் நடுவே அமைந்திருந்தது காளையார் கோட்டை. அதனைச்சுற்றி ஆடு, மாடுகளைத் தம் செல்வமாய்க் கொண்ட முல்லைநிலத்து மக்கள் பல்லாயிரவர் வாழ்ந்திருந்தனர். வீரத்தில் தம் தலைவனுக்குச் சற்றும் சளைக்காத அம் மறக்குடியினர், மாற்றார் படையெடுத்துவந்தால் வேலையும், வாளையும், குத்துக்கோலையும், துப்பாக்கியையும் தூக்கிக்கொண்டு புறப்படுவர் போர்முனை நோக்கி; அழிப்பர் பகைவர் படையைக் கடுமையாய்த் தாக்கி!

    மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரரான ஊமைத்துரையோடு (இவர் கட்டபொம்மனின் சகோதரர்) நட்பு பூண்டிருந்தனர். இவர்கள் அனைவருமே அன்னை பூமியை அந்நியனுக்கு அடகுவைக்க விரும்பாத மானவீரர்கள் ஆவர். ஆதலால் அந்நியரின் சீற்றத்துக்கு ஆளாயினர்; தமக்கு அடிபணிய மறுத்த காளையார்கோயிலைக் கைப்பற்ற விழைந்தனர் வெள்ளையர். ஆனால் அரணமைந்த அவ்வூரைப் பிடிப்பது அத்துணைச் சுலபமான காரியமாய் இருக்கவில்லை அவர்களுக்கு!

    வழிமறித்துநின்ற காடுகளைக் கொன்றாலொழியக் கோட்டையை நெருங்கமுடியாது என்ற நிலை. பல மைல் தூரத்துக்குப் பரவியிருந்த அந்தக் காட்டையழிப்பது வெள்ளையருக்குச் சாத்தியப்படாத நிலையில், அக்காட்டில் மறைந்திருந்த மருது சகோதரர்களும், அவர்தம் மக்களும் ஆங்கிலப்படையைக் கடுமையாய்த் தாக்கினர். இதனால் மனச்சோர்வுற்ற ஆங்கிலேயர், நேரிய வழியில் மருது சகோதரர்களை வீழ்த்தமுடியாது என்றுணர்ந்து, தமக்கே உரித்தான நரித்தனத்தால் அவர்களை வெல்லக் கருதினர். அப்பகுதியைச் சேர்ந்த மறக்குலத் தலைவன் ஒருவனை அவ் வட்டத்திற்குரியவன் என்று பட்டங்கட்டி அவன் மூலமாக மருது சகோதரர்களை மடக்கிப் பிடித்தனர் என்று சொல்லப்படுகின்றது. (மருதுசகோதரர்கள் பிடிபட்டது குறித்து வேறுவிதமான செய்திகளும் சொல்லப்படுகின்றன.)

    பிடிபட்டதற்கு யார் அல்லது எது காரணமாயிருந்தபோதிலும், தம் இன்னுயிரைத் தந்து, தமிழனின் மானத்தைத் தலைநிமிரச் செய்தவர்கள் இச் சோதரர்கள் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

    ஆங்கிலேயரிடம் பிடிபட்டபோது, அன்னை பூமியின் விடுதலைக்காகத் தாம் உயிரழிக்கவிருப்பது குறித்துப் பெருமிதமும் மகிழ்ச்சியுமே அடைந்தனர் மருது சகோதரர்கள். அதேநேரத்தில், எக்காரணமுமின்றித் தம் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பிள்ளைகளைக் கும்பினியார் கொல்லமுயன்றதை ஏற்கமுடியாதவர்களாய், “ஐயா! வயதில் இளையவர்களான இப்பிள்ளைகள் உமக்குச் செய்த தீங்குதான் என்ன? இவர்களை எதற்காகக் கொல்ல முற்படுகின்றீர்?” என்று வெள்ளையரை வினவியிருக்கின்றனர்.

    மலையமானின் சின்னஞ்சிறு பிள்ளைகளை (மலையமான்மீது கொண்ட பகையால்) யானையின் காலால் இடறமுற்பட்ட கிள்ளிவளவனிடம் இதே போன்றதொரு கேள்வியை எழுப்பினார் கோவூர்கிழார் எனும் புலவர் பெருந்தகை. வளவன் சிந்தித்தான்; தகப்பனோடு ஏற்பட்ட பகைக்குப் பாவமேதும் அறியாத பச்சிளம் பிள்ளைகளைப் பலியிடுவது முறையன்று என்று தன்னுடைய கொலை முயற்சியைக் கைவிட்டான் என்கின்றது சங்க இலக்கியம். ஆனால் அத்தகைய கருணையுள்ளத்தை இரக்கமேயற்ற அரக்கர்களான வெள்ளையரிடம் நாம் எதிர்பார்க்க முடியுமா? மருது சகோதரர்களின் கோரிக்கை, செவிடன் காதில் ஊதிய சங்காய்ப் பயனற்றுப்போனது.

    1801-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் மருது சகோதரர்களைத் தூக்கிலிட்டுக் கொன்றது வெள்ளை அரசு. இவர்களோடு, ஊமைத்துரை, மருது சகோதரர்களின் உறவினர்கள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என 500-க்கும் மேற்பட்டோரை ஆங்கில அரசாங்கம் ஈவு இரக்கமின்றிக் காவு கொடுத்திருக்கின்றது. நாட்டு விடுதலைக்காக எத்துணை வீரர்களைக் களபலியாக்கியிருக்கின்றோம் என்பதை அறிய நெஞ்சு பதைக்கின்றது.

    நண்பர்களே! கானப்பேரின் ’பெயரை’ இலக்கியத்தில் நிலைநிறுத்திய பெருமைக்குரியவன் வேங்கைமார்பன் என்றால், காளையார்கோயிலாக மாறிய அவ்வூரை இந்திய வரலாற்றின் பொன்னேடுகளில் இடம்பெறச்செய்த பெருமைக்குரியவர்கள் மருது சகோதரர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    *** 

    கட்டுரைக்கு உதவியவை:

    1. https://ta.wikipedia.org/wiki/மருதுபாண்டியர்
    2. http://www.kalachuvadu.com/issue-128/page52.asp
    3. A History of Tinnevelly – Bishop R. Caldwell
    Share
  • படக்கவிதைப் போட்டி … (43)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12380561_928432517210948_352344013_n
    24942309@N07_rயெஸ்மெக் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (19.12.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share