படக்கவிதைப் போட்டி (45)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (2.01.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
பட்டம் போலப் பறக்கிறார்
…பரவ சத்தில் மிதக்கிறார்
கட்டி நிழலை இழுக்கிறார்
… களிப்பி லாடிக் கிடக்கிறார்
எட்டி நின்று பார்ப்பதில்
… எழுந்து ஓடத் துடிப்பதில்
சுட்டிப் பிள்ளை யிவர்போலச்
… சுகிக்க மனதும் ஏங்குதாம்.
எங்கள் உலகை
உங்கள் சாவிகள்
ஒருபோதும் திறக்காது…
அது மலைகள் வளர்ந்த
தேசமாக இருக்கையில்
உங்கள் கழுத்து ஓர் எல்லையில்
நின்று விடும்…
அருவிகள் செய்பவர்கள் நாங்கள்
என்பதால் உங்கள்
கேள்விகள் எங்களை
நனைப்பதில்லை…
காடுகள் மரங்களோடு
கடவுளையும் வளர்க்கத்
தெரிந்தவர்கள் -உங்கள்
பிரார்த்தனைகளை நாங்கள்
உதைத்துத் தள்ளுகிறோம்…
புல்வெளிகள் புதிது என்பது
எங்கள் தத்துவம், மாயங்கள் என்பது
உங்கள் முகம்..
அது ஒப்பனை-எங்களுக்கு வேண்டாம்..
எந்தப் பூட்டிலும் எங்கள் உலகம்
நுழைந்து
வெளி வந்து விடும்-அதற்கு
உங்கள் சாவிகள் தேவையில்லை..
காரணமற்ற எங்களை
முறைத்து விட்டு நீங்கள்
சென்றால்
சரி என்று குட்டிக்கரணம்
போட்டு விட்டு
கடந்து
விடுவோம் …
பிறகு காட்டாறு என்று
கூறுவது உங்கள் இஷ்டம்….
கவிஜி
தலைகீழ் விகிதங்களாய்
வாழ்க்கை இருக்கையில்
சிரசாசனம் செய்தே
சிம்மாசனம் பிடிக்க வேண்டியுள்ளது…
சூரியனும்
எங்கள் நிழலைச்
சுட்டெரிக்குமோ……
மகிழ்ச்சிக் கடல்
பொதுவன்றோ எல்லோருக்கும்
அந்த வானம் போல….
கைநிறைய அள்ளுவோம்,
களிப்பில் துள்ளுவோம்…
தொடுவானம் போலத்
தொலைதூரம் செல்வதல்ல
வாழ்க்கை……
தொட்டுவிடும் தூரந்தான்,
கையூன்றி நிலத்தைக்
கைப்பிடிப்போம்…
நமக்கான இடம்
எப்போதும உள்ளது…
வாருங்கள் வாழலாம்….
எல்லோரையும வாழ்த்தலாம்,
வாழவைப்போம் என்றென்றும்..
இளவல் ஹரிஹரன், மதுரை
பறக்கவிடு…
வஞ்சமெனும் பெரும்பாரம்
நெஞ்சில் புகாதவரை,
பிஞ்சுக் குழந்தைகள் இதயம்
பஞ்சுபோல் மெல்லியதுதான்..
அதனால்,
இறக்கைகள் இல்லாமலே
பறப்பரிவர் விண்ணைத் தாண்டியே..
பறக்கட்டும் இந்தப்
பட்டாம்பூச்சிகள்,
பாசவலை விரித்து
முடக்கிவிடாதீர்கள் இவர்கள்
முன்னேற்றத்தை..
பறக்கட்டும் பறக்கட்டும்
இந்தப்
பட்டாம்பூச்சிகள்…!
-செண்பக ஜெகதீசன்…
நம்பிக்கைச் சிறகுகள் போதும் எமக்கு.
விண்ணை மண்ணாய் மாற்றும்
வித்தைகள் கற்ற நாங்கள்
வார்த்தைகள் கொண்டு தம்பட்டம் அடியாமல்
வானத்தில் பறந்து எம் பட்டம் விடுவோம் !
நீங்கள் நினைக்கலாம்
எங்கள் கைகளில் இருப்பது
பட்டமென்று ,
பட்டமல்ல அது.
விழுந்துவிட எத்தனிக்கும் பூமியை
பிஞ்சு கரங்களால் தாங்கிப் பிடிக்கும்
காகிதச் சும்மாடு .
எங்களை எங்கள் உலகத்தில் நின்று பாருங்கள்
உங்களிலிருந்து உதிர்ந்துபோன
எங்களின் காலம் உங்களை
எங்கள் உலகத்துக்கே
மறுபடியும் அழைத்துப் போகக்கூடும் .
வாருங்கள் எம்மோடு வந்து
விளையாடுங்கள்.
உங்கள் வரட்டுப் பிடிவாதங்களை
எடுத்து வீசிவிட்டு
எங்கள் மனதோடு எங்களிடம் வரும் உங்களை
இந்த வானம் மட்டுமல்ல
எந்த வானமும் நிராகரிக்காது.
*மெய்யன் நடராஜ்
உண்மை உணர்க !
உருண்டு திரண்டு
உழன்று சுழன்று
மண்ணில் இருந்து
விண்ணில் பறக்க
முயன்று பார்ப்பது
பள்ளிசெல்லும் வயதில்
துள்ளிப் பறப்பதும்
இயல்புதான் இது
விளையாட்டுதான் !
ஆனால் வாழ்க்கையில்
கெட்ட வழியில்
சொத்து சேர்த்து உயராமல் நல்
முத்தாய் பெயர் பெற
நயம்பட உழைத்தும்
சுயமாய் நேர்பட நின்றும்
உயரம் ஏறி
சிகரம் தொட்டு
உயரும் நிலைதான்
பிறப்பின் சிறப்பே
எந்த நிலையிலும்
உயர உயரப் பறந்தாலும்
ஓர் நாள் பறவை கீழிறங்கும்
உண்மைதனை உணர்க பிள்ளைகளே
சஎஸ்வதி ராசேந்திரன்
பட வரி 45
தலைகீழ் படம்.
கடற்கரையில் சிரசாசனம் யோகாசனம்
படம் தலைகீழான பதிவினம்
வானம் கீழே கைமுட்டியின்று
வாலாய உடலின் சாகசம்.
மனமொரு நிலைப்படுத்தும் ஆசனம்
தனம் தலையோடிணைந்து உறுப்பகளிற்கு
உயிர்சத்து, தடையற்ற இரத்தோட்டம்
உயர் ஞாபகசக்தி, குரலினிமையுருவாகும்.
சிட்டுக் குருவிகள் சிறகடிப்பாய்
சுட்டித்தனச் சிறுவருக்கிது சர்வசாதாரணம்.
தண்ணீரில் நீந்துவது போன்றிவர்
மண்ணில் நீந்துமிது கைநடை.
தலைகீழ் நடையொரு சாகசம்
விலையேதுமில்லை சுட்டிச் சிறுவருக்கு.
கையால் சாகசம் செய்யுமிவருக்கு
வாழ்க்கையொரு விளையாட்டுச் சதுரங்கம்.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
2-1-2016