Featuredஇலக்கியம்

நக்கீரநோக்கில் நற்றமிழ்ப்புணர்ச்சியிலக்கணம்

— முனைவர்   துரை. குணசேகரன்.  

ThamizhVellathaazhi Dr. Ponmudi Book Cover 2

​​​​​​​​​​​​​​​​​​​​​​

மதிப்புரைவரலாறு:
இரண்டாயிரத்துப்பதினோராமாண்டின் பத்தாவதுமாதத்தில், ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, எங்கள் கல்லூரியில் ஆங்கிலத்துறையிற்பணியாற்றும் பேராசிரியர் மகேந்திரனென்பார், முன்பின் அறிமுக-மில்லாதவொருவரை, நான் முன்னதாக ஏற்றுக்கொண்டதற்கிணங்க என் இல்லத்திற்கேயழைத்துவந்தார்.

அவருடைய நண்பர்களிலொருவர், ஏதோ நூலெழுதியிருப்பதாகவும், அதற்கு மதிப்புரைதருமாறு வேண்டியும் முன்பே அவர் என்னிடம் பேசியிருந்தார். அவர் அழைத்துவந்த அந்த நண்பர், ஒரு நாற்-பதுவயதுமதிக்கத்தக்கவராகவும், பார்ப்பதற்கு மிகவும் எளியவராகவுங்காட்சியளித்தார்.

அறிமுகம்:
முதலில், நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமானோம். அவருடைய பெயர் பொன்முடியென்றும், திருமறைக்காட்டிலுள்ள ஆயக்காரன்புலமென்றவூரைச்சேர்ந்தவரென்றும், திருநள்ளாற்றிலுள்ள சமுதாயநலவழிமையத்தில் மருத்துவராகப்பணியாற்றுகிறாரென்றும் மகேந்திரன் கூறினார்.

நாங்கள் தமிழ்மொழியைப்பற்றி பொதுவாகப்பேசிக்கொண்டிருந்தபோது, மருத்துவர் பொன்முடி இலக்கணத்திற்குள்ளேநுழைந்தார். இலக்கணமென்றால், அவர் புணர்ச்சியிலக்கணத்தைப்பற்றியேபேசினார். ஒரு மருத்துவர் புணர்ச்சியிலக்கணத்தைப்பற்றிப்பேசியது எனக்கு வியப்பாயிருந்தது!

அந்த புணர்ச்சியிலக்கனத்தின்படி எவருமே சரியாயெழுதுவதில்லையென்றும், உரைநடைமட்டுமன்றி, இக்காலத்தில் கவிதைகளுங்கூட புணர்ச்சியைப்பொருத்தவரை பிழையாகவேயுள்ளனவென்றும் ஒரு புதுமையானபார்வையில் அவர் பேசத்தொடங்கினார். நானும் அதற்கு ஈடுகொடுக்கவேண்டியதாயிற்று. முதற்சந்திப்பிலேயே எங்கள் பேச்சு மூன்றுமணிநேரத்துக்குநீடித்தது! அந்த மூன்றுமணிநேரமும் போனதேதெரியாமற்போயிற்று! புணர்ச்சியைப்பற்றி அவர் அவ்வளவுபேசினார்.

புணர்ச்சியால் பொருள்மாற்றம்:
புணர்ச்சியை சரியாகப்பயன்படுத்தாததால் பொருளில் குற்றமும் குழப்பமுமுண்டாவதாகவும், புணர்ந்தசொற்கள் பிரித்தெழுதப்படுவதாகவும், மேலும் வல்லினமெய்யை சொற்களில் ஈற்றெழுத்தாய்-நிறுத்துவதாகவும், மகரவீற்றை கெடுத்தபின்னும் புணர்த்துவதில்லையென்றும் தமிழிலக்கணத்தின்படி இவையெல்லாம் குற்றமென்றும் இவற்றைப்போல் இன்னும் பலவற்றையும்பேசினார்.

அத்துடன் சில எடுத்துக்காட்டுகளை எழுதிக்காட்டி, சொற்களிலும் அவற்றின் வரிசையமைப்பிலும் எந்தமாற்றமுமின்றி, அந்த சொற்களை வெவ்வேறிடங்களில் சேர்த்தும்பிரித்துங்காட்டி, அப்படி சேர்ப்-பதாலும் பிரிப்பதாலும் ஒரு வாக்கியத்தின் பொருளை வேறுவேறாகமாற்றமுடியுமென்றும் விளக்கிக்-காட்டினார். அது ஒரு புதியசெய்தியாயிருந்தாலும் ஏற்கக்கூடியதாயிருந்தது.

உண்மை:
அவருடைய பேச்சில் உண்மையிருப்பதாகத்தோன்றியது. மேலும் அவர், ‘ஐயா, பேருந்துநிலையம், அஞ்சல்நிலையம், காவல்நிலையம் என்பனவெல்லாம் பிரித்தெழுதமுடியாத தொடர்மொழிகள். ஆனால் தமிழகமெங்கும் இவை இரண்டிரண்டுசொற்களாக பிரித்துத்தானேயெழுதப்பட்டிருக்கின்றன?’ என்றுகேட்டபோது, எனக்கு மறுமொழியேதும் சொல்லமுடியவில்லை.

குற்றமில்லையாவென்று வினவினார்:
‘துவக்கப் பள்ளி’ ‘உயர்நிலைப் பள்ளி’ ‘மேனிலைப் பள்ளி’ ‘கலைக் கல்லூரி’ என்றெல்லாம் தமிழகமெங்குமுள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் எழுதப்படுவதை நினைவூட்டி, இவற்றில் வல்லினமெய் சொல்லில் ஈற்றெழுத்தாயிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த வல்லினமெய், சொற்கள் புணர்ந்ததாலேயேவந்ததென்றும், புணர்ந்தசொற்களை பிரித்ததுடன், வல்லினமெய்யை ஈற்றெழுத்தாய்நிறுத்தியிருப்பது குற்றமில்லையாவென்றுங்கேட்டார்!

என்னநினைத்தாரோயென்னவோ, திடீரென்று தாம் கொண்டுவந்திருந்த ஒரு அச்சிட்டநூலினை என்னிடம் தந்து, ‘ஐயா, இதுதான் என் நூல். தாங்கள் தயைகூர்ந்து இந்த நூலை முழுவதுமாகப்-படித்துவிட்டு, உவந்தால் ஒரு மதிப்புரையினை நல்கிடவேண்டும்.’ என்றுகூறினார்.

‘காலங்காலமாய் நாம் புணர்ச்சியிலக்கணத்தை கற்றும் கற்பித்தும்வருகிறோம், இவர் சொன்னதெல்லாம் இவ்வளவிற்கு பெரியகுற்றமாயிருக்குமென்று இதுவரை எண்ணிப்பார்த்ததில்லை. இப்போதுபார்த்தால், இதற்காக இவர் ஒரு நூலையேயெழுதியிருப்பதாகச்சொல்கிறார். சரி, இருக்கட்டும்.’ என்றெண்ணிக்கொண்டு அவரிடம் சொன்னேன், ‘சரி. படித்துப்பார்க்கிறேன்.’ என்று.

நிழலைப்போன்று நீங்காதிருந்தது:
அன்றிலிருந்து, தமிழ்வெல்லத்தாழியென்ற அந்த நூலை, நேரங்கிடைத்தபோதெல்லாம்படித்தேன். ஒரு நிழலைப்போன்று அந்த நூல் என்னைவிட்டு நீங்காது என் அருகிலேயேயிருந்தது. அப்போது நான் வாங்கிய மகிழ்வுந்தில், மூன்றேமாதங்களுக்குள் பத்தாயிரங்கிலோமீட்டருக்குமேற்பயணஞ்-செய்யவேண்டியிருந்தது. அவ்வளவுதூரமும் என் மகிழ்வுந்து என்னைச்சுமந்ததோயில்லையோ அந்த நூலை சுமந்தேவந்தது!

தமிழ்வெல்லத்தாழியின் பொருள் கனமானது. ஒரு பத்துப்பக்கத்தை படிப்பேன், உறங்கிவிடுவேன்! ஆனாலும், நூலின் பொருளானது உறக்கத்திலும் என் நினைவிலேநின்று என்னை எழுப்பும், மீண்டும்-படிப்பேன். ஒருவாறாக, நூல்முழுவதையும் படித்து முடித்துவிட்டேன்.

அறிஞர்பெருமக்கள் ஒரு முடிவுக்குவரவேண்டும்:
நூலை படித்துக்கொண்டிருக்கும்போதே, நூலிற்காணப்பட்ட பலகருத்துகள் ஏற்றுக்கொள்ளத்தக்கனவாகவே தோன்றினாலும், சிலவற்றைப்பொருத்தவரை ஐயப்பாடுகளும் பற்பல வினாக்களும் தோன்றாமலிருக்கவில்லை! சிலவற்றை குறித்துவைத்துக்கொண்டு, அவரை நேரில்வரவழைத்து என் ஐயப்பாடுகளையும் வினாக்களையும் அவரிடமேகேட்டேன்.

அவரோ, என் ஐயங்களுக்கும் வினாக்களுக்குமான விளக்கங்களை அவருடையபார்வையில் சரியாகவிளக்கிக்காட்டினார். அவர் என்னதான்விளக்கமளித்தாலும், சிலவற்றை அப்படியேயேற்றுக்-கொள்வதற்கு என் மனம் இடந்தரவில்லை. அதேநேரத்தில் அவருடைய அந்த கருத்துகள் சரியானவை-யாகவேயிருக்கக்கூடுமோவென்னும் ஐயமும் இன்னும் இருந்துகொண்டேதானிருக்கிறது.

இதற்கு என்னசெய்யலாமென்று சிந்தித்தேன். அதன்பயனாய், என் சிற்றறிவிற்கெட்டிய சிலவற்றை தமிழறிஞர்களின்பார்வைக்கு இதன்வாயிலாக கொண்டுவரவிழைகிறேன். அறிஞர்பெருமக்கள் இந்த நூலினை தாங்களுமாய்ந்து அதற்கேற்ப ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

மதிப்பீடு:
சிவனும் ஔவையும்

‘தமிழ்வெல்லத்தாழி’ என்பது இந்த நூலின் தலைப்பாகும். இந்த நூலை எழுதிமுடித்தபின், அதுவரை நூலுக்கு பெயர்வைத்திராத நூலாசிரியர், அதற்கு என்னபெயர்வைப்பதென்று தாமாக-வெண்ணித்துணியவியலாதபோது, ஒருநாள், தான் அன்றாடம்வணங்கும் ‘கருப்பசாமி’ என்ற சாமியிடம் மனத்தை நிலைநிறுத்தி, ‘கருப்பசாமி, நூலுக்கு பெயர்சொல்’ என்று வேண்டியதாகவும், அந்த கருப்பசாமியோ, ‘என்னிலும்பெரியவரைக்கேள்’ என்றதாகவும், ஆசிரியர் அந்த சிவபெருமானையேகேட்க, அந்த பெருமான் ‘வெல்லம்’ என்று ஒற்றைச்சொல்லைத்தந்தாரென்றுங்கூறுகிறார்!

இந்த ஒற்றைச்சொல்லைவைத்துக்கொண்டு என்னசெய்வதென்றுபுரியாமல்விழித்த ஆசிரியர், தமிழ்க்கடவுளென்று முருகனைக்கேட்க, முருகனிடமிருந்து ‘ஔவையைக்கேள்’ என்றவிடைவந்ததாம். அதன்படி ஔவையைக்கேட்டபோது, ‘தாழி’ என்று, சிவபெருமானைப்போல் அவரும் ஒற்றைச்சொல்லையேதந்தாராம்.

ஆசிரியர் பின்னர் அது தமிழ்பற்றியநூலாயிற்றேயென்றெண்ணி, அந்த இரண்டுசொற்களுடன் தமிழென்பதையுஞ்சேர்த்து,

தமிழ் + வெல்லம் + தாழி = தமிழ்வெல்லத்தாழி
என்றுபெயர்வைத்தாராம்.

தலைப்புப்பொருத்தம்:
இந்த பெயரிலுள்ள வெல்லத்தாழி என்பதை, ‘வெல்லம் + தாழி’ என்றும், ‘வெல்லத்து + ஆழி’ என்றும் இருவேறுவகையிற்பிரித்துப்பார்க்கும்போது, இரண்டிற்கும் வெவ்வேறுபொருள்வருவது சிறப்பு. புணர்ச்சியைப்பற்றியதான இந்த நூலுக்கு, புணர்ச்சியாலேயேசிறப்புறுகின்ற இந்த தலைப்பு, இறையருளாற்கிடைத்ததென்று ஆசிரியர் மகிழ்கிறார்.

என்னதான் இறைதந்ததாயிருப்பினும், இந்த தலைப்பிற்கான பொருள் மறைபொருளாகவேயிருப்பதால், வாசகர்களுக்கு எளிதில் புரியும்வகையில், ‘நக்கீரநோக்கில் நற்றமிழ்ப்புணர்ச்சி’ என்றபெயர் பொருத்தமாயிருக்குமென்பது என்கருத்து. ஏனெனில், இந்த நூலாசிரியரும், வினாமேல்வினாவாக நூல்முழுவதும் வினவிக்கொண்டேதான்போகிறார்.

தமிழிலக்கியவரலாற்றை புரட்டிப்பார்த்தால், இறைநம்பிக்கையுடைய புலவர்பெருமக்களுக்கு, இக்கட்டானசூழலில் இறைவன் அருள்கூர்ந்தவரலாறுகளை அறிந்துகொள்ளலாம்.

‘உலகெலாம்’ என்று சேக்கிழாருக்கு பெரியபுராணம்பாடுவதற்கு அடியெடுத்துக்கொடுத்ததும், சுந்தரரை தடுத்தாட்கொண்டதுடன், ‘சொற்றமிழால் பாடுக’ என வேண்டிக்கொண்டதும், திருவாதவூராருக்காக பாண்டியமன்னனிடம் பிரம்படிபட்டதுடன், தம்மைப்பற்றி அவர்வாயாற்பாடச்சொல்லி, தான் கால்கடுக்கநின்றுகொண்டு தானே அதை எழுதிக்கொண்ட திருச்சிற்றம்பலத்தான்வரலாறும் அறியக்கிடக்கிறன.

அதேபோன்று, தம்பொருட்டு மாணவன் நாடுகடத்தப்பட்டானென்பதை அறிந்து, திருமழிசையாழ்வார் கணிகண்ணன்பின்னாற்செல்லும்போது, தன்னுடன் திருமாலையுமழைத்துச்சென்றவரலாறும், மீண்டும் பழையபடியே கோவிலிற்கிடக்கச்செய்தவரலாறும் நாம் அறிந்தவொன்றே.

இவ்வகையில், சரியானதாக ஒரு முடிவெடுக்கமுடியாதநிலையில், இறைவன்முன்னர் திருவுளச்-சீட்டுபோட்டு, அந்த இறைவனளிக்கின்றமுடிவினை ஏற்றுக்கொள்ளும்வழக்கம் இறைநம்பிக்கை-யுள்ளோரிடத்தில் இன்றுமிருப்பதை நாம் காணமுடிகிறது. அவ்வகையில், மருத்துவர் பொன்முடியும், இறைவனிடம்வேண்டி தம் நூலுக்கு பெயர்சூட்டியிருப்பது, வரலாற்றில் இடம்பெறத்தக்கது.

நூலெழுந்த சூழல்:
தமிழ்வெல்லத்தாழியென்னும் இந்த நூல் வெளிவருகின்ற இந்த நேரம், தமிழுக்கு பொற்காலமன்று. தமிழரே தமிழை புறக்கணிக்குங்காலம். வரலாற்றில் களப்பிறர்காலம்போல் தமிழுக்கு இது போதாதகாலம். அப்துல்ரகுமானின்வரியிற்சொல்வதென்றால்,

அகமிழந்தான் புறமிழந்தான்
ஆன்மாவை விற்றுவிட்டான்
முகமிழந்தான் தன்னுடைய
முகவரியை இழந்துவிட்டான்.
என்றுசொல்கின்றநேரம்.

பொல்லாதநேரம்:
படித்தவன்மட்டுமன்றி பாமரன்கூட ‘தமிழ்த்தாய்வாழ்த்து’ என்று தமிழ்த்தாய்க்கு வாழ்த்துசொல்லுமுன், “ஹலோ, மைக்டெஸ்டிங் ஒன் டூ த்ரீ… தமிழ்த்தாய்வாழ்த்து.” என்றவாறு, முதலில் ஆங்கிலத்தில் ஆறுசொற்களை அள்ளிவீசுவதை விழாக்களில் காணநேரிடுகிறது.

இது, தமிழன்னையை அவளுடையபிள்ளைகளே மாற்றாந்தாய்மனப்பான்மையோடுபார்க்கும்நேரம்!

ஆங்கிலமாகிய அந்த வேற்றுமொழியின்மீதுகொண்ட பற்று, தமிழரை இந்தநிலைக்காளாக்கிவிட்டது!

யுனெஸ்கோவின் அறிக்கையில், இன்னும் ஐம்பதாண்டுகளில் அழிந்துவிடக்கூடுமென்று கருதப்-படுகின்றதும், உலகமுழுவதிலும் படிப்படியாக அழிந்துவருவதுமான பலமொழிகளின் பட்டியலில், தமிழ்மொழியான நம் தாய்மொழி, முதலிடத்திலிருக்கின்ற பொல்லாதநேரமிது.

கிரீக்கு, இலத்தீன், ஈப்ருவெனப்படும் எபிரேயம், சமற்கிருதம், சீனம், தமிழ் ஆகிய ஆறும் உயர்-தனிச்செம்மொழிகள். அவற்றுள், வாழுகின்றமொழிகள் சீனமும் தமிழுந்தான்! திராவிடமொழிகளின் தாயென்று கால்டுவெல்லாரும், உலகத்தின் தாய்மொழியென்று பாவாணரும்போற்றியது தமிழையே!

சீரியநோக்கு:
கோள்களிலொன்றென்றுமட்டுமேயறிந்து, ஒரு கோளுக்கு அமெரிக்கா ஏவுகலமொன்றினை அனுப்பியபோது, ஒருவேளை அந்த கோளில் மனிதர் இருப்பாரேயானால், அவர் இந்த பூவுலகி-லிருந்தேசென்றிருக்கவேண்டுமென்றுகருதி, அந்தமனிதர் அறிந்தமொழி, உலகிலுள்ள மொழிகளுள் மிகப்பழைமைவாய்ந்ததாகிய தமிழாகமட்டுமேயிருக்கக்கூடுமென்று முடிவெடுத்து, தமிழ்மொழிக்கான பலவகையான குறியீடுகளை அந்த ஏவுகலத்தில் வைத்து அனுப்பியது.

அமெரிக்கர்கள் அது செம்மண்ணிறைந்தகோளென்று இன்றுகண்டுகூறினர். ஆனால், நம் தமிழர்களோ, ‘செவ்வாய்’ என்று அதற்கு அன்றேபெயர்சூட்டிவிட்டனர். என்னவிந்தைபாருங்கள்! ‘மாடுகட்டி போரடித்தால் மாளாதென்றுசொல்லி யானைகட்டி போரடித்த குடும்பம்’ என்றுசொல்லி பெருமைப்-பட்டுக்கொள்வதைப்போல், உலகளவில் பெயர்பெற்றமொழியென்று நாம் நம் மொழியைப்பற்றியும்- பெருமைபட்டுக்கொள்ளலாம்.

இத்தகைய பல பெருமைகளுக்குரியதும் மிகவும் சிறந்திருந்ததுமான நம் தமிழ்மொழி, இன்று அழிவுறுமொழிகளில் முதலிடத்திலிருக்கின்ற இந்தநேரத்தில், அதனை மீட்டெடுத்துக்காத்து, அதன் பெருமையை மீண்டும்நிலைநாட்டி, மேலும்பெருகவைக்கும் சீரியநோக்குடன்வெளிவருகிறது, இந்த தமிழ்வெல்லத்தாழி.

மருத்துவர் பொன்முடி மருத்துவத்தைப்பயின்றவராயினும், தம்மை பெற்றெடுத்தவள் தமிழன்-னையென்பதை மறவாமல், அவர் தமிழ்மொழியின்மீது அக்கறைகொண்டு, அதை கற்கமுனைந்து, ஆசானின்றி தானேகற்றாரென்பது ஒருபுறமிருக்க, தமிழ்மொழியில் காலங்காலமாகச்சொல்லப்பட்டு-வருவதும், தமிழிலக்கணத்தின் எழுத்து சொல் பொருள் யாப்பு அணி ஆகிய ஐந்துவகைகளுள் எழுத்திலக்கணத்திற்சொல்லப்படுகின்றதுமாகிய புணர்ச்சியிலக்கணத்தைப்பற்றி விரிவானவோர் ஆய்வினைமேற்கொண்டு, பத்தாண்டுகளாக அரும்பாடுபட்டெழுதியதுதான் தமிழ்வெல்லத்தாழி.

தமிழ்வெல்லத்தாழியின் அடித்தளம்:
தமிழ்மொழிக்கென்று எண்ணற்றசிறப்புகளுண்டு. அதற்குரிய இலக்கணமேசிறப்புவாய்ந்தது. அந்த இலக்கணத்திலும், யாப்பிலக்கணமென்பது மிகவும் நுட்பமானதும் வியக்கத்தக்கதுமாகும். இது பாவியற்றுவதற்கென்றேயமைந்தது.

செய்யுளானாலும் உரைநடையானாலும், அதில் புணர்ச்சியிலக்கணம் பெரும்பங்குவகிக்கிறதென்பதும், அதில் பிழையேற்படுமாயின் சொல்லவருகின்ற பொருளிலும்பிழையேற்படுமென்பதும், மருத்துவர் பொன்முடியின்கருத்தாகும். அதனடிப்படையிலெழுந்ததே இந்த தமிழ்வெல்லத்தாழியென்னும் புதுமையானநூல்.

அடிப்படையானதும் தேவையானதும்:
இதுவரை பெரிதாயுணரப்படாதிருந்த புணர்ச்சியிலக்கணத்தின் சரியானபயன்பாட்டை, பல்வேறெ-டுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார், நூலாசிரியர். அவர்தருகின்ற அந்தவிளக்கங்களினடிப்படையிற்-பார்த்தால், புணர்ச்சியிலக்கணமானது தமிழ்மொழியின் உரைநடைக்கும் கவிதைக்கும் அவற்றின் பொருள்வெளிப்பாட்டைப்பொருத்தவரை மிகச்சிறந்த நுட்பத்தைத்தரவல்லதென்பதும், இந்த ஒரேகாரணத்தால், தமிழுக்கு புணர்ச்சியிலக்கணம் மிகவும் அடிப்படையானதும் தேவையானதுமாகு-மென்பது அறியக்கூடியதாயிருக்கிறது.

பொருளில் நுட்பம்:
எந்தவொருவாக்கியத்திலும், இந்த புணர்ச்சியிலக்கணத்தினால்வெளிப்படுத்திக்காட்டக்கூடிய அந்த வாக்கியத்தின் பொருளிலிருக்கும் நுட்பத்தைவைத்துப்பார்க்கும்போது, உலகிலுள்ள எந்தவொருமொழியும் தமிழ்மொழிக்கிணையானதாக இருக்கமுடியாதென்பதை உறுதியாகக்கூறமுடிகிறது!

எடுத்துக்காட்டாக,
1. ‘உன் மகனுடைய பெயர் என்ன?’
2. ‘உன் மகனுடைய பெயரென்ன?’
இவற்றுள், முன்னதில் ‘பெயர் என்ன?’ என்றும், பின்னதில் ‘பெயரென்ன?’என்றுமிருக்கின்றன. இந்தமாற்றத்தினால், இவை இரண்டும் வெவ்வேறுபொருளையுணர்த்துகின்றனவென்றால், உங்களால் நம்பமுடிகிறதா? முடியவில்லைதானே? இந்த விளக்கத்தைப்பாருங்கள்:

ஒருவர், தன்னுடைய மகனுடைய பெயரை நேரடியாகச்சொல்லாமல், வெவ்வேறுகுறிப்புகளைச்சொல்லி கேட்பவரை கண்டுபிடிக்கச்சொல்லும்போது, கேட்பவர் கண்டுபிடிக்கமுடியாமல் சலிப்படைந்து, ‘ஒன் மகனோட பேரு என்னன்னுதான் சொல்லேன்!’ என்பதுண்டன்றோ?

இவ்விடத்தில், ‘ஒன் மகனோட பேரென்னன்னுதான் சொல்லேன்!?’
என்றுகேட்பது பொருந்தாதிருப்பதைப்பாருங்கள். அவர்கள் பேசிக்கொண்டிருந்தது முன்பிருந்தே பெயரைப்பற்றித்தானென்பதால், ‘பேரென்னன்னு’ என்று சேர்த்துப்பேசுவது தேவையற்றது.

‘பெயரென்ன?’ என்பது எங்கேபொருந்துகிறதென்பதை இங்கேபாருங்கள்:

ஒருவருடைய மகனைப்பற்றி அவனுடைய உயரம், எடை போன்ற குறிப்புகளை பதிவுசெய்து-கொண்டிருக்கும் ஓர் அலுவலரிடம், அவர் சென்று, அந்த குறிப்புகளை சொல்லத்தொடங்கியதும், அந்த அலுவலர், மாணவனின் பெயர் சொல்லப்படவில்லையென்பதால்,

‘முதலில் உங்கள் மகனுடைய பெயரென்னவென்றுசொல்லுங்கள்!’ என்றுதானேசொல்வார்? இங்கே ‘பெயர் என்ன?’ என்றுகேட்பது பொருந்தாதன்றோ?

இரண்டாம்வேற்றுமைத்தொடர்:
3. ‘உன் மகனுடையபெயரென்ன?’
இதில், மூன்றுசொற்கள் ஒன்றாகச்சேர்ந்து, தொடர்மொழியாகிநிற்கின்றன. இவ்வாறு பலசொற்கள் சேர்ந்திருக்கும்போது எந்தவொருதொடர்மொழியிலும் அதிலுள்ள முதற்சொல்லுக்கேசிறப்பென்கிறார், ஆசிரியர். அதன்படி, ‘மகனுடையபெயரென்ன?’ என்பதில், மகனென்பதற்கேசிறப்பு. இதை இரண்டாம்வேற்றுமையின் விரிநிலைத்தொடரென்கின்றோம், நாம். பொருளடிப்படையில், இது எங்கேபொருந்துமென்பதைப்பாருங்கள்:

ஒருவர் தன் மகளுடையபெயரை சொல்லிவிட்டபிறகு, அவருடைய மகனுடையபெயரை சொல்-லாமலிருக்கும்போது, அதை தெரிந்துகொள்ளவிரும்பும் அவரது நண்பர் அவரைப்பார்த்து, ‘உன் மகனுடையபெயரென்ன?’ என்றுகேட்பதுதானே இயல்பு? ஆசிரியர், இதில் ‘மகனுடைய’ என்பதற்கு பேசும்போது ஒரு அழுத்தமிருக்குமென்பதையுஞ்சொல்கிறார்.

4. ‘உன்மகனுடையபெயரென்ன?’
இதில் நான்குசொற்களுஞ்சேர்ந்திருக்கின்றன. பொருளைப்பார்த்தால், சொல்பவர், தன்மகனுடைய-பெயரைச்சொல்லாமல், இன்னொருவருடையமகன்பெயரைச்சொல்லும்போது, அவரைப்பார்த்து, ‘அவருடையமகன்பெயரிருக்கட்டும், முதலில் உன்மகனுடையபெயரைச்சொல்’ என்றகருத்தில், ‘உன்மகனுடையபெயரென்ன?’ என்றுகேட்பதுதான் பொருந்தக்கூடியது.

ஆனால், இவ்விடத்தில், ‘உன் மகனுடையபெயரென்ன?’ என்றுகேட்பது பொருந்தாதிருப்பதைப்பாருங்கள்.

சொற்களையும் மாற்றாமல், அவற்றின் வரிசையமைப்பிலும் எந்தமாற்றமுஞ்செய்யாமல், புணர்ச்சியை தேவைக்கேற்றபடிபயன்படுத்துவதால், சொல்லவருகின்ற பொருளில் இத்தனைவேறு-பாடுகாட்டமுடியுமென்பது புதியசெய்தி. இந்த நுட்பமான பொருள்வேறுபாட்டினை அடிப்படை-யாகக்கொண்டுகட்டப்பட்டதுதான், ‘தமிழ்வெல்லத்தாழி’ எனும் இந்த நூல்.

தமிழில் புணர்ச்சி:
புணர்ச்சியென்றால் என்னவென்பதுபற்றி நன்னூலார்,

மெய்யுயிர் முதலீ றாமிரு பதங்களும்
தன்னொடும் பிறிதொடு மல்வழி வேற்றுமைப்
பொருளிற் பொருந்துழி நிலைவரு மொழிகள்
இயல்பொடு விகாரத் திணைவது புணர்ப்பே
{உயிரீற்றுப்புணரியல்-நூற்பா-1}

என்றுகுறிப்பிடுகிறார். இதன்வழி,
‘மெய்யையும் உயிரையும் முதலாகவும் ஈறாகவுமுடைய பகுபதம்பகாப்பதமென்னும் இருபதங்களும், தன்னொடு தானும், பிறிதொடு பிறிதுமாய், அல்வழிவேற்றுமைப்பொருட்களில் பொருந்துமிடத்து, நிலைமொழியும் வருமொழியும் இயல்போடாயினும் விகாரத்தோடாயினும்பொருந்துவது புணர்ச்சியாகும்’ என்பது இதன் பொருளாகும்.

இருபத்தாறுவகை:
இயல்பாதல், தோன்றல், திரிதல், கெடுதல் என நால்வகைமாற்றங்கள் நிகழும். வேற்றுமை, அல்வழி என, முறையே பன்னிரண்டு, பதினாறு என இருபத்தெட்டுபுணர்ச்சிகள். இவற்றுள், வேற்றுமையில் தொகைநிலை தொகாநிலையென மொத்தம் பன்னிரண்டும், அல்வழியில், தொகைநிலையில் ஐந்தும், தொகாநிலையில் பதினொன்றுமாக, மொத்தம் இருபத்தெட்டுவகையால் புணர்ச்சியானது நிகழும்.

அல்வழியில் தொகாநிலையில்வருவன, எழுவாய்த்தொடர் விளித்தொடர் இடைத்தொடர் உரித்தொடர் அடுக்குத்தொடர் ஆகிய ஐந்தும், தெரிநிலையும் குறிப்புமாகிய பெயரெச்சத்தொடர்களும் வினையெச்சத்தொடர்களும் வினைமுற்றுத்தொடர்களுமாகிய ஆறுமாக, மொத்தம் பதினொன்றாகும்.

இதன்படி, மொத்தமாக இருபத்தெட்டிடங்கள் புணர்ச்சிக்கிடமானவையென்பது எளிதிற்பெறப்படும்.

சேர்த்தெழுதுவதில்லை:
இப்படிப்பட்ட வரைமுறைகள் புணர்ச்சியிலக்கணத்தில் தெளிவாகச்சொல்லப்பட்டிருந்தும், புணர்ச்சிக்கிடமான இந்த இருபத்தெட்டிடங்களிலும் நாம் தேவையிருந்தும் பலவிடங்களில் சேர்த்-தெழுதுவதில்லையென்பதையும், அதேநேரத்தில் சிலவிடங்களில் தேவையில்லாதபோதும் சேர்த்-தெழுதிவிடுகிறோமென்பதையும் மருத்துவர் பொன்முடி மீண்டுமீண்டுஞ்சுட்டிக்காட்டுகிறார்.

இக்காலத்தில், உரைநடையில் எங்காவது எழுவாய்த்தொடரை பார்த்திருக்கிறீர்களாவென்று ஒரு வினாவையுந்தொடுக்கிறார்!

நமக்கெல்லாம் தெளிவில்லை:
ஓர் இலக்கணநூலில், ஓரிடத்தில் ‘இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும்’ என்றும், இன்னோரிடத்தில், ‘ஒன்றரை மாத்திரை அளவே ஒலிக்கும்’ என்றுமிருப்பதை சுட்டிக்காட்டும் ஆசிரியர், {த.வெ.தா.- பக்192} ‘இரண்டுமாத்திரையளவொலிக்கும்’ என்றும், ‘ஒன்றரைமாத்திரையளயொலிக்கும்’ என்றும் இவற்றை சேர்த்தெழுதுமளவிற்கு நமக்கெல்லாம் இன்னும் புணர்ச்சியிலக்கணத்தில் தெளிவில்லையென்று குற்றஞ்சாட்டவுஞ்செய்கிறார்.

அதுமட்டுமன்றி, ‘இத்தகைய நீண்டதான தொடர்மொழிகள், ஒருகாலத்தில் தமிழ்மொழியில் இருந்திருக்கவேண்டும்’ என்கிறார், ஆசிரியர்.

தொடர்ந்து, ‘ஏனெனில், தொடர்மொழிக்கான விளக்கங்களையும், அவற்றுக்கான நிலைக்களன்களையும், தொடர்மொழிகளை அமைப்பதற்கான விதிமுறைகளையும், நன்றாக வெளிப்படுத்தும்வகையில், இலக்கணநூற்கள் காலங்காலமாக சொல்லிக்கொண்டேவந்திருக்கின்றன.’ என்றுகூறுகின்றார். அது உண்மைதானே?

பொருட்பிழையும்நேரும்:
ஆனால் நாம்தான், நீண்டதொடர்மொழிகளை எளிமைப்படுத்தும்பொருட்டு, பிரித்துப்பிரித்-தெழுதத்தொடங்கிவிட்டோம். அதனால், இலக்கணத்திற்கும் நாம் எழுதும் உரைநடைக்கும் மிகுந்த-வேறுபாடுதோன்றிவிட்டது.’ என்றுங்கூறுகிறார்.

அதுமட்டுமன்றி, ‘தொடர்மொழிகளை சரியானமுறையிலமைத்தெழுதாவிட்டால், மொழியின் நடைமாறுவதோடு, இலக்கணப்பிழையும்நேரும்; பொருட்பிழையும்நேரும்.’ என்று அறிவுறுத்துவதோடு, ‘முதலில் இலக்கணநூற்களையாவது பிழையின்றியெழுதாவிட்டால், தமிழ் அழிவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கவேண்டியதுதான்.’ என்று கலக்கமுறவுஞ்செய்கிறார்.

புணர்ச்சிபற்றி ஆசிரியரின் பார்வை:
1. தொகைநிலைத்தொடர்மொழிகளை எழுதும் முறை:
‘தொகை’ என்னுஞ்சொல்லை, ‘விரி’ என்றசொல்லுடன் பொருத்திப்பார்க்கும்போது, அதற்கு ‘மறைந்துவருதல்’ என்றபொருள்வருகிறது. ஆனால், இந்த சொல்லுக்கு, நர்மதாவின் தமிழகராதியில், ‘சேர்க்கை’ ‘கூட்டம்’ என்ற வேறுபட்டபொருளைக்காணமுடிகிறது.{பக்.460 – ஆகஸ்ட் 2000} தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தில், எச்சவியலில், தொகைச்சொற்களெல்லாம் நடக்கும் விதம்பற்றிக்குறிப்பிடுகையில்,
“எல்லாத் தொகையு மொருசொன் னடைய” {நூற்பா – 420}
என்று தொல்காப்பியர் நூற்பாவமைக்கிறார்.

இதற்கு சேனாவரையர், ‘அறுவகைத்தொகைச்சொல்லும் ஒரேசொல்லாய்நடத்தலையுடைய’ என்று உரைவகுக்கிறார். இவற்றோடு, அல்வழியின் ஐவகையையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம்.

ஒரேசொல்லாகவேயெழுதவேண்டும்:
இதனடிப்படையிற்பார்க்கும்பொழுது, தொகைநிலைத்தொடர்மொழியினை பிரித்தெழுதாமல், {இக்காலத்தில் பிரித்தெழுதப்படுகிறதென்பது நூலாசிரியரின் குற்றச்சாட்டு} அதனை ஒரேசொல்லாகக்கொண்டு, ஒரேசொல்லாகவேயெழுதவேண்டுமென்பது எளிதிற்பெறப்படுகிறது.

இதனை கருத்தூன்றிப்படித்திருக்கும் மருத்துவர் பொன்முடி, இந்த கொள்கைக்குமாறாக, தொகை-நிலைத்தொடர்மொழிகள் பிரித்தெழுதப்படுவதை, பாடநூற்களிளிருந்தும் அறிஞர்களின் படைப்புகளி-லிருந்தும் சான்றுகளை எடுத்துக்காட்டி, இந்த பிழை நூற்களில் விரவிக்கிடப்பதை எடுத்துரைக்கிறார். சான்றாக, ஓர் இலக்கணநூலிற்காணப்பட்டதை அவர் எடுத்தாள்வதை கீழேபார்ப்போம். {த.வெ.தா.-பக்.192

‘அண்ணன் தம்பி’ ‘ஆடு மாடு’ ‘தாய் தந்தை’ {மூன்றும் உம்மைத்தொகைகள்}

இவற்றுள், ‘தாய்தந்தை’ என்றிருக்கவேண்டியதைப்பற்றி விளக்கும்போது,

‘தாய்தந்தையை அழைக்கவேண்டும்’ என்பதும், ‘தாய் தந்தையை அழைக்கவேண்டும்’ என்பதும் ஒரேபொருளைத்தரக்கூடியனவாவென்று ஓர் வினாவெழுப்புகிறார்.

நான்காம்வேற்றுமையின் உருபும் பயனும் உடன்றொக்கத்தொகையான ‘தலைவலிமருந்து’ என்பது அதேநூலில், ‘தலைவலி மருந்து’ என்று பிரிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டும் ஆசிரியர், ‘பிரித்தெழுதும்போது இவை தொகைநிலைத்தொடராகமாட்டாவென்பது இவர்கள் அறியாததுபோலும்! இதைக்கூடப்புரிந்துகொள்ளமுடியாதவர்கள் எவ்வாறு இலக்கணநூலெழுதத்துணிந்தனரென்பது வியப்பைத்தருகிறதன்றோ?’ என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். {த.வெ.தா. பக்.-193}

‘தமிழ் மொழி’ என்று பிரித்தெழுதுதல்:
‘தமிழ்மொழி’ என்னும் சொல்லானது, ஒரு தொடர்மொழியாகும். இது, இலக்கணத்தில் ‘இருபெய-ரொட்டுப்பண்புத்தொகை’ எனப்படுகிறது. தொகைநிலைத்தொடரை பிரித்தெழுதக்கூடாதென்பதை முன்பேபார்த்தோம். ஆனால், பாடநூற்களிற்கூட, ‘தமிழ் மொழி’ என்று இது பிரிந்திருப்பதை சுட்டிக்-காட்டுகின்ற ஆசிரியர், நம் தாய்மொழியின் பெயரைக்கூட நாம் சரியாயெழுதாமல் பாடநூற்களிலேயே-பிழையாயெழுதுவதை ஆங்காங்கேசுட்டிக்காட்டி வேதனைப்படுகிறார்.

‘தொடர்மொழி’ என்பதே ஒரு தொடர்மொழியென்றும், இலக்கணத்தில் அது வினைத்தொகை-யெனப்படுகிறதென்றும், அந்த இலக்கணநூலில், இதுகூட ‘தொடர் மொழி’ என்று பிரித்தெழுதப்பட்-டிருக்கிறதென்றுங்கூறும் ஆசிரியர், ‘இதையேபிரித்தெழுதும்போது, மற்றவற்றைப்பிரித்தெழுதுவதில் வியப்பேதுமில்லை’ என்றுங்குறிப்பிடுகிறார். {பக்.193}

2. வல்லினமெய்யில் தமிழ்ச்சொற்கள் முடிவுறாமை:

ஆவி ஞணநமன யரலவ ழளமெய்
சாயு முகரம் நாலாறு மீறே
{நன்னூல் – 107}

இந்த நூற்பாவில், நாலாறெனப்படுகின்ற அந்த இருபத்திநான்கெழுத்துகளே தமிழ்ச்சொற்களுக்கு ஈற்றெழுத்தாய்நிற்பனவென்பது சொல்லப்பட்டிருப்பதால், அவைதவிர பிறவெழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வாராவென்பது கொள்ளப்படுகிறது. இந்த வரிசையில், வல்லினமெய் இல்லையென்பது எண்ணிப்பார்க்கத்தக்கது.

ஆகையால் அது மொழிக்கு ஈற்றெழுத்தாக வாராதென்பது எளிதிற்பெறப்பட்டது.

இலக்கணநூற்கள் இவ்வாறு தெளிவாக வரையறுத்திருந்தும், இந்நாளில் உரைநடையில் வல்லின-மெய்யை சொற்களில் ஈற்றெழுத்தாய்நிறுத்துவது அனைத்துநூற்களிலுங்காணப்படுகிறதென்றும், பாடநூற்களுங்கூட இதற்கு விதிவிலக்கல்லவென்றுங்கூறும் ஆசிரியர், ஒருவர் பேசும்போது, பேச்சை வல்லினமெய்யில் நிறுத்தமுடியாதென்றும், அவ்வாறு நிறுத்துவது ஆங்கிலம்போன்றமொழிகளில் இருந்தாலும், தமிழில் அப்படியொருவழக்கம் இல்லவேயில்லையென்றுங்கூறுகிறார்.

அடிப்படைக்கருத்து:
புணர்ச்சியின்போது வலிமிகுந்துபுணர்ந்தசொற்களை, அவை புணர்ந்து ஒரு தொடர்மொழியானபின் புணர்ந்தவிடத்திலேயேபிரிப்பதனாற்றான் வல்லினமெய்யை சொல்லின் ஈற்றெழுத்தாய்நிறுத்தவேண்டிய தேவை உண்டாகிறது.

புணர்ச்சியென்றாலே சேர்க்கையென்றுதானே பொருள், அவ்வாறிருக்க புணர்ந்தசொற்களை பிரித்தெழுதுகிறோமேயென்னும் அடிப்படையானகருத்தைப்பற்றிக்கூட எண்ணிப்பாராமல், தமிழை கற்றவர்க்ளெல்லாங்கூட அதை பிழையாயெழுதுவது ஏனென்று ஒரு வினாவை முன்வைக்கிறார்.

தொல்காப்பியர்காலந்தொட்டே நூற்பாக்களில் வல்லினமெய் ஈற்றெழுத்தாக வைக்கப்பட்டிருக்-கிறதேயென்றால்,

வல்லினமெய் சீருக்கேயீறாகிறது:
‘மரபுக்கவிதைக்கு சீரளவு அடிப்படையானது. ஒவ்வொருவகைப்பாவிலும் அதற்கென்றுள்ளசீர்-களையேயமைக்கவேண்டும். இதற்கு, ‘வகையுளி’ என்பர், அறிஞர். வேறாய்ச்சொல்வதானால், சீரின் அளவானது மாறுமானால், பாவின் வகையும் வேறாகிவிடும். சீரளவில் மாறுபாடென்பது, யாப்பிலக்-கணத்தின்படி குற்றமாகும்.

எனவே, செய்யுட்களைப்பொருத்தவரை, அந்த குற்றத்திற்கு இடங்கொடாதபடி, சீரளவிற்காகவும், மெய்யெழுத்துகள் அசைக்கணக்கில் பெரிதானமாற்றமேதும் செய்வதில்லையென்பதனாலும் ஒரு தொடர்மொழியானது வலிமிகுந்தபுணர்ச்சியில்மட்டுமல்லாது, நாம் முன்பேகண்டபடியான இருபத்தெட்டுவகைப்புணர்ச்சியிலும், இயல்பாயினும் விகாரமாயினும் நிலைமொழிவருமொழிகள் பிரிக்கப்படுவதுண்டு.’ என்று விளக்கமளிக்கிறார்.

அந்தவகையில், வல்லினமெய் சீருக்குத்தானீற்றெழுத்தாகிறதேயன்றி அந்த தொடர்மொழியானது தொடர்மொழியாகவேகொள்ளப்படுகிறதென்பது ஆசிரியரின் கருத்து. ஆனால், உரைநடையைப்-பொருத்தவரை, அவ்வாறு பிரித்தெழுதுவதும் வல்லினமெய்யை ஈற்றெழுத்தாய்நிறுத்துவதும் குற்றமேயென்கிறார்.

இருபெயரொட்டுப்பண்புத்தொகை:
உரையாசிரியர்களின் உரைகளும், தமிழறிஞர்களின் எழுத்துகளும், பள்ளி, கல்லூரி பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கான பாடநூற்களுங்கூட இதற்கு விதிவிலக்கல்லவென்றுகூறும் மருத்துவர் பொன்முடி, தம்முடைய நூலில் அனைத்திடங்களிலும் இதுபற்றி சான்றுகளுடன் விளக்கமளிக்கிறார்.
எ.கா: பொது + தமிழ் = பொதுத்தமிழ்
இதில், ‘தமிழ்’ என்பது பொதுப்பெயராகவும், ‘பொது’ என்பது சிறப்புப்பெயராகவும் புணர்ந்து, ‘உயிர்முன் கசதப மிகும்’ என்னும் புணர்ச்சிவிதிப்படி வலிமிகுந்து, ஓர் இருபெயரொட்டுப்பண்புத்தொகையாகி, ‘பொதுவாகியதமிழ்’ என்று பொருளையும்பெற்றது.

இவ்வளவிற்கிலக்கணவிளக்கம்பெறுகின்ற பொதுத்தமிழென்பதை, பாடநூற்களில் ‘பொதுத் தமிழ்’ என்று பிரித்தெழுதியிருப்பதை சுட்டிக்காட்டும் ஆசிரியர், இதில் ‘பொதுத்’ என்பது தகரவொற்றை தன் ஈற்றெழுத்தாய்க்கொண்டிருப்பதையும், இது பிழையென்பதையும் குறிப்பிட்டுச்சொல்கிறார்.

அ. சங்கநூலிலிடம்பெற்றிருக்கின்ற உரைகள்:
சங்கச்செய்யுட்களிலிடம்பெற்றிருக்கின்ற உரைநடைகளையும், செய்யுட்களுக்கு உரையாசிரி-யர்களெழுதியுள்ள உரைகளையும்பார்க்கும்பொழுது, உரையாசிரியர்கள் இந்த வல்லினமெய்யீற்றைப்பற்றி கவலைப்பட்டதாகத்தெரியவில்லை. சான்றாக, “அது கேட்டுக் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வென்பான்…பெருகிப் பிழையா வினையுள் நடாயிற்று” என்றுள்ளது.

இதில் வல்லினமெய்யீற்றுச்சொற்கள் உள்ளன. அதுமட்டுமன்றி, புணர்ந்தசொற்களை பிரித்தெழுதுதலாக, ‘பிழையாவினை’ என்று சேர்ந்திருக்கவேண்டியதான ஒரு ஈறுகெட்டவெதிர்மறைப்-பெயரெச்சத்தொடரானது பிரிந்துநிற்பதையும்பாருங்கள்.

இதனால், ‘பிழையா’ என்பதற்கிருக்கவேண்டிய எதிர்மறைப்பெயரெச்சப்பொருள் அதற்கு இல்-லாமற்போனதுடன், அது, பலர்பாலுக்கான எதிர்காலவினைமுற்றுப்பொருளைக்கொண்டுநிற்கிறது! புணர்ச்சி இல்லாதவிடத்தில், ஒரு எதிர்மறைப்பெயரெச்சத்தின் ஈறு, எதனாற்கெடும்?

ஆ. சிலப்பதிகாரத்துக்கானவுரையில்:
“மலைநாட்டிலுள்ள நெடுவேள் குன்றில்…அழைத்துச் சென்ற புதுமையைத் தம் கண்ணாற் கண்ட குன்றக்குறவர்…உரைத்தனர்.” என்றுள்ளது.

இதில், ஒரு வினையெச்சத்தொடரும், ஒரு மூன்றாம்வேற்றுமையின் விரிநிலைத்தொடரும் புணர்ந்-திருந்தும், அவை பிரிக்கப்பட்டதால், அங்கெல்லாம் வல்லினமெய் சொல்லுக்கு ஈற்றெழுத்தாயிற்று.

ஆனால், ‘புதுமை’ என்றசொல், ‘செயப்படுபொருள்வேற்றுமை’ என்றறியப்படுகின்றதான இரண்-டாம்வேற்றுமையின் ‘ஐ’ என்ற உருபை ஏற்று, ‘புதுமையை’ என்றாகியபின்னர், ஒரு வினைமுற்றுடன்-புணராமல், ‘தம்’ என்னும் ஒரு பெயர்ச்சொல்லுடன்புணர்ந்தது, கூடாப்புணர்ச்சி.

சிலம்பின் அடியார்க்குநல்லாருரையில், “அழகிய புகாரினைப் போற்றுவோம்” என்றுள்ளது.

இதிலும், ஒரு பெயெரானது ஐயுருபேற்றது. ஆனால், புணர்ச்சியில் பிழையின்றி, ஒரு வினைமுற்-றுடனேபுணர்ந்தது. பிழையின்றி புணர்ந்தென்னபயன்? ‘புகாரினைப்’ என்பதுடன் அந்த தொடர்-மொழியானது பிரிக்கப்பட்டது, அதில் வல்லினமெய் சொல்லுக்கு இறுதியானது.

இ. இருபதாம்நூற்றாண்டுரைநடை:
“பத்துப் பாட்டுகளிலும், மிகச்சிறியபாட்டாகிய முல்லைப் பாட்டிலும், மிகப் பெரியபாட்டாகிய மதுரைக் காஞ்சியிலும் பிரிவுத்துயரைக் காண்கிறோம்”

மேற்சுட்டப்பட்ட அனைத்தெடுத்துக்காட்டுகளிலும், சொல்லின் இறுதியில் வல்லெழுத்தின் மெய் நிறுத்தப்பட்டுள்ளதை காணமுடிகிறது.

இவர்களனைவரும் தவறுசெய்திருப்பார்களென்று கூறவியலாதிருந்தாலும், மருத்துவர் பொன்முடி சுட்டிக்காட்டுகிற இலக்கணத்தினடிப்படையிலும், அவர் அளிக்கின்ற விளக்கங்களினடிப்படையிலும் மேலேகுறிப்பிடப்பெற்றவை அனைத்திலும் வல்லினமெய் சொற்களுக்கு ஈற்றெழுத்தாயிருப்பதை பிழையேயென்று ஒப்புக்கொள்ளவேண்டிய சூழல் உண்டாகியிருக்கிறது.

3. தொகாநிலைத்தொடர்கள்:
தொகாநிலைத்தொடர்களைப்பொருத்தவரை, வேற்றுமையில் ஆறும், அல்வழியிலுள்ள ஒன்பதில், இடைத்தொடர், உரித்தொடர், அடுக்குத்தொடர் ஆகியவற்றைமட்டுமன்றி வினைமுற்றுத்தொடரை-யும்பிரிக்கவியலாதாகையால், அவைபோக, மற்றுள்ள ஐந்துதொடர்களுமாக, ஆகமொத்தம் பதினோரு-தொடர்மொழிகளையும் நம்முடைய தேவைக்கேற்றாற்போல் தொடர்மொழியாகவோ அவற்றின் நிலைமொழிவருமொழிகளை பிரித்து தனிமொழிகளாகவோ ஒவ்வோரிடத்திலும் சொல்லவருகின்ற பொருளுக்கேற்றவாறுபயன்படுத்தவேண்டுமென்கிறார்.

தொகைநிலைத்தொடர்மொழிகளுள், வேற்றுமையில் ஆறும், அல்வழியில் ஐந்துமாகிய பதினோரு-தொடர்மொழிகளையும் பிரிக்கவேகூடாதென்னும் மருத்துவர் பொன்முடி, தொகாநிலைத்தொடர்களிலும், மேற்சொல்லப்பட்டவற்றை பிரிக்கக்கூடாதவையென்றேசொல்கிறார்.

நான்கைத்தவிர, அல்வழித்தொடர்களான எழுவாய்த்தொடர், விளித்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர் ஆகிய நான்கையும், வேற்றுமையிலுள்ள விரிநிலைத்தொடர்கள் ஆறையும் ஆகமொத்தம் பதினோருதொடர்களைமட்டுமே பிரித்தெழுதலாமென்கிறார்.’

வரையறை:
மொத்தமுள்ள இருபத்தாறுதொடர்மொழிகளுள், பிரிக்கக்கூடாதவை பதினைந்து, பிரிக்கக்கூடியவை பதினொன்று.’ என்று வரையறுக்கிறார்.{பக். 156}

ஒரு பெயரெச்சத்தொடர் சேர்ந்தும் பிரிந்தும்நின்று, எவ்வாறு தேவையானபொருளை சரியாகத்-தருகிறதென்பதற்கு எடுத்துக்காட்டாக, ‘இடிந்தவீடு’ என்றதொடரை எழுதிக்காடுகிறார்.{பக்.148}

எடுத்துக்காட்டு:
‘இடிந்தவீட்டைக்கட்டுவது எளிது, ஆனால் புதுவீட்டைக்கட்டுவது எளிதன்று.’
‘இடிந்த வீட்டைக்கட்டுவது எளிது, ஆனால் சுற்றியிருந்த மரங்களையுண்டாக்குவது எளிதன்று.’
இந்த இரண்டெடுத்துக்காட்டுகளிலும், ‘வீட்டைக்கட்டுவது’ என்னும் இரண்டாம்வேற்றுமையின் விரிநிலைத்தொடரும், ‘எளிது’ என்னும் தனிமொழியும் ‘இடிந்த’ என்ற ஒரு பெயரெச்சத்தினைத்-தொடர்ந்துநிற்கின்றன. அவற்றில் எந்தமாற்றமுமில்லை.

ஆனால், அந்த பெயரெச்சமானது, ஒன்றில் சேர்ந்துநின்றும் மற்றதில் பிரிந்துநின்றும், பொருளில் வேறுபாட்டையுண்டாக்குகிறதென்றும், அந்த வேறுபாடு என்னவென்றும் விளக்கந்தருவதோடு, இவற்றில் சேர்ந்திருக்குமிடத்தில் பிரித்தும், பிரிந்திருக்குமிடத்தில் சேர்த்துமெழுதிப்பார்த்தால், பொருள் பொருந்தாதிருப்பதை காணவுஞ்சொல்கிறார்.

எச்சமும் முற்றும்:
பலரும், எச்சம் முற்று ஆகியவைபற்றிய தெளிவின்றியேயெழுதுகின்றனரென்பது நூலாசிரியரின் மற்றுமொருகுற்றச்சாட்டு.

பெயரெச்சத்திற்குப்பின் பெயரல்லாததும், வினையெச்சத்துக்குப்பின் வினயல்லாததுமாகியசொற்கள், புணர்ந்துநிற்பதை குற்றமென்றுகூறும் ஆசிரியர், எடுத்துக்காட்டுகளை பாடநூற்களிலிருந்தேதருகிறார்.

‘இக்காப்பியத்தை இயற்றித் தமிழன்னைக்கு’ {பக். 254}{இயற்றி-வினையெச்சம், தமிழன்னை-பெயர்.
‘வெற்றிநங்கையைத் தழுவிப்புலவர்கள்’ [பக்.332} தழுவி-வினையெச்சம், புலவர்கள்-பெயர்.
‘பனைமடல்களை வெட்டிக் குதிரை செய்வதிலே உள்ள உயிர்த்துன்பங்கள் பல’
{பக்.?376} வெட்டி-வினையெச்சம், குதிரை-பெயர்.
‘வெட்டிக்குதிரை’ என்ற இந்த தொடர்மொழிக்கு என்னபொருளென்று ஆசிரியர் வியக்கிறார்!

பிழையும் சரியும்:
ஒரு பெயரெச்சத்தைத்தொடர்ந்து, அதற்குரிய பெயர்ச்சொல்வருவது மரபு. ஆனால், இரண்டுபெயரெச்சங்கள் அடுத்தடுத்துநிற்பது பிழையென்கிறார்.

எ.கா; ‘ஆழமான குறுகிய பள்ளத்தாக்குகளையும் நீர்நிலைகளையும் கனிதரும் மரங்களையும் தேனையும் கொண்ட அந்தக் குன்றுக்குக் கொல்லி மலை என்று பெயர்.’
இதில், ‘ஆழமான’ ‘குறுகிய’ ஆகிய இரண்டுமே தெரிநிலைப்பெயரெச்சங்கள். இதனை, ‘ஆழமானதும் குறுகியதுமான பள்ளத்தாக்குகளையும்…’ என்றெழுதுவதே முறையென்கிறார். {பக்.321}

வினையெச்சத்தைப்பொருத்தவரை ஒன்றையடுத்தொன்றாக எத்தனைவேண்டுமானாலும்வரலாமென்றும், முடிவில் வினைமுற்றுவருமென்றுங்கூறுகிறார்.

எகா: ‘எடுத்துவைத்துக்கொண்டிருந்திருக்கிறான்’
இந்த வினையெச்சத்தொடர்மொழியானது, எடுத்து, வைத்து, கொண்டு, இருந்து ஆகிய நான்கு-வினையெச்சங்களை தொடர்ந்துபெற்று, முடிவில் ‘இருக்கிறான்’ என்ற வினைமுற்றைக்கொண்டு தன் பொருள்முடிவை பெறுகிறது.

இலக்கணவிளக்கம்:
‘ஓடிவந்துநின்ற அழகியகுழந்தை’ – சரி. {தெரிநிலைப்பெயரெச்சத்தின்பின் ஒரேயொரு குறிப்புப்பெயரெச்சம்}
‘ஓடிய வந்த நின்ற குழந்தை’ – பிழை. {தெரிநிலைப்பெயரெச்சங்கள்}
‘கரிய பெரிய அழகிய சிலை’ – பிழை. [குறிப்புப்பெயரெச்சங்கள்}
‘அழகிய வந்த குழந்தை’ – பிழை. {குறிப்புப்பெயரெச்சத்தின்பின் தெரிநிலைப்பெயரெச்சம்}
“ஆக, பெயரெச்சங்களைப்பொருத்தவரை, தெரிநிலைப்பெயரெச்சமோ குறிப்புப்பெயரெச்சமோ தனக்குத்தானே அடுத்தடுத்துநிற்காதென்றும், எனினும், ஒரு தெரிநிலைப்பெயரெச்சத்தின்பின் ஒரேயொரு குறிப்புப்பெயரெச்சம்வருவது சரியென்பதும், ஆனால், ஒரு குறிப்புப்பெயரெச்சத்தின்பின் தெரிநிலைப்பெயரெச்சம் வரவேவராதென்பதும், இங்கு விளக்கப்பட்டது.” {பக்.327}

உரைநடையெழுதுவதில் இதுபோன்று சிக்கல்களிருப்பதை ஆசிரியர் எடுத்துக்காட்டுவதோடு, தெரிநிலைப்பெயரெச்சம், குறிப்புப்பெயரெச்சம், வினையெச்சம் வினைமுற்று ஆகியவைபற்றி அறிந்-தெழுதினால்மட்டுமே உரைநடையானது பிழையின்றியமையுமென்கிறார்.

4. ‘உடம்போ டுயிர்வந் தொன்றுவ தியல்பே’
இந்த நூற்பாவை கற்றவர்களுங்கூட, அதுபற்றி சிறிதும் எண்ணியேபார்க்காமல், ‘தமிழ் இலக்கணம்’ ‘உயிர் எழுத்து’ ‘மெய் எழுத்து’ ‘நேர் அசை’ ‘தொடர் இயக்கம்’ என்றெல்லாம் தொடர்மொழியா-யிருக்கவேண்டியவற்றை இவ்வாறு பிரித்தெழுதுகின்றனர்.

இவை சரியானவையல்ல. இவற்றை தமிழிலக்கணம், உயிரெழுத்து மெய்யெழுத்து நேரசை தொடரியக்கம் என்றவாறு சேர்த்துத்தானெழுதவேண்டுமென்கிறார், மருத்துவர் பொன்முடி.

அதற்கு அவர்தருகின்ற இலக்கணவிளக்கமென்னவென்றால், தொடரியக்கமென்பது வினைத்தொகை, மற்றவை இருபெயரொட்டுப்பண்புத்தொகையென்பதாகும். இப்படிப்பார்க்கும்போது, ஆசிரியரின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

5. உடம்படுமெய்க்குப்பின்னும் பிரித்தெழுதுதல்:
புணர்ச்சியில், நிலைமொழியின் இறுதியும் வருமொழியின் முதலும் உயிராகவேயிருப்பின், அவை புணர்வதில் சிக்கல்வருகிறது. அந்த உயிர்களை புணர்த்துவதற்கு,

‘இ ஈ ஐவழி யவ்வும், ஏனை
உயிர்வழி வவ்வும் ஏமுன் இவ்விருமையும்
உயிர்வரின் உடம்படு மெய்யென்றாகும்’

என்னும் நன்னூற்பாவினடிப்படையில், யகரமும் வகரமும் உடம்படுமெய்யாகவந்து புணர்ச்சியை சிக்கலின்றியமைக்கின்றன. அவ்வாறு உடம்படுமெய்பெற்றுப்புணர்ந்தவற்றை பிரித்தெழுதுவதை குற்றமென்கிறார், ஆசிரியர். எடுத்துக்காட்டாக, ஒரு பாடநூலிலிருந்து,

‘இம்மை யின்பத்தைப் பெற வேண்டுவோர்க்குங் கல்வி யறிவு முதன்மையாகும்’
என்பதைக்காட்டுகிறார்.

‘இம்மை + இன்பம் = இம்மையின்பம், கல்வி + அறிவு = கல்வியறிவு ஆகியவை இணைந்-தேவரவேண்டுமென்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

6. புணர்ச்சியால் மகரங்கெட்டசொல்லை தனியேநிறுத்துதல்:
பாடம் + நூல் = பாட + நூல் {மகரம் கெட்டது} = பாடநூல். இது புணர்ச்சிமரபு.

இவ்வாறு, மகரவீறுகெட்டு புணர்ந்திருக்கின்ற இந்த தொடர்மொழியை ‘பாட நூல்’ என்று பிரித்தெழுதுவது பிழையாகும். ஆனால், பாடநூற்களிலேயேகூட, இதுபோன்ற பலதொடர்மொழிகள் பிரித்தெழுதப்படுவதை எடுத்துக்காட்டுகளுடன் குறிப்பிட்டுக்காட்டுகிறார். ‘மின்சார வாரியம்’ என்பது, தமிழகமுழுவது-மிருக்கிறதென்று, அதையுஞ்சுட்டிக்காட்டுகின்றார்.

அதுமட்டுமன்றி, மகரவீறு கெடுமாயின், அந்த சொல் உயிரை விதியீறாகக்கொள்கிறது. அதனைத்-தொடர்ந்து உயிர்முதன்மொழிவருமானால், அங்கே ‘அத்து’ என்னும் சாரியைவரவேண்டுமென்கிறார். ‘குடும்ப அட்டை’ என்பது ஒவ்வொருவீட்டிலுமுள்ளது. இதை அத்துச்சாரியையில்லாமலெழுதியிருப்-பதைப்போல், ‘குளத்தாமை’ என்பதை, ‘குள ஆமை’ என்றெழுதலாமாவென்றுகேட்கிறார்!

7.பிரித்தெழுதுமிடங்கள் இல்லவேயில்லையா?
மருத்துவர் பொன்முடி, நூல்முழுவதும் சேர்த்தெழுதுவதையேவலியுறுத்துகிறாரே, பிரித்தெழுதுமிடங்கள் இல்லவேயில்லையாவென்னும் வினா, உங்களுக்கெழுவதைப்போன்றே எனக்குமெழுந்தது. ஆனால், அவர் அதற்கும் சரியானவிளக்கத்தைமுன்வைக்கிறார்! அதாவது,

தேவையிருந்தால் பிரிக்கலாம்:
‘ஒரு தொடர்மொழியில் எத்தனைச்சொற்களிருந்தாலும், அவை யாவற்றையுஞ்சேர்த்து, ஒரேசொல்-லாகவேகொள்ளவேண்டுமென்றும், அப்படிப்பட்டவற்றை பிரித்தெழுதுதல் குற்றமென்றும் கடுமை-யாகக்கூறுகின்ற மருத்துவர் பொன்முடி, முன்பேகண்டதுபோல், இருபத்தாறுவகைத்தொடர்மொழிகளுள் பதினோருவகைத்தொடர்மொழிகளை, தேவையிருந்தால் பிரித்துமெழுதலாமென்கிறார்.
சான்று:
எழுவாய்த்தொடர்: {பக். 107}
‘உன் மாமாவந்திருக்கிறாரே?’
‘மாமா வந்திருக்கிறார், ஆனால் அவர் இன்றே ஊருக்குப்போகிறார்.’
வினாவிலுள்ள, ‘மாமாவந்திருக்கிறார்’ என்ற எழுவாய்த்தொடர், விடையில் ‘மாமா வந்திருக்கிறார்’ என்று பிரிந்திருப்பது, பொருளைச்சார்ந்ததே. வினவுபவர் மாமாவந்திருக்கிறாரேயென்றுகேட்டதற்காக, விடைசொல்பவரும் ‘மாமா’ என்றுதொடங்கவேண்டியதில்லை. ‘ஆமாம்’ என்றுமட்டுமோ, ‘ஆமாம், வந்திருக்கிறார்.’ என்றோசொன்னாற்போதும். ‘மாமா’ என்பதை சொல்லவேண்டியதேயில்லை.

ஆனால், வந்திருக்கின்ற அந்த மாமா, அன்றே ஊருக்குப்போகவிருக்கின்றசெய்தியின் தாக்கத்தினை உணர்த்தும்பொருட்டு, ‘மாமா வந்திருக்கிறார்…’ என்றுசொல்கிறார். {இதில் சொற்கள் பிரிந்திருப்பதால், இது எழுவாய்த்தொடராகாது} இதை கேட்பவரும் பின்னால்வரப்போகின்ற ஏதோ-வொருபொருளை உணர்த்துவதற்காகத்தான் அவ்வாறுபேசுகிறாரென்பதை உணர்ந்துகொள்வார்.

வினையெச்சத்தொடர்:
அதேபக்கத்தில் ஒரு வினையெச்சத்தொடர்:
‘உங்கள் மாமா வந்திருக்கிறாராமே, என்னசெய்கிறார்?’
‘என்னசெய்கிறார், வந்து இருக்கிறார்.’
இதில், ‘வந்து’ என்ற வினையெச்சமானது, முதலில் வினைமுற்றுடன்சேர்ந்து வினையெச்-சத்தொடராயிருப்பதும், அடுத்ததில் தொடராயில்லாமல் பிரிந்திருப்பதும் பொருளைச்சார்ந்ததே-யாகுமென்றுகூறுகின்ற ஆசிரியர், “இவ்வாறு தனித்துநிற்பதால், ‘ஒன்றுஞ்செய்யாமலிருக்கிறார்’ என்றுசொல்லவேண்டியதை, ‘வந்து இருக்கிறார்’ என்று பிரித்துப்பேசுவதனாலேயே கேட்பவருக்கு உணர்த்திவிடமுடிகிறதன்றோ?” என்று கேட்கவுஞ்செய்கிறார்.

இதுபோல், சொல்லவருகின்ற பொருளுக்கு தேவையாயிருப்பின், வினையெச்சத்தொடரை பிரித்தெழுதலாமென்கிறார். ‘இடிந்தவீடு’ என்ற பெயரெச்சத்தொடர் சேர்ந்தும் பிரிந்தும்நின்று எவ்வாறு வெவ்வேறுபொருளைத்தந்ததென்பதை சற்றுமுன் கண்டோம்.

‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’
என்பது தொல்காப்பியர்நூற்பா. குறிக்கின்ற பொருளின் சிறப்புடைமையையும் சிறப்பின்மையையும் அறிந்துபயன்படுத்தவேண்டுமென்பதற்காகவே, சொற்களை சேர்த்தல் சேர்க்காதுவிடுத்தல், வலியை மிகுத்தல் மிகுக்காதுவிடுத்தல் இவற்றோடு குறியீடுகள் ஆகிய அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை முறையாகப்பயன்படுத்தும்பொழுது, சொல்லவருகின்ற பொருளானது பொருள்மயக்கமின்றி மிகச்சரியாகவெளிப்படுகிறது.

உலகிலேயே சிறந்தமொழி:
ஒருவருடைய கருத்தை வெளிப்படுத்தும் கருவிகளுள், மொழியே சிறந்தது. உலகத்திலுள்ள மொழிகளுள் தமிழ்மொழியைப்பற்றி, “ஒரு கருத்தை வெளியிடுவதற்கு உலகிலேயே சிறந்தமொழி, தமிழ்மொழிதான்” என்று, ‘பெர்சிவல்’ என்ற மேலைநாட்டறிஞர் திறந்தமனத்துடன்குறிப்பிட்டுள்ளதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

ஆதங்கம்:
‘மீண்டும் பிறப்புண்டேல், தமிழனாகப்பிறந்து, திருக்குறளை படித்து மகிழவேண்டும்’ என்று காந்தியடிகள் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டதாக கூறுவர்.

இவற்றின்வழி, கருத்தை சிறப்பாகப்புலப்படுத்துவதில், தமிழுக்குள்ள திறமானது நன்றாகப்புலப்படும். இவ்வளவிற்கு சிறப்புவாய்ந்த நம் தமிழ்மொழியை, அதன் சிறப்பிற்கு குறைவராதபடி, அதன் திறனறிந்து சரியாகப்பயன்படுத்துவதற்குத்தெரியாமல், அனைவரும் தவறிவிட்டோமேயென்பதுதான் மருத்துவர் பொன்முடியின் அமைதியடையமுடியாததான ஓர் ஆதங்கமாகும்.
அவர் சொல்கிறார்,
‘புணர்த்தவேண்டியசொற்களை புணர்த்தாமலெழுதுவது எவ்வளவிற்குப்பிழையோ, அதைவிடப்-பிழையானது புணர்த்தவேண்டாதவிடத்தில் புணர்த்தியெழுதுவதாகும்’ என்று.

பொருளேயுணர்த்துகிறது:
இது, புணர்ச்சியிலக்கணத்தின்படி அனைவருமே ஏற்றுக்கொள்ளவேண்டியதாகும். ஆனால், எங்கெங்கு புணர்த்தலாகும், எங்கெங்கு புணர்த்தலாகாதென்பதுதான் சிக்கலைத்தருவதாயிருக்கும்போலிருக்கிறது. அதற்கென்று மாறாததான விதிகளை வகுத்துத்தந்துவிட்டால், அந்த சிக்கல் எளிதாகிவிடுமென்றேன், நான். ஆனால் அவரோ,

‘எந்தவோரிடத்திலும் அங்கே புணர்த்தினாற்சரியாயிருக்குமா புணர்த்தாவிட்டாற்சரியாயிருக்குமா-வென்பதை சொல்லவருகின்ற பொருளேயுணர்த்துகிறது. புணர்ச்சியென்பது சொல்லவருகின்ற பொருளைப்பொருத்தமைவதால், பிரித்தாளக்கூடிய பதினோருவகையானதொடர்மொழிகளும் எங்கெல்லாம் தொடர்மொழியாகவேநிற்குமென்பதையும், எங்கெல்லாம் பிரித்தாளப்படக்கூடுமென்பதையும் பொருள்வகையாற்குறிப்பிட்டுக்காட்டுவதென்பது இயலாதது.’என்றார்.

பாமரர்மொழியில் புணர்ச்சி:
‘இலக்கணமென்றால் என்னவென்றேதெரியாதவர்களான பாமரமக்கள், தங்களுக்குள் இயல்பாக உரையாடுபோது, சேர்க்கவேண்டியவிடங்களில் சேர்த்தும், பிரிக்கவேண்டியவிடங்களில் பிரித்தும் எந்தச்சிக்கலுமில்லாமல் தாங்கள் சொல்லவேண்டிய கருத்தை தெளிவாகவெளியிடுவதை உற்றுநோக்-கினாலே, புணர்ச்சியின் தேவையும் அதன் சரியான பயன்பாடும் நமக்கு நன்றாகப்புலப்படும்.’
என்றுகூறும் மருத்துவர் பொன்முடி,
நூலிற்கூட, குழந்தைகளும் தாங்கள் பேசுகிறபோது, ஆறுசொற்கள்வரை பொருளறிந்து சேர்த்துப்-பேசுவதாகக்குறிப்பிட்டு, அவற்றை எடுத்துக்காட்டுகளோடு விளக்குகிறார்.{பக்.64}

இரண்டாம்வேற்றுமையிலும் நான்காம்வேற்றுமையிலும் உருபு வெளிப்பட்டுவருமாயின், வலி மிகுமென்பது விதி. ஆனால், மருத்துவர் பொன்முடியோ, புணர்ச்சியில்லையென்றால், உருபு வெளிப்-பட்டுவந்தாலும் வலி மிகாதென்கிறார். உண்மைதானே, புணர்ச்சியேயில்லாமல் எப்படிமிகும்?

இக்காலத்தில் மிகுந்த வலியோடு நிலைமொழியை நிறுத்திவிட்டு, வருமொழியை தனியேயெழுதும்நிலை மேலோங்கியிருப்பதால், இந்த இரண்டுருபுகளிலொன்று எங்குவந்தாலும், அவ்விடத்தில் சொல்லப்படுகின்ற பொருளுக்கு புணர்ச்சி தேவையாயில்லையாவென்பதுபற்றிய நினைவேதுமில்லாமல் வலிமிகுத்துவிடுவதோடு, வருமொழியை பிரித்துமெழுதிவிடுகிறார்களென்று குற்றஞ்சுமத்துகின்ற ஆசிரியர், இந்த போக்கை பாடநூற்களிலும் அடிக்கடிகாணலாமென்கிறார்.

மொழியியல்வழி விளக்கம்:
சங்கவிலக்கியங்களில்வரும் உள்ளுறை இறைச்சி ஆகியவற்றைப்போன்று, ஒரு வாக்கியத்தை அதன் பொருளடிப்படையில் அகவமைப்பு புறவமைப்பு என்ற இருநோக்கடிப்படையிற்காண்பர், மொழியியலார்.

“பொருண்மையியல்விதிகள் அகவமைப்பில் செயல்பட்டால்தான், வாக்கியத்தின் முழுப்பொருளை உணர்வதற்கு தடையேதுமிருக்காது” என்றுகுறிப்பிடுகிறார், அறிஞர் கி.அரங்கன், தன்னுடைய ‘தொடரியல்: மாற்றிலக்கண அணுகுமுறை’ என்றநூலில்.

மருத்துவர் பொன்முடியின் தமிழ்வெல்லத்தாழியும், வாக்கியத்தின் பொருளில் பொருட்குழப்பமேதுமின்றி, அதிலுள்ள சொற்களில் பொருட்சிறபுறுஞ்சொற்கள் யாவையென்பதை கண்டறிந்து, அவற்றுக்கு சிறப்புண்டாகும்வகையில் புணர்ச்சியை சரியாகப்பயன்படுத்தி, அந்த வாக்கியத்தின் பொருளை தெளிவாகவெளிப்படுத்துமாறு அதனை எழுதவேண்டுமென்பதைத்தான், தன்னுடைய நோக்கமாகக்கொண்டுள்ளது.

முன்னுக்குப்பின் முரண்:
தமிழை எப்படிவேண்டுமானாலுமெழுதலாமென்பதுபோல், பலரும் அதை தத்தமக்குத்தோன்றி-யவாறெழுதுவது வேதனைக்குரியதென்னும் மருத்துவர் பொன்முடி, அறிஞர்களாயிருந்தும் அவர்கள் எழுதித்தந்திருக்கின்ற பாடநூற்களிலேயேகூட ஓரிடத்தில் சேர்த்தெழுதியதை பிறிதோரிடத்தில் காரணமேதுமின்றி பிரித்தெழுதுகின்றனரென்பதை நூலில் ஆங்காங்கே சுட்டிச்செல்கிறார்.

புணர்ச்சிபற்றிய அக்கறையின்மையே இதற்கெல்லாம் காரணம். இந்த நூல் வெளிவந்தபிறகாவது, அவர்களுடைய எழுத்தில் மாற்றமேற்படுமென்று நம்புவோம்.

வல்லின்மெய்யீற்றில் சொற்களை நிறுத்துவதும், மகரத்தை கெடுத்தபின்னர் அதனை தனியேநிறுத்-துவதும், அதுமட்டுமன்றி, அதனுடன் புணர்ந்திருக்கவேண்டிய உடம்படுமெய்யை தவிர்த்துவிட்டு, வருமொழியாயிருக்கும் உயிர்முதன்மொழியினை எந்தமாற்றமுமின்றி உயிர்முதல்வருமொழியாக-நிறுத்துவதும், பிரிக்கவேண்டியவிடத்தில் சேர்ப்பதும், சேர்க்கவேண்டியவிடத்தில் பிரித்தெழுதுவதும் இதுபோன்ற இன்னபிறகுறைபாடுகளும் எல்லாநூற்களிலும் காணப்படுகிறதேயென்பதுபற்றி சிலரிடம் வினவினால், அவர்கள் வேடிக்கையாக, ‘பழக்கதோசம்’ என்கிறார்கள்!

தவறானபழக்கமென்பது, மொழிக்கானாலும் நமக்கானாலும் ஆகாததோசமாகத்தானிருக்கும். அது மாற்றப்படவேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த நூலை படித்தபிறகாவது என்னைப்போன்றவர்களும் மற்றவர்களும் தம்முடைய எழுத்தில் இதுபோன்ற பிழைகள் நேராவண்ணம் திருத்திக்கொள்ளுதல் தேவையானதே. ஏனெனில், நம்முடைய அறியாமை வெளிப்படுமுன், உண்மையை நாமேயறிந்து, அதற்கேற்ப பிழையின்றி முறையாயெழுதிவிடுவது நலமன்றோ?

குறியீடுகளின் தேவை:
ஒரு தொடர்மொழியின் நிலைமொழியோடு முதல்வரியானது முடிவுற்று, அதன் வருமொழியானது அடுத்தவரியில்வரவேண்டியிருக்கும்போது, முதல்வரியின் இறுதியில் ஓர் இடைக்கோடிட்டு, அது ஒரு தொடர்மொழியென்பதை உறுதிப்படுத்தவேண்டுமென்கிறார்.

அவ்வாறு செய்யவில்லையென்றால், அந்த தொடர்மொழியின் நிலைமொழியை ஒரு தனிமொழி-யென்றேநினைக்கவேண்டியிருக்குமென்றும், சிலநேரங்களில், அடுத்தவரியைப்படித்தபின்னுங்கூட பொருளில் குழப்பமேற்படுவதுண்டென்றுங்கூறுகிறார். அதேபோல், வாக்கியத்தின் பொருளோட்டத்தில் மாற்றமுண்டாகுமிடங்களிலெல்லாம் ஒரு காற்புள்ளியிடுவதும் தேவையானதென்கிறார்.

நூல்வழியாக அறிந்துகொள்ளவேண்டியவை:
* வல்லினமெய், தமிழ்ச்சொல்லின் இறுதியில் நிற்காது.
* புணர்ச்சிக்குப்பிறகு, சொற்களை பிரித்தற்கூடாது.
* சேர்க்கக்கூடாதவிடங்களில் சேர்த்துவிடக்கூடாது.
* தொகைநிலைத்தொடர்மொழிகளை பிரிக்கவேகூடாது.
* புணர்ச்சியின்றி மகரவீற்றை கெடுக்கக்கூடாது.
* வினையெச்சத்தொடரில் பலவினையெச்சங்களிருக்கலாம். காரணம்பற்றி பிரிந்தும்நிற்கலாம்.
* பெயரெச்சங்களில், தெரிநிலப்பெயரெச்சமோ குறிப்புப்பெயரெச்சமோ தனக்குத்தானே அடுத்துநிற்காது. ஆனால், ஒரு தெரிநிலைப்பெயரெச்சத்தின்பின் ஒரேயொரு குறிப்புப்பெயரெச்சம் வரலாம்.
* பெயரெச்சத்தொடரும், தகுந்த காரணமிருக்க, பிரிந்துநிற்பதுண்டு.
* இலக்கணம் வலிமிகுமென்று வரையறுத்துள்ளவிடங்களிலும், புணர்ச்சியின்றி வலி மிகாது.
* மற்றகுறியீடுகளைப்போன்றே, இடைக்கோடும் இன்றியமையாதது.
இவையும் இன்னபிறவும் இந்த நூலின்வழியாக நாம் அறிந்துகொள்ளக்கூடியவையாகும்.

நூலின் நிறைகள்:
* இந்தக்காலத்திற்குத்தேவையான நல்லநூல். புணர்ச்சியை நிலைநிறுத்தவந்திருக்கும்நூல்.
* தமிழுலகில், இன்று பரவிக்கிடக்கின்ற புணர்ச்சிபற்றியதான அறியாமையை அகற்றும்பொருட்டு, இலக்கணப்புரட்சிசெய்யும் சிறந்தநூல்.
* இதுவரையுள்ள இலக்கணநூற்கள் புணர்ச்சியைப்பற்றி என்னசொல்கின்றனவோ, அவ்விலக்கண-மட்டுமன்றி, நடைமுறைக்கேற்றவகையில் புதியவிதிகளை அமைத்துக்கொள்ள வழிவகுக்கும்நூல்.
* உரைநடையெழுதுவதில், இந்நாள்வரையிலும் நடைமுறையிலிருந்துவருவதை மாற்றி, ஒரு புதியநடைமுறையை மேற்கொள்ளவேண்டி, தமிழறிஞர்குழாமும் அரசும் கூடிப்பேசி, ஒரு முடிவெடுக்-கவேண்டிய சூழலை உருவாக்கியிருக்கின்றநூல்.
* புணர்ச்சியென்பது, பொருளைப்பொருத்ததேயென்பதை முதன்முறையாகச்சொல்லும்நூல்.
* எழுத்து சொல் வாக்கியம் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு, தொடர்மொழியின் தேவை-யையும் அதன் சிறப்பையும் முழுமையாகவெளிப்படுத்தும் புதுமையானநூல்.
*ஒரு வாக்கியத்திலுள்ள எந்தவிருசொற்களானாலும், அவற்றிற்கிடையேயுள்ள இலக்கணவுறவுகளை தெள்ளிதின்காட்டி, அந்த சொற்களை புணர்த்துவதாலும் புணர்த்தாமல் விடுத்தலாலுமுண்டாகக்கூடிய பொருள்மாற்றங்களை ஐயமறப்போக்கியதில், மருத்துவர் பொன்முடி தனித்துநிற்கிறார்.

குறைகள்:
நூலில் நிறைகள்மட்டுமன்றி, குறைகளுமுள்ளன. அவையாவன:
* குன்றக்கூறல் இல்லையென்றாலும், மிகைபடக்கூறல் உண்டென்றேசொல்லவேண்டும். இலக்-கணம்பேசுகின்ற இந்த நூலில், இசையென்றும் யோகமென்றும்பேசுகிறார்.
* கூறியதுகூறலென்பது நூல்முழுவதுங்காணப்படுகிறது. இது, படிப்போர்க்கு சலிப்பையேற்படுத்தக்கூடும்.
* ஒவ்வொருநூலின்கீழும் ஒவ்வொருபுணர்ச்சிபற்றியும் மீண்டுமீண்டுங்கூறியிருப்பதை தவிர்த்து, ஒவ்வொருபுணர்ச்சியின்கீழும் அனைத்துநூற்களைப்பற்றியும் ஒருங்கிணைத்துக்குறிப்பிட்டிருந்தால், பக்கங்களின் அளவை வெகுவாகக்குறைத்திருக்கலாம்.
* தொடர்மொழிகள் ஒரேசொல்லாகத்தானிருக்கவேண்டுமென்பதற்காக, மருத்துவர் பொன்முடி, முப்பத்திரண்டெழுத்துகள்வரை ஒரேசொல்லாயெழுதியிருக்கிறார். ஒருசொல்லில் எழுத்துகள் ஓர் அளவுக்குமேலிருக்கும்போது, அதை இடைவிடாமற்படிப்பதென்பது எவருக்குமே எளிதன்று.

தொகுப்புரை:
தமிழையே புரட்டிப்போடுவதாக, முற்றிலும் புதியநோக்கிலமைந்துள்ளது தமிழ்வெல்லத்தாழி.

இதில் இடம்பெற்றிருந்த பல அறிஞர்களின் பெயர்கள் நீக்கப்படவேண்டுமென்று நான் கேட்டுக்-கொண்டபோது, மறுப்பேதுஞ்சொல்லாமல், எனது கருத்தை அப்படியேயேற்றுகொண்ட நூலாசிரியருடைய பெருந்தன்மையை பாராட்டுகிறேன்.

முற்றிலும் புதியகருத்து:
தொல்காப்பியர்காலந்தொடங்கி இக்காலம்வரை, எவருமேயெண்ணிப்பார்த்திராத ஒரு புதுமை-யானசிந்தனை; தொடாத துறை. இதுதான் தமிழ்வெல்லத்தாழியின் அடிப்படைகளில் இன்றியமையாதது. எனவே, இனியுங்காலந்தாழ்த்தாமல் அறிஞர்கள் ஒன்றுகூடி ஒரு முடிவெடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டதென்றேகருதுகிறேன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருட் காண்ப தறிவு
{குறள்423}

என்பதற்கிணங்க, இந்த நூலின்மெய்ப்பொருளையும் அறிஞர்கள் ஆய்ந்தறிந்து, அதன்பின்வரும் முடிவின்படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். புணர்ச்சியையும் அதன் பயன்பாட்டையும் புதியகோணத்திலாய்ந்திருக்கும் இந்த நூலைத்தந்த நூலாசிரியருக்கும், அவருடைய நூலுக்கும், வரவேற்பினையும் வாழ்த்தினையுமளிக்கவேண்டும்.

உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப்
புரத்தின் வளமுருக்கி பொல்லா – மரத்தின்
கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதேபோல் மாந்தர்
மனக்கோட்டந் தீர்க்கும்நூன் மாண்பு.

என்கிறது நூலின் சிறப்புகுறித்து நன்னூற்பாயிரம். அறியாமையை போக்கி, அறிவை வளர்த்து, மனக்கோணலை மாற்றுகின்ற ஆற்றல்வாய்ந்ததே நல்லநூலுக்கு அடையாளம். அவ்வகையில், என் அறியாமையிலிருந்து என்னை வெளிக்கொணர்ந்து, என்னை பெரிதுமாற்றியவொருநூலுக்கான மதிப்-புரையினை, நானேநல்கியதை பெரும்பேறாகக்கருதுகிறேன்.

இந்த நூல் வெளிவந்தபிறகு, பழியோ புகழோ எதுவந்தாலும் அதிலிருந்து அந்த ஆனைமுகனே-காக்கவேண்டுமென்பதை “…பழிவரினும் புகழ்வரினும் சேர்ந்துபணிந்தேன் திருவடிகள் காப்பு” என்று தம் காப்புச்செய்யுளில் குறிப்பிடுவதிலிருந்து, ஆசிரியர் இரண்டையுமேயெதிர்பார்த்துத்தானிருக்கிறா-ரென்பது புலப்படுகிறது.

அறிஞருலகம் ஒன்றுகூடி, புணர்ச்சிதொடர்பாக, மருத்துவர் பொன்முடியளித்துள்ள புதிதான இந்த கருத்துகளை நன்கு விவாதித்து, நல்லவொருமுடிவினை எட்டுதலும்வேண்டும், அதன்வழியாக, தமிழ்மொழியை அதன் அழிவுப்பாதையிலிருந்து மீட்டு, அதனை என்றுமேயழியாததாய் சீருடனும் சிறப்புடனும் நாம் அனைவரும் கொண்டாடிடவும்வேண்டும்.
நன்றி.
என்றும்
மாறாத்தமிழன்புடன்,
துரை குணசேகரன்
29 – 06 – 2012

_____________________________________________

முனைவர் துரை குணசேகரன்,
எம்.ஏ {தமிழ்}, எம்.ஏ {சமூகவியல்}, எம்.ஏ {மொழியியல்}, எம்..எட்., எம்.ஃபில்., பிஎச்.டி, பி..ஜி.டி.எல்.,
தலைவர், தமிழ்த்துறை,
மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி, மயிலாடுதுறை
மாநிலத்தலைவர், தமிழாராய்ச்சியாளர்ப்பேரவை.

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க