Tag: தமிழ்த்தேனீ

  • லக்ஷ்மி கடாக்ஷம்

    தமிழ்த்தேனீ.

    “ பணம் “ இந்த ஒரு சொல் மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது?

    அந்தப் பணத்தைச் சேர்க்க மனிதர் என்ன பாடு படுகிறார்? சிலர் தமது உடல் உழைப்பால், சிலர் தமது மூளையால், சிலர் அவர்களின் தந்திரத்தால், சிலர் அவர்களின் கட்டற்ற முறையால் தவறான செயல்களால் சேர்க்கின்றனர் செல்வத்தை.

    நான் எப்போதுமே இறைவனிடம் எனக்கு நிறையச் செல்வத்தை அள்ளிக்கொடு என்று வேண்டமாட்டேன். மாறாக, இன்று எனக்குத் தேவையானவற்றை நிறைவாகச் செல்வழிக்க ஐந்து ரூபாய்கள் இருந்தால் போதும் என்றால் அந்த ஐந்து ரூபாய்களை அடைய எனக்கு ஏதேனும் வழிகாட்டு.

    நாளை பத்து ரூபாய்கள் வேண்டுமென்றாலோ, அதற்கு மறு நாள் இரண்டு ரூபாய் வேண்டுமென்றாலோ அவற்றை அடைய வழிகாட்டு. வேறு ஒரு நாள் எந்தச் செலவுமே இல்லையென்றால் எனக்கு அன்று பணம் தேவையில்லை. ஆனால் யாரிடமும் கையேந்தும் நிலையையோ அல்லது கடன் வாங்கும் நிலையையோ ஏற்படுத்தாதே என்றுதான் வேண்டிக் கொள்வேன்.

    அதற்கு மேல் வாழ்க்கையில் எதுவும் தேவையில்லை என்பதுதான் உண்மை, அதற்கு மேல் அதிகப் பணம் வைத்திருந்தால் அதை எப்படிச் செலவழிப்பது என்று தெரியாமல் தீய பழக்க வழக்கங்கள் வரும் என்பதுதான் உண்மை.

    மேலும் வாழ்க்கையில் நிம்மதியான நிலையைப் போக்கி பிரச்சனைகளை ஏற்படுத்தும் அதிகப் பணத்தின் கையிருப்பு. ஏனென்றால், அதிகப் பணம் இருக்கும் போது இல்லாதவருக்குக் கொடுப்போம் என்னும் மன நிலை நமக்கு வருவதில்லை என்பதே உண்மை.இந்தக் கருத்தை ஒட்டிய என் கற்பனைக் கதை.

    ***

    Kubera,_the_God_of_Riches_WIKIஒருவர் எதிர்பாராத விதமாகச் செல்வத்தின் அதிபதியான குபேரனை சந்திக்கிறார். அவரிடம் குபேரப் பெருமானே எனக்கு உங்கள் அருள் வேண்டும், ஶ்ரீ மஹாலக்ஷ்மியின் அருள் வேண்டும் . எனக்கு நிறையப் பொன்னும் பொருளும் பணமும் வேண்டும். ஆகவே பொன் செய்யும் மருந்தொன்று எனக்குக் கொடுத்து அருளினால் என்றும் உங்களை நான் மறவாமல் இருப்பேன். ஏனென்றால் இப்போது பொன்னுக்கு இருக்கும் மதிப்பு வேறு எதற்கும் இல்லை என்றாராம்.

    அதற்குக் குபேரன் அந்த மனிதரிடம் நான் சொல்வதைக் கவனமாகக் கேள் மனிதா பொன்னை மனிதர்களாகிய நீங்கள் கண்டு பிடித்தீர்கள், முத்து, பவழம், வைரம் போன்ற விலை மதிப்பற்ற பொருட்களை நீங்கள் கண்டு பிடித்தீர்கள். எங்கள் திரு உருவப் படங்களைப் பதிப்பித்து, விக்ரக வடிவில் வடித்து அவற்றையெல்லாம் எங்கள் மேல் அணிவித்து எங்களைச் செல்வந்தர்களாக காட்டுகிறீர்கள். எங்கள் கைகளின் மூலமாகக் கொட்டுவதைப் போல் காட்டுகிறீர்கள். நீங்களாகக் கற்பனை செய்து கொண்டு அந்தக் கற்பனையை உண்மை என்று நினைத்து நீங்களே ஏமாறுகிறீர்கள்.

    நன்றாக யோசித்துப் பார் பணத்தை நாங்களா அச்சடிக்கிறோம், அச்சடிப்பது நீங்கள். அப்படி இருக்க எங்களிடம் வந்து அந்தப் பணத்தைக் கேட்டால் நாங்கள் எப்படித் தருவோம். மிகச் சரியாக விநாயக சதுர்த்தி அன்று நாம் சந்தித்திருக்கிறோம். எல்லாம் இறைவன் செயல். எல்லோருமே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் குபேரனாகிய என்னிடம்தாம் எல்லாச் செல்வமும் இருக்கிறது என்று.

    ஒரு காலத்தில் என்னுடைய கட்டுப்பாட்டிலேதான் எல்லாச் செல்வமும் இருந்தது. அப்போது எனக்குக் கர்வமும் இருந்தது. அந்தக் கர்வத்தின் விளைவால் நான் பரமசிவனிடம் சென்று அவரை விருந்துக்கு அழைத்தேன் என்னிடம் உள்ள செல்வங்களையெல்லாம் காட்டிப் பெருமைப்படுவதற்கு.

    ஆனால் பரமசிவன் எப்படியோ என் மனதில் இருந்ததை அறிந்துகொண்டு அவருக்கு முக்கியமான வேலை இருப்பதாகவும் அதனால் விநாயகரை அனுப்புவதாகவும் சொன்னார். நானும் விநாயகரை விருந்தாளியாய் ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தேன்.

    குறிப்பிட்ட தினத்தில் விநாயகரும் வந்தார். அவருக்கு பிடித்தமான எல்லாவித உணவு வகைகளும் சமைத்து அவருக்குத் தலை வாழை இலையிலே பரிமாறினேன். அவரும் மகிழ்ந்து நன்றாகச் சாப்பிட்டார். போடப் போட உண்டு கொண்டே இருந்தார், உணவு வகைகள் எல்லாம் காலியாகின. அடுத்து அவரின் பசியைப் போக்க என்னிடமிருந்த செல்வங்களை எல்லாம் பரிமாறினேன் ஏதோ ஒரு கட்டத்தில் அவருக்கு என்ன தோன்றியதோ போதும் என்றார்.

    ஆனால் அவர் போதும் என்கிற சொல்லை உச்சரித்த நேரத்துக்குள் என்னுடைய செல்வத்தில் பாதி காணாமல் போயிற்று. அப்போதுதான் புரிந்தது அது என் கர்வத்தின் விளைவு என்று. ஆகவே செல்வம் அதிகமிருந்தால் கர்வம் வரும். கர்வம் வந்தால் செல்வம் காணாமல் போகும். அதனால்தான் அதற்குப் பெயர் செல்வம் என்று வைத்துவிட்டு, அது இல்லாதவனுக்கு வறுமை என்று பொருள் கொள்ளுகிறீர்கள்.

    இந்த உலகத்திலே வயிறு நிரம்பினால் மனம் நிறையும், போதும் போதும் என்று கைகளை குறுக்கே தடுத்து இனி போடாதீர்கள் என்று மறுப்பர். ஆனால் கஜானா நிரம்பினால் மனம் பேராசை கொள்ளும் கைகளை அகல விரித்து இன்னும் வேண்டு இன்னும் வேண்டும் என்று பேராசை கொள்வர்.

    பேராசை பெரு நஷ்டம் என்பதை அனுபவித்தவன் நான் . ஆகவே போதும் என்கிற ஒற்றைச் சொல்லையே உனக்குப் பரிசாக அளிக்கிறேன். ஏன் தெரியுமா போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து. என்று கூறிவிட்டு குபேரன் அந்த மனிதரின் கண்ணிலிருந்து மறைந்தே போனார். இன்று வரை அவரைக் காணவில்லை. நீங்கள் யாரேனும் அவரைக் கண்டால் என்னிடம் சொல்லுங்கள்.

    Share
  • தியானம்

    தமிழ்த்தேனீ

    images

    நீங்கள் தியானம் செய்ய வேண்டும் என்று முழுமனதோடு விரும்பினாலும் உங்கள் வேலைகள், நேரமின்மை போன்ற காரணங்களால் இது வரை தியானத்திலேயே ஈடுபட்டதில்லை என்கிற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா ? கவலைப்படாதீர்கள் நீங்கள் தினமும் தியானம் செய்துகொண்டுதான் இருக்கிறீர்கள். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை.

    நீங்கள் அன்றாடம் செய்ய வேண்டிய அல்லது செய்யாவிட்டால் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வேலைகளை நேரம் தவறாமல் நேர்த்தியான முறையில் ஒழுங்காக செய்கிறீர்களா?

    1. அல்லது நான்கு வேலைகளில் மூன்றை சரியாகச் செய்துவிட்டு ஏதேனும் ஒரு வேலையில் குறை வைத்துவிடுகிறீர்களா? உங்கள் கவனம் குறைந்திருக்கிறது என்பதை உணர்த்தும் முதல் காரணி இது

    2. அல்லது நான்கு வேலைகளில் இரண்டைச் சரியாகச் செய்துவிட்டு இரண்டு வேலைகளை அரைகுறையாக செய்கிறீர்களா? உங்கள் கவனம் பாதியாகக் குறைந்திருக்கிறது என்பதை உணர்த்தும் இரண்டாம் காரணி இது

    3. அல்லது உங்கள் வேலைகளில் ஒன்றை மட்டுமே சரியாகச் செய்துவிட்டு மூன்று வேலைகளை முறையாகச் செய்யாமல் அதன் விளைவுகளால் அவதிப்படுகிறீர்களா? உங்கள் கவனம் முக்கால் பங்கு குறைந்திருக்கிறது என்பதை உணர்த்தும் மூன்றாம் காரணி இது

    4. அல்லது உங்கள் நான்கு வேலைகளையுமே சரியாகச் செய்யாமல் குழப்பிக் கொண்டு மற்றவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிறீர்களா? உங்கள் கவனம் முழுமையாக விலகிவிட்டது என்பதை உணர்த்தும் முழுக்காரணி இது

    இந்த நிலை மிகவும் மோசமான நிலை நீங்கள் தியானம் செய்தே ஆகவேண்டும், அப்போதுதான் உங்கள் கவனத்தை நீங்கள் மீட்கமுடியும், ஆகவே நீங்கள் தியானம் செய்து உங்கள் கவனத்தை மீட்டே ஆகவேண்டும்.

    இப்படியெல்லாம் மேற்கூறிய நான்கு நிலையையும் நீங்கள் எட்டாமல் உங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படாமல் இருக்கிறதா? நீங்கள் தியானம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது பொருள்.

    ஏனய்யா நீங்கள் உங்கள் வேலைகளை முறையாகச் செய்கிறீர்கள் என்றால் தியானம் செய்கிறீர்கள் என்பது பொருள் என்று நான் சொல்வதை நம்ப முடியவில்லையா? உண்மை !

    தியானம் என்பது என்ன என்பதை முதலில் பார்ப்போம்

    தியானித்தல் என்றால் மனதை ஒருமுகப்படுத்துதல் , மனதை ஒருமுகப்படுத்துதல் என்றால் அலைபாயவிடாமல் ஒரு நிலையான இடத்தில் நிறுத்துதல் என்பது பொருள், இந்த மனதை ஆழ் கடலுக்கு ஒப்பிடுவார்கள் , ஏன் தெரியுமா? எல்லாக் கடலும் ஓரத்திலே அலைகளைக் கொண்டிருந்தாலும் நடுக்கடலில் அலைகளில்லாமல், சலனமில்லாமல் அமைதியாய் இருக்கும்.

    நம் மனமும் பலவிதமான சிந்தனை அலைகளை ஓரத்திலே கொண்டிருந்தாலும் ஆழ் மனதில் அமைதியாய் நடுக்கடல் போல் இருக்கும்.

    இந்த ஆழ் மனதில் மனதின் மையத்துக்கு நம் எண்ணங்களை சிதறவிடாமல் திரட்டி ஒரு புள்ளியில் குவித்து அந்தப் புள்ளியை நோக்கி நம் கவனத்தை கொண்டு செல்லுதலே ,அப்படிப் பட்ட பயிற்சியே தியானம், இப்படிப் பட்ட தியானத்தை நாம் அன்றாடம் செய்து கொண்டிருக்கிறோம் என்று நான் ஏற்கெனவே சொன்னேன் , மிகச் சாதாரணமாக நாம் செய்யும் அன்றாட வேலைகளில் சிலதை உதாரணமாகக் கொண்டு மிக எளிமையாக அலசுவோம்

    நம் வீட்டில் நாம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வேலைக்கு செல்பவராக இருந்தால் , அல்லது பள்ளிக்கு செல்பவராக இருந்தால் அன்றாடம் எழுந்து பல்துலக்கிவிட்டு காலையில் ஒரு புத்துணர்ச்சி தரும் பானத்தை குடித்துவிட்டு , காலைக் கடன்களை முடித்துவிட்டு குளித்துவிட்டு காலை உணவை முடித்துவிட்டு பள்ளிக்கோ கல்லூரிக்கோ, அல்லது அலுவலகத்துக்கோ செல்வோம்.

    இரவு வெகு நேரம் கழித்து படுக்கைக்குப் போய்த் தூங்கியதன் காரணமாக காலையில் வெகு நேரம் கழித்து எழுந்து நேரக் குறைவால் பதட்டமாக காரியங்களைச் செய்யும் போது தவறு ஏற்படுதல் இயல்பு, அப்படியில்லாமல் சரியான நேரத்துக்கு எழுந்தும் இயல்பாகக் காரியங்களை செய்யாமல் தடுமாறினால் அது ப்ரச்சனைகளைத் தரும், அப்படி இல்லாமல் முறையாக இயல்பாக எல்லாவற்றையும் செய்தால் உங்கள் கவனம் சிதறவில்லை என்பது பொருள்.

    காலைக் கடன்களை மறக்காமல்முடித்துவிட்டு குளியலைறைக்கு செல்லும் முன் உடலைத் துடைத்துக் கொள்ள துவாலையை எடுத்துக் கொண்டு போகிறீர்கள், அங்கே சென்று மறக்காமல் உங்கள் சோப்பை உபயோகித்து குளிக்கிறீர்கள், வழுக்கி கீழே விழுந்துவிடாமல் கவனமாக நடந்து வந்து உங்கள் துவாலையால் துடைத்துக் கொண்டு வெளியே வந்து உங்கள் ஆடைகளை அணிந்துகொண்டு காலை உற்சாக பானத்தைக் குடித்துவிட்டு அல்லது காலை உணவை முடித்துவிட்டு உங்கள் வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு ,உங்களுக்கு வேண்டிய புத்தகங்களோ, அல்லது கோப்புக்களையோ எடுத்துக்கொண்டு, சாலைப் போக்குவரத்துக்கேற்ப பயண நேரத்தையும் உங்கள் பாதுகாப்பையும் கருதி லாவகமாக வாகனத்தை இயக்கி மிகச் சரியான நேரத்தில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைந்து அங்கே நீங்கள் செய்ய வேண்டிய பணிகளை திறமையாக முடித்துவிட்டு மீண்டும் மாலை வீட்டுக்கு அதே போல் பத்திரமாக வருகிறீர்கள் என்றால் உங்கள் மனதை நீங்கள் ஒருமுகப்படுத்தி காரியமாற்றி இருக்கிறீர்கள் என்பது புலனாகிறது. அப்படியானால் நீங்கள் தியானத்தில் இருந்தீர்கள் என்று பொருள் அல்லவா?

    மேலும் மாலையில் வீட்டுக்கு வேண்டிய பொருள் ஏதேனும் வாங்க வேண்டியிருந்தாலோ அல்லது வரும் வழியில் யாரையாவது காணவேண்டும் என்று திட்டமிட்டிருந்தாலோ அவற்றையும் மிகச் சரியாக செய்து முடித்து வீட்டுக்கு வருகிறீர்கள் என்றால், மனதை ஒருமுகப் படுத்தி இருந்தீர்கள் என்றுதானே பொருள், மனதை ஒரு முகப்படுத்தவே தியானம் எனும் போது நீங்கள் ஏற்கெனவே மனதை ஒருமுகப்படுத்திக் காரியமாற்றுவதால் தியானத்தில் இருந்தீர்கள் என்றுதானே பொருள்.

    மறதி ஏற்படும் போது ஞாபக சக்தியைத் தூண்டுவதற்கு,. மனம் சலனப்படும் போது, எண்ணக் குவிப்பு சிதறும் போதுதான் மனதை ஒருமுகப்டுத்துவதற்கு தியானம் என்பது தேவைப்படுகிறது. ஆகவே நாம் நம் கடமைகளை ஒழுங்காகச் செய்கிறோம் என்றாலே தியானம் செய்து கொண்டே இருக்கிறோம் என்றுதான் பொருள்.

    Share
  • திரு அப்துல் கலாம்

    தமிழ்த்தேனீ

    11220140_1123504214343953_8318872397092579954_n

    எத்தனையோ மகன்கள் பிறந்திருக்கலாம்
    மகான்களாய்த் சிலரதிலே திரிந்திருக்கலாம்
    எத்தனையோ மனிதர்கள் பிறந்திருக்கலாம்
    புனிதராய்ப் பலரதிலே திகழ்ந்திருக்கலாம்

    எத்தனையோ பிறவிகள் பிறந்திருக்கலாம்
    துறவியாய் அனைத்தையும் துறந்திருக்கலாம்
    பலகோடி வகையாய்ப் பிறந்திருக்கலாம்
    பலகோடி வகையாய்ச் சிறந்திருக்கலாம்

    எல்லா உயிர்களையும் பிடித்திருக்கலாம்
    எல்லா உயிர்க்குமே பிடித்திருக்கலாம்
    மனிதராய் யாரும் பிறப்பதில்லை
    வளர்ந்தபின் குழந்தையா யிருப்பதில்லை

    பிறந்த பின் மனிதராய் வளர்வதில்லை
    மாமனிதராய் பலரும் வாழ்வதில்லை
    குழந்தையாய்ப் பிறந்து மனிதராய் வளர்ந்து
    மாமனிதராய்த் திகழ்ந்து மேதையாய் மலர்ந்து

    மனிதாபிமானம் கொண்டு மனிதருள் மனிதராய்
    மனதோடு மனதாகப் புனிதராய் கலந்தவர்
    திரு அப்துல்கலாம் இப்போது இறந்திருக்கலாம்
    இவ்வுலகை விட்டு மறைந்திருக்கலாம்

    இவ்வுலகம் மறக்காமல் இருந்தவர் வாழ்ந்தவர்
    இன்னுமாயிரம் ஆண்டுகள் இருந்திருக்கலாம்
    திரு அப்துல்கலாம் இறவாமல் இருந்திருக்கலாம்
    நாம் இவரை எப்போதும் மறவாமல் இருக்கலாம்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ
    அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
    அவனை விடவா உயர்ந்தது ஜாதி?

    மனிதமும்,உலகமும் காப்போம்,
    மௌனம் உணர்த்தாத பொருளை
    சொற்கள் உணர்த்தாது

    அன்புடன்
    தமிழ்த்தேனீ
    http://thamizthenee.blogspot.com
    rkc1947@gmail.com
    http://www.peopleofindia.net

    Share
  • கடல் கடந்தும் தமிழன் கலை மிளிர்கிறது!

    தமிழ்த்தேனீ

    அயல் நாட்டில் தமிழ் நாடகம் நடத்தி இந்தியாவுக்கு நன்கொடை அளிக்கும் தமிழர்கள்!

    கடல் கடந்தும் தமிழன் கலை மிளிர்கிறது!

    இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழில் மக்களின் உணர்வுக்கு விருந்தாகத் திகழ்வது செவிக்கு இசையும் வசனங்களும் கண்ணுக்கு விருந்தாக நாட்டியம், நடிப்பும். ஒளி ஒலி ஆகிய எல்லாம் சேர்ந்த கலவையாக நமக்கு விருந்தளிப்பது நாடகக் கலையே.

    நவீன விஞ்ஞான உலகிலே கைவிரல் சொடுக்கிலே தொலைக் காட்சி நிகழ்ச்சிகள், தொலைத் தொடர்கள், திரைப்படங்கள் என்று கண் முன்னால் விரிந்து.கையெதிரே சுவையான நொறுக்குத் தீனிகளும் அமைந்து நம்மை வீட்டை விட்டு நகரமுடியாமல் செய்து சுகவாசிகளாக்கி வைத்திருக்கும் இந்த நாட்களில் வெளியே இருக்கும் வாகன நெரிசலில் சிக்கி அரங்கத்துக்கு சென்று நாடகம் பார்க்கும் ஆவலைத் தகர்த்துவிட்டது.

    அதனால் இந்தியாவில் தமிழ்நாட்டிலேயே நாடகம் சற்று நலிந்து போயிருக்கிறது என்பது உண்மை அப்படிப்பட்ட நாடகக் கலைக்கு புத்துயிரூட்டும் பணியை தொடர்ந்து பத்தாண்டுகளாக அமெரிக்காவில் செய்கிறார்கள். அதுவும் குறிப்பாக இந்தியாவிலிருந்து இங்கே அமெரிக்காவுக்கு வந்து தங்கள் பணிகளையும் திறமையாக நிர்வகித்துக் கொண்டே நாடகக் கலையையும் வளர்க்கிறார்கள் தமிழர்கள்.

    இண்டஸ் கிரியேஷன்ஸ்
    www.IndusCreations.org

    இந்தியாவையும் India அமெரிக்காவையும் U.S. இணைத்து Indus Creations இண்டஸ் கிரியேஷன்ஸ் என்று பெயர்கொடுத்து நல்லுறவு வளர்த்து தமிழ்நாடகம் போடுகிறார்கள். இப்படி நாடகக் கலையை நம் தமிழர்கள் அமெரிக்காவில் வளர்க்கிறார்கள் என்பது ஆச்சரியம்! ஆனால் உண்மை. இவர்களே திட்டமிட்டு நடத்தும் இந்த நாடகங்களில் இருந்து வந்த வருவாயிலிருந்து இதுவரை நம் இந்திய நாட்டில் இயங்கும் பல தொண்டு நிறுவனங்களுக்கு கிட்டத் தட்ட ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக அளித்திருக்கிறார்கள்.

    நாடகத்தில் இன்டஸ் குழுவினர்

    att

    ath
    சியாட்டில் மாகாணத்தில் மைக்ரோசாப்ட், கூகிள்,மற்றும் அமேசான் போன்ற அலுவலகங்களில் பணிபுரியும் இந்திய நாட்டு பொறியாளர்கள் இளைஞர்கள் யுவதிகள் ஆகியோரை இணைத்துக்கொண்டு சியாட்டில் எனும் மாகாணத்தில் “இண்டஸ் கிரியேஷன்ஸ்” என்னும் அமைப்பை உருவாக்கி அதன் மூலமாக தொடர்ந்து 10 ஆண்டுகளாக தமிழ் நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    கடல் கடந்தும் தமிழன் கலை மிளிர்கிறது

    இண்டஸ் கிரியேஷன்‌ஸ்” குழுவினர் கதை எழுதுவது மட்டும் அல்லாமல், அசத்தலான நடிப்பு, இசை மற்றும் வியக்க வைக்கும் அரங்க வடிவமைப்பு மூலமாக மக்களை வசீகரிக்கின்றனர். இவர்கள் முழு நீள நகைச்சுவையில் இருந்து, உணர்ச்சிப் பெருக்கெடுத்தோடும் கதைகள் வரை பலவிதமான கதைகளைக் கையாண்டுள்ளனர். 2007ஆம் ஆண்டு அரங்கேறிய சுஜாதா அவர்களின் “கடவுள் வந்திருந்தார்” என்ற நாடகத்தில் ஒரு அயல் கிரக விண்கலம் சுற்றி வந்து அரங்கில் இறங்கி மக்களை வாயைப்பிளக்க வைத்தது. 2009ஆம் ஆண்டில் அரங்கேறிய “லண்டன் எக்ஸ்பிரஸ்” நாடகம் மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது மட்டும் அல்லாமல் ஒரு விமான நிலையத்தையே அரங்கில் கொண்டு நிறுத்தி மக்களை வியக்க வைத்தது.

    2011ஆம் ஆண்டில் நடந்த “சக்கரவியூகம்” எனும் நாடகம் சிரிப்பும் மர்மமும் கலந்து ரசிகர்களை அடுத்து வரப்போவது என்ன என்று ஆவலுடன் நுனி நாற்காலியில் உட்காரவைத்தது. 2012ஆம் ஆண்டில் நடந்த “உள்ளே வெளியே” நாடகத்தில் இரண்டு அடுக்கு மாளிகையை அரங்கில் அமைத்தது மட்டுமின்றி, பாதியில் மொத்த அரங்கைப் பின்புறமாகத் திருப்பி அங்கு நடக்கும் கதையைக் காட்டிய தருணத்தில், பார்ப்போர் சிலர் மயங்கி விழாத குறை தான். சில நாடகங்களில் காட்சிகளை மேடைக்குப் பதிலாக, காண்போர் மத்தியில் நடத்தி, எதிர்பாராத ஆச்சரியத்தை ஏற்படுத்திவிடுகின்றனர். சமீபத்தில் நடந்த “நினைத்தாலே நடக்கும்” நாடகத்தில் கதை செல்லும் பாதையை மக்களின் கூற்றுக்கு ஏற்ப மாற்றி அமைத்து, அவர்கள் நினைத்ததை, மேடையில் நடித்துக் காட்டினர்.

    மாடியுடன் கூடிய சுய அரங்க வடிவமைப்பு

    ath2

    மேலும் மேடை அரங்கத்தையும் இவர்களே திட்டமிட்டு உருவாக்கி வர்ணங்கள் தீட்டி,ஓவியங்கள் வரைந்து தட்டிகள் செய்து நிர்வகிக்கிறார்கள்,இசை இவர்களே அமைக்கிறார்கள், ஒலி ஒளி மற்றும் மேடை நிர்வாகம் உட்பட அனைத்து கலைகளையும் இவர்களே வடிவமைக்கிறார்கள் , அரங்க வடிவமைப்பு போன்றவைகளும் செய்கிறார்கள். அரங்க நிர்மாணம் செய்கிறார்கள். தொடர்ந்து பத்து ஆண்டுகளாக மிக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள் கடல் கடந்தும் தமிழன் கலை மிளிர்கிறது.

    நாடகத்தில் ஒரு தந்திரக் காட்சி

    ath1

    இண்டஸ் குழுவினரின் அரங்கம் நிறைந்த ரசிகர்கள்

    ath3

    மேலும் நம் நாட்டில் உள்ள பல கிராமங்களை தத்தெடுத்து பலருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி பொதுத் தொண்டு செய்து வருகிறார்கள். கடல் கடந்து வந்து பணி செய்தாலும் நம் நாட்டை மறக்காமல் தமிழையும் நம் கலைகளையும் வளர்க்கும் இவர்களைப் பாராட்டி ஊக்கம் அளிப்பது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்.

    இதுவரைஅரங்கேற்றப்பட்ட நாடகங்கள்

    சிதம்பர ரகசியம் – June 2015

    ath4

    இண்டஸ் குழுவினரின் தொடர் முயற்சியால் ஒன்பது ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்கி இந்த 2015 ஆம் ஆண்டு வெற்றிகரமான பத்தாம் ஆண்டாக மலர்ந்து “சிதம்பர ரகசியம்” என்னும் நாடகத்தை அரங்கேற்ற உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த இண்டஸ் குழுவினர். வரும் ஜூன் மாதம் 19ம் தேதியும் 20 ம் தேதியும் இரு முறை அரங்கேறவுள்ளது இந்த “சிதம்பர ரகசியம்”

    கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புகளைச் சொடுக்கிப் பாருங்கள், இவர்களின் திறமை புரியும்! வாழ்த்துவோம், பாராட்டுவோம்!!

    அன்புடன்
    தமிழ்த்தேனீ
    rkc1947@gmail.com http:thamizthenee.blogspot.com

    இண்டஸ் கிரியேஷன்ஸ்
    www.IndusCreations.org

    இண்டஸ் கிரியேஷன்ஸ் Facebook தளம்
    https://www.facebook.com/induscreations

    இண்டஸ் கிரியேஷன்ஸ் YouTube தளம்
    http://www.youtube.com/induscreations2010

    இண்டஸ் கிரியேஷன்ஸ் சில புகைப்படங்கள்
    Indus Creations photos

    சில காட்சிகள்
    https://www.youtube.com/watch?v=fmXk-MPRyWE
    அரங்க நிர்மாணம்
    https://www.youtube.com/watch?v=c_FMJ7sIpw0

    ரசிகர்களின் விமர்சனம் https://www.youtube.com/watch?v=7VkFdyfmnz0

    Attachments area
    Preview YouTube video London Express : Indus Creations tamil play : 2009

    London Express : Indus Creations tamil play : 2009
    Preview YouTube video Time Lapse – Indus Creations – Chakravyugam

    Time Lapse – Indus Creations – Chakravyugam
    Preview YouTube video Indus Creations – Chakravyugam 2011 – Audience Feedback

    Indus Creations – Chakravyugam 2011 – Audience Feedback

    Share
  • “அகில உலக பெண்கள் நாள் “

    தமிழ்த்தேனீ

    IWD-slider
    ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் அல்லது அனைத்துலக பெண்கள் நாள் என்று கொண்டாடுகிறோம்.

    இறைவன் படைப்பிலே உருவான அத்துணை ஜீவராசிகளிலும் பெண்பாலினமும் ஆண்பாலினமும் படைக்க்கப் பட்டிருக்கிறது ஆனால் மனிதர்களத் தவிர மற்ற ஜீவராசிகள் பெண் அடிமையென்றும் ஆண் ஆளுபவன் என்றும் பேதம் பார்ப்பதில்லை ஆண்கள் கற்பழிப்பு கொலை போன்ற செயல்களை செய்து விட்டு அதை நியாயப்படுத்துவது போலப் பேசுவதும் , பெண்கள் வீட்டை விட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் வெளியே வரக் கூடாது அப்படி வருதல் முறையன்று என்றெல்லாம் பிதற்றுவதும் , அப்படிப் பிதற்றும் குற்றவாளியின் பிதற்றலை பேட்டி எடுத்து மக்களுக்கு அவற்றை ஒலி ஒளிக் காட்சிகளாக அளிக்கும் ஊடகங்களும் தவறாக தங்கள் விளம்பரத்துக்காகவும் பணம் ஈட்டுவதற்காகவும் பயன்படுத்துவதைப் பார்த்தால் நாம் இன்னமும் கற்காலத்திலேயே இருக்கிறோமா என்று சந்தேகம் வருகிறது.

    . சகோதரியும் பெண்தான் , தாயும் பெண்தான், மனைவியும் பெண்தான், மகளும் பெண்தான். ஆகவே ஒவ்வொரு உறவு முறையிலும் பெண்களை அந்தந்த உறவுக்கேற்ப நடத்த பழக்கிய பின்னரும் மாக்கள் என்னும் நிலையிலிருந்த நாம் படித்து அறிவு பெற்று, விஞ்ஞானத்தில் முன்னேறி நம்மைப் பண்படுத்திக் கொண்டு மக்களாக மாறி இக்காலத்திலும் இன்னமும் ஆண்களில் சிலர் மாக்கள் என்னும் மிருகத்தின் மன நிலையிலிருந்து மாறாமல் தராதரம் பாராமல் எல்லாப் பெண்களையுமே பெண்களை போகப் பொருளாக பார்க்கும் மனோ நிலையிலிருந்து ஆண்கள் மாற வேண்டும்..

    பெண்களைப் பற்றி பலவிதமான கருத்துகள் ஆண்கள் மனதிலே இருந்தாலும் தொடக்க காலம் முதலே பெண்கள் அனைவருமே ஆண்களுக்கு சமமானவர்கள் அல்லர் என்னும் எண்ணம் கொண்டவர்கள் ஆண்கள். அதனாலேயே இலக்கியங்களிலும் , காவியங்களிலும் மற்று சரித்திரங்களிலும் ,புதினங்களிலும் இன்றைய திரைப்படங்கள் நெடுந் தொடர்கள், கதைகள் எல்லாமே இதே கருத்தை ஒட்டித்தான் தயாரிக்கப் படுகிறது.

    ஆனால் பெண் என்பவள் மஹா சக்தி என்று ஒப்புக் கொள்ளப்படும் புராணங்களில் கூட ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் ஆண்தான் உயர்ந்தவன் , பெண் அவனுக்கு சேவகம் செய்யவே இருக்கிறாள் என்றே போதிக்கப் படுகிறது.
    இந்த நவீன விஞ்ஞான யுகத்திலும் இன்னமும் ஆண்களும் பெண்களை சரியாக உணரவில்லை , பெண்களும் தங்கள் சக்தியை முறையாக முழுமையாக உணரவில்லை என்றே தோன்றுகிறது.

    பழைய காலத்திலிருந்து ஒரு சொல்வழக்கு இன்னமும் தொடர்கிறது, அது “ பெண் புத்தி பின் புத்தி “ என்பது
    அந்தச் சொல்வழக்கை நாம் தவறாக பொருள் புரிந்துகொண்டிருக்கிறோமோ என்பது என் சந்தேகம். ஒரு பெண் குழந்தை பிறக்கிறது, பெண் குழந்தைகள் கர்ப்பகாலத்தில் அதிக காலம் கர்ப்பக் க்ருகத்தில் இருக்கும் ஆனால் ஆண்குழந்தை குறிப்பிட்டபடி 10 மாதத்திலேயே பிறந்துவிடும், பெண் குழந்தைகள் தாமதமாக பிறக்கும், ஆண் குழந்தைகள் சீக்கிரம் அதாவது பத்து மாதங்களுக்கு முன்னரே பிறக்கும் ,இது அனுபவ பூர்வ உண்மை.

    ஆண் முந்திக்கொள்கிறான், ஏனென்றால் எல்லாவற்றுக்கும் அவசரம் , நிதானமின்மை. இல்லறத்தில் அவசரப்பட்டு உணர்ச்சி கொள்பவன் ஆண் ,அதே போல அவசரமாக உணர்ச்சிகள் தணிந்து போவதும் ஆணுக்குதான்
    ஆனால் பெண் அப்படியல்ல யோசிப்பவள், நிதானமாக தீர்க்கமாக யோசித்து செயலாற்றுபவள், பெண்கள் மிக நிதானமாக உணர்ச்சி கொள்வார்கள், அதேபோல் அதிலேயே தங்கி நிதானமாக உணர்ச்சியை தணிப்பார்கள். எல்லாச் செயலிலும் பெண்களுக்கும் ஒரு நிதானம் இருக்கும். ஒரு குடும்பத்தில் உருக்கும் ஆண்கள் மூத்தவர்களாக இருந்தாலும் அந்தக் குடும்பத்தில் இருக்கும் பெண் ஆலோசனைகளை சரியாகச் சொல்லும் திறம் கொண்டவளாக இருப்பாள். பெண்களை மதிக்காத ஆண்கள் விவேகமில்லாதவர்கள்.

    நான் அடிக்கடி சொல்வேன் பெண் ஒரு சிறந்த நிர்வாகியாய் இருக்கிறாள் என்று தெரிந்தால் கணவன் நிர்வாகத்தை அவளிடம் கொடுக்கலாம். இவனை விட அவள் நிர்வாகத்தை நன்று திட்டமிட்டு நடத்துவாள் என்று
    ஆனால் வேதப்படிப் பார்த்தால்முதலில் தோன்றியவள் சக்தி,ஆதிசக்தி, அந்த ஆதிசக்தி தோன்றிய பின்னர்தான் அந்த ஆதி சக்தி தன்னிலிருந்து விஷ்ணுவை உருவாக்கினாள், விஷ்ணுவின் நாபிக் கமலத்திலிருந்து ப்ரும்மாவை தோற்றுவித்தாள், அதன் பின்னர் சிவனைத் தோற்றுவித்தாள் ஆகவே பெண் புத்தி பின்னால் விளையப் போகும் அனைத்தையும் அறிந்த பின் புத்தி என்று பொருள் கொள்வோமே.

    இயற்கையிலேயே கவனித்துப் பார்ப்பவர்களுக்கு புரியும்பெண் குழந்தைகள் வெகு சீக்கிரமே கவிழ்ந்து கொள்ளும், தவழத் தொடங்கும்,உட்காரத் தொடங்கும், நிற்கத் தொடங்கும், நடக்கத் தொடங்கும், ஆனால் ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளைவிட காலதாமதமாகவே அனைத்து இயக்கங்களையும் செய்யும். ஏன் இப்படி என்று ஊன்றிக் கவனித்தால் இறைவனின் படைப்பின் ரகசியம் ,ஆச்சரியமான விஞ்ஞான ரகசியம் புரியும். இயல்பாகவே குழந்தைப் பருவத்தில் பெண்களுக்கு உடல் உறுப்புகள் உடலின் எந்த பாகத்திலும் வெளியே துறுத்திக்கொண்டிராது,

    ஆனால் ஆண் குழந்தைகளுக்கு முக்கியமான உறுப்புகள் உடலைவிட்டு வெளியே துறுத்திக்கொண்டிருக்கும்
    ஆதலால் முதலில் இயக்கங்களை தொடங்கும் பெண் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் வராது, ஆனால் ஆண் குழந்தைகள் வேகமாக இயங்கத் தொடங்கினால், பழக்கமின்மை காரணமாக கீழே விழுந்தால் துறுத்திக்கொண்டிருக்கும் ஆண் உறுப்பில் தாக்குதலை வாங்க வேண்டி வரும், அதனால் இயக்கங்கள் உடல் உறுதி பெற்று பெற்றுத்தான் மெதுவாக இயங்கும் ஆண் குழந்தைகளுக்கு, ஆனால் தாமதமாக வந்தாலும் பெண் குழந்தைகள் தளர்ச்சியின்றி வரும்
    அதைத்தான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவாரு என்பர்.

    எந்த ஒரு மோசமான சூழ்நிலையிலும் பெண்கள் நிதானப் படுத்திக்கொண்டு யோசிப்பதைப் போல ஆண்களால் முடிவதில்லை.

    உதாரணமாக ப்ரசவ காலத்தில், பத்து மாதம் சுமக்கும் காலத்திலும்,ப்ரசவம் நிகழும் நேரத்திலும், பதறாமல் இருக்க பெண்களால் முடியும் ஆனால் அந்தப் பெண்கள் மேல் பாசம் வைத்திருக்கும் ஆண்கள் பதறிக்கொண்டிருப்பார்கள், ஆனால் வெற்றிகரமாக ப்ரசவத்தையும் முடித்துக்கொண்டு கணவனுக்கும் ,தகப்பனுக்கும் தைரியம் சொல்பவள் பெண்

    இன்னும் நுணுக்கமாக ஆராய்ந்தால் பிறப்பு என்றால் இறப்பும் இயற்கையே ஒரு பெண்ணை தவிக்க விட்டுவிட்டு ஒரு ஆண் அதாவது கணவன் இறந்து போகும் நிலை எற்பட்டால் துக்கத்தையும் ,சோகத்தையும் தாங்கிக்கொண்டு ஒரு பெண்ணால் அவளுடைய அடுத்த கடமைகளை கவனிக்க மனவலு இருக்கிறது,அந்தப் பெண் தாயுமாகி தந்தையுமாகி அனைவரையும் அரவணைத்துக்கொண்டு மீண்டு விடுவாள், தன் குழந்தைகளையும் நல்ல நிலைக்கு உயர்த்திவிடுவாள், ஆனால் அப்படி கணவனை விட்டு மனைவி இறக்கும் நிலை வந்தால் ஒரு ஆணால் பதறாமல்,எண்ணம் சிதறாமல் இருக்க முடிவதில்லை, அவனுடைய கடமைகளை சரியாக நடத்த முடிவதில்லை என்பது கண்கூடு,ஒன்று அவன் குழந்தைகளை,கடமைகளை சரிவர ஆற்ற முடியாமல் திகைத்துப் போவான், மனமொடிந்துபோவான், பதறுவான் அல்லது மனம் சிதறுவான். தன் சுகத்துக்காக தன் கடமைகளை மறந்து மற்றோர் பெண்ணை நாடி, தான் பெற்ற குழந்தைகளையும் தன் பெற்றோர்களையுமே மறந்துவிடும் ஆண்கள் தான் அதிகம், தாயுமானவன் என்னும் உயர்ந்த நிலையை அடையும் ஆண்கள் கோடியில் ஒருவரே.

    நிதானமாக ஆராயாமல் அவசரகதியில் முடிவுகளை எடுப்பவன் ஆண். நிதானமாக யோசித்து தீர்க்கமான முடிவுகளை எடுப்பவள் பெண் அதனால் பெண் புத்தி பின் புத்தி என்பதை, பின்னால் வரபோக்கும் எந்த ஒரு நிகழ்விலும் பதறாமல். முன்கூட்டியே யோசித்து முடிவெடுக்கும் தீர்க்க தரிசிகளுக்கு பின் புத்தி என்று பெயரென்றால் அதை அப்படியே ஒப்புக்கொள்கிறேன் ஆமாம்

    “ பெண் புத்தி பின் புத்திதான் “

    அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
    அவனை விடவா உயர்ந்தது ஜாதி?

    மனிதமும்,உலகமும் காப்போம்,
    மௌனம் உணர்த்தாத பொருளை
    சொற்கள் உணர்த்தாது

    அன்புடன்
    தமிழ்த்தேனீ
    http://thamizthenee.blogspot.com
    rkc1947@gmail.com
    http://www.peopleofindia.net

    Share
  • 2015 புத்தாண்டு சபதம்

    தமிழ்த்தேனீ

    images (1)
    2014 ஆம் ஆண்டு நிறைந்து 2015 ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது. ஜனவரி ஒன்றாம் தேதி முதல்.

    ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் அதற்கு முன்னாலே வா வாவா என்றொரு பாட்டு உண்டு.

    உண்மைதான் ஒரு ஆண்டு கழிந்தால் ஒரு வயது ஏறுகிறது, ஆகவே வயது மட்டும் ஏறினால் போதுமா? அப்படி ஒரு வயது ஏறுகிறது என்றால் ஒரு ஆண்டு அனுபவமும் நமக்குள் நிறைகிறது என்று பொருள், ஆகவே ஓராண்டு என்பது 12 மாதங்கள் அல்லது கிட்டத்தட்ட 50 வாரங்கள், 366 நாட்கள், அல்லது 8784 மணி நேரம் ,அல்லது 527040 நிமிடங்கள், அல்லது 31,622,400 வினாடிகள் ,

    அடேயப்பா ! இவ்வளவு வினாடிகள் நாம் செலவழித்திருக்கிறோம். அது சரி ஆனால் நாம் செல்வழித்த இந்த 31,622,400 வினாடிகளில் எவ்வளவு வினாடிகள் நாம் உண்மையாக உருப்படியாக நல்ல செயல்களுக்கோ நாட்டின் முன்னேற்றத்துக்காகவோ, அல்லது வருங்கால சந்ததிகளின் முன்னேற்றத்துக்காகவோ செலவிட்டோம் என்று எண்ணிப் பார்ப்போமா?

    பன்னிரெண்டு ஆழ்வார்களில் ,முக்கியமான ஆழ்வாராகிய தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஒருநாளில் அதாவது 24 மணி நேரத்தில் பாதியும் உறங்கிப் போம் என்கிறார்.

    “வேதநூற் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேனும்,
    பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
    பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்
    ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே “
    என்று திருவரங்கனிடம் வேண்டுகிறார்.

    நாம் நூறு வயது வாழ்ந்தால் பாதியும் உறங்கிப் போகும் அதாவது ஐம்பது வருடங்கள் உறக்கத்திலேயே கழிகிறது, 15 ஆண்டுகள் பேதை பாலகனாகவே அறிவு முதிர்ச்சியோ அனுபவ முதிர்ச்சியோ இல்லாமல் இருக்கிறோம்.
    ஆக மொத்தம் 65 ஆண்டுகள் வீணாகக் கழிக்கிறோம்

    65 வயதுக்கு பின்னர் இயல்பாக வரும் மூப்பு பிணி போன்றவைகளால் அவதிப் படவே நேரம் போகிறது
    இப்படி இருக்க ஒரு ஆண்டு கழிந்து புது வருடம் பிறந்தால் நம் ஆயுளிலே ஒரு வருடம் குறைகிறது

    ஆகவே நமக்கு கொடுக்கப்பட்ட ஆயுளுக்குள் நாம் ஏதேனும் நற்காரியம், ஏதேனும் சாதனைகள் செய்ய வேண்டாமா?

    அப்படியானால் நேரத்தை நாம் எப்படி திட்டமிட்டு கழிக்க வேண்டும்?

    ஒவ்வொரு நொடியும் நமக்கு பொன் போன்றது அல்லவா? அதனால்தான் காலம் பொன் போன்றது என்கிறார்கள்

    நான் மேற்கூறிய அனைத்துமே நாம் நூறு வருடங்கள் முழுமையாக வாழ்ந்தால்தான் . ஆனால் நம்மில் எத்தனைபேர் நூறு வருடம் வாழ்கிறோம்? பிறப்பதும் இறப்பதும் நம் கையில் இல்லை. ஆகவே நமக்கு விதிக்கப்பட்ட ஆயுள் எவ்வளவு என்று நமக்குத் தெரியாது அப்படியானால் நமக்கு எவ்வளவு நேரம் இருக்கிறது நல்லவைகளைச் செய்ய?

    ஆகவே நாம் வாழும் காலம் எவ்வளவு வருடங்கள் என்று எண்ணிப் பார்ப்பதைவிட வாழும் காலத்துக்குள் நல்லவைகளை நிறைவேற்ற வேண்டும் என்னும் பொறுப்பு நமக்கு கூடுகிறது அல்லவா?

    பல நல்ல மனிதர்கள், நாட்டுக்கு உழைத்தவர்கள் நன்மை செய்தவர்கள், மஹாகவி பாரதியார், கணிதமேதை இராமானுஜம் அவர்கள் போன்ற பலர் மிகக் குறுகிய காலமே வாழ்ந்தாலும் வாழும் காலத்திலே நல்லது செய்துவிட்டு என்றும் மக்கள் மனதிலே நீங்காத இடம் பெற்றிருக்கிறார்கள் ..அதாவது அவர்கள் வாழ்ந்த குறுகிய காலத்துக்குள்ளாக திட்டமிட்டு நன்மைகளை செய்திருக்கிறார்கள், நல்ல நோக்கத்தோடு வாழ்ந்திருக்கிறார்கள்.

    அப்படியானால் நாம் இந்த வருட தொடக்கம் முதல் எப்படி வாழவேண்டும் என்று திட்டமிட்டு அப்படி வாழ வேண்டுமல்லவா?
    அப்போதுதானே நேர விரயத்தை குறைத்து நாமும் பல நன்மைகளைச் செய்ய முடியும்?
    சிந்திப்போமா?

    இந்த வருட தொடக்கத்தில் நாமும் ஒரு புது சபதம் எடுப்போமா?

    இனி என் வாழ்நாளில் ஒரு வினாடியையும் வீணாக்க மாட்டோம், இயன்றவரை நல்லதே செய்வோம், அனைவருக்கும் உதவியாய் இருப்போம், நாம் பிறந்த நாட்டை முன்னேற்ற நம்மால் இயன்ற அளவு பாடுபடுவோம். நாட்டை வளர்ச்சிப் பாதையிலிருந்து திசை திருப்பி பலகீனமாக்கும் லஞ்சம் , ஊழல், போன்றவற்றை களைய சிறிதேனும் முயற்சி எடுப்போம்.

    இளைஞர்களை நல் வழிதிருப்பி நாட்டின் மேன்மையை அவர்களுக்கு உணர்த்தும் வகையில் அறிவுறுத்தி அவர்களின் ஆக்க பூர்வமான அரிய சக்தியை நல்ல வழியில் செலவழிக்க அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

    நாட்டில் மனிதர்களே முக்கியம், சாதிப் பிரிவினை, மொழிப் பிரிவினை, போன்றவை மனிதர்களை பலகீனப்படுத்துகிறது என்பதை உணரவைத்து ஒற்றுமையே மேன்மை என்பதை வலியுறுத்துவோம்

    மனிதமே மேன்மையானது, மனித நேயமே எப்போதும் வாழவைக்கக் கூடியது. ஆகவே மனிதம் காப்போம் , என்று உறுதி எடுப்போமா? ஜாதி இன மொழி பேதமில்லாமல் அனைவருக்கும் 2015 ஆம் ஆண்டு நல்ல வாழ்க்கையை அமைத்து தரவேண்டி அனைவரும் ப்ரார்த்தனை செய்வோம் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    Share
  • நனைந்த சூரியன்!

    தமிழ்த்தேனீ

    ஆடியிலே காற்றடிக்கும்
    அம்மியையே பறக்க வைக்கும்
    புரட்டாசியில் பொன்னுருகக் காய்ந்து          suninrain
    மண்ணுருகப் பெய்யும் என்றெல்லாம்
    எதிர்பார்த்துப் பொய்த்த மழை
    மானாடி மயிலாடி மற்றவைகள்
    தானாடிக் காத்திருந்து காத்திருந்து
    ஏமாற்றம் தந்த மழை
    இயல்பான சுழற்சியினால்
    இயற்கையின் எழுச்சியினால்
    திரண்டெழுந்த கார்முகிலின்
    கருணையினால் ஐப்பசியில் அடை
    அடையாய் அடர்ந்து பெய்த மழை
    காரணமாய் ஆதவனே நனைந்தான்
    ஐப்பசியின் அடை மழையில்
    ஆதவனே நனைந்தான்!

    உதய சூரியனோ மறையும்
    சூரியனோ உலகிலே உண்டோ?
    ப்ரபஞ்சம் சுழலுவதால் தோன்றி
    மறைவதுபோல் மாயம்           
    காட்டுகிறார் சூரியனும் சந்திரனும்!

    ஆதவனே நீராடும் ஐப்பசியில்
    மானிடரே நாமும்தான்
    தீபாவளித் திருநாளில்
    கங்கையின் புனித நீரால்
    நீராடி மகிழ்ச்சியில் நனைவோமே!
    நாருசிக்கும் பலகாரம்
    அருந்தியே மகிழ்வோமே!

    ஒரு வருடம் காய்ந்த சூரியன்
    ஒரு நாளில் நனைந்தான்
    சூழ்நிலையின் குளிராலே
    நடுநடுங்கும் சூரியனும்
    குளிர்காயத் தீபங்கள் ஏற்றியே
    ஒளியும் ஒலியும் காண…
    நம் நாட்டுப் பட்டாசும் மத்தாப்பூ
    புஸ்வாணம் ஏற்றியே மகிழ்வோமே!

    விண்முட்டும் ராக்கெட்டு இங்கிருந்தே
    விட்டு அத்துணை கிரகங்களையும்
    ஆராய்ந்தே அங்கிருக்கும் ரகசியங்கள்
    அதிசயங்கள் இங்கிருந்தே அறிவோமே!

    சூரியனே நனைந்தான் நாமும்
    தான் நனைந்தோம் கூட உள்ள
    மக்களும் நனைந்தாரே
    அவருக்கும் குளிர்தானே
    நாமெடுக்கும் ஆடைகள்
    விதவிதமாய்ப் பலகாரம்
    குளிர் நீக்கும் பட்டாசு
    அத்தனையும் மொத்தமாய்
    ஓரிடத்தில் குவித்து வைத்து
    ஒன்றாக எரியவிட்டால்
    உலகமே வெடிந்து போகும்

    வாங்கி வந்த அத்தனையும்
    பங்கு போட்டுப் பிரித்தெடுத்து
    அவருக்கும் அளித்தால் மகிழ்வாரே
    அவர் மகிழ்ந்து புன்னகைத்தால்
    அகிலமும் ஒளி பெறுமே!

     

    Share
  • நீயிருக்கிறாய்

     

                                                                                                  உ

                                    ஶ்ரீராமஜெயம்

       

     தமிழ்த்தேனீ

    rama-1

    நீயிருக்கிறாய் எங்கும் நீயிருக்கிறாய்

    நீ இருக்கும் இடத்திலேயே தானிருக்கிறாய்

    நீ இருக்கிறாய்  நீக்கமற எங்கும்

    நிறைந்திருக்கிறாய்

     

    தாயிருக்கும் இடத்திலெல்லாம் நீயிருக்கிறாய்

    சேயிருக்கும் இடத்திலும் நீயிருக்கிறாய்

    தீயிருக்கும் இடத்திலேயும் நீயிருக்கிறாய்

    காயிருக்கும் இடத்திலும் நீயிருக்கிறாய்

    கனிந்திருக்கும்  பழத்திலும் நீயிருக்கிறாய்

    மரத்துக்கும்  விதையாக விதைக்குள் மரமாக

    நீயிருக்கிறாய் எங்கும் நிறைந்திருக்கிறாய்

    மலைக்குள்  குழம்பாக நீயிருக்கிறாய்

    மலைமேல் பனியாக நீயிருக்கிறாய்

    மண்ணுக்கு உரமாக  விண்ணுக்கு மழையாக

    கண்ணுக்கு இமையாக  இமைக்குள் கண்ணாக

    எண்ணுக்கும் எழுத்துக்கும் இலக்கணமாய்

    இலக்கணத்தின்  இலக்கியமாய் இலக்கியத்தில்

    இலக்கணமாய் எக்கணமும்  மறையாத

    மறைபொருளாய் கண்ணுக்குத் தெரியாமல்

    நீயிருக்கிறாய் மறைந்தே இருந்தாலும்

    பிறையாய்த் தோன்றி நிலவாய் ஒளிர்ந்து

    பிழம்பாய்த் தோன்றி கதிராய் மலர்ந்து

    கதிரவன் போலே மறையாய் ஒளிர்ந்தே

    நீயிருக்கிறாய் எங்கும் நிறைந்திருக்கிறாய்

    பாவுக்குள் கருவிருக்கும் பூவுக்குள் தேனிருக்கும்

    தாய்மையெனும் பாலிருக்கும் பாலுக்குள் நெய்யிருக்கும்

    தாய்மையனும் மெய்யிருக்கும்  தாய்  போல அன்பிருக்கும்

    மாந்தர் இதயத்திலே நீயிருக்கிறாய் என்றும் நிறைந்திருக்கிறாய்

     

     

    நீரிருக்கும் இடத்திலும் நீயிருக்கிறாய்

    நிலம் இருக்கும் இடத்திலெல்லாம் நீயிருக்கிறாய்

    வேருக்குள் நீராக நீருக்குள் வேராக

    யாருக்கும் தெரியாமல் உயிருக்கும் 

    உயிராக  நீயிருக்கிறாய்

    நிலமில்லா வானத்திலும் நீயிருக்கிறாய்

    வானிலா இல்லாத நிலத்திலும் ஒளியாக

    ஒளியிலா இருளிலும்  இருளாக ஒளியாக

    ஒளிர்கின்ற இருளாக  இருளகற்றும் ஒளியாக

    எல்லாமே நீயாக  இல்லாமல் இருக்கிறாய்

    எங்கும் நிறைந்திருக்கிறாய்

     

     

    வேற்று மொழியானாலும் வேற்று மதமானாலும்f82186c1-6ed6-48a5-b65e-16efdbece450_S_secvpf

    வேற்று இனமானாலும்  வேற்றுமை இல்லாமலே

    காற்றிருப்பதைப் போலே நீயிருக்கிறாய்

    காற்றோடு காற்றாகக் கலந்திருக்கிறாய்

    காணும் உயிர்க்கெல்லாம் நீக்கமற நிறைந்தே

    ஊணிலும் உயிரிலும் போக்குவரத்தாய்

    மூச்சுக் காற்றாக. எங்கும் நிறைந்திருக்கிறாய்

    பேச்சாக சொல்லாக செயலாக விளைவாக

    அடிப்படையின் அணுவாக அணுவைக்  கூறிட்டுப்

    பிளந்தாலும்  பேரணுவாக தீப்பிழம்பான உருவத்தில்

    நீயிருக்கிறாய் எங்கும் நிறைந்திருக்கிறாய்

     

    இல்லையென்றே சொல்வோர்க்கும் இல்லாத

    இடமில்லை என்போர்க்கும் இதயத்திலே ஆழ்ந்து

    நீயிருக்கிறாய்  எங்கும் நிறைந்திருக்கிறாய்

    பொல்லாதவர்க்கும்  நல்லவர்க்கும் நடுநிலையாளருக்கும்

    சொல்லாமல் கொள்ளாமல்  உள்ளுக்குள்ளே ஆழ்ந்து

    நீயிருக்கிறாய் எங்கும் நிறைந்திருக்கிறாய்

    கல்லுக்குள் தேரை போல் நீயிருக்கிறாய்

    தேரைக்கும் உணவாக  நீயிருக்கிறாய்

    நீயிருக்கிறாய் எங்கும் நிறைந்திருக்கிறாய்

    கல்லாக வடித்தாலும் கவனமாய்ப் படித்தாலும்

    உள்ளார்ந்த உணர்வாய் நீயிருக்கிறாய்

    எங்கும் நிறைந்திருக்கிறாய்

     

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

     

    Share
  • “மஹா சிவராத்திரி”

    தமிழ்த்தேனீ

    Picture1

    ஒரு முதியவர் இரவு இனிய இரவு என்று சொல்லிவிட்டுப் படுத்தார், இருமல் வந்தது அவருக்கு, எழுந்து உட்கார்ந்தவர் இன்னிக்கு சிவராத்திரிதான் என்றார். அன்று உண்மையிலேயே மஹாசிவராத்திரி. அது அவருக்குத் தெரியவில்லை….!!!!! அன்று அவர் தூங்கவே இல்லை, ஆனால் தூக்கம்தான் வரவில்லையே என்று ஓம் நம் சிவாய நமஹ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். காலையில் பொழுது விடிந்தது, சற்றே ஆயாசத்துடன் எழுந்து குளித்துவிட்டு, வழக்கமாகச் செய்யும் பூஜையை செய்து விட்டு, காலை உணவு உண்டார். மதியம் நல்ல சாப்பாடு, இரவு வழக்கம் போல் இரண்டு வாழைப்பழங்கள், ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு, இனிய இரவு என்று சொல்லி விட்டு படுத்து தூங்க ஆரம்பித்தார். ஆழ்ந்த தூக்கம். அன்று அவருக்கு இருமல் வரவே இல்லை. அன்று மட்டுமல்ல, அதற்குப் பிறகு அவருக்கு 10 வருடங்களாக இருந்த இருமல் வரவே இல்லை.

    முதல் நாள் இருமலின் கொடூரத்தால் நொந்து போய் இன்று சிவராத்திரிதான் என்று சொன்னாரே, அன்று உண்மையாகவே மஹா சிவராத்திரி…. அதன் விசேஷமோ, அன்றி இறைவன் சிவனின் நாமத்தை அன்று இரவு முழுவதும் ஏகாக்ர சிந்தையுடன் அவர் ஜபித்ததின் விளைவோ, அவருடைய வியாதி முற்றிலும் குணமாகி விட்டது. நம்புபவர்களுக்கு தெய்வம் நட்ட கல்லும் தெய்வமே நாதன் உள்ளிருக்கையில் அதாவது நாதனும் சக்தியும் நமக்குள்ளே இருக்கும் வரை நம்பிக்கைதானே தெய்வம்.

    ஆகவே நாம் தெரிந்து செய்தாலும், தற்செயலாக செய்தாலும், நல்ல நேரங்களில் இறைவனை தொழுவது நல்ல பலன்களையே தரும் என்பது சத்தியமான உண்மை. நாமறியாமல் செய்யும் பாவங்களும் புண்ணியங்களும் அனைத்திற்கும் பலன் நமக்கு வந்து கொண்டே இருக்கிறது. ஆகவே தெரியாமல் எவ்வளவோ பாவங்கள் செய்கிறோம். தெரிந்தே ஒரு புண்ணியமாவது செய்வோமே. நாளை இரவு மஹா சிவராத்திரி,மாசி மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி இரவே மஹா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. மஹா சிவராத்திரியில் சர்வேஸ்வரனையும் அம்பிகையையும் ஆத்ம சமர்ப்பணம் என்னும் மனப்பூர்வமான பக்திசெலுத்தினால், பெரும் புண்ணியம் என்று சொல்வார்கள், மகிமையைப் நாமும் தான் உணர முற்படுவோமே.

    ப்ரும்ம முஹூர்த்தம் என்று சொல்லக்கூடிய விடியற்காலையில் எழுந்து குளித்துவிட்டு, மனப்பூர்வமாக மஹாசிவனை வழிபட்டு, இரவு முழுவதும் அர்த்தநாரீச்வரனாகிய ஈச்வரனை மனதிலிருத்தி தூங்காமல் விழித்திருந்து, அவன் லீலைகளை சொல்லக்கூடிய திருவாசகம் படித்து மறுநாள் காலையில் ஸ்னானம் செய்துவிட்டு அந்த மஹா சிவனையும் அகிலாண்டதேவி அன்னை பராசக்தியையும் நமஸ்கரித்து விரதம் முடிப்போம். மேலும் சக்தியை தன்னில் பாதியாகக் கொண்ட சிவ பெருமானுக்கும் சக்திக்கும் உகந்த அத்துணை சித்ரான்னங்களையும், அவர்களுக்கு மனப்பூர்வமாக நைவேத்யமாகப் படைத்து நம் மனதுக்கும், சக்தி சமேத ஈச்வரனுக்கும் உகந்த மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்து (முக்கியமாக வில்வ இலைகள்) அம்பாளையும், ஈச்வரனையும் தம்பதி சமேதரராக மானசீகமாக இருத்தி குடும்பத்தில் உள்ள அனைவரும் நமஸ்காரம் செய்து, மனம் குளிரப் பண்ணி, நாமும் அந்த ப்ரசாதங்களை மனமார, வயிறார உண்டு, கூடியவரையில் அன்று ஒரு நாளாவது, சில ஏழைகளுக்கும், அந்தப் ப்ரசாதங்களைப் பகிர்ந்தளித்து அவர்களையும் த்ருப்திப் படுத்துவோம்.

    “தெய்வம் மனுஷ ரூபேண” என்று சாஸ்திரங்கள் சொல்கிறது, பல ராத்திரிகள் நம்மை தூங்கச் செய்து, காலையில் சக்தியை அளித்து, அதாவது மீண்டும் நமக்கு உயிராகிய சக்தியை அளித்துக் காக்கும் அம்பாளையும் ஈச்வரனையும் நமஸ்கரித்து அருள் பெறுவோம்….!!!!! எல்லா நலன்களும் நம்மை நாடி வந்தடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

    ஈஸ்வரோ ரக்ஷது :

    Picture1

    Share
  • மணிமொழிக்கு ஓர் கடிதம்

    தமிழ்த்தேனீ

                                        உ

                                 கடவுள் துணை

    அன்புள்ள மணிமொழிக்கு அன்புடன் தமிழ்நேசன் எழுதிக் கொள்வது

    உங்கள் அனைவருக்கும்  எங்களது ஆசிகள்

    அவ்விடத்தில்  உன்னுடைய கணவரும் எங்களது  மகனும் ஆன   திரு சித்திரைச்செல்வன் மற்றும்  எங்களது  பேரனும் , பேத்தியும்  உங்களின்  குழந்தைகளுமான  தயாநிதியும்    இளநகையும்  அனைவரும் நலம்தானே, மருமகளே நீயும்  நல்ல பெண்தான்  என்பதை நிரூபித்துவிட்டாய் . உனக்கும் எங்களது ஆசிகள் .

    இவ்விடம் நானும்  லலிதாவும் நலம் உடலளவில் நலமாக இருக்கிறோம்,

    என்னடா இப்படி உடலளவில் நலமாக இருக்கிறோம்  என்று எழுதியிருக்கிறேனே  என்பதைக் கூர்ந்து   கவனித்துப் புரிந்துகொண்டால்  எங்கள் இருவருக்கும்  உள்ளத்தளவிலும் நலம் கூடும்.

    நிற்க  எப்போதோ நாங்கள் இருவரும்  உங்கள் காதலை ஏற்கவில்லை என்பதை இன்னமும் மனதில் வைத்துக் கொண்டு  அதன் பிறகு  நாங்கள் எத்தனையோ முறை உங்களை அன்பாலும் ,பாசத்தாலும்  நெருங்க முயன்றும், எங்களால் நெருங்க முடியவில்லை, நீங்கள் இருவருமே எங்களை நெருங்க விடவில்லை.

    நாங்களும் மனிதர்களே  எங்களுக்கும் அன்பு பாசம் பந்தம் எல்லாமே உண்டு என்பதை நீங்கள் இருவருமே மறந்துவிட்டீர்கள். பரவாயில்லை காலம்  ஒருநாள் உங்களுக்கு எங்களின் உண்மையான பாசத்தையும் அன்பையும் உணர்த்தும், ஆனால் அப்போது நாங்கள் இந்த உலகத்தில் இருப்போமா  இல்லையா என்பது இறைவனே அறிவான்.

    ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நாங்கள் உங்கள் பேரில்  சரி சரி  எங்கள்  மகன் பேரில் வைத்திருந்த அன்பு மிகுதியின் காரணமாக அப்போதிருந்த மனநிலையில் உங்கள் காதலை  மறுத்திருக்கலாம்,

    உங்கள் இருவருக்குமே தெரியும்  ஆஸ்தி , அந்தஸ்து , போன்றவைகளை எண்ணி நாங்கள் உங்கள் காதலை மறுக்கவில்லை. எங்கள் மகன் எங்களுடனே  கடைசீ வரை அன்புடனும் ,பாசத்துடனும்  இருக்கவேண்டும் என்று எண்ணியே காதல் எல்லாம் வேண்டாமே நல்ல பெண்ணாகப் பார்த்து நாங்களே மணமுடித்து வைக்கலாமே என்று எண்ணியே உங்கள் காதலை மறுத்தோம்.

    அப்படியும் நீங்கள் இருவருமே உங்கள் காதலில் உறுதியாக இருப்பதைப் பார்த்து நாங்களாகவே முன்வந்து உங்கள் திருமணத்தை நடத்தி வைத்திருக்கலாம் நாங்கள் மறுக்கவில்லை,

    நீங்களாகவே திருமணத்தை நடத்தியபோது  உன் பெற்றோரும்  நாங்களும்  மனம்விட்டுப் பேசி  உங்கள் திருமணத்தை நிறைவாக நடத்தியிருக்கலாம்.  உங்கள் பெற்றோரும் சம்மதிக்கவில்லை, எது எப்படி இருந்தாலும் என் மகனின்  மகிழ்ச்சியே  எங்கள் மகிழ்ச்சி  என்றுணர்ந்து   எங்கள் மனதைத் தேற்றிக் கொண்டு  நாங்கள் பலமுறை  உன் பெற்றோரிடம் பேச முயலும்போதெல்லாம் எந்தவிதப் பிடிமானமும் கொடுக்காமல் எங்கள் இருவரையும்  பலவிதமான  சொற்களால்  வருந்தச் செய்தார்கள்  உன் பெற்றோர்கள்.

    இதுவரை இந்த செய்தியை உங்கள் மனம் புண்படுமே என்று எண்ணி. உங்கள் இருவரிடமும் கூறாமல் வைத்திருந்தோம். உங்களுக்கு திருமணமாகி  20 ஆண்டுகள் ஆயிற்று நீங்களும்  பெரியவர்களாகி பலவிதமான  அனுபவங்களைப் பெற்றுவிட்டீர்கள் என்றாலும்   எங்களுக்கு குழந்தைகள்  தானே  .

    இங்கே ஒரு முக்கியமான செய்தியைக் கூறவேண்டும்  உங்கள் பெற்றோரும் இதையெல்லாம்  உணர்ந்திருக்கிறார்கள், சமீபத்தில் ஒரு திருமணவிழாவில் அவர்களை எதிர்கொள்ள நேரிட்டது.

    அவர்களுக்கு தயக்கம் நாங்கள் மதித்துப் பேசுவோமா  என்று எங்களுக்குத் தயக்கம்  எல்லோர் முன்னிலையிலும்  மீண்டும் கடுஞ்சொற்களால் அவர்கள் எங்களை அவமானப் படுத்திவிடுவார்களோ  என்று.

    ஆயினும் திடீரென்று உன்  அப்பா மயங்கிக் கீழே விழுந்ததும் நாங்கள் இருவரும் பதறிப் போய் உன் அப்பாவைக் கைத்தாங்கலாய் பிடித்து அவசர கால உதவியாக மருத்துவ மனைக்கு  அழைத்துப் போய் உடனடி வைத்தியம் செய்து  இறைவன் அருளால் உன் அப்பாவும்  ஆபத்திலிருந்து மீண்டார். மருத்துவர் சொன்னார் மிகச் சரியான நேரத்தில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துப் போனோம் அதனால்தான் காப்பாற்ற முடிந்தது என்று , மிகச் சரியான நேரத்தில் எங்களை அங்கே அனுப்பி உன் அப்பாவுக்கு உதவச் செய்த  இறைவனுக்கு நன்றி கூறுகிறோம்.

    ஒரு முக்கியமான செய்தி  உன் பெற்றோரும் நாங்கள் இருவரும் இப்போது ராசியாகி மிக நன்றாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு  ஒருவருக் கொருவர்  அனுசரணையாக பழகி வருகிறோம் . இப்போதுதான் தெரிகிறது  அவர்கள் இருவரும் சற்றேறக் குறைய எங்கள் நிலையிலேதான் இருக்கிறார்கள் என்பது.

    ஆமாம் அவர்களும் உங்கள் இருவரின் பிரிவாலே வாடிக்கொண்டிருக்கிறார்கள், நாங்களும்  வாடிக்கொண்டிருக்கிறோம்.

    எங்களின் வாட்டத்தைப் போக்கவாவது  பழயனவற்றை மறந்து எங்களோடு இணைந்து  மீண்டும்  மகிழ்ச்சியாக வாழ நீங்கள் இருவரும் மனது வைப்பீர்கள்  என்னும்  அல்ப ஆசையோடு  இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

    உண்மையைச் சொன்னால்  கிட்டத்தட்ட  பத்து ஆண்டுகளாக  கணிணியில் எழுதியே பழக்கமாகி விட்டபடியால்  கடிதமெழுத ஆரம்பித்து  சரியாக எழுத முடியாமல் கை நடுக்கத்தாலும்  உங்களைப் பிரிந்த மனம் ஏக்கத்தால்   வந்த நடுக்கத்தாலும்  சுய இரக்கத்தாலும்  பலமுறை  எழுதி எழுதி மனம் திருப்தி கொள்ளாததால்  பல காகிதங்களைக் கிழித்துப் போட்டு  கடைசியில் இந்தக் கடிதத்தை ஒருவழியாக எழுதி முடித்துவிட்டேன்.

    சமீபத்தில் என் நண்பர் வாயிலாக ஒரு செய்தி கேள்விப்பட்டேன் ,அதை உங்களிடம் சொல்ல என் வயதும்  அறிவும் தடுக்கிறது ஆனாலும்  நாங்கள் பெற்ற அனுபவம்  சொல்லத் தூண்டுகிறது

    என்னுடைய பேரன்  தயாநிதியும்  ஒரு பெண்ணுடன்  நட்பு கொண்டிருப்பதாகவும்  காதல் வயப்பட்டிருப்பதாகவும்  ஒரு நண்பர் ஆதாரபூர்வத்துடன்  சொன்னார். அதைக் கேட்டபிறகு  உங்கள் இருவரையும் எச்சரிக்கை செய்யாமல் விட்டுவிட்டால் எங்கள் மனசாட்சி எங்களை உறுத்தும் .ஆகவேதான் இந்தச் செய்தியை உங்களுக்கு நேரில் சொல்ல தயக்கமாய் உள்ளதால்  கடிதம் மூலம் எழுதுகிறேன்.

    இந்தக் காலத்து இளைஞர்கள் நட்பு எது காதல் எது என்று  தெளிவாக இருக்கிறார்கள்  என்றாலும்   நீங்களும்  தயாநிதியை அன்போடு அழைத்து  மனம்விட்டுப் பேசி  அந்தப் பெண்ணுடன் இருப்பது நட்புதானா  அல்லது காதலா  என்பதை அவனையும் உணரச்செய்து  நீங்களும் உணர்ந்து  அதற்குத் தகுந்தவாறு  நட்பானாலும்  காதலானாலும்  வளரவிடுதலோ அல்லது தடை செய்தலோ  எது நல்லது என்று உங்கள் மனதுக்கு  தெரிகிறதோ  அதைத் தெளிவாக குழந்தைகள் மனம் புண்படாதவாறு  செய்யுங்கள்.  எங்களது பேத்தி  இளநகையையும்  கவனத்துடன் பார்த்துக் கொள்ளுங்கள்.

    நாங்கள் பட்ட  கொடுமையான  அனுபவங்கள் உங்களையும் பாதிக்கக் கூடாது  என்னும் நல்ல எண்ணத்தில் எழுதப்பட்ட  இக்கடிதத்தை மதிப்பதோ அல்லது  நிராகரிப்பதோ எல்லாமே  உங்கள்  உரிமை.

    எங்களது பேரனும்  பேத்தியும்   எங்கள்  குழந்தைகளாகிய   நீங்கள் இருவரும் எந்தவித மனக்கிலேசமும் இல்லாமல்  இனிதே வாழ எல்லாம் வல்ல இறைவனைப் ப்ரார்த்திக்கிறோம்

                                                              இப்படிக்கு

                                                           தாத்தா  +  பாட்டி

    Share
  • “ஆணிவேர்”

    தமிழ்த்தேனீ

     

    ரொம்பக் குழப்பம்.. இல்லை இனி குழப்பமே இல்லை, தெளிவுதான், இனி வாழ்க்கையில் எந்தக் கடவுளையும் நம்பப் போவதில்லை, கும்பிடப் போவதே இல்லை தீர்மானமான முடிவுக்கு வந்திருந்தார் சபேசன். ஏன் ஏன் இவ்வளவு விரக்தி. எதனால் வந்தது இப்படி ஒரு நிலை? யோசித்து யோசித்து மனம் வெறுத்துப் போனது அவருக்கு.

    ஆமாம் வாழ்க்கையில் ஒவ்வொரு படி ஏறும் போதும் இறைவா நீயே துணை என்று அவர் கடவுளை நினைக்காத நேரமே இல்லை. காலையில் எழுந்தவுடன் அவர் படுக்கையின் எதிரே இருக்கும் கடவுள் படத்தில் தான் முழிப்பார். அந்தக் கடவுளைப் பாராமல் மற்ற எதையுமே பார்க்க மாட்டார்.

    இரவு படுத்துத் துங்கும்போது மானசீகமாக எல்லாக் கடவுளரையும் கும்பிட்டுவிட்டு உறவினர் அத்துணை பேரையும் மனப்பாடமாக சொல்லி எல்லோரையும் நல்லா வைய்யின்னு வேண்டிக்கிட்டுத்தான் தூங்கப் போவார்.

    ஆன்மீகம் ஆன்மீகம் என்று எப்போதும் ஆன்மீகத்தில் ஆழ்ந்து கடவுளைக் கும்பிட்டு கும்பிட்டு ஒரு சில நேரங்களில் அவருக்கே தோன்றும் நாம் அதிகமாக கடவுளக் கும்பிடுகிறோமோ என்னும் அளவுக்கு கடவுள்களைக் கும்பிட்டு ஆயினும் அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்று நினைத்து என்ன உபயோகம் நடப்பதெல்லாம் பார்க்கப் பார்க்க மனம் வெறுத்துப் போயிற்று அவருக்கு.

    அவருக்கு என்ன தகுதி இருக்கிறது, என்று எங்குமே யாருமே பார்க்கவில்லை. எங்கே போனாலும் கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள் அவரைக் கேவலமாகப் பார்ப்பதும். அவரை மட்டும் மட்டம் தட்டுவதுமாகவே வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது.

    கடவுளைத் திட்டுபவன், கடவுளை மறுப்பவன் எல்லா இட்த்திலும் முன்னே இருக்கிறான், அவந்தான் முன்னுக்கு வருகிறான். கடவுளரின் கோயில்களிலே கொள்ளை அடிப்பவர்கள் உயர் பதவியிலே இருக்கிறார்கள். கடவுளுடைய கோயிலைக் கொள்ளை அடிப்பவர்களைக் கூட தண்டிக்காமல் கடவுள் வெறுமனே இருக்கிறான். என்ன ஆயிற்று?

    அவனுக்கென்று ஏற்படுத்தி வைத்திருக்கும் உண்டியலை ஒருவன் உடைத்து பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு போகிறான். அந்த உண்டியலைக் காவல் காக்க இருக்கும் கவலரைக் கொலை செய்துவிட்டு, இத்தனையையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறானே கடவுள். கடவுளுக்கே சக்தி போய் விட்டதா? எல்லோரையுமே காக்கும் சக்தி கொண்ட கடவுளுக்கு தன்னைத் தானே காத்துக்கொள்ளும் வலிமை கூட குன்றிப் போய்விட்டதா?

    காலமெல்லாம் இறைவா!.. இறைவா!.. என்று வேண்டிக் கொள்ளும் பக்தர்களுக்கு கூட கருணை காட்டாமல், யார் அதிகமாகப் பணம் கொடுக்கிறானோ அவனுக்கு எல்லா வித வசதிகளும் செய்து கொடுத்து தன்னருகே நிற்க வைத்து மாலை போட்டு, அருளுகிறானே.

    கோயில்களிலும் அதிகமாகப் பணம் யார் கொடுக்கிறார்களோ அவருக்குத்தானே முதல் மரியாதை கிடைக்கிறது? பணம் இருந்தால் எப்படிப் பட்ட குற்றத்தையும், கொலைகளையும் செய்துவிட்டு சுதந்திரமாக இருக்கிறான் மனிதன்.

    ஒரு வேளை கடவுளுக்கே புரிந்துவிட்டது போலும் உலகத்திலே பணம்.. பணம்.. பணம் அது இல்லாவிடில் மதிப்பே கிடையாது என்று. ஒவ்வொரு இடத்திலும் நியாயமாக அவருக்கு கிடைக்க வேண்டிய பதவிகளையும், மரியாதையையும் எந்தத் தகுதியும் இல்லாதவருக்கே கொடுத்து, அந்தத் தகுதி இல்லாத மனிதர்கள் இவரையே கேவலமாகப் பார்த்து எள்ளி நகையாடச் செய்கிறானே, எந்த இடத்துக்குச் சென்றாலும் பாதகம் செய்யும் மனிதர்களுக்கே பதவியும் மரியாதையும் தந்து உண்மையான பக்தி செய்பவரை அவமானப் படுத்துகிறானே. இப்படி இருந்தால் எப்படி பக்தி வளரும், எப்படிக் கடவுளை மக்கள் நம்புவார்கள். அவருக்கு சுத்தமாகவே நம்பிக்கை போய்விட்டது. கடைசீ வரையில் எல்லாம் உனக்குத்தான் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு ஒரே அடியாக அடித்துக் கீழே தள்ளி அதள பாதாளம் வரையில் அழுத்தி மேலே சுற்றிலும் மற்றவர்கள் நின்று அவரை ஏளனப் படுத்தி கெக்கெலி கொட்டிச் சிரிக்க வைக்கிறானே.

    இனி இவனை எப்படி நம்புவது. நாம் எடுத்த முடிவுதான் மிகச் சிறந்த முடிவு. இனி இந்தக் கடவுளை நம்பப் போவதில்லை.கும்பிடப் போவதில்லை. தீர்மானமாக முடிவெடுத்து நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தார் சபேசன்.

    சொல்லி வைத்தாற்போல் மறு நாளிலிருந்து அவருக்கு வாழ்க்கையில் எல்லாமே வெற்றிகள்தான், ஆமாம் எங்கோ செல்பவர் கூட வலிய வந்து அவருக்கு உதவி அவருடைய எல்லாக் காரியங்களிலும் அவருக்கே வெற்றி வர வழி செய்கிறார்கள். அப்பாடா ! சரியான நேரத்தில் மிகச் சரியான முடிவெடுத்தோம். இனி இந்தக் கடவுள் வேண்டாம் நம்முடைய மன உறுதியே போதும். அவருக்கு மனம் மிகத் தெளிவாக இருந்தது.

    அன்று அவருடைய ஆத்ம நண்பர் வெங்கடாசலம் வருகிறான். இன்று முழுவதும் அவனோடு கழிக்க வேண்டும். ஆமாம் மனதிலே உற்சாகம், எடுத்த காரியம் யாவினும் வெற்றி. இனி என்ன வேண்டும்

    என்ன சபேசன் நல்லா இருக்கியா என்று கேட்டபடி வந்தார் வெங்கடேசன்.
    வா வா நல்லா இருக்கேன்,எனக்கென்ன குறைச்சல் இந்தக் கடவுளோட அருளே வேண்டாம்னு என்னிக்கு முடிவெடுத்தேனோ அன்னிலேருந்து நல்லா இருக்கேன் என்றார். என்ன சபேசன் என்ன ஆச்சு உனக்கு. ஏன் இப்பிடிப் பேசறே என்றார் வெங்கடேசன்.

    பேச்சு மட்டும் இல்லே, இனி எல்லா செயலும் என்னை நம்பித்தான், இனி எந்தக் கடவுளையும் நம்பப் போவதில்லைன்னு தீர்மானமே எடுத்துட்டேன். அதான் இப்போ நல்லா இருக்கேன் என்றார்.

    அன்று இருவரும் மிக மகிழ்ச்சியோடு அவர்களுடைய இளமைப் பருவங்களையும் நினைத்து ,அதைப் பற்றி விவாதித்து பலவகை உணவுகளை உண்டு மகிழ்ச்சியாக இருந்தனர், மாலை ஐந்து மணி சரி சபேசா நான் இன்னிக்கு ரொம்ப நாள் கழிச்சு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தேன், அதுவும் என்னோட எல்லா வேலைகளையும் ஒதுக்கிட்டு இவ்ளோ நேரம் மகிழ்ச்சியா பேசிகிட்டு இருந்தியே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி , சரி நான் கிளம்பறேன் என்றவர்,

    சபேசனையே அவரையே உற்றுப் பார்த்து, சபேசன் என் மனசிலே ஒண்ணு தோணுது அதைச் சொல்லிட்டுப் போறேன். இப்போ நீ எல்லாக் காரியத்திலேயும் வெற்றி அடையறே, மகிழ்ச்சியா இருக்கே. இதுக்கெல்லாம் நீ கடவுளை நம்பாம அவரைக் கும்பிடாம இருக்கியே அதுதான் காரணம்னு நெனைக்கிறியா?

    ஒரு வேளை இவ்வளவு நாள் பக்தியா கடவுளைக் கும்பிட்டியே அதனோட விளவாக் கூட இருக்கலாம் இல்லையா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், விதை போட்ட உடனே பலன் வருமா. அந்த விதை செடியா வளர்ந்து மரமா ஆகி அதுக்கப்புறம் பூத்துக் காய்ச்சு அதுக்குப் பின்னாடிதானே கனியாப் பலன் தருது

    நல்ல கனியற நேரத்திலே நீ தப்பான முடிவெடுத்துட்டு, அந்தத் தப்பான முடிவுனாலேதான் இந்தக் கனி எனக்கு கிடைச்சிருக்குன்னு நெனைக்கிறியோன்னு எனக்கு தோணுது.

    சரி எப்பிடி இருந்தாலும் நீ நம்பினாலும் நம்பாம இருந்தாலும் கடவுளுக்கு ஒரு நஷ்டமும் இல்லே, என்னைப் பொறுத்த வரை நீ நல்லா இருந்தா எனக்கு அது போதும். கடவுள் இருக்கா இல்லையான்னு எனக்கும் தெரியலே, ஆனா ஒண்ணு மட்டும் எனக்கு புரியுது. எனக்கு கடவுளை விட நீதான், உன்னோட நட்புதான் முக்கியம், உன்னோட நலன்தான் முக்கியம், சரி நான் வரேன் என்றபடி கிளம்பினார்… வெங்கடேசன்..

    மறுபடியும் குழம்ப ஆரம்பித்தார்!…சபேசன்

    Share
  • மார்கழிப் பூவும் வைகுந்த வாசற்படியும்

    தமிழ்த்தேனீ

    மாதங்களில்  சிறந்தது  மார்கழி படிகளில் சிறந்தது  வைகுண்ட வாசற்படி

    “படியாய்க் கிடந்து உன் பவள வாய்க் காண்பேனோ”  என்று பாடிய

    குலசேகர ஆழ்வார்  இவரது பெருமை பேசும்போதெல்லாம்

    ‘குஷ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரா தினே தினே, நமஹம் சிரஸா நமாமி ராஜானம் குலசேகரம்’’ என்ற வடமொழி ஸ்லோகம் வர்ணிக்கிறது.

    ஆண்டாளை அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்த பெரியாழ்வாரைப் போல, குலசேகராழ்வாரும் தன் பெண்ணை கொடுத்து, அரங்கனுக்கே மாமனார் ஆனார்! ‘‘ஸ்வசுரம் அமரவர்த்யம் ரங்கராதஸ்ய ஸாட்சார்’’ என்று பெரியாழ்வாரை சொல்வார்கள். அதாவது, ‘‘தேவர்களால் வணங்கப் பெற்ற, சாட்சாத் அரங்கனுடைய மாமனாரான பெரியாழ்வாரை வணங்குகிறேன்’’

    அரங்கனையே நாடவேண்டும் என்று கூறும்படியாக ‘இருளிரிய’ என்கிற 10 பாட்டுக்களால் வழங்கினார். எம்பெருமானை கண்ணனாக அனுபவித்து ‘படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே’ என்று அருளிச் செய்ததன் மூலம் 5 ம் லட்சணத்தை வெளியிட்டார்.

     மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்று பகவத் கீதையில் கண்ணன் அருளியிருக்கிறார். மார்கழி மாதம் சனிக்கிழமை பிறக்கிறது.  தட்சிணாயனத்தின் கடைசி மாதமாக விளங்கும் மார்கழி மாதத்தின் பெருமைகளையும் வைகுண்ட ஏகாதசியின் பெருமைகளையும் தெரிந்து கொள்வோம்.

    சூரியனுடைய சுற்று வட்டப் பாதையை  இரண்டு விதமாக பிரித்திருக்கிறார்கள்,  ஒன்று ஆடி மாதம் முதற்கொண்டு    ஆவணி ,புரட்டாசி  ,ஐப்பசி, கார்த்திகை  மார்கழி  மாதங்கள் சூரியனுடைய  சுற்று  தெற்கு  திசையாக  கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி  சஞ்சரிக்கும் காலம்  ,இதை தக்ஷிணாயணம்  என்று கூறுவர்.

    அதேபோல் தைமாதம் முதல் ,  மாசி, பங்குனி,சித்திரை, வைகாசி, ஆனிவரை  சூரியனின் சுற்று  வடக்கு திசையாக  கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சஞ்ஜரிக்கும்  காலம்

    ைபமுற்ற் ,உத்திராயணம் என்று சொல்வர்.   இப்படிப் பார்க்கும் போது ஆடி , புரட்டாசி ஆவணி ,  ஐப்பசியின் ,கார்த்திகை,  மார்கழி

     மார்கழி மாதம் 1ம் தேதி முதல்  10ம் தேதி வரை  பகல் பத்து , 11ம் தேதி முதல் 20 ம் தேதி வரை ராப்பத்து சுக்லபக்‌ஷ ஏகாதசியான 11ம் தேதி மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று போற்றுவர். இந்நாளில் வைணவத் திருத்தலங்களில் பரமபதவாசல்  (சொர்க்க வாசல்) திறப்பு வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும். பெருமாள், பரமபத வாசல் சந்நதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவார். பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, இராபத்து உற்சவமாக வெகு சிறப்பாக நடைபெறும். இராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் சந்நதி திறப்பு விழா நடைபெறும்.

    இந்த வைகுண்ட வாசல்  வழியாக பரமபத பெருமான் காட்சி கொடுப்பதும்  அப்போது  அவனை சேவித்து அந்த வைகுண்ட வாசற்படி வழியாக நாமும் வந்தால் பரம்பதமான ,வைகுண்டத்தை சொர்கத்தை நாமும் அடைவோம்.

     வைகுண்டத்தின் துவாரபாலகர்களாகிய  ஜெய விஜய  என்னும் இருவரும் வைகுந்த வாசலை  மூடினர். இதனைக் கண்ட பெருமாள் காவலர்களிடம் ‘‘வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு கலியுகத்தில் கலையுகத்திலே பாவங்கள் பெருகும் யாருமே வைகுந்த வாசலை அடையப் போவதில்லை ஆகவே மூடினோம் என்று பதிலுரைத்தார்கள்.

    ஶ்ரீமன் நாராயணன்  அப்படி இல்லை கலியுகத்திலே பாவங்கள் பெருகினாலும்  பக்தியும் ஆத்திகமும் புண்ணியங்களும்  பெருகும் அதனால் திறந்து வையுங்கள் வைகுண்ட வாயிலை என்று .இப்படி ஶ்ரீமன் நாராயணன்  அருளிய தினம் , மார்கழி மாத  சுக்லபட்ச ஏகாதசி  என்பது புராண வரலாறு ,ஆகவே  வைணவ ஏகாதசி அன்று சாஸ்திர சம்பிரதாயப்படி விரதம் கடைப்பிடித்து பெருமானை வழிபடும் பக்தர்களுக்கு நிச்சயம் வைகுண்டத்தில் இடம் உண்டு .

     அப்படி இருந்த நிலையில் கலியுகத்திலே முதன் முதலாக வைகுந்தம் ஏகியவர் நம்மாழ்வார்.   நம்மாழ்வார் முக்தி அடைந்த அன்று, அது திறக்கப்பட்டது. இதனை அறிந்த நம்மாழ்வார், பெருமாளிடம் ‘எனக்கு மட்டும் வைகுண்ட வாசலைத் திறந்தால் போதாது.  என்னைத் தொடர்ந்து  தங்கள் மீது பக்தி செலுத்தும் அனைத்து பக்தர்களுக்காகவும் வைகுண்டவாசல் திறக்கப்பட வேண்டும்’ என்று வேண்டவே, பெருமாள், நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில்  சொர்க்க வாசல் திறக்க வழி செய்தார். அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது.

    திருமங்கை ஆழ்வாரின் திருப்பணியிலே மனம் மகிழ்ந்த அரங்கன்  அவர்முன்  தோன்றி  என்ன வரம் வேண்டும் என்று கேட்கவே  திருமங்கை ஆழ்வார்  நம்மாழ்வார் பரமபதம் அடைந்த  நாளான  மார்கழி வளர்பிறை ஏகாதசியை பெருநாளாகக் கொண்டாடவேண்டும் என்று வேண்டிக் கொண்டாராம் .நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்காக திருவிழா  நடைபெற  அருள வேண்டும்  என்று வேண்டிக் கொண்டாராம்  அதை ரங்கநாதர் அருளினார். அதன்படித்தான்  ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.

    பூலோக வைகுந்தம் என்னும் பேறு பெற்ற ஶ்ரீரங்கத்தில் இந்த வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பாக நடைபெறும்,அது போல திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமானின் கோயிலிலும் இன்னும் பல வைணவத் திவ்ய தேசங்களிலும் வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பாக்க் கொண்டாடப் படுகிறது

    வைணவக் கோயில்களில் பரமபதவாசல் என்று ஒரு சந்நதி இருக்கும். இந்த வாசல், வடக்கு நோக்கி இருப்பதைக் காணலாம்.  இது மூடப்பட்டே இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி  அன்று மட்டும் இந்தக் கதவுகள் திறக்கப்படும். இந்த வாசல் வழியாக அன்று பெருமாள் பிரவேசிக்கும்போது, பக்தர்கள் பின்தொடர்ந்து செல்வார்கள். இதனால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ஸ்ரீரங்கத்துக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.

    புதுக்கோட்டையிலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் இருக்கும் திருமயம் திருத்தலத்தில் ஏகாதசி திதியையொட்டி வரும் பரணி நட்சத்திரத்தன்றுதான் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. புகழ் பெற்ற திருமலை திருப்பதியில் சொர்க்க வாசல் சந்நதி என்று தனியே கிடையாது. அதற்கு பதில் வைகுண்ட ஏகாதசி திதியை முன்னிட்டு ‘முக்கோடி பிரதட்சண வாசல்’ திறப்பு விழா நடைபெறும். திருமலையில் எழுந்தருளியிருக்கும் வேங்கடவனைத்  தரிசித்த பின்னர் வெளியில் வந்தால் காணப்படும் பிராகாரத்தை விமான பிரதட்சண பிராகாரம்’ என்பார்கள்.

    இந்த பிராகாரத்துக்கும் வேங்கடவன் அருள்புரியும் மூலஸ்தானத்துக்கும் நடுவில் ஒரு பிராகாரம் உள்ளது. இது திருமலையில் மட்டுமே உள்ள அபூர்வமான பிராகாரம். இப்பிராகாரத்தை  வலம் வந்தால் மகா புண்ணியம் கிட்டும். வேங்கடவனைத் தரிசித்து, வாயிலைக் கடந்ததும் இருப்பது ஸ்நபன மண்டபம். இதையடுத்து ராமர் மேடை உள்ளது. இதற்கு இடப்பக்கம்  ஆரம்பித்து, மூலவரான வேங்கடாசலபதியை வலம் வந்து உண்டியல் இருக்கும் இடத்தை அடைகிறோம். இப்பகுதி, ‘முக்கோடி பிரதட்சண  பிராகாரம்’ ஆகும்.

    இந்தப் பிராகாரம் வருடத்தில் மூன்று நாட்கள் அதாவது, மார்கழி மாத வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளான தசமித் திருநாள் முதல் துவாதசித் திருநாள்வரை திறந்திருக்கும். திருமலையில் முக்கோடி பிரதட்சணம், சொர்க்க வாசலுக்குச் சமமாகக் கருதப்படுகிறது. கேரளாவில் வைகுண்ட ஏகாதசியை ‘விருச்சிக ஏகாதசி’ என்று போற்றுவர். குருவாயூர் கோயிலில் இந்த விழாவை பதினெட்டு நாட்கள்  கொண்டாடுவர். இதையொட்டி தீபஸ்தம்பங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டு, சொர்க்க லோகம்போல் கோயில் காட்சி தரும். மேலும் ஏகாதசியன்று அதிகாலை 3-30 மணி முதல் மறுநாள் துவாதசி வரை கோயில் திறந்தே இருக்கும்.

    விருச்சிக ஏகாதசியையொட்டி,  அதிகாலையில் குருவாயூரப்பனை தரிசிப்பது சொர்க்கவாசல் வைபவத்துக்குச் சமமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான வைணவத் திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசி அன்று விடியற்காலையில் 4-15 மணிக்கு சொர்க்க வாசல் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால், சில கோயில்களில் சொர்க்க வாசல் கிடையாது; ஆனால், வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறும். கும்பகோணம் சார்ங்கபாணி திருக்கோயில், திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீ காட்ச பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி கிடையாது. அங்கு தட்சிணாயனம், உத்தராயணம் என்று இரண்டு வாசல்கள் உள்ளன.

    ஒன்று ஆடி முதல் மார்கழி வரை திறந்திருக்கும்; மற்றொன்று தை முதல் ஆனி வரை திறந்திருக்கும். எனவே, இங்கு சொர்க்க வாசல் நிகழ்ச்சி கிடையாது. ஆதிசேஷன் அவதாரமாகக் கருதப்படும் ராமானுஜர் அவதரித்ததால், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில், நித்ய சொர்க்க வாசல் திருத்தலமாகக் கருதப்படுகிறது. அதனால் இங்கும் சொர்க்கவாசல் நிகழ்ச்சி இல்லை. இங்கு வைகுண்ட ஏகாதசி அன்று ஆதிகேசவர், ராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருள் வார்கள்.

    அவ்வேளையில் சொர்க்க வாசல் திறப்பதுபோல் இங்குள்ள மணிக்கதவை (சந்நதிக் கதவை) திறப்பர். கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப் பட்டணம் ரங்கநாதர் கோயிலில் தைப் பொங்கல் அன்று தான் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. சாஸ்திர சம்பிரதாயப்படி வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் கடைப்பிடித்து பெருமாளைத் தரிசித்தால் வைகுண்டத்தில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வைகறைப் பொழுதான மார்கழி, தேவர்களை வழிபடுவதற்கு மிகப் பொருத்தமான மாதம் என்பது இந்த மாதத்தின் சிறப்பாகும். மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். இந்த ஒருநாளின் வைகறைப் பொழுதாக மார்கழி அமைகிறது. உடல் சுறுசுறுப்பும், உள்ளத் தெளிவும் நிறைந்த வைகறைக் காலை வழிபாடு எப்போதும் சிறந்தது.

    பிரம்ம முகூர்த்தம்  அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. வழிபாட்டுக்கு ஏற்ற காலமும் இதுவே. இந்த நேரத்தில் ஓசோன் வாயு நில உலகத்தில் மென்மையாகப் படர்ந்து பரவுகிறது. இது உடலுக்கு நலம் தரும்; புத்துணர்ச்சி தரும். உள்ளத்துக்கு இதம் தரும்; புதுக் கிளர்ச்சி தரும். மார்கழி விடியற்காலையில், ஓசோன் வாயு நிலவுலகத்தில் சற்று அதிகமாகப் பரவுகிறது. இதன் காரணமாகவே பண்டைய தமிழர்கள் மார்கழி விடியற் காலையில் நோன்பிருந்து இறைவனை வணங்கினர்.

    சரணாகதி தத்துவம் :-

    மார்கழி மாதத்திற்கு சூன்ய மாதம் என்ற பெயரும் உண்டு சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்.

    மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்’ என்று வடமொழியில் சொல்வர். ‘மார்கம்” என்றால், வழி – “சீர்ஷம்’ என்றால், உயர்ந்த – “வழிகளுக்குள் தலைசிறந்தது’ என்பது இதன் பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. “உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; நீ வந்து என்னை ஆட்கொள்…’ என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், திருமாலைச் சரணடைந்தாள்.

    மருத்துவ நூல்களில் மார்கழியைப் பீடை மாதம் என்று குறிப்பிடுகின்றன.மார்கழியின் பனிக்குளிர்ச்சி சிலருக்கு நோய்த் துன்பங்களைத் தரலாம். எனவே, இது பீடை மாதமாகலாம். பீடு-பெருமை. பன்னிரு மாதங்களில் மிக்க பெருமையை உடையது பீடை மாதம் என்று மற்றொரு பொருளும் கூறலாம். பல காரணங்களால் மார்கழி பெருமையுடைய மாதம்.

    மார்கழிப் பாடல்கள் :-

    திருப்பாவை ஆண்டாள் இயற்றியது வைணவத் தொடர்புடையது. திருவெம்பாவை மாணிக்கவாசகர் இயற்றியது; சைவத் தொடர்புடையது. இந்த  இரண்டும் பாவை நோன்பு அல்லது மார்கழி நோன்பினைப் பாடுகின்றன.

    மார்கழியில், திருப்பாவை, திருவெம்பாவை, தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருப்பள்ளி எழுச்சி, மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளி எழுச்சி ஆகிய நான்கு நூற்பாடல்களை வீடுகளிலும், கோயில்களிலும் பாராயணம் செய்கின்றனர். மார்கழியில், சிறப்பாக பாராயணம் செய்ய வேண்டும் என்ற பெருமை இந்த நான்கு நூல்களுக்கே உண்டு.இவை தவிர வைணவக் கோயில்கள் சிலவற்றில் மார்கழியில் ராப்பத்து, பகல் பத்து என்ற முறையில் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதையும் பாராயணம் செய்கின்றனர்.

    நல்ல வாழ்க்கைத்துணை :-

    மார்கழி நோன்பு முழுக்க முழுக்க கன்னிப்பெண்களுக்கே உரியது. விடியலுக்கு முன் எழுந்து ஆற்றில் நீராடி நல்ல கணவன் கிடைக்க பாவை நோன்பு நோற்கின்றனர். பாவையை, வைணவக் கன்னியர்கள் கவுரி தேவியாகவும், சைவக் கன்னியர்கள் பார்வதி தேவியாகவும் போற்றி வழிபடுகின்றனர். பாவைப் பாடல்களைப் பாடி வணங்குகின்றனர்.

    வாசல் நிறையும் கோலங்கள்.  மார்கழி மாதம் வந்து விட்டாலே இளம் பெண்கள் வாசலை அடைத்து தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரித்து கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர். விளக்கேற்றுகின்றனர்.

    பூசணிப் பூவின் மஞ்சள் நிறம், மங்கலத்தின் சின்னம். கோலத்தின் வெண்மை-பிரம்மன்; சாணத்தின் பசுமை-விஷ்ணு; செம்மண்ணின் செம்மை-சிவன். முற்றத்திலுள்ள வண்ணங்கள் மூன்றும் மும்மூர்த்திகளை நினைவுபடுத்துகின்றன. மார்கழி மாதத்தில் எங்கும் பக்தி; எதிலும் தெய்வீகம் இவை அனைத்தும் இந்த மாதத்தின் சிறப்புகளாகும்.

    திருவாடிப் பூரத்தில் உதித்து மார்கழியில்  திருப்பாவை பாடிய எங்கள் ஆழ்வார் ஆண்டாளைப்பற்றி நினைக்காமல் இருக்க முடியுமா இந்த  மார்கழி மாதத்தில் . அதுவும் வைகுந்த ஏகாதசித் திருநாளில் .

    நல்ல வாக்கைத் துணை அரங்கனே என்றுணர்ந்து   அரங்க தோளில் சார்த்தும்போது அரங்கனுக்கு  எந்த உறுத்தலும் இருக்கக் கூடாதே என்று கவலைப்பட்டு ஒரு முறை தான் அந்த மாலையை அணிந்து தோஷமில்லாமல் இருக்கிறது என்று உணர்ந்து  அதன் பின்னே  அரங்கனுக்கு  மாலை சாற்றிய ஆண்டாள் போற்றிய மாதமல்லாவா மார்கழி மாதம்.

    ஆகவே இந்த மார்கழி மாதம் வைகுந்த ஏகாதசித் திருநாளில் விடியற்காலையில் எழுந்து குளித்து  திருக்கோயிலை  அடைந்து பரமபத வாசல் வழியே  நமக்கு அருளும் அவனைச் சேவித்து  பரமன் துதி பாடி  நாமும் அந்த வைகுந்தம் அடையும் நற்பேற்றைப் பெறலாமே.

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    Share
  • “யார் குழந்தை”

    தமிழ்த்தேனீ

     

    2014ம் ஆண்டு பிறக்கிறது, இந்த வருடம் ஜனவரி மாதம் 1ம் தேதியிலிருந்து அவருக்கு 63 வயது முடிந்து 64 ம் வயது ஆரம்பமாகிறது. புது வருட வாழ்த்துக்கள் அவருடைய தொலைபேசியிலும் இணையதள  மடல்களிலும் நிரம்பி வழிகின்றன  அத்துடன் சேர்த்து  அவருடைய பிறந்த நாளுக்கும்  சேர்த்து வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும்  வேலையிலிருந்து ஓய்வு பெற முடியவில்லை, அவர்   வியாபாரம் ஓஹோவென்று ஓடிக்கொண்டிருக்கிறது.

    வாழ்க்கையின் ஒவ்வொரு துளி ஸ்வாரஸ்யத்தையும் அனுபவிக்க முடியாமல் பணம் பணம் என்று அதன் பின்னால் அலைந்து குரங்கின் கையில் பிடித்த பாம்பாய்  விட முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர். விட்டால் வியாபாரம் என்னும் பாம்பு ஒரே போடாகப் போட்டுவிடும் அபாயம் இருக்கிறது.

    பேரக் குழந்தை பிறந்தவுடன் பார்த்தது. இப்போது அதற்கு மூன்று வயதாகிறது. பிறந்த  குழந்தையை இன்னும் வந்து பார்க்கவில்லை என்கிற குறை மகனுக்கும் மருமகளுக்கும்.

    இந்த முறையும் ஒரே நாள்தான் குழந்தையுடன் இருக்க முடியும். என்ன செய்யறது  அவர் வேலை அப்படி. மாதக் கணக்காய் வெளிநாடுகளில் சுற்றி சுற்றி இந்தியாவுக்கு வருவதே  அபூர்வமாகி இருக்கிறது.

    அவருக்கே வெறுப்பாய் இருந்தது, என்ன வாழ்க்கை இது நாமபாட்டுக்கு பேரப் பிள்ளைகளுடன் விளையாடினோமா, ராத்திரி பேரனின் பக்கத்திலே படுத்து அணைத்துக் கொண்டு தலையைக் கோதிவிட்டுக் கொண்டே கதை சொல்லி குழந்தை தூங்கியவுடன் நன்றாகப் போர்த்திவிட்டு,

    ஹூம்ம் இதெல்லாம் நமக்கு கிடைக்காத சொர்கங்கள், நினைத்துப் பெருமூச்சு விடத்தான் முடியும்   என்று நினைத்துக் கொண்டார். மனிதர்களுக்கு எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சைதானே

    ஒவ்வொருத்தர் ஒவ்வொன்றிற்கு அதுவும் கிடைக்காத மறு பக்கத்துக்கு ஏங்கிக் கொண்டேதான் வாழுகின்றனர்  என்று நினைத்தவருக்கு சிரிப்பு வந்தது.  ஏதோ இப்போதாவது பேரனைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்ததே. இதோ ஆயிற்று இன்னும் சிறிது நேரத்தில் இந்தியாவில் தரையிறங்கி விடுவோம். விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரப் பயணம்.

    இமிக்ரேஷன் முடிந்தவுடன் லக்கேஜை எடுத்துக் கொண்டு  வெளியே போக வேண்டும் . அடிக்கடி பயணம் செய்யும் அவரை அடையாளம் கண்டு ஹலொ சார் நலமா என்று விசாரிக்கும் இமிக்ரேஷன் அதிகாரியிடம் நாங்கள் நலமே நீங்க நல்லா இருக்கீங்களா என்று விசாரித்துவிட்டு

    வெளியே வந்தார் , தூரத்தில் மகனும் மருமகளும் பேரனும் நின்று கையை ஆட்டுவது தெரிந்ததும் உற்சாகமானார்.   வாங்கப்பா ப்ரயாணமெல்லாம் சௌகர்யமா இருந்துதா என்றாள் மருமகள்

    நல்லா இருந்துதும்மா, குட்  எப்பிடி இருக்கேம்மா , எப்பிடிப்பா இருக்கே டேய் குட்டிப் பையா  எப்பிடி இருக்கே என்றார். பதிலே சொல்லாமல் அவரையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது குழந்தை.

    என்னடா அப்பிடிப் பாக்கறே  நான் உன்னோட தாத்தாடா, என்கிட்ட வா  என்று அழைத்தார் வாஞ்சையுடன்  வத மாட்டேன்  எனக்கு உன்னைப் பிதிக்கலே   என்றது குழந்தை.

    அப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது தாத்தாவை என்றான் மகன்

    அது குழந்தைடா  அதுக்கு என்ன தெரியும்   ஏதோ சொல்லுது அதைப் போயி பெரிசா எடுத்துக்க முடியுமா என்று வாய் கூறினாலும்  மனம் துணுக்கென்றது.

    என்னது இந்தக் குழந்தை இப்பிடிப் பேசுகிறது என்று எண்ணிக் கொண்டே காரில் உட்கார்ந்தவர்.  சரிப்பா   எப்பிடிப் போகுது உங்க ஆபீசெல்லாம்  என்றார்.  நல்லாப் போகுதுப்பா, ஆனா ரெஸ்டே இல்லே  எப்போ பாத்தாலும்   வேலை வேலைன்னு ஓடவேண்டி இருக்கு .  ஓ அப்பிடியா  என்னம்மா   உனக்கு எப்பிடிப் போகுது வேலை  டீச்சர் வேலை போரடிக்குதா     என்றார்

    இல்லேப்பா  நல்லா போகுது    நாங்க ரெண்டு பேரும் சேந்து எங்கேயும் வெளியே போக முடியலே.  சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமை கூட  டியூஷன் வெச்சிருக்கேன் நாற்பது பசங்க படிக்கறாங்க.

    இப்போ இருக்கற காலத்திலே ரெண்டு பேரும் வேலை செஞ்சு சம்பாதிச்சாதானேப்பா முடியுது  இருந்தாலும் எனக்கு  நல்லாத்தான் பொழுது போகுது  என்றாள்.

    பின்னாடி இருக்கையிலிருந்து இவரையே பார்த்துக் கொண்டிருந்த பேரன்  நீங்க எப்போ ஊருக்குப் போகப் போறீங்க  என்றான்

    மீண்டும் துணுக்கென்றது அவருக்கு  சமாளித்து இதோ பாரு தாத்தா  உனக்கு  ரொம்பப் பிடிக்குமே   ஸ்பைடர் மேன் பொம்மை அது வாங்கிண்டு வந்திருக்கேன். வீட்டுக்குப் போனதும் பெட்டிலேருந்து எடுத்து தரேன்  என்றார்

    சரி  என்று ஒற்றைச் சொல்லோடு  நிறுத்திக்கொண்டு  அவரையே பார்த்துக் கொண்டிருந்த பேரனை எப்படி சமாளிக்கப் போகிறோம்  என்கிற கவலை அவருக்குள் புகை வளையமாய்ச் சுழன்றது.   வரும்போதே   எப்போ போகப் போறேன்னு கேக்குதே  இது .

    நினைத்துக் கொண்டிருக்கும் போதே பின்னாலிருந்து அவருடைய முடியைப் பிடித்து வேகமாய் இழுத்தது. வலி தாங்க முடியாமல் அப்பிடியெல்லாம் செய்யக் கூடாது  கையை எடு என்றார்.  அவருடைய பிள்ளை  காரோட்டிக் கொண்டே  அனிருத் கையை எடு என்றான்

    பின்னாலிருந்து மருமகள் ஏன் அனிருத் இப்பிடி செய்யறே  தப்பும்மா  என்றபடி  அவருடைய  முடியிலிருந்து குழந்தையின் விரலைப் பிரித்து எடுத்தாள்.

    தாத்தாக்கு வலிக்கும்   தாத்தா கிட்டே சாரி சொல்லு என்றாள் , வலிக்கட்டும்  நன்னா வலிக்கட்டும்  சாரி சொல்லமாத்தேன்  என்றான் அனிருத்.

    சரி விடும்மா  அது குழந்தை அதுக்கு என்னா தெரியும் குழந்தையை திட்டாதே  என்றாலும்  அவருக்குள் ஒரு பயமே வந்தது.இந்தக் குழந்தையை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று

    ஆயிற்று வீட்டுக்குப் போய் மருமகள் கையால் சமைத்த வீட்டுச் சாப்பாட்டை ஒரு கைபார்த்துவிட்டு முதலில்  பெட்டியிலிருந்து  ஸ்பைடர் மேன் பொம்மையை எடுத்து  குழந்தை அனிருத்திடம் கொடுத்துவிட்டு , தூக்கம் கண்களைச் சுழற்றவே அப்படியே  தூங்கிப் போனார்

    திடீரென்று இரண்டு மணிக்கு சந்திரகாந்தை  தொடர்பு கொள்கிறேன் என்று கூறியது நினைவுக்கு வரவே   திடுக்கிட்டு எழுந்து  செல் போனைத் தேடினார் கிடைக்கவில்லை.  எங்கே வைத்தோம் தூங்கும் போது தலைமாட்டிலேதானே வைத்துக் கொண்டு தூங்கினோம் என்று எல்லா இடத்திலேயும் தேட கிடைக்கவே இல்லை.

    சந்திர காந்தின் எண்ணும் நினைவில்லை  வர வர  மூளையில் ஒன்றுமே இல்லை   சொந்த மூளையை   தொலைபேசிக்குள்ளும்  கணிணிக்குள்ளும் அடமானம் வைத்தாயிற்று.  இப்போது என்ன செய்வது என்றே புரியவில்லை.

    டைரியை   கணிணியை உயிர்ப்பித்து அதில் சந்திரகாந்த் என்று தேட  அட நல்ல வேளை  இதில் பதிந்திருக்கிறோம் . எண்களைக் குறித்துக்கொண்டு  மகனின் தொலைபேசியில்  சந்திர காந்தை தொடர்பு கொண்டார்

    ஆமாம் சந்திரா  நான் மூணு மணிக்கு அங்கே வந்துடறேன்.  நம்ம சந்திப்பு அரைமணி நேரம்தான்.  எனக்கு மாலை ஆறு மணிக்கு மறுபடியும் ஃப்ளைட்   சரி நான் தாஜ் கோரமண்டலுக்கு  வந்துடறேன் என்றபடி  தொலைபேசியை  மகனிடம் கொடுத்தார்

    இப்போ என்னா செய்யறது என்னோட தொலைபேசியிலேதான் எல்லா எண்ணும் இருக்கு  என்று மறுபடியும் தேடிப் பார்க்கலாம் என்று மகன் மருமகள்  ஆளுக்கொரு மூலையில்  தேடி  ஒரு வழியாக  அவர் படுத்துக் கொண்டிருந்த  சோபாவின் அடியிலே விழுந்து கிடந்த போனைக் கண்டு பிடித்தவுடன் அப்பாடா என்று இருந்தது  அவருக்கு.

    சரிப்பா நான் கிளம்பறேன்  நல்ல சாப்பாடும்மா   எல்லா நாட்டுக்கும் போயி உயர்தரமான எல்லா உணவகத்திலேயும் சாப்டுட்டேன்

    ஆனாலும் உன் கையாலே சமைச்சு போடற இந்த உணவுஓட ருசி அதிலெல்லாம் இல்லேம்மா  என்று கூறிவிட்டு

    சரி நான் கிளம்பறேன்  என்றர்

    தாத்தாவுக்கு ஒரு முத்தம் குடுடா  என்றார் பேரனிடம்

    மாத்டேன் போ என்றது அனிருத்

    டேய் அப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது  தாத்தா இப்போ கிளம்பறாரு  ஒரு முத்தா குடுத்டுட்டு  பை பை சொல்லு  என்றாள் மருமகள்

    மாத்தேன் போ என்று சொல்லிவிட்டு  அறைக்குள் சென்று சோபாவில் படுத்துக்கொண்டு இவரையே பார்ட்டுக் கொண்டிருந்தது  அனிருத்

    சரிம்மா குழந்தையை  தொந்தரவு செய்யாதே  நான் கிளம்பறேன் என்று ஏமாற்றத்துடன்  கிளம்பினார்

    மகனும் மருமகனும் சரிப்பா ஜாக்கிறதையா போயிட்டு வாங்க

    என்றபை வழியனுப்பினர்

    இரண்டு அடி எடுத்து வைத்து காரிடம் சென்றவர்   உள்ளதனிருத் பயங்கரமாக   அலறி அழும் குரல் கேட்டு அப்படியே நின்றார்.

    தாத்தாவைப் போக வேணாம்னு   சொல்லு, இங்கேயே இருக்க சொல்லு அவரை எங்கூடவே இருக்கச் சொல்லு என்று உரத்த குரலில் அனிருத் அலறி அழுது கொண்டிருப்பது காதில் விழுந்தது

    அவருக்குள் ஏதோ ஒன்று உடைந்தது.  ஓ நீ எப்போ போகப் போறேன்னு வந்த வுடனே கேட்டதுக்கு இதுதான் அர்த்தமா?..

    என் தலை முடியைப் பிடிச்சு இழுத்ததுக்கு இதான்     அர்த்தமா?..

    என்கிட்ட பேசாம இருந்ததுக்கு இதான் அர்த்தமா?..

    அவருக்குள் ஏதோ ஒன்று உடைந்து ப்ரவாகமாப் பெருகி வெள்ளமாய் சீறி வெடித்துக் கொண்டு கிளம்பியது

    உள்ளே ஓடிப்போய் இல்லேடா கண்ணா  நான் உன்னை விட்டுட்டுப் போகலே, இங்கேயே இருக்கேன்  என்றபடி  அனிருத்தை அணைத்துக் கொண்டார்

    எனக்கு உன்னை ரொம்ப்ப் பிதிக்கும் தாத்தா  என்ற மழலையில்  உருகிப் போய்க் கரைந்தார் அவர்

    குழந்தையின் மழலையை மனதைப் புரிந்து கொள்ள இன்னும் எந்த நவீனக் கருவியும் வரவில்லை  என்கிற உண்மை உரைத்தது  அவருக்கு

    அவர் அனிருத்தின் அணைப்பில் கரைந்து போனார்

    Share
  • வளையம்

    தமிழ்த்தேனீ

    பக்கத்தில் படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியின் குறட்டை அவர் காதைப் பிளந்தது.

    எதுக்கு இப்பிடி குறட்டை விடறா இவ, என்றபடி காமாக்‌ஷியை மெதுவே தொட்டார், சற்றே குறட்டை நின்றது.

    சற்று நேரம் கழித்து மீண்டும் அதே குறட்டை ஒலி.

    ஹுஹும்  இங்கே தூங்க முடியாது என்றபடி சொக்காயை எடுத்து மாட்டிக்கொண்டு வராந்தாவுக்கு வந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தார் சபேசன்.

    புகை வளையம் சுழன்றது, அதென்னவோ இந்தப் புகை பிடிக்கும் வழக்கம் தப்போ, தவறோ, சரியோ, இதைப் பிடிக்கும்போது அப்பிடியே சுழல் சுழலா வளையம் விட்டு அந்த வளையம்  சுழன்றுகொண்டே மெதுவே கொஞ்சம் கொஞ்சமாகக் காற்றிலே அலையும் கருமேகம் போல் அலைவதை வேடிக்கை பார்ப்பது அவருக்கு பிடிக்கும்.

    அது சரி இந்தக் குறட்டைக்கு மட்டும் ஆண் பெண் பேதமே கிடையாதோ!

    எல்லாரையும் ஆட்டிவைக்கறதே என்று நினைக்கையில் அவருக்கு ஒரு புறம் சிரிப்பாக வந்தாலும்  மறு புறம் கோவமாக வந்தது.

    அவராலே ஒரு சின்ன சத்தம் கேட்டாக்கூட தூங்க முடியாது, மேலே ஏதாவது  பட்டாக் கூட முழிப்பு வந்துடும். ரொம்ப சென்சிட்டிவ் என்ன செய்யறது அவர்  வாங்கி வந்த வரம் அப்படி.

    வாயைத் திறந்து கொண்டு தூங்குவதால்தான் குறட்டை வருகிறது; அது அவ்வளவு ஆரோக்கியமுமல்ல என்று பல முறை அவளுக்கு சொல்லியாயிற்று.

    அவளைச் சொல்லியும் குத்தமில்லே!  காலையிலே எழுந்ததுலேருந்து ஏதாவது வேலை செஞ்சிண்டே இருக்கா  படுக்கும் போது அலுத்துப் போறது பாவம்.

    சரி ஏதாவது நல்ல டாக்டரை கன்ஸல்ட் பண்ணலாம் என்று நினைத்தபடி இன்னமும் ஆழமாக  குறட்டையைப் பற்றி சிந்திக்கத் ​தொடங்கினார்.

    சுரீரென்று விரலில் யாரோ சூடு போட்டார்கள். ‘ஆ’ என்று கத்தினார்.

    கையில் இருந்த சிகரெட் கங்கு அவர் விரலைப் பதம் பார்த்திருக்கிறது.

    ‘சீ ‘என்றபடி அதைத் தூக்கி எறிந்தார்.

    சில நேரங்களில் இப்படித்தான் பல விஷயங்களை தூக்கிப் போடணும்னு தோணும். தூக்கியும் போடுவோம். ஆனால் நிரந்தரமா தூக்கிப் போட முடியாது.

    சிகரெட்டை மட்டும் இல்லை, பலவற்றை, இது ஒரு அவஸ்தை வாழ்க்கையில், தீர்மானமில்லாத வாழ்க்கை.

    குறட்டை விடுவதற்கு முக்கிய காரணம் வாய்வழியே மூச்சு விடுவதாகும். இதனால் உள் நாக்கு அதிர்வதையே குறட்டை என்கிறோம். மேலும் அடினாய்ட்ஸ் வளர்ச்சி அல்லது மூக்கு வழியில் சிறிதளவு அடைப்பு அல்லது வேறு காரணத்தால் வாய் வழியே மூச்சு விட நேரிடலாம். இதன் காரணமாக குறட்டை விட நேரிடலாம்.”  என்று விக்கி பீடியாவில் படித்தது நினைவுக்கு  வந்தது.

    முதல்லே இவளை டாக்டர்கிட்ட காட்டணும்  என்று நினைத்துக் கொண்டு திரும்பினார்  .

    சரி போய்ப் படுத்துக்கலாம் தூக்கம் வருகிறதான்னு பாப்போம் என்று தீர்மானித்து  மறுபடியும் போய்ப் படுத்தார் .

    புரண்டு புரண்டு படுத்தவர் தாகம் எடுக்கறா மாதிரி இருக்கு. லைட்டைப் போட்டா  இவ கத்துவா தூக்கம் கலைஞ்சு போச்சுன்னு. சரி, இருட்டிலேயே  தண்ணீர் பாட்டிலை தேடி கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு  மறுபடியும் வந்து படுக்கலாம் என்று இருட்டிலேயே துழாவித் துழாவி கட்டிலருகே வந்தவர்   கட்டிலின் கால் மேலே இடித்துக்கொண்டு ‘ஆ ஆ’  என்று வலி தாங்க முடியாமல்  கத்தினார்.

    பேசனும் காமாக்‌ஷியும் குடும்ப வைத்தியர் சௌந்தர்ராஜனினின் எதிரே உட்கார்ந்திருந்தனர்.

    டாக்டர்  சௌந்தர்ராஜன் சொல்லிக் கொண்டிருந்தார், “இதோ பாருங்கோ  நல்லா செக் பண்ணியாச்சு; எதுவும் ப்ரச்சனை இல்லே, சாதாரணமா குறட்டை விடறது சகஜம்தான், படுக்கும் போது நாம வாயைத் திறந்துண்டு தூங்கக் கூடாதுன்னு நெனைச்சுண்டு படுத்துக்கணும். நாம  மனசைக் கட்டுப் படுத்தினா எதை வேணா ஜெயிக்கலாம்.

    மூக்காலே மூச்சு விட்டாலே குறட்டை நின்னுடும். வேற எதுவும் பயப்படறா மாதிரி இல்லே” என்றார்.

    “அது இல்லே டாக்டர் இவர் விடற  குறட்டையைக் கூட சமாளிக்கலாம், ஆனா  தூக்கத்திலே நடக்கறாரு இவரு, இவர் தூக்கத்திலேயே எழுந்து,  எங்க வீட்டு நாயி இருக்கே டாமி  அதைக் கட்டிப் போடற இடத்துலே போயி நிக்கறாரு.

    அதுகிட்ட போயி அன்பாத் தடவிக் குடுக்கறாரு. ஏற்கெனவே அதுக்கு இவரைப் பார்த்தாலே ஆகாது; கடிச்சு வைக்கப் போறதேன்னு பயமா இருக்கு டாக்டர்.

    இப்போ பாரு குறட்டை நின்னு போச்சு  அப்பிடீன்னு அதுகிட்டே ஏதோ பேசிண்டு இருக்காரு பாதி ராத்திரியிலே.

    அது உர் உர்ன்னு கத்துது.

    தூக்கத்திலே நடக்கற வியாதிக்கு ஏதாவது மருந்து குடுங்க, இவரை எப்பிடியாவது  குணப்படுத்துங்க டாக்டர்” என்றாள் காமாக்‌ஷி.

    சுபம்

    Share
  • மனக்குரங்கு!…

    தமிழ்த்தேனீ

    “மனதால் எத்தனை பாவம் செஞ்சாலும் அது குற்றமாவதில்லை, ஆனால் அதைச் செயல் படுத்தும்போதோ  அல்லது வாயால்  சொல்லும்போதோ அது குற்றமாகிறது.”

    “வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் நமக்கு பாடம் கற்றுக் கொடுக்கிறது”-

    முப்பதாயிரம் ரூபாய் போட்டு அவரோட மகன் சங்கர் ஆசையாய் வாங்கிக் கொடுத்த விண்டோஸ் போன். திடீர்ன்னு காணாமப் போயிடுத்து

    எங்க தேடியும் கிடைக்கலே   எப்பிடித்தான் காணாமப் போயிருக்கும் புரியலே.  எப்பவுமே எந்த ஒரு பொருளையும் எவ்வளவு ப்ரச்சனை இருந்தாலும் எவ்ளோ ஓய்ந்து போயிருந்தாலும் இரவு எவ்வளவு நேரமானாலும்  அது அதுக்குரிய இடத்திலே வைக்கணும் னு எல்லாருக்கும் உபதேசம் செய்வார் சபேசன், அவரும் அப்படியே வைப்பார்

    அப்படி இருக்கும்போது எப்பிடிக் காணாமப் போச்சுன்னே தெரியலே, கடைசியா  காத்தாலே  வாசற்க் கதவு வழியா வெளியே தெரிந்த அருமையான சாலையையும், மேகங்களையும்  சேர்த்து அவரோட விண்டோஸ் போன்லே புகைப்படம் எடுத்தார், அதுக்கப்புறம் கொண்டு வந்து பக்கத்திலே சோபாவிலே வெச்சிண்டு கம்ப்யூட்டர்லே வேலை செஞ்சுண்டு இருந்த்து நியாபகத்துக்கு வந்துது.

    சோபாவை நகர்த்திப் பார்த்தாச்சு, அங்கே இல்லே, வீட்டுலே எல்லா இட்த்திலேயும் தேடிப் பாத்தாச்சு ,கிடைக்கலே. அன்னிக்கு சாயங்காலம் கணேசன் வந்து அவர் பக்கத்திலே உக்காந்து பேசிண்டு இருந்த்து நினைவுக்கு வந்துது, மனதிலே ஒரு எண்ணம் ஒரு வேளை  போன் நல்லா இருக்கேன்னு கணேசன் தூக்கிண்டு போயிட்டானோ அப்பிடீன்னு.  தலையை சிலுப்பிண்டு  சீ சீ அப்பிடியெல்லாம் நினைக்கக் கூடாது அப்பிடீன்னு மனசுக்கு கட்டளை போட்டாலும், மனசு என்னவோ கட்டுப்பாடில்லாமே எதை எதையோ போட்டுக் குழப்பிண்டே இருந்துது.

    மனசாலே எவ்ளோ பாவம் செஞ்சாலும் அது குத்தமாறது இல்லே, ஆனா அதைச் செயல் படுத்தும்போதோ அல்லது வாயாலே  சொல்லும்போதோ அது குத்தமாயிடறது. தீயினால் சுட்ட புண்ணுன்னு வள்ளுவர் சொல்றா மாதிரி. நல்ல வேளையா வாய் திறந்து ஒரு வேளை கணேசன் எடுத்துண்டு போயிட்டானோன்னு சொல்லலே.

    நான் எதையும் எல்லா நேரத்திலேயும் சரியா செய்யணும்னு நினைக்கறவன் எனக்கு இப்பிடி ஆயிப் போச்சேன்னு மனசு கெடந்து தவிச்சிண்டு இருக்கு,

    ஆச்சு ஒரு வாரமா எல்லா நேரத்திலேயும் அந்த போன் நெனப்புதான்,

    என்னாலே ஜீரணிக்கவே முடியலை அப்பிடீன்னு வாயை விட்டே புலம்பினார் சபேசன்.

    அப்பா எவ்ளோதான் ஜாக்கிறதையா இருந்தாலும் இது மாதிரி சிலது தொலஞ்சு போறது சகஜம்தாம்ப்பா , மனசைப் போட்டு குழப்பிக்காதீங்க, நான் வேற புது போன் , அட்வான்ஸ் மாடல் வாங்கித் தரேன், என்றான்  சங்கர்.

    ஆயிரம்தான் வேற போன் வாங்கினாலும் முப்பதாயிரம் ரூபாய் போச்சேன்னு ஒரு நெனைப்பு, அது மட்டுமில்லே எப்பவும் நாய்க் குட்டி மாதிரி ஆசையாய் அவர் கூடவே வெச்சிண்டு இருந்த போன்.

    யாருக்காவது   ஏதாவது பொருள் காணாமப் போனா  சமயவரத்து மாரியம்மனிடமும்   அரைக்காசு அம்மனிடமும் வேண்டிக் கொள்வது அவர் வழக்கம், அதுக்கேத்தா மாதிரி அவர் வேண்டிண்ட உடனே அந்தப் பொருள் கிடைச்சுடும்,

    அது மாதிரி வேண்டிண்டும் ஆச்சு ஆனாக் கெடைக்கலே, நிச்சயமா தெரியும் வெளியிலே எங்கேயும் தொலைக்கலே, அவரோட எண்ணுக்கு போன் செஞ்சும் பாத்தாச்சு  கண்டு பிடிக்க முடியலே, கூகிள் சர்ச்சிலே  என் போனைக் கண்டு பிடின்னு கட்டளை போட்டு  அதாலேயும்  கண்டு பிடிக்க முடியலே. தொலைபேசி இயக்கத்தில் இல்லைன்னு சொல்றது.

    நான் இவ்ளோ கஷ்டப்பட்டுண்டு இருக்கேன்  ஒரு வார்த்தை அதைப் பத்தி பேசறாளா பாரு இவ, மனதுக்குள் பொறுமினார் சபேசன்.

    அவ பாட்டுக்கு அவங்க கூப்புட்டு இருக்காங்க இவங்க கூப்பிட்டு இருக்காங்கன்னு நவராத்திரி கொலுவுக்கு போயிட்டு வந்துண்டே இருக்கான்னு  என்று அவருடைய மனைவி காமாக்ஷியை பத்தி  நெனைச்சு கோவம் வந்துது.

    ஒரு வாரம் ஆச்சு சரி இனிமே கிடைக்காதுன்னு முடிவு செஞ்சாச்சு, படுக்கும் போது மணி பன்னிரன்டு, நல்ல தூக்கம், காலையிலே தூக்கமும் விழிப்பும் கலந்த ஒரு நிலையிலே  மனசுக்குள்ளே ஒரு நெனைப்பு இன்னிக்கு நம்மோட போன் கிடைச்சாலும் கிடைக்கும்னு , நெனைச்சுண்டே எழுந்து  வழக்கம் போல  ஸ்வாமி படத்திலே  கண்முழிச்சு  கையிக் கூப்பி விட்டு உள்ளங்கையை ஒரு முறை பார்த்துவிட்டு  திரும்பினார் சபேசன், பக்கத்தில் இருந்த  மேசையில் அவருடைய விண்டோஸ் போன் ஒய்யாரமாய் உட்கார்ந்திருந்தது.

    ஒரு கணம் கனவா  நினைவான்னு   புரியாமே மெதுவா கையை நீட்டி அதைத் தொட்டுப் பார்த்தார். அட உண்மையிலேயே அவரோட விண்டோஸ் போன்தான். மகிழ்ச்சியாய் எழுந்தார். அவர் மனைவி காமாக்ஷி கீழே நீங்க உக்காந்திருந்த சோபாவை நகத்திப் பார்த்தேன், அதோட அடியிலேயே இருந்துது, நீங்க எழுந்தவுடனே உங்களுக்கு சந்தோஷமா இருக்கட்டும்னுதான் உங்க பக்கத்திலே  வெச்சேன் என்றாள்.

    அப்ப்டியே ஓடிப்போய் காமாக்ஷியைக் கட்டிக் கொண்டு  ஒரு முத்தம் கொடுத்தார்  சபேசன்.   தலையைக் குனிந்து வெட்கப்பட்டாள் காமாக்ஷி,

    ரொம்பத் தேன்க்ஸ் காமாக்ஷி என்றார் மன நெகிழ்வுடன் சபேசன்.

    ஓ மௌனமா இருந்தாலும் இவ மனசிலேயும் காணாமப் போன நம்மோட போன் உறுத்திண்டேதா இருந்திருக்குன்னு உணர்ந்து இன்னொரு முறை கட்டிக் கொண்டார் காமாக்ஷியை சபேசன்.

    எப்பிடி நன்றி சொல்றதுன்னே தெரியலே காமாக்ஷி நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன், உனக்கு என்ன வேணும்ன்னு சொல்லு நான் வாங்கித் தரேன் என்றார் சபேசன்

    எனக்கு ஒண்ணும் வேணாம் நீங்க சந்தோஷமா இருக்கீங்களே அதுவே போதும்னா காமாக்ஷி.

    அவளையே பார்த்துக் கொண்டிருந்த சபேசன் இவளுக்கு ஒரு நல்ல பட்டுப் புடவையா வாங்கித் தரணும்ன்னு  நெனைச்சிண்டார்.

    இல்லே காமாக்ஷி உனக்கு நான் ஏதாவது ப்ரசன்ட் பண்றேன் அப்பின்னார்.

    அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் என்று வாயால் சொன்னாலும்

    காமாக்ஷியின் மனதில் அவர் ஒரு பட்டுப் புடவை வாங்கிக் கொடுப்பர் என்று தோன்றியது.

    விண்டோஸ் போன் திரும்பக் கிடைச்சது மனதுக்கு சந்தோஷமாக இருந்தாலும் மனதுக்குள் அவர் மகன்  கவலைப்படாதீங்கப்பா நான்  அட்வாண்ச் மாடல் போன் வாங்கித் தரேன்ன்னு சொன்னது நிழலாடியது.

    ஒரு வேளை இந்த போன் கிடைக்காம இருந்திருந்தா ஒரு அட்வான்ஸ் போன் வாங்கி இருக்கலாமோ அப்பிடீன்னு ஒரு நெனைப்பு மனதில் ஓடியது சபேசனுக்கு,

    ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர், அங்கே மனம் பேசிக்கொண்டே இருந்தது,  தாம்பத்ய ரகசியம் புரிந்து வாழ்வின் மேன்மையை உணர்த்தியது  அவர்கள் பார்வை.

     சுபம்

    Share