உ

                                ஶ்ரீராமஜெயம்

   

 தமிழ்த்தேனீ

rama-1

நீயிருக்கிறாய் எங்கும் நீயிருக்கிறாய்

நீ இருக்கும் இடத்திலேயே தானிருக்கிறாய்

நீ இருக்கிறாய்  நீக்கமற எங்கும்

நிறைந்திருக்கிறாய்

 

தாயிருக்கும் இடத்திலெல்லாம் நீயிருக்கிறாய்

சேயிருக்கும் இடத்திலும் நீயிருக்கிறாய்

தீயிருக்கும் இடத்திலேயும் நீயிருக்கிறாய்

காயிருக்கும் இடத்திலும் நீயிருக்கிறாய்

கனிந்திருக்கும்  பழத்திலும் நீயிருக்கிறாய்

மரத்துக்கும்  விதையாக விதைக்குள் மரமாக

நீயிருக்கிறாய் எங்கும் நிறைந்திருக்கிறாய்

மலைக்குள்  குழம்பாக நீயிருக்கிறாய்

மலைமேல் பனியாக நீயிருக்கிறாய்

மண்ணுக்கு உரமாக  விண்ணுக்கு மழையாக

கண்ணுக்கு இமையாக  இமைக்குள் கண்ணாக

எண்ணுக்கும் எழுத்துக்கும் இலக்கணமாய்

இலக்கணத்தின்  இலக்கியமாய் இலக்கியத்தில்

இலக்கணமாய் எக்கணமும்  மறையாத

மறைபொருளாய் கண்ணுக்குத் தெரியாமல்

நீயிருக்கிறாய் மறைந்தே இருந்தாலும்

பிறையாய்த் தோன்றி நிலவாய் ஒளிர்ந்து

பிழம்பாய்த் தோன்றி கதிராய் மலர்ந்து

கதிரவன் போலே மறையாய் ஒளிர்ந்தே

நீயிருக்கிறாய் எங்கும் நிறைந்திருக்கிறாய்

பாவுக்குள் கருவிருக்கும் பூவுக்குள் தேனிருக்கும்

தாய்மையெனும் பாலிருக்கும் பாலுக்குள் நெய்யிருக்கும்

தாய்மையனும் மெய்யிருக்கும்  தாய்  போல அன்பிருக்கும்

மாந்தர் இதயத்திலே நீயிருக்கிறாய் என்றும் நிறைந்திருக்கிறாய்

 

 

நீரிருக்கும் இடத்திலும் நீயிருக்கிறாய்

நிலம் இருக்கும் இடத்திலெல்லாம் நீயிருக்கிறாய்

வேருக்குள் நீராக நீருக்குள் வேராக

யாருக்கும் தெரியாமல் உயிருக்கும் 

உயிராக  நீயிருக்கிறாய்

நிலமில்லா வானத்திலும் நீயிருக்கிறாய்

வானிலா இல்லாத நிலத்திலும் ஒளியாக

ஒளியிலா இருளிலும்  இருளாக ஒளியாக

ஒளிர்கின்ற இருளாக  இருளகற்றும் ஒளியாக

எல்லாமே நீயாக  இல்லாமல் இருக்கிறாய்

எங்கும் நிறைந்திருக்கிறாய்

 

 

வேற்று மொழியானாலும் வேற்று மதமானாலும்f82186c1-6ed6-48a5-b65e-16efdbece450_S_secvpf

வேற்று இனமானாலும்  வேற்றுமை இல்லாமலே

காற்றிருப்பதைப் போலே நீயிருக்கிறாய்

காற்றோடு காற்றாகக் கலந்திருக்கிறாய்

காணும் உயிர்க்கெல்லாம் நீக்கமற நிறைந்தே

ஊணிலும் உயிரிலும் போக்குவரத்தாய்

மூச்சுக் காற்றாக. எங்கும் நிறைந்திருக்கிறாய்

பேச்சாக சொல்லாக செயலாக விளைவாக

அடிப்படையின் அணுவாக அணுவைக்  கூறிட்டுப்

பிளந்தாலும்  பேரணுவாக தீப்பிழம்பான உருவத்தில்

நீயிருக்கிறாய் எங்கும் நிறைந்திருக்கிறாய்

 

இல்லையென்றே சொல்வோர்க்கும் இல்லாத

இடமில்லை என்போர்க்கும் இதயத்திலே ஆழ்ந்து

நீயிருக்கிறாய்  எங்கும் நிறைந்திருக்கிறாய்

பொல்லாதவர்க்கும்  நல்லவர்க்கும் நடுநிலையாளருக்கும்

சொல்லாமல் கொள்ளாமல்  உள்ளுக்குள்ளே ஆழ்ந்து

நீயிருக்கிறாய் எங்கும் நிறைந்திருக்கிறாய்

கல்லுக்குள் தேரை போல் நீயிருக்கிறாய்

தேரைக்கும் உணவாக  நீயிருக்கிறாய்

நீயிருக்கிறாய் எங்கும் நிறைந்திருக்கிறாய்

கல்லாக வடித்தாலும் கவனமாய்ப் படித்தாலும்

உள்ளார்ந்த உணர்வாய் நீயிருக்கிறாய்

எங்கும் நிறைந்திருக்கிறாய்

 

அன்புடன்

தமிழ்த்தேனீ

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *