வாழ்வாங்கு வாழ்க!
இசைக்கவி ரமணன்
அன்புக் குழந்தைகளே!
வணக்கம்!
நன்றியுள்ள தந்தை வணங்குவதும் நன்றுதான்!
நல்லன்பில் வாழ்த்துவதும் வணங்குவதும் ஒன்றுதான்!
என்வாழ்வில் பூரணத்தை எய்தியநாள் இன்றுதான்!
எல்லோர்க்கும் என்போலே பிள்ளைவாய்த்தால் நன்றுதான்!
ஏழைவீட்டுக் கூரையிலே சுரைக்கொடிதான் அலங்காரம்
என்றிருந்த நாட்களிலே வந்து பிறந்தீர்! என்னை
வாழவைக்கும் வளமாக வாசலிலே வரமாக
வகைவகையாய்க் கண்முன்னே வளர்ந்து சிறந்தீர்!
மோழையிலே மெளனத்தே மூச்சடக்கும் யோகியினை
மூட்டைகொஞ்சம் தூக்கவைத்து முன்பு நடந்தீர்! உங்கள்
வாழ்வையுங்கள் வழியில்சென்று வாழ்ந்துகாட்டுகின்ற போது
வலியெல்லாம் சர்க்கரையாய் இனிக்க வைக்கிறீர்!
நமதுகுணம் பிள்ளைகளின் சுமையாகும் என்னும்வார்த்தை
நல்லவேளை பொய்க்கவைத்தீர் நன்றி நன்றி!!
உமதுகுணம் மலரின்மணம் ஊறிவரும் நிலவின்நிறம்
உம்மைப்பார்த்து வியக்கின்றேன் இன்றும் இன்றும்!!
என்மகவாய் எப்படித்தான் வந்து பிறந்தீர்!
எந்தக்கடன் தீர்ப்பதற்காய் என்னை அடைந்தீர்!
பொன்னிலவு பழங்குடிசை விரிசலின் வழியே
புன்னகைத்தல் போலாநீர் என்னிடம் வந்தீர்?
உம்மைவாழ்த்தும் முன்பு இந்த உலகை வாழ்த்துவேன்
உள்ளத்தின் அடியிலிருந் தொன்று சொல்லுவேன்
எம்மைப்போலப் பிள்ளைச்செல்வம் எவர்க்கும் வாய்க்கவே!
எங்களைப்போல் எல்லோரும் இனிது வாழ்கவே!
கண்முன்னே கதிரவனாய் நீங்கள் விரிக
கமலம்போல் கண்டுகண்டு நாங்கள் மலர்க
பண்ணிசைந்த கவிதைபோல் மனைவி மக்களும்
பக்கத்தே அன்புசெய்யப் பரந்து வாழுக!
ஆயிரமாய்ப் பிறைகளுடன் நூறு வசந்தம்
ஆரோக்யம் ஆன்மபலம் ஆன்ற சாதனை
தாயினும்சி றந்ததேசம் வாழ உழைத்து
தந்தையோரம் கண்பனிக்கத் தழைத்து வாழ்கவே!
ரமணன்