உனக்கே உனக்காக – 1

tumblr_static_catch-a-dream-spirit-alchemy

இடிந்து கிடக்கிறது கோயில்
இறைவன் எழுந்து இறங்கிச் சென்று எத்தனையோ நாட்களாயின

கடைசித் தருணத்து நிலைகுத்திய கண்கள் போலே
காரை பெயர்ந்து, ஒரு
கைதட்டலில் உதிர்வதற்காய்க் காத்திருக்கும் செங்கல்கள்
அவற்றின் இடுக்கிலும் எப்படியோ கண்விழித்து
அசையாமல் நிற்கிறது ஆலஞ்செடி
பொருத்தமற்ற இடத்தில்
பூவும் அருவருப்பு

இது மெளனமல்ல
இது வானத்தின் அடிவயிற்றையும் கலக்கும்
வாழ்வில்லாத நிசப்தம்

அது சந்நிதியல்ல
அது கடவுள் காலி செய்துவிட்ட,
ஒரு
மாறுதலையாவது தரும்
மரணமும் ஸ்தம்பித்துவிட்ட அவலம்
ஆம்
சிதைவுகளில்தான் அவலத்தின் குரூர வடிவங்கள்
சித்திரிக்கப்படுகின்றன..

அழுகை நின்றாலும் விசும்பல் தொடர்வதுபோல்
வெளவால்களின்
நாற்றங்கள் மட்டும் தொங்கிக்கொண்டிருக்கின்றன
நாராசத்தின் மாறாத பதிவுபோல்.
சுவர்களெல்லாம் புற்றாகவும் புதர்களாகவும்
சுருதிமாறிப் பேதலிக்கின்றன

இங்கே..இங்கே!!
எப்படி நீ? எதற்கு?
சிதையில் விழுந்த மொட்டின் முகையவிழ்க்கச்
சித்திர நிலவு சிங்காரித்துக்கொண்டு வந்ததுபோல்
என்னத்தைத் துளிர்விக்க இங்கே போய்
எழுந்தருளியிருக்கிறாய்?.

சொச்சமாய் இன்னும்
ஒரு முற்றுப்புள்ளியில் ரேகைபோல்
தொக்கிக் கிடக்கலாம் கோயில் வாசனை..

உறைந்தும் காய்ந்தும் கரைந்தும் போனாலும்
உயிரே விம்மி உதிர்ந்த கண்ணீரின்
ஒற்றைத் துளியின் உணர்வு
கதைசொல்லக் காத்திருக்கலாம்…

சாம்பலிலிருந்து தலைசிலுப்பிக்கொண்டு எழுவதற்காய்
ஒரேயொரு மழைத்துளியின் முத்தத்திற்காக
ஊசிமுனை விதையொன்று தவத்தில் இருக்கலாம்…

என்றெல்லாமா நம்பி வந்தாய்!
இத்தனை வெகுளித்தனம் தேவதைக்குப் பொருந்துமா?

இல்லை, ஒருவேளை
இன்னும் பதறாமல் இருக்கும் பலிபீடத்தில்
அங்கும் இங்குமாய் மல்லாந்திருக்கும்
காதல் என்னும் பேதைமையைப்
பார்வையால் திரட்டிப் படையலிட வந்தாயா?
யாருக்கு?!

முடிவில்லாத ஒரு முறிவு
முயற்சியின்றிக் கிடக்கிறது
எதனாலோ தூண்டப்பட்டு, அல்லது
எதையோ தூண்டுவதற்கு
முதலொன்று வந்து
முன்னே நிற்கிறது

வெற்றிகாண முடியாத வெறுமையும்
தோல்வியறியாத முழுமையும்
எதிரெதிரே நிற்கின்றன
என்ன நடக்கும் என்பது
எழுந்து இறங்கிச் சென்ற இறைவன்
ஏறிவந்தாலாவது தெரியுமா?

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *