“யார் குழந்தை”
தமிழ்த்தேனீ
2014ம் ஆண்டு பிறக்கிறது, இந்த வருடம் ஜனவரி மாதம் 1ம் தேதியிலிருந்து அவருக்கு 63 வயது முடிந்து 64 ம் வயது ஆரம்பமாகிறது. புது வருட வாழ்த்துக்கள் அவருடைய தொலைபேசியிலும் இணையதள மடல்களிலும் நிரம்பி வழிகின்றன அத்துடன் சேர்த்து அவருடைய பிறந்த நாளுக்கும் சேர்த்து வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் வேலையிலிருந்து ஓய்வு பெற முடியவில்லை, அவர் வியாபாரம் ஓஹோவென்று ஓடிக்கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின் ஒவ்வொரு துளி ஸ்வாரஸ்யத்தையும் அனுபவிக்க முடியாமல் பணம் பணம் என்று அதன் பின்னால் அலைந்து குரங்கின் கையில் பிடித்த பாம்பாய் விட முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர். விட்டால் வியாபாரம் என்னும் பாம்பு ஒரே போடாகப் போட்டுவிடும் அபாயம் இருக்கிறது.
பேரக் குழந்தை பிறந்தவுடன் பார்த்தது. இப்போது அதற்கு மூன்று வயதாகிறது. பிறந்த குழந்தையை இன்னும் வந்து பார்க்கவில்லை என்கிற குறை மகனுக்கும் மருமகளுக்கும்.
இந்த முறையும் ஒரே நாள்தான் குழந்தையுடன் இருக்க முடியும். என்ன செய்யறது அவர் வேலை அப்படி. மாதக் கணக்காய் வெளிநாடுகளில் சுற்றி சுற்றி இந்தியாவுக்கு வருவதே அபூர்வமாகி இருக்கிறது.
அவருக்கே வெறுப்பாய் இருந்தது, என்ன வாழ்க்கை இது நாமபாட்டுக்கு பேரப் பிள்ளைகளுடன் விளையாடினோமா, ராத்திரி பேரனின் பக்கத்திலே படுத்து அணைத்துக் கொண்டு தலையைக் கோதிவிட்டுக் கொண்டே கதை சொல்லி குழந்தை தூங்கியவுடன் நன்றாகப் போர்த்திவிட்டு,
ஹூம்ம் இதெல்லாம் நமக்கு கிடைக்காத சொர்கங்கள், நினைத்துப் பெருமூச்சு விடத்தான் முடியும் என்று நினைத்துக் கொண்டார். மனிதர்களுக்கு எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சைதானே
ஒவ்வொருத்தர் ஒவ்வொன்றிற்கு அதுவும் கிடைக்காத மறு பக்கத்துக்கு ஏங்கிக் கொண்டேதான் வாழுகின்றனர் என்று நினைத்தவருக்கு சிரிப்பு வந்தது. ஏதோ இப்போதாவது பேரனைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்ததே. இதோ ஆயிற்று இன்னும் சிறிது நேரத்தில் இந்தியாவில் தரையிறங்கி விடுவோம். விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரப் பயணம்.
இமிக்ரேஷன் முடிந்தவுடன் லக்கேஜை எடுத்துக் கொண்டு வெளியே போக வேண்டும் . அடிக்கடி பயணம் செய்யும் அவரை அடையாளம் கண்டு ஹலொ சார் நலமா என்று விசாரிக்கும் இமிக்ரேஷன் அதிகாரியிடம் நாங்கள் நலமே நீங்க நல்லா இருக்கீங்களா என்று விசாரித்துவிட்டு
வெளியே வந்தார் , தூரத்தில் மகனும் மருமகளும் பேரனும் நின்று கையை ஆட்டுவது தெரிந்ததும் உற்சாகமானார். வாங்கப்பா ப்ரயாணமெல்லாம் சௌகர்யமா இருந்துதா என்றாள் மருமகள்
நல்லா இருந்துதும்மா, குட் எப்பிடி இருக்கேம்மா , எப்பிடிப்பா இருக்கே டேய் குட்டிப் பையா எப்பிடி இருக்கே என்றார். பதிலே சொல்லாமல் அவரையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது குழந்தை.
என்னடா அப்பிடிப் பாக்கறே நான் உன்னோட தாத்தாடா, என்கிட்ட வா என்று அழைத்தார் வாஞ்சையுடன் வத மாட்டேன் எனக்கு உன்னைப் பிதிக்கலே என்றது குழந்தை.
அப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது தாத்தாவை என்றான் மகன்
அது குழந்தைடா அதுக்கு என்ன தெரியும் ஏதோ சொல்லுது அதைப் போயி பெரிசா எடுத்துக்க முடியுமா என்று வாய் கூறினாலும் மனம் துணுக்கென்றது.
என்னது இந்தக் குழந்தை இப்பிடிப் பேசுகிறது என்று எண்ணிக் கொண்டே காரில் உட்கார்ந்தவர். சரிப்பா எப்பிடிப் போகுது உங்க ஆபீசெல்லாம் என்றார். நல்லாப் போகுதுப்பா, ஆனா ரெஸ்டே இல்லே எப்போ பாத்தாலும் வேலை வேலைன்னு ஓடவேண்டி இருக்கு . ஓ அப்பிடியா என்னம்மா உனக்கு எப்பிடிப் போகுது வேலை டீச்சர் வேலை போரடிக்குதா என்றார்
இல்லேப்பா நல்லா போகுது நாங்க ரெண்டு பேரும் சேந்து எங்கேயும் வெளியே போக முடியலே. சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமை கூட டியூஷன் வெச்சிருக்கேன் நாற்பது பசங்க படிக்கறாங்க.
இப்போ இருக்கற காலத்திலே ரெண்டு பேரும் வேலை செஞ்சு சம்பாதிச்சாதானேப்பா முடியுது இருந்தாலும் எனக்கு நல்லாத்தான் பொழுது போகுது என்றாள்.
பின்னாடி இருக்கையிலிருந்து இவரையே பார்த்துக் கொண்டிருந்த பேரன் நீங்க எப்போ ஊருக்குப் போகப் போறீங்க என்றான்
மீண்டும் துணுக்கென்றது அவருக்கு சமாளித்து இதோ பாரு தாத்தா உனக்கு ரொம்பப் பிடிக்குமே ஸ்பைடர் மேன் பொம்மை அது வாங்கிண்டு வந்திருக்கேன். வீட்டுக்குப் போனதும் பெட்டிலேருந்து எடுத்து தரேன் என்றார்
சரி என்று ஒற்றைச் சொல்லோடு நிறுத்திக்கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்த பேரனை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற கவலை அவருக்குள் புகை வளையமாய்ச் சுழன்றது. வரும்போதே எப்போ போகப் போறேன்னு கேக்குதே இது .
நினைத்துக் கொண்டிருக்கும் போதே பின்னாலிருந்து அவருடைய முடியைப் பிடித்து வேகமாய் இழுத்தது. வலி தாங்க முடியாமல் அப்பிடியெல்லாம் செய்யக் கூடாது கையை எடு என்றார். அவருடைய பிள்ளை காரோட்டிக் கொண்டே அனிருத் கையை எடு என்றான்
பின்னாலிருந்து மருமகள் ஏன் அனிருத் இப்பிடி செய்யறே தப்பும்மா என்றபடி அவருடைய முடியிலிருந்து குழந்தையின் விரலைப் பிரித்து எடுத்தாள்.
தாத்தாக்கு வலிக்கும் தாத்தா கிட்டே சாரி சொல்லு என்றாள் , வலிக்கட்டும் நன்னா வலிக்கட்டும் சாரி சொல்லமாத்தேன் என்றான் அனிருத்.
சரி விடும்மா அது குழந்தை அதுக்கு என்னா தெரியும் குழந்தையை திட்டாதே என்றாலும் அவருக்குள் ஒரு பயமே வந்தது.இந்தக் குழந்தையை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று
ஆயிற்று வீட்டுக்குப் போய் மருமகள் கையால் சமைத்த வீட்டுச் சாப்பாட்டை ஒரு கைபார்த்துவிட்டு முதலில் பெட்டியிலிருந்து ஸ்பைடர் மேன் பொம்மையை எடுத்து குழந்தை அனிருத்திடம் கொடுத்துவிட்டு , தூக்கம் கண்களைச் சுழற்றவே அப்படியே தூங்கிப் போனார்
திடீரென்று இரண்டு மணிக்கு சந்திரகாந்தை தொடர்பு கொள்கிறேன் என்று கூறியது நினைவுக்கு வரவே திடுக்கிட்டு எழுந்து செல் போனைத் தேடினார் கிடைக்கவில்லை. எங்கே வைத்தோம் தூங்கும் போது தலைமாட்டிலேதானே வைத்துக் கொண்டு தூங்கினோம் என்று எல்லா இடத்திலேயும் தேட கிடைக்கவே இல்லை.
சந்திர காந்தின் எண்ணும் நினைவில்லை வர வர மூளையில் ஒன்றுமே இல்லை சொந்த மூளையை தொலைபேசிக்குள்ளும் கணிணிக்குள்ளும் அடமானம் வைத்தாயிற்று. இப்போது என்ன செய்வது என்றே புரியவில்லை.
டைரியை கணிணியை உயிர்ப்பித்து அதில் சந்திரகாந்த் என்று தேட அட நல்ல வேளை இதில் பதிந்திருக்கிறோம் . எண்களைக் குறித்துக்கொண்டு மகனின் தொலைபேசியில் சந்திர காந்தை தொடர்பு கொண்டார்
ஆமாம் சந்திரா நான் மூணு மணிக்கு அங்கே வந்துடறேன். நம்ம சந்திப்பு அரைமணி நேரம்தான். எனக்கு மாலை ஆறு மணிக்கு மறுபடியும் ஃப்ளைட் சரி நான் தாஜ் கோரமண்டலுக்கு வந்துடறேன் என்றபடி தொலைபேசியை மகனிடம் கொடுத்தார்
இப்போ என்னா செய்யறது என்னோட தொலைபேசியிலேதான் எல்லா எண்ணும் இருக்கு என்று மறுபடியும் தேடிப் பார்க்கலாம் என்று மகன் மருமகள் ஆளுக்கொரு மூலையில் தேடி ஒரு வழியாக அவர் படுத்துக் கொண்டிருந்த சோபாவின் அடியிலே விழுந்து கிடந்த போனைக் கண்டு பிடித்தவுடன் அப்பாடா என்று இருந்தது அவருக்கு.
சரிப்பா நான் கிளம்பறேன் நல்ல சாப்பாடும்மா எல்லா நாட்டுக்கும் போயி உயர்தரமான எல்லா உணவகத்திலேயும் சாப்டுட்டேன்
ஆனாலும் உன் கையாலே சமைச்சு போடற இந்த உணவுஓட ருசி அதிலெல்லாம் இல்லேம்மா என்று கூறிவிட்டு
சரி நான் கிளம்பறேன் என்றர்
தாத்தாவுக்கு ஒரு முத்தம் குடுடா என்றார் பேரனிடம்
மாத்டேன் போ என்றது அனிருத்
டேய் அப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது தாத்தா இப்போ கிளம்பறாரு ஒரு முத்தா குடுத்டுட்டு பை பை சொல்லு என்றாள் மருமகள்
மாத்தேன் போ என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்று சோபாவில் படுத்துக்கொண்டு இவரையே பார்ட்டுக் கொண்டிருந்தது அனிருத்
சரிம்மா குழந்தையை தொந்தரவு செய்யாதே நான் கிளம்பறேன் என்று ஏமாற்றத்துடன் கிளம்பினார்
மகனும் மருமகனும் சரிப்பா ஜாக்கிறதையா போயிட்டு வாங்க
என்றபை வழியனுப்பினர்
இரண்டு அடி எடுத்து வைத்து காரிடம் சென்றவர் உள்ளதனிருத் பயங்கரமாக அலறி அழும் குரல் கேட்டு அப்படியே நின்றார்.
தாத்தாவைப் போக வேணாம்னு சொல்லு, இங்கேயே இருக்க சொல்லு அவரை எங்கூடவே இருக்கச் சொல்லு என்று உரத்த குரலில் அனிருத் அலறி அழுது கொண்டிருப்பது காதில் விழுந்தது
அவருக்குள் ஏதோ ஒன்று உடைந்தது. ஓ நீ எப்போ போகப் போறேன்னு வந்த வுடனே கேட்டதுக்கு இதுதான் அர்த்தமா?..
என் தலை முடியைப் பிடிச்சு இழுத்ததுக்கு இதான் அர்த்தமா?..
என்கிட்ட பேசாம இருந்ததுக்கு இதான் அர்த்தமா?..
அவருக்குள் ஏதோ ஒன்று உடைந்து ப்ரவாகமாப் பெருகி வெள்ளமாய் சீறி வெடித்துக் கொண்டு கிளம்பியது
உள்ளே ஓடிப்போய் இல்லேடா கண்ணா நான் உன்னை விட்டுட்டுப் போகலே, இங்கேயே இருக்கேன் என்றபடி அனிருத்தை அணைத்துக் கொண்டார்
எனக்கு உன்னை ரொம்ப்ப் பிதிக்கும் தாத்தா என்ற மழலையில் உருகிப் போய்க் கரைந்தார் அவர்
குழந்தையின் மழலையை மனதைப் புரிந்து கொள்ள இன்னும் எந்த நவீனக் கருவியும் வரவில்லை என்கிற உண்மை உரைத்தது அவருக்கு
அவர் அனிருத்தின் அணைப்பில் கரைந்து போனார்
அன்புள்ள தமிழ்த்தேனீ!
தேனினும் இனிய மழலைச் சொற்கள் எவ்வளவு வலிமையானவை என்ற பெரிய உண்மைதனை வெகு சிறப்பாக ஒரு சிறுகதை மூலம் விவரித்து விட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
வணக்கத்துடன்
ஸம்பத்.