Tag: தமிழ்த்தேனீ

  • “ ஆட்ரா ராசா”

    தமிழ்த்தேனீ
    “இது அரசியல் தொடர்பான கதை அல்ல, இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல”
    —————————————————————————————————————————–
    “கீழே இருக்கும் சாதாரண மக்களைப் பற்றிக் கவலையே இல்லாமல் பூமியைவிட்டு சற்று உயரத்தில் இருக்கும் மரங்கள், மலைகள் போன்றவற்றிலேயே  உலாவி வாழ்க்கையின் சுகங்களை அனுபவித்து தனக்கு வேண்டிய போது மட்டும் கீழே இறங்கி வந்து மக்களிடம்   இருக்கும் கனியை தட்டிப் பறித்து  மேலே சென்றுவிடும் குரங்குகள்.”
    தமிழ்த்தேனீ

    ஏங்க  தோட்டத்துப் பக்கம் போயி பாருங்க, காக்காய் கூட்டம்  கும்பலா பறக்குது, கா கா ன்னு ஒரே கத்தல் வேற என்றாள் அலமேலு,
    இதோ பாக்கறேன் என்றபடி எழுந்து சென்ற அவரை  ஒரு சொக்காய் போட்டுண்டு போங்க, வெறும் உடம்போட போகாதீங்கோ, பூச்சி பொட்டு இருக்கப் போறது என்றாள் அலமேலு,
    சரி என்று ஒரு சொக்காயை எடுத்து மாட்டிக்கொண்டு தோட்டத்துப் பக்கம்  கதவைத் திறந்தார் வெங்கடேசன் , ஒரு பெரிய  குச்சியை கையில் கொடுத்து இதை எடுத்துண்டு போங்கோ, , போனவாரம் ஒரு பாம்பு வந்துதே அதிலேருந்து எனக்கு பயமா இருக்கு என்றாள்/;.
    ஒண்ணும் பயப்படாதே அலமேலு இந்த மாதிரி பாம்பு , பல்லி, எறும்பு,  கொசு குரங்கு இதெல்லாத்தோடயும் வாழக் கத்துக்கணும், இல்லேன்னா இந்தக் காலத்திலே வாழ முடியாது. நான் பாத்துக்கறேன் நீ இங்கேயே இரு என்று கூறிவிட்டு தோட்டத்துக்கு போனார் வெங்கடேசன். ஜன்னல் வழியா அவரையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அலமேலு.
    காக்காய்கள் ஒரு இடத்தைக் குறிவைத்து பறந்து பறந்து கத்திக் கொண்டிருந்தன. அங்கே உற்றுப் பார்த்தார் வெங்கடேசன், அந்த மரக் கிளையில்  ஒரு குரங்கு  இந்தக் காக்காய்களின் கூக்குரல்களினால் சற்றும் பாதிக்கப்படாமல் அலக்‌ஷியமாக உட்கார்ந்து ஒரு பப்பாளிப் பழத்தை தின்பதிலே கவனமாக இருந்தது.
    காக்காய்களுக்கு அந்தக் குரங்கு  மரத்திலே இருக்கும்  தங்களின் கூட்டைக் கலைத்துவிடுமோ என்று பயம். ஆனால் அவைகளின் பயமும் பல நேரங்களில் உண்மையாகி இருக்கின்றதே,
    குரங்குகள் தங்களுக்குள்ளே ஏற்படும் விரோதங்களினால்   பல பிரிவாகப் பிரிந்து  சுய லாபத்துக்காக அடித்துக்கொள்ளும்போது எதிர்ப்படும் எதைப் பற்றியும்  கவலைப்படாமல் சுயலாபத்தை மட்டுமே  கணக்கில் வைத்துக்கொண்டு  பல குருவிக் கூடுகளையும், பல பறவைகளின் கூடுகளையும் பிய்த்துப் போட்டுவிட்டு சென்று விடுவது பலகாலமாகவே நடந்து கொண்டிருக்கிறது
    அதனால் ஏற்பட்ட உயிர்ப் பயத்தாலும் ,தங்கள் குழந்தைகளைப் பற்றிய பயத்தாலும் காக்காய்கள் கும்பலாக ஒன்று கூடி குரங்கைத் துரத்துவதிலே கவனமாய் இருந்தன  ஐந்தறிவு மட்டுமே இருக்கும் இந்த பறவைகளின் உணர்வுகள் ஆறரிவு கொண்ட மனிதருக்கு  ஏன் வரவில்லை, மிருகங்கள்  பறவைகள்  இவைகளைப் பார்த்தாவது மனிதர்கள் திருந்த வேண்டும்.
    மனிதருக்கு இந்த ஒற்றுமை எப்போது வருமோ என்று தோன்றியது அவருக்கு,  காக்காய்கள் உணவுண்ணும் போதும் உறவினர்களை அழைத்து பங்கிட்டு உண்கின்றன, துன்பம் வரும்  வேளையிலும் ஒன்றாகக் கூடி  எதிர்கொள்கின்றன. பாராட்ட வேண்டியதுதான் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் வெங்கடேசன்,
    பப்பாளிப் பழத்தை ரசித்து உண்டுவிட்டு அதன் தோலை விசிறி எறிந்து விட்டு மரத்தைவிட்டுக் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தது குரங்கு.

    ஏங்க அந்தக் குரங்கு எறங்கி வருது உள்ளே வந்துடுங்க என்று கூவினாள் அலமேலு,    மதில் சுவற்றின் மேல் வந்து உட்கார்ந்து இவரை ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு இவரைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் நடந்து சென்று பக்கத்திலே இருந்த பீ எஸ் என் எல் கோபுரத்துக்கு தாவி அதன் மேல் அனாயாசமாக கிடு கிடுவென்று ஏறி மேலே சென்று உட்கார்ந்து கொண்டது.
    அப்போதுதான் கவனித்தார் வெங்கடேசன் அங்கே ஏற்கெனவே இந்தக் குரங்கின்  துணைவி உட்கார்ந்து கொண்டிருப்பதை. மேலே சென்ற குரங்கு கையில் வைத்திருந்த இன்னொரு பப்பாளிப் பழத்தை அன்போடு துணைவிக்கு கொடுத்துவிட்டு  தன் துணைவி  அந்தப் பப்பாளிப் பழத்தை உண்ணும் அழகை ரசித்த படியே  சாவகாசமாக உட்கார்ந்து  துணைவியாரின் தலையில் பேன் பார்க்கத் தொடங்கியது.
    மீண்டும் வாசலில் காக்காய்களின் கூக்குரல் கேட்டது , அட என்னடா இது தொந்தரவு என்று யோசித்துக் கொண்டே வெங்கடேசன் வாசலுக்கு வந்து பார்த்தார், யாரோ ஒரு வடநாட்டு மனிதன் ஒரு குரங்கின் கழுத்தில்  கயிற்றில் கட்டி  தன் தோளிலே உட்காரவைத்துக்கொண்டு வந்து  ஒரு மேளத்தை அடிக்கத் தொடங்கினான்,
    குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் கூட்டமாய்க் கூடி வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.
    அந்தக் குரங்கு அந்த வடநாட்டான் கொடுத்த  ஒரு வேர்க்கடலையை தின்றுவிட்டு அவன் சொல்வதையெல்லாம் செய்யத் தொடங்கிற்று.
    அவன் வைத்திருந்த கொம்பில் தலை கீழாக தொங்கியும், அந்தக் கொம்பை தன் தோளிலே வைத்துக்கொண்டு குட்டிக் கரணமடித்தும் வேடிக்கை காட்டியது.  எப்படியும் இந்த மனிதன் தன் பசிக்கு வேண்டியதை கொடுப்பான் என்னும் நம்பிக்கையுடன் ஆடுடா  ராசா ஆடுடா ராசா என்று அவன் கொடுக்கும் குரலுக்குத் தகுந்தவாறு அவன் சொல்வதையெல்லாம் செய்து கொண்டிருந்தது.
    வேடிக்கை பார்க்கும்  மக்களையும், ஆடும் அந்தக் குரங்கையும் ,  பீ எஸ் என் எல் கோபுரத்தின்  உச்சியிலிருந்து அந்த இரு குரங்குகளும் வேடிக்கை பார்க்கத் தொடங்கின.
    ஒரு வேர்க்கடலைக்காக வேடிக்கை செய்து உயிர் வளர்க்கும் இந்தக் குரங்கு எப்போது கோபுரத்தை நிமிர்ந்து பார்க்கும்? எப்போது தான் அடிமைப் பட்டிருப்பதை உணரும் என்று எண்ணமிட்டபடியே உள்ளே வந்தார் வெங்கடேசன்.
    தொலைக் காட்சியில் ஒருவர் பாம்பு போல்  வேடமிட்டு ஆடிக்கொண்டிருந்தார், மற்றொருவர் சிங்கம்போலவும், புலி போன்றும் உடலில் வண்ணங்களைப் பூசிக்கொண்டு புலிஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்.
    மீண்டும் வாசலில் ஒரு குரல் ஒரு மனிதன் முட்ட முட்ட சாராயத்தைக் குடித்துவிட்டு  டேய் யாரும் நம்மளை ஒண்ணும் செய்ய முடியாது ,
    எவனாவது கிட்டே வந்தீங்க குடலை உருவிடுவேன், நான் குடிச்சிருக்கேனு பாக்கிறியா? எவ்ளோ குடிச்சாலும் நான் ஸ்டடியா இருப்பேன், பாரு  எப்பிடி நேரா நடக்கறேன் பாரு , கொஞ்சம் கூடத் தள்ளாட மாட்டேன் என்றாவாறு தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டிருந்தான்.
    எல்லா மிருகங்களின் வேடமும் , பாம்பு போன்றவைகளின் வேடமும் மனிதருக்கு பொருந்துகிறதே. எந்த ஒரு மிருகமோ மற்ற எந்த ஜீவராசிகளுமோ ஏன் மனித வேடம் போடுவதில்லை என்று யோசித்தார் வெங்கடேசன்.

    Share
  • காதலர் தினம்

    தமிழ்த்தேனீ

    இந்தக் காதலர் தினக் கொண்டாட்டமே   வாலன்டைன் என்னும் ஒருவரது  மரணத்தில்தான் கொண்டாடப்படுகிறது.

    விவரங்கள்  வேண்டுவோர்   ; http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

    என்னும் விக்கிபீடியா தளத்தில்  படிக்கலாம்

    To-morrow is Saint Valentine’s day,
    All in the morning betime,
    And I a maid at your window,
    To be your Valentine.
    Then up he rose, and donn’d his clothes,
    And dupp’d the chamber-door;
    Let in the maid, that out a maid
    Never departed more.

    —William Shakespeare, Hamlet, Act IV, Scene 5

    என்று வில்லியம்  ஷேக்ஸ்பியர் கூறியதை மேற்கோளாகத்  தருகிறேன்

    நாம் காதலிக்கும் ஒருவருக்கு  ஒரு தினையளவு துன்பம் வந்தாலும்  மனம் தாங்காமல் அவர் துன்பத்தைப்  போக்கும் முயற்சியில் ஈடுபடுவதுதான்  உண்மைக் காதல்

    காதலுக்காக காதலியையே  ,அல்லது காதலனையே விட்டுக் கொடுக்கலாம், ஆமாம் அவர்  மகிழ்ச்சியாக வாழ்ந்தால் போதும் என்று எந்த மனம் நினைக்கிறதோ  அந்த மனம் கொள்வதுதான் உண்மைக் காதல்

    காதலர் தினம்  என்று கொண்டாடும் நாம்  என்னென்ன செய்கிறோம் என்று  எண்ணிப் பார்த்தால்

    எதிர் பாலினத்தில் இருப்பவர்  நம்மைக் காதலிக்கிறாரா  என்றே தெரியாமல் தன்  விருப்பத்தை மட்டும் தெரிவிக்கும் நாளாக நினைக்கிறோம்.

    அப்படி அவர் நம் காதலுக்கு  ஒப்புக்கொள்ளவில்லை என்றால்  அவரை அழிக்கத் திட்டமிடுகிறோம்.   இதல்ல காதல்

    “இன்னுமா இருக்கிறது காதல்”   திருமணம் செய்து கொண்ட மனைவியை காதலித்து அவளை அன்பாக ,மரியாதையாக, நடத்தத் தெரியாத இந்த நாளில் இன்னுமா இருக்கிறது காதல்? என்றே கேட்கத் தோன்றுகிறது

    பருவ ஈர்ப்பை காதல்  என்று எண்ணி  அதற்கு உடன்படாத பெண்ணை  திராவகம் ஊற்றி  துடிக்க வைக்கும்  எண்ணம் கொண்ட இளைஞர்கள் இருக்கும் இக்காலத்தில்  இன்னுமா இருக்கிறது காதல் ? என்றே கேட்கத் தோன்றுகிறது

    “ஒருவரை ஒருவர்  உண்மையாகப் புரிந்து கொளுவது “ காதல் “ அது இது வரையில் ஏற்படவே இல்லை “

    -தமிழ்த்தேனீ

    ஒருவரைக் காதலித்தால்  அது காதல், முதல் காதல் ,இரண்டாம் காதல் என்று ஆரம்பித்தாலே ,அங்கு காதல் புனிதம் இழந்துவிடுகிறது .

    “காதல் ஒரு மலர்” ,அது ஒரு முறைதான் பூக்க வேண்டும்.  மீண்டும் பூக்க முடியாது , காதல் தவறு என்று நான் சொல்வேயில்லை . காதலைத்தவிர இன்னும் கற்றுக் கொள்ளவேண்டியது  நிறைய இருக்கிறது

    காதல் என்பது நம் வாழ்க்கையின் ஒரு அங்கம் ,ஆனால் காதலைக் காமம் என்று  புரிந்துகொண்டு அதைத்தவிர வேறு ஒன்றுமே பெரிதல்ல என்று எண்ணும் இக்கால இளைஞர்களின் மனப் போக்கு தவறு என்றுதான்  சொல்லுகிறேன் .  அதற்கேற்றார்ப் போல் பத்திரிகைகள்,,தொலைக் காட்சிகள்,திரைப் படங்கள் எல்லாமே காதலையே மையமாக வைத்து  இளைஞ்ஞர்கள் மனதைக் கெடுத்து விட்டார்கள் .

    “ உலகத்திலே நீர்விழுச்சியிலிருந்து விழும் தண்ணீர் சுத்தமானது என்று கூறுவர், அந்தத் தண்ணீரும் கீழ்நோக்கிதான் விழும். அது மிக எளிது ஆனால் தண்ணீரை மேலேற்றவேண்டுமானால் ஒரு விசை தேவைப் படுகிறது

    அது போல பரிசுத்தமான மனதும் கீழ்த்தரமான எண்ணங்களை  நோக்கி வெகு எளிதாக ஓடும்  ,அதைக் கட்டுப் படுத்தி ஒழுக்கம் என்னும் விசை கொண்டு மனதை நல் வழிப் படுத்தவேண்டும் .

    அது போல காதலின் சக்தி  கொண்டு ஒரு ஆணும் ஒரு  பெண்ணும் தன் காதலனை அல்லது தன் காதலியை  ஒரு நல்ல உன்னதமான வாழ்க்கைக்கு அழைத்துச்  செல்லும் நோக்கோடு  காதலித்தால்  அந்தக் காதலை நானும் வரவேற்கிறேன்.

    நான் ஒன்றும் முனிவனல்ல  ,எனக்கும் காதல்,அதாவது உண்மையான காதல்,பரஸ்பரம்  இருவரும் மனம் விட்டுப் பேசி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்  காதல்,சுயநலமில்லாத காதல் ,அனைத்தும் பிடிக்கும் .காதல் வாழ வைக்க வேண்டுமே தவிற பெற்றோர்களுக்கும்,அவர்களுக்கும் துன்பம்  தரக்கூடியதென்றால்  அதை காதல் என்று என் மனம் இடம் தரவில்லை ..  காதலியுங்கள் ,கண்ணியமாக ,வாழ்க்கையை நன்றாக அமைத்துக் கொள்ள காதலியுங்கள் .” காதல்தான் இளைஞனையும் சரி யுவதியையும்   பக்குவப்படுத்துகிறது என்பது  என் எண்ணம்…அது தோல்வியோ அல்லது வெற்றியோ என்பதல்ல முக்கியம்…இதன் மூலம்

    அவர்கள் அடையும் அனுபவம் அது அவர்களை ” செம்மைப் படுத்தினால் பரவாயில்லை,   இப்போது பல காதல்கள் அனைவரையும்  சீரழிக்கிறது என்பதே உண்மை . காதல் என்பதே  பருவமடைந்த  பெண்ணிற்கும் , வயது வந்த ஆணுக்கும் இயல்பாய் மலர்வது.

    ஆனால் இப்போது அடுத்தவன்  மனைவி மேல் காதல் வருகிறது. அடுத்த பெண்ணின் கணவன் மேல் காதல் வருகிறது  ? அப்படியானால் அடுத்தவன் மனைவியை கடத்திக் கொண்டு போகலாம் தவறில்லை,மேலும் அவள் அனுமதித்தால் ,உலக ஒழுக்கம் மறந்து அவளை  அடையவும் அடையலாம் ,அதுவும் தவறில்லை, அப்படித்தானே….?    இப்படிப் போகிறது இந்தக் காலத்து நியாயம் … இவையெல்லாம் காதலா? இன்னமும் காதல் இருக்கிறதா?  இல்லை இல்லை இல்லவே இல்லை என்பதே உண்மை.

    அச்சம் ,மடம் நாணம் அப்பிடி…இப்பிடீன்னு சொல்வதெல்லாம் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும்தான் ,அதில் தவறியவர்கள்  தான் கெட்டுப் போவது மட்டுமல்லாமல் தன் வாரிசுகளுக்கும் எயிட்ஸ் போன்ற நோயைப் பரப்புகிறார்கள்  நண்பரே ,நன்றாக சிந்தித்துப் பாருங்கள் .கற்பு என்பது மடமையல்ல ஒழுக்கம்.

    வாலிப வயதில் பெண்களை  வெறிக்க வெறிக்கப் பார்க்கும் ஒவ்வொரு ஆணும்  தனக்கு திருமணம் ஆனவுடனே தன் மனைவியைப் பார்த்து சொல்லும் முதல் வார்த்தையே  “நல்லா போர்த்திகிட்டு வா கண்டவன் கண்டபடி பாக்குறான்”     என்பதே  .   தனக்கென்றால் ஒரு நியாயம் , அடுத்தவருக்கென்றால் ஒரு நியாயமா?   தனக்கு வரும் மனைவி மட்டும் தன்னைத் தவிர வேறு யாரையும்  நினைத்துகூட பார்க்கக் கூடாது ,என்று நினைக்கும் ஒவ்வொரு ஆண்மகனும்  ஏன் தானும் ஒழுக்கமாக இருந்து ஒரு மனைவிக்கும்  உண்மையானவனாக இருக்கக் கூடாது .?

    பெண்கள் வீரமா இருக்கலாம் ,வீரமா இருப்பது வேறு,விவேகமா இருப்பது வேறு . பொதுவாக இருக்கட்டும். காதலிக்கும் பெண் ஜீன்ஸ் போட்டுகிட்டு வந்தால் பிடிக்கும் ஆனால் அவளே திருமணம் ஆன பின் அவளே புடவைக் கட்டிக்கிட்டு வரணும். அச்சம் என்பது எல்லாவற்றிர்க்கும் அஞ்சுவது என்று பொருளல்ல,

    அஞ்சுவது அஞ்சாமை  கூடாது என்று பெரியவர்கள் சொல்வதன் பொருளே எதற்கு அஞ்சவேண்டுமோ அதற்கு அஞ்சித்தான் ஆகவேண்டும் ,எதற்கு அஞ்சக் கூடாதோ அதற்கு அஞ்சக் கூடாது என்பதுதான்

    நாணம் எதற்கு எங்கு வரவேண்டுமோ அங்கு வராமலிருந்தால் அது துன்பம் பயக்கும்.  இந்தக் காலத்துப் பெண்கள்     “ நிமிர்ந்த நன்நடை நேர் கொண்ட பார்வை “  என்று பாரதி சொன்னதை தவறாக புரிந்து கொள்கிறார்கள்

    தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு பெண் உண்மையாக விரும்பினால் அவளின் அழகிய  நகங்களும் ஆயுதமாக மாறும்  என்று மஹாத்மா காந்தி சொன்னது …உண்மை .  எத்தனை பேரால் அது போல தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது

    முடியாமல் போவதால்  தானே பல பெண்களின் வாழ்க்கையை  சில மிருகங்கள் சீரழிக்கின்றன . பெண்கள் அச்சம் ,நாணம் போன்றவற்றைக் குறைத்ததனால்தான் வேலைக்குப் போக முடிகிறது என்று சொல்கிறார்கள்

    அதல்ல காரணம் .பெண்கள் வேலைக்கு போக முடிகிறது  என்றால் (midnight network support )  அது மட்டுமல்ல ” இன்னும் மொத்த ஆண்களுமே மிருகமாய் மாறாமலிருப்பதும் கூடத்தான். இன்னும் மனிதம் கொஞ்சம் மிச்சமிருப்பதால்தான் பெண்கள் வேலைக்கோ , கடைகளுக்கோ செல்ல முடிகிறது (midnight network support ).. செல்ல முடிகிறது

    தயவு செய்து பெரியவர்கள்அக்கறையோடு,அன்போடு, சொல்வதை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள் . இப்பொழுதும் பெண்கள் வேலைக்குச் சென்றுவிட்டு  வீடு திரும்பும் வரை பத்திரமாக வரவேண்டுமே என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர்களைப் புரிந்து கொள்ளுங்கள்.

    ஏனென்றால் இப்போதைய  பெண்களும் ஒரு காலத்தில் திருமணமாகி தாயாகப் போகிறவர் தான் .வருங்காலத்தில் திருமணமாகி குழந்தைகள் பிறக்கலாம் .ஆண் குழந்தையும் பிறக்கலாம்,பெண்குழந்தையும் பிறக்கலாம் நீங்களும் உங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டு காத்திருக்க வேண்டி வரலாம்

    நாம் எதாக நினைக்கிறோமோ அதாக ஆகிறோம்,   நல்லதே நினையுங்கள் நல்லது நடக்கும்.  every action is having a equvalant re action . எப்படி காலடி எடுத்து வைக்கிறீர்களோ அதற்கேற்றார்ப் போலதான்  பலனும் கிடைக்கும் .

    பல தற்கொலைகளும் ,கள்ளக் காதலுக்காக கணவனைக் கொலைசெய்வதும் , மனைவியைக் கொலை செய்வதும் இப்போதெல்லாம் அதிகமாகிவருகிறது.  மிகக் கேவலமாக இருக்கிறது திருமணமான பின்னரும் ஏற்படும் கள்ளக் காதலுக்காக தாம் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்யும் அளவுக்கு போகும் ஆணையும் ,பெண்ணையும் நினைத்தால் நாம் மீண்டும் கற்காலத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    அது மட்டுமல்ல காதலை காமம்  என்று தவறாக புரிந்து கொண்டதனால் ஏறப்டும் கேவலமான  வாழ்க்கைத் தரம், இந்த நிலையை மாற்றியே ஆகவேண்டும்.

    காதலிப்பதே ஒரு தற்கொலைக்கு  சமமானதுதான்,  அதற்குப் பிறகு மீண்டும் ஒரு தற்கொலையா…?    வாழ்வதற்கு தைரியம் வேண்டுமா..?  அல்லது சாவதற்கு தைரியம் வேண்டுமா..?   யோசித்துப் பார்த்தால் சாவதற்கு அசட்டுத் தைரியம் போதும் .  ஆனால் வாழ்வதற்கு புத்திசாலித்தனமான தைரியம் வேண்டும்.  வாழ்வதுதான் கடினம், சாவது சுலபம்  .

    “கண்ணில் காதலியர் கடைக்கண் காட்டி விட்டால்

    மண்ணில் குமரருக்கு மாமலையும்  சிறு கடுகாம்”

    என்னும் யுகக் கவிஞன் பாரதியின்  வார்த்தைகள்   நினைவுக்கு வருகின்றன

    “ துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே

    காதல் பொல்லாதே”  என்று கொஞ்சம் மாற்றிப் பாடத் தோன்றுகிறது

    வாழ்க்கையின் நிதர்சனத்தை  எதிர்கொள்ளத் தைரியமில்லாதவர்கள் காதலிக்கத்  தகுதி இல்லாதவர்கள்   என்பது என் கருத்து,

    “வாழ்ந்து பார்ப்போம் வா நைனா

    வாழ்க்கை இது சுலபம் சுலபம்

    வாழத்தெரிந்தால்   வா நைனா தடைகளெல்லாம் விலகும் விலகும்”

    என்று பழைய பாட்டை மாற்றிப் பாடலாம்

    காதலிக்கும் முன்னர் கொஞ்சம் யோசித்து திடமாக  திட்டமிட்டு காதலித்தால் காதலில் இவ்வளவு அவஸ்தைகள் இல்லை.பருவ ஈர்ப்பை காதல் என்று நம்பி  காதலிக்க ஆரம்பித்தால் இதுதான் கதி

    அதுவும் தவிர ஒவ்வொன்றிற்கு ஒவ்வொரு தகுதி நிர்ணயம் இருப்பதைப் போல காதலிக்கவும் சில தகுதிகள் வேண்டும். என்று ஒரு நியதி நாமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்தத் தகுதிகள் இருக்கிறதா என்று ஆராயந்து அதற்குப் பின் காதலிக்கத் தொடங்கவேண்டும்.

    அப்படி தகுதியில்லாத காதல்  என்றால்,மறு பரிசீலனை செய்து ஏற்படப் போகும் பின் விளைவுகள் அத்தனையையும் தாங்களே சமாளிக்க வேண்டும் யாரையும் உதவிக்கு அழைக்கக் கூடாது  அப்படி அழைத்தாலும் யாரும் உதவிக்கு போகக் கூடாது.  என்று ஒரு கட்டுப்படு விதிக்கவேண்டும்.அப்போது முன்கூட்டியே யோசிப்பார்கள்

    இன்னும் சற்று மேலே போய் சிந்தித்தால்  வயதுக்கு வராத இளம் தளிர்களைக் கற்பழிப்பதும்   கொல்வதும் நாமெல்லாரும் மனிதர்களா அல்லது மிருகமா என்று ஆத்திரம் வருகிறது

    இப்போது புதியதாக ஒரு அசிங்கமான  கலாச்சாரம் பத்திரிகையில் வெளியிட்டுள்ளார்கள், ஆண் விபசாரிகள் என்று தலைப்பிட்டு .   ஒரு ஆண் விபசாரி சொல்லுகிறார் ஒரு நாளைக்கு   25 ஆயிரம் சம்பாதிப்பாராம், மாதத்துக்கு 10 நாட்கள் மட்டுமே மற்ற நாட்களில் சம்பாதித்த வருமானத்தை வைத்து  சந்தோஷமாக இருப்பாராம், இதை பத்திரிகைகள் வெளியிடுகின்றன , கேவலமாக இல்லையா நாட்டின் நிலைமை.

    இதைப் போன்ற இழி செயல்களைக் கட்டுப்படுத்தாமல் இருந்தால் அது அரசுக்கே கேவலமில்லையா……..? உண்மைக் காதல் வாழ்க

    தற்கால இளைஞர்கள் தங்களுடைய  உண்மையான மனோசக்தியை நாட்டுக்காகவோ, தங்களின் உண்மையான நல்ல நோக்கத்துக்காகவோ பயன் படுத்துவதை விட்டு  எப்பொழுது பார்த்தாலும் காதல்,காதல்,காதல்   என்று அலைவதைப் பார்க்கும் போது என் மனம்  குமுறுகிறது ,அதனால்தான் பெரியவர்களாகிய நாம் , சிறியவர்கள் நம்மை திட்டினாலும் பரவாயில்லை

    என்று கூடியமட்டும் நல்லதைச் சொல்லுவோம் , வருங்காலம் வளமாக வேண்டுமானால் இளைஞர்கள் விழிப்புணர்வு பெற்று ,நம் நாட்டை உயர்த்த கீழ்த்தரமான உணர்வுகளை  களைந்து விட்டு உன்னதமான லட்ஷியத்துடன் வாழ ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடுதான்  எழுதுகிறேன் .   நம் நாடு முன்பு ஆங்கிலேயர்களிடம் அடிமைப் பட்டிருந்தது

    இப்போது நம்மவர்களிடமே  அடிமைப் பட்டிருக்கிறது  இதை உணர்ந்து நாம் மீண்டும் ஒரு சுதந்திரத்தை அடைந்து  வருங்கால வாரிசுகளுக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான  வளமான நாட்டைஉருவாக்க இளைஞர்கள் முன் வரவேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் .

    காதலுக்கு நேரம் ஒதுக்குங்கள்,இது வாலிப வயது .உலகத்தில் உள்ள மொத்த தவறையும் நாமே செய்து ,அதன் மூலமாகவரும்  விளைவுகளை பட்டுத் தெரிந்து கொள்ள நம்மால் மட்டும் முடியாது,ஏனென்றால்  அதற்கு நமக்கு நாம் வாழும் காலம் போதாது .அதனால் மற்றவர்கள் அனுபவத்தையும் கண்டு கேட்டு  அதில் உள்ள குறைகளை நீக்கிவிட்டு காதலியுங்கள் .அப்போது இனிமையான காதல் வாழ்க்கை அமையும் .

    உண்மையாக சொல்லுகிறேன்   ஆண்களும் பெண்களும் எப்போதுமே தவறு செய்யும் நோக்கத்தோடு இருப்பதில்லை , அவர்களின் பாலின உணர்வுகள் தூண்டப்படும்போதுதான் அவர்கள் தன் வயமிழக்கிறார்கள்  .ஆனால் தூண்டப் படுதலின் காரணமாகவே அப்   “பாவிகள் ” ஆகின்றனர் .ஆகவே பெண்களும் ஆண்களும்  “தூண்டாமலும் ,ஒழுக்கம் தாண்டாமலும் இருந்தால்   ஆணும் பெண்ணும் சமமான ஒரு நல்ல  சமூதாயம் மலரும்

    “ஆண்களிலும் ,பெண்களிலும் இதற்கு முன்னுதாரணமும் ,  விதி விலக்குகளும் உண்டு ”  நான் ஒட்டு மொத்த ஆண்களையும் ,ஒட்டு மொத்த பெண்களையும் குறை சொல்லவில்லை . ஆனால் சிலர் செய்யும் தவறுகளுகளால்  நாம் அனைவருமே  பாதிக்கப் படுகிறோம் .தார்மீகப் பொறுப்பு ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப் படுகிறோம் .

    ஆகவே  காதல் இன்னும்  இருக்கிறதா  என்று இக்கால இளைஞர்கள்தான் சிந்திக்க வேண்டும்.

    அது மட்டுமல்ல  உண்மையாய்க் காதலிப்பவர்  திருமணத்துக்கு முன்னர்  யாரைக் காதலித்தார்களோ  அவரையே திருமணத்துக்குப் பின்னும்  உண்மையாகக் காதலிப்பார்கள். ஆகவே உண்மையாய்க் காதலியுங்கள்.காதலிப்பவரையே திருமணம் செய்து கொள்ளுங்கள். அப்போது ப்ரச்சனைகள் வராது.

    அல்லது நாம் காதலிப்பவர்  வேறு ஒருவரைக் காதலிக்கிறார்  அவருடன் வாழ்ந்தால் இன்பமாக  இருப்பார்  என்று தெரிந்தால்  அவரை அவர் இஷ்டத்துக்கு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் உரிமைகளை அளித்து  அவருடைய  அடிப்படை உரிமைகளை மறுக்காமல் வாழக் கற்றுக் கொள்வோம்

    இப்படி ஒரு நடைமுறைக்கு  நாமெல்லோரும் மாறி விட்டு அதன் பின்னர்  காதலர் தினம்  கொண்டாடுவோம்.

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    படத்திற்கு நன்றி :

    http://www.sonofthesouth.net/leefoundation/civil-war/1864/february/valentines-day.htm

    Share
  • “ வறு கடலை “

    தமிழ்த்தேனீ

    மிஸ்டர் ரமேஷ் இந்தப் ப்ராஜக்டை  இந்தவாரம் எப்பிடியும்  முடிச்சிருவ்விங்கன்னு  நம்பறேன். இதுக்கு உங்களுக்கு என்ன உதவி வேணுமோ  நீங்க தயங்காம கேளுங்க. ஆனால் முடிக்கணும் சரியா என்று கேட்டுவிட்டு அதில் தனக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாதது போல் சென்ற மேனேஜரைப் பார்த்து சரிசார் முடிச்சிடறேன் என்று கூறிவிட்டு சலிப்புடன் நாற்காலியில் வந்து கம்ப்யூட்டர்  முன் உட்கார்ந்தான் ரமேஷ்

    செல்போன்  அழைத்தது எடுத்து ரமேஷ் ஹியர் என்றான். உடனடியாக அழைப்பு துண்டிக்கப்பட்டது. எண்ணைப் பார்த்தான், தெரிந்த எண்ணாகத் தோன்றவில்லை , யாராவது தவறாக எண் போட்டு அவரை அழைத்திருப்பார்கள்.  செல்போனை வைத்துவிட்டு மீண்டும் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

    உங்களுக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது தேவையானால் உபயோகியுங்கள் ,அல்லது நிராகரியுங்கள்  என்று ஒரு சிணுங்கலுடன் இனிய குரலில் அறிவித்தது  செல்போன் . எடுத்து செய்தியைப் படித்தான், அதில் மன்னிக்கவும்  தவறுதலாக உங்கள் எண்ணைப் போட்டு உங்களை தொல்லைப் படுத்திவிட்டேன். மன்னிக்கவும்   என்றிருந்தது.

    அடேடே  தவறுக்கு வருந்தும் மனிதர்களும்  இருக்கிறார்களே என்று அதே  செய்தியில் அதனால் பரவாயில்லை வருந்தவேண்டாம் என்று எழுதி  செய்தியை திருப்பி அனுப்பினார். செய்தி அனுப்பப்பட்டது  என்று அறிவித்தது .மீண்டும் ஒரு செய்தி  மிக்க மகிழ்ச்சி ,உங்கள்  இணைப்பு எண் மிகவும் மாடர்னாக இருக்கிறதே  நீங்கள் யாரென்று அறிந்து கொள்ளலாமா? என்றிருந்தது.

    மீண்டும் நான் யாரென்று தாராளமாக அறிந்து கொள்ளலாமே ,நான் ஒரு கம்ப்யூட்டர் இஞ்சினீயர்  என் பெயர் ரமேஷ். காக்னிசென்ட் டெக்னாலஜிஸ் சில் வேலை செய்கிறேன் என்று எழுதி அனுப்பிவிட்டு மீண்டும் வேலையைத் தொடர்ந்தான்..

    மீண்டும் ஒரு செய்தி ! அதில்  மிக்க மகிழ்ச்சி நீங்கள் மிகவும் பொறுமையாக பதில் கூறுகிறீர்கள் நன்றி , நீங்கள் எங்கிருக்கிறீர்கள் ?என்று செய்தி கேட்டது.

    நான்  அண்ணா நகரில் இருக்கிறேன், ,இவ்வளவு அக்கரையாக கேட்கிறீர்களே நீங்கள் யார் ,உங்கள் பெயரென்ன?

    என் பெயர் ப்ரவீணா நானும் கம்ப்யூட்டர் இஞ்சினீயர்தான். நான் அடையாறில் இருக்கிறேன்.நான் மேக்னம் கம்ப்யூட்டரில் வேலை செய்கிறேன்.  வேலைக்கு நடுவே சற்றே ஊக்கப்படுத்திக்கொள்ளலாம் என்றுதான் உங்களுக்கு தகவல் அனுப்பினேன், தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் . அடுத்தடுத்து  செய்திகள் பறிமாறிக்கொள்ளப்பட்டன

    அதனால் பரவாயில்லை, உண்மையிலேயே  தலைபிய்ச்சிக்கற வேலைக்கு நடுவுலே இது மாதிரி சின்னச் சின்ன சந்தோஷங்கள் இருந்தால்தான் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும் ,மகிழ்ச்சி.

    அடுத்து செல்லில் அழைப்பு  வந்தது . எண்ணைப் பார்த்தான் ரமேஷ், அவள்தான். மனம் சுறுசுறுப்பாயிற்று.  ஹலோ என்றான் ரமேஷ்

    நான்தான் ப்ரவீணா ,இப்போது  தெரிந்தே சரியாகத்தான் அழைத்திருக்கிறேன்  என்றாள் அவள். .  ஓ மகிழ்ச்சி! உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கு என்றான் ரமேஷ்

    நன்றி, நீங்களும் நன்றாகத்தான் பேசுகிறீர்கள், உங்கள் குரல்லேயும் ஒரு கவர்ச்சி இருக்கு என்றாள் அவள்.

    நன்றி  சற்று நேரம் என்ன பேசுவதென்றே தெரியாமல் சிறு மௌனம். மீண்டும் ப்ரவீணா கலகலவென்று சிரிப்பது கேட்டது. மேலே என்ன பேசுவது என்று தெரியவில்லையா, எனக்கும் அதே நிலைதான். நாம் நேரில் சந்திக்கலாமா என்றாள் அவள்.

    காத்திருந்ததைப் போல  ஓ சந்திப்போமே இன்று  சந்திக்கலாம் மாலை ஐந்து  மணிக்கு, நானும் உங்களைப் பார்க்க  ஆவலாய் இருக்கிறேன் என்றான்  ரமேஷ்.   ஹும்  எங்கே சந்திக்கலாம், நான் உங்களை எப்படி அடையாளம் தெரிஞ்சிக்கறது ?

    நான் இன்று பச்சைக்  கலர் டாப்ஸும் ஜீன்ஸும் போட்டிருக்கேன்.. நீங்கள் என்ன உடை போட்டுக்கொண்டு வருவீர்கள் என்றாள் ப்ரவீணா

    நான் இன்று ஆபீஸுக்கு  வந்திருக்கும் உடையிலேயே  வரேன். கையில் மஞ்சள் நிற வானிடி பேக் வைத்திருப்பேன். காந்தி சிலையருகே நிக்கறேன் என்றாள் ப்ரவீணா..

    மாலை ஐந்து மணி  காந்தி சிலை அருகே ரமேஷ்  சென்ற போது ப்ரவீணா தூரத்தில் தெரிந்தாள் அவன் மனம் உற்சாகமானது.

    அருகே சென்று  வாவ் அழகா இருக்கே  நீ என்றான்  ரமேஷ்.

    தேங்க்யூ ரமேஷ் நீங்களும்தான் என்றாள் ப்ரவீணா வெகுநாட்கள் பழகியதைப் போன்று.

    இருவரும் ஒருவரை ஒருவர் எடைபோட்டுக்கொண்டே  பார்வையால் விழுங்கியபடி அருகருகே அமர்ந்தனர். ரமேஷ்  கொண்டு வந்திருந்த மல்லிகைப் பூவையும் இனிப்பையும் அவளிடம் கொடுத்தான்.

    ப்ரவீணா அவள் கொண்டு வந்திருந்த புத்தம் புது கீ செயினை அவனிடம் கொடுத்தாள் . இருவரும் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர். யுகம் யுகமாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தவர்களைப் போன்ற உணர்வு இருவருக்குமே, சூழ்நிலையே மறந்து போய் இருவரும் ஒருவரில் ஒருவர் லயித்திருந்தனர். ஒருவரை ஒருவர் பார்வையாலேயே விழுங்கிக் கொண்டிருந்தனர். .

    திடீரென்று ஒரு  கூக்குரல், முன்னபின்ன தெரியாத  எவனையாவது விவரமே தெரியாம  காதலிக்க வேண்டியது, அப்புறம் அவன் கைவிட்டுட்டான்னு  இப்பிடிக் கடல்லே விழுந்து தற்கொலை செஞ்சிக்க வேண்டியது,

    வரவர விவஸ்தையே  இல்லாம போச்சு நாடு. ஒரு நாளாவது  நம்மை நிம்மதியா இருக்க விடறானுங்களா  இந்தக் காலத்துப்  பசங்க. அவங்க கல்யாணம் செஞ்சிகிட்டு  தாலிகட்டிக்கிட்டு அந்த்த் தாலியை மதிக்கறாங்களோ  இல்லையோ  நம்ம தாலியறுக்கறானுங்க.

    பெத்தவங்க இப்பிடியே  கவனிக்காம விட்டுட்டு அப்புறம் அய்யோ  போச்சேன்னு கதர்றாங்க. கவனிக்க வேண்டிய காலத்திலே  கவனிக்காம அப்புறம் வாயிலே வயித்திலே அடிச்சுகிட்டு  என்னா ப்ரயோசனம் என்று முனகியபடி , 507   பொதுமக்களை  தள்ளிப் போகச்சொல்லுயா கூட்டம் போடவேணாம் . அப்புறம் ஏதாவது முக்கியமான தடையம் காணாமப் போயிடும் என்றார் காவல்துரை அதிகாரி கேசவன்.

    அந்த போட்டோ கிராபரை நிறைய கோணத்திலே படம் எடுக்க சொல்லுய்யா,  வேன் வந்திருச்சா, போட்டோ எடுத்தப்புறம் ஏதாவது தடையம் கிடைக்குதான்னு பாரு, யாரு ,எந்து ஊருன்னு கண்டுபிடிக்கலாம் , சே  என்னா பொழைப்புய்யா இந்தப் போலீஸ்காரன் உத்யோகம் ,ஒரு நாளாவது ஒழுங்கா வீட்டுக்கு சரியான நேரத்திலே போக முடியுதா?.பொண்டாட்டி புள்ளை குட்டிகளைக் கவனிக்க முடியுதா? என்று சலித்துக்கொண்டே வேலையைத் தொடர்ந்தார் அவர்.

    ப்ரவீணா ரமேஷிடம் குனிந்து ரகசியக் குரலில்   இங்கே இருந்து போயிடலாம் ,அதோ அந்தப் போலீஸ்காரர் என் அப்பா என்றாள் .

                                  சுபம்

    Share
  • குடியரசு தினம்

     

    தமிழ்த்தேனீ

    ‘மாம்பழத்து வண்டு’ 

    மாமரத்தில் பூக்கள் பூக்கும் போது வண்டுகள்

    தேனை உறிஞ்ஜ பூக்களின் உள்ளே நுழையுமாம்

    அது பூக்கள் காயாக மாறும் காலமாயிருந்தால்

    பூக்கள் மூடிக் கொள்ளுமாம், அப்போது

    அந்த வண்டு அந்த மாங்காயின் உள்ளே

    மாட்டிக் கொண்டு,மாங்காயின் கடினமான

    ஓட்டைப் பிளந்து கொண்டு வெளியே வரமுடியாமல்

    உள்ளேயே இருந்து கொண்டு,

    அந்த மாங்காய் பழுக்கும்வரை காத்திருந்து, யாராவது மாம்பழம் உண்ணும்போது மாங்கொட்டையிலிருந்து பெருமுயற்சியினால் வெளியே வருமாம் ,

    ஆனால் அப்படி வண்டு துளைத்த பழம்

    மிகவும் இனிப்பாக இருக்கும் என்று சொல்லுவார்கள்

    அது போன்ற சுவையான சுதந்திரத்தை,

    குடியரசு தினத்தை நாம் அடைய நாம் பட்ட பாடுகள்

    அப்பப்பா சொல்லி முடியாது…..

    அது போல முடியாட்சியிலிருந்து அதாவது

    மன்னராட்சியிலிருந்து,வியாபாரம் என்னும் பெயரிலே

    நம் நாட்டுக்குள் நுழைந்த அன்னியர் ,அதாவது பிரிட்டிஷார்

    நம் நாட்டையே ஏகபோகமாக ,தங்கள் வசப்படுத்திக் கொண்டு

    நம்மைப் படுத்திய பாடு இருக்கிறதே..அப்பப்பா

    நம் மன்னர்கள் ஆண்ட காலங்களில் கூட ஒருசில

    கொடுங்கோல் மன்னர்களின் அட்சியைத் தவிற மற்ற

    காலங்களில் நாம் சுபிக்க்ஷமாய்த்தான் வாழ்ந்திருக்கிறோம்

     ஆனால் பிரிட்டிஷார் ஆண்ட காலங்களில் மாங்காய்

    ஓட்டின் உள்ளே மாட்டிக் கொண்ட வண்டு போல்

    சிறைப்பட்டு பறக்க முடியாமல் முடங்கிக் கிடந்தோம் ,

    மீண்டும் சுதந்திரம் என்னும் மாங்கனி பழுத்தபின்தான்

    நாம் பறக்கத் துவங்கினோம்,சுதந்திரம் என்னும் மாங்கனி

    பழுப்பதற்கு எத்துணை காலமாற்றங்கள்,

    எத்துணை இயற்கை மாற்றங்கள்,எத்துணை மனமாற்றங்கள்,

    எத்துணை ஏமாற்றங்கள் ,எத்துணை இழப்புகள்,

    அத்தனையையும் சந்தித்திருக்கிறோம்

     தேன் என்று நினைத்து உண்ணும் ஆசையினால்

    நாம் வியாபாரம் என்னும் வலையை மகரந்தம் என்று

    நினைத்து , பூக்கள் என்று நினைத்து அன்னியர் வலையின்

    உள்ளே நுழைந்து அடிமைத்தளையில் மாட்டிக் கொண்ட

    வண்டு போல்,அன்னியர் விரித்த வியாபார வலையில்

    மாட்டிக் கொண்டு ,அன்னியர் ஆட்சியில் அனுபவித்த

    கொடுமைகள் ஏராளம் ,அந்த அடிமைத்தளையிலிருந்து,

    விடுபட விழிப்புணர்வு ஏற்படுத்தி,மக்களுக்கு அறிவுறை கூறி

    தங்கள் இளமை வளமை போன்றவற்றை,

    தாங்களாகவே விட்டுக் கொடுத்து ,அனேக தியாகங்கள் செய்து ,

    தம் சொந்த வாழ்வைத் துறந்து ,மக்களுக்காகவே தாய்நாட்டு

    சுதந்திரத்துக்காகவே பாடுபட்ட பெரியோர்கள்

    பாடுபட்டு ,மிகவும் பாடுபட்டு தங்கள் இன்னுயிரையும்

    அளித்து பாடுபட்டு வாங்கிய சுதந்திரம் நம் நாட்டு

    சுதந்திரம்,அப்படிப்பட்ட சுதந்திர உணர்வை ஊட்ட

    மஹாத்மா காந்தியடிகள் 1930ம் ஆண்டு ஜனவரி மாதம்

    போட்ட விதைதான் குடியரசு தினம் ,

    “ குடியரசு நாள் என்பதன் அர்த்தமே

    “பூரண சுயராச்சியமே நமது உடனடியான லட்ஷியமென்பதுதானே “

    அதாவது மக்களே தங்களை ஆள தாங்களே

    தங்கள் ப்ரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமையை

    வலியுறுத்தும் நாள், அதற்குப் பிறகு 17 ஆண்டுகள் கழித்து ,

    நாம் சுதந்திரமடைந்தோம்,1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் நாள்

    இந்தப் பதினேழு ஆண்டுகளும்,அதற்கு முன்னும் நம்மை

    அடிமைப் படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷார் ஆண்ட காலங்களிலும் எத்துணை
    கொடுமையான கடுமையான

    அடிமைத் தனத்தை நாம் அனுபவித்திருக்கிறோம்

    கொஞ்ஜம் நினைத்துப் பார்ப்போம்

    அதற்குப் பிறகு நம் இந்திய வரலாற்றிலே

    எத்துணையோ மாற்றங்கள்,தியாகங்கள்,

    மக்களின் விழிப்புணர்ச்சி, நம்முடைய முன்னோர்கள்

    வீரமுழக்கமிட்டு பல தியாகங்கள் செய்து ஏற்படுத்திய

    சுதந்திர பாரதம்,மஹாத்மா காந்தி விதைத்த

    அந்த 1930ம் ஆண்டுஜனவரி மாதம் 26ம் தேதி ,

    அதுதானே சுதந்திர வேட்கையை இன்னும் அதிகரித்தது

    நம் மனதில் அதனால்தான் இன்றும் எல்லா

    நாட்டிலும் சுதந்திர தினத்தை மட்டும் கொண்டாடும்

    வழக்கம் இருந்தாலும் ,நம் தாய்த்திரு நாட்டில்

    பாரத தேசத்தில் மட்டும் இன்றும்

     குடியரசு தினத்தை ஜனவரி 26ம் தேதியும்

    சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15ம் நாளும்

    கொண்டாடும் வழக்கம் ஏற்படுத்தி இருக்கிறோம்

     “ ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னும்

    வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ “

     என்று பாரதி மஹா காளியிடம் கதறியது நம் நினைவில்

    என்றுமே இருக்க வேண்டுமே, கப்பலோட்டிய தமிழன்

    வ வு சிதம்பரம் பிள்ளை நம் தாய் நாட்டின் சுதந்திரத்துக்காக

    செக்கிழுத்து பட்ட இன்னல்கள் நாம் அறியோமா

    வாஞ்ஜினாதன் ஆஷ் துரையைக் கொன்று விட்டு

    தானும் சுட்டுக் கொண்டு மடிந்ததை நாம் அறியோமா

    சுப்ரமணிய சிவா சிறையில் வாடி சீக்கு வசப்பட்டது

    நாம் அறியோமா ,ஜவஹர்லால் நேரு அவ்ர்கள் தன்னுடைய

    சொத்துக்களை நம் நாட்டின் வளர்ச்சிக்காக தானமாக

    அளித்தது நாம் அறியோமா, மூதறிஞ்ஜர் ராஜாஜி,

    கக்கன் ,காமராஜர் , போன்றோர் நமக்காகப் பட்ட துன்பங்கள்

    நாமறியோமா ,கடைசீ சொட்டு குறுதி இருக்கும் வரை

    கையில் பிடித்த நம் தேசக் கொடியைக் கைவிடாது

    தன் இன்னுயிர் நீத்த கொடி காத்த குமரன் ,

    இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்,

    நமக்காகப் பாடு பட்டு ,சுதந்திரம் வாங்கிக்

    கொடுத்த அத்துணைபேரையும் பட்டியலிடவேண்டுமானால்

    நம் ஆயுசுக்கும் பட்டியலிடலாம்

     அப்படியெல்லாம் பாடு பட்டு நம் முன்னோர்கள்

    வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தை சுதந்திர நாளிலும்,

    குடியரசு நாளிலும் நாம் கொண்டாடுவோம்

    தன்னைப் பழித்தாலும் பொறுப்போம்

    ஆனால் தாயைப் பழித்தவனை

    தாயே தடுத்தாலும் விடோம் என்னும்

    கொள்கையை மக்கள் மனதிலே,ஊறச்செய்யும்

    ஒரு புனித நாளாக, நம் தாய் நாட்டுக்கு பாதகம்

    செய்பவரை அவர் யாராயிருந்தாலும் மன்னிக்க மாட்டோம்

    என்னும் உறுதி மொழி எடுக்கும் நாளாக குடியரசு தினத்தை

    கொண்டாடுவோமே,

    82 வயதான குடியரசு நாளை நம் தேசத்துக்காகப் பாடுபட்ட

    ஒரு முதியவரின் நிலையில் வைத்து நன்றி சொல்லி

    இனியாவது குடிமகனாய் நம் கடமை என்னவென்றுணர்ந்து

     நம் நாட்டை வளமான நாடாக மாற்றும்

    முயற்சியாக,பல நல்ல ப்ரதிக்யைகளை

    மனதில் கொண்டு சத்தியப் ப்ரமாணம் எடுத்துக் கொண்டு

    கொடி வணக்கம் செய்து ,நம் பாரத தாயை வணங்கி ,

    நம் நாட்டின் கொடியை மனமகிழ்ச்சியுடன் ஏற்றி

    நம் தேசக் கொடி பட்டொளி வீசிப் பறப்பதைக் கண்டு

    மனம் முழுவதும் சந்தோஷமாக அனைவருக்கும்

    இனிப்புகள் வழங்கி நலிவுற்றோருக்கு நன்மைகள்

    செய்து,ஜாதி மத இன, மொழி பேதமில்லாது

    அனைவரும் ஒற்றுமையாக ஒரு

    நல்ல நாளாக கொண்டாடுவோமே,சுதந்திரம் ,

    குடியரசு என்னும் இனிய கனிகளை நாம் அனைவரும்

    சேர்ந்து சுவைப்போமே,மனிதம் மலரட்டும் உலக அரங்கிலே

    நம் தேசம் இந்தியா சர்வ வல்லமை பொருந்திய

    நல்ல நாடாக செழித்தோங்கட்டும்

    ” தாயின் மணிக்கொடி பாரீர்

    அதைத் தாழ்ந்து பணிந்து

    புகழ்ந்திட வாரீர் “

    Share
  • பலா மரங்கள்

       தமிழ்த்தேனீ                

     

    இந்த ஜென்மத்திலே நான் அவளைத் திரும்பிக் கூட பாக்கமாட்டேன். எவ்ளோ திமிர் இருந்தா இப்பிடி ஒரு காரியத்தை செய்வா அவ ?     என் தங்கை கல்யாணியும்  அவ புருஷன் ரமேஷும் என்னா குறை வெச்சாங்க இந்தப் பொண்ணு ரேணுகாவுக்கு . பாத்துப் பாத்து வளத்தாங்க, கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க, ஒரே  பொண்ணு ஒரே பொண்ணுன்னு தலைமேலே வெச்சுக் கூத்தாடினாங்க, செல்லமோ செல்லம் அப்பிடி ஒரு செல்லம்.

    இந்தப் பொண்ணு ரேணுகா மேலே எவ்ளோ பாசம் வெச்சிருந்தாங்க ரெண்டு பேரும், நான் அப்பவே சொன்னேன்  அளவுக்கு மீறி செல்லம் குடுக்காதீங்க அப்புறம் மதிக்கமாட்டான்னு ,கேட்டாங்களா. இப்போ அவதிப்படறாங்க.  இந்தப் பொண்ணு ரேணுகா இப்பிடிச் செஞ்சிடிச்சே.

    எவ்ளோ தைரியம் இருந்தா  நான் அவனைத்தான்  கட்டிக்குவேன் , நீங்க  சம்மதிக்கலேன்னாக்   கல்யாணமே செஞ்சிக்க மாட்டேன் அப்பிடீன்னு சொல்லுவா . ஆனாலும் இந்தக் காலத்துப் பசங்களுக்கு ரொம்பத் திமிருங்க  , நம்மை யாரு என்னா செய்ய முடியும் நாமதான் சம்பாதிக்கிறோமே அப்பிடீங்கற திமிரு . இந்தத் திமிரும் ,தைரியமும் எங்கேருந்து வருதுன்னே தெரியலை.

    உங்களுக்குத் தெரியுமா  கல்யாண ஏற்பாடெல்லாம் செஞ்சு வெச்சிட்டு அப்பா அம்மாகிட்டே சொல்றாளாம் நாளன்னிக்கு கல்யாணம் நீங்க ரெண்டு பேரும்  வந்து நடத்தி வையுங்க. எனக்கு வேற வழி தெரியலேன்னு .

    அக்கா நான் என்னா செய்யறதுன்னே தெரியலே. நாளைக்கே எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சுன்னா எனக்கு மானமே போயிடும். பொண்ணை சரியா வளக்கலேன்னு  என்னைத்தான் குதறி எடுப்பாங்க உறவுக்காரங்க அத்தனை பேரும். அப்பிடீன்னு அழறா கல்யாணி.

    இனிமே அந்தப் பொண்ணு ரேணுகா இந்த வீட்டு வாசப்படியை மிதிக்கக் கூடாது.  என்று கத்திக் கொண்டே இருந்தாள் ருக்மணி.

    ஆனது ஆயிப் போச்சு . இந்தக் காலத்துப் பசங்க சொன்னா கேக்குமா, அதுவும் வேலைக்கு போற பொண்ணு. நாலு பேருகிட்ட  பழகணும் . அப்போ இப்பிடி ஏதாச்சும்  ஆகும் , என்னா செய்யறது. என்றார் சொக்கலிங்கம்.

    நீங்க சும்மா இருங்க ! வேலைக்கு போனா என்னா நாலு பேருகிட்ட பழகினா என்னா? நம்ம குடும்ப பாரம்பரியம் இன்னா, தகுதி என்னான்னு தெரியாம எது வேணா செய்யலாமா? எனக்கு வர ஆத்திரத்துக்கு  அப்பிடியே போயி கன்னத்திலே ரெண்டு அறைவிட்டாத்தான் மனசு அடங்கும் போல இருக்குது.

    .என்னாலே ஜீரணிக்கவே முடியலைங்க. நீங்க எப்பிடித்தான் எல்லாத்தையும் கேட்டுட்டு இப்பவும் நிதானமா இருக்கீங்களோ எனக்கு புரியவே இல்லே என்றாள் ருக்மணி.

    இதோ பாரு நாம கத்தி ,பதறி என்னா ஆகப் போகுது . எல்லாம் அது இஷ்டத்துக்கு நடக்குதுங்க. சரி நாம கல்யாணத்துக்கு போக வேணாம், நீ கத்தி உடம்பைக் கெடுத்துக்காதே. என்றார் சொக்கலிங்கம்.

    நான் எப்பிடிங்க போவேன் கல்யாணத்துக்கு . போகமாட்டேன், நீங்களும் போகக் கூட்து சொல்லிபுட்டேன் . வரவர இந்தக் காலத்துப் பசங்களுக்கு  எல்லாமே அவசரம். எதிலேயும் நிதானமில்லே. கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு அலையுதுங்க.

    மூணு மாசமா நானும் பாத்துகிட்டுதான் இருக்கேன்  . உன் தங்கை கல்யாணி போன் செஞ்சு பேசும்போது  என்ன விஷயம்னு நான் கேட்டா ஒண்ணுமில்லேங்க ,இதெல்லா பொம்பளைங்க சமாச்சாரம் அப்பிடீன்னு மழுப்புவே.  அப்புறம் மறைவாப் போயி நின்னுகிட்டு கண்ணைத் துடைச்சிக்குவே . கவனிச்சிகிட்டுத்தான் இருக்கேன். சரி நமக்கெதுக்கு வம்புன்னு நானும்  தள்ளிப் போயிடுவேன். 

    ஆனாலும் என் மனசுக்குள்ளே இது ஏதோ விவகாரம்னு ஒரு பக்ஷி சொல்லிகிட்டே இருந்துது.   கல்யாணிகிட்டே நீ பேசும்போதெல்லாம்  உன்னையறியாமே நீ கவலைப்படறது எனக்கு புரிஞ்சுது. என்னதான் நீ சிரிப்பா முகத்தை வெச்சிகிட்டாலும் நான் உன்னோட பெட்டர் ஹாஃப் தானே எனக்குத் தெரியாதா. இருந்தாலும் நீயே சமாளிச்சு சரி செஞ்சிடுவேன்னு நம்பி இருந்தேன்.

    சரி விடு  நாம என்னதான் செஞ்சாலும் ஒவ்வொரு விஷயத்துக்கும் அதுக்குன்னு ஒரு தலையெழுத்து இருக்கு. மாத்த முடியாது.  சரி இதெல்லாம் மனசிலேருந்து தூக்கிப் போட்டுட்டு போயி கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு. காலையிலேருந்து வேலை செஞ்சு களைச்சுப் போயிருக்கே என்றார் சொக்கலிங்கம்.

    முடியலைங்க நிம்மதியா தூங்க முடியலே  இந்தப் பொண்ணு செஞ்ச காரியம் என்னையும் கல்யாணியையும்  தூங்க விடாம செஞ்சிருச்சு என்று பேசிக்கொண்டே இருந்தவள்  அயற்சியில் அப்படியே உறங்கிப் போனாள் ருக்மணி. அவளுக்கு போர்த்திவிட்டுவிட்டு வந்து  கூடத்தில் உட்கார்ந்தார்  சொக்கலிங்கம்.

    தொலைக் காட்சியில் சிறப்புச் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த  சொக்கலிங்கம். எழுந்து சமையலறைக்குப் போய்  சுடச்சுட காப்பி போட்டு எடுத்துக் கொன்டு வந்து ருக்மணி  எழுந்திரு இந்தக் காப்பியைக் குடி என்று அவளிடம் காப்பிக் கோப்பையை நீட்டினார்.

    தொலைபேசி அழைத்தது  கல்யாணிதான் பேசுவான்னு நெனைக்கிறேன் என்றபடி  ரிசீவரை எடுத்து சொல்லு கல்யாணி என்றாள்  ருக்மணி.   தொலைபேசியில் பேசிவிட்டு சொக்கலிங்கம் அருகே வந்து உட்கார்ந்து  யாரு பேசினா தெரியுமா ! என்றாள் ருக்மணி. 

    அதெல்லாம் இருக்கட்டும் முதல்லே காப்பியைக் குடி ஆறியே போச்சு.நான் வேணா போயி சுடவெச்சிக் கொண்டுவரட்டுமா என்றார். வேணாங்க இப்பிடியே குடிக்கறேன் என்றபடி கடகடவென்று காப்பியைக் குடித்தாள் ருக்மணி

    இதைக் கேளுங்க ரேணுகாவே  பேசிச்சு !  அவ எல்லா விஷயத்தையும் சொன்னா. கேக்கக் கேக்க  அவ சொல்றதிலேயும் நியாயம் இருக்குறா மாதிரிதான் தெரியுது. தப்போ தவறோ ஏதோ தெரியாத்தனமா காதலிச்சிட்டோம். கல்யாணம்தானே செஞ்சிக்கப் போறோம் . இல்லேன்னா என் வாழ்க்கையே கெட்டுப் போகாதா? அப்பிடீங்கறா.

    அவ என்ன செய்வா சின்னப் பொண்ணு பாவம். பெரிய மனுஷி மாதிரி பேசறாங்க. பெரியம்மா நீங்களும் பெரியப்பாவும்தான்  பெரியவங்களா இருந்து கல்யாணத்தை நடத்தி வைக்கணும் அப்பிடீங்கறா..  நாம வளத்த குழந்தையா இப்பிடி இவ்ளோ விவரமா பேசுதுன்னு ஆச்சரியமா இருக்கு என்றாள் ருக்மணி. 

    நீ என்ன சொல்றே  என்றார்  சொக்கலிங்கம்.

    இதெல்லாம் பொம்பளைங்க சமாசாரம் , சொன்னாலும் உங்களுக்குப் புரியாது,  நீங்க உடனே கிளம்புங்க நாம நல்லி சில்க் கடைக்குப் போயிட்டுஅப்பிடியே ஜீஆர் டீ தங்க மாளிகை கடைக்கும் போகணும். எல்லாத்தையும் நானும் நீங்களும்தான் செய்யணும்னு ரேணுகா  சொல்றா.  பாவங்க அந்தப் பொண்ணு ,

    ஆனது ஆய்ப்போச்சு இப்போ விட்டுக் கொடுத்துட்டோம்னா அந்தப் பொண்ணு போயி வாழப் போற இடத்திலே மரியாதை இருக்காது. அதுனாலே  கல்யாணிகிட்டேயும் அவ புருஷன் ரமேஷ் கிட்டேயும் பேசி ஒப்புக்க  வெச்சு உறவுக்காரங்க எல்லாரையும் அழைச்சு நல்லபடியாக் கல்யாணத்தை நடத்தி வைக்கணும் சீக்கிரம் கிளம்புங்க நிறைய வேலை இருக்கு  என்றாள் ருக்மணி.

    சரிம்மா இதோ கிளம்பறேன் என்றார் சொக்கலிங்கம் புன்சிரிப்புடன். 

                                                                                             சுபம்

    Share
  • ரிஷி கர்பம்

    தமிழ்த்தேனீ-

     

    அமெரிக்காவின் நியூயார்க் நகரின் சரவணபவன் ஹோட்டலில் எதிர் மேஜையில் உட்கார்ந்து   மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல்   எதிரொலி கேட்கும் அளவுக்கு உரக்க சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர் அந்த நான்கு பெண்மணிகளும். அவர்கள் உட்கார்ந்திருந்த மேஜையில்  பலவிதமான அறுசுவை உணவுகள் பரப்பி வைக்கப் பட்டிருந்தன. 

    ஹோட்டல் பணியாளர் பவ்வியமாய் குனிந்து அவர்களுக்கு வேறெதுவும் வேணுமா என்று கேட்டுவிட்டு நகர்ந்தார். அது எப்பிடி இவங்க மட்டும் மட்டும் எந்த நாட்டிலே சாப்பிட்டாலும் ஒரே விதமான தரமான சுவையான உணவு வகைகளை கொடுக்கிறாங்க  என்று பேசிக்கொண்டே  அனுபவித்து சாப்பிட்டுக்கொண்டே ஆரவாரமாய்  நகைச்சுவையாகப் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர் அந்த நால்வரும். திடீர் திடீரென்று சுழன்று அடிக்கும் கடற்காற்றைப் போல அவ்வப்போது  அவர்களின் சிரிப்பொலி அந்த இடத்தையே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. 

    அவர்கள் பின்னால்  அமைதியாய் உட்கார்ந்திருந்த  ஒரு அமெரிக்கக் குடும்பம் இவர்கள் பேசுவது புரியாவிட்டாலும் இவர்களின் ஆரவாரமான கலகலப்பான சிரிப்பால் கவரப்பட்டு  அவர்களும் இவர்களை ரசித்து  மென்மையாக புனிசிரிப்புடன் இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தனர். 

    பக்கத்து மேஜையில் இருந்து சாரதா வெகுநேரமாக இவர்களையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஒரு நிமிஷம் இருங்க இதோ வரேன் ,  அவங்ககிட்ட     கேட்டுட்டு வரேன் என்று கணவர் சதாசிவத்திடம் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். 

    சதாசிவம்  வேணாம்மா  நமக்கெதுக்கு,  அவங்க ஏதோ ஜாலியா இருக்காங்க. அதிலே தலையிட நாம யாரு , வேணாம் போகாதே என்று  சொல்லிக் கொண்டே இருந்தார் . சாரதா அதையெல்லாம் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் அந்த மேஜையின் முன் போய் நின்றாள். 

    சதாசிவம்  பயந்த பார்வையுடன் பதைபதைப்புடன் உட்கார்ந்திருந்தார்.  யாரா இருந்தாலும் அதைப் பத்திக் கவலைப்படாமல்  மனசிலே என்ன கேக்கணும்னு  தோணுதோ அதைக் கேட்டுவிடும் குணம் அவளுக்கு.  அதைப் பற்றி சதாசிவத்துக்குத் தெரியும் , சொன்னாலும்  கேட்க மாட்டாள். என்ன நடக்கப் போகிறதோ என்று பயந்துபோய் அவர்களையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்  அவர். 

    வெளிநாட்டுக்கு வந்திருக்கோம் ,இங்க வந்தும் இதெல்லாம் தேவையா என்று அவருக்கு கோவமாய் வந்தாலும் , ஓரளவுக்கு மேல் அடக்கினால் உணர்ச்சி வசப்பட்டு நீங்க  சும்மா இருங்க  என்று ஒரு சொல்லில் அடக்கிவிடுவாள். இங்கே எல்லார் முன்னிலையிலும் மானம் போகும். அதற்கு பயந்து  வெற்றுப் பார்வையுடன் உட்கார்ந்திருந்தார் அவர். 

    சாரதா அவர்கள் மேஜையின் முன்னால் சென்று அவர்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிரித்துக் கொண்டே இருந்தவர்கள் சாரதாவின் அருகாமையை உணர்ந்து அவளை ஏறிட்டனர். 

    சாரதா ஏதோ கேட்பதும் அவர்கள் அதற்கு பதில் சொல்வதும் சுற்றி இருந்தவர்கள் பேசும் சத்தத்தில் சதாசிவத்துக்கு காதில் விழவில்லை. 

    திடீரென்று அந்த நான்கு பெண்மணிகளில் ஒருவர் இவரை நோக்கி ஒரு நிமிடம் இங்கே வர முடியுமா என்று அழைப்பது தெரிந்தது.  சரி நாம் எதிர் பார்த்தது நடந்து போச்சு என்று உணர்ந்து பலி ஆடு போல் அவர்கள் மேஜையை நோக்கி நகர்ந்து அவர்கள் அருகே சென்றார் , இங்க உக்காருங்க  என்று  பக்கத்தில் காலியாய் இருந்த நாற்காலியை காட்டி அவரையும் உட்காரச் சொன்னாள் சாரதா. அவள். உட்கார்ந்தார் சதாசிவம். 

    அந்த நான்கு பெண்மணிகளில் மூத்தவளாகத் தெரிந்த பெண்மணி நீங்க இந்தியாவிலேருந்து வந்திருக்கீங்களா நெனைச்சோம்  இவங்க இங்கே வந்து எங்களைக் கேக்கும் போதே நெனைச்சோம் என்றாள். அந்தக் குரலில் இருப்பது இளக்காரமா,ஏளனமா இல்லை கோபமா என்று புரியாமல் மன்னிக்கணும் நான் அப்பவே சொன்னேன், இதெல்லாம் கேக்காதே அதெல்லாம் அவங்க தனி விஷயம்னு இவ கேக்கலை என்றார் பரிதாபமாய். 

    அது எப்பிடி முடியும், நம்ம கண்ணுலே படும்போது கேட்டுத்தானே ஆகணும் இதிலென்ன தப்பு ஒருத்தருக்கு  ஒருத்தர் கேட்டுக்கறதுதானே , நாமெல்லாம் ஒரே நாடு.  என்ன இருந்தாலும்  வெளிநாட்டுலே இருக்கும்போது நம்ம நாட்டு மக்களைப் பார்த்தா  ஒரு சந்தோஷம் என்றாள்  சாரதா . 

    ஆமாம் நாங்களும்  இந்தியாவிலேருந்துதான் வந்திருக்கோம்,  சென்னையிலே எங்க வீடு என்று பதில் கூறினாலும் மனதுக்குள் போச்சு எல்லாம் போச்சு நம்ப நட்டோட மானத்தையே வாங்கிட்டா இவ என்னும் எரிச்சல் மனதுக்குள் மண்டினாலும் வெளியே அதைக் காண்பித்துக் கொள்ளாமல் லேசான புன்னகையுடன் ,  நீங்க இதெல்லாம் ஒண்ணும் பெரிசா எடுத்துக்காதீங்க இவ என்னோட வொய்ஃப். மனசிலே எதையும் வெச்சிக்க மாட்டா என்றார்  சாரதாவை விட்டுக்கொடுக்காத பாணியில். 

    சார் நாங்க நாங்களும்  இந்தியாவிலேருந்துதான் வந்திருக்கோம், நம்ம கல்ச்சர் இருக்கே அதை யாராலேயும்  மாத்த முடியாது. எந்த நாட்டுக்கு போனாலும் நாம மட்டும் நம்ம பழக்க வழக்கத்தை மாத்திக்காம அப்பிடியே இருப்போம். 

    சதாசிவம் ஒரு அசட்டுப் புன்னகையுடன்  ஆமா  என்றார் பலகீனமான குரலில்.   உங்க வொய்ஃப் என்ன கேட்டாங்க தெரியுமோ என்று கேட்டுவிட்டு நிறுத்தினாள் அந்தப் பெண்மணி ,  சதாசிவம் இல்லே அங்கே தூரத்தில  இருந்தேனா காதுலே விழலே என்றார் பரிதாபமாய். 

    கடல் கடந்து இவ்ளோ தூரம் வந்தும் உங்க வொய்ஃப் அப்பிடியே இருக்காங்க, ஒரு வகையிலே பாத்தா அது நல்லதுதான்னு தோணறது என்றாள்.   

    இந்தப் பட்டுப் புடவை இந்த நாட்டிலே கிடைக்கறதான்னு கேக்கறாங்க.? 

    இல்லே இந்தியாவிலே சென்னையிலே  நல்லி சில்க்கிலே எடுத்தேன்னு சொன்னேன், அதிலே ஒரு விஷயம் ரொம்ப முக்கியம். நல்லி சில்க்லே இந்த டிசைன் புடவையை எடுக்கும் போதே அந்தக் கடைக்காரர் சொன்னார் ,இந்தப் புடவையைக் கட்டுங்க பாக்கறவங்க எல்லாரும் எங்கே எடுத்தீங்கன்னு கேப்பாங்க, அப்பிடிக் கேக்கலேன்னா அவர் பேரையே மாத்தி வெச்சிக்கறேன்னு சொன்னார். நல்ல வேளை அவர் பேரை மாத்தி வெச்சிக்க அவசியமில்லாம செஞ்சிட்டாங்க உங்க வொய்ஃப் சாரதா . 

    நல்ல ரசனையான  பார்வைங்க உங்க வொய்ஃபுக்கு !அதெப்பிடிங்க  இவங்க இதைக் கவனிச்சிட்டு அதே மாதிரி வந்து கேக்கறாங்க. எனக்கு பெருமையா இருக்கு என்றாள் அந்தப் பெண்மணி. என்ன இருந்தாலும் நாம உடுத்தற ஆடையை ,அல்லது நகையைப் பாத்துட்டு அடுத்தவங்க வந்து பாராட்டினாத்தானே நாம் இவ்ளோ வெலை குடுத்து வாங்கினதுக்கு பலன் கிடைக்கும். உங்க வொய்ஃபுக்கு  தேங்க்ஸ் சொல்லணும் என்றாள் அந்தப் பெண்மணி. 

    சதாசிவத்துக்கு ஒரு நொடியில் உலகமே தலைகீழாய் மாறியது போன்ற ஒரு திகைப்பு. ஆமாம் ஆமாம் எங்கிட்டே சொல்லிகிட்டே இருந்தா, உங்க புடவையைக் காட்டி எவ்லோ நல்லா இருக்கு பாருங்க ன்னு. 

    அப்போ இந்தப் புடவை நல்லா இருக்குன்னு சொல்லுங்க என்றாள் அந்தப் பெண்மணி பெருமையுடன். சதாசிவம் ரொம்ப நல்லா இருக்கு அதுவும் உங்களுக்கு பொருத்தமாய் இருக்கு என்றார். சாரதா கண்களாலேயே  போதும் அசடு வழியாதீங்க  என்று உணர்த்தினாள். 

    அதுக்குதான் உங்களைக் கூப்பிட்டோம், முதல்லே இந்தியா போனவுடனே உங்க வொய்ஃபுக்கு இந்தப் புடவையை வாங்கிக் குடுங்க. அவங்களுக்கு  ரொம்ப பிடிக்கும்  இந்தப் புடவை, புடவை மட்டுமில்லேங்க உங்களையும்தான்  என்று கூறிவிட்டு அந்தப் பெண்மணியுடன் வந்திருந்த மற்ற பெண்களைப் பார்த்து கண்சிமிட்டிவிட்டு உரக்க சிரித்தனர் மீண்டும் சரவணபவனே அதிர்ந்தது. சதாசிவமும் உரக்கச் சிரித்தார். 

    அந்த அமெரிக்கக் குடும்பம் ஹாய் ,ஹலோ  வீ  எஞ்சாய்ட் யுவர் ஹாப்பினஸ், .ஆல்தி பெஸ்ட் பை  என்று கூறிவிட்டு புன்சிரிப்புடன் இவர்களைக் கடந்து வெளியே சென்றனர். 

    சதாசிவமும் ஹாய் ஹலோ,  யெஸ் அஃப்கோர்ஸ்  ஐ யேம் ஆல்ஸோ எஞ்சாயிங்   பை பை  என்றார் நிம்மதியுடன். 

                                                                                                 சுபம்

    Share
  • தங்க விமானங்கள்

    தமிழ்த்தேனீ  –              

     

    நாராயணா  உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் சாயங்காலம் வீட்டுக்கு வரேன் என்றான் கிருஷ்ணன். ஏண்டா இப்பவே போன்லே சொல்லேன் என்றான் நாராயணன். இல்லடா கொஞ்சம் விஸ்தாரமா பேசணும்  வீட்டுக்கு வந்து சொல்றேன், நீதான் எதுவானாலும் சரியா ப்ரடிக்ட் செஞ்சிருவியே அப்பிடீ மண்டையைப் போட்டு உருட்டிண்டே இரு  வந்து சொல்றேன் என்று போனை வைத்தான் கிருஷ்ணன்.

    மூளையின்  அத்தனை செல்களும் யோசிக்கத் தொடங்கின .நாராயணனுக்கு  நாற்பது வருஷ நட்பு, அந்தரங்கமான நட்பு  ,யார்கிட்டயும் சொல்லாத  விஷயமா இருந்தாலும் கிருஷ்ணன்  நாராயணன் கிட்ட கிட்ட மட்டும் பகிர்ந்துப்பான். ஒரு நம்பிக்கை ஒருவழிப் பாதை மாதிரி  நாராயணன் கிட்ட  சொன்னா விஷயம் வேற எங்கேயும்  போகாதுங்கற நம்பிக்கை.

    ஏண்டா உனக்கே தெரியும் எங்கிட்ட சொன்னா  விஷயம்  யார்கிடேயும்  போகாதுன்னு , அப்புறம் என்ன  மர்மம் . சொல்லுடா என்றான் நாராயணன்.    அப்பிடி இல்லேடா இந்த விஷயம் உங்கிட்ட சொன்னதுக்கப்புறம்  எல்லாருக்கும் சொல்லப் போறேன். எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கணும். நானே இந்த விஷயத்தைப் பரப்பப் போறேன் என்றான் கிருஷ்ணன்.  அவன் செய்யற வேலை எதுவாயிருந்தாலும் அதிலே ஒரு நியாயம் இருக்கும், அதிலும் குறிப்பா நாராயணன் கிட்ட  விவாதிக்கற விஷயம் எல்லாம் ரொம்ப முக்கியமானதா இருக்கும்.

    என்னவா இருக்கும் ! கிருஷ்ணனுக்கு ஒரு பொண்ணு ஒருபையன். ஒரு வேளை அவன் பொண்ணு யாரையாவது  காதலிச்சு வெச்சிட்டாளா , இருக்காதே  நல்ல கட்டுப்பாடா வளப்பான், அந்தப் பொண்ணும் , பையனும் ஒழுக்கமான பசங்க . நல்ல படிப்பாளிகள் .   அப்பிடியே இருந்தாலும் இந்தக் காலத்திலே  இது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லே. அது சரி  காதல் விஷயமா இருந்தா  அவனே எல்லாருக்கும் சொல்வானா. எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கணும்னு வேற சொல்றான் மண்டை குழம்பியது.

    ஆர்வக் கோளாறுலே அவதிப்பட்டாலும் ஒரு வழியா நேரம் ஓடிப் போச்சு. இதோ அஞ்சு மணி ,இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்துடுவான். என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே வந்தான் கிருஷ்ணன்.  வா கிருஷ்ணா உள்ளே வா என்றபடி கிருஷ்ணன் முகத்தையே ஆராயும் பார்வையில் பார்த்தான் நாராயணன். ஒண்ணும் தெரியலை.

    முகத்தை  ரொம்ப இயல்பா வெச்சிண்டு இருக்கான். அப்பிடீன்னா விஷயம் தீவிரமானதுன்னு அர்த்தம். சரி ரொம்ப ஆர்வமா காட்டிக்க வேண்டாம். என்று மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு காத்திருந்தான் நாராயணன்.  உள்ளே இருந்து நாராயணனின் மனைவி கௌசல்யா வந்து வாங்க அண்ணா இந்தாங்க காப்பி சாப்பிடுங்க என்று கொடுத்த காப்பியை வாங்கிக் கொண்டு நாராயணனையே பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்.

    நாராயணா நேத்திக்கு நம்ம கோயில்லே  நடந்த நிர்வாகிகள் கூட்டத்திலே நம்ம கோயில் விமானத்துக்கு தங்கக் கூறை  வேயணும்னு ஒரு தீர்மானம் போட்டிருக்காங்க . அதுக்கு கிட்டத்தட்ட 100 கிலோ தங்கம் வேணுமாம். நானும் நீயும் சேர்ந்து ஒரு கிலோ தங்கமாவது சேத்துக் குடுக்கணும்னு எனக்கு ஆசை அதான் உங்கிட்ட கலந்து பேசலாம்னு வந்தேன் என்றான் கிருஷ்ணன்.

    ஏண்டா நீ தெரிஞ்சுதான்  பேசறையா, இல்லே தெரியாம பேசறையா நம்மாலே எப்பிடி முடியும்  . நமக்கு யாரைத் தெரியும் நாம் கேட்டா யாரு குடுப்பாங்க? அதுவும் இப்போ தங்க விக்கிற விலையிலே நெனைச்சு கூடப் பாக்க முடியாது என்றான் நாராயணன்.

    நாராயணா  நம்ம காதுக்கு இந்த விஷயம் வந்திருக்கே அப்பவே புரியலையா நமக்கு எல்லாம் தெரிஞ்சாலும்  நமக்கு மேலே ஒரு சக்தி இருக்குடா. அந்த சக்தி இது மாதிரி விஷயங்கள் யாராலே நடக்கணும்னு  முன்னாடியே தீர்மானிச்சு வெச்சிருக்கும். அதுனாலே  நாமெல்லாம்  கருவிகள்தான். முயற்சி செய்வோம் என்றான் கிருஷ்ணன். ஒரு கோயில் கட்ட ஒரு செங்கல் கொடுத்தாலே அவங்க வம்சமே நல்லா இருக்கும்னு பெரியவங்க சொல்வாங்க என்றான் கிருஷ்ணன்.

    அன்றிலிருந்து யாரைப் பாத்தாலும் இந்த விஷயத்தைப் பற்றியே ப்ரஸ்தாபித்து ஒவ்வொருத்தர் மூலமா இன்னொருத்தரைப் பிடிச்சு கிட்டத் தட்ட குருவி சேக்கறா மாதிரி 100 கிராம்  தங்கம் சேத்தாச்சு. இன்னும்  900 கிராம் தங்கம் சேக்கணும்.   நாராயணனுக்கு  நம்பிக்கை தளர்ந்து கொண்டே வந்தது. நடிக நடிகைகளுக்கு   கோடி கோடியா கொட்டிக் குடுக்கற பெரிய பண முதலைகள் கூட இவர்கள் போகும்போது   இல்லேங்க இப்போதான் 600 கோடியை  படம் எடுக்க வியாபாரத்திலே போட்டுட்டு  படம் ஓடுமா ,  பணம் வருமா வராதான்னு தவிச்சிகிட்டு இருக்கோம்  எங்களாலே  இப்போ முடியாது என்றார்கள்.

    சரி கிருஷ்ணா ஏதோ நம்மாலானது 100 கிராம் தங்கம் சேத்துட்டோம் , இனிமே நமக்கு சக்தி இல்லே . இந்த நூறு கிராமை கொண்டு போயி நிர்வாகத்திலே குடுத்துட்டு வந்துடுவோம் என்றான் நாராயணன்.   நாராயணனின் மனைவி கௌசல்யா  உள்ளே இருந்து வந்து  அண்ணா தப்பா நெனைக்காதீங்க நீங்களும் இவரும் மூணு மாசமா அலைஞ்சு 100 கிராம் தங்கம்  சேத்தீங்க. 

    நாட்டுலே  நடக்க சரியான  ரோடு இல்லே, மக்களுக்கு குடிக்க நல்ல தண்ணி கிடைக்கலே. எங்க பாத்தாலும் சாக்கடை , டெங்கு கொசு உற்பத்தியாகி குழந்தைங்க எல்லாம் நிறைய பேரு உயிரை விட்டுட்டாங்க , நிறைய பசங்க  படிக்க வசதியில்லாம கஷ்டப்படறாங்க. அரசாங்கமும் முறையா இதெல்லாம் செஞ்சு தரமாட்டேங்கறாங்க . பொதுமக்களுக்காக இது மாதிரி ஏதாவது திட்டம் போட்டு  அதுக்கு நீங்க ரெண்டு பேரும் உழைச்சா  நல்லா இருக்கும்.

    அதைவிட்டுட்டு  ஏற்கெனவே இருக்கற கோயிலுக்கு தங்க விமானம் செய்யறதுக்கு தங்கம் சேக்க அலையறீங்களே  அந்த சாமி உங்க கிட்ட  தங்க விமானம் கட்டினாத்தான் நான் இங்க இருப்பேன்னு ஏதாவது சொன்னாரா?  என்றாள்.

    என்ன  கௌசல்யா   நீயா இப்பிடிப் பேசறே என்னை விட பக்தி உனக்குதான் அதிகம் , நான் அடிக்கடி கோயிலுக்கெல்லாம் போகமாட்டேன் , நீ பட்டினியா இருந்து தினமும் கோயிலுக்கு போயி தரிசனம் செய்யாம சாப்பிடக்கூட மாட்டியே நீ இப்பிடிக் கேள்வி கேக்கறே  ஆச்சரியமா இருக்கு என்றான் நாராயணன்.

    இதோ பாருங்க அந்தக் காலத்திலேருந்து இந்தக் காலம் வரைக்கும்  நமக்கு இந்த இயற்கையைப் படைச்சு அது மூலமா நம்மையெல்லாம் வாழ வைக்கிறவர்  கடவுள்னு  மனசுலே படிஞ்சு போயிருக்கு , பக்தியோட வளந்தவதான் நான்.

    ஆனா யதார்த்தமா யோசிச்சு பாத்தா  நமக்கு குடுத்த இறைவனுக்கு  நாம செய்யணும் உண்மைதான்  ஆனா இறைவன் கொடுத்த இந்த இயற்கையை காப்பாத்தறதும் நம்ம கடமைதானே .நம்மோட வாழற மக்களுக்கு முதல்லே நல்லது செய்யணும். அதுக்குதான் எல்லா ஆழ்வார்களும்  நாயன்மார்களும்  கடவுள் நமக்குள்ளே இருக்கான்னு சொல்றாங்க. மனுஷனை மதிச்சா கடவுளை மதிச்ச மாதிரிதான். 

    மனுஷனுக்கு தீங்கு நெனைக்காம  எல்லாரும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கத்தான் நான் கோயிலுக்கு போறேன்.  எப்பவுமே கடவுள் எனக்கு இதைச் செய்யி அதைச் செய்யின்னு கேக்கறதில்லே. நாமே ஏதாவது செய்யறோம். நம்ம மனசு திருப்திக்கு எல்லாரும்  திருமங்கை ஆழ்வாரா ஆயிடமுடியுமா? என்றாள் .

    அப்போது அங்கே வந்த  வேலைக்காரி முனியம்மா  அம்மன் கோயிலுக்கு போயிருந்தேம்மா , அங்கே தீபாவளிக்கு அம்மனுக்கு  நீங்க வாங்கிக் குடுத்த  புடவையை சாத்தினாங்களாம் , நல்லா இருந்துச்சு ன்னு உங்ககிட்ட சொல்லச் சொன்னாரு  பூசாரி என்றாள் கௌசல்யாவிடம்.

    இவ்ளோ நியாயமா சிந்திக்கறாளே இவ என்ன செஞ்சிருக்கா பாரு என்றான் நாராயணன் ,   அந்தப் புடவை 900 ரூபா , அந்த 900 ரூபாயை ஏதாவது ஏழைக் குழந்தைகளுக்கோ அல்லது ஏதாவது மக்களுக்கு பயன்படறா மாதிரி திட்டத்துக்கோ குடுத்திருக்கலாமே  ஏன் செய்யலே  என்றான் நாராயணன்.

    ஏங்க அது என்னோட வேண்டுதல் என் மனசு திருப்திக்கு செஞ்சேன், அதை நீங்க குறை சொல்லக் கூடாது என்றாள் கௌசல்யா.  நான் குறை சொல்லலே கௌசல்யா , இப்பிடித்தான்  எல்லாரும் நெனைக்கிறாங்க ,அடுத்தவங்களுக்கு சொல்ற யோசனையை அவங்க கடைப்பிடிக்கணும்னு வரும்போது பின்வாங்கறாங்க. 

    உலக நாடுகள் ஒரு நாட்டோட மரியாதையை, தரத்தை அந்த நாட்டிலே எவ்ளோ தங்கம்  இருக்குங்கறதை வெச்சிதான் எடை போடறாங்க. அதுனாலேதான்  நம்ம நாட்டோட   தரத்தை உயர்த்த இதெல்லாம் செய்யறோம். நாட்டிலே யாருக்கும் தனிப்பட்ட மனுஷனுக்கு செல்வம் சேக்கக் கூடாது நாட்டுக்குதான்  சேக்கணும்னு  புத்தியில்லே.

    கிருஷ்ணா இது வரைக்கும்  சேத்து வெச்சிருக்கற 100 கிராம் தங்கத்தை ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிதர ஏதாவது  அமைப்புக்கு குடுத்துடலாம்னு பாத்தா  நாம குடுக்கறதை வாங்கிகிட்டு  குழந்தைகளுக்கு செலவழிக்காம  சில நிர்வாகிங்க அவங்க வீட்டுலே இருக்கற கஜானாவிலே கொண்டு போயி வெச்சிகிட்டு அவங்க குடும்பத்துக்கு சொத்து சேக்கறாங்க. யாரை நம்புறதுன்னே தெரியலையே. எவ்ளோ செய்தி தினசரிலே படிக்கிறோம் என்றான்.

    ஒரு குழப்பமான மன நிலையுடன் கிருஷ்ணன் சரி நான் வீட்டுக்கு போறேன். இதைப் பத்தி யோசிக்கலாம் என்று கூறிவிட்டுக் கிளம்பினான்.  அன்று மாலை கிருஷ்ணன் வீட்டின் வாயிலில் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்து அழைப்பு மணியை அழுத்தினாள். கிருஷ்ணன் எட்டிப் பார்த்து வாங்க உள்ளே வாங்க என்றார்.

    இல்லேங்க நீங்க வெளியே வாங்க என்றாள். வாசலுக்கு வந்தான் கிருஷ்ணன், கூடவே அவன் மனைவி ருக்மணியும் வந்தாள்.

    தப்பா நெனைக்காதீங்க  என் பேரு கிருஷ்ண பிங்கலா, நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். நான் யார் வீட்டுக்குள்ளேயும் போறதில்லே , எல்லாரும் என் வீட்டுக்குள்ளேதான் வருவாங்க என்றாள்.

    ஆமாங்க  நாங்க பரம்பரையா கோயிலுக்கு பொட்டுக் கட்றவங்க . வம்ச வம்சமா  எங்க குடும்பம் கோயில்லேருந்து வர வருமானத்திலேதான் பொழைச்சிகிட்டு இருந்தோம்.அதெல்லாம் ஒரு காலம் . இப்பல்லாம் கோயில்லேருந்து எங்களை யாரும் கவனிக்கறதே இல்லே. 

    நாங்களும்  கோயிலைச் சார்ந்து இல்லே. எங்க பொழைப்பு திசை மாறிப் போச்சு. ஆனா அந்தக் காலத்து ஜமீன்தாருங்க, பணம் படைச்சவங்க எல்லாம் காலம் காலமா  எங்க குடும்பத்துக்கு நகையாவும் , பொருளாவும் குடுத்ததெல்லாம் பரம்பரை சொத்தா எனக்கு வந்திருக்கு.

    எங்க பரம்பரையிலே நான்தான் கடைசீ வாரிசு. நான் குழந்தையே பெத்துக்கக் கூடாதுன்னு வைராக்கியமா இருந்தேன் . எங்க வம்சமே என்னோட முடிஞ்சு போகணும். இனிமே இந்த சொத்தையெல்லாம் வெச்சு பாதுகாக்கணும்கிற  அவசியமும் இல்லே.

    அதுனாலே  மொத்தத்தையும்  நான் உங்க கிட்ட குடுக்கறேன். கோயில் சொத்தையும் பொது சொத்தா நெனைச்சு பாதுகாக்கணும்.   கோயில் சொத்தையும் பொது சொத்தையும் கொள்ளையடிச்சு அவங்க வீட்டுக்கு கொண்டு போனவங்க நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லேங்க. மனுஷனை ஏமாத்தலாம், ஆனா தெய்வத்தை ஏமாத்தக் கூடாது. நான் என்னைப் பத்தின உண்மையைச் சொல்லித்  மனப்பூர்வமா குடுத்து எனக்கும் எங்க வம்சத்துக்கும்  பரிகாரம் செய்யணும்னு ஆசைப்படறேன்.

    எங்க வம்சத்தோட  பாவத்தை அந்தக் கிருஷ்ணனே ஏத்துக்கணும்னு வேண்டிகிட்டு குடுக்கப் போறேன். கோயிலுக்கே போயி அவங்க கிட்ட பேசலாம், ஆனா அவங்க என்னை மதிப்பாங்களான்னு தெரியலை .அதான் பயந்துகிட்டு உங்க கிட்ட வந்தேன் என்றாள்.

    இப்போது கிருஷ்ணனுக்கே  கொஞ்சம் குழப்பமா இருந்துது.. சரி நீங்க குடுங்க நான் கோயில்லே சேத்துடறேன் என்ன சொல்றே நாராயணா என்றான்  என்றான் கிருஷ்ணன் .நாராயணன் சற்றே குழப்பமாக மௌனமாக இருந்தான்.

    படியிறங்கி  தெருவுக்கே போன அந்தப் பெண் மீரா திரும்பி வந்து  உங்க சந்தேகம் புரியுதுங்க .  இந்த மாதிரிக் காசையெல்லாம் ஏத்துக்க மாட்டோம்னு சொல்லிட்டா என்ன செய்யறது அப்பிடீன்னு தானே யோசிக்கிறீங்க .

    நான் குலத்திலே தாசியா இருந்தாலும் பகவத் கீதையைப் படிச்சிருக்கேன், கிருஷ்ணன் தன்னோட ஆப்த நண்பன் உத்தவனுக்கு சொன்ன   உத்தவ கீதையையும் படிச்சேன் .அதிலே கிருஷ்ணன்,

    “ஆன்மீக உள்ளங்களே!  நான் கைவிட்டாலும், என்னைக் கைவிடாதவர்கள் யாரோ அவர்களே ஆத்திகர்கள் எனவே, உங்களில் ஆத்திகர்கள் யாரோ அவர்கள்  இந்தக் கிருஷ்ண பிங்கலாவின் மேல் கல் எறியத் கடவீராக ! அப்படி அல்லாதவர்கள்  இவள் மீது பூ எறியக் கடவீராக! “      அப்பிடீன்னு சொல்லி கிருஷ்ண பிங்கலான்னு ஒரு தாசியை பக்தையாக ஏத்துண்டார்.. அதுனாலேதான் நான் என் பேரை கிருஷ்ண பிங்கலான்னு வெச்சிண்டேன். 

    இவ்ளோ சொல்லியும் அவங்க ஏத்துக்கலைன்னா அவங்க கிட்ட சொல்லுங்க,       “நாய் வித்த காசு குறைக்காதுன்னு”    ஏத்துக்குவாங்க.  

    என்னோட கிருஷ்ணன்  ஏத்துக்குவான், அவங்களையும்  ஏத்துக்க வைப்பான் என்றாள் தீர்மானமாக.

                                                                            சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து!

     

                                                                                                        சுபம்

     

    Share
  • கங்கா ஸ்னானம் 2012

     தமிழ்த்தேனீ   

     

       1961 ம் வருடம்   

                    

     டேய் கண்ணா  சீக்கிரம் படுத்துண்டு தூங்கு, பட்டாசு வெடிச்சது போறும். காத்தாலே 4 மணிக்கெல்லாம் எழுப்பிடுவேன். சீக்கிரம் எழுந்து கங்கா ஸ்னானம் செய்யணும். .போறும் போய் படுன்னு அம்மா சொல்லச் சொல்ல பட்டாசுகளும், மத்தாப்புகளும், புஸ்வாணமும் ,கம்பி மத்தாப்பும் கொளுத்தி மகிழ்ந்ததும், அதுவும் போதாக் குறைக்கு, சின்னதா பொடி டப்பி மாதிரி இருக்குமே ஏரோப்ளேன் அதுமேலே சின்னதா திரி இருக்கும் அதைக் கொளுத்தி விட்டா சர்ருன்னு மேலே கிளம்பி உயரமாய்ப் போய் சுற்றிக்கொண்டே எங்காவது போய் விழும்.

     

    அது எங்கே விழுந்தது என்று தேடிப்பார்க்க அடுத்த வீடு ,அடுத்த வீடு என்று ஓட்டின் மேலேயே தாவித் தாவிப் போயி நாலாவது வீட்டு மாடிலே விழுந்திருக்கறதைப் பாத்து அப்பா நாம விட்ட ஏரோப்ளேன் எவ்ளோ தூரம் பறந்து ,எவ்ளோதூரம் போயி விழுந்திருக்கு என்று ஆச்சரியப்பட்டு நின்றபோது ,

     

     மாடியிலிருந்து அப்பா சைகை செய்தார் , வா என்று . அடேடே அப்பாவே மாடிக்கு வந்தாச்சா. நான் வேற நாலாவது வீட்டு மாடிலே இருக்கேன். தயங்கித் தயங்கி ஓட்டுமேலே ஏறி இறங்கி  வீட்டு மாடிக்கு வந்தான் கிருஷ்ணன். 

     

     கிருஷ்ணா இப்பிடியெல்லாம் ஓட்டுமேலே ஏறக் கூடாது, எங்கேயாவது தடுக்கி விழுந்தா என்ன ஆகும் . சரி சரி இனிமே ஓட்டுமேலே ஏறாதே  என்றபடி அப்பா கீழேருந்து உங்க அம்மா குரல் குடுத்திண்டே இருக்கா ,வா வா சீக்கிரம் போயிடலாம்  என்றார் அப்பா.

     

     நான் சொல்லிண்டே இருக்கேன் இப்போ கீழே இறங்கி வரப் போறியா இல்லே அப்பாகிட்டே சொல்லட்டுமான்னு அம்மாவோட குரல் கேட்டு பயந்து தாவித் தாவி  வீட்டு மாடிக்கு வந்து கடகடன்னு கீழே இறங்கி ஓடி வந்து அம்மாவுக்குத் தெரியாம உள்ளே போயி  அம்மா நான் அப்பவே வந்துட்டேன் நீங்கதான் என்னைக் கவனிக்காம கத்திண்டே இருக்கீங்க.  என்று சொல்லிவிட்டு ,நான் படுத்துண்டு ரொம்ப நேரமாச்சுன்னு சொல்லிட்டு அப்பாவைப் பார்த்து  சிரித்தான் கிருஷ்ணன் .

     

     குட் நைட்  ,சீக்கிரம் தூங்கு காத்தாலே  சீக்கிரம் எழுந்துக்கணும் என்றபடி போர்த்திவிட்டுவிட்டு போனார் அப்பா.    கனவிலும் பட்டாசுகளும், மத்தாப்புகளும், புஸ்வாணமும் ,ஏரோப்ளேனும் பூப்பூவாய் வாரி இறைத்தன.   டேய் எழுந்திருடா எவ்ளோ நேரமா எழுப்பறது , தலைக்கு மேலே வேலை இருக்கு , எல்லாரும் எழுந்தாச்சு ,வாடா கண்ணு என்று அம்மாவின் குரல் கேட்டு ,நான் எப்பவோ வந்து தூங்கியாச்சும்மா, ஏன் தொந்தரவு செய்யறே என்று திரும்பிப் படுத்தான் கிருஷ்ணன்,

     

     என் கண்ணோல்லியோ திரும்பித் திரும்பி படுத்துக்காதே, எழுந்திருடா செல்லம், மணி நாலாயிடுத்து , சீக்கிரம் எழுந்து வாடா கண்ணு  என்று அம்மா என்னை அணைத்து தூக்கி எழுப்பியவுடன், அரைகுறையாய் தூக்கம் கண்ணை அழுத்த அலங்க மலங்க விழித்து எழுந்தான் கிருஷ்ணன்.

     

     எவ்ளோ பெரிய பையனாயிட்டே என்று கூறி ஒரு முத்தம் கொடுத்து  அப்படியே தூக்கி அணைத்துக் கொன்டு வாடா கண்ணு என்று கையைப் பிடித்து கூடத்துக்கு அழைத்துப் போனாள் அம்மா கமலம். 

     

     நடுக் கூடத்தில் வரிசையாக மணைகள் போடப்பட்டு இருந்தன, அதில்  சமீபத்தில் கல்யாணம் ஆன  அக்கா, அத்திம்பேர், அவர்கள் பக்கத்தில் அண்ணா ,  மன்னி, அடுத்தடுத்து மணைகளில் இரு அக்காக்கள் ,  நடு நாயகமாய் இரு மணைகள், அதில் ஒன்றில் அப்பா உட்கார்ந்திருந்தார்,

     

    வாடா குட்டிப் பையா வா வந்து உக்காரு என்று தன் பக்கத்தில் உட்காரவைத்துக் கொண்டார். எதிரே பெரிய தாம்பாளத்தில்  வெற்றிலை பாக்கு, பழங்கள், குங்குமச் சிமிழ், சுண்ணாம்பு,  எண்ணைக் கிண்ணத்தில் நல்லெண்ணெய், எல்லாம் வைக்கப் பட்டிருந்தன. குத்துவிளக்கு மங்கலமாய் ஒளிர்ந்தது. அம்மா புடவைத் தலைப்பை நன்றாக இழுத்துப்  போர்த்திக்கொண்டு,நான் முதல்லே அப்பாவுக்கு நலங்கு இடறேன் , அதைப் பாத்து மாப்பிள்ளைக்கு நீ இட்டுவிடு என்றாள்  அக்காவிடம்.

     

     சரிம்மா  என்று  அக்கா அத்திம்பேர் எதிரே வந்து உட்கார்ந்து கொண்டாள்,   எழுந்து  குனிஞ்சு இடணும் உக்காரப்படாது, என்றாள் அம்மா, சரிம்மா என்று அக்கா அத்திம்பேர் எதிரே வந்து நின்றாள்.  அம்மா அப்பாவிடம் காலை நீட்டுங்கோ என்றாள்,  அத்திம்பேர் காலை நீட்டுங்கோ என்றான் கிருஷ்ணன், மப்பிள்ளையும் சிரித்துக் கொண்டே காலை நீட்டினார். அப்பாவும் குத்துக் கால்போட்டுண்டு காலை நீட்டினார். அம்மா அப்பாவின் காலுக்கு முதலில் மஞ்சள் பூசினாள், அக்காவும் அதேபோல் செய்ய ,அம்மா இதோ பாரு பின் காலிலே நன்னாதடவு, என்றாள். அதேபோல் அக்காவும் அத்திம்பேர் காலிலே மஞ்சளைப் பூசினாள், 

     

     நீயும் என்  பிள்ளைக்கு  அப்பிடியே  காலிலே மஞ்சள் பூசி  நான் செய்யறதை அப்பிடியே செய்யி என்றாள் கமலம் மருமகளிடம் . மன்னியும் சரிம்மா என்று அண்ணாவுக்கு காலில் மஞ்சள் பூசினாள்.  அடுத்து இப்போ இதோ மஞ்சளையும் சுண்ணாம்பையும் கலந்து வெச்சிருக்கேன் பாரு நலங்கு மாவு அதை எடுத்து  புறங்காலிலே நடுவிலே ஒரு பொட்டு வையி.

     

    அப்புறம் காலோட பக்கவாட்டிலே நலங்கு இடற மாதிரி இடு அப்பிடீன்னு  சொல்லிக் கொடுத்துக்கொண்டே தானும் அப்பாவுக்கு இட்டு முடித்தாள். அடுத்து அண்ணாவுக்கு  மன்னி  அம்மாவைப் பாத்து அப்பிடியே நலங்கு இட்டு முடித்தாள். அக்காக்களுக்கும் அம்மா நலங்கு இட்டு முடித்து  காலை நீட்டுடா குழந்தே என்று என் காலைப் பிடித்து நீட்டி  அதிலும் மஞ்சள் பூசி நலங்கு இட்டாள்.   இப்போ அம்மாவை உட்கார வைத்து  நீங்க அம்மாவுக்கு நலங்கு இட்டு விடுங்கோ என்று ஏகோபித்த குரலில் அக்காக்கள், அத்திம்பேர், அண்ணா, மன்னி எல்லாரும் குரல் கொடுத்தார்கள்.

     

     அம்மா வெட்கப்பட்டுக் கொண்டே வந்து மணையில் உட்கார்ந்தாள். அப்பா  ஏற்கெனவே பழக்கமானவர் போல அம்மாவின் காலில் மஞ்சளைப் பூசி நலங்கு இட்டார். எல்லோரும் சந்தோஷமாக ஆர்ப்பரித்து கைகொட்டி சிரித்து மகிழந்தனர்.

     

     சரி சரி என்று வெட்கப்பட்டுக் கொண்டே எழுந்த அம்மா இப்போ  நல்லெண்ணை  தேய்க்கணும், நான் எப்பிடி தேய்க்கணும்னு  சொல்லித் தரேன் , என்றபடி அப்பாவிடம் வந்து வேஷ்டியை மடிச்சுக் கட்டிண்டு உக்காருங்க  என்றபடி  அவருடைய துடையில் எண்ணெய்க் கிண்ணத்தில் விரலைத் .தோய்த்து மேலிருந்து கீழாக ஏழு பொட்டுக்கள் வைத்தாள்.

     

     ஏம்மா  எதுக்கு  தொடையிலே எண்ணெய் வைக்கிறே என்றான் கிருஷ்ணன்  நல்ல கேள்விடா  நானும் ரொம்ப நாளா கேக்கணும்னு நெனைப்பேன். அப்புறம் மறந்து போயிடும் என்றாள் சின்ன அக்கா. இந்த ஏழு பொட்டு ஏன் வெக்கிறோம்னு யாருக்காவது தெரியுமா? என்றாள் கமலம். சொல்லுங்கம்மா தெரிஞ்சிக்கறோம் என்றனர் எல்லோரும்.

     சப்த சிரஞ்சீவிகள்: அஸ்வத்தாமர் , மஹாபலி, வேத வியாசர் ‘ விபீஷணன் , கிருபர்,ஆஞ்சநேயர் ,நாரதர் 

     

     சப்த தரிசனம்:  கோபுரம், விமானம், திருவாயில், பிரகாரம், பலிபீடம், உற்சவர், மூலவர் இவர்களைப் பார்த்து வணங்குவது சப்த தரிசனம் ஆகும்

     

    சப்த கன்னியர்கள் :- பிராஹ்மி, மஹேச்வரி,நாராயணி,வராஹி, ருத்திராணி, கௌமாரி,சாமுண்டா

     

     சப்தரிஷிகள் :-  காஸ்யபர்,   கௌதமர்,   பாரத்வாஜர்,  விஸ்வாமித்திரர், வசிஷ்டர்  ஜமதக்னி  ,அத்ரி. 

     

    சப்தலோகம்:- பூலோகம், புவலோகம்,சுவலோகம், மகலோகம், சனலோகம்,தவலோகம், சத்தியலோகம்.

     

    அதே மாதிரி புண்ணிய நதிகள்னு சொல்ற   கங்கா, யமுனா, சரஸ்வதி, காவேரி, கோதாவரி, நர்மதா, சரயு, கிருஷ்ணா, கோமதி, மகாநதி,  பல்குனி  எல்லாத்தையும் இது மாதிரி இந்த நல்ல நாள்ளே,  எல்லாரையும் நெனைச்சுக்கணும். 

     

    முக்கியமா கங்கை நதிலேருந்து  புனிதமான தண்ணீர் இந்த காசிச் சொம்பிலே இருக்கு பாருங்க இதை நாம  ஸ்னானம் செய்யற தண்ணீலே கலந்து ஸ்னானம் செய்யணும். கங்கா மாதாவை வேண்டிண்டு ஸ்னானம் செய்யணும். 

     

    அது மட்டுமில்லே நிகமாந்த மஹா தேசிகரைப் பிடிக்காத ஒருத்தர் அவர் மேலே பாம்புகளை ஏவி விட்டுட்டானாம். மஹா தேசிகர் கருட தண்டகத்தை சொல்லி  ஏழு பொட்டு வெச்சாராம். அவரை எந்த துஷ்ட ஜந்துக்களும் நெருங்காம ஓடிப் போயிடுத்தாம், அதுக்குதான் இந்த ஏழு எண்ணெய்ப் பொட்டு என்று கூறியபடியே எண்ணெய் தடவி முடிச்சா. 

     

    அதேபோல் அக்காவும், மன்னியும் அவரவர் கணவர்களுக்கு செய்ய,   அம்மா அப்படியே அந்த எண்ணெயைத் தேய்த்துவிட்டு , அப்பாவின்  தலையில்  எண்ணெய் ஒரு பொட்டு வைத்துவிட்டு லேசாகத் தடவி விட்டுவிட்டு, நிமிர்ந்தாள். 

     

    அதே போல எல்லோரும் செய்ய , அடுத்து அம்மா கிருஷ்ணனுக்கும்  அதே போல் பொட்டு வைத்து தலையில் எண்ணெய் தடவிவிட்டுவிட்டு,  அப்பிடியே இருங்கோ இப்போ பொண்கள் எல்லாரும்  ஒரு வெத்தலை எடுத்து கொஞ்சம் பாக்கு வெச்சு , அதிலே கொஞ்சமா சுண்ணாம்பு தடவி மடிச்சு  ஆத்துக்காரருக்கு குடுங்கோ என்றாள். எல்லோரும் அதேபோல் செய்தனர்,  எனக்கும் அம்மா அதே போல் வெத்தலை பாக்கு கொடுத்தாள். 

     

    படிக்கற பசங்க  வெத்தலை பாக்கு போட்டா படிப்பு வராதுன்னு நீங்கதானே சொல்வீங்க, இப்போ எனக்கு வெத்தலைபாக்கு குடுக்கறீங்களே  எனக்கு படிப்பு வரவேணாமா  என்றேன் நான்.  எல்லோரும் கொல்லென்று சிரித்தனர். இன்னிக்கு ஒரு நாள் நான் குடுக்கறேன் சாப்புடு, ஆனா இனிமே அடுத்த வருஷம் தீபாவளி அன்னிக்கு மறுபடியும் நான் குடுக்கும்போதுதான் வெத்தலை பாக்கு போடணும் சரியா என்றாள். 

     

    சரிம்மா என்று அதை வாங்கி மென்றேன். அப்பிடியே எல்லாரும் உக்காருங்கோ என்றபடி ஆரத்தி தட்டை எடுத்து  கையில் வைத்துக் கொண்டு  இங்க வா லக்ஷ்மி என்று மருமகளை அழைத்து நீயும் நானும் ஆரத்தி எடுக்கலாம் என்றபடி ஆரத்தி தட்டை எல்லோருக்கும் பொதுவாக சுத்திவிட்டு ஆரத்தி எடுத்தா தட்டிலே துட்டு போடணும் என்றாள் லக்ஷ்மி. 

     

    மாப்பிள்ளை உடனே பர்சிலிருந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து தட்டில் போட்டார்.  அம்மா ஆரத்தி தட்டை எடுத்துக்கொண்டு நான் வாசல்லே போயி இதக் கொட்டிட்டு வரேன், அதுக்குள்ளே  நீங்க இந்தக் குட்டிக் கண்ணனுக்கு குளிப்பாட்டி விட்டுட்டு நீங்களும் குளிச்சிட்டு வாங்கோ என்றாள் அப்பாவைப் பார்த்து. அப்பா வாடா போயி குளிக்கலாம் என்றார். 

     

    அப்பா அப்பா நான் ஒரே ஒரு மத்தாப்பு கொளுத்திட்டு வரேம்பா என்று கெஞ்சினான்  கண்ணன், சரி ஒண்ணே ஒண்ணுதான், சீக்கிரம் வரணும், மாப்பிள்ளை நீங்க குளிச்சிடுங்க, நான் இந்தப் பையனைக் கூட்டிண்டு வரேன் என்று கூறியபடி தானும் வாசலுக்கு வந்தார் ரங்கசாமி.. 

     

    ஒரு மத்தாப்பு ,ஒரு புஸ்வாணம், ஒரு சங்கு சக்கரம் என்று தொடர்ந்து கொண்டே இருந்தது பட்டாசுகள்.   சீக்கிரம் வாங்க வந்து குளிங்க ,அவனையும் குளிப்பாட்டி  ரெண்ட பேரும் புது சொக்கா போட்டுக்கோங்க,  மாப்பிள்ளை குளிச்சாச்சு, அவருக்கும் நாம வாங்கி வெச்சிருக்கற வேஷ்டி ,சொக்கா, மாலதிக்கு புடவை ,எல்லாம் எடுத்துக் குடுங்க , அப்பிடியே எல்லாருக்கும் புதுத் துணி குடுத்திருங்க. 

     

     எனக்கு சமையல் கட்டிலே வேலை இருக்கு, சீக்கிரமா பக்ஷணம் எல்லாம் செஞ்சு சமையல் செஞ்சு நைவேத்தியம் செய்யணும், எல்லாரும் சாப்படணும். சீக்கிரம் வாங்கன்னு கூப்பிட்டுக் கொண்டே உள்ளே போனாள் கமலம்.

     

    டேய் வாடா போறும் அப்புறம் அம்மா டென்ஷனாயிடுவா சீக்கிரம் குளிக்கலாம் வா என்று என்னையும் அழைத்துக் கொண்டு போய் குளிப்பாட்டிவிட்டு தலையைத் துடைத்துவிட்டு, போ போயி புது ட்ரெஸ் போட்டுக்கோ ,என்றபடி குளிக்கத் தொடங்கினார் அப்பா. 

     

    நான் புதுத் துணிக போட்டுக்கொள்ள உள்ளே போனேன். டேய் கண்ணா ஸ்வாமி கிட்டே வெச்சிருக்கேன் பாரு சுவாமியை நமஸ்காரம் செஞ்சிட்டு அப்புரம் போட்டுக்கோ. என்றாள் அம்மா. புது பேண்ட் சொக்காயை எடுத்து மாட்டிக்கொண்டு  பட்டாசு பெட்டியை நோக்கி ஓடினேன் நான். இருடா  கையைக் காலை ஓடவிடாம செஞ்சிண்டு இருக்கே ,கொஞ்சம் இரு , 

     

    இந்தா இனிப்பு இதைச் சாப்புடு என்று ஒரு மைசூர் பாகுத் துண்டை எடுத்து ஊட்டினாள் அம்மா, இந்த  இனிப்பை சாப்டுட்டு அப்பிடியே  இந்த தீபாவளி லேகியம் இருக்கு பாரு இதையும் கொஞ்சம் சாப்புடு நன்னா செரிமானம் ஆயிடும் . இந்த லேகியத்திலே சுக்கு ,மிளகு,  திப்பிலி எல்லாம் போட்டு வெல்லம்,நெய் எல்லாம் போட்டு செஞ்சிருக்கேன். 

     

    இதுக்குப் பேரு திரிகடுகம்னு சொல்லுவாங்க  ,தீபாவளி லேகியம்ன்னு சொல்வாங்க இது நல்ல மருந்து வியாதியே வராதுன்னு வாயிலே ஊட்டிவிட்டுவிட்டு இப்போ ஓடிப்போயி பட்டாசு வெடின்னு சொல்லி அனுப்பினாள் . 

     

    இந்தப் பட்டாசு மட்டும் எவ்ளோ வெடிச்சாலும் திருப்தியே வராது,  தெருவே கூடி பட்டாசுகள் வெடித்துக்கொண்டே இருந்தோம், பாவம் சில ஏழைச் சிறுவர்கள் வெடித்தும் வெடிக்காமல் இருக்கும் பட்டாசுகளை பொறுக்கிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கூப்பிட்டு கொஞ்சம் பட்டாசுகளைக் கொடுத்தார் அப்பா. 

     

    அப்பா நீங்களே ஒரு மத்தாப்பு செய்வீங்களே  அதை இந்த தடவை செய்யலையா என்றான் கண்ணன் அப்பாவிடம் , நீ கேப்பேன்னு தெரியும் ஏற்பாடெல்லாம் செஞ்சு வெச்சிருக்கேன்  என்றபடி  அவர் ஏற்கெனவே பொடித்து வைத்திருந்த உப்பு , கொஞ்சம் கரி  இரண்டையும்   ஒரு பழைய வேட்டித் துணியைப் பரப்பி அதில் போட்டு நீளமாக சுருட்டி அதன் ஒரு முனையை கயிற்றால் கட்டி,  இன்னொரு முனை வரை  மெல்லிய கம்பியால் சுற்றி முடிந்து  கட்டினார்.

     

     இப்போ  சொக்கப் பனை கொளுத்தலாமா  என்று கேட்டுக்கொண்டே ஒரு முனையில் பற்ற வைத்து  கயிற்றைப் பிடித்துக்கொண்டு  வேகமாகச் சுழற்ற  அதிலிருந்து மத்தாப்பூ சிதறுவது போல ஒளிவண்ணமாய் சிதறி சுழன்று கண்ணுக்கு விருந்தாக ஆனது. கைகொட்டிச் சிரித்து மகிழந்தான் கண்ணன். 

     

    கண்ணா இந்த பட்டாசுக்கு பேரு என்னான்னு தெரியுமா ?  சொக்கப்பானை கொளுத்தறதுன்னு சொல்வாங்க . இப்போ மட்டும் இல்லே கார்த்திகைப் பண்டிகைக்கும் செஞ்சு தரேன். அப்பவும் சொக்கப் பானை கொளுத்தலாம் ,இப்ப சீக்கிரமா உள்ளே போகலாம் வான்னு அழைத்துக் கொன்டு போனார் அப்பா. 

     

    உள்ளே இருந்து அம்மா சீக்கிரம் எல்லாரும் சாப்பிட வாங்க  என்றாள். சரி கண்ணா  வா போயி விருந்து சாப்பாடு சாப்படலாம். அம்மா பக்ஷணமெல்லம் செஞ்சு வெச்சிருப்பா, வடை பாயசம் , சர்க்கரப் பொங்கல் ,எல்லாம் செஞ்சிருப்பாங்க. 

     

    வா போயி சாப்டுட்டு அப்புறமா  மறுபடியும் பட்டாசு வெடிக்கலாம்  என்றார். சரிப்பா என்று அப்பாவின்  கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே வந்தான் கிருஷ்ணன்.   தலைவாழை இலை போட்டு  அதிலே ஒரு ஓரத்தில் வாழைப்பழம் சர்க்கரை, கூட்டு அவியல், உருளைக்கிழங்கு கறி,அப்பளம், என்று வரிசையாக பறிமாறப்பட்டு பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக அம்மாவின் கைமணத்தோடு கூடிய சமையல் பசியைத் தூண்டியது.  உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினோம். 

     

    ரங்கசாமி  சாப்பிட்டுக்கொண்டே   கமலம்  நீ பாத்தியா நம்ம வீட்டிலே குளவி கூடு கட்டி இருக்கு என்றார். வீட்டிலே குளவி  கூடு கட்டினா வீட்டுப் பெண்கள் யாராவது கர்ப்பமாவா  அப்பிடீன்னு பெரியவங்க சொல்வாங்க என்றாள் லக்ஷ்மி. சாப்பிட்டு முடித்து எல்லோரும் கையை கழுவிக்கொண்டு  கூடத்தில் வந்து ஊஞ்சலில் உட்கார்ந்தோம். உக்காருங்க மாப்பிள்ளை வெத்தலை போடறீங்களா என்று வெற்றிலைபாக்குத் தட்டை நகர்த்தினார் அப்பா. 

     

    உள்ளே யாரோ வாந்தி எடுப்பது போல் சத்தம் கேட்டது, யாரு வாந்தி எடுக்கறது என்றார் அப்பா. சற்று நேரம் கழித்து அம்மா உள்ளே இருந்து வந்து உங்க மாட்டுப் பொண்ணு லக்ஷ்மி தான் வாந்தி எடுத்தா என்றாள். சரிதான் உன் சமையல் அதுக்குள்ளே வேலை செய்ய ஆரம்பிச்சுடுத்தா என்றார் அப்பா நமட்டுச் சிரிப்புடன். அதில்லேங்க உங்க  மாட்டுப் பொண்ணு கர்ப்பமா இருக்கா  அதைச் சொல்லத்தான் வந்தேன் என்றாள் கமலம். 

     

    ஓ நல்ல செய்திதான், டேய் கண்ணா நீ சித்தப்பா ஆயிட்டே என்றார் அப்பா. எனக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது ஆனால் ஒன்றும் புரியவில்லை. ஆமாண்டா நான்  தாத்தா ஆயிட்டேன்  என்றார் மகிழ்ச்சியுடன்.

     

       13/11/2012    

     

     நந்தன வருடம் ஐப்பசி மாதம் 28 ம் தேதி ஆங்கிலம்  நவம்பர் மாதம் செவ்வாய்க் கிழமை இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.  நமது தொலைக் காட்சியிலிருந்து நேரடியாக வாழ்த்துகிறோம் என்று அறிவிப்பாளர் கைகூப்பி வணங்கினார். 

     

    ஏங்க எழுந்திருங்க  இன்னிக்கு தீபாவளி மணி இப்பவே அஞ்சாகறது. எழுந்து போயி கங்கா ஸ்னானம் செஞ்சிட்டு வாங்கோ என்றாள் சசிரேகா. தூக்கம் கண்களைச்  சொருகியது. ஓ இவ்ளோ நேரம் கனவா கண்டேன். சரி சரி நான் போயி பல்தேச்சுட்டு குளிச்சிட்டு வரேன் என்றபடி  அரைகுரையாய் தூக்கம் கண்ணை அழுத்த அலங்க மலங்க விழித்து எழுந்த கிருஷ்ணன். ஆமா அது என்னா தீபாவளி அன்னிக்கு மட்டும் இப்பிடி தூக்கம் கண்ணை அழுத்தறது என்றார். 

     

    தொலைபேசி அழைத்தது  இனிய தீபாவளி  வாழ்த்துக்கள் அப்பா என்றாள் அண்ணா நகரிலிருந்து பெரிய பெண்.  இந்தா  நம்ம பொண்ணு உனக்கு தீபாவளி வாழ்த்து சொல்லணுமாம் என்று ரிசிவரை அவளிடம் கொடுத்தார். அம்மா தீபாவளி வாழ்த்துக்கள் என்றாள் சரி ஆசீர்வாதம் மாப்பிள்ளைகிட்டேயும் சொல்லு  முக்கியமா என் பேரப்பசங்களுக்கு  சொல்லு, ஜாக்கறதையா பட்டாசு வெடிக்க சொல்லு என்றால், சரிம்மா நான் பாத்துக்கறேன்  .அங்கே தீபாவளி கொண்டாடிட்டு அப்பாவும் நீங்களும் இங்கே சாப்பிட வந்துடுங்க என்றாள் பெண் , 

     

    எப்பிடி நாங்க வரமுடியும்   நீயும் மாப்பிள்ளையும் குழந்தைகளும் இங்கே வந்துடுங்க , இங்கே  அமெரிக்காவிலேருந்து , துபாயிலேருந்து எல்லாரும் வந்திருக்காங்க, நீங்களும் வந்தா தீபாவளிக்காவது சேந்து இருக்கலாம் வீடு கலகலப்பா இருக்கும் என்று சொல்லிவிட்டு, 

     

    ஏங்க உங்க பேரப் பசங்களை எழுப்புங்க மணி ஆச்சு சீக்கிரம் கங்கா ஸ்னானம் செய்யணும் எனக்கு தலைக்கு மேலே வேலை கிடக்கு என்றாள். டேய் பேரப் பசங்களா சீக்கிரம் எழுந்திருங்கடா . உங்க பாட்டி டென்ஷனாயிடுவா, இப்பவே  மணி அஞ்சாச்சு எழுந்திருங்கடா என்று பேரப் பசங்களை எழுப்பிக் கொண்டிருந்தார் கிருஷ்ணன் . போங்க தாத்தா தூக்கம் தூக்கமா வருது , இன்னும்  கொஞ்ச நேரம் தூங்கறோம் என்று புரண்டு படுத்தனர் பேரப் பசங்க நால்வரும். 

     

    எழுந்திருங்கோ எல்லாரும் எல்லாருக்கும் பட்டாசு வெச்சிருக்கேன்  யாரு முதல்லே எழுந்துக்கறாங்களோ அவங்களுக்கு நிறையப் பட்டாசு தருவேன் என்றாள். நான்தான் முதல்லே எழுந்தேன் நான்தான் முதல்லே எழுந்தேன் எனக்குதான் நிறைய பட்டாசு என்று கும்மாளம் போட்டனர்  பேரன்கள்.  நாம இவ்ளோ நாழி எழுப்பியும் எழுந்துக்காத  பசங்க இவ வந்தவுடனே எழுந்துட்டாங்க, என்று ஆச்சரியமாகப் பார்த்தார் கிருஷ்ணன். 

     

    எதுக்கு பாட்டி தீபாவளி கொண்டாடறோம் அப்பிடீன்னு பேரன் கேட்ட கேள்விக்கு ,பூமாதேவியோட பிள்ளை  நரகாசுரன். நரகாசுரன் பிரம்மாகிட்ட ஒரு வரம் வாங்கினான். தன்னோட தாயைத் தவிர வேறு யாருக்கும் சக்தி இருக்கக் கூடாது அவனைக் கொல்லன்னு பிரம்மாகிட்ட வரம் வாங்கியிருந்தான். வரத்தை வாங்கிட்டோம்ங்கிற தைரியத்துல எல்லாரையும் கொடுமைப் படுத்தினான்.  இராத்திரியில யாரும் வீட்டுல வெளக்கேத்தக் கூடாதுன்னு உத்தரவு போட்டான். 

     

    நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள் எல்லாரும் , பகவான் கிருஷ்ணரிடம் போயி எங்களைக் காப்பத்துங்க அப்பிடீனு வேண்டினாங்க  பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவோட சேந்து சண்டைபோடும்போது நரகாசுரன் விட்ட அம்பு கிருஷ்ணர் மேல பட்டு கிருஷ்ணர் மயக்கமாயிட்டார். உடனே சத்யபாமா நரகாசுரனை கத்தியாலே வெட்டி வீழ்த்தினாங்க, சாகறதுக்கு முன்னாடி நரகாசுரன். 

     

    எனக்குச் இந்த கதி  வரதுக்கு காரணம், நான் எல்லோரையும் வெளக்கேத்தக் கூடாதுன்னு சொன்னதுதான்! அதனால நான் இறக்கிற இந்த நாளை மக்கள் விளக்கேத்தி சந்தோஷமாக் கொண்டாட நீங்கதான் ஏற்பாடு செய்யணும்ன்னு கேட்டான்.  அதுனாலேதான்  தீபம் ஏத்தி திருவிழாவா, தீபாவளியாக நாம கொண்டாடறோம். 

     

     கங்கா ஸ்னானம்  செஞ்சிட்டு புது துணியெல்லாம் போட்டுண்டு சீக்கிரம் வாங்க இன்னிக்கு  குபேர பூஜை செஞ்சுட்டு பட்டாசெல்லாம் வெடிச்சுட்டு விருந்து சாப்படணும்.  பூஜை செய்யலாம் என்று பேரப் பசங்களுக்கு எண்ணெய் தேச்சுவிட்டுக்கொண்டே கதை சொல்லிக் கொண்டிருந்தாள் சசிரேகா. 

     

    நம்ம வீட்டிலே குளவி கூடு கட்டி இருக்கு பாத்தியா என்றார் கிருஷ்ணன் . உள்ளே யாரோ வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது. யாரு  வாந்தி எடுக்கறா நேத்து ராத்திரி உன் சமையலோட மகிமையா  என்றார் கிருஷ்ணன். அய்யே போதும் காலங்காத்தாலே  வழியாதீங்கோ,  குளவி நம்ம வீட்டுலே கூடு கட்டினா வீட்டுலே இருக்கற பொண்கள். யாராவது பிள்ளை உண்டாவாங்கன்னு சொல்வாங்க பெரியவங்க , சரியாத்தான் இருக்கு ,நம்ப மாட்டுப்பொண்ணு, பொண்ணு  ரெண்டுபேரும் பிள்ளை உண்டாயிருக்காங்க என்றாள் அவள்.  

     

    அப்பிடியா  சந்தோஷம் . பிள்ளை உண்டாயிருக்கான்னு சொல்லாதே பொண்ணு உண்டாயிருக்கான்னு சொல்லு . பேத்தி வேணும்.அதுவும் ரெண்டு பேத்தி வேணும் .  வீட்டுக்கு மங்களகரமே பொண்குழந்தைகள்தானே என்றார்  கிருஷ்ணன் . 

     

    காருகுறிச்சி அருணாசலம், திருவாவடுதுரை ராஜரத்தினம் பிள்ளை இருவரும் வாசித்த  வாசித்த  ரெட்டை நாதஸ்வரம்  ஒன்றாய்க் கலந்து ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே என்று சுநாதமாய் ஒலிக்க ஆரம்பித்தது. 

     

                                                                                                                   சுபம்

     

    Share
  • உங்களுக்குத் தெரியுமா?

    தமிழ்த்தேனீ 

    தீபாவளி  வருது  வீட்டை சுத்தம் செய்யலாமென்று சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கினோம்.

     

    ஒட்டடை அடித்து முதலில் சுத்தப் படுத்திவிட்டு, எல்லாக் குப்பைகளையும் பெருக்கி முறத்தில் சேகரித்து, அவற்றை வெளியே கொண்டுபோய்க் கொட்டி  அந்தக் குப்பைகள் எல்லாம் பறந்து அடுத்தவருக்கு தொல்லை தராமல் இருக்க அவைகளைக் கொளுத்தி  எல்லாவற்றையும்  சீர்படுத்திக் கொண்டிருந்தோம்.

     

    ஒரு குளவி என்னையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அதைக் கையாலே விரட்டி விட்டு மீண்டும் வேலையைத் தொடர்ந்தேன். மீண்டும் அந்தக் குளவி என்னிடம் பறந்து வந்து வாயிற் கதவிலே இரும்பு கிரில் கேட் டிலே சென்று ஓரிடத்தில் உட்கார்ந்தது. அதை அடிக்க கையை ஓங்கினேன். அது உட்கார்ந்திருந்த இடத்தில் பர்த்தால் ஒரு குளவிக் கூடு,

     

    என் மனைவி அங்கே வந்தாள் ,அதைப் பார்த்துவிட்டு அதை ஒண்ணும் செய்யாதீங்க.இது மாதிரி குளவி வீட்டுலே கூடுகட்டினால் பொண் குழந்தை பொறக்கும்னு சொல்வாங்க என்றாள்.

     

    அடேடே  நமக்குதான் ரெண்டு பொண்ணு, ஒரு பையன் எல்லாம் ஏற்கெனவே பொறந்து அவங்களுக்கெல்லாம் கல்யாணமும் செஞ்சு வெச்சாச்சே , என்றேன் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொன்டு போறும் வழியாதீங்கோ, நம்ம பொண்ணு முழுகாம இருக்காளே, அதான் பிள்ளை உண்டாயிருக்காளே  அவளுக்கு பொண்ணு பொறக்கும்னு சொன்னேன் என்றாள் முகவாய்க் கட்டையை  தோளில் இடித்துக் கொண்டு.

     

    அப்பிடி சொல்றியா அப்போ சரி இந்த குளவிக் கூட்டை அப்பிடியே விட்டுடறேன் பத்திரமா. அது சரி பொறக்கப் போறது பொண்ணா  ஆணான்னே தெரியாம எல்லாதுக்கும் பொதுவா  பிள்ளை உண்டாயிருக்கானு சொல்றீங்களே இது என்ன சொல் வழக்கு என்றேன்.

     

    கேள்வி ஞாயம்தான்  ஆனா  பிள்ளைத் தாச்சியா இருந்தா  பிள்ளை உண்டாயிருக்கான்னுதான் சொல்வாங்க என்றாள். அதான் கேக்கறேன் பிள்ளைத் தாச்சி, பிள்ளை உண்டாயிருக்கானு சொல்றீங்களே.  பொண்தாச்சியா, பொண்ணுண்டாயிருக்கான்னு ஏன் சொல்ல மாட்டேங்கறீங்க என்றேன்.

     

    சற்று நேரம் என்னையே கவலையுடன் பார்த்துக் கொன்டிருந்துவிட்டு , இதுக்குதான் சொல்றேன் கம்ப்யூட்டர்லே ரொம்ப நேரம் உக்காந்து   எழுதி  ,படிச்சு  செஞ்சிண்டே இருக்காதீங்கோ  , கொஞ்சம் கண்ணுக்கும் , மூளைக்கும்  ரெஸ்ட் குடுங்கோன்னு சொல்றேன் கேட்டாதானே  என்று மறு படியும் முகவாய்க் கட்டையை தோளில் இடித்துக் கொண்டு  தள்ளிப் போனாள் என் மனைவி,

     

    நான் என்ன தப்பாக் கேட்டுட்டேன்  எனக்கு ஒண்ணும் புரியலை, உங்களுக்கு விடை தெரியுமா?

     

    அன்புடன்

     

    தமிழ்த்தேனீ

    Share
  • உங்களுக்கும் வியர்க்கிறதா

     

    தமிழ்த்தேனீ –              

    தொலைக்காட்சிப் நிகழ்ச்சியில் நடிக நடிகையர் நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டிருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே!  தினசரி, வாராந்தரி, மாதாந்திரப் பத்திரிகைகளில் கிளு கிளு சமாச்சாரங்கள் படித்து மனதைக் கிளுகிளுப்பாக வைத்துக் கொண்டிருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே!

    ஆங்கிலப் படங்கள் பார்த்து அதில் வரும் கொச்சையான காட்சிகளை , ரசித்துக்கொண்டிருக்கும் தாய்மார்களே ,தகப்பன்மார்களே!  செல்போனில் நண்பர் அனுப்பிய கிளுகிளு தொடுப்பை சொடுக்கி நீலப்படம் பார்த்துக்கொண்டிருக்கும் தாய்மார்களே தகப்பன்மார்களே!

    நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை தோலுரிக்கிறோம் பேர்வழியே என்று கண்டதையெல்லாம் , காணாததையெல்லாம் கிசுகிசுக்களாகப் பரப்பி வரும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையதளங்களில் இனிமை காணும் தாய்மார்களே, தகப்பன்மார்களே!    உங்களுக்கெல்லாம் ஒரு எச்சரிக்கைக் கடிதமாகவே இந்தக் கடிதத்தை வரைகிறேன்.

    உங்களுக்கு பருவ வயதை நெருங்கும் பிள்ளைகள், பெண்கள் இருக்கிறார்களா?  அவர்களை இன்னமும் குழந்தைகள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா.? சற்றே விழிப்புணர்வு பெறுங்கள்!

    பல வருடங்களுக்கு முன் என் தாயார் கூறியது காதில் ஒலிக்கிறது.

    1. பெண்கள் முதல் படியில் கால் வைக்கும் போதே மிகுந்த கவனத்துடன் கவனத்துடன் வைக்க வேண்டும்.
    2. தவறான அணுகு முறையில் கால் வைத்து உருண்டு விட்டால் கடைசீப் படி வரை அவளால் எழவே முடியாது.

    3. அதே போல் ஆணோ பெண்ணோ அடிப்படை தர்மத்தை மறந்து வேறுபாதையில் சென்றால் பலன்கள் மிகவும் விபரீதமாக இருக்கும்

    4. எப்போதும் தன் நிலை தவறாமை இருபாலருக்கும் நன்மை செய்யும்

    மேற்கண்ட வாசகங்களை இப்போதும் கவனத்தில் வைத்திருக்கிறேன்.

    தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைக்காமையினால் நேர்மையாக இருப்பது பெரிதல்ல . தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தாலும் தவறு செய்யாதவரே நேர்மையாளர்கள், என்று கூறுவார் என் தாயார்.

    ” தீய வழக்கங்கள் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி பாயும் நீரைப் போன்றது. ஆனால் நேர்மை என்னும் ஒழுக்கம் அதே நீர் பாதாளத்திலிருந்து மலை உச்சியை அடைவதைப் போன்றது. அதற்கு முயற்சி தேவை. கடினமான முயற்சியும் ஒரு விசையும் தேவை. அந்த விசைதான் ஒழுக்கம் , மனோதிடம், என்பார்கள்.”

    இப்போது நடைமுறையில் இருக்கும் காலம் சிறுவர்களுக்கும் ,சிறுமியர்களுக்கும், இளைஞர்களுக்கும் மிகவும் மோசமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு காத்திருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே சற்றே நினைத்துப் பாருங்கள், எத்தனை மணித் துளிகள் உங்களால் உங்கள் பிள்ளைகளோடு செலவிட முடிகிறது? மிகக் குறைவான நேரமே செலவிடமுடிகிறது என்பதை மனதில் உணருங்கள்.

    அந்தக் குறைவான நேரத்தில் உங்கள் பிள்ளைகளின் எதிர்கால மேன்மைக்கு திட்டமிடுகிறீர்களா? உங்கள் பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேச உங்களால் முடிகிறதா? அல்லது நீங்கள் பேசுவதை உங்கள் பிள்ளைகள் காதில் வாங்குகின்றார்களா? அப்படியே காதில் வாங்கினாலும் கடைப் பிடிக்கிறார்களா? எப்படி அறிந்து கொள்வது இவற்றையெல்லாம் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இயலாது என்று ஒரு பதிலும் கேட்கிறது.

    நான் காலையில் எழுந்து சமைத்து பள்ளிக்குச் செல்ல பிள்ளைகளுக்கு எடுத்து வைத்து , கணவருக்கு வேண்டியவற்றை செய்து, அவர்களை அனுப்பிவிட்டு மீதமிருக்கும் கடமைகளை முடிக்கவே நேரம் போதவில்லையே என்று வருத்தப் படும் தாய்மார்களே , உங்கள் கஷ்டம் புரிகிறது.

    காலையில் இந்த வாகன நெரிசலில் அலுவலகத்துக்கு சென்று அங்கே கஷ்டப்பட்டு வேலை செய்துவிட்டு களைத்துப் போய்த் திரும்புகிறோம் நாங்கள் என்று கூறும் உங்கள் குரலும் காதில் விழுகிறது தகப்பன்மார்களே , உங்கள் கஷ்டமும் புரிகிறது.  நாங்களும் உங்கள் வயதில் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுத்தானே உங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கினோம்.  ஆனால் இவையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்கள் எப்போதும்.

    ஏனென்றால் முடிவில் உங்கள் பிள்ளை அல்லது பெண் எப்படி வளர்ந்திருக்கிறார்கள் என்னும் முடிவை ஆராயும்போது நல்லவிதமாக வளர்ந்திருந்தால் சரி, மாறாக தீய வழிகளில் கவனம் செலுத்தி வழிமாறியிருந்தால்? இந்த வாதங்கள் அனைத்துமே ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்களாக மாறும் அல்லவா?

    யாரையும் பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை . உண்மையைச் சொல்கிறேன். உங்கள் பிள்ளைகளைக் கவனியுங்கள்.

    “பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா?
    பேணி வளர்க்க வேணும் தெரியுமா? “    என்று ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

    எங்கள் வாலிப வயதில் இலைமறை காய்மறைவாக இருந்த அத்துணை விஷயங்களும் அம்பலத்துக்கு வந்துவிட்டது இப்போது. தொலைக்காட்சி, இணையம், செல்போன் .எல்லாவற்றிலுமே விரல் நுனியில் உலகம் என்று எல்லாவற்றையும் பார்க்கும் வசதிகள் பெருகிவிட்டன.

    அதனால் பயமாக இருக்கிறது. சரியான நேரத்தில் முறையாக வழிகாட்டி வளர்க்கப்படும் பிள்ளைகளே எதிர்காலத்தில் சரியான பாதையில் வளர்ந்து நல்லவிதமாக வாழ்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

    அலுவலகத்துக்கு போகும் மனைவியையோ, கணவரையோ, அல்லது பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளையோ வேவு பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி நினைத்தாலும் நம்மால் அது இயலாது ,ஆனால் கண் காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

    ஆதரவான, அனுசரணையான, அன்பான கவனிப்பினால் அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று ஒரு முறையை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் பெரியவர்கள்.

     

    1. ஐந்து வயது வரை இளவரசனாக, அல்லது இளவரசியாக வளர்க்க வேண்டும்.

    2. ஐந்து வயதிலிருந்து 12 வயது வரை அடிமையாக வளர்க்க வேண்டும்

    3. 13 வயது முதல் 19 வயது வரை ராஜ குமாரனாக ,அல்லது ராஜ குமாரியாக வளர்க்க வேண்டும்.
    20 வயதிலிருந்து தோழனாக, தோழியாக பழகவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

    ஆனால் அப்போது குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்தார்கள். இப்போது ஐந்து வயதுக் குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற நம்மால் முடியவில்லை. ஆமாம் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, பொது அறிவு வளர்ச்சி போன்றவை முற்காலத்தைவிட அதிகரித்திருக்கிறது. இளம் வயதிலேயே அதிகம் யோசிக்கிறார்கள்,

    அதிகம் தெரிந்து கொள்கிறார்கள். ஆகவே நாமும் அவர்களுக்கு இணையாக தெரிந்துகொண்டால்தான் அவர்களைக் கையாள முடியும்.  ஆகவே பழைய காலம் போல் வளர்க்க முடியாது என்னும் நடைமுறை தெரிகிறது இருந்தாலும் இன்னமும் அதிக கவனம் எடுத்துக்கொன்டு அவர்களின் கவனம் வேண்டாத தீய வழக்கங்களை நாடாத அளவுக்கு , அவர்களுக்கு புரியவைத்து, அவர்களுடன் கலந்து பேசி , அவர்களை வழிநடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்.

    இணையத்தில் மேய அவர்களை அனுமதிக்காமல் இருந்தாலோ, செல்போன் போன்ற நவீன கருவிகளை உபயோகிக்க அனுமதி அளிக்காமல் இருந்தாலோ, திரைப்படங்கள் போன்றவற்றை பார்க்க அனுமதிக்காமல் இருந்தாலோ தவிர்த்துவிடலாம் என்னும் குறுகிய மனோபாவத்தை விட்டுவிட்டு.

    எல்லாவற்றுக்கும் அவர்களை அனுமதித்து, அப்படி அனுமதிக்கும்போதே அவற்றிலுள்ள தீயவைகளைச் சுட்டிக் காட்டி அவற்றினால் வரும் கெடுதல்களை எடுத்துச் சொல்லி அவர்களை அதிலிருந்து விலக்கி, இணையம் போன்ற நவீன விஞ்ஞான முன்னேற்றத்தினால் எப்படி நற்பலன்களைப் பெறலாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்களை முன்னேற்ற வேண்டிய காலத்தில் இருக்கிறோம் நாம்.

    பொதுவாக சைக்கிளை குழந்தை ஓட்டினால் உடனே தாய் ஜாக்கிறதை இங்கேயே ஓட்டு ப்ரதான சாலைக்கு செல்லாதே என்று எச்சரிக்கிறாள், இதற்கு காரணம் குழந்தையின் மேலுள்ள அக்கறை ஒருபுறமென்றாலும் அந்தத் தாய்க்கு இருக்கும் பயம் மற்றொரு காரணம்.

    நம் பயத்தையெல்லாம் அந்தப் பிஞ்சு மனதில் ஏற்றக்கூடாது, அப்படி ப்ரதான சாலையில் சைக்கிள் ஓட்டாவிட்டால் அந்தக் குழந்தைக்கு எப்படி சாலை விதிகள், சாலையில் வண்டியோட்டும் முறை, நெளிவு சுளிவுகள் மனதில் பாடமாகும். ஆகவே அனுமதியுங்கள், ஆனால் பாதுகாப்பான முறையை கற்றுக் கொடுங்கள், அதுதான் வாழ்க்கையில் அவர்களை முன்னேற்றும் கருவி.

    இந்த உலகத்தில் இத்தனை தீமைகள் நிறைந்த உலகத்தில்தானே நம் பிள்ளைகள் வாழவேண்டும்? அப்படியானால் இந்த உலகத்தில் வாழ முறையான ,சரியான வழியை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்நாம். இந்தக் கட்டுரை எழுதக் காரணமாயிருந்த ஒரு நிகழ்வை பகிர்ந்துகொள்கிறேன்

    ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றேன், வாயிலில் இருந்து குரல் கொடுத்தேன் எதிர் விளைவு இல்லை ,ஆகவே எப்போது வழக்கமாக செல்லும் நண்பர் வீடுதானே என்று உள்ளே நுழைந்தேன். எதிரே கணிணியில் அந்த நண்பரின் பிள்ளை பள்ளியில் படிக்கும் பிள்ளை தன்னை மறந்து எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்.

    அடுத்தவர் கணிணியை எட்டிப் பார்க்கும் வழக்கமில்லாத நான் என் கண்ணைத் திருப்பும் ஒரு வினாடிக்குமுன் என் கண்ணில் பட்ட காட்சி என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. ஆம் அது ஒரு நீலப்படம். நான் வந்தது கூடத் தெரியாமல் அந்தப் பிள்ளை அதிலே மூழ்கியிருக்கிறான். சத்தம் போடாமல் வெளியே வந்தேன்.

    வியர்த்துக் கொட்டியது எனக்கு. எனக்கு ஏன் வியர்க்கிறது என்று எண்ணிப் பார்த்தேன், நம் நாட்டின் ,நம் பாரம்பரியத்தின் நம் வம்சாவழியின் வருங்காலத் தூண்கள் இந்தப் பிள்ளைகள் , அவர்களின் வாழ்க்கை சிதறிவிடுமோ என்கிற பயம் எனக்கு வந்ததால் எனக்கு வியர்த்தது.

    உங்களுக்கும் வியர்க்கிறதா?

     

    Share
  • ரசிகன்

    தமிழ்த்தேனீ

    ஆகாஷ் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் தெளிவான பார்வையுடன் நின்றிருந்தான்.“ஏண்டா, உங்க டீச்சர் உன் மேலே புகார் குடுக்கறாங்க, நீ அதிகப் பிரசங்கித் தனமா நடந்துக்குறியாமே?” என்று அதட்டினான் ரமேஷ்.

    “இல்லேப்பா நான் சரியாத்தான் நடந்துக்கறேன். டீச்சர் என்னை ஆஃல்பாபெடிக் ஆர்டர்லே ஏ பீ சீ டீ எழுதச் சொன்னாங்க, எழுதினேன். மறுபடியும் அதையே தலைகீழா எழுதச் சொன்னாங்க, எனக்கு கையெல்லாம் வலிச்சிதுப்பா. அதுனாலே ஒரு ஐடியா பண்ணேன், நான் ஆஃல்பாபெடிக்லே எழுதியிருந்ததை தலைகீழாக் காமிச்சேன், அப்போ தலைகீழாத் தெரியுமில்லே அதான். அந்த டீச்சருக்குப் புரியலைப்பா, திட்றாங்க” என்றான் ஆகாஷ்.

     “அப்புறம் தமிழ்லே ஒரு பாடம் எழுதச் சொன்னாங்க, அதிலே ஒரு வரிலே “அவள் சென்றாள்” ன்னு எழுதினேன், அதைப் படிச்சிட்டு எல்லாம் சரியாத்தான் எழுதி இருக்கே. ஆனா இந்த “அவள்“ அப்பிடீங்கிறதுலே மட்டும் தப்பா எழுதி இருக்கே. “அவல்” ன்னு எழுதி இருக்கே, அதுனாலே பெரிய “ள்” போடணும்னாங்க. சரின்னு சொல்லிட்டு ‘அவல்’ன்னு பெரிசா எழுதிக் காட்டினேன் திட்றாங்க” என்றான்.

    பேரனை உச்சி மோந்தபடி, “என் பேரன் கெட்டிக்காரன் நல்லா யோசிக்கறான்” என்றாள் பாக்கியம். “போதும்மா, நீங்க அவனுக்கு ரொம்பச் செல்லம் குடுக்கறீங்க அதான்” என்றான் ரமேஷ். ஆனாலும் மனதுக்குள் இந்தச் சிறு வயதில் ஆகாஷோட புத்திசாலித் தனம் அவனுக்குள் ஒரு சிரிப்பை வரவழைத்திருந்தது. மகனை ரசித்துக் கொண்டே உணவருந்தினான் ரமேஷ்.

    “பாட்டி, ஒரு கதை சொல்றியா?” அன்பாகக் கேட்டான் பேரன் ஆகாஷ்.   “என்னாலே முடியாது!” என்றாள் பாக்கியம் தீர்மானமான குரலில். உண்டு முடித்துக் கை கழுவித் துடைத்துக் கொண்டே வந்த ரமேஷ், “ஏம்மா? அவன் ஆசையாக் கதை கேக்கறான், ஏன் சொல்ல மாட்டேங்கற? என்றான்.

     “உன் பையனுக்குக் கதை சொல்ல என்னாலே முடியாதுப்பா. நீ சொல்லு, அவன் கேக்கட்டும்” என்றாள் பாக்கியம்.

    “டேய் கண்ணா ஆகாஷ், இங்கே வா” என்று மடியில் உட்கார வைத்துக் கொண்டு, “அப்பா நான் சொல்றேன் கதை” என்றான் ரமேஷ். “போப்பா, உனக்குக் கதை சொல்லத் தெரியாது” என்றான் ஆகாஷ். அதிர்ந்தான் ரமேஷ். இன்றைக்குத் திரை உலகமே வியந்து பாராட்டும் ஒரு முதன்மை இயக்குனன் அவன். ஆகாஷ் சொன்னது ரமேஷின் தன்மானத்தையே பாதித்து விட்டது. “இல்லைடா கண்ணா, நான் நல்லாக் கதை சொல்லுவேன், இப்போ ஒரு கதை சொல்றேன், நீ கேக்கணும்” என்றான் அதட்டும் குரலில். ஆகாஷ் பயந்து போய் வேறு வழியில்லாமல் கதை கேட்க ஆரம்பித்தான்.

     பாக்கியம் நமுட்டுச் சிரிப்புடன் அவனையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். “ராமாயணம் கதை உனக்குச் சொல்லட்டுமா? ராமரோட பொண்டாட்டி சீதையை ராவணன் தூக்கிண்டு போயிட்டான். அவங்களை எங்கே வெச்சிருக்கான் ராவணன்? அப்பிடீன்னு கண்டு பிடிக்க அனுமாரை அனுப்பினாங்க”

    “போங்கப்பா, இது வரைக்குத்தான் சொல்லிக் கிட்டே இருக்கீங்க, அதுக்கு மேலே சொல்ல மாட்டேங்கறீங்க, அது சரி, உங்களுக்குப் புதுசா எதுவும் கதை சொல்லத் தெரியாதா? எனக்கு இந்தக் கதை வேணாம், உண்மையாக் கதை வேணும்” என்றான் ஆகாஷ்.

     “சரிதான், உனக்குப் பாட்டி ஏன் கதை சொல்ல மாட்டேங்கறாங்கன்னு இப்போ புரியுது. பெரியவங்க சொன்னாக் கேட்டுக்கணும். எதுத்துப் பேசக் கூடாது” என்றான் ரமேஷ். “அப்பிடித்தான் கேப்பேன், பாட்டிதான் சொன்னாங்க. சந்தேகம் வந்தாக் கேக்கணும். அப்போத்தான் அறிவு வளரும்ன்னு” என்றான் ஆகாஷ்.

     “ஏம்ப்பா. உன்னோட ரசிகர்கள் உன்னைக் கேள்வி கேக்கறதில்லே? அதே மாதிரிப் பையனும் உன்னைக் கேள்வி கேக்கக் கூடாதுன்னா முடியுமா? ரசிகர்கள் எதிர்க் கேள்வி கேட்டா எப்பேர்ப்பட்ட டைரக்டரும் பதில் சொல்ல முடியாதுப்பா. ஆனாப் பையன் கிட்டே உன் பாச்சா பலிக்காது” என்றாள் பாக்கியம்.    “சரி.. சரி.. நீ பாட்டி கிட்டயே கதை கேட்டுக்கோ” என்றபடி அங்கிருந்து நழுவினான் ரமேஷ்.

     “பாட்டி ஒரு கதை சொல்லு பாட்டி, நான் சமத்தாக் கேக்கறேன்” என்றான் ஆகாஷ். மனமிளகிய பாட்டி பாக்கியம், “சரி உங்க அப்பா சொன்னாரே, அந்தக் கதையைச் சொல்றேன். அனுமார் கதை சொல்றேன் சரியா” என்றாள் ஆர்வமாகக் கதை கேட்க உட்கார்ந்தான் ஆகாஷ்.

     “அனுமார் வானத்திலே பறந்து போயி” என்று ஆரம்பித்தாள் பாட்டி, உடனே “ஆகாஷ் ஏன் அப்போல்லாம் ஏரோப்ளேன் கிடையாதா?” என்றான். “இல்லேடா, அப்போக் கண்டு பிடிக்கலே”

     “சரி, மேலே கேளு. லங்கைக்குப் போனார். அங்கே போயிப் பார்த்தா அந்த நாட்டுலே ஒரு அழகான வனம் இருந்துது, அங்கே போயி இறங்கினார். அவருக்கு மனசுக்குள்ளே ஒரே கோவம். அவர் தெய்வமா நினைக்கிற ஶ்ரீராமனோட பொண்டாட்டி சீதையை ராவணன் கடத்திண்டு வந்துட்டான். அந்தக் கோவத்திலே ஆக்ரோஷமாப் போயிண்டு இருக்கார். அப்போ இந்திரஜித்னு ஒரு ராட்சசன் பிரும்மாஸ்திரம் போட்டு அவரைக் கட்டிப் புட்டான்.”

     “அங்கே இருந்த ராக்‌ஷசா எல்லாம் அனுமாரைக் கேலி செஞ்சுண்டே அவரோட வால்லே நெருப்பு வச்சா” என்றாள் பாக்கியம்.   “ஏன் பாட்டி, உடனே அனுமார் ஃபயர் இஞ்சினுக்குப் போன் போட்டுக் கூப்பிட வேண்டியதுதானே?” என்றான் ஆகாஷ்.

     “இதோ பாரு, எனக்குத் தூக்கம் வருது, நானும் நீயும் தூங்கலாமா” என்றாள் பாக்கியம்.

     

    Share
  • அம்பாரி

    தமிழ்த்தேனீ

    நேர்மையா இருக்கறவனுக்கு எந்தப் பலனுமே கிடையாதா ? “கடமையைச் செய் பலனை எதிர் பாராதே” அப்பிடீங்கிற கீதை வாசகம் மட்டும் தான் சொந்தமா?

    எரிச்சலாய் வந்தது  முரளிக்கு. பல வணிக ஸ்தலங்களுக்கு அதிபர் திரு மகாலிங்கம். அவராய்த் தன்னைத் தேடி அழைத்ததை தன்னுடைய அதிர்ஷ்டமாக  மனதில்  நினைத்துக்கொண்டு   அவரைச் சந்திக்க அவருடைய அலுவலகத்துக்கு சென்றார் முரளி.

    மரியாதையான வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளே அமரவைக்கப்பட்டான் முரளி. திரு மகாலிங்கம் வந்தார். வாங்க மிஸ்டர் முரளி  உக்காருங்க , உங்க திறமையைப் பத்தி நிறையப் பேரு சொல்லி இருக்காங்க, அதுனாலேதான் நானும் உங்க திறமையை உபயோகிக்கணும்னு உங்களை வரச்சொன்னேன்.

    உங்களுக்குத் தெரியும், எனக்கு பல நிறுவனங்கள் இருக்கு.  குறிப்பா எல்லாத்திலேயும் நல்ல லாபம் வந்திட்டு இருக்கு. இந்த மகாலிங்கம் என்டெர்ப்ரைஸ் அப்பிடித்தான் ஓடிண்டு இருந்தது.

    இப்போ இந்த நிறுவனம்,  சிலபேரோட அலட்சியப் போக்காலே லாபம் கொறைஞ்சது மட்டுமில்லே. என் மனசிலே இதை எப்பிடி சரிப்படுத்தி லாபம் வரா மாதிரி இயங்க வைக்கறது அப்பிடீன்னு ஒரு கவலையே வந்துடிச்சு. இந்தக் கம்பனி விஷயமாத்தான் உங்களை வரச் சொன்னேன். 

    என்னோட மேனேஜர் எல்லா விஷயங்களையும்  உங்களுக்கு சொல்வார். எல்லாத்தையும் கேட்டப்புறம் ஒரு நல்ல  தீர்வு குடுப்பீங்கன்னு நான் நம்பறேன் என்றார்.

    ஒரு மாசமா  அவர் சொன்னதை கவனத்திலே வெச்சிண்டு  எல்லா வேலையையும் ஒதுக்கி வெச்சிட்டு, “சரி நம்மை மதிச்சுக் கூப்பிட்டிருக்கார். அதுனாலே அவருக்கு வேண்டிய இந்த முக்கியமான வேலையை செய்துகொடுப்போம்” அப்பிடீன்னு ராப்பகலா தூக்கத்திலேயும் இதே நினைப்போட யோசிச்சு யோசிச்சு உண்மையா, சுயநலமே பாக்காம நேர்மையா உழைச்சு உருவாக்கி  இந்த திட்டத்தை அவர்கிட்ட சொன்னார் முரளி.

    “இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். உங்களை எப்பிடிப் பாராட்டறதுன்னே தெரியலை”ன்னு சொல்லி  எழுந்து நின்னு கைகொடுத்துட்டு, “இவ்ளோ நாளா  உங்க திறமையை நான் உபயோகிக்காம விட்டது எவ்ளோ தப்புன்னு எனக்கு உணர்த்திட்டீங்க” அப்பிடீன்னு கண்கலங்க அவர் சொன்ன போது, “சரி நாம உழைச்ச உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும். ஒரு தகுதி உணர்தல் கிடைக்கும்னு நம்பி அது வரை அந்த திட்டத்துக்காக அவர் செலவழித்த தொகையைக் கூட இன்று வரை அவரிடம் சொல்லாமல் எப்படியும் அவர் கணிசமான ஒரு தொகையைக் கொடுப்பார் என்று நம்பி காத்திருந்து”, சே எல்லாமே வீணாகிவிட்டதே.

    திட்டத்தை செயலாற்றும் வரை  தினமும் பலமுறை போனில் தொடர்பு கொண்டு அவருடைய அலுவலகத்துக்கே வரச்சொல்லி, மற்ற யாரையும் உள்ளே விடாமல் அவரிடம் மட்டுமே தனியாக விவாதித்து அவருடைய திறமையை மட்டுமே நம்புவதாகச் சொல்லி ஊக்கமளித்து அவரை நம்ப வைத்து வேலையை வாங்கிக் கொண்ட பின் ஒரு வாரமாக அவரிடமிருந்து அழைப்போ அல்லது அவன் செலவழித்த பணமோ எதுவுமே இல்லை. 

    இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் மௌனம் காப்பது என்று யோசித்து அது வரை அவர் செலவழித்த தொகைக்கு கணக்கை எழுதி அவருக்கு அனுப்பினார் முரளி.  ஒரு மாதமாக  அவரிடமிருந்து எந்த ஒரு செய்தியும் வரவில்லை, இவரே தொடர்பு கொண்டாலும் கிடைக்கவில்லை. தொலைபேசியில் அழைத்தார். அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என்றது ஒரு இனிய குரல்.

    கொள்ளென்றால் வாய்திறக்கும், கடிவாளமென்றால் வாய் மூடிக்கொள்ளும் குதிரை போல் அவரும் என்ற உணர்வில்  மனம் கசந்து போனது முரளிக்கு.

    தெய்வத்துக்குப் பொதுவா நேர்மையா உழைச்சு அவன் கண்டு பிடித்த வழிகள் பின்பற்றப்படுகின்றன  என்று ஒருவர் மூலமாகத் தெரிந்தது.

    மகிழ்ச்சியாய் இருந்தாலும், தன்னை மதித்து ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் அவர் ப்ரச்சனை தீர்ந்தவுடன் தன்னை ஒதுக்கிவிட்டாரே என்னும் வருத்தம் மனதுக்குள்  மையம் கொண்டது.

    துபாயிலிருந்து ஒரு போன். கால்  எடுத்து  யாரு என்றார் முரளி.  அப்பா நான்தான்  ரஞ்சனி பேசறேன் என்றாள் அவருடைய மகள். உங்க பேரன் கிண்டர் கார்டன்லே  பாஸ்பண்ணிட்டான். உங்ககிட்ட பேசணுமாம் என்றாள்.

    பேரன் போனில் “தாத்தா நானு எங்க ஸ்கூல்லே பாஸ் பண்ணிட்டேன்’, என்றான் மழலை மாறாத குரலில்.

    “வெரிகுட் சமத்துப் பையண்டா நீ. கங்ராஜுலேஷன்” என்றார் முரளி.

    “தாத்தா நீங்க  உம்மாச்சி  சேவிச்சீங்களா”,  என்றான்  பேரன்.  யாரோ பொட்டில் அறைந்தாற்போன்ற உணர்வு.

    சற்று நேரத்துக்கு முன்தான் இனி தெய்வங்களை சேவிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்திருந்தார் முரளி.  குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான் என்று தோன்றியது.

    “அம்மா தாத்தா பேசமாட்டேங்கறாங்க”, என்றான் பேரன்.

    “சரி ரஞ்சனி, ஒரு முக்கியமான  அழைப்பு வந்திருக்கு. நான் மறுபடியும்  பேசறேன்” என்று இணைப்பைத் துண்டித்துவிட்டு அப்படியே அயர்ந்து போய் உட்கார்ந்தார் முரளி. 

    தொலைபேசி அழைத்தது.  எதிர்முனையில் திரு மகாலிங்கம் பேசினார்.

    “நீங்க கொடுத்த யோசனையை அமல்படுத்திவிட்டேன். இனி நீங்கதான் அந்தக் கம்பனியின் பொறுப்பாளர். உங்களைவிடத் தகுதியானவர் வேறு யாருமில்லை. அதனால்  நானே வந்து உங்களை நாளைக் காலையில் அழைத்துப் போய் பொறுப்பாளர் நாற்காலியில் உட்காரவைப்பேன் தயாராய் இருங்கள்” என்றார்.

    மனம் என்பது யானையைப் போன்றது. அதைப் பழக்கப்படுத்டும் விதத்தில் தானாகவே ஒரு கட்டுப் பாட்டுக்குள் வந்துவிடும். கட்டுக்குள் கொண்டு வந்துதான் அதன் மேலே அம்பாரி  அமைத்து உட்கார முடியும்.

    பழக்கப்படுத்திவிட்டால் யானை யாருக்கு வேண்டுமானாலும் மாலை போடும்.

    ஆனால் யானைக்கு மாலை போடுவது அவ்வளவு எளிதல்ல என்று உணர்ந்த   முரளி  மகளை தொலைபேசி மூலமாக அழைத்து, “என் பேரன்கிட்ட குடு அவன்கிட்ட பேசணும்” என்றான்.

    “தாத்தா  என்னா செய்யறே”, என்ற குழந்தைக் குரலைக் கேட்டு மகிழ்ந்து   “டேய் குட்டிப் பையா,  நேத்தும் உம்மாச்சி சேவிச்சேன் இனிமே எப்பவும் சேவிப்பேன் சரியா” என்றான் முரளி.

    குழந்தை “அம்மா தாத்தா என்னவோ சொல்றான்ங்க  ஒண்ணும் புரியலை”  என்றது மழலைக் குரலில்.

    தியானத்தில் ஆழ்ந்தாலும் அதிலே மூழ்காமல் மிதப்பவன்தான் ஞானி என்று புரிந்தது  முரளிக்கு. 

    (சுபம் )

    Share
  • ஒரு வினாடி உயிர்

    தமிழ்த்தேனீ                      

    இரவு  மணி 12 அடித்தது.

    நிமிர்ந்து பார்த்த சத்தியமூர்த்தி  கணிணியில் அவர் எழுதிக்கொண்டிருந்த “ஒரு வினாடி உயிர்”  என்று அவர் எழுதிய வரிகளை மீண்டும் ஒரு முறை படித்துப்பார்த்தார். ஒவ்வொரு வினாடியும் உயிர் பிறக்கிறது, ஒவ்வொரு வினாடியும் உயிர் பிரிகிறது, ஒவ்வொரு வினாடியும் உயிர் பயணிக்கிறது, ஒவ்வொரு வினாடியும் உயிர் தேங்குகிறது, ஒவ்வொரு வினாடியும் உயிர் ஓங்குகிறது, ஒரு வினாடிக்குள் உயிரே போய் உயிர் வந்தது என்று உவமானமாய்க் கூறினாலும், உயிர் ஒவ்வொரு வினாடியும் போய்ப் போய்தான் வருகிறது.

    உயிருக்கு விலையுமில்லை, உயிருக்கு நிலையுமில்லை, ஒரு உடலிலே ஒரு உயிர்தான் என்றால், உயிரில்லாத உடலிலேதான் வேறுயிர்  கூடு விட்டுக் கூடு பாய முடியுமென்றால், கர்ப்பிணியின் உள்ளே  இரு உயிர் வாழ்வதெங்கனம்?  ஒரு உடலில் இரு உயிர் வாழ்வதெப்படி? உயிரில்லா உடலில் கூடு பாய்ந்தால்  அது கூடுவிட்டுக் கூடு பாய்தல்.

    உயிருள்ள உடலில் உள்ளே  இரு உயிராய்க் கலந்து இணைந்து உள்ளேயே உருவாகி கருவாகி  உயிரானால் அதன் பெயர்  என்ன  பாய்தல்  உயிர் பாய்தலா…?

    ஆமாம்  எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாமல்  மனதில் ஓடிய  எண்ணங்களை  வார்த்தையாய்  வடித்திருக்கிறோமே, இதற்கு என்ன பெயர் கொடுப்பதென்று தெரியவில்லையே . 

    இது கவிதையா  கட்டுரையா  சந்தேகத்தின் வித்தா அல்லது இந்த தேகத்தின் விதையா..? அது தெரியவில்லை   ஆனால்  த்ருப்தியாக  இருந்தது.

    தூங்கினாலும் விழித்திருந்தாலும் மனதில் ஓடும் எண்ணங்களை  தடுத்து நிறுத்த  யாராலும் முடியவில்லை.  தறிகெட்டு ஓடும் மனதை  ஒரு கட்டுக்குள் வேண்டுமானால் கொண்டு வர முடிகிறது. கட்டுக்குள் கொண்டு வந்து ஒரு குறிப்பிட்ட சக்தியை  நினைத்து  அதன் நினைவாகவே  எண்ணங்களை சுழலவிட்டு, அந்தப்புரம் இந்தப்புரம்  அலையவிடாமல் அப்படியே  ஒருவழிப் பாதையில் அந்த எண்ணங்களை ஒருமித்த மனதோடு  அந்த எண்ணக் குதிரையின் லகானை  சரியாகப் பிடித்து,  அந்த குதிரையை  சரியாக வழி நடத்திச்சென்று,  தாம் அடைய நினைத்த  குறிக்கோளை,  பொருளை, பரம்பொருளை அடையமுடிகிறது. அது சிலருக்கு மட்டுமே சித்திக்கிறது. அவர்களைத்தான் சித்தர்கள், ஞானிகள், தவஸ்ரேஷ்டர்கள் என்கிறோம்.

    மனம் ஓடிக்கொண்டே  இருந்தது.  அட  இது சரிப்பட்டு  வராது. இந்த எண்ண ஓட்டங்களுக்கு  முடிவே கிடையாது.   எப்படியாவது  இந்த எண்ண ஓட்டங்களைக்  கட்டுப்படுத்திக்கொண்டு  தூங்க ஆரம்பிக்க வேண்டும். இப்போதே மணி இரவு 12 ஐத்  தாண்டி விட்டது. கணிணிக் கூட்டில்  இருந்த மின்சார உயிரை  தற்காலிகமாக  நிறுத்திவிட்டு,  கணிணியை மூடினார்.  ஆமாம்  ஏன் இந்தக் கணிணியை  மூடுகிறோம் ? திறந்து வைத்தால்  கணிணிக்கு உயிர் போய்விடுமா என்னும் எண்ணம் எழவே  அந்த எண்ணத்தை  மூடிவிட்டு  படுக்கைக்குப் போனார்  சத்தியமூர்த்தி.

    படுக்கையில் படுத்த படியே  மனதை அமைதியாக  வைத்துக்கொண்டு தூங்க  முயன்றார். எண்ண அலைகள் அவ்வளவு விரைவாக  விட்டுவிடுமா என்ன…? அவ்வளவு பெரிய வீட்டில்  அன்று அவர் மட்டும் தனியே  இருக்கிறார்   என்னும் எண்ணம்  தோன்றியது. 

    ஒரு வினாடி  சுற்றும் முற்றும் பார்த்தவருக்கு,  அந்த அமானுஷ்ய அமைதி  பயத்தை  ஊட்டியது. இதென்ன இப்பிடி  இன்று எண்ணங்கள்  சிறகடித்துப் பறக்கிறதே தூங்கவிடாமல்  என்று எண்ணியவர், கண்களை  மூடித் தூங்க முயன்றார். 

    கண்ணின் உள்ளே காட்சி விரிந்தது. அந்தக் காட்சிகளுக்கேற்றவாறு  ஒலியும் ஒளியும் வினாடிக்கு வினாடி  உயிரூட்டிக்கொண்டிருந்தது.  அவருடைய எண்ணங்கள்.    வாழ்க்கையில் முதன் முறையாக  தனியாக  இருக்கிறோம் என்னும் எண்ணம்.   அதை உணர்ந்ததும், இன்னும் அதிகமாக எண்ண அலைகள் தாக்கத் தொடங்கின.

    ஒரு  பெரிய குடும்பத்தில் கடைக்குட்டியாகப் பிறந்த காலத்திலிருந்தே  தனிமையை  அனுபவித்தறியாத   செல்லக் குழந்தை. உற்றார் உறவினர்கள்  என்று ஒரு பெரிய கூட்டமே  வீட்டில்  இருக்கும்.  சிறுவயது முதல் யாராவது  ஒருவர் மடியிலோ, அல்லது யாரையாவது  கட்டிக்கொண்டோ  படுத்து  தூங்கித்தான் பழக்கம். அப்படிப்பட்ட  அவர் இன்று தனியாக  யாருமே  இல்லாத வீட்டில்   ஒற்றை ஆளாக  படுத்துக்கொண்டிருப்பது  ஒரு வினோதமான  அனுபவமாக  உணர்ந்தார் அவர்.

    “என்னங்க  நாளைக்கு  காலையிலே  ப்ரும்ம முஹுர்த்தத்தில் கல்யாணம், நீங்க இன்னிக்கே அங்கே  வந்தால்  உங்களாலே  அந்த சத்திரத்து  சந்தடிலே  தூங்க முடியாது.  நானும் எனக்கு துணையா  ரமேஷும் இன்னிக்கே சத்திரத்துக்கு  போயிடறோம்.  நீங்க  நாளைக்கு காலையிலெ வந்தா போதும்”   இல்லத்தரசி  சாவித்ரி சொல்லிவிட்டுச்  சென்றது  நினைவுக்கு  வந்தது.

    ஒரு வேளை  யோசிக்காமல்  சரி என்று சொல்லிவிட்டோமோ, அங்கே போயிருந்தால்  எல்லோரையும் பார்த்திருக்கலாம்.  இப்படி தனிமையில் மாட்டிக்கொண்டு  அவதிப்பட்டிருக்க வேண்டாமே என்று தோன்றியது. சரி  ஆனது ஆகிவிட்டது  இப்போது வேறு வழியில்லை. தூங்கித்தான் ஆகவேண்டும். கடிகாரத்தை  எடுத்து காலை 4 மணிக்கு  அலாரம் வைத்துவிட்டு,  மீண்டும்  தூங்க யத்தனித்தார் சத்தியமூர்த்தி. அவருக்கு  தோன்றியது,  இந்தப் பெண்களே மிகவும் முன் யோசனைக்காரர்கள்.

    நாம்  எத்தனையோ முறை  அலுவல் நிமித்தமாக  வெளியூர் செல்லும் போதெல்லாம்  எப்படி  சாவித்திரியால் தனியே  இருக்க முடிந்தது ? மனக்கட்டுப்பாடு பெண்களுக்கு  கைவந்த கலையோ ? அதெல்லாம்

    இருக்கட்டும். தன்னைத் தனியே விட்டுவிட்டு  இவளால் எப்படிப் போக முடிகிறது. அவருக்கு சிரிப்பாய் வந்தது, அவர் என்ன குழந்தையா..?  எவ்வளவு பெரிய ஆண்மகன்.

    தன்னைத்தனியே  விட்டுவிட்டு  அதுவும் ஒரே ஒரு நாள் போயிருக்கிறாள் அதற்குள்ளே  மொத்தப் பெண்களுக்குமே இரக்கமே கிடையாது  என்று எண்ணும் அளவுக்கு  என்ன ஆகிவிட்டது இப்போது..?  ஆனால்  இது போல் அவரைத் தனியே விட்டு விட்டு  செல்லும் நிலை  இது வரை  ஏற்படவே  இல்லை  இது தான் முதல் முறை.

    “முதல் இரவு”   முதல்  இரவா     அதுவும் ஐம்பது வயதைத் தாண்டிய  அவருக்கா..?  களுக்கென்று அவரே  சிரித்துக்கொண்டார்.  இந்த மனம் இருக்கிறதே  என்ன பாடு படுத்துகிறது,  எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்த விடாமல் கற்பனைச் சாட்டை கொண்டு  விரட்டி விரட்டி  ஓட வைக்கிறது.

    எப்படித்தான்  இந்த சித்தர்களும் முனிவர்களும் யோகிகளும் ஞானிகளும் இந்த எண்ணக் குதிரையை கட்டுப்படுத்தினரோ.?  எண்ணிப்பார்த்தாலே  சுவாரஸ்யமாய் இருந்தது.  சரி  எண்ணித்தான் பார்ப்போமே  என்ன குறைந்துவிடும்.?  எதற்காக  இந்த எண்ண ஓட்டத்தை நிறுத்தவேண்டும்.? அப்படியே எண்ணத்தை ஓடவிட்டார்.

     

    எப்போது தூங்கினார் என்றே  தெரியாமல் அவரை  அறியாமல் தூங்கிப்போனார். நல்ல தூக்கத்தில்  திடீரென்று படார்படார் என்று ஒரு சத்தம். மீண்டும் பட ப்-பட,பட் படார் என்று ஏதோ சத்தம் கேட்டு  திடுக்கிட்டு கண்விழித்தார். மின்சாரம் போய்விட்டது.

    அப்படியே சற்று நேரம்  எங்கிருந்து அந்த சத்தம் வருகிறது  என்றே தெரியாமல் அசைவற்றுக் கிடந்தார். மீண்டும் ஒரு முறை தலைக்கு மேலே அந்தச் சத்தம், என்ன இது ஏதோ ஒரு பொருள் வெளி நீலத்தில் அறையின் இந்த மூலையிலிருந்து  அந்த மூலைக்கு  நகர்ந்து சென்றது, உற்றுப்பார்த்தார்  அது என்னவென்று தெரியவில்லை. ஆனால்  அந்தப் பொருள் மிதந்துகொண்டே இருந்தது.

    பயமாகவும் இருந்தது, அது என்னவென்று அறிந்துகொள்ளும் ஆவலும் வந்தது. தனியாக இருக்கிறோம் என்னும் உணர்வு அவரின் ஜாக்கிரதை உணர்வைத் தூண்டியது. மிகவும் மெதுவாக  எழுந்து இருட்டில் தட்டுத் தடுமாறி  சமையலறைக்குச் சென்று  அங்கே தீப்பெட்டியைத் தேடினார்.

    மின்சாரம் வந்துவிட்டது. வேகமாக படுக்கை அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். மீண்டும் அதே பட் பட்டார்பட-ப்ட்ட்படா என்று சத்தம் கேட்டது. படுக்கை அறையை வெளியிலிருந்தே நோட்டமிட்டார். ஒன்றும் தெரியவில்லை. கையில் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு வந்து  நிதானமாக மிக ஜாக்கிரதையுடன் படுக்கை அறையினுள் கம்பை ஓங்கியபடி அடிப்பதற்கு தயாராக  நுழைந்தார். அந்தப் பொருள் கண்ணில் பட்டது. அதைப் பார்த்துவிட்டு  திகைத்து நின்றார். ஓ  இதுதான் அந்த சத்தத்துக்கு காரணமா

    காலையில் அவருடைய  பேரன் கண்ணன் தாத்தா  வாசல்ல  கியாஸ் பலூன் வந்திருக்கு  எனக்கு ஒரு கியாஸ் பலூன் வாங்கித் தரயா, என்று கேட்டதும், அவர் வாங்கி தந்ததும் நினைவுக்கு வந்தன. கண்ணன்  அந்தக் கியாஸ் பலூனை அப்படியே  விட்டிருக்கிறான்.

    அந்த நீல நிறப் பலூன்  மேலே போய் முட்டிக்கொண்டு   நின்றிருக்கிறது, அந்தப் பலூன்  மின்சார விசிறியின் வேகத்துக்கு  நகர்ந்து மின்சார விசிறியின் இறக்கைகளில் பட்டு  சத்தம் அளித்திருக்கிறது. இருட்டில்  நீலமாக  அந்தப் பலூன் காற்றில் உலா  வந்திருக்கிறது  ,அதைப் பார்த்து பயந்து போனோம், அந்தச் சத்தம் கேட்டுத்தான்  பயந்து விழித்திருக்கிறோம்   என்பதை உணர்ந்தார்.

    முதலில் அந்தப் பலூனை எடுத்து காற்றை வெளியேற்றி விடலாம்  என்று அதை ஒரு ஊசியால் குத்த கையை  வைத்தார். மனதில் மீண்டும் நினைவுகளின் ஊர்வலம்.   ஏனோ  ஒரு இரக்கம்  அவர் மனதில்.   வேண்டாம்  என்று நினைத்து  கையிலிருந்த ஊசியை  அந்த பலூன் அருகிலிருந்து தொலைவாக கொண்டு சென்றார்.

    இப்படித்தானே  இறைவன்  இந்தக் காற்றை ஊசி கொண்டு நாம் வெளியேற்றுவது போலப் போல நம் உயிரை  இந்தக்  கூட்டை விட்டு வெளியேற்றிவிடுகிறான்  என்று உணர்ந்து  ஊசியால் குத்தாமல் கையை எடுத்தார்.

    படார் என்று ஒரு சத்தம் கேட்டது. பலூன் தானாக  உடைந்தது.

    ஏதோ  ஒன்று புரிந்தது   அவருக்கு.

     

                                   சுபம்

    Share
  • ரகசியம்

    தமிழ்த்தேனீ 

    “அப்பா  எப்பவுமே  நீங்க சொல்றதைத்தான் நாங்க கேக்கணும்னு கிடையாது. நாங்களும் வளந்துட்டோம். நாங்க சொல்றதை  இனிமே  நீங்க  கேளுங்கோ.  அம்மாவை  திட்டிண்டே  இருக்காதீங்கோ”, என்று  கடுமையாகக் கூறிய மகன் தேசிகனை  அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தார்  ராமசேஷன்.

    வாழ்க்கையில்  எதற்குமே  கலங்காத, எந்த நேரத்திலும் நிதானத்தைக் கைவிடாத பொறுமைசாலி. எவ்வளவோ  கஷ்டங்களை  எதிர்கொண்ட போதும், ‘எப்பிடி இருக்கீங்க ?’  என்று கேட்கும்  அனைவரிடமும், “எல்லாப் ப்ரச்சனைகளோடும்  நலமாக இருக்கிறேன்” என்று புன்னகையுடன் கூறும் பக்குவம் உள்ள  ராமசேஷன், பதினெட்டு வயதில், 90 ரூபாய் சம்பளத்தில்  ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்து உழைத்தவர்.

    சிறுக சிறுக சேர்த்து பெற்றவர்களின்  கடைசிக் காலம் வரை  அவர்களை  மனம் நோகாமல் இதமாக நடத்தி  தந்தையார்  இறந்த போதிலிருந்து கடைசீவரை  தன் தாயார் மைதிலியை யாரிடமும்  விடாமல்  தானே  பார்த்துக்கொண்டு, கிட்டத்தட்ட  நாற்பது ஐந்து  ஆண்டுகள் வாழ்ந்தாயிற்று, இது வரை  யாரிடமும்  எதற்காகவும் தலை குனிந்ததில்லை, யாசகம் கேட்டதில்லை, மனசாட்சி, தெய்வம் இரண்டைத் தவிர  யாரிடமும் பயப்படாமல் வாழ்க்கையை கழித்தாயிற்று.

    அந்தக் கஷ்டங்களின்  நிழல்கூட   மனவி குழந்தைகளைத் தாக்காமல், தானே  மொத்தப் பொறுப்பையும் எடுத்துக்கொண்டு இரு பெண் குழந்தைகளையும் ஒரு  பிள்ளையையும் தன்  சக்திக்கு மேலாக  படிக்கவைத்து  ஆளாக்கி, பெண்களுக்கு நல்ல இடத்தில்  திருமணம் செய்து, பிள்ளைக்கும் அவன் விரும்பிய பெண்ணையே  திருமணம் செய்து வைத்தார்.

    பொறுப்புகளை  வெற்றிகரமாக  செயல் படுத்திய  இவருக்கு திருமணமாகி, விளையாட்டு போல முப்பத்தாறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அவர் மனைவி மங்களத்துக்கு   தெரியும்  அவருடைய  அந்தரங்கம்.

    ராமசேஷனும் மங்களமும்  இருவரும் திருமணநாளில் ஸ்ரீரங்கம் சென்று அரங்கனை சேவித்துவிட்டு வருகிறோம்  என்று கிளம்பிப் போய் ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து அவர்களின் பிள்ளை தேசிகனுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டனர்.

    தேசிகன், “என்ன அம்மா தரிசனம் நன்றாக கிடைத்ததா? ரொம்ப அலையாதீங்கோ, வேளைக்கு  சாப்டுக்கோங்கோ” என்றான் கரிசனத்துடன்

    “சரிடா,  இதோ போனை அப்பாகிட்ட குடுக்கறேன்”, என்று மங்களம் போனை ரமசேஷனிடம் கொடுத்தாள். தேசிகன்  , “அப்பா,  அம்மாவை  ஜாக்கிரதையா பாத்து கூட்டிண்டுபோய்ட்டு வாங்கோ. அம்மாவை  ஏதாவது சொல்லிண்டே இருக்காதீங்கோ. கொஞ்சம் இதமா நடந்துக்கோங்கோ” என்றான்.

    ராமசேஷன், “சரிப்பா நான் உங்க அம்மாவை  ஒண்ணும் சொல்ல மாட்டேன், பத்திரமா கூட்டிண்டு வரேன், நீங்க எல்லாரும்  பத்திரமா இருங்கோ, என் பேரன் கிருஷ்ணனை பத்திரமா பாத்துக்கோங்கோ  ரெண்டு பேரும்” என்றார்.

    அவருடைய மருமகள் தொலைபேசியில் வந்தாள்.

    “அப்பா,  அம்மா, இங்கே நாங்க ரெண்டு[பேரும்  நன்னா இருக்கோம். உங்க பேரன் பண்ற லூட்டிதான்  தாங்க முடியலை. தாத்தா, பாட்டி எப்போ வருவான்னு நச்சரிக்கறான். சீக்கிரம் தரிசனத்தையெல்லாம் முடிச்சிண்டு  வாங்கோ”,  என்றாள்.

    “சரிம்மா  நாங்க  நாளைக்கு  வந்துடுவோம். சரி போனை வெச்சிடறேன்”, என்றார் ராமசேஷன். 

    எப்பவுமே  மரியாதைக் குறைவா பேசாத, அதிர்ந்து கூடப் பேசாத குணம். எல்லாருக்கும் நல்லது செய்யணும். நாட்டுக்கு ஏதாவது செய்யணும். எல்லா  உறவுக்காரங்ககிட்டேயும் அன்பா, பாசமா பழகற பிள்ளை. அதுனாலே  எல்லாருமே  ராமசேஷனும் மங்களமும் ரொம்பக் கொடுத்து வெச்சவா, நல்ல பிள்ளையைப் பெத்திருக்கா  அப்பிடீன்னு சொல்லுவா. அமெரிக்காவிலே  பெரிய கம்பனீலே பெரிய பதவீலே  இருக்கான்.

    எல்லாரும் சொல்றா ரொம்ப புத்திசாலி,  வேலையிலே  கெட்டிக்காரன், அப்பிடீன்னு. அவன் வேலை செய்யிற  கம்பனியிலேயே  இவனுக்கு  ரொம்ப மரியாதை தரா, எல்லாரும் சொல்லும்போது  ராமசேஷனுக்கு  ரொம்ப இதமாவே இருந்துது மனசு, அவருக்கு  அவருடைய  பிள்ளை தேசிகன்  நேர்மையான, நல்ல பிள்ளை  என்று தெரியும், பாசமான பிள்ளை. ஆனாலும்  கொஞ்ச நாளா  அவன்  மனசுலே  என்ன இருக்குன்னு  தெரிஞ்ச போது கொஞ்சம் அதிர்ச்சியாதான் இருந்துது. அவன்  என்ன புரிஞ்சிண்டான்னே  தெரியலை, ஒண்ணு புரியறது, இந்த மேல் சாவனிசம், பீமேல் சாவனிசம்  இதெல்லாம் படிச்சிட்டு,  பழங்காலத்திலே  புருஷாள்ளாம் எப்படி பொண்டாட்டியை அடிமையா  நடத்தி இருக்கா, எப்பிடி  இவ்ளோ மோசமா  நடந்துக்க அவாளுக்கு  மனசு வந்துது, இப்பிடியெல்லாம் அவர் காது பட பேசுவதைக் கேட்டிருக்கிறார்.

    அது மட்டுமல்ல  என் பொண்டாட்டியை  நான் எனக்கு சரி சமானமா  நடத்துவேன், அவளுக்கு உண்டான  மரியாதையை  குடுப்பேன், என்று கொள்கைப் பிடிப்போட நடந்துக்கிறான். இதெல்லாம் பெருமையாதான் இருக்கு.  ஆனா அந்தப் பிள்ளை  தேசிகன் கொஞ்ச நாளாவே  ராமசேஷன் சொல்றது சரியாவே இருந்தாலும்  பிடிவாதமா  அதை மறுத்துட்டு, “அப்பா   சும்மா இருங்கோ  உங்களுக்கு  ஒன்னும் தெரியாது, அம்மா  எது பண்ணாலும் குறை சொல்லுவேள் அது ஒண்ணுதான்  தெரியறது உங்களுக்கு”, அப்பிடீன்னு  ஒரு நாள் பேசினதக் கேட்டவுடனே  அதிர்ச்சியா இருந்தது ராமசேஷனுக்கு. 

    அம்மா  தப்பு பண்ணாலும், சரியா பண்ணாலும் அதுதான் சரின்னு  அம்மா பக்கம் பேசறதை வழக்கமா வெச்சிண்டு இருக்கான். ஒண்ணு புரியறது  அவன்  குழந்தை  இன்னும் இந்த வாழக்கையோட சூக்‌ஷுமத்தை  சரியா புரிஞ்சிக்காத  குழந்தை. அது மட்டுமில்லே, இதமா பேசி அவா காரியத்தை நடத்திக்கறவா யாரு, காரியம் நடக்கணும்னா, அதுக்கேத்த மாதிரி இச்சகம் பேசறவா யாரு,  எந்த ப்ரதிபலனும்  எதிர்பாக்காம  அவனோட நலத்தைப் பத்தி யோசிக்கறவா  யாருன்னு இன்னும் புரியலை,அம்மாவை பத்திரமா பாத்துக்கணும்  இல்லேங்கலை, ஆனா  நல்ல அப்பாவையும்  புரிஞ்சுக்கணும்.

    ஆனாலும் ஒரு திருப்தி.  தன்னோட காலத்துக்கு அப்புறம், அவன் அம்மாவை மனம் கோணாம  அன்பா நடத்துவான் அப்பிடீன்னு  ஒரு திருப்தி. அதுனாலே  அவன்கிட்ட ஒண்ணுமே  பேசாம  அப்பிடியே  விட்டுட்டு ‘சரிப்பா’ என்று சொல்வதை  வழக்கமாகக் கொண்டார் ராமசேஷன். அனாவசியமா, தேவையில்லாம அவன்கிட்ட பேசறதைக் கொஞ்சம்  குறைச்சிண்டார்.

    எதுக்கும் அவன்கிட்ட விவாதமே  வளத்துக்கறதில்லே  என்ற முடிவோட இன்னும் கொஞ்சம் இதமா இருக்க ஆரம்பித்தார் ராமசேஷன்.

    ஸ்ரீரங்கத்திலேருந்து  வந்து ப்ரசாதமெல்லாம் குடுத்துட்டு,  அங்கே கோயில் வாசலில் இருந்து வாங்கி வந்த  ரங்கநாதப் பெருமாள் பொம்மையை  பேரன் கிருஷ்ணணிடம் கொடுத்தார்.

    மறு நாள் அவருடைய பேரன்  கிருஷ்ணன் விளையாடிக்கொண்டிருந்தான். அவன் வழக்கமா  விளையாடற கார் பொம்மை  ஒரு பக்கம் உடைஞ்சு போயிருந்தது. அந்தக் கார் பொம்மையை  அவனிடமிருந்து  வாங்கி  மேலே வைத்துவிட்டு, “நேத்துதானே  சொன்னேன் இந்தக் கார் பொம்மையை எடுக்காதேன்னு? உங்க அம்மா எடுத்துக் குடுத்தாளா? இனிமே இந்தக் கார் பொம்மையை  எடுத்தே  அப்புறம் அடிச்சிருவேன் ” என்றான் தேசிகன். 

    கிருஷ்ணன்  அப்பாவை  நிமிர்ந்து  பாத்து,  “அப்பா  நானும் வளந்துட்டேன், எப்பவுமே  நீங்க சொல்றதையே கேக்கணும்னு சொல்லாதீங்க,  ஹும்….. அப்புறம் அம்மாவைத்  திட்டிண்டே  இருக்காதீங்கோ”  என்றான் தன் மழலை மாறாத குரலில்.

    என் மருமகள் களுக்கென்று சிரித்தாள்.

    ராமசேஷன்  ஒன்றும் சொல்லவில்லை! அமைதியாக  தேசிகனையே பார்த்துக்கொண்டிருந்தார். தேசிகன்  தலைகுனிந்தான்.

    (சுபம்)

    Share
  • சொர்க்க வாசல்

    தமிழ்த்தேனீ

    இன்னிக்கு வைகுண்ட ஏகாதசி, நாங்க எல்லாரும் கோயிலுக்குப் போயி சொர்க்கவாசல் திறந்தவுடனே சுவாமியை நமஸ்காரம் செஞ்சிட்டு வரோம். வீட்டிலேயே இருங்க, கதவைத் தாப்பாள் போட்டுக்குங்க, போயிட்டு வந்துடறோம் என்றபடி கிளம்பினர் வீட்டிலுள்ள அனைவரும்.

    பெரியவர் ராமசாமிக்கு 88 வயசு காது கேக்கலை, கண்ணும் சரியாத் தெரியலை அவஸ்தைப் படறாரு. காலாகாலத்திலே மனுஷன் சீக்கிரமா போய்ச் சேர்ந்தா நல்லா இருக்கும் பாவம் என்று அங்கலாய்த்தாள் பக்கத்து வீட்டு பர்வதம்.

    அவருக்கு சொர்க்க வாசலை அடையும் நேரம் வந்து விட்டது. இவர்களுக்கு தெரியவில்லை என்று எண்ணமிட்டார் பெரியவர் ராமசாமி. அனுதாபச் சொற்கள் காதிலே விழவில்லை. அவர் மனம் பரபரத்துக் கொண்டிருந்தது.

    ஆயிற்று பொழுது விடிந்து ஆறு மணி ஆகிவிட்டது. திறந்திருப்பான் சொர்க்க வாசலை. கிளம்ப வேண்டியதுதான். நேத்து இராத்திரிலேருந்து தூக்கமே வரலை. புரண்டு புரண்டு படுத்து எப்போ விடியும்ன்னு காத்திட்டே இருந்து ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாகக் கழிச்சு தூங்காமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார் .

    இன்னும் நுண்ணிய உணர்வு ஒட்டிக் கொண்டிருக்கிறதே, அதை வைத்து ஒரு துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு சந்தடி இல்லாத நேரமாய்ப் பார்த்து கிளம்பினார். தட்டுத் தடுமாறி மாடிப்படியில் இறங்கி வாயிலைக் கடந்து தெருவில் இறங்கி ஓரமாகவே நடந்து போய் அவருடைய சொர்க்கவாசலில் நின்றார்.

    அவருடைய சொர்க்க வாசல் திறந்திருப்பானா? சரியாக நேற்று ராத்திரி படுக்கப் போகும்போது கடைசீ துளியும் தீர்ந்து விட்டது.இன்னிக்கு விட்டா ஒரு நாள் வீணாயிடுமே, இதயம் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது .நல்ல வேளை! ஆஹா திறந்திருக்கிறது. எதிரே போய் நின்று கையை நீட்டினார்.

    ஐயா வாங்க வாங்க காணுமேன்னு பாத்துகிட்டே இருக்கேன் இந்தாங்க கட்டி வெச்சிருக்கேன் என்றபடி கடைக்காரர் ராயர் நீட்டிய பொட்டலத்தை வாங்கி பிரித்து ஒரு சிட்டிகை மூக்குப் பொடியை கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே எடுத்து அப்படியே உல்லாசமாய் காற்றில் இரண்டு முறை உதறி ஆனந்தமாக மூக்கில் வைத்து உறிஞ்சிவிட்டு கையை துண்டால் துடைத்தார்.

    அந்தப் பொடி கொடுத்த கிறக்கத்திலும் தள்ளாடாமல் மீண்டும் நிதானமாக ஒரு குத்து மதிப்பாக நடந்து வீட்டிற்கு வந்து மாடிப்படி ஏறி அவர் படுக்கையில் உட்கார்ந்து மிக கவனத்துடன் அந்த மூக்குப் பொடி பொட்டலத்தை பிரித்து, எப்போதும் பத்திரமாக வைத்திருக்கும் ஹார்மோனியப் பொட்டி போல் திறந்து மூடுகின்ற மாட்டுக் கொம்பினால் ஆன, அந்தச் சின்னப் பெட்டியில், சிந்தாமல் சிதறாமல் போட்டு அதைப் பத்திரமாக மூடி தலைகாணிக்கு அடியில் வைத்துவிட்டு நிமிர்ந்தார்.

    அவரையே குற்றப் பார்வையுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் மருமகள் மீனாக்ஷி. அந்தப் பார்வைக்கு பொருள் அவருக்கு தெரியும். “எத்தனை தடவை சொல்றது, ஏதாவது வேணும்னா எங்க கிட்ட சொல்லுங்களேன் நீங்க எங்கேயாவது போயி விழுந்து வெச்சா யாரு அவஸ்தைப் படறது, சொன்னா ஏன் கேக்க மாட்டேங்கறீங்க”, என்றாள் அவள்.

    அதற்கு பதில் சொல்லாமல் ஒரு அசட்டுச் சிரிப்புடன் தலைகாணியில் தலை வைத்து நிம்மதியாகத் தூங்கத் தொடங்கினார் ராமசாமி. குறட்டை எட்டு ஊருக்கு கேட்கத் தொடங்கியது.

    Share