தமிழ்த்தேனீ   

 

   1961 ம் வருடம்   

                

 டேய் கண்ணா  சீக்கிரம் படுத்துண்டு தூங்கு, பட்டாசு வெடிச்சது போறும். காத்தாலே 4 மணிக்கெல்லாம் எழுப்பிடுவேன். சீக்கிரம் எழுந்து கங்கா ஸ்னானம் செய்யணும். .போறும் போய் படுன்னு அம்மா சொல்லச் சொல்ல பட்டாசுகளும், மத்தாப்புகளும், புஸ்வாணமும் ,கம்பி மத்தாப்பும் கொளுத்தி மகிழ்ந்ததும், அதுவும் போதாக் குறைக்கு, சின்னதா பொடி டப்பி மாதிரி இருக்குமே ஏரோப்ளேன் அதுமேலே சின்னதா திரி இருக்கும் அதைக் கொளுத்தி விட்டா சர்ருன்னு மேலே கிளம்பி உயரமாய்ப் போய் சுற்றிக்கொண்டே எங்காவது போய் விழும்.

 

அது எங்கே விழுந்தது என்று தேடிப்பார்க்க அடுத்த வீடு ,அடுத்த வீடு என்று ஓட்டின் மேலேயே தாவித் தாவிப் போயி நாலாவது வீட்டு மாடிலே விழுந்திருக்கறதைப் பாத்து அப்பா நாம விட்ட ஏரோப்ளேன் எவ்ளோ தூரம் பறந்து ,எவ்ளோதூரம் போயி விழுந்திருக்கு என்று ஆச்சரியப்பட்டு நின்றபோது ,

 

 மாடியிலிருந்து அப்பா சைகை செய்தார் , வா என்று . அடேடே அப்பாவே மாடிக்கு வந்தாச்சா. நான் வேற நாலாவது வீட்டு மாடிலே இருக்கேன். தயங்கித் தயங்கி ஓட்டுமேலே ஏறி இறங்கி  வீட்டு மாடிக்கு வந்தான் கிருஷ்ணன். 

 

 கிருஷ்ணா இப்பிடியெல்லாம் ஓட்டுமேலே ஏறக் கூடாது, எங்கேயாவது தடுக்கி விழுந்தா என்ன ஆகும் . சரி சரி இனிமே ஓட்டுமேலே ஏறாதே  என்றபடி அப்பா கீழேருந்து உங்க அம்மா குரல் குடுத்திண்டே இருக்கா ,வா வா சீக்கிரம் போயிடலாம்  என்றார் அப்பா.

 

 நான் சொல்லிண்டே இருக்கேன் இப்போ கீழே இறங்கி வரப் போறியா இல்லே அப்பாகிட்டே சொல்லட்டுமான்னு அம்மாவோட குரல் கேட்டு பயந்து தாவித் தாவி  வீட்டு மாடிக்கு வந்து கடகடன்னு கீழே இறங்கி ஓடி வந்து அம்மாவுக்குத் தெரியாம உள்ளே போயி  அம்மா நான் அப்பவே வந்துட்டேன் நீங்கதான் என்னைக் கவனிக்காம கத்திண்டே இருக்கீங்க.  என்று சொல்லிவிட்டு ,நான் படுத்துண்டு ரொம்ப நேரமாச்சுன்னு சொல்லிட்டு அப்பாவைப் பார்த்து  சிரித்தான் கிருஷ்ணன் .

 

 குட் நைட்  ,சீக்கிரம் தூங்கு காத்தாலே  சீக்கிரம் எழுந்துக்கணும் என்றபடி போர்த்திவிட்டுவிட்டு போனார் அப்பா.    கனவிலும் பட்டாசுகளும், மத்தாப்புகளும், புஸ்வாணமும் ,ஏரோப்ளேனும் பூப்பூவாய் வாரி இறைத்தன.   டேய் எழுந்திருடா எவ்ளோ நேரமா எழுப்பறது , தலைக்கு மேலே வேலை இருக்கு , எல்லாரும் எழுந்தாச்சு ,வாடா கண்ணு என்று அம்மாவின் குரல் கேட்டு ,நான் எப்பவோ வந்து தூங்கியாச்சும்மா, ஏன் தொந்தரவு செய்யறே என்று திரும்பிப் படுத்தான் கிருஷ்ணன்,

 

 என் கண்ணோல்லியோ திரும்பித் திரும்பி படுத்துக்காதே, எழுந்திருடா செல்லம், மணி நாலாயிடுத்து , சீக்கிரம் எழுந்து வாடா கண்ணு  என்று அம்மா என்னை அணைத்து தூக்கி எழுப்பியவுடன், அரைகுறையாய் தூக்கம் கண்ணை அழுத்த அலங்க மலங்க விழித்து எழுந்தான் கிருஷ்ணன்.

 

 எவ்ளோ பெரிய பையனாயிட்டே என்று கூறி ஒரு முத்தம் கொடுத்து  அப்படியே தூக்கி அணைத்துக் கொன்டு வாடா கண்ணு என்று கையைப் பிடித்து கூடத்துக்கு அழைத்துப் போனாள் அம்மா கமலம். 

 

 நடுக் கூடத்தில் வரிசையாக மணைகள் போடப்பட்டு இருந்தன, அதில்  சமீபத்தில் கல்யாணம் ஆன  அக்கா, அத்திம்பேர், அவர்கள் பக்கத்தில் அண்ணா ,  மன்னி, அடுத்தடுத்து மணைகளில் இரு அக்காக்கள் ,  நடு நாயகமாய் இரு மணைகள், அதில் ஒன்றில் அப்பா உட்கார்ந்திருந்தார்,

 

வாடா குட்டிப் பையா வா வந்து உக்காரு என்று தன் பக்கத்தில் உட்காரவைத்துக் கொண்டார். எதிரே பெரிய தாம்பாளத்தில்  வெற்றிலை பாக்கு, பழங்கள், குங்குமச் சிமிழ், சுண்ணாம்பு,  எண்ணைக் கிண்ணத்தில் நல்லெண்ணெய், எல்லாம் வைக்கப் பட்டிருந்தன. குத்துவிளக்கு மங்கலமாய் ஒளிர்ந்தது. அம்மா புடவைத் தலைப்பை நன்றாக இழுத்துப்  போர்த்திக்கொண்டு,நான் முதல்லே அப்பாவுக்கு நலங்கு இடறேன் , அதைப் பாத்து மாப்பிள்ளைக்கு நீ இட்டுவிடு என்றாள்  அக்காவிடம்.

 

 சரிம்மா  என்று  அக்கா அத்திம்பேர் எதிரே வந்து உட்கார்ந்து கொண்டாள்,   எழுந்து  குனிஞ்சு இடணும் உக்காரப்படாது, என்றாள் அம்மா, சரிம்மா என்று அக்கா அத்திம்பேர் எதிரே வந்து நின்றாள்.  அம்மா அப்பாவிடம் காலை நீட்டுங்கோ என்றாள்,  அத்திம்பேர் காலை நீட்டுங்கோ என்றான் கிருஷ்ணன், மப்பிள்ளையும் சிரித்துக் கொண்டே காலை நீட்டினார். அப்பாவும் குத்துக் கால்போட்டுண்டு காலை நீட்டினார். அம்மா அப்பாவின் காலுக்கு முதலில் மஞ்சள் பூசினாள், அக்காவும் அதேபோல் செய்ய ,அம்மா இதோ பாரு பின் காலிலே நன்னாதடவு, என்றாள். அதேபோல் அக்காவும் அத்திம்பேர் காலிலே மஞ்சளைப் பூசினாள், 

 

 நீயும் என்  பிள்ளைக்கு  அப்பிடியே  காலிலே மஞ்சள் பூசி  நான் செய்யறதை அப்பிடியே செய்யி என்றாள் கமலம் மருமகளிடம் . மன்னியும் சரிம்மா என்று அண்ணாவுக்கு காலில் மஞ்சள் பூசினாள்.  அடுத்து இப்போ இதோ மஞ்சளையும் சுண்ணாம்பையும் கலந்து வெச்சிருக்கேன் பாரு நலங்கு மாவு அதை எடுத்து  புறங்காலிலே நடுவிலே ஒரு பொட்டு வையி.

 

அப்புறம் காலோட பக்கவாட்டிலே நலங்கு இடற மாதிரி இடு அப்பிடீன்னு  சொல்லிக் கொடுத்துக்கொண்டே தானும் அப்பாவுக்கு இட்டு முடித்தாள். அடுத்து அண்ணாவுக்கு  மன்னி  அம்மாவைப் பாத்து அப்பிடியே நலங்கு இட்டு முடித்தாள். அக்காக்களுக்கும் அம்மா நலங்கு இட்டு முடித்து  காலை நீட்டுடா குழந்தே என்று என் காலைப் பிடித்து நீட்டி  அதிலும் மஞ்சள் பூசி நலங்கு இட்டாள்.   இப்போ அம்மாவை உட்கார வைத்து  நீங்க அம்மாவுக்கு நலங்கு இட்டு விடுங்கோ என்று ஏகோபித்த குரலில் அக்காக்கள், அத்திம்பேர், அண்ணா, மன்னி எல்லாரும் குரல் கொடுத்தார்கள்.

 

 அம்மா வெட்கப்பட்டுக் கொண்டே வந்து மணையில் உட்கார்ந்தாள். அப்பா  ஏற்கெனவே பழக்கமானவர் போல அம்மாவின் காலில் மஞ்சளைப் பூசி நலங்கு இட்டார். எல்லோரும் சந்தோஷமாக ஆர்ப்பரித்து கைகொட்டி சிரித்து மகிழந்தனர்.

 

 சரி சரி என்று வெட்கப்பட்டுக் கொண்டே எழுந்த அம்மா இப்போ  நல்லெண்ணை  தேய்க்கணும், நான் எப்பிடி தேய்க்கணும்னு  சொல்லித் தரேன் , என்றபடி அப்பாவிடம் வந்து வேஷ்டியை மடிச்சுக் கட்டிண்டு உக்காருங்க  என்றபடி  அவருடைய துடையில் எண்ணெய்க் கிண்ணத்தில் விரலைத் .தோய்த்து மேலிருந்து கீழாக ஏழு பொட்டுக்கள் வைத்தாள்.

 

 ஏம்மா  எதுக்கு  தொடையிலே எண்ணெய் வைக்கிறே என்றான் கிருஷ்ணன்  நல்ல கேள்விடா  நானும் ரொம்ப நாளா கேக்கணும்னு நெனைப்பேன். அப்புறம் மறந்து போயிடும் என்றாள் சின்ன அக்கா. இந்த ஏழு பொட்டு ஏன் வெக்கிறோம்னு யாருக்காவது தெரியுமா? என்றாள் கமலம். சொல்லுங்கம்மா தெரிஞ்சிக்கறோம் என்றனர் எல்லோரும்.

 சப்த சிரஞ்சீவிகள்: அஸ்வத்தாமர் , மஹாபலி, வேத வியாசர் ‘ விபீஷணன் , கிருபர்,ஆஞ்சநேயர் ,நாரதர் 

 

 சப்த தரிசனம்:  கோபுரம், விமானம், திருவாயில், பிரகாரம், பலிபீடம், உற்சவர், மூலவர் இவர்களைப் பார்த்து வணங்குவது சப்த தரிசனம் ஆகும்

 

சப்த கன்னியர்கள் :- பிராஹ்மி, மஹேச்வரி,நாராயணி,வராஹி, ருத்திராணி, கௌமாரி,சாமுண்டா

 

 சப்தரிஷிகள் :-  காஸ்யபர்,   கௌதமர்,   பாரத்வாஜர்,  விஸ்வாமித்திரர், வசிஷ்டர்  ஜமதக்னி  ,அத்ரி. 

 

சப்தலோகம்:- பூலோகம், புவலோகம்,சுவலோகம், மகலோகம், சனலோகம்,தவலோகம், சத்தியலோகம்.

 

அதே மாதிரி புண்ணிய நதிகள்னு சொல்ற   கங்கா, யமுனா, சரஸ்வதி, காவேரி, கோதாவரி, நர்மதா, சரயு, கிருஷ்ணா, கோமதி, மகாநதி,  பல்குனி  எல்லாத்தையும் இது மாதிரி இந்த நல்ல நாள்ளே,  எல்லாரையும் நெனைச்சுக்கணும். 

 

முக்கியமா கங்கை நதிலேருந்து  புனிதமான தண்ணீர் இந்த காசிச் சொம்பிலே இருக்கு பாருங்க இதை நாம  ஸ்னானம் செய்யற தண்ணீலே கலந்து ஸ்னானம் செய்யணும். கங்கா மாதாவை வேண்டிண்டு ஸ்னானம் செய்யணும். 

 

அது மட்டுமில்லே நிகமாந்த மஹா தேசிகரைப் பிடிக்காத ஒருத்தர் அவர் மேலே பாம்புகளை ஏவி விட்டுட்டானாம். மஹா தேசிகர் கருட தண்டகத்தை சொல்லி  ஏழு பொட்டு வெச்சாராம். அவரை எந்த துஷ்ட ஜந்துக்களும் நெருங்காம ஓடிப் போயிடுத்தாம், அதுக்குதான் இந்த ஏழு எண்ணெய்ப் பொட்டு என்று கூறியபடியே எண்ணெய் தடவி முடிச்சா. 

 

அதேபோல் அக்காவும், மன்னியும் அவரவர் கணவர்களுக்கு செய்ய,   அம்மா அப்படியே அந்த எண்ணெயைத் தேய்த்துவிட்டு , அப்பாவின்  தலையில்  எண்ணெய் ஒரு பொட்டு வைத்துவிட்டு லேசாகத் தடவி விட்டுவிட்டு, நிமிர்ந்தாள். 

 

அதே போல எல்லோரும் செய்ய , அடுத்து அம்மா கிருஷ்ணனுக்கும்  அதே போல் பொட்டு வைத்து தலையில் எண்ணெய் தடவிவிட்டுவிட்டு,  அப்பிடியே இருங்கோ இப்போ பொண்கள் எல்லாரும்  ஒரு வெத்தலை எடுத்து கொஞ்சம் பாக்கு வெச்சு , அதிலே கொஞ்சமா சுண்ணாம்பு தடவி மடிச்சு  ஆத்துக்காரருக்கு குடுங்கோ என்றாள். எல்லோரும் அதேபோல் செய்தனர்,  எனக்கும் அம்மா அதே போல் வெத்தலை பாக்கு கொடுத்தாள். 

 

படிக்கற பசங்க  வெத்தலை பாக்கு போட்டா படிப்பு வராதுன்னு நீங்கதானே சொல்வீங்க, இப்போ எனக்கு வெத்தலைபாக்கு குடுக்கறீங்களே  எனக்கு படிப்பு வரவேணாமா  என்றேன் நான்.  எல்லோரும் கொல்லென்று சிரித்தனர். இன்னிக்கு ஒரு நாள் நான் குடுக்கறேன் சாப்புடு, ஆனா இனிமே அடுத்த வருஷம் தீபாவளி அன்னிக்கு மறுபடியும் நான் குடுக்கும்போதுதான் வெத்தலை பாக்கு போடணும் சரியா என்றாள். 

 

சரிம்மா என்று அதை வாங்கி மென்றேன். அப்பிடியே எல்லாரும் உக்காருங்கோ என்றபடி ஆரத்தி தட்டை எடுத்து  கையில் வைத்துக் கொண்டு  இங்க வா லக்ஷ்மி என்று மருமகளை அழைத்து நீயும் நானும் ஆரத்தி எடுக்கலாம் என்றபடி ஆரத்தி தட்டை எல்லோருக்கும் பொதுவாக சுத்திவிட்டு ஆரத்தி எடுத்தா தட்டிலே துட்டு போடணும் என்றாள் லக்ஷ்மி. 

 

மாப்பிள்ளை உடனே பர்சிலிருந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து தட்டில் போட்டார்.  அம்மா ஆரத்தி தட்டை எடுத்துக்கொண்டு நான் வாசல்லே போயி இதக் கொட்டிட்டு வரேன், அதுக்குள்ளே  நீங்க இந்தக் குட்டிக் கண்ணனுக்கு குளிப்பாட்டி விட்டுட்டு நீங்களும் குளிச்சிட்டு வாங்கோ என்றாள் அப்பாவைப் பார்த்து. அப்பா வாடா போயி குளிக்கலாம் என்றார். 

 

அப்பா அப்பா நான் ஒரே ஒரு மத்தாப்பு கொளுத்திட்டு வரேம்பா என்று கெஞ்சினான்  கண்ணன், சரி ஒண்ணே ஒண்ணுதான், சீக்கிரம் வரணும், மாப்பிள்ளை நீங்க குளிச்சிடுங்க, நான் இந்தப் பையனைக் கூட்டிண்டு வரேன் என்று கூறியபடி தானும் வாசலுக்கு வந்தார் ரங்கசாமி.. 

 

ஒரு மத்தாப்பு ,ஒரு புஸ்வாணம், ஒரு சங்கு சக்கரம் என்று தொடர்ந்து கொண்டே இருந்தது பட்டாசுகள்.   சீக்கிரம் வாங்க வந்து குளிங்க ,அவனையும் குளிப்பாட்டி  ரெண்ட பேரும் புது சொக்கா போட்டுக்கோங்க,  மாப்பிள்ளை குளிச்சாச்சு, அவருக்கும் நாம வாங்கி வெச்சிருக்கற வேஷ்டி ,சொக்கா, மாலதிக்கு புடவை ,எல்லாம் எடுத்துக் குடுங்க , அப்பிடியே எல்லாருக்கும் புதுத் துணி குடுத்திருங்க. 

 

 எனக்கு சமையல் கட்டிலே வேலை இருக்கு, சீக்கிரமா பக்ஷணம் எல்லாம் செஞ்சு சமையல் செஞ்சு நைவேத்தியம் செய்யணும், எல்லாரும் சாப்படணும். சீக்கிரம் வாங்கன்னு கூப்பிட்டுக் கொண்டே உள்ளே போனாள் கமலம்.

 

டேய் வாடா போறும் அப்புறம் அம்மா டென்ஷனாயிடுவா சீக்கிரம் குளிக்கலாம் வா என்று என்னையும் அழைத்துக் கொண்டு போய் குளிப்பாட்டிவிட்டு தலையைத் துடைத்துவிட்டு, போ போயி புது ட்ரெஸ் போட்டுக்கோ ,என்றபடி குளிக்கத் தொடங்கினார் அப்பா. 

 

நான் புதுத் துணிக போட்டுக்கொள்ள உள்ளே போனேன். டேய் கண்ணா ஸ்வாமி கிட்டே வெச்சிருக்கேன் பாரு சுவாமியை நமஸ்காரம் செஞ்சிட்டு அப்புரம் போட்டுக்கோ. என்றாள் அம்மா. புது பேண்ட் சொக்காயை எடுத்து மாட்டிக்கொண்டு  பட்டாசு பெட்டியை நோக்கி ஓடினேன் நான். இருடா  கையைக் காலை ஓடவிடாம செஞ்சிண்டு இருக்கே ,கொஞ்சம் இரு , 

 

இந்தா இனிப்பு இதைச் சாப்புடு என்று ஒரு மைசூர் பாகுத் துண்டை எடுத்து ஊட்டினாள் அம்மா, இந்த  இனிப்பை சாப்டுட்டு அப்பிடியே  இந்த தீபாவளி லேகியம் இருக்கு பாரு இதையும் கொஞ்சம் சாப்புடு நன்னா செரிமானம் ஆயிடும் . இந்த லேகியத்திலே சுக்கு ,மிளகு,  திப்பிலி எல்லாம் போட்டு வெல்லம்,நெய் எல்லாம் போட்டு செஞ்சிருக்கேன். 

 

இதுக்குப் பேரு திரிகடுகம்னு சொல்லுவாங்க  ,தீபாவளி லேகியம்ன்னு சொல்வாங்க இது நல்ல மருந்து வியாதியே வராதுன்னு வாயிலே ஊட்டிவிட்டுவிட்டு இப்போ ஓடிப்போயி பட்டாசு வெடின்னு சொல்லி அனுப்பினாள் . 

 

இந்தப் பட்டாசு மட்டும் எவ்ளோ வெடிச்சாலும் திருப்தியே வராது,  தெருவே கூடி பட்டாசுகள் வெடித்துக்கொண்டே இருந்தோம், பாவம் சில ஏழைச் சிறுவர்கள் வெடித்தும் வெடிக்காமல் இருக்கும் பட்டாசுகளை பொறுக்கிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கூப்பிட்டு கொஞ்சம் பட்டாசுகளைக் கொடுத்தார் அப்பா. 

 

அப்பா நீங்களே ஒரு மத்தாப்பு செய்வீங்களே  அதை இந்த தடவை செய்யலையா என்றான் கண்ணன் அப்பாவிடம் , நீ கேப்பேன்னு தெரியும் ஏற்பாடெல்லாம் செஞ்சு வெச்சிருக்கேன்  என்றபடி  அவர் ஏற்கெனவே பொடித்து வைத்திருந்த உப்பு , கொஞ்சம் கரி  இரண்டையும்   ஒரு பழைய வேட்டித் துணியைப் பரப்பி அதில் போட்டு நீளமாக சுருட்டி அதன் ஒரு முனையை கயிற்றால் கட்டி,  இன்னொரு முனை வரை  மெல்லிய கம்பியால் சுற்றி முடிந்து  கட்டினார்.

 

 இப்போ  சொக்கப் பனை கொளுத்தலாமா  என்று கேட்டுக்கொண்டே ஒரு முனையில் பற்ற வைத்து  கயிற்றைப் பிடித்துக்கொண்டு  வேகமாகச் சுழற்ற  அதிலிருந்து மத்தாப்பூ சிதறுவது போல ஒளிவண்ணமாய் சிதறி சுழன்று கண்ணுக்கு விருந்தாக ஆனது. கைகொட்டிச் சிரித்து மகிழந்தான் கண்ணன். 

 

கண்ணா இந்த பட்டாசுக்கு பேரு என்னான்னு தெரியுமா ?  சொக்கப்பானை கொளுத்தறதுன்னு சொல்வாங்க . இப்போ மட்டும் இல்லே கார்த்திகைப் பண்டிகைக்கும் செஞ்சு தரேன். அப்பவும் சொக்கப் பானை கொளுத்தலாம் ,இப்ப சீக்கிரமா உள்ளே போகலாம் வான்னு அழைத்துக் கொன்டு போனார் அப்பா. 

 

உள்ளே இருந்து அம்மா சீக்கிரம் எல்லாரும் சாப்பிட வாங்க  என்றாள். சரி கண்ணா  வா போயி விருந்து சாப்பாடு சாப்படலாம். அம்மா பக்ஷணமெல்லம் செஞ்சு வெச்சிருப்பா, வடை பாயசம் , சர்க்கரப் பொங்கல் ,எல்லாம் செஞ்சிருப்பாங்க. 

 

வா போயி சாப்டுட்டு அப்புறமா  மறுபடியும் பட்டாசு வெடிக்கலாம்  என்றார். சரிப்பா என்று அப்பாவின்  கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே வந்தான் கிருஷ்ணன்.   தலைவாழை இலை போட்டு  அதிலே ஒரு ஓரத்தில் வாழைப்பழம் சர்க்கரை, கூட்டு அவியல், உருளைக்கிழங்கு கறி,அப்பளம், என்று வரிசையாக பறிமாறப்பட்டு பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக அம்மாவின் கைமணத்தோடு கூடிய சமையல் பசியைத் தூண்டியது.  உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினோம். 

 

ரங்கசாமி  சாப்பிட்டுக்கொண்டே   கமலம்  நீ பாத்தியா நம்ம வீட்டிலே குளவி கூடு கட்டி இருக்கு என்றார். வீட்டிலே குளவி  கூடு கட்டினா வீட்டுப் பெண்கள் யாராவது கர்ப்பமாவா  அப்பிடீன்னு பெரியவங்க சொல்வாங்க என்றாள் லக்ஷ்மி. சாப்பிட்டு முடித்து எல்லோரும் கையை கழுவிக்கொண்டு  கூடத்தில் வந்து ஊஞ்சலில் உட்கார்ந்தோம். உக்காருங்க மாப்பிள்ளை வெத்தலை போடறீங்களா என்று வெற்றிலைபாக்குத் தட்டை நகர்த்தினார் அப்பா. 

 

உள்ளே யாரோ வாந்தி எடுப்பது போல் சத்தம் கேட்டது, யாரு வாந்தி எடுக்கறது என்றார் அப்பா. சற்று நேரம் கழித்து அம்மா உள்ளே இருந்து வந்து உங்க மாட்டுப் பொண்ணு லக்ஷ்மி தான் வாந்தி எடுத்தா என்றாள். சரிதான் உன் சமையல் அதுக்குள்ளே வேலை செய்ய ஆரம்பிச்சுடுத்தா என்றார் அப்பா நமட்டுச் சிரிப்புடன். அதில்லேங்க உங்க  மாட்டுப் பொண்ணு கர்ப்பமா இருக்கா  அதைச் சொல்லத்தான் வந்தேன் என்றாள் கமலம். 

 

ஓ நல்ல செய்திதான், டேய் கண்ணா நீ சித்தப்பா ஆயிட்டே என்றார் அப்பா. எனக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது ஆனால் ஒன்றும் புரியவில்லை. ஆமாண்டா நான்  தாத்தா ஆயிட்டேன்  என்றார் மகிழ்ச்சியுடன்.

 

   13/11/2012    

 

 நந்தன வருடம் ஐப்பசி மாதம் 28 ம் தேதி ஆங்கிலம்  நவம்பர் மாதம் செவ்வாய்க் கிழமை இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.  நமது தொலைக் காட்சியிலிருந்து நேரடியாக வாழ்த்துகிறோம் என்று அறிவிப்பாளர் கைகூப்பி வணங்கினார். 

 

ஏங்க எழுந்திருங்க  இன்னிக்கு தீபாவளி மணி இப்பவே அஞ்சாகறது. எழுந்து போயி கங்கா ஸ்னானம் செஞ்சிட்டு வாங்கோ என்றாள் சசிரேகா. தூக்கம் கண்களைச்  சொருகியது. ஓ இவ்ளோ நேரம் கனவா கண்டேன். சரி சரி நான் போயி பல்தேச்சுட்டு குளிச்சிட்டு வரேன் என்றபடி  அரைகுரையாய் தூக்கம் கண்ணை அழுத்த அலங்க மலங்க விழித்து எழுந்த கிருஷ்ணன். ஆமா அது என்னா தீபாவளி அன்னிக்கு மட்டும் இப்பிடி தூக்கம் கண்ணை அழுத்தறது என்றார். 

 

தொலைபேசி அழைத்தது  இனிய தீபாவளி  வாழ்த்துக்கள் அப்பா என்றாள் அண்ணா நகரிலிருந்து பெரிய பெண்.  இந்தா  நம்ம பொண்ணு உனக்கு தீபாவளி வாழ்த்து சொல்லணுமாம் என்று ரிசிவரை அவளிடம் கொடுத்தார். அம்மா தீபாவளி வாழ்த்துக்கள் என்றாள் சரி ஆசீர்வாதம் மாப்பிள்ளைகிட்டேயும் சொல்லு  முக்கியமா என் பேரப்பசங்களுக்கு  சொல்லு, ஜாக்கறதையா பட்டாசு வெடிக்க சொல்லு என்றால், சரிம்மா நான் பாத்துக்கறேன்  .அங்கே தீபாவளி கொண்டாடிட்டு அப்பாவும் நீங்களும் இங்கே சாப்பிட வந்துடுங்க என்றாள் பெண் , 

 

எப்பிடி நாங்க வரமுடியும்   நீயும் மாப்பிள்ளையும் குழந்தைகளும் இங்கே வந்துடுங்க , இங்கே  அமெரிக்காவிலேருந்து , துபாயிலேருந்து எல்லாரும் வந்திருக்காங்க, நீங்களும் வந்தா தீபாவளிக்காவது சேந்து இருக்கலாம் வீடு கலகலப்பா இருக்கும் என்று சொல்லிவிட்டு, 

 

ஏங்க உங்க பேரப் பசங்களை எழுப்புங்க மணி ஆச்சு சீக்கிரம் கங்கா ஸ்னானம் செய்யணும் எனக்கு தலைக்கு மேலே வேலை கிடக்கு என்றாள். டேய் பேரப் பசங்களா சீக்கிரம் எழுந்திருங்கடா . உங்க பாட்டி டென்ஷனாயிடுவா, இப்பவே  மணி அஞ்சாச்சு எழுந்திருங்கடா என்று பேரப் பசங்களை எழுப்பிக் கொண்டிருந்தார் கிருஷ்ணன் . போங்க தாத்தா தூக்கம் தூக்கமா வருது , இன்னும்  கொஞ்ச நேரம் தூங்கறோம் என்று புரண்டு படுத்தனர் பேரப் பசங்க நால்வரும். 

 

எழுந்திருங்கோ எல்லாரும் எல்லாருக்கும் பட்டாசு வெச்சிருக்கேன்  யாரு முதல்லே எழுந்துக்கறாங்களோ அவங்களுக்கு நிறையப் பட்டாசு தருவேன் என்றாள். நான்தான் முதல்லே எழுந்தேன் நான்தான் முதல்லே எழுந்தேன் எனக்குதான் நிறைய பட்டாசு என்று கும்மாளம் போட்டனர்  பேரன்கள்.  நாம இவ்ளோ நாழி எழுப்பியும் எழுந்துக்காத  பசங்க இவ வந்தவுடனே எழுந்துட்டாங்க, என்று ஆச்சரியமாகப் பார்த்தார் கிருஷ்ணன். 

 

எதுக்கு பாட்டி தீபாவளி கொண்டாடறோம் அப்பிடீன்னு பேரன் கேட்ட கேள்விக்கு ,பூமாதேவியோட பிள்ளை  நரகாசுரன். நரகாசுரன் பிரம்மாகிட்ட ஒரு வரம் வாங்கினான். தன்னோட தாயைத் தவிர வேறு யாருக்கும் சக்தி இருக்கக் கூடாது அவனைக் கொல்லன்னு பிரம்மாகிட்ட வரம் வாங்கியிருந்தான். வரத்தை வாங்கிட்டோம்ங்கிற தைரியத்துல எல்லாரையும் கொடுமைப் படுத்தினான்.  இராத்திரியில யாரும் வீட்டுல வெளக்கேத்தக் கூடாதுன்னு உத்தரவு போட்டான். 

 

நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள் எல்லாரும் , பகவான் கிருஷ்ணரிடம் போயி எங்களைக் காப்பத்துங்க அப்பிடீனு வேண்டினாங்க  பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவோட சேந்து சண்டைபோடும்போது நரகாசுரன் விட்ட அம்பு கிருஷ்ணர் மேல பட்டு கிருஷ்ணர் மயக்கமாயிட்டார். உடனே சத்யபாமா நரகாசுரனை கத்தியாலே வெட்டி வீழ்த்தினாங்க, சாகறதுக்கு முன்னாடி நரகாசுரன். 

 

எனக்குச் இந்த கதி  வரதுக்கு காரணம், நான் எல்லோரையும் வெளக்கேத்தக் கூடாதுன்னு சொன்னதுதான்! அதனால நான் இறக்கிற இந்த நாளை மக்கள் விளக்கேத்தி சந்தோஷமாக் கொண்டாட நீங்கதான் ஏற்பாடு செய்யணும்ன்னு கேட்டான்.  அதுனாலேதான்  தீபம் ஏத்தி திருவிழாவா, தீபாவளியாக நாம கொண்டாடறோம். 

 

 கங்கா ஸ்னானம்  செஞ்சிட்டு புது துணியெல்லாம் போட்டுண்டு சீக்கிரம் வாங்க இன்னிக்கு  குபேர பூஜை செஞ்சுட்டு பட்டாசெல்லாம் வெடிச்சுட்டு விருந்து சாப்படணும்.  பூஜை செய்யலாம் என்று பேரப் பசங்களுக்கு எண்ணெய் தேச்சுவிட்டுக்கொண்டே கதை சொல்லிக் கொண்டிருந்தாள் சசிரேகா. 

 

நம்ம வீட்டிலே குளவி கூடு கட்டி இருக்கு பாத்தியா என்றார் கிருஷ்ணன் . உள்ளே யாரோ வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது. யாரு  வாந்தி எடுக்கறா நேத்து ராத்திரி உன் சமையலோட மகிமையா  என்றார் கிருஷ்ணன். அய்யே போதும் காலங்காத்தாலே  வழியாதீங்கோ,  குளவி நம்ம வீட்டுலே கூடு கட்டினா வீட்டுலே இருக்கற பொண்கள். யாராவது பிள்ளை உண்டாவாங்கன்னு சொல்வாங்க பெரியவங்க , சரியாத்தான் இருக்கு ,நம்ப மாட்டுப்பொண்ணு, பொண்ணு  ரெண்டுபேரும் பிள்ளை உண்டாயிருக்காங்க என்றாள் அவள்.  

 

அப்பிடியா  சந்தோஷம் . பிள்ளை உண்டாயிருக்கான்னு சொல்லாதே பொண்ணு உண்டாயிருக்கான்னு சொல்லு . பேத்தி வேணும்.அதுவும் ரெண்டு பேத்தி வேணும் .  வீட்டுக்கு மங்களகரமே பொண்குழந்தைகள்தானே என்றார்  கிருஷ்ணன் . 

 

காருகுறிச்சி அருணாசலம், திருவாவடுதுரை ராஜரத்தினம் பிள்ளை இருவரும் வாசித்த  வாசித்த  ரெட்டை நாதஸ்வரம்  ஒன்றாய்க் கலந்து ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே என்று சுநாதமாய் ஒலிக்க ஆரம்பித்தது. 

 

                                                                                                               சுபம்

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கங்கா ஸ்னானம் 2012

  1. அன்புள்ள தமிழ்த்தேனி ஐயா!
    தாங்கள் என்னை ‘கங்கா ஸ்நானம்’ செய்வித்து அந்தப் பொன்மயமான நாட்களுக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள். பழமை என்றாலும் அந்த ‘ஆனந்தம் ஆனந்த்மான’ அனுபவம் என்றும் புதுமையாகவே நினைவில் நிற்கும்.
    வணக்கத்துடன்,
    ஸம்பத்

  2. அன்பு சகோதரர் அந்தக்கால பண்டிகையெல்லாமே ஒரு அர்த்தத்துடன்
    சிரத்தையாக ,நடந்து எல்லோருக்கும் மகிழ்ச்சியைத்தந்தது . இந்தக்கால பண்டிகைகள் ஏதோ இயந்தரமாக நடத்திமுடிக்க வேண்டுமே என்று ஒரு சுமையுடன் நடத்துவது போல் தோன்றுகிறது . ஒருவர்க்கொருவர் நேரில் பார்த்து பாசத்துடன்
    அணைத்துக்கொள்வதுப்போல் போனில் வருமா என்றும் தோன்றுகிறது
    பாட்டிக்காலம் ஒரு கோல்டன் பிரியட் தான் வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *