தமிழ்த்தேனீ  –              

 

நாராயணா  உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் சாயங்காலம் வீட்டுக்கு வரேன் என்றான் கிருஷ்ணன். ஏண்டா இப்பவே போன்லே சொல்லேன் என்றான் நாராயணன். இல்லடா கொஞ்சம் விஸ்தாரமா பேசணும்  வீட்டுக்கு வந்து சொல்றேன், நீதான் எதுவானாலும் சரியா ப்ரடிக்ட் செஞ்சிருவியே அப்பிடீ மண்டையைப் போட்டு உருட்டிண்டே இரு  வந்து சொல்றேன் என்று போனை வைத்தான் கிருஷ்ணன்.

மூளையின்  அத்தனை செல்களும் யோசிக்கத் தொடங்கின .நாராயணனுக்கு  நாற்பது வருஷ நட்பு, அந்தரங்கமான நட்பு  ,யார்கிட்டயும் சொல்லாத  விஷயமா இருந்தாலும் கிருஷ்ணன்  நாராயணன் கிட்ட கிட்ட மட்டும் பகிர்ந்துப்பான். ஒரு நம்பிக்கை ஒருவழிப் பாதை மாதிரி  நாராயணன் கிட்ட  சொன்னா விஷயம் வேற எங்கேயும்  போகாதுங்கற நம்பிக்கை.

ஏண்டா உனக்கே தெரியும் எங்கிட்ட சொன்னா  விஷயம்  யார்கிடேயும்  போகாதுன்னு , அப்புறம் என்ன  மர்மம் . சொல்லுடா என்றான் நாராயணன்.    அப்பிடி இல்லேடா இந்த விஷயம் உங்கிட்ட சொன்னதுக்கப்புறம்  எல்லாருக்கும் சொல்லப் போறேன். எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கணும். நானே இந்த விஷயத்தைப் பரப்பப் போறேன் என்றான் கிருஷ்ணன்.  அவன் செய்யற வேலை எதுவாயிருந்தாலும் அதிலே ஒரு நியாயம் இருக்கும், அதிலும் குறிப்பா நாராயணன் கிட்ட  விவாதிக்கற விஷயம் எல்லாம் ரொம்ப முக்கியமானதா இருக்கும்.

என்னவா இருக்கும் ! கிருஷ்ணனுக்கு ஒரு பொண்ணு ஒருபையன். ஒரு வேளை அவன் பொண்ணு யாரையாவது  காதலிச்சு வெச்சிட்டாளா , இருக்காதே  நல்ல கட்டுப்பாடா வளப்பான், அந்தப் பொண்ணும் , பையனும் ஒழுக்கமான பசங்க . நல்ல படிப்பாளிகள் .   அப்பிடியே இருந்தாலும் இந்தக் காலத்திலே  இது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லே. அது சரி  காதல் விஷயமா இருந்தா  அவனே எல்லாருக்கும் சொல்வானா. எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கணும்னு வேற சொல்றான் மண்டை குழம்பியது.

ஆர்வக் கோளாறுலே அவதிப்பட்டாலும் ஒரு வழியா நேரம் ஓடிப் போச்சு. இதோ அஞ்சு மணி ,இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்துடுவான். என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே வந்தான் கிருஷ்ணன்.  வா கிருஷ்ணா உள்ளே வா என்றபடி கிருஷ்ணன் முகத்தையே ஆராயும் பார்வையில் பார்த்தான் நாராயணன். ஒண்ணும் தெரியலை.

முகத்தை  ரொம்ப இயல்பா வெச்சிண்டு இருக்கான். அப்பிடீன்னா விஷயம் தீவிரமானதுன்னு அர்த்தம். சரி ரொம்ப ஆர்வமா காட்டிக்க வேண்டாம். என்று மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு காத்திருந்தான் நாராயணன்.  உள்ளே இருந்து நாராயணனின் மனைவி கௌசல்யா வந்து வாங்க அண்ணா இந்தாங்க காப்பி சாப்பிடுங்க என்று கொடுத்த காப்பியை வாங்கிக் கொண்டு நாராயணனையே பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்.

நாராயணா நேத்திக்கு நம்ம கோயில்லே  நடந்த நிர்வாகிகள் கூட்டத்திலே நம்ம கோயில் விமானத்துக்கு தங்கக் கூறை  வேயணும்னு ஒரு தீர்மானம் போட்டிருக்காங்க . அதுக்கு கிட்டத்தட்ட 100 கிலோ தங்கம் வேணுமாம். நானும் நீயும் சேர்ந்து ஒரு கிலோ தங்கமாவது சேத்துக் குடுக்கணும்னு எனக்கு ஆசை அதான் உங்கிட்ட கலந்து பேசலாம்னு வந்தேன் என்றான் கிருஷ்ணன்.

ஏண்டா நீ தெரிஞ்சுதான்  பேசறையா, இல்லே தெரியாம பேசறையா நம்மாலே எப்பிடி முடியும்  . நமக்கு யாரைத் தெரியும் நாம் கேட்டா யாரு குடுப்பாங்க? அதுவும் இப்போ தங்க விக்கிற விலையிலே நெனைச்சு கூடப் பாக்க முடியாது என்றான் நாராயணன்.

நாராயணா  நம்ம காதுக்கு இந்த விஷயம் வந்திருக்கே அப்பவே புரியலையா நமக்கு எல்லாம் தெரிஞ்சாலும்  நமக்கு மேலே ஒரு சக்தி இருக்குடா. அந்த சக்தி இது மாதிரி விஷயங்கள் யாராலே நடக்கணும்னு  முன்னாடியே தீர்மானிச்சு வெச்சிருக்கும். அதுனாலே  நாமெல்லாம்  கருவிகள்தான். முயற்சி செய்வோம் என்றான் கிருஷ்ணன். ஒரு கோயில் கட்ட ஒரு செங்கல் கொடுத்தாலே அவங்க வம்சமே நல்லா இருக்கும்னு பெரியவங்க சொல்வாங்க என்றான் கிருஷ்ணன்.

அன்றிலிருந்து யாரைப் பாத்தாலும் இந்த விஷயத்தைப் பற்றியே ப்ரஸ்தாபித்து ஒவ்வொருத்தர் மூலமா இன்னொருத்தரைப் பிடிச்சு கிட்டத் தட்ட குருவி சேக்கறா மாதிரி 100 கிராம்  தங்கம் சேத்தாச்சு. இன்னும்  900 கிராம் தங்கம் சேக்கணும்.   நாராயணனுக்கு  நம்பிக்கை தளர்ந்து கொண்டே வந்தது. நடிக நடிகைகளுக்கு   கோடி கோடியா கொட்டிக் குடுக்கற பெரிய பண முதலைகள் கூட இவர்கள் போகும்போது   இல்லேங்க இப்போதான் 600 கோடியை  படம் எடுக்க வியாபாரத்திலே போட்டுட்டு  படம் ஓடுமா ,  பணம் வருமா வராதான்னு தவிச்சிகிட்டு இருக்கோம்  எங்களாலே  இப்போ முடியாது என்றார்கள்.

சரி கிருஷ்ணா ஏதோ நம்மாலானது 100 கிராம் தங்கம் சேத்துட்டோம் , இனிமே நமக்கு சக்தி இல்லே . இந்த நூறு கிராமை கொண்டு போயி நிர்வாகத்திலே குடுத்துட்டு வந்துடுவோம் என்றான் நாராயணன்.   நாராயணனின் மனைவி கௌசல்யா  உள்ளே இருந்து வந்து  அண்ணா தப்பா நெனைக்காதீங்க நீங்களும் இவரும் மூணு மாசமா அலைஞ்சு 100 கிராம் தங்கம்  சேத்தீங்க. 

நாட்டுலே  நடக்க சரியான  ரோடு இல்லே, மக்களுக்கு குடிக்க நல்ல தண்ணி கிடைக்கலே. எங்க பாத்தாலும் சாக்கடை , டெங்கு கொசு உற்பத்தியாகி குழந்தைங்க எல்லாம் நிறைய பேரு உயிரை விட்டுட்டாங்க , நிறைய பசங்க  படிக்க வசதியில்லாம கஷ்டப்படறாங்க. அரசாங்கமும் முறையா இதெல்லாம் செஞ்சு தரமாட்டேங்கறாங்க . பொதுமக்களுக்காக இது மாதிரி ஏதாவது திட்டம் போட்டு  அதுக்கு நீங்க ரெண்டு பேரும் உழைச்சா  நல்லா இருக்கும்.

அதைவிட்டுட்டு  ஏற்கெனவே இருக்கற கோயிலுக்கு தங்க விமானம் செய்யறதுக்கு தங்கம் சேக்க அலையறீங்களே  அந்த சாமி உங்க கிட்ட  தங்க விமானம் கட்டினாத்தான் நான் இங்க இருப்பேன்னு ஏதாவது சொன்னாரா?  என்றாள்.

என்ன  கௌசல்யா   நீயா இப்பிடிப் பேசறே என்னை விட பக்தி உனக்குதான் அதிகம் , நான் அடிக்கடி கோயிலுக்கெல்லாம் போகமாட்டேன் , நீ பட்டினியா இருந்து தினமும் கோயிலுக்கு போயி தரிசனம் செய்யாம சாப்பிடக்கூட மாட்டியே நீ இப்பிடிக் கேள்வி கேக்கறே  ஆச்சரியமா இருக்கு என்றான் நாராயணன்.

இதோ பாருங்க அந்தக் காலத்திலேருந்து இந்தக் காலம் வரைக்கும்  நமக்கு இந்த இயற்கையைப் படைச்சு அது மூலமா நம்மையெல்லாம் வாழ வைக்கிறவர்  கடவுள்னு  மனசுலே படிஞ்சு போயிருக்கு , பக்தியோட வளந்தவதான் நான்.

ஆனா யதார்த்தமா யோசிச்சு பாத்தா  நமக்கு குடுத்த இறைவனுக்கு  நாம செய்யணும் உண்மைதான்  ஆனா இறைவன் கொடுத்த இந்த இயற்கையை காப்பாத்தறதும் நம்ம கடமைதானே .நம்மோட வாழற மக்களுக்கு முதல்லே நல்லது செய்யணும். அதுக்குதான் எல்லா ஆழ்வார்களும்  நாயன்மார்களும்  கடவுள் நமக்குள்ளே இருக்கான்னு சொல்றாங்க. மனுஷனை மதிச்சா கடவுளை மதிச்ச மாதிரிதான். 

மனுஷனுக்கு தீங்கு நெனைக்காம  எல்லாரும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கத்தான் நான் கோயிலுக்கு போறேன்.  எப்பவுமே கடவுள் எனக்கு இதைச் செய்யி அதைச் செய்யின்னு கேக்கறதில்லே. நாமே ஏதாவது செய்யறோம். நம்ம மனசு திருப்திக்கு எல்லாரும்  திருமங்கை ஆழ்வாரா ஆயிடமுடியுமா? என்றாள் .

அப்போது அங்கே வந்த  வேலைக்காரி முனியம்மா  அம்மன் கோயிலுக்கு போயிருந்தேம்மா , அங்கே தீபாவளிக்கு அம்மனுக்கு  நீங்க வாங்கிக் குடுத்த  புடவையை சாத்தினாங்களாம் , நல்லா இருந்துச்சு ன்னு உங்ககிட்ட சொல்லச் சொன்னாரு  பூசாரி என்றாள் கௌசல்யாவிடம்.

இவ்ளோ நியாயமா சிந்திக்கறாளே இவ என்ன செஞ்சிருக்கா பாரு என்றான் நாராயணன் ,   அந்தப் புடவை 900 ரூபா , அந்த 900 ரூபாயை ஏதாவது ஏழைக் குழந்தைகளுக்கோ அல்லது ஏதாவது மக்களுக்கு பயன்படறா மாதிரி திட்டத்துக்கோ குடுத்திருக்கலாமே  ஏன் செய்யலே  என்றான் நாராயணன்.

ஏங்க அது என்னோட வேண்டுதல் என் மனசு திருப்திக்கு செஞ்சேன், அதை நீங்க குறை சொல்லக் கூடாது என்றாள் கௌசல்யா.  நான் குறை சொல்லலே கௌசல்யா , இப்பிடித்தான்  எல்லாரும் நெனைக்கிறாங்க ,அடுத்தவங்களுக்கு சொல்ற யோசனையை அவங்க கடைப்பிடிக்கணும்னு வரும்போது பின்வாங்கறாங்க. 

உலக நாடுகள் ஒரு நாட்டோட மரியாதையை, தரத்தை அந்த நாட்டிலே எவ்ளோ தங்கம்  இருக்குங்கறதை வெச்சிதான் எடை போடறாங்க. அதுனாலேதான்  நம்ம நாட்டோட   தரத்தை உயர்த்த இதெல்லாம் செய்யறோம். நாட்டிலே யாருக்கும் தனிப்பட்ட மனுஷனுக்கு செல்வம் சேக்கக் கூடாது நாட்டுக்குதான்  சேக்கணும்னு  புத்தியில்லே.

கிருஷ்ணா இது வரைக்கும்  சேத்து வெச்சிருக்கற 100 கிராம் தங்கத்தை ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிதர ஏதாவது  அமைப்புக்கு குடுத்துடலாம்னு பாத்தா  நாம குடுக்கறதை வாங்கிகிட்டு  குழந்தைகளுக்கு செலவழிக்காம  சில நிர்வாகிங்க அவங்க வீட்டுலே இருக்கற கஜானாவிலே கொண்டு போயி வெச்சிகிட்டு அவங்க குடும்பத்துக்கு சொத்து சேக்கறாங்க. யாரை நம்புறதுன்னே தெரியலையே. எவ்ளோ செய்தி தினசரிலே படிக்கிறோம் என்றான்.

ஒரு குழப்பமான மன நிலையுடன் கிருஷ்ணன் சரி நான் வீட்டுக்கு போறேன். இதைப் பத்தி யோசிக்கலாம் என்று கூறிவிட்டுக் கிளம்பினான்.  அன்று மாலை கிருஷ்ணன் வீட்டின் வாயிலில் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்து அழைப்பு மணியை அழுத்தினாள். கிருஷ்ணன் எட்டிப் பார்த்து வாங்க உள்ளே வாங்க என்றார்.

இல்லேங்க நீங்க வெளியே வாங்க என்றாள். வாசலுக்கு வந்தான் கிருஷ்ணன், கூடவே அவன் மனைவி ருக்மணியும் வந்தாள்.

தப்பா நெனைக்காதீங்க  என் பேரு கிருஷ்ண பிங்கலா, நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். நான் யார் வீட்டுக்குள்ளேயும் போறதில்லே , எல்லாரும் என் வீட்டுக்குள்ளேதான் வருவாங்க என்றாள்.

ஆமாங்க  நாங்க பரம்பரையா கோயிலுக்கு பொட்டுக் கட்றவங்க . வம்ச வம்சமா  எங்க குடும்பம் கோயில்லேருந்து வர வருமானத்திலேதான் பொழைச்சிகிட்டு இருந்தோம்.அதெல்லாம் ஒரு காலம் . இப்பல்லாம் கோயில்லேருந்து எங்களை யாரும் கவனிக்கறதே இல்லே. 

நாங்களும்  கோயிலைச் சார்ந்து இல்லே. எங்க பொழைப்பு திசை மாறிப் போச்சு. ஆனா அந்தக் காலத்து ஜமீன்தாருங்க, பணம் படைச்சவங்க எல்லாம் காலம் காலமா  எங்க குடும்பத்துக்கு நகையாவும் , பொருளாவும் குடுத்ததெல்லாம் பரம்பரை சொத்தா எனக்கு வந்திருக்கு.

எங்க பரம்பரையிலே நான்தான் கடைசீ வாரிசு. நான் குழந்தையே பெத்துக்கக் கூடாதுன்னு வைராக்கியமா இருந்தேன் . எங்க வம்சமே என்னோட முடிஞ்சு போகணும். இனிமே இந்த சொத்தையெல்லாம் வெச்சு பாதுகாக்கணும்கிற  அவசியமும் இல்லே.

அதுனாலே  மொத்தத்தையும்  நான் உங்க கிட்ட குடுக்கறேன். கோயில் சொத்தையும் பொது சொத்தா நெனைச்சு பாதுகாக்கணும்.   கோயில் சொத்தையும் பொது சொத்தையும் கொள்ளையடிச்சு அவங்க வீட்டுக்கு கொண்டு போனவங்க நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லேங்க. மனுஷனை ஏமாத்தலாம், ஆனா தெய்வத்தை ஏமாத்தக் கூடாது. நான் என்னைப் பத்தின உண்மையைச் சொல்லித்  மனப்பூர்வமா குடுத்து எனக்கும் எங்க வம்சத்துக்கும்  பரிகாரம் செய்யணும்னு ஆசைப்படறேன்.

எங்க வம்சத்தோட  பாவத்தை அந்தக் கிருஷ்ணனே ஏத்துக்கணும்னு வேண்டிகிட்டு குடுக்கப் போறேன். கோயிலுக்கே போயி அவங்க கிட்ட பேசலாம், ஆனா அவங்க என்னை மதிப்பாங்களான்னு தெரியலை .அதான் பயந்துகிட்டு உங்க கிட்ட வந்தேன் என்றாள்.

இப்போது கிருஷ்ணனுக்கே  கொஞ்சம் குழப்பமா இருந்துது.. சரி நீங்க குடுங்க நான் கோயில்லே சேத்துடறேன் என்ன சொல்றே நாராயணா என்றான்  என்றான் கிருஷ்ணன் .நாராயணன் சற்றே குழப்பமாக மௌனமாக இருந்தான்.

படியிறங்கி  தெருவுக்கே போன அந்தப் பெண் மீரா திரும்பி வந்து  உங்க சந்தேகம் புரியுதுங்க .  இந்த மாதிரிக் காசையெல்லாம் ஏத்துக்க மாட்டோம்னு சொல்லிட்டா என்ன செய்யறது அப்பிடீன்னு தானே யோசிக்கிறீங்க .

நான் குலத்திலே தாசியா இருந்தாலும் பகவத் கீதையைப் படிச்சிருக்கேன், கிருஷ்ணன் தன்னோட ஆப்த நண்பன் உத்தவனுக்கு சொன்ன   உத்தவ கீதையையும் படிச்சேன் .அதிலே கிருஷ்ணன்,

“ஆன்மீக உள்ளங்களே!  நான் கைவிட்டாலும், என்னைக் கைவிடாதவர்கள் யாரோ அவர்களே ஆத்திகர்கள் எனவே, உங்களில் ஆத்திகர்கள் யாரோ அவர்கள்  இந்தக் கிருஷ்ண பிங்கலாவின் மேல் கல் எறியத் கடவீராக ! அப்படி அல்லாதவர்கள்  இவள் மீது பூ எறியக் கடவீராக! “      அப்பிடீன்னு சொல்லி கிருஷ்ண பிங்கலான்னு ஒரு தாசியை பக்தையாக ஏத்துண்டார்.. அதுனாலேதான் நான் என் பேரை கிருஷ்ண பிங்கலான்னு வெச்சிண்டேன். 

இவ்ளோ சொல்லியும் அவங்க ஏத்துக்கலைன்னா அவங்க கிட்ட சொல்லுங்க,       “நாய் வித்த காசு குறைக்காதுன்னு”    ஏத்துக்குவாங்க.  

என்னோட கிருஷ்ணன்  ஏத்துக்குவான், அவங்களையும்  ஏத்துக்க வைப்பான் என்றாள் தீர்மானமாக.

                                                                        சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து!

 

                                                                                                    சுபம்

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “தங்க விமானங்கள்

 1. என்னே ஒரு ஆன்மீகமும் பொதுநலமும் கலந்த தொண்டு அந்தப்பெண்ணுக்கு! கதை நன்றாக இருக்கிறது.க்ருஷ்ணபிங்கலை கேள்விப்பட்டதுபோல உள்ளது அந்தப்பாத்திரம் கற்பனை இல்லைதானே?

 2. ’என்னோட கிருஷ்ணன் ஏத்துக்குவான்’. எவ்வளவு தன்னம்பிக்கை மற்றும் தெய்வ நம்பிக்கை! கிருஷ்ண பிங்களா கிருஷ்ணப்ரேமி மட்டுமல்ல, தன்னனம்பிக்கையின் சிகரம் கூட. வாழ்த்துக்கள் தமிழ்த்தேனீ ஐயா!
  ஸம்பத்
  பி.கு.: தங்கள் தீபாவளிச் சிறுகதையையும் படித்து மகிழ்ச்சியுற்றேன். இளமை நினைவுகள் மலர்ந்தன.
  ஸ.

 3. 1. அடுத்தவங்களுக்கு சொல்ற யோசனையை அவங்க கடைப்பிடிக்கணும்னு வரும்போது பின்வாங்கறாங்க. 
  ~பாயிண்ட் மேட்.
  2.“நாய் வித்த காசு குறைக்காதுன்னு”    ஏத்துக்குவாங்க.  
  ~ ஆக்ஷேபணை. கிருஷ்ண பிங்களா தவறு ஒன்றும் செய்யவில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.