தமிழ்த்தேனீ 

தீபாவளி  வருது  வீட்டை சுத்தம் செய்யலாமென்று சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கினோம்.

 

ஒட்டடை அடித்து முதலில் சுத்தப் படுத்திவிட்டு, எல்லாக் குப்பைகளையும் பெருக்கி முறத்தில் சேகரித்து, அவற்றை வெளியே கொண்டுபோய்க் கொட்டி  அந்தக் குப்பைகள் எல்லாம் பறந்து அடுத்தவருக்கு தொல்லை தராமல் இருக்க அவைகளைக் கொளுத்தி  எல்லாவற்றையும்  சீர்படுத்திக் கொண்டிருந்தோம்.

 

ஒரு குளவி என்னையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அதைக் கையாலே விரட்டி விட்டு மீண்டும் வேலையைத் தொடர்ந்தேன். மீண்டும் அந்தக் குளவி என்னிடம் பறந்து வந்து வாயிற் கதவிலே இரும்பு கிரில் கேட் டிலே சென்று ஓரிடத்தில் உட்கார்ந்தது. அதை அடிக்க கையை ஓங்கினேன். அது உட்கார்ந்திருந்த இடத்தில் பர்த்தால் ஒரு குளவிக் கூடு,

 

என் மனைவி அங்கே வந்தாள் ,அதைப் பார்த்துவிட்டு அதை ஒண்ணும் செய்யாதீங்க.இது மாதிரி குளவி வீட்டுலே கூடுகட்டினால் பொண் குழந்தை பொறக்கும்னு சொல்வாங்க என்றாள்.

 

அடேடே  நமக்குதான் ரெண்டு பொண்ணு, ஒரு பையன் எல்லாம் ஏற்கெனவே பொறந்து அவங்களுக்கெல்லாம் கல்யாணமும் செஞ்சு வெச்சாச்சே , என்றேன் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொன்டு போறும் வழியாதீங்கோ, நம்ம பொண்ணு முழுகாம இருக்காளே, அதான் பிள்ளை உண்டாயிருக்காளே  அவளுக்கு பொண்ணு பொறக்கும்னு சொன்னேன் என்றாள் முகவாய்க் கட்டையை  தோளில் இடித்துக் கொண்டு.

 

அப்பிடி சொல்றியா அப்போ சரி இந்த குளவிக் கூட்டை அப்பிடியே விட்டுடறேன் பத்திரமா. அது சரி பொறக்கப் போறது பொண்ணா  ஆணான்னே தெரியாம எல்லாதுக்கும் பொதுவா  பிள்ளை உண்டாயிருக்கானு சொல்றீங்களே இது என்ன சொல் வழக்கு என்றேன்.

 

கேள்வி ஞாயம்தான்  ஆனா  பிள்ளைத் தாச்சியா இருந்தா  பிள்ளை உண்டாயிருக்கான்னுதான் சொல்வாங்க என்றாள். அதான் கேக்கறேன் பிள்ளைத் தாச்சி, பிள்ளை உண்டாயிருக்கானு சொல்றீங்களே.  பொண்தாச்சியா, பொண்ணுண்டாயிருக்கான்னு ஏன் சொல்ல மாட்டேங்கறீங்க என்றேன்.

 

சற்று நேரம் என்னையே கவலையுடன் பார்த்துக் கொன்டிருந்துவிட்டு , இதுக்குதான் சொல்றேன் கம்ப்யூட்டர்லே ரொம்ப நேரம் உக்காந்து   எழுதி  ,படிச்சு  செஞ்சிண்டே இருக்காதீங்கோ  , கொஞ்சம் கண்ணுக்கும் , மூளைக்கும்  ரெஸ்ட் குடுங்கோன்னு சொல்றேன் கேட்டாதானே  என்று மறு படியும் முகவாய்க் கட்டையை தோளில் இடித்துக் கொண்டு  தள்ளிப் போனாள் என் மனைவி,

 

நான் என்ன தப்பாக் கேட்டுட்டேன்  எனக்கு ஒண்ணும் புரியலை, உங்களுக்கு விடை தெரியுமா?

 

அன்புடன்

 

தமிழ்த்தேனீ

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “உங்களுக்குத் தெரியுமா?

  1. வல்லமையில் உங்களது 100வது பதிவு இது அல்லவா? வாழ்த்துக்கள் தமிழ்த்தேனீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *