Tag: பெருவை பார்த்தசாரதி

  • ஒரு முறையேனும்

    சந்திரனையும் சூரியனையும் தந்தது யார்
    =====சற்றேயொரு முறை யேனும் யோசியுங்கள்.!
    எந்திர சக்தியை எங்கிருந்(அ)து பெற்றதாம்
    =====எங்கேயோ அந்தரத்திலது தொங்கு தற்கு.!
    மந்திரத்தால் இயங்க வில்லை தெரிந்துமது
    =====மாயமாய் மறைந்து மீண்டும் திரும்புகிறது.!
    தந்திரத்தால் அங்கே போகமுடியுமா?நிரந்-
    =====தரமாய் நிலையா யங்கே தங்கமுடியுமா.?

    தருகின்ற ஒளியும் தடங்களில்லாக் காற்றும்
    =====தரணியைக் காக்கச் சன்மானம் ஏதுமில்லை.!
    இருளும் ஒளியும் நீதராது இவ்வுலகுண்டா
    =====இயற்கையே உன்னை என்றும் மதிப்பேன்.!
    ஒருநாளில் ஒருமுறை யேனும் உன்னை
    =====உறங்கு முன்னே நினைப்பேன் அதன்பின்.!
    வருகின்ற மற்றை நாட்களில் எல்லாமும்
    =====வாழ்வி லொருவகைப் பிடிப்பு வருமென்றே.!

    ஒருமுறை தான்பிறவி வேண்டு மதுவும்
    =====உலகுக்குதவி செயும் கிரகங்களைப் போல.!
    கருவிலே இருக்கும் போதே நாங்களும்
    =====கருணை யுள்ளமுடன் உயிராக வேண்டும்.!
    இருளிலும் ஒளிதந்து பிரதிபலன் பாராத
    =====உன்னொளியால் மலர்கள் கூட மலர்கிறது.!
    உருவிலே சிறிதாய் இருந்தாலும் இப்பரந்த
    =====உலகையே ஆளும் திறமை உனக்குண்டு.!

    ===================================================
    நன்றி தினமணி கவிதைமணி:: 25-06-2018
    நன்றி கூகிள் இமேஜ்.

    Share
  • மிச்சத்தை மீட்போம்

    கச்சத் தீவைக்கைவிட மாட்டோம் கத்தியே
    =====கூச்சல் குழப்பம் விளைவித்தவர் எங்கே.?
    மிச்சமின்றி ஆற்று மணல் அத்தனையும்
    =====மழித்து வழித்ததை மறைத்தவர் எங்கே.?
    இச்சகத்தில் வளமான இயற்கை வளமிருக்கு
    =====இனியும் அழியாமல் இருக்கவே விழித்திரு.!
    மிச்சத்தை இனியும் மீட்க வேண்டுமெனும்
    =====மேலான மனதை இனிமேற் கொள்வாயே.!

    அச்சம் நமைவிட்டு ஆங்கே பலமைல்தூரம்
    =====அகன்று விட்டது என்றுதான் நினைத்தோம்.!
    நச்சுக் கொடிபோன்ற நஞ்சாலை தழைத்ததால்
    =====நன்னீரும் கெட்டது நதிநீரும் விஷமாகியது.!
    இச்சைப் படிநடக்க எவருத்தரவு கொடுத்தார்
    =====இடர் செய்தற்கும் இங்கேயொரு காவலாளி.!
    மிச்சம் இருப்பதை மீட்கப்போய் மறுபடி
    =====மீளாத துயரத்தில் மீண்டும் ஆக்கிடுவாரோ.?

    அச்சமிலை அச்சமிலை என்றே முழங்கினான்
    =====நன்றே மஹாகவி நல்பாரதி அவரைப்போல
    உச்சக் கோஷம் எழுப்பினால் போதுமா
    =====ஊர்மக்கள் குறைகேட்க ஓடிவந்தோர் யாராம்.?
    பச்சாதாபம் வேண்டாம் பரிதாபம் கொளாதீர்
    =====பகல்கொள்ளை பார்த்தால் விட்டு விடாதீர்.!
    நிச்சயம் இழந்ததை நிலையாக மீட்டெடுக்க
    =====நீண்ட போராட்டம் நிலைத்திடுமோ வாழ்விலே.!
    ===========================================
    நன்றி:: தினமணி கவிதைமணி::18-06-18
    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • வெல்லும் சொல்!

    பெருவை பார்த்தசாரதி

    வெல்லும் சொல்கொண்ட வார்த்தையை வைத்து
    =====வியக்கின்ற வகையிலே கவிதை புனைபவருளர்.!
    சொல்வீச்சால் பார்வையாளரைச் சொக்க வைத்துச்
    =====சிந்தனையைச் சிறை வைக்கும் சொற்பெருக்கருளர்.!
    இல்பொருளில் எதையோ பேசிநம்மை எழவிடாமல்
    =====இருக்கை யிலமரச்செயும் வித்தை தெரிந்தவருமுளர்.!
    எல்லாமும் அறிந்த எத்தனையோ அறிஞர்களை
    =====ஈந்ததுதான் பெருமையெந்தன் தாய் நாட்டுக்கேயாம்.!

    சொல்லாடல் தெரிந்ததால்தான் இன்றும் கம்பனும்
    =====வள்ளுவனும் இளங்கோவும் வாழ்கிறான் என்றுமே.!
    சொல்லுக்கு வித்தகனாம் மஹாகவி பாரதியும்தன்
    =====சொல்வன்மையால் சுதந்திர தாகமெழச் செய்தான்.!
    நெல்மணிகளைத் தாங்கி நெற்கதிர் தாழ்வதுபோல்
    =====நல்லதைத் தாழ்பணிந்துச் சொன்னாள் ஒளவையும்,!
    நல்லகாலம் பிறப்பதற்கு நாம்வழுவ வேண்டியதை
    =====நாலடியிலடக்கியது நாலடியாரின் வெல்லும் சொல்.!

    வெல்லும் வாள்வீச்சுக்கு இணையாம்..சொல்லுமே
    =====வள்ளுவன் சொல்வன்மை உலகையே யாள்கிறது.!
    வல்லமைச் சொற்றொடரால் எழுந்த காப்பியமே
    =====வலிமை கொண்ட மாபாரதமும் இராமாயணமும்.!
    வில்லாளனின் சரமழைபோல் வெல்லும் சொல்லால்
    =====விழுந்து வாக்கியமாகியது வீழாதின்றும் வாழ்கிறது.!
    சொல்லாட்சி மிக்க தமிழிலக்கியங்கள் தருமின்பம்
    =====சுரங்கம்போல் தோண்டத் தோண்டக் கிடைக்கும்.!
    =============================================
    நன்றி தினமணி கவிதைமணி:: 11=06=2018
    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • வாழ்க்கையெனும் போர்க்களம்..!

    அரசியலில் அடிக்கடி வரும் நெருக்கடிபோல்
    =====அவ்வப்போது துன்பம் வரலாம் நம்வாழ்வில்.!
    இரக்கமற்ற செயல்களைச் செயும் சழக்கரால்
    =====இயல்பான வாழ்க்கையில் இடர் வந்துசேரும்.!
    சிரமமின்றி சீராகநம் வாழ்க்கை செல்தற்கே
    =====சித்தர்கள் சிந்தைபுக பலநல் வழிசொன்னார்.!
    வரவேற்று வகையாயதை மனதில் ஏற்றினால்
    =====வாழ்க்கை யெனும் போர்க்களம் இனிக்கும்.!

    வாழ்வில் துன்பங்கள் நெருங்கும் போதிலே
    =====வாழ்வு குறுக்கிய நல்லதங்காள்களும் உளர்.!
    வாழ்வு முழுதும் துன்பமே நிறைந்த போது
    =====வாழ்ந்து காட்டிய இராமர்களும் உள்ளனர்.!
    வாழ்வே சூனியத்தால் சூழ்ந்த போதிலும்
    =====வழிகாட்டினர் பாண்டவர்கள் நம் வாழ்வில்.!
    வாழ்க்கை என்பதே ஒரு போர்க்களமதில்
    =====வாழப் பழகுவதே இப்பிறவியின் நோக்கம்.!

    அயலான் நம்மையாட் கொண்ட போதிலே
    =====அன்று நாமடைந்த துயரத்திற்கு அளவேது.!
    கயவர்கள் செயும் கலவரத்தால் சிலசமயம்
    =====கால முழுதும் கலங்குகிறோம் கண்ணீரால்.!
    இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நமது
    =====இல் வாழ்விலெங்கோ இடிக்கிறது இடையூறு.!
    வியர்வை சிந்தியுழைக்கும் எண்ணம் வரின்
    =====வெல்லலாம் வாழ்வெனும் போர்க் களத்தை.!

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::03-06-18
    நன்றி படம்:: கூகிள் இமேஜ்

    Share
  • என்றும் என் இதயத்தில்

     

    இருவருமே இயற்கையாய் உரை யாடுதற்கு
    =====இலகுவாய்த் தண்ட வாளத்தில் நடந்தோம்.!
    வருகின்ற பேராபத்தை உணர வழியில்லை
    =====வந்தவேக மிகுரயிலைக் கவனிக்க வில்லை.!
    ஒருவர் இறக்க ஒருவருயிருக்கு ஊசலாட
    =====உடனொரு மாற்று இருதய சிகிச்சையால்.!
    இருவருயிர் ஓருயிராக இதயம் ஒன்றாகி
    =====என்றும் என்இதயத்தில் நீயே வாழ்கிறாய்.!

    அன்றுபெற்ற இதய தானத்தால் இன்றும்
    =====என்றும் காதலுக்கு மரணம் இல்லையாம்.!
    மென்று விழுங்கினாலும் உண்ட உணவு
    =====மெல்ல இரைப்பை செல்லநீயே காரணம்.!
    நன்றுடன் வாழ்ந்திட நீயளித்த இதயம்
    =====நன்றே இயங்கி ஒன்றானது ஊனுடம்பில்.!
    நன்றி சொல்கிறேன் நல்லுளம் மிக்கவளே
    =====நீ இறந்தாலுமுன் இதயம் இயங்குகிறது.!

    நேற்றிருந்தோர் இன்றிலை எனும் விதியை
    =====நியதியை வென்று விடுமோ மருத்துவம்.!
    மாற்றங்கம் பொருத்து மொரு மகத்தான
    =====மருத்துவத்தால் மறுபடியும் வாழ முடியும்.!
    கூற்றுவனை வெல்லவும் முடியும் மென்கிற
    =====கூற்றை..கொடையுள்ளம் எளிதாய்த் தரும்.!
    ஆற்றவொணாப் பெருந் துயரைக் களைந்து
    =====என்றுமென் இதயத்தில் குடி கொண்டாய்.!

    ===================================================
    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு:: 27-05-18
    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • யார் இட்ட சாபம்.!

    போர்வீரர்களின் மனைவி தான் பாஞ்சாலி
    =====பொதுச்சபையில் பட்ட துன்பம் தெரியாதா..?
    கூர்மதி கொண்டவர் பாண்டவர்! அவர்கள்
    =====கொண்ட துன்பத்திற் கேதேனும் அளவுண்டா.?
    சூர்யகுல அரசன் அரிச்சந்திரன் தன்வாழ்வில்
    =====சுடலையில் பிணமெரித்த நிலை எதனால்..?
    யார் இட்டசாபம் இதற்கெல்லாம் காரணம்?
    =====ஏனிந்தக் கஷ்டம் ? புரிவது மிகக்கடினமே..!

    மார்க் கண்டேயனுக்கு பதினாறில் மரணம்
    =====மரணமில்லாச் சிரஞ்சீவி யானது எதனால்..?
    நேர்வாரிசு இல்லாமல் நானூறு வருடமும்
    =====நகர்ந்ததே மைசூர்மஹா ராஜவம்சம் எப்படி..?
    நீர்மீதில் வாழ்நாளைப் போக்கும் மீனவர்
    =====நித்தம் சோதனையில் நீந்திக்கழிக்கிறார் ஏன்?
    யார் இட்டசாபம் இதற்கெல்லாம் காரணம்?
    =====எவரும் எளிதில் அறியமுடியாத ரகசியமோ..?

    பார்மீதில் மாந்தராய்ப் பிறந்தாலே ஏதோ
    =====பெரியதொரு துன்பத்தி லுழல்வது சகஜமே..!
    ஆர்வலரென தனைச் சொல்லிக் கொள்வார்
    =====ஆதாய மிலாதெதையும் செய்ய நினையார்..!
    ஊர் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்
    =====ஊரையே கொள்ளை யடிக்க நினைப்பார்..!
    நேர்மையாக வாழமுடியா நிலை தானின்று
    ======நீரறிவீரோ?ஈதெலாம் யாரிட்ட சாபமென்று..!
    ======================================================

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::21-05-18
    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • கருவில் தொலைந்த குழந்தை..!

     

     

     

     

    ஆண்டுகள் பலகடந்து குழந்தைவரம் வேண்டி

    =====ஆவலாய்க் காத்திருக்கும் தம்பதிகள் பலராவர்.!

    ஆண்டாண்டு காலமாய் ஆலயங்களின் முன்

    =====அரிதான தவம்பூண்டு அரசமரத்தைச் சுற்றுவர்.!

    சீண்டி விளையாட பிள்ளையிலை எனும்பெரு

    =====குறைகொண்ட மாந்தர்கள் வாழுமிவ் வுலகில்..

    வேண்டாமினிப் பெண்குழவி யென்றே..பிறவி

    =====வருமுன் கருவையழிப்பார் தாய்மை அறியார்.!

     

     

    கருவிலிருப்பது ஆணா? பெண்ணா? வென்பதை

    =====கண்டுகொள்வது சட்டப்படி குற்றமாம்..வளர்ந்த

    கருவைக் கலைப்பதுவும் குற்ற மென்பதைக்

    =====கருத்தில் இருத்திக் கொளாத் தாய்மாருமுண்டு.!

    கருவிலே தொலைந்த பெண் சிசுக்களைக்

    =====கணக்கிட்டால் கலியுகத்தின் தீமை அறியலாம்.!

    கருவில் தப்பிவிட்டாலோ?பின்கள்ளிப் பாலும்

    =====கதிர்நெல்லும் கொலைக் குதவும் ஆயுதமாகும்.!

     

     

    உருவில் பெண்ணாயினும் உளமதில் உரமுடன்

    =====உருமும் புலியை விரட்டியவள் தமிழ்ப்பெண்.!

    பெரும்பகுதி வாழ்வை வெள்ளையருக் கெதிராக

    =====போராடிக் கழித்தவீர மங்கை வேலுநாச்சியார்.!

    குருவாக அண்ணலையேற்று அவரின் விடுதலைக்

    =====கொள்கைக்குத் தியாகம் செய்த அம்புஜம்மாள்.!

    கருவில் தொலைந்த பெண் குழந்தையாகின்

    =====காலமிவர்களை இன்றளவும் நினைவு கூறுமா..?

     

    =========================================================

     

    நன்றி:: தினமணி கவிதை மணி வெளியீடு::

     

    நன்றி படம்:: கூகிள் இமேஜ்

    Share
  • நீ கண்சிமிட்டினால்..!

     

    -பெருவை பார்த்தசாரதி

    பெண்களென்றாலே பிதற்று கின்ற இவ்வுலகில்
    -பெண்மீது எனக்குள்ளொரு கொள்கை யுண்டு..!
    கண்களால் அவர்களை ஏறெடுத்தும் பார்க்காத
    -கண்ணியம் கடமையோடு கட்டுப்பாடு முண்டு..!
    வண்ணமலர் வாசனை யோடொருத்தி ஒருநாள்
    -வளையவந்து வசமாய் மனத்துளே புகுந்தாள்..!
    கெண்டை விழியாலவள் கண்சிமிட்டினாள்..நான்
    -கொண்ட கொள்கையுமன்றே காற்றில் பறந்தது..!

    விண்மீனுமவள் கண் முன் தோன்றினாலதன்
    -விழிமூடி வெளிச்சம் தருவதையும் மறந்துவிடும்..!
    கண்ணாடி முன்னவள் முகம்பார்க்கையில் தான்
    -கண்டவழகை கண்ணாடியும் கவிதை யாக்கிடும்..!
    கொண்டையிலே வீற்றிருக்கும் தாழம்பூ… தான்
    -கொண்ட பெருமிதத்தால் மணம்வீச மறக்கும்..!
    கண்சிமிட்டி கருவிழிப் புருவமுயர்த்து மழகால்
    -கட்டான காளையருமவள் காலடியில் வீழ்வார்..!

    சும்மாயவளைப் பார்த்தாலே சிந்தனை பிறக்கும்
    -சொற்களெலாம் ஒன்றுகூடி கவிதைகள் ஆகும்..!
    எம்மாடி? எவ்வளவு அழகென வியக்கும்போது
    -எழுத்துக்கள் எல்லாம் காவியமாகக் கைகூடும்..!
    செம்மாதுளை பிளந்த சிவப்புதடைக் காட்டிச்
    -சிரித்து விட்டாலது சிறந்த காதலோவியமாகும்..!
    அம்சமான அழகுக்கவள் அற்புதப் படைப்பாக
    -அந்தப் பிரம்மனுமே பெருமூச்சு விடக்கூடும்..!

    கண்மூடி அவள் தியானத்தில் இருந்தால்
    -காதலர் களுக்குக் கனவினைக் கொடுப்பாள்..!
    கண்விழித்து அவள் சற்றேயுற்று நோக்கின்
    -காமன் விடும் பாணமும் எதிர்கொள்ளாது..!
    கண்ணின் கருவிழியை உருட்டும் போது
    -கனியும் கன்னக் குழியாலவள் அழகுகூடும்..!
    கண்சிமிட்டிக் காதல் வலை வீசினாலோ
    -கலையோவியம் கூட உயிர் பெற்றெழுமாம்..!

    ******

    நன்றி தினமணி வெளியீடு:: 30 ஏப்ரல் 2018
    நன்றி படம்:: கூகிள் இமேஜ்.

    Share
  • சமூகக் குற்றம்!

    -பெருவை பார்த்தசாரதி

    சுத்தமாக எழுபது ஆண்டுகள் ஆனபின்னும்
    ===சுதந்திர தேசப்பிதாவின் கனவு நனவாகவிலை..!
    பத்திரிகைத் தாளின் பக்கங்களிலெலாம் பத்தி
    ===பத்தியாகப் பாலியல் வன்கொடுமைச் செய்தி..!
    சத்தமின்றியே எங்கோவோர் மூலையில் இது
    ===எப்போதும் அரங்கேறுகிற சமூகக் குற்றமாம்..!
    அத்துமீறி இக்குற்றம் புரிவோரை யடக்கவே
    ===அசுரபலம் கொண்ட புதியசட்டம் வேண்டும்..!

    எங்கும் நடந்தேறுகிற பாலியல் கொலைகளின்
    ===எண்ணிக்கையில் பச்சிளம் பிஞ்சுகளே அதிகம்..!
    எங்கேயொரு ஊடகத்தில் வெளிவந்த பின்னே
    ===எரியும் தீபோல பரவுகின்ற அவலநிலைதாம்..!
    எங்கும் சுதந்திரமாயுலவும் சமூகக் குற்றங்கள்
    ===இனி நிகழாதிருக்க ஏனின்னும் முடியவில்லை..?
    அங்கங்கே அரங்கேறும் அராஜகம் அக்கிரமம்
    ===அதை மன்றத்தில் கையாளும் திறமையெங்கே..?

    மண்டிக் கிடக்கும் சமுதாயச் சீர்கேட்டால்
    ===மங்கியநம் கலாசாரம் மெதுவாக மறைகிறது..!
    கண்ட பழக்கமும் கைவரப் பெற்றதாலின்று
    ===காதல் வலையில் சிக்குவாராம் சிறாரும்கூட..!
    எண்ணிப் பார்த்து எச்செயல் நல்லதுதீயது
    ===என வறியத்தான் பள்ளிக்கு அனுப்புகிறோம்..!
    பண்பறியா ஆசான்கள் இல்லாது போனதால்
    ===பாழாய்ப் போனவது பள்ளியுள்ளும் புகுந்தது..!

    மாற்றம் கொண்டுவரவே மனவுறுதி கொண்ட
    ===மகத்தான உத்தமர்கள் வாழ்ந்தநம் திருநாட்டில்..!
    ஆற்றலிருந்தும் அன்றே தவித் தார்களவர்
    ===அருமைச் சமுதாயம் அமைந்திட உழைத்தார்..!
    நாற்ற மெடுக்கின்ற சமுதாயத்தைக் காண
    ===நல்லவேளை இன்ற வர்கள் உயிருடனில்லை..!
    ஏற்றமின்றி இன்றுவரை தத்தளிக்கும் சமூகம்
    ===ஏற்றமுற எத்துணைநாள் காத்திருக்க வேணும்..!

    *****

    நன்றி தினமணி வெளியீடு:: 22-04-18
    நன்றி :: கூகிள் இமேஜ்

     

    Share
  • நதிகரையின் நினைவலைகள்..!

    பெருவை பார்த்தசாரதி

     

     

     

     

     

     

     

    மன்னுபுகழ்க் காவிரி யாலெங்கள் நிலமொடு

    ====நன்செய் பயிர்களும் தழைத்ததொரு காலமாம்..!

    தன்னிஷ்டம்போல் தமிழகமெங்கும் ஓடிய அது

    ====தண்ணீரின்றி வற்றியே தரையிலின்று குறுகியது..!

    அன்றாடம் அலைததும்பும் அகண்ட காவிரிதான்

    ====இன்றும் வறண்ட காவிரியெனக் காட்சிதருகிறது..!

    என்னவென இன்றதன் நிலையைச் சொல்வேன்

    ====என் நினைவலையில் நதிக்கரையே நிழலாடுது..!

     

    என்னை மறப்பேன்! நதியில் அமிழும்போது

    ====எழுப்புமே கூழாங்கற்களென் நகவிரலை நெருடி..!

    கன்னல் தமிழில் பாடிக்கொண்டே நீந்தும்போது

    ====கெண்டைமீனுமென் காலினழுக்கை நக்கி நீக்கும்..!

    பொன்னிற மாலையில் நதிக்கரை மணலிலென்

    ====பொங்கும் நினைவைக் கவிதை யாக்கினேனின்று..!

    என்னதான் நாமும் அறிவியலால் வளர்ந்தாலும்

    ====இயங்குமுயிர்க்கு நீர்தேவை! அது நதியிலில்லை..!

     

    மன்னாவுலகில் மற்றவர் மெச்சிய பாரதத்தில்

    ====இன்னமும் வற்றாதஜீவ நதிகளுண்டு நீர்அறிவீர்.!

    தென்னரங்கம் சூழவரும் காவிரிக் குழந்தையை

    ====திவ்யநதி கங்கைத் தாயுடனிணைத்து வைப்பீர்.!

    தன்னிடம் தேவைக்கதிக மிருப்பதை..தானமாகத்

    ====தந்தருளும் மனநிலையை நதிமூலம் எழவைப்பீர்.!

    அன்னமும் நீரும் இல்லையெனில் அதற்கொரு

    ====அர்த்தம் இராதெனும் உண்மையை நீரேற்பீரே.!

     

    =========================================================

     

    நன்றி:: தினமணி வெளியீடு:: 16-04-2018

     

    நன்றி படம்:: கூகிள் இமேஜ்

     

    Share
  • நிழலில் தேடிய நிஜம்..!

     பெருவை பார்த்தசாரதி

     

     

     

     

     

     

     

     

     

    சுழலும் புவியுலகில் இறைவன் நமக்களித்தநற்

    ……….சூழல்தாம் எத்தனை கோடியின்பம் அளிக்கிறது..!

    உழலும் மாந்தரினம் இவ்வுலகில் பெற்றபலவுள்

    ……….ஒன்று உயர்வானது!அதுநல் நண்பரமைவதாகும்..!

    குழலூதி மாயம்செய்வித்த மாமணி வண்ணனே

    ……….குசேலனனெனும் ஏழைக்கு உற்ற நண்பனானான்..!

    நிழலில்தேடிய நிஜமானது நேரில் வந்ததுபோல்

    ……….நிகரிலாக் கர்ணனைப் பெற்றான் துரியோதனன்..!

     

    குழவிக் கல்லிருந்தால் கூடவே அம்மியிருக்கும்

    ……….வாழ்விலதுபோல வகையான நண்பர் வேண்டும்..!

    உழப்பம் விளைவித்து உபத்திரவம் உண்டுசெயும்

    ……….உதவாத நண்பர்கள் ஒருசமயம் அமைவதுண்டு..!

    அழகாரத்தினால் நம்மகத்தைக் கவர்ந் தோர்கள்

    ……….அதில் இடம்பெறுதலைத் தவிர்த்தல் வேண்டும்..!

    உழவுத்தொழில் செய்பவன் ஒருவனே நம்மில்

    ……….உத்தம நண்பனாவான்!இதுவள்ளுவனின் வாக்கு..!

     

    அத்தகையநல் நண்பனையே நான் தேடுகிறேன்

    ……….ஆங்கென் அறிவில் வருபவராக எவருமில்லை..!

    எத்துணைநபர் வந்தாலும் ஏற்கும் மனமில்லை

    ……….ஏதேனும் குறைகண்டால் விலகி யோடிடுவார்..!

    உத்தம நண்பன் எனவொருவன் அமைவானா.?

    ……….உள்ளத்துள் உரை பவனாக அவனிருப்பானா?

    நித்தமும்.. நிழலில்தேடிய நிஜம்போல நானுமே

    ……….நீண்ட நாளாய்த் தேடுகிறேன்! கிட்டவில்லை..

     

    =====================================================

    நன்றி தினமணி வெளியீடு:: 08-04-2018

     

    நன்றி :: கூகிள் இமேஜ்

    Share
  • அலை பாயும் மனதினிலே..!

    பெருவை பார்த்தசாரதி

     

     

     

     

     

     

     

     

     

     

    மரக்கிளையில் அற்புதமாய் கூடுகட்டும் பறவைக்கு

    =====மகத்தான சக்தியதை மனதுக்குள் புகுத்தியதாரோ..?

    இரவிலொளி உண்டாக்கும் மின்மினிப் பூச்சிக்கு

    =====அடிவயிற்றின் முடிவில் ஒளிகொடுத்தது யாரோ..?

    மரங்கொத்திப் பறவைதன் கூரலகால் உளிபோல

    =====மரத்தைச் செதுக்கும் உத்தியைத் தந்ததுயாரோ..?

    குரங்குபோலத் தாவும்நம் அலைபாயும் மனதினில்

    =====கோடி கோடியறிவியல் கேள்வியெழும் அன்றாடம்.!

     

    குறையில்லா வாழ்வுவாழ வியனுலகில் இருக்கிறது

    =====கொட்டிக்கிடக்கும் எண்ணற்ற இயற்கை வளங்கள்,!

    அறைகுறையா யிதையறிந்த அறிவிலியோ ரெலாம்

    =====அழித்தொழித்து விடவே கங்கணம் கொண்டிடுவார்,!

    கறைபடிந்த மனதுக்குள் அலைபாயும் நினைவினில்

    =====கரைகின்ற கரியவெண்ண மெழாதிருக்க வேண்டும்.!

    நிறையிருட்டை நீக்குகின்ற முழுமதிபோல…நம்மின்

    =====நினைவும் எண்ணமும் நல்லதையே நாடவேண்டும்.!

     

    அருங்கல்வி பயின்ற ஆசானும்தன் மாணவனுக்கு

    =====அற்புதமாய்ப் புரிய வைக்குமாற்றல் பெறவேணும்.!

    ஒருமித்த கருத்துகளும் உருவாகி வரும்வரையில்

    =====இருவரும் ஒன்றாயிருந்தே செயல்படல் வேணும்.!

    குருவொருவன் நல்வழிகாட்ட..சீடனுமதைத் தன்

    =====கருத்தில் கொண்டால்..குவலயமதில் சாந்திதவழும்.!

    பெரும்ஆய கலைகளும் கைகூட வேண்டுமெனில்

    =====பெரிதாயலையும் மனதையடக்கும் திறன் வேணும்.!

     

    ============================================================

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு:: 02nd April’2018

    நன்றி படம் :: கூகிள் இமேஜ்

    Share
  • சித்திரையே வருக!

     

     

     

     

     

     

     

     

     

    வல்லமை வாசக அன்பர்களுக்கும்

    உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும்

    தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    பெருவை பார்த்தசாரதி

     

    சித்திரை முதல் நன்னாளில்..சிந்தனையில்

    ……சிறப்பாகத் தோன்றி யதைச் சொல்கிறேன்.!

    பத்தரை மாற்றுத் தங்கமாமது! மாதங்கள்

    ……பன்னிரண்டில் முதன் மையாய்த் திகழுமே.!

    அத்துணை நன்மைகளும் நம்மிடம் வந்து

    ……அடையுமாறு அச் சித்திரையும் வழிசெயும்.!

    முத்திரை பதிக்கும் வாழ்விலொரு நாளாக

    ……சித்திரை நாட்களனைத்தும் நல் நாட்களே.!

     

    சித்திரைத் திருநாள் பிறந்தநன் நாளில்நம்

    ……சிந்தனையும் நன்றே சிறப்புற வேண்டும்.!

    தித்திக்கும் பல திருவிழாவைத் தருகின்ற

    ……தெவிட்டாத இன் பத்தையுமது அளிக்கும்.!

    கத்திரி வெயிலின் வெப்பமிக விருந்தாலும்

    ……குளிருமது!கொண்டாடும் திரு விழாவால்.!

    புத்தாண்டின் முதல் நாளாமின்று அதைப்

    ……புன்னகையோடு புகழுற வர வேற்போம்.!

    Share
  • இரை தேடும் பறவை..!

    பெருவை பார்த்தசாரதி

     

     

     

     

     

     

     

     

    வரைமுறை ஏதுமிலையெல்லாம் வல்ல இறைவனுக்கு

    ……….வகையாய் அனைத்தையும் படைத்தே ஆளுகிறான் *

    கரையிலாக் கடல்போல் பரந்த(அ)வன் படைப்பிலே

    ……….காணுகின்ற அற்புதத்தில் ஒன்றுதான் பறவையினம் *

    இரைதேடவே வாழ்வில் பெரும்பகுதி கழிந்துவிடும்

    ……….இதற்கொரு ஈடிணையான படைப்பிலை யெனலாம் *

    வரைவியலோடு நாமிதை ஆராய்ந்தால்? நமக்குமே

    ……….வரும் பொறாமை! வாழ்விலது வாராதிருக்கவேணும் *

     

     

    மண்டலத்தில் உலவு முயிரினத்தில் பறவையுமொன்று

    ……….ஒவ்வொன்றுக்கும் ஒப்பிலாத தனித் திறமையுண்டு *

    உண்டழிவென்று தெரிந்தாயிவை? ஓராயிரம் மைல்

    ……….நீண்டதூரம் ஓய்வின்றிப் பறக்கிறது! வியப்புதானே *

    கண்டம்விட்டுக் கண்டம் தாண்டியும் பறக்குமாமது

    ……….கொண்ட கொள்கையால் சேருமிடம் சென்றுவிடும் *

    பண்டைக் காலமுதலே பறவையதன் குணமறிந்து

    ……….படைப்பின் பயனையறிந்து கொண்டார் பாமரரும் *

     

     

    புரையோடிக் கிடக்கும் லஞ்சஊழல் உலகினில்

    ……….புரிந்துகொள்ள வேண்டிய தென ஏராளமுண்டாம் *

    வரையிலாமல் படித்தது வாழ்வில்செய்த பிழையா?

    ……….வளர்த்த தகுதிக்கு தகும்வேலை தரணியிலில்லை *

    அரைப்படிப்பு படித்து அரங்கத்தில் அமர்ந்தவரோ

    ……….ஆயிரம் கேள்விகேட்பார் வேலையென வந்தால் *

    நரைமுடியும் தோன்றி ரத்தநாளமும் சுருங்கியது

    ……….இரைதேடும் பறவைபோல இன்றும் அலைகிறேன் *

    ============================================================

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு:: 26 March’2018

    படம் நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • நெருப்பின் தாகம்..!

    பெருவை பார்த்தசாரதி

     

     

     

     

     

     

     

     

     

    நெருப்பின் துணையின்றி உலகம்தான் இயங்குமா?

    ……….நீரும் நெருப்புமின்றி நீடித்துயிர்வாழ முடியுமா.?

    இருட்டறையில் சூழ்ந்துள்ள இருள்தான் விலகுமா?

    ……….உருப்படியான காரிய மெதற்குமதன் ஆசிதேவை.!

    உருவபொம்மை எரிக்கவும் உயிர் போனபின்னால்

    ……….உடலைச் சாம்பலாக்க அக்கினி அவசியம்தான்.!

    பருவத்தில் தோன்றும் தாகத்தைக் காதல்தீர்க்கும்

    ……….பசிநெருப்பின் தாகமோ பாருலகையே யழிக்கும்.!

     

    எண்ணை வளமிகுந்த சிரியாவோர் அரபுநாடாம்

    ……….எல்லோருக்கும் இதன் மேல் பொறாமையுண்டு.!

    பண்ணைக் கால்நடை வளர்ப்பில் முன்னோடியது

    ……….பகலிரவாய் மதயினக் கலவரத்தால் எரியுதின்று.!

    பிண்டம் தேடும் வல்லூறுகளிதை வட்டமிடுகிறது

    ……….பற்றியெரியும் நெருப்பின் தாகமடங்கும் வரை.!

    கண்ணை மூடிக்கொள்ள வைக்கும் கொடுமைக்

    ……….கலவரத்தால் “சிரியா” சிறிய நரகமாகிவிட்டதா.?

     

    அரசனின் மாளிகை..அவனாண்ட நாட்டையுமே

    ……….எரித்து சாம்பலாக்கியது கண்ணகியின் சாபம்.!

    கரத்தாலொடுக்க முடியாக் காட்டுத்தீயில் சிக்கி

    ……….காளையர் கன்னியர் குரங்கணித் தீக்கிரையானர்.!

    அரவணைத்து முத்தம் தந்தனுப்பிய பிஞ்சுகளை

    ……….அரும்பை…பள்ளியிலே எரித்ததன் தாகம்தானே.!

    பரவிய நெருப்பின் தாகத்தைத் தணிக்க முடியாது

    ……….பல்லுயிரும் எரிந்து மடியுதிங்கே காரணமின்றி.!

     

    =========================================================

     

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு:: 17-03-2018

     

    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share