பெருவை பார்த்தசாரதி

வெல்லும் சொல்கொண்ட வார்த்தையை வைத்து
=====வியக்கின்ற வகையிலே கவிதை புனைபவருளர்.!
சொல்வீச்சால் பார்வையாளரைச் சொக்க வைத்துச்
=====சிந்தனையைச் சிறை வைக்கும் சொற்பெருக்கருளர்.!
இல்பொருளில் எதையோ பேசிநம்மை எழவிடாமல்
=====இருக்கை யிலமரச்செயும் வித்தை தெரிந்தவருமுளர்.!
எல்லாமும் அறிந்த எத்தனையோ அறிஞர்களை
=====ஈந்ததுதான் பெருமையெந்தன் தாய் நாட்டுக்கேயாம்.!

சொல்லாடல் தெரிந்ததால்தான் இன்றும் கம்பனும்
=====வள்ளுவனும் இளங்கோவும் வாழ்கிறான் என்றுமே.!
சொல்லுக்கு வித்தகனாம் மஹாகவி பாரதியும்தன்
=====சொல்வன்மையால் சுதந்திர தாகமெழச் செய்தான்.!
நெல்மணிகளைத் தாங்கி நெற்கதிர் தாழ்வதுபோல்
=====நல்லதைத் தாழ்பணிந்துச் சொன்னாள் ஒளவையும்,!
நல்லகாலம் பிறப்பதற்கு நாம்வழுவ வேண்டியதை
=====நாலடியிலடக்கியது நாலடியாரின் வெல்லும் சொல்.!

வெல்லும் வாள்வீச்சுக்கு இணையாம்..சொல்லுமே
=====வள்ளுவன் சொல்வன்மை உலகையே யாள்கிறது.!
வல்லமைச் சொற்றொடரால் எழுந்த காப்பியமே
=====வலிமை கொண்ட மாபாரதமும் இராமாயணமும்.!
வில்லாளனின் சரமழைபோல் வெல்லும் சொல்லால்
=====விழுந்து வாக்கியமாகியது வீழாதின்றும் வாழ்கிறது.!
சொல்லாட்சி மிக்க தமிழிலக்கியங்கள் தருமின்பம்
=====சுரங்கம்போல் தோண்டத் தோண்டக் கிடைக்கும்.!
=============================================
நன்றி தினமணி கவிதைமணி:: 11=06=2018
நன்றி:: கூகிள் இமேஜ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *