பெருவை பார்த்தசாரதி

 

 

 

 

 

 

 

 

 

சுழலும் புவியுலகில் இறைவன் நமக்களித்தநற்

……….சூழல்தாம் எத்தனை கோடியின்பம் அளிக்கிறது..!

உழலும் மாந்தரினம் இவ்வுலகில் பெற்றபலவுள்

……….ஒன்று உயர்வானது!அதுநல் நண்பரமைவதாகும்..!

குழலூதி மாயம்செய்வித்த மாமணி வண்ணனே

……….குசேலனனெனும் ஏழைக்கு உற்ற நண்பனானான்..!

நிழலில்தேடிய நிஜமானது நேரில் வந்ததுபோல்

……….நிகரிலாக் கர்ணனைப் பெற்றான் துரியோதனன்..!

 

குழவிக் கல்லிருந்தால் கூடவே அம்மியிருக்கும்

……….வாழ்விலதுபோல வகையான நண்பர் வேண்டும்..!

உழப்பம் விளைவித்து உபத்திரவம் உண்டுசெயும்

……….உதவாத நண்பர்கள் ஒருசமயம் அமைவதுண்டு..!

அழகாரத்தினால் நம்மகத்தைக் கவர்ந் தோர்கள்

……….அதில் இடம்பெறுதலைத் தவிர்த்தல் வேண்டும்..!

உழவுத்தொழில் செய்பவன் ஒருவனே நம்மில்

……….உத்தம நண்பனாவான்!இதுவள்ளுவனின் வாக்கு..!

 

அத்தகையநல் நண்பனையே நான் தேடுகிறேன்

……….ஆங்கென் அறிவில் வருபவராக எவருமில்லை..!

எத்துணைநபர் வந்தாலும் ஏற்கும் மனமில்லை

……….ஏதேனும் குறைகண்டால் விலகி யோடிடுவார்..!

உத்தம நண்பன் எனவொருவன் அமைவானா.?

……….உள்ளத்துள் உரை பவனாக அவனிருப்பானா?

நித்தமும்.. நிழலில்தேடிய நிஜம்போல நானுமே

……….நீண்ட நாளாய்த் தேடுகிறேன்! கிட்டவில்லை..

 

=====================================================

நன்றி தினமணி வெளியீடு:: 08-04-2018

 

நன்றி :: கூகிள் இமேஜ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.