Tag: மாதவன் ஸ்ரீரங்கம்

  • நேற்று…

    — மாதவன் ஸ்ரீரங்கம்.

    புவன் எம்ஜியாருடன் கனவில் காப்பி குடித்தபடி பேசிக்கொண்டிருக்க, பட்டென்று கிறிஸ்டோபர் நோலன் அவனை துப்பாக்கியால் சுட்டபோது, அதிலிருந்து டுமீல் ஓசைக்கு பதிலாக அவன் மொபைலின் ரிங்டோன் ஒலித்து அவனை உறக்கத்திலிருந்து எழுப்பிவிட்டது. பாண்டித்துரைதான் அழைத்திருந்தான். எடுப்பதற்குள் நின்றுவிட்டது. எழுந்து உட்கார்ந்தபோது நிறைய வியர்த்திருந்தது.

    ஒரு பேச்சிலர் அறைக்குண்டான அனைத்து அம்சங்களுடன் அலங்கோலமாய் கிடந்தது அறை. நாளை ஞாயிறு. நாளைக்காவது சுத்தம் செய்யவேண்டுமென்று நினைத்துக்கொண்டான். பாத்ரூம் இதாயாதிகளை முடித்துக்கொண்டு, தானே தயாரித்த தேநீருடன் மொட்டைமாடிக்கு வர, காலை ஒன்பதுமணி வெயில் இதமாகத்தான் இருந்தது.

    கீழே நகரம் பெரிய சந்தடிகளின்றி இருந்தது. சுற்றிலும் பெரிய பெரிய டிஷ் ஆண்டனாக்களும் கேபிள் வயர்களும், பாதியில் துருத்திநிற்கும் பில்லர்களுமாக, ஒரு டிஜிட்டல் உலகின் சகல சாத்தியங்களுடன் விளங்கியது. நகரத்தில் நிறைய அலைக்கழிந்து, நெருக்கடிகளை எல்லாம் கடந்துதான் இந்த அறையை அடையமுடிந்தது. பில்டிங்கின் முதலாளி ஒரு அப்புராணி. இத்தனைகாலமாக இத்தனை சொத்துக்களுடன் இந்த நகரத்தில் அவர் குப்பைகொட்டுவது குறித்து அவனுக்கு ஆச்சரியம்தான். மிகக்குறைந்த வாடகைக்கு இந்த அறையைக்கொடுத்திருக்கிறார். என்ன, அவ்வப்போது கரண்ட்பில்லோ வீட்டுவரியோ ஆன்லைன் ஷாப்பிங்கோ செய்வதற்கு இவன் உதவியை எதிர்பார்ப்பார். அவ்வளவுதான்.

    முன்பு தட்டுமுட்டுச்சாமான்கள் அடைத்துவைத்திருந்த இடம் அது. இன்னும் அதன் பழைய வாசனைகள் எஞ்சியிருக்கின்றன. ஆனால் இந்த அறையும் மொட்டைமாடியும் சொர்க்கம். வெக்கைப்போதில் காற்றாட வெளியில் படுத்துக்கொள்ளலாம். துவைத்த துணிகளை சவுகரியமாக காயப்போடலாம். மிக முக்கியமாக வார இறுதியில் நண்பர்களுடன் பீர் அருந்தலாம். சத்தமாக சிரித்துக் கும்மாளம் போடலாம். டைரி எழுதலாம். டைரி நினைவு வந்ததும் இன்றைய நாளின் வேலைகள் பற்றி யோசனை வந்தது. எழுந்து கோப்பையை கழுவிக் கவிழ்த்துவிட்டு டைரியை எடுத்துப்புரட்டினான்.

    நேற்று சந்தித்த கிளையண்டுகள் பற்றிய குறிப்புகளிருந்தன. இன்று சனிக்கிழமை. இன்றைய நிகழ்ச்சி நிரல்கள் என்ன என்று தேடினான். எல்லாமே மனதில் பாடமாக இருப்பதுதான். என்றாலும் ஒருமுறை தவறுதலாக பிக்ஷாட் ஒருவரின் அப்பாய்ன்மெண்ட்டை இழந்துவிட்டான். மிகப்பெரிய அமவுண்டிற்கு பாலிஸி கிடைத்திருக்கவேண்டியது சிறு பிழையால் தவறிவிட்டது. அன்றிலிருந்துதான் புவனுக்கு டைரி எழுதும் வழக்கம் உண்டாயிற்று. ஒவ்வொரு நாளிலும் என்னென்ன நிகழ்ந்தன, யாரையெல்லாம் சந்தித்தோம், மறுபடி அவர்களை சந்திக்கவேண்டிய நாள் கிழமை நேரம் எல்லாம் அதில் குறித்துவைக்கத் துவங்கினான்.

    இன்று மங்களம் ஜுவல்லர்ஸ் சித்ரஞ்சனை பார்க்கவேண்டும். மதியம் 3 மணிக்குத்தான் சொல்லியிருக்கிறார். அவன் பணிபுரியும் தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு வெளியில் நல்ல பெயரும் விளம்பரமும் இருந்தன. அதை சரியாக மார்க்கெட் செய்யும் வித்தையும் அதற்கான பயிற்சியும் இவனுக்கு இருந்தது. இருந்தும் சற்று கடினமாகவே ஓடுகிறது பிழைப்பு. இந்த வாழ்வு ஒரு பகாசுரன். எத்தனை சம்பாதித்தாலும் லபக் லபக்கென்று விழுங்கிவிட்டு, இன்னும் கொண்டா என்று கேட்கிறது.

    என்னவோ இன்று வேலை பார்க்கவே தோன்றவில்லை. ஒரு விடுமுறைக்கொண்டாட்ட மனநிலைதான் இருந்தது. அவன் தயாராகி தன் டிஸ்கவர் பைக்கில் வெளிவந்தபோது சாலை நெறிசலின்றி வெறிச்சென்று கிடந்தது. சிக்னல்களிலும் அதிகம் கும்பலில்லை. கடைகள் ஷோரூம்கள் எல்லாம் ஷட்டர் இறங்கி இருந்ததையும், பள்ளிச்சீருடையில் ஒரு குழந்தைகளைக்கூட காணவில்லையே என்றும் வியந்துகொண்டிருந்தபோது செல்போன் ஒலித்தது. வண்டியை ஓரங்கட்டி நிறுத்தி எடுத்துப்பார்க்க பாண்டித்துரைதான்.

    “சொல்லு மச்சி எங்க இருக்க”

    “ஏண்டா கூ…. நேத்துபூராம் நீ எங்கபோய்த்தொலஞ்ச”?

    ” என்னடா லூசுமாதிரி பேசுற ? நேத்து நைட்டு நம்ம பார்ல நாம ஒன்னாத்தான இருந்தோம்”?

    “மூதேவி அது முந்தாநேத்துடா. நேத்து எங்கபோன ? த்தா எத்தனவாட்டி போன் பண்ணேன் ? அப்புடியென்ன பிஸி மசிறு ஒனக்கு”?

    புவனுக்கு குழப்பமாக இருந்தது. என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் அமைதியாக இருக்க, பாண்டித்துரையே மறுபடிப் பேசினான்.

    “சரி விடு இப்ப நீ எங்கயிருக்க”!

    “இப்பத்தாண்டா ரூம்லருந்து கெளம்புனேன். மெஸ்ல சாப்டுட்டு அப்டியே ஒரு கிளையண்ட்ட பார்க்கனும். நீ எங்கருக்க”?

    “நா நம்ம சேட்டன் கடைலதான் இருக்கேன் வா”

    சரியென்று அழைப்பைத்துண்டித்து மொபைலை பாக்கெட்டில் வைத்துவிட்டு பைக்கை நகர்த்தினான். நிரம்ப யோசனையாக இருந்தது. என்னாயிற்று பாண்டிக்கு ? நேற்று இரவு இருவரும் ஒன்றாகத்தான் பீர் சாப்பிட்டோம். பிறகு ஏன் குழப்புகிறான் ? நேற்றைய பீர் இன்னும் தெளியவில்லைபோல என்று தனக்குள் சிரித்துக்கொண்டான். பயங்கரமாக பசித்தது. மெஸ்ஸில் நிறுத்தி எதையேனும் அள்ளித்தின்றுவிட்டுப் போகலாமா என நினைத்தபடி மெஸ் வாசலில் நிறுத்த கேட் பூட்டியிருந்தது. முதலியாருக்கு உடம்பு சரியில்லை போல. சமீபமாக இப்படித்தான் அடிக்கடி மூடிவிட்டுச் சென்றுவிடுகிறார் பாவம். சரி இன்று வடையும் டீயும்தான் விதி என்று வழக்கமான சேட்டன் கடைக்குச்சென்று நிறுத்த வாசலிலேயே சிகரெட் பிடித்தபடி நின்றிருந்தான் பாண்டித்துரை. அவன் முகம் கடுப்புடனிருந்தது.

    மாஸ்டரிடம் ஒரு லைட் டீ சொல்லிவிட்டு வடையொன்றை எடுத்துக்கொறித்தான்.

    “ஏண்டா நேத்து போன்பண்ணப்ப எடுக்கல”? என்றான் மறுபடி.

    நிஜமாகவே புவனுக்கு இம்முறை கோபம் வந்துவிட்டது. கூடவே சிரிப்பும். சட்டென்று தன் மொபைலை எடுத்து கால் ஹிஸ்டரியை பார்த்துவிட்டு பாண்டியிடம் கொடுத்தான்.

    ” த்தா போன் பண்ணிருந்தா மிஸ்டு கால் லிஸ்ட்ல இருக்கும்ல ? எங்கன்னு காட்டு”?

    பாண்டி மொபைலை வாங்காமலேயே,

    “ஆமா பெரிய விஞ்ஞானி. லிஸ்டை டெலிட் பண்றதெல்லாம் மேட்டராடா ? சரி அப்டி எங்கதான் போன. எதாச்சும்…..”?

    புவனும் ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டான்.

    ” ரெண்டு பீர்தாண்டா அடிச்ச. இன்னுமா தெளியல? சரி விடு. நா ஒரு கிளையண்ட்டை பார்க்கனும். முடிச்சிட்டு சாயந்திரமா கால் பண்றேன்” என்று ஹெல்மட்டை எடுத்துக்கொண்டு கிளம்பிய புவனை ஆச்சரியமாகப்பார்த்தான் பாண்டி.

    “ஏண்டா ஞாயித்துக்கெழமைல கூட எவனையும் வீட்ல நிம்மதியா இருக்கவுடமாட்டியாடா ? எப்பப்பாரு பாலிஸி பாலிஸின்னு”

    “டே லூஸு. இன்னிக்கி சனிக்கிழமைடா. இந்த சண்டேதான் திருணாமலை போலாம்னு பிளான் பண்ணிருந்தமே”

    “யப்பா சாமி. இப்பவாச்சும் நெனப்பு வந்துச்சே. த்தா பிளானைப்பூராம் சொதப்பிட்டு மொக்கத்தனமா சமாளிக்காத”

    அப்போதுதான் புவன் கடையிலிருந்த தேதியைப்பார்த்தான். ஞாயிறு என்றிருந்தது. அவனுக்கு என்னவோ தோன்ற செய்தித்தாள்களை எடுத்துப்பார்க்க அதுவும் ஞாயிற்றுக்கிழமை பதிப்புத்தான் வந்திருந்தது. அவசர அவசரமாக தனது மொபைலை எடுத்து பரிசோதிக்க, கடைசியாக வெள்ளிக்கிழமை பேசிய தவறிய அழைப்புகள் மட்டுமே இருந்தன. இன்று காலை தவறிய பேசிய பாண்டியின் அழைபுகள் இருந்தன. சனிக்கிழமை தேதியில் ஒன்றுகூட பதிவாகவில்லை. புவனுக்கு சற்று பீதியுண்டானது.

    பாண்டியை கடைக்குள் இழுத்துச்சென்று பெஞ்சில் அமர்ந்து பதட்டத்துடன் விஷயத்தைக்கூறினான்.

    “மச்சி என் நேத்தை காணம்டா”

    பாண்டி பகபகபகவென சிரித்தான்.

    “என்னடா ஜட்டியக்கானோங்குற மாதிரி சொல்ற”?

    புவன் வெளிறிப்போய் கிடந்தான்.

    ” மச்சி சீரியஸாடா. நேத்து முழுக்க என்ன நடந்துச்சி என்ன எதுமே மைண்ட்ல இல்லடா. கடைசியா வெள்ளிக்கிழமை நாம ஒன்னா சரக்கடிச்சது ஞாபகத்துல இருக்கு. அப்பறம் இன்னிக்கி நீ போன் பண்ணப்ப எழுந்ததுதான். நடுவுல நேத்து முழுக்க”…..

    புவன் குரலிலிருந்த சீரியஸ்தனம் பாண்டிக்கு உறைத்திருக்க வேண்டும். ஆறுதலாய்க் கூறினான்.

    “விட்ரா மச்சி. நேத்து நைட்டு என்னை விட்டு தனியா போய் புல்லா சரக்கடிச்சிருப்ப. நாள் முழுக்க மட்டையாயிருப்ப. விடு இதெல்லாம் மேட்டரா”

    “போடா கூ…. . எவ்ளோ மட்டயானாலும் ரெண்டு ராத்திரி ஒரு பகலாடா தூங்குவாங்க? இல்ல உன்னவிட்டி என்னிக்காச்சும் தனியா சரக்கடிச்சிருக்கனா”?

    புவன் கேட்டதில் லாஜிக் இருந்தது. அவன் தனியாக என்றுமே குடித்ததில்லை.

    “இப்ப என்னடா செய்யறது? மங்களம் ஜுவல்லர்ஸ் அப்பாய்ன்மெண்டும் கோவிந்தா. அதான் ரோட்ல டிராபிக் ப்ரீயா, கடைகன்னியெல்லாம் மூடிக்கெடந்துருக்குபோல”

    இப்போது குழப்பம் இருவருக்குமாய் ஆகிப்போனது.

    “ஆபீசுக்கு போன் அடிச்சிப்பாரேன் மச்சி” என்றான் பாண்டி.

    “அட போடா. ரெண்டுமாசமா டார்கட் அச்சீவ் ஆகலைன்னு மேனேஜர் கடுப்புல கெடக்கான். எதுனா பாலிஸியோட வந்தா ஆபீஸ் பக்கம் தலையக்காட்டுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டான்”

    சட்டென்று யோசனை வந்து, பேகில் இருந்த டைரியை புரட்டினான். அதிலும் வெள்ளிக்கிழமைதான் கடைசியாக பதிவாகியிருந்தது.

    “சரி அதை விடு. எப்டியும் இன்னிக்கி லீவுன்னு கன்பர்ம் ஆயிருச்சில்ல. வா ஆளுக்கொரு பீர வாங்கிட்டு உன் ரூமுக்கு போயிருவோம்”

    பாண்டி கூறியதுதான் சரியென்று தோன்றியது. இருவரும் சற்றுநேரத்திற்கெல்லாம் புவன் அறையை அடைந்தார்கள். படியேறுகையில் மூடிக்கிடந்த பில்டிங்கின் கடைகளை பாவமாக பார்த்தான். அறைக்குள் நுழைந்ததும் முதல் காரியமாக தினசரி காலண்டரை கவனித்தான். அது ஞாயிற்றுக்கிழமையை காட்டியது. எப்போதும் முதல்நாள் இரவே தேதித்தாளை கிழிக்கும் வழக்கம் வைத்திருந்தான் புவன். கடைசியாக வெள்ளிக்கிழமை இரவு கிழித்திருந்தால் சனிக்கிழமைதானே இருக்கவேண்டும்?

    “டே என்னடா. எதுக்கு குப்பையக் கெளறிட்ருக்க”?

    பதில்கூறாமல் குப்பை டப்பாவைக் கவிழ்த்து தேதித்தாள்களை மட்டும் சேகரித்து சோதித்துப்பார்க்க, அதில் மற்ற அனைத்து நாட்களும் இருந்தன. நேற்றைய சனிக்கிழமையை மட்டும் காணவில்லை. தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்தான். ஊரிலிருக்கும் பெற்றோருக்கு போன் செய்ய, அவர்களும் நேற்றுமுழுக்க இவன் அழைப்பை ஏற்கவில்லையென்று புகார் வைத்தார்கள்.

    ” மச்சி எனக்குப் பயமாயிருக்குடா. இந்த செலக்டீவ் அம்னீஷியா அல்ஜைமர்லாம் சொல்றாய்ங்களே.. அப்டி ஏதும்”

    “ச்சேச்சே.. அப்டிலாம் ஒன்னுமிருக்காது மச்சி. நீ கவலைப்படாத. நாளைக்கி நம்ம டாக்டர் பய ஹரீஷ பார்த்துருவோம். அப்டிலாம் இருக்காதுரா”?

    பாண்டி ஆறுதல் கூறினாலும் கூட, அவனுக்குமே உள்ளுக்குள் சற்று அச்சமாகத்தான் இருந்தது. ஒரு புத்தகத்தின் பக்கமொன்று தொலைந்ததைப்போல தொலைந்துவிட்டிருக்கிறது ஒரு நாள் ! அது வந்து சென்றதற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லாமல். யார் கண்டது, அது வாராமலேகூட இருந்திருக்கலாம்.

    இரண்டாவது பியரில் சற்றே மிதக்கத்துவங்கிய புவன் மறுபடிப் புலம்ப ஆரம்பிக்க, பாண்டி அவனிடம் சொன்னான்.

    “இப்ப நம்மகையில இருக்கு பாரு இன்னிக்கி. இதான் நம்முது. இத்தை தொலையாம பாத்துக்கிட்டா போதும் மச்சி”

    “அடப்போடா” என்று அவன் சலித்துக்கொண்டான். “சரி நா கேக்குறதுக்கு பதிக் சொல்லு மச்சி”

    மிக்சரை ஒரு கைப்பிடி அள்ளி வாயில் போட்டபடி புவன், “கேளு”

    “சாதாரணமா ஒரு நாள்ல நீ என்னல்லாம் செய்வ”?

    ” ஏன் கேக்குற”?

    “சும்மா சொல்லு மச்சி”

    ” என்னா, எந்திரிப்பேன். குளிப்பேன், சாப்புடுவேன், வேலைக்கிப்போவேன். வீட்டுக்கு வருவேன். தூங்குவேன்”

    “சூப்பரு. நேத்து தொலையாம இருந்திருந்தாலும் நீ அதைத்தான செஞ்சிருப்ப”?

    சற்று ஆழமாக யோசித்துவிட்டுச் சொன்னான்.

    ” ஆங்… ஆமாம். அதத்தான் செஞ்சிருப்பேன். ஏன் கேக்குற”?

    “இல்ல, ஒருவேளை உன் நேத்து தொலையாம இருந்திருந்தா, சி எம்மாவோ பி எம்மாவோ ஆயிருப்பியா? இல்ல ஐநாவுக்கு அதிபராயிருப்பியா”?

    ” டாய்”….

    ” அப்பறம் என்ன ? சும்மா பொலம்பாத மச்சி. நீ பெரிசா எதையும் இழந்திடல “

    “த்தா ஒனக்கென்ன வந்திச்சு ? போனது என்னோட நேத்துடா”

    “அதுஞ்சரிதான். ஒன்னு பண்ணேன். வேன்னா என் நேத்து சும்மாத்தான் கெடக்கும் மச்சி. அதை எடுத்துக்கயேன்” என்று கண்ணடித்துச் சிரித்தான் பாண்டி.

    புவனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

    “ஆமா அப்புடித்தான் செய்யணும். ஆனா அப்டி நாளைக்கி உன் நேத்தை நா எடுத்துக்கிட்டா, என்னோட நாளையை என்னடா செய்யிறது”?

    ” ம்… நியாயமான கேள்விதான். . ஆங்… உன் நாளைய நா வச்சிக்கிறேன். ஆனா, அப்ப என் நாளை என்னாவும் மச்சி ? பேசாம அதை யாருக்குனா பிச்சை போட்ரலாமா”? என்று பாண்டி கேட்க,

    இருவரும் பயங்கரமாக வெடித்துச் சிரித்தார்கள். இறுதியாக பாண்டி, புவனிடம் சொன்னான்.

    “மச்சீ… இந்த உத்திரவாதமில்லாத வாழ்க்கையில நேத்துக்கும் இன்னிக்கும் நாளைக்கும் பெரிய அர்த்தமோ வித்தியாசமோ இருக்குதா என்ன” ?

    *

    Share
  • கறை

    — மாதவன் ஸ்ரீரங்கம்.

    படுத்தபடியே சொட்டுச்சொட்டாக டியூபிற்குள் விழுந்துகொண்டிருந்த சலைன் திரவத்தையே பார்த்தபடியிருந்தாள் நிஷா. உடல் முழுக்க அசதி அழுத்தியது. மனம் கழற்றிவைக்கவே முடியாதபடி கனத்தது. அடிவயிறு முட்டியது. சற்றே அசைய முற்பட கத்திபட்ட இடத்தில் வலி ஒரு மின்சாரம்போல் தாக்கியது. இப்படித்தானே அந்த பிஞ்சுக்குழந்தைக்கும் வலித்திருக்கும் என்று யோசித்தபோது கண்ணீர் பீறிட்டது.

    அருகில் உட்கார்ந்திருந்த ரிடானா பதற்றமாய் எழுந்துவந்தாள்.

    “நோ நிஷா டோண்ட் ஸ்ட்ரைன் ப்ளீஸ்”

    நிஷா ஒற்றை விரலைக் காட்டி சமிக்ஞை செய்தாள். ரிடானா நெருங்கிவந்து ஒரு கைபிடித்து மெல்லத்தூக்கிவிட, மறுபடி அந்த உச்சகட்ட வலி. உந்துதல் இருந்த அளவிற்கு அவளால் வெளியேற்ற இயலவில்லை. ஒன்றிரண்டு துளிகள் வெளியேற்றுவதற்குள் உயிர்போய்விட்டது. ரிடானா பொறுமையுடன் நிஷாவின் தோளணைத்துக் காத்திருந்தாள். மிகநல்ல ஸ்நேகிதி. அவள்மட்டும் இல்லாமல் இருந்தால் இந்த பெருநகரத்தில் நிஷாவை வேறுயார் பார்த்துக்கொள்வார்கள் இந்த பெங்களூரில்.

    அறைத்தோழி ரிடானா தில்லியைச் சேர்ந்த ஆங்கிலோ இந்தியப்பெண். மிக அழகாக குட்டையாகக் கத்திரிக்கப்பட்ட கூந்தலுடன் வசீகரமான புன்னகைகள் வைத்திருப்பாள் எப்போதும். நிஷாவின் அப்பட்டமான அப்பாவித்தனம் பிடித்துப்போனதில் நிரம்ப நெருங்கினார்கள். பெங்களூரை அதன் அழகை அதன் வலிகளை அதன் சிரமங்களை எல்லாம் ரிடானாதான் கற்றுத்தந்தாள்.

    மறுபடி படுத்துக்கொண்டபோது அதீத களைப்பேற்பட்டது. மெலிதான குரலில் அர்ஜுனை விசாரித்தாள்.

    ” ஹீ இஸ் ஆன் தி வே நிஷா”

    மெல்ல ஏதேதோ சிந்தனைகள் கிளற உறங்கிப்போனாள். சம்பந்தமின்றி என்னென்னவோ யோசனைகள் எண்ணங்கள் அலைக்கழித்தன. கூட்டமாக பட்டாம்பூச்சிகள் துரத்தின. பெரிய பெரிய ராட்சத பட்டாம்பூச்சிகள். திடுக்கிட்டு விழித்துக்கொள்ள அருகே அர்ஜுன் நின்றிருந்தான். வியர்த்திருந்தான். அர்ஜுனுக்கு பதற்றத்தில் அதிகம் வியர்க்குமென்று அவளுக்குத் தெரியும்.

    “ஹவ் அர் யு நிஷா? ஃபீல் பெட்டர் நவ்?”

    இல்லை. நிச்சயம் இல்லை. ஆனால் இதை எப்படிப் புரியவைப்பது அவனுக்கு? உடல் ரீதியிலும் மனரீதியிலும் வெளிப்படுத்திவிடமுடியாதபடி வலித்துக்கொண்டிருக்கிறது. இப்படியே இந்த இடத்தில் வாழ்வு நின்றுவிடாதா என்று தோன்றுகின்றது. இதை எந்த மொழியில் சொன்னால் அவனுக்குப் புரியும்?

    “இட்ஸ் ஓகேம்மா. யு டேக் ரெஸ்ட். நா கூடவே இருக்கேன்”

    இரவு டியூட்டி டாக்டர் வந்து கேஸ் ஷீட்டை பார்த்துவிட்டு நர்ஸிடம் உத்தரவுகளை வழங்கிவிட்டுச் சென்றாள். போகும்போது அர்ஜுனிடம் சொன்னாள்.

    “ஐ ஹோப் யு அண்டர்ஸ்டாண்ட் தி டி அன் சி இஸ் ஈக்வல் டு டெலிவெரி. ப்ளீஸ் டேக் கேர் ஆப் ஹெர்”

    அவள் கூறியது எத்தனை உண்மை என்று தோன்றியது நிஷாவிற்கு. இந்த மருத்துவமனை இதற்கென்றே பெயர்போனது. நகரத்தின் முக்கால்வாசி சிசுக்களின் கருக்கள் இங்குதான் கலைக்கப்படுகின்றனவாம். சென்றமுறை கலைத்ததின் மிச்சசொச்சங்கள் தேங்கியிருந்ததில் தீராத உதிரப்போக்கில் அவதிப்பட்டாள். சில டெஸ்டுகள் எடுத்துப்பார்த்துவிட்டு கட்டாயம் சுத்தம் செய்தாகவேண்டும் எனச் சொல்லிவிட்டார்கள். ஆனால் இது தன் வாழ்வில் சுலபத்தில் மறக்கக்கூடிய நிகழ்வில்லை என்றுமட்டும் தோன்றியது அவளுக்கு.

    நர்ஸ் மறுபடியும் உள்ளே வந்து உறக்கத்திற்கான இஞ்செக்ஷன் ஒன்றினை போட்டுவிட்டுச் சென்றாள். ரிடானா நிஷாவைத் மெதுவாகத்தொட்டு காலை வருவதாகச் சொல்லி விடைபெற்றுக்கொண்டாள். அவள் சென்ற பின்னர் ஏதோ ரிப்போர்ட்டிற்காக நர்ஸ் வந்து அழைக்க, வாங்கி வருவதாகக்கூறி அர்ஜுனும் வெளியேறியபின் நிஷா தனித்திருந்தாள்.

    அர்ஜுன் திரும்பிவந்தபோது. சிகரெட் நெடியடித்தது. மிண்ட் ப்ளேவரில் ஏதோ மிட்டாயை வாயில் அதக்கிக்கொண்டிருந்தான். அதையும்மீறி வாடைவந்தது. அர்ஜுன் எப்போதாவதுதான் சிகரெட் பிடிப்பான். மிதமிஞ்சிய டென்ஷன் அடையும்போது. இதைவிட பிரமாதமாக வேறு டென்ஷன் என்ன இருக்கப்போகிறது அவனுக்கு? அவன் சற்றே நிஷாவை நெருங்கி அவள் கைகளை மிருதுவாக பிடித்துக்கொண்டான்.

    “ஐம் ரியலி சாரி டா. ஐம் தி ரீஸன் பார் திஸ் எவ்ரிதிங். ரியலி சாரி”

    அவளுக்கு பாவமாயிருந்தது. கிட்டத்தட்ட அழுதுவிடுவதுபோல் காணப்பட்டான். வழக்கமாக நிஷாதான் தொட்டதெற்கெல்லாம் உணர்ச்சிவசப்படுவாள். அவன் ஆறுதல் கூறுவான்.

    “நோ அஜ்ஜு. ப்ளீஸ் டோண்ட் டாக் லைக் தட். வீ டிடிண்ட் எக்ஸ்பெக்ட் திஸ்” என்று அவனிடம் கூறிய நிஷாவிற்குமே அழுகை வந்துவிட்டது.

    அவளுக்குத் தன் அம்மாவை பார்க்கவேண்டும்போலிருந்தது. இன்னேரம் அவள் என்ன செய்துகொண்டிருப்பாள் என்று யோசித்தாள். அவளுக்கு இதெல்லாம் தெரியாது. ஏற்றுக்கொள்ளவே மாட்டாள். திருமணத்திற்கு முன்பே உண்டான கருவைக் கலைக்க எந்த அம்மாதான் ஒப்புக்கொள்வாள்? கோயம்பத்தூரின் மிடில்கிளாஸ் குடும்பத்தில் இதெல்லாம் மிகப்பெரிய அதிர்ச்சியை தரக்கூடியவை.

    இன்ன இடத்தில் வேலை என்றதும் கூடவே கூடாதென்று மறுத்துவிட்டாள் அம்மா. “ஊரொலகமே வந்து இவ்வடத்தாலிக்கி வேலவாக்கிது. இவளெங்கியோ ———- போறாளாமா. செவனேன்னு இங்கியே எதாச்சும் பாரு. இல்லீன்னா ஊட்டோட இருந்துக்க. வெளியூரெல்லாம் நம்மூட்டுக்கு சுத்தப்படாது” என்று உறுதியாகக் கூறிவிட்டாள். அப்பாவின் நம்பிக்கையும் உற்சாகமும், தொடர்ந்த தனது பிடிவாதத்தினாலும்தான் அரைமனத்துடன் சம்மதித்தாள்.

    அப்பாவிற்கு மட்டும் விஷயம் தெரிந்தால் மிகவும் நொறுங்கிவிடுவார். அவர் நினைவு வரும்போதெல்லாம் தவறாமல் மனம்முழுக்கக் கறையான்கள் ஊருகின்றன.

    “பாரம்முணி, நீயி ஒங்கம்மாளாட்ட ஊட்டோடில்லாம நாலு விசயங்கத்துக்கோனும்னுதான் வேலைக்கே அனுப்புறங்கண்ணு. அங்க எதாச்சும் பிரச்சனையின்னா அடுத்தவஸ்ஸுல ஏறி வந்துருதாயி. நல்லா தெகிரியமா இருக்கோனுமாக்கும். புரிஞ்சுதா?”

    புரியவில்லை. நிஷாவை ஹாஸ்டலில் விட்டுச்செல்கையில் அவர் கூறிய எதுவுமே புரியவில்லை. நகரத்தில் தவறுதலாய் தொலைந்துவிட்ட ஒரு காட்டுவாசியாகத் தன்னை உணர்ந்தாள். அப்பாவின் பேச்சு மட்டுமல்ல. அந்த நகரமே பெரிய பிரமிப்பாகவும் புதிராகவும்தான் இருந்தது அவளுக்கு. பிரம்மாண்டமான மால்களும், புகைப்பிடிக்கும் பெண்களும், எப்போதும் எப்போதும் வெளிச்சமும் இரைச்சலும் வழியும் பகல்கள் எல்லாம் இரவுகளில் அதீத மவுனத்தைத் தடவிய அந்த நகரத்தில் எல்லாமே புதிதாயிருந்தது.

    பணிபுரியும் பளபள கட்டிடங்களில் அழகினைக் கடந்தும் தொக்கிநிற்கும் இயந்திரத்தனம் வெகுநாள் பிடிபடவில்லை அவளுக்கு. டிஸ்கொதேக்களிலும் பப்களிலும் அரையிருளில் நிகழும் அத்துமீறல்கள் அந்நியாயமாகவே தோன்றியது முதலில்.

    கோவையின் தெருக்களில் சுடிதாருடன் அலைந்தவளுக்கு, நகரத்தில் அரைடிராயரும் லெக்கின்ஸுகளும் லோஹிப் ஜீன்ஸுகளுமாய் பார்த்தது நிச்சயம் கலாச்சார அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதனால்தான் அர்ஜுனுடனான ஒரு சந்திப்பில் அவனை பளாரென்று அறைந்தாள். அதுகூட ஒரு பப்பில்தான். இத்தனைக்கும் அவன் நிஷாவின் டீம்லீடரும்கூட.

    நிஷாவிற்கு உடல் நடுங்கியது. குளிர்ஜுரம்போல் உதடுகள் கிட்டித்தன. அர்ஜுன் பக்கத்து பெஞ்சில் மெலிதாக குறட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருந்தான். தானாக எழுந்துகொள்ள முயன்றபோது வலி தாவியணைத்துக்கொண்டது. வேறுவழியின்றி வறண்ட உதடுகளை நாவினால் ஈரப்படுத்திக்கொண்டு அவனை அழைத்தாள்.

    நாலைந்துமுறை அழைத்தபின்பே அர்ஜுன் விழித்துக்கொண்டான்.

    “வாட் யா”? என்றான் பரிவுடன். நிஷா கைகாட்ட, அங்கே சலைன் திரவம் முழுதும் இறங்கிவிட்டிருந்தது. அவன் சென்று நர்ஸை அழைத்துவந்தான். மற்றொரு போத்தலை மாற்றிவிட்ட நர்ஸ் முகத்தில் உறக்கம் தொலைத்த சலிப்பு தென்பட்டது நிஷாவிற்கு.

    ஆனால் அர்ஜுன் அவளை எப்போதுமே சலித்துக்கொண்டதில்லை. ஆந்திராக்காரப் பையன். தன் வாழ்வில் யாருமே தன்னை அடித்ததில்லை என்று நிரம்ப வருந்தினான். நிஷா தனது வாழ்வின் முதல் பியர் அருந்திய அன்றுதான் அது நிகழ்ந்தது. மிகமெலிதான போதை ஆக்கிரமித்திருந்தது அவளை. வேறிடத்திற்கு மாறிச்செல்லும் ஒரு சக பணியாளினிக்கான பிரிவுபச்சார நிகழ்வு அது. எல்லோரும் டீஜேவின் கட்டற்ற இசைவெள்ளத்தில், மதுவின் போதையில் கரைந்திருந்த தருணம் அது. அர்ஜுன் மெல்ல நிஷாவை நெருங்கியணைத்து முத்தமிட முனைந்தபோதுதான் அவனை அறைந்தாள்.

    அத்தனை சத்தத்தில் எவருக்குமே அதை கவனிக்க நேரமில்லை. நிஷா அவனை அறைந்தபின் வந்த வாரங்களில் அர்ஜுன் அதைப்பற்றி ஒரு சிறிய சலனத்தைக்கூட வெளிப்படுத்தாததில்தான் நிஷாவிற்கு அர்ஜ்ஜுனைப் பிடித்திருந்தது. அவளை நேராகப் பார்ப்பதைக்கூட அவன் தவிர்த்ததில்தான் அவன்மீது காதல் வந்தது.

    எப்போதும் சுறுசுறுவென ஆக்டீவாக இருக்கும் அர்ஜுனை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் நெருங்கிப் பழகத்தொடங்கிய சில நாட்களிலேயே அவன் தெளிவுபடுத்திவிட்டான். கல்யாணம் மாதிரியான அமைப்புகளில் தனக்கு நம்பிக்கையோ விருப்பமோ இல்லையென்பதை உறுதிபடக் கூறிவிட்டான். நிஷாவிற்கு அதெல்லாம் ஆச்சரியம்தான். காதலிப்பதே மணந்துகொள்ளத்தானே இது என்ன புதிதாக இருக்கிறதென்று வியந்தாள்.

    காலம் செல்லச்செல்ல தானும் அந்த பெருநகரத்தின் எந்திரத்தில் நசுங்கி, அதற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொண்டாள். நடை உடை உணவு எல்லாவற்றிலும் அந்த நகரில் வளையவரும் மற்ற பெண்களைப்போலவே மாறிப்போனாள். அதன் பிறகு செப்டிக் டேங்குகளை அடைத்திருக்கும் எண்ணற்ற காண்டம்களைப்பற்றி அவள் அதிர்ச்சியோ ஆச்சரியங்களோ அடையவில்லை.

    அர்ஜுன் எழுப்பியபோது நிஷாவினருகே அந்த டாக்டர் நின்றிருந்தாள். மறுநாள் டிஸ்சார்ஜ் செய்துவிடலாம் என்றாள். இவள் மிகவும் பலவீனமாக இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி எச்சரித்தாள். அர்ஜுன் முகம் களைத்து வெளுத்துக்கிடந்தது. இந்த ஒருவார அலைச்சல் அவனை சக்கையாக்கிவிட்டிருந்தது. அடுத்தவாரம் கனடா செல்கிறான். இன்னும் ஒரு வாரம்தான் அவனுடன் இருக்கப்போகிறோம் எனும் நினைப்பு அவள் துயரத்தை அதிகமாக்கியது.

    இப்போது நினைத்தாலும் நிஷா அர்ஜுனை நிறுத்திவிடலாம். அதற்கான குற்றவுணர்வு அவனிடம் இருக்கிறது. இந்த நிலையில் அது மிகச் சுலபமாக சாத்தியமே. அவளுக்கு இப்போது நினைத்தாலும் அதிசயமாகத்தான் இருக்கிறது. திருமணமே செய்துகொள்ளாமல் அவனுடன் வாழ்ந்த சிலகாலங்கள்….

    “டிட் யு காட் எவ்ரித்திங் அர்ஜுன்”?

    “யா அல்மோஸ்ட் நிஷா” கூச்சத்துடன்.

    “யு டோல்ட் மி அபவுட் நியூ லேப்டாப்”

    “லேட்டர் டியர். நாட் நவ்”

    கூடுமானவரை அவள் கண்களைத் தவிர்த்தான். பாவம் அவனை மட்டும் எப்படி பழிசொல்வது? எத்தனையோ கவனமாக இருந்தும் இது நிகழ்ந்துவிட்டது. டாக்டர்கூட கிளியராகக்கூறினாள், “தேர் ஆர் 15 பர்ஸண்ட் சான்சஸ் பார் காண்டம். ஈவன் லூப்ஸ் ஆல்சோ நாட் சென்பர்ஸண்ட் சேஃப்”

    பாவம் அர்ஜுனால் நம்பவே முடியவில்லை. விஷயத்தைக் கூறிய அன்றிலிருந்து அவன் முகம் சாணத்தை மிதித்ததுபோல்தான் ஆயிற்று. அவளுக்கே தன்மீது அருவருப்புத்தான் ஏற்பட்டது. பெரியதோர் குற்றம் செய்து பிடிபட்டதுபோலதான் இருந்தது. இது என்ன சினிமாவா? அவன் நினைவாக ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டு தனியாக வாழ்ந்துவிட?

    வெளியே மழை ஆரம்பித்திருந்தது இடியொலியின் வழி தெரிந்தது. அறையின் சீதோஷ்ணம் சட்டென மாறியது. முதலில் சற்று வியர்க்கத்துவங்கி பின்பு குளிரத்தொடங்கியது. அர்ஜுன் எழுந்து ஜன்னலை மூடிவிட்டு வந்தான்.

    “யூ கேன் கோ அர்ஜுன்”

    “இட்ஸ் ஓகே பேபி. ஐ வில், ஆஃப்டர் ரிடானா”

    அவள் வர இன்னும் நேரமிருந்தது. நிஷா தன் எதிர்காலம் பற்றி யோசித்தாள். எல்லாம் சரியாகிவிடும். ஒரு வாரத்தில் பணிக்குத்திரும்பிவிடலாம். ஊரிலிருந்து ஓயாமல் திருமணம் பற்றிப்பேசும் அம்மாவிடம் சம்மதம் கூறலாம். ஏன் ஊருக்கேக்கூட திரும்பிவிடலாம். யாருக்கும் எதுவும் தெரியப்போவதில்லை. எவனையேனும் மணந்துகொண்டு, அர்ஜுனுடன் வாழ்ந்த இனிமை நிறைந்த தருணங்களை அசைபோட்டபடியே எஞ்சிய வாழ்நாளைக் கழித்துவிடலாம். மனதின் ஒரு ஓரத்திலிருக்கும் கறையைத்தான் கழுவவே முடியாது.

    கல்லூரி படிக்கும்போது அவளுக்கிருந்த கனவுகளெல்லாம் சம்பந்தமின்றி நினைவிற்கு வந்தது. அதற்கெல்லாம் எந்த அர்த்தமுமில்லை இப்போது. அர்ஜுன் அவளையே பாவமாக பார்த்துக்கொண்டிருந்தான்.

    “ஷல் ஐ டெல் யு சம்திங் அஜ்ஜு?”

    “ஷ்யூர் பேபி” என்றபடி அவள் கைகளை மென்மையாகக் கோர்த்துக்கொண்டான்.

    “டோண்ட் கில்ட் அஜ்ஜு. இட் வாஸ் எ கிரேட் கிஃப்ட் பார் அவர் மொமெண்ட்ஸ். அன்பார்ச்சுனேட்லி வீ காண்ட் கீப் இட்” என்று கூறியபோது நிஷா உடைந்து அழுதாள்.

    வெளியே மழை பலமாகப்பெய்யத்தொடங்கியது.

    Share
  • வரம்

    — மாதவன் ஸ்ரீரங்கம்.

    மணியடித்ததும் பையைத்துக்கிக்கொண்டு சண்முகத்தைப் பார்த்தன பிள்ளைகள். அவன் கையிலிருந்த கடிகாரத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டான். புத்தகத்தை மூடிவைத்துவிட்டுத் தலையாட்ட சிட்டாகப் பறந்தார்கள் எல்லோரும். கடைசியாக தமிழரசியும் வந்து மேஜைமீதிருந்த அவள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிய பின் சண்முகம் எழுந்திருக்காமல் உட்கார்ந்திருந்தான்.

    வெளியே மழைவருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. காற்று மைதானத்தின் மணற்புழுதியை வாரிக்கொண்டுவந்து வகுப்பில் போட்டுவிட்டுச் சென்றது. கரையான் அரித்திருந்த மர ஜன்னல்கள் தடுப்புக்கட்டையைத் தாண்டி ஆடிக்கொண்டிருந்தன.

    பியூன் துரை வந்து ஹெட்மாஸ்டர் அழைப்பதாகக் கூற, தயக்கத்துடன் எழுந்துகொண்டான். வராந்தாவில் நடக்கையில் பீட்டி மாஸ்டர் செபாடியன் சிரித்தபடி கையசைத்தார். மைதானத்தில் இன்னும் சில பெரிய பையன்கள் ஃபுட் பால் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஹெட்மாஸ்டர் அறையில் கற்பகம் டீச்சர் பேசிக்கொண்டிருந்தாள். இவன் மரியாதை நிமித்தம் கதவை சப்தம் செய்ய ஹெட்மாஸ்டர் “எஸ் கமின்” என்றார்.

    சண்முகம் உள்ளே நுழைந்ததும் கற்பகம் எழுந்து கிளம்பிவிட்டாள். இவனைப்பார்த்து ஒரு வருத்தத்துடன்கூடிய புன்னகையை அவள் வெளியிட்டதாகத் தோன்றியது தனது பிரமையாக இருக்குமோ என யோசித்தான். ஹெட்மாஸ்டர் ராமகண்ணப்பன் இவனை உட்காரச்சொல்லிவிட்டு ஜன்னலுக்கு வெளியே நின்ற அசோகமரங்களை வேடிக்கை பார்க்கத்துவங்கினார். அவர் எதைப்பற்றி பேசப்போகிறார் என்று ஊகிக்கமுடிந்தது.

    “சொல்லுங்க சார்” என்று சண்முகமே பேச்சைத் தொடங்கினான்.

    அவர் தனது விரல்நகங்களை ஆராய்ந்தபடி கேட்டார்.

    “எதாச்சும் வெவரம் தெரிஞ்சிச்சா சண்முகம்?”

    அவன் எதிர்கொள்ளவே விரும்பாத கேள்வி அது. பலருக்கும் பதில்கூறிச் சலித்துவிட்ட கேள்வி. கடந்த ஒருமாதமாக செல்லுமிடமெங்கும் சண்முகத்தை விடாமல் துரத்திவரும் கேள்வி. பள்ளிக்குக்கூட பலநாள் விடுப்பெடுத்து வீட்டிற்குள்ளேயே முடக்கிவைத்த கேள்வி. அவனுக்கு மிகவும் அயர்ச்சியாயிருந்தது. ஆனால் பதில்கூறாமலிருக்கமுடியாது. கேலிக்காகவும் ஆர்வத்திலும் எழும் கேள்வியல்ல அது. ஹெட்மாஸ்டர் ராமகண்ணப்பன் சண்முகத்தின்மீது மிகுந்த அக்கறை கொண்ட மனிதர். நிச்சயம் மற்றவர்களைப்போல அவரை தவிர்த்துவிடமுடியாது.

    ” விசாரிச்சவரைக்கும் மதுரையில இருக்கிறதாச் சொல்றாங்க சார்”

    “பொறவு என்ன ? நேருல போயி நாலு நல்லவார்த்தை சொல்லிக் கூட்டியாந்திர வேண்டியதான சண்முகம்?”

    எத்தனை சுலபமான தீர்வு ? யதார்த்தத்தில் அது சாத்தியமா என்ன ? என்றென்றைக்குமாய் வேண்டவே வேண்டாமென்று தூக்கிப்போட்டுவிட்டுச் சென்றவளை நேரில் சென்று வா என்றால் வந்துவிடுவாளா என்ன ?

    ” இல்ல சார். நேத்து அவ தங்கச்சி வந்திருந்திச்சி. எம்முன்னாடிதான் ஃபோன்ல பேசிச்சு. ஒரே முடிவா வரமாட்டன்னு சொல்லிருக்காப்ள”

    ஹெட்மாஸ்டர் அவனை தர்மசங்கடமாகப் பார்த்தார். கடைசியில் அதுமட்டும்தான் எல்லோராலும் சாத்தியம். ஊருலகமே அப்படித்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றது. அய்யோ பாவம் என்று அவர்கள் உச்சுக்கொட்டும் சப்தம்தான் கேட்கவில்லை. நிஜத்தில் இந்த அனுதாபங்கள் தான் அவனை அதிகம் இம்சிக்கின்றன.

    ” எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல சண்முகம். நீ ரெம்ப நல்ல மனுசன். ஒனக்கு இது நடந்துருக்கவேணாம்”

    அவன் பதிலேதும் கூறாமல் அமைதியாக இருந்தான். துரை கதைவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தான். கையிலிருந்த சாவிக்கொத்துகளை ஹெட்மாஸ்டர் டேபிள்மேல் வைத்துவிட்டு கிளம்புவதற்கான அவர் அனுமதிக்காக காத்திருந்தான். அவர் அவனிடம் வழக்கமான விசாரிப்புகள் முடித்துவிட்டு அனுப்பினார். அவன் சென்றபின் மறுபடி கேட்டார்,

    ” அவங்க அப்பாம்மா என்ன சொல்றாங்க?”

    ” அவங்க என்னத்தை சொல்லுவாங்க. வரப்ப போறப்ப எல்லாம் ஓன்னு அழுவையும் ஒப்பாரியுந்தான்”

    “சாப்பாடு போக்குவரத்தெல்லாம் ?”

    ” நானாத்தான் செஞ்சுக்கிறேன் சார்”

    வெளியே மெலிதான மழை தூறத்தொடங்கியது. ஹெட்மாஸ்டருக்கு பின்புறமிருந்த ஜன்னலின்வழி சாரல் அறைக்குள் புகுந்தது. சற்றுநேரத்திற்கெல்லாம் பீட்டி மாஸ்டர் சில பையன்களுடன் வந்தார். பையன்கள் கையிலிருந்த ஃபுட் பாலை உள்ளறைக்குள் கொண்டுபோய் வைத்துவிட்டு ஓசையின்றிக் கிளம்பினார்கள். இவர்கள் பர்சனலாக பேசிக்கொண்டிருப்பதை குறிப்பாலுணர்ந்தபடி பீட்டி மாஸ்டரும் ராமகண்ணப்பனிடம் தலையாட்டிவிட்டு வெளியேறினார்.

    “மதுரைல நமக்கு வேண்டப்பட்டவங்க இருக்காங்க சண்முகம். எதாச்சும் ஒத்தாசை வேணும்னா தயங்காம சொல்லு”

    “தேவைப்பட்டா அவசியம் சொல்றேன் சார்” என்றபடி சண்முகம் எழுந்துகொண்டான்.

    ” நா கெளம்பறேன் சார்”

    “சரி சண்முகம். நா அப்பறமா வீட்டுப்பக்கம் வரேன்” என்று விடைகொடுத்தார்.

    லேசாக தலையில் கைவைத்து மழைக்கு மறைத்தபடி கேட்டை கடந்தபோது, அருகாமை பஸ்டாப்பில் பீடி புகைத்துக்கொண்டிருந்த துரை தனது முதுகையே உற்றுப்பார்த்ததுபோலிருந்தது.

    ஒரு பெண் தனது புருஷனை விட்டுவிட்டு வேறொருவனுடன் ஓடிவிடுவது அந்த புருஷனுக்கு உண்மையிலேயே பெருத்த அவமானம்தான்போல என்று நினைத்துக்கொண்டான்.

    வீடு அதிக தூரமில்லை. பள்ளியிலிருந்து பத்துநிமிட நடையில் சேர்ந்துவிடலாம். சண்முகம் பிரதான சாலையைத் தவிர்த்து ரைஸ்மில்லை ஒட்டிய சிறிய சந்தில் நுழைந்து நடந்தான். பிரதான சாலையில் கடைவீதியைக் கடந்து செல்லவேண்டியிருக்கும். சிறிய ஊரின் மிகச்சிறிய கடைத்தெரு என்பதால் எல்லோருக்குமே சண்முகத்தை தெரிந்திருக்கும்.

    எத்தனை யோசித்தும் அவனால் காரணத்தை கண்டுபிடிக்கவே முடியவில்லை. சண்முகத்தின் குடும்பம் மதுரைக்கு அருகே இருக்கிறது. இந்த ஊரில் வாத்தியார் வேலை கிடைத்ததும் வரவேண்டியதாயிற்று. அப்பா ஊர் நாட்டாமை. மேலிடங்களில் மாற்றலுக்கு பேசிப்பார்த்தார். ஒன்றும் நிகழவில்லை. அம்மாவிற்கு உடல்நிலை அத்தனை சிலாக்கியமில்லை என்பதால் சண்முகம் இங்கே தனியாகவே இருக்கவேண்டியதாயிற்று.

    இங்கு வேலைக்கு வந்தபின் சாப்பாடுதான் பெரிய பிரச்சனையாக இருந்தது ஆரம்பத்தில். அதற்காகவே அவனுக்குத் திருமணம் செய்வதென்று முடிவெடுத்தார்கள் வீட்டில். முயற்சியில் இறங்கியபோதுதான் தெரிந்தது பெண் கிடைப்பதன் சிரமங்கள். செய்தித்தாள்கள் மூலமும், புரோக்கர்கள் மூலமும் நிறைய அலைந்து, இறுதியாக தூரத்து உறவினர் மூலம் அருப்புக்கோட்டையிலிருந்து ஜாதகம் வந்தது.

    குடும்பத்துடன் சென்று பார்த்து, பஜ்ஜி பலகாரங்கள் தின்றுவிட்டு பத்து சவரனுக்கு ஒப்புக்கொண்டு நிச்சயம் செய்தார்கள். செல்வியுடன் தனியாக சிலநிமிடங்கள் பேசியபோது அவளுக்கும் சம்மதம் என்பதாகத்தான் கூறினாள். காதல் கீதல் எதிலும் விருப்பமில்லை என்றாள். சண்முகத்தின் வேலைபற்றி, பள்ளியிருக்கும் ஊர்பற்றியெல்லாம் நிறைய ஆர்வத்துடன் கேட்டு தெரிந்துகொண்டாள். திருமணம் பற்றிய எவ்விதக் கனவுகளும் சண்முகத்துக்கு இருந்ததில்லை.

    ரைஸ் மில் கனத்த மவுனத்துடன் நின்றிருந்தது. பவர் கட்டாக இருக்குமென்று நினைத்துக்கொண்டான். வீடிருக்கும் தெருவில் ஒரு காலிமனை நிறைய எருக்கஞ்செடிகள் வளர்ந்திருந்தன. செல்விக்கு எருக்கஞ்செடியென்றாள் நிரம்பப்பிடிக்கும். அதன் மொட்டுக்களை பட்பட்டென்று உடைத்து குழந்தைபோல குதூகலிப்பாள். அவளுடன் வாழ்ந்தது மூன்றுமாதங்கள்தான் என்றாலும் அசைபோட ஆயிரம் விஷயங்கள் எஞ்சிக்கிடப்பது அவனுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.

    மழை பெரிய துளிகளுடன் படார் படாரென்று முகத்திலைறையும்போது அவன் வீட்டுத்திண்ணையில் ஏறி நின்றுகொண்டான். பூட்டைத்திறந்து வீட்டிற்குள் நுழையவே விருப்பமில்லை அவனுக்கு. பாக்கெட்டில் கைநுழைத்து வீட்டுச்சாவியை எடுத்தான். சிலசமயம் சாவியை மறந்து பள்ளி மேஜை டிராயரிலேயே வைத்துவிட்டு வந்துவிடுவான். நல்லவேளையாக இன்று மறக்கவில்லை.

    lonely manசலிப்புடன் வீட்டிற்குள் செல்ல வெறுமை வரவேற்றது. வீட்டின் நடுவே செல்வியின் புடவை கொடியில் ஆடிக்கொண்டிருந்தது. திருமணமாகி வந்தபின் அவன் செல்விக்கு வாங்கித்தந்த முதல் புடவை அது. அதை நகர்த்தாமல் குனிந்து உள்ளே சென்றான். சமையல் மேடையில் காலை சமைத்த பாத்திரங்கள் கழுவாமலிருந்தன. ஒரு பால் பாத்திரத்தையும் தம்ளரையும் மட்டும் கழுவினான். பிரிட்ஜைத் திறந்து பால் பாக்கெட்டை உடைத்து தேநீர் தயாரித்துக்கொண்டான்.

    செல்வி பிரமாதமாக சமைப்பாள். அவள் போடும் தேநீரின் ருசி குடித்து அரைமணியாகியும் நாக்கைவிட்டு அகலாது. தேநீருடன் வந்து திண்ணையில் உட்கார்ந்து மழையை கவனித்தான். மழைநீர் அவன் கால்களை நனைத்ததை சட்டைசெய்யாமலிருந்தான்.

    மூன்றுமாதத்தில் ஒரு சண்டையில்லை, சங்கடங்கள் இல்லை. அவள் முகம் வாடியதுகூட இல்லை. மாலையானால் பஸ்ஸேறி டவுனுக்குச்சென்று ஊர்சுற்றிவிட்டு ஏதேனும் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வருவார்கள். அவளுக்கு சண்முகத்தை பிடிக்காமல் போவதற்கான எவ்வித முகாந்திரங்களும் தெரியவேயில்லை. தாம்பத்ய உறவும்கூட பிரச்சனைகளின்றி சரியாகவே இருந்தது. அவளுடைய திருப்தியைக் கேட்காமல் முடித்துக்கொண்டதேயில்லை அவன் முயக்கங்களை.

    செல்போன் ஒலித்தது. செல்வியின் அம்மாதான். இப்போதெல்லாம் இது வாடிக்கையாகிவிட்டது. பள்ளிவிட்டு வரும் நேரத்தில் சரியாக போன் செய்து விசாரிக்கிறாள். சண்முகம் அழைப்பை எடுக்கவில்லை. எடுத்தால் அழுவாள். மன்னிப்புக் கேட்பாள். யார் செய்த பிழைக்கு யார் மன்னிப்புக்கேட்பது ? உண்மையில் சண்முகத்திற்கு உள்ளுக்குள் ஏதோ அறுந்துவிட்டது. வாழ்வு பற்றிய அபிப்பிராயங்கள் அர்த்தங்கள் அனைத்துமே குழப்பமாகத் தோன்றின. எவ்வித கெட்ட பழக்கங்களுமில்லாத ஒருத்தனை ஏன் ஒரு பெண் விட்டுச்செல்கிறாள் ?

    சண்முகத்தின் அப்பாதான் இடிந்துபோய்விட்டார். வரன் பார்த்துக்கொடுத்த உறவினருடன் சண்டையிட்டு முறித்துக்கொண்டார். ஊரோடு வந்துவிடும்படி வற்புறுத்திக்கொண்டிருந்தார். அம்மா வேறு பெண் பார்க்கிறேன் என்று கிளம்பினாள். சண்முகம் மறுத்துவிட்டான். சமீபமாக செய்தித்தாள்களின் மணமக்கள் தேவை விளம்பரங்கள் பார்க்கும்போதெல்லாம், மார்க்கெட்டில் தனக்கான விலை குறைந்திருப்பதை புரிந்துகொண்டான். மறுபடி ஒரு திருமணம் பற்றி யோசிக்கவே முடியவில்லை அவனால்.

    மழை விட்டு விட்டு பெய்துகொண்டேயிருந்தது. உள்ளே சென்று பாத்திரங்களைக் கழுவிவைத்தான். அழுக்குத்துணிகளை ஒரு ஓரமாக குவித்து வைத்தான். இரவு உணவுக்கு ஏதாவது செய்யலாமா என்று யோசித்து, பிறகு சலிப்புடன் ஓட்டலில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான். உடைமாற்றிக்கொண்டு வீட்டைப்பூட்டிவிட்டு குடையுடன் வெளியேறினான். டவுனுக்குச் சென்று ஏதேனும் ஒரு தியேட்டருக்குப்போய் சினிமா பார்த்துவிட்டு அப்படியே சாப்பிட்டுவிட்டு வரலாமென்று முடிவு செய்தான்.

    சினிமா பார்க்கும் மனநிலை இல்லைதான். ஆனால் வீட்டிலிருந்தால் மனம் யோசித்தே மாய்ந்துபோகும். எல்லாமே கனவாக இருந்தால் எத்தனை நன்றாக இருக்குமென்று நினைத்துப்பார்த்தான். எல்லாம்விட, கடைசிவரை அவள் தன்னை விட்டுச்சென்றதன் காரணம் தெரியாததுதான் அதிகம் வதைத்தது. இம்முறை ரைஸ்மில்லைக் கடக்கும்போது கடகடகடவென இரைந்துகொண்டிருந்தது. கரண்ட் வந்திருக்கவேண்டும்.

    பிரதான சாலைக்கு வந்து நகரத்துவங்கிய டவுன் பஸ் ஒன்றை நிறுத்தி ஏறிக்கொண்டான். பேருந்தில் கூட்டமில்லை. மூடியிருந்த ஜன்னலை திறக்க மழை சண்முகத்தை நனைத்தது.

    Share
  • செயற்கை நிலா

    மாதவன் ஸ்ரீரங்கம்.

    சட்டென்று ஏதோ ஒருநாளில் அது நிகழ்ந்துவிட்டது. வானத்தில் நிலாவே வரவில்லை. ஏன் எதனாலென்றெல்லாம் யாருக்கும் தெரியவில்லை. நகரம் முழுக்க இதே பேச்சாக இருந்தது. சரி இங்கு மட்டும்தான் இப்படியா என்று தெரிந்துகொள்வதற்காக பக்கத்து நகரத்திற்கு ஆளனுப்பி விசாரித்ததில் அங்கும் இப்படித்தானாம். ஏறக்குறைய எல்லா இடங்களிலுமே இதேகதைதான். மக்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

    மீடியாக்கள் அனைத்திலும் இதுதான் செய்தியாக இருந்தது. இணையம் முழுக்க இதுபற்றிய காரண அலசல்களும் காரசார விவாதங்களும் நிகழ்ந்தன. பூமியிலிருந்த கேமராக்கள் அனைத்தும் வானைநோக்கி குறிபார்த்து காத்திருக்கத் துவங்கின.

    ஒட்டுமொத்தமாக ஏதோ தெய்வகுத்தமாக இருக்கக்கூடுமென்று அங்கங்கு ஊர்களிலுள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நிகழ்த்தினார்கள். ஒன்றும் பயனளிக்கவில்லை. ஏதோ மாபெரும் சாபம் பூமிமீது கவிழ்ந்திருக்கிறதென்று மக்கள் பீதியிலாழ்ந்தார்கள்.

    ஆள்பவர்களெல்லாம் அவசரமாக ஐநா சபையில் ஒன்றுகூடி கலந்தாலோசித்தார்கள். தலைக்குத்தலை ஏதேதோ பேசினார்கள், உங்களால்தான் எங்களால்தான் என்றெல்லாம் ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக்கொண்டிருந்தார்கள்.

    பிறகு ஒரு சாரர் மட்டும் “எழுந்து இதில் அறிவியல் ரீதியிலான பார்வைகள் ஒருபக்கம் தொடரட்டும். மக்களின் புராதன நம்பிக்கைகள்பற்றியும் நாம் யோசித்துப்பார்க்கவேண்டும். எதற்கும் ஆன்மீகத்தலைவர்கள் எல்லோரையும் வரவழைப்போம்” என்றார்கள். அந்தக்கருத்து அனைவருக்குமே ஒப்புதலாக இருக்க. அதிவிரைவாக ஒரு மாநாடு ஏற்பாடு செய்தார்கள்.

    கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் யூதர்கள் பவுத்தர்கள் இந்துக்கள் சமணர்கள் இன்னும் என்னவெல்லாம் மதங்கள் உண்டோ அதன் அதிகாரபூர்வ தலைவர்களெல்லாம் அதில் கலந்துகொண்டார்கள். விஞ்ஞானிகளும் ஒரு பக்கமாக சேர்ந்துகொண்டார்கள்.

    மதத்தலைவர்கள் அதற்கு காரணிகள் என்னவாக இருக்குமென்று பட்டியலிட்டுக்கொண்டே செல்ல அறிவியல் ஆய்வாள்ர்கள் அதையெல்லா மறுத்தபடி விளக்கங்கள் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். பயங்கரமாக பேச்சு நீண்டுகொண்டிருந்தது. ஆன்மீகவாதிகள் கேட்ட சில சந்தேகங்களுக்கு பதில் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அப்பட்டமாக ஒப்புக்கொண்டனர்.

    யாரும் எந்த முடிவிற்கும் வர இயலவில்லை. ஒருசாரர் சொல்வதை மறு சாரர் மறுதலித்தார்கள். சிலர் எழுந்து வெளிநடப்பு செய்தார்கள். கொஞ்சம் பேர் அவர்களை தடுத்தார்கள். பெரிய குழப்பமாக இருந்தது.

    சிலர் பலி கொடுக்கவேண்டுமென்று சொல்ல. எதை பலியாக கொடுப்பதென்பதில் கருத்துவேறுபாடுகள் நிலவின. நாம் நாகரீகமனிதர்கள் எனவே நரபலியெல்லாம் கூடாதென்று ஒருமனதாக முடிவெடுத்தார்கள். ஆடு மாடு பன்றி கோழி என அவர்வர் சூழலியலுக்கு ஏற்ப விலங்கினங்களை பலியிடலாமென்று சொல்ல, புளூகிராஸ் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தார்கள்.

    கொசகொசவேன பேச்சு நீண்டதே ஒழிய முடிவிற்கு வந்தபாடில்லை. கடைசியாக பிரார்த்தனைதான் ஒரேவழி. ஒரு குறிப்பிட்ட நாளில் கூட்டுப்பிரார்த்தனை செய்வோம் என்று முடிவிற்குவந்தார்கள். ஏறக்குறைய எல்லோருக்குமே அதில் சம்மதமாயிருந்தது. அடுத்தவாரத்தில் ஒருநாளில் மாலை ஆறுமணியை பிரார்த்தனைக்கான நேரமாக அறிவித்து மாநாட்டை கலைத்துச் சென்றார்கள்.

    குறிப்பிட்ட அந்த நாளில், மிகச்சரியாக பூமியிலுள்ள அனைவரும், பிரார்த்தனை செய்தார்கள். எல்லாம் முடிந்து இருண்டபிறகு நிலா வருமென்று ஆவலுடன் பார்க்க கடைசிவரை வரவேயில்லை நிலா.

    மக்கள் நொந்துபோனார்கள். கவிஞர்களில் பாதிபேர் தற்கொலை செய்துகொண்டார்கள். மீதிபேர் பைத்தியம் முற்றிப்போனார்கள். அம்மாக்கள் சோறூட்ட நிலா இல்லாததால் குழந்தைகள் சாப்பிடாமல் மெலிந்தன. வடை சுடும் பாட்டிகதையெல்லாம் வழக்கொழிந்து போய்விடுமே என்று சிலர் வருந்தினார்கள்.

    காதலிகளெல்லாம் காதலர்களிடம் நிலாவை கொண்டுவா காதலிக்கிறேன் என்று கேலி பேசினார்கள். இரவுகள் பயங்கரமாக அச்சமூட்டின. மனிதர்கள் சமநிலையிழந்து வெறிகொண்டு ஒரு மார்க்கமாக அலைந்தனர். அங்கங்கே நிலாவை திரும்பக்கொண்டுவரும்படி அரசை வற்புறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்கள்.

    அரசு மக்களை சமாதானம் செய்ய கண்துடைப்பிற்காக நிலா மீட்புக்கமிட்டி ஒன்றினைத் துவங்கி, இன்னும் சில நாட்களில் நிலாவை கொண்டுவந்துவிடுவோம் என்று அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் வன்முறைகளும் சூறையாடல்களும் நிகழ்ந்தன.

    சர்வதேச நாடுகள் மறுபடி ஐநா சபையில் ஒன்றுகூடி விவாதித்தபோது நாசா மையத்தின் தலைவர் ஆண்டர்சன் ஒரு கட்டுரை சமர்ப்பித்தார். அதன்படி, முறையாக நிலவைப்பற்றி ஆய்வுகள் தொடரும் அதேபட்சத்தில் மக்களை கட்டுக்குள் கொண்டுவர வானில் ‘செயற்கை நிலா’ ஒன்றினை தற்காலிகமாக நிறுவுவதுதான் ஒரே வழி என்றார். அதற்கு ஆகக்கூடிய செலவுகள் பற்றிய பட்ஜட்டினையும் சமர்ப்பித்தார்.

    கொஞ்சம்போல சலசலப்புகளிருந்தாலும் பெரும்பாலானோர் இந்த பிராஜக்டிற்கு ஒப்புக்கொண்டனர். அனைத்து நாடுகளும் ஏதேதோ பொய்யான காரணங்கள் கூறி பிராஜக்டிற்காக பலகோடி டாலர்கள் நிதி ஒதுக்கின. நிதிகளை ஒன்றிணைத்து ஒருங்கிணைத்து நாசாவிடம் ஒப்படைக்கும் பொறுப்பையும் ஐநா செவ்வனே செய்தது. ஐநா தலைவர், நாசாவின் தலைவர் ஆண்டர்சனிடம் சொன்னார். “சொன்னபடியே ஒரு மாதத்தில் பிராஜக்டை முடித்துவிடுங்கள்”

    பிறகு சர்வதேச தலைவர்களும் அறிக்கை விடுத்தார்கள். “நிலாவினை கண்டுபிடித்தாயிற்று. இன்னும் ஒரு மாதத்தில் நிலா உதிக்கும். அதுவரை பொறுமையாக இருப்போம்” என்று.

    ___________________________________________________

    கிளைமாக்ஸ் பூஜ்யம் :

    சொன்னபடியே ஒரு மாதத்தில் நிலா உதிக்க, மக்களெல்லாம் மறுபடிப் பழையபடி தங்கள் பிரச்சனைகளுக்கு திரும்பினார்கள்.

    ___________________________________________________

    கிளைமாக்ஸ் ஒன்று :

    ஆண்டர்சன் மதுக்கோப்பையை நாசாவின் தலைமை விஞ்ஞானி ஜான் பீட்டரிடம் கொடுத்துவிட்டு சொன்னார்,

    “சக்ஸஸ் ஜான். உனக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும். நீ மட்டும் சரியான சமயத்தில் தகவல் சொல்லாமலிருந்தால், நம்மால் இத்தனை கோடி கோடி டாலர்கள் சம்பாதித்திருக்க முடியாது”

    ஜான் பதிலுக்கு சொன்னார்.

    “இதில் என் பங்கு என்று எதுவுமே இல்லை. விண்கல் ஒன்றின் நகர்வை கவனித்து, அது பூமிக்கும் நிலவுக்குமான பாதையில் வருகையில், சில மாதங்களுக்கு பூமியிலிருந்து நிலா மறைந்துபோகலாம் என்றுதான் சொன்னேன். இதை மட்டும் வைத்துக்கொண்டு இத்தனை பெரிய திட்டம் தீட்டியது உங்கள் மூளைதான் சார்”

    “வியாபார மூளை என்று சொல் ஜான்”

    “உண்மை உண்மை. எல்லாம் சரி. நிஜத்தில் நிலா வெளிப்பட்டபிறகு நாம் உருவாக்கியதாக புரளி செய்த செயற்கைநிலாவும் சேர்ந்தால் இரண்டு நிலாக்கள் அல்லவா தெரியவேண்டும் ? வானில் ஒன்றுதானே தெரியும் ? ஐநாவில் இதை கேட்கவில்லையா”?

    “அதெல்லாம் முன்பே யோசித்து சமாளித்துவிட்டேன் ஜான். நாம் உருவாக்கியதாகக் கூறிய செயற்கை நிலா நிஜமான நிலா உதித்ததும் தானாக மறைந்துவிடும் என்று கூறிவிட்டேன். அதுமட்டுமல்ல. பார்வையைவிட்டு மறைந்தாலும் கூட அது ஆபத்தானது, அதை அகற்றவேண்டும் என்று கூறி அதற்கான பலகோடி மில்லியன் டாலர்களுக்கான பிராஜக்டையும் சமர்ப்பித்தாயிற்று”

    “ஆஹா பிரமாதம் பிரமாதம்” என்று புகழ்ந்த ஜான் மறுநாள் ஒரு கார் விபத்தில் இறந்துபோனார்.

    ___________________________________________________

    கிளைமாக்ஸ் இரண்டு :

    விண்வெளியில்,

    லூ அவளை அழைத்தான்.

    “மீ இங்கே வா. தலைவர் திரையில் வந்திருக்கிறார்”

    மீ அவசரமாக திரைமுன்பு வந்தாள்.

    “எல்லாம் தயாரா”?

    “தாயார் தேவரே”

    “பிரஜைகளின் மனநிலை”?

    “வழக்கம்போலத்தான் தேவரே. மனம் சமநிலையை இழந்துவிட்டார்கள்”

    “சரி நல்லது. டெஸ்ட்ராய் தி எர்த்”

    மீ கணினியை நெருங்கி ஏதோ ஒரு பட்டனை தட்டிவிட்டு தன் பர்சனல் பேடில் எழுதிக்கொண்டாள்.

    ‘பிராஜக்ட் 44445555500000 கம்ப்ளீட்டட்’

    ___________________________________________________

    Share
  • அடையாளம்

    மாதவன் ஸ்ரீரங்கம்.

    கதைக்குமுன்பு ஒரு நிமிடம் :
    நீங்கள் ஒரு இடத்தில் கண்விழித்து எழுகின்றீர்கள். அப்பொழுது உங்களைச் சுற்றியுள்ளவற்றை பற்றியோ, உங்களைப்பற்றியோ, உங்களுக்கு எதுவும் நினைவிலில்லை. மற்றவர்களுக்கும் உங்களைப்பற்றி எதுவுமே தெரியவில்லை என்றால் …

    நீங்கள் என்பது யார் ?

    _____________________________________________________________________

    இப்போது அவனுக்கு பயமாக இருந்தது.

    சுமாராக இரண்டு மூன்றுமணிநேரங்களாக அவன் அந்த கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறான். அந்த இடம் முழுவதும் மனிதர்களால் நிரம்பியிருந்தது. அங்கிருந்த ஒருவருக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை. அவர்கள் யாரென்றும் அவனுக்குத் தெரியவில்லை. அவ்வளவு ஏன், அவனுக்கு தன்னைப்பற்றியே யாரென்று தெரியவில்லை. கண்விழித்தபோது கொஞ்சம் குழப்பமாக இருந்தது. பிறகு அது ஒருவகையில் அவனுக்கு சவுகரியமாகவும்கூட இருந்தது. ஆனால் நேரம் செல்லச்செல்ல அவனால் தாங்கமுடியாத அளவிற்கு இது ஒரு பயங்கரமான கனவாக இருக்குமோ என்றுகூடத்தோன்றியது.

    அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை வைத்து கொஞ்சம் பயம்விலகி சமாதானமாகிக்கொண்டு மெல்ல எழுந்தான். அங்கங்கே மனிதர்கள் ஆடையேதும் அணியாமல் வெயிலில் குளித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் அலைகளில் கால்நனைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். குழந்தைகள் அனைவரும் மிக மும்மறமாக மணலில் உருண்டுகொண்டிருந்தார்கள்.

    அவன் மெல்ல நடந்து சென்று, தனியாக உட்கார்ந்திருந்த அந்த முதியவரை நெருங்கி எதையோ பேசமுற்பட்டான். குரல் வரவில்லை அவனுக்கு. கிழவர் சலனமின்றி இவனைப்பார்த்துவிட்டு அருகில் அமரச்சொல்லி சைகை செய்தார். இவன் உட்கார்ந்தபடி அவரிடம் கேட்டான்.

    “ஐயா இது என்ன இடம் ? நான் யார் ? நீங்கள் யார் ?…”

    இவன் கேள்விகளை முடிக்குமுன்பே கிழவர் தடுத்துவிட்டு பேசத்தொடங்கினார்.

    “இது ஒரு அடையாளமற்ற இடம். இடத்திற்கு மட்டுமல்ல. இங்கிருக்கும் எவருக்குமே எந்தவித அடையாளமும் இல்லை”

    இவன் குழப்பம் இப்போது அதிகரித்தது. புரியாமல் அவரையே பார்த்தான். அவர் மெலிதான புன்னகையோடு தொடர்ந்தார்.

    “நீ இந்த இடத்திற்கு வந்து சிலமணிநேரங்கள்தான் ஆகின்றது. அதனால்தான் உனக்கு இன்னும் முழுமையாக இந்த இடம் பற்றிப் புரியவில்லை. அதோ அங்கே பார்”…

    அந்தக்கிழவர் கைகாட்டிய திசையில். விதவிதமான பறவைகளும் மிருகங்களும் பிராணிகளும் ஒன்றாக பறந்துகொண்டிருந்தன. நடுநடுவே மனிதர்களும் அவ்வப்போது பறந்துகொண்டும் மிதந்துகொண்டுமிருந்தனர். கிழவர் மறுபடி தொடர்ந்தார்.

    “உண்மையில் இந்த இடம் எந்தவிதமான அடையாளங்களுமற்றது. கடல் மனிதர்கள் பறவைகள் மிருகங்கள் குழந்தைகள் கிழவர்கள் போன்ற அடையாள வார்த்தைகளெல்லாம்கூட, இதை எழுதிக்கொண்டிருக்கும் ஒருவரின் துயரம் மட்டுமே. மற்றபடி இங்கு எந்த உயிரிலும் எவ்வித வேறுபாடுகளும் கிடையாது.

    இங்கு எவருக்கும் பசியில்லை தாகமில்லை காமமில்லை முதுமையில்லை நோய்களில்லை மரணமும் இல்லை. இங்கிருப்பவர்களெல்லாம் வெறுமனே இருக்கிறார்கள். அவ்வளவுதான். எவருக்கும் எவரோடும் பேசத்தேவையில்லை. இங்கு இயற்கை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறது எப்போதும். உனது வாயைவிட காதுகள் மிகக்கூர்மையானது. உன்பேச்சை விட்டுவிட்டு இந்தக் கடலை, பறவை, விலங்குகளை மனிதரை உற்று கவனி நிறையப் புரியும்”.

    அவன் அவரிடம் மிகநிதானமாகக் கேட்டான்.

    “ஆனால் எனக்குக் கேள்விகள் வந்துகொண்டேயிருக்கின்றன ஐயா. உதாரணத்திற்கு, நான் யார்?”

    கிழவர் பலமாக ஒருமுறை சிரித்தார்.

    “அதை பெரிதுபடுத்தாதே. இயல்பில் அது சாத்தியமானதே. உன்னில் மிச்சமிருக்கும் பழைய அடையாளக் கலாச்சாரத்தின் எச்சம்தான் உனது கேள்விகள். இங்கு உனது தொடர்ந்த இருப்பினால் மட்டுமே அவை மறைந்துபோகும் சாத்தியமுண்டு. உனக்கு உன்னைப்பற்றி தெரியாததைப் போலவே எனக்கும் என்னைப்பற்றி எதுவும் தெரியாது. இங்கு வந்த புதிதில் எனக்கும் நான் யார் என்பதில் மிகுந்த குழப்பமும் கேள்விகளும் இருந்தது. தொடர்ந்த எனது பொறுமையின் காத்திருப்பால் கேள்விகள் குழப்பங்களெல்லாம் ஒருநாள் காணாமல் போயிற்று.

    இங்கு எல்லோருக்குமே அப்படித்தான். ஆனால் நான், நீ, அவர்கள் என்னும் பண்டைய அடையாள உலகில் அதிக ஆழத்தில், தான் இன்னார் என்பதில் அதீத நம்பிக்கை கொண்டவர்களை, சிறிது அதிககாலம் இந்தக்கேள்விகள் இங்கு துரத்திவரும். நீ விரும்பினால் இங்கு அதற்கும்கூட வழியுண்டு. அதோ. உன் பழைய நினைவுகளை மீட்டெடுப்பதற்கான வழி”.

    சற்றே தனிமையான மேட்டுப்பாங்கான இடத்திலிருந்த பெரிய மரத்தில் ஒரு ஊஞ்சல் தொங்கிக்கொண்டிருந்தது. கிழவர் சொன்னார்.

    “அந்த ஊஞ்சல் ஒரு கால ஊர்தி. அதில் உட்கார்ந்துகொண்டு ஆடத்துவங்கினால், நீ விரும்புகின்ற உனது பிறவிகளுக்கெல்லாம் அது உன்னை அழைத்துச்செல்லும். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வைத்துக்கொள். உனது எந்தப்பிறவியிலும் எவரோடும் பேசிவிடாதே. பிறகு நீ அங்கேயே தங்கிவிடுவாய். பலவிதமான பிறவிகளின் தொடர்ந்த சலிப்பினால்தான் நீ இங்கு வந்து சேர்ந்திருக்கிறாய்.

    வலிகளும், புன்னகையும், காதலும், நோய்களும், முதுமையும், சூழ்ச்சிகளும், பொய்களும் தொடர்ச்சியாக உன்னை வறுத்தெடுத்ததாலும், நீ ஆத்மார்த்தமாகவே அவற்றையெல்லாம் கடந்துவிட விரும்பியதாலும்தான் இங்கு வந்திருக்கிறாய். இவையெல்லாம் பலகோடி ஆண்டுகளாக படிப்படியாக நிகழ்ந்தது. ஒருவேளை ஏதேனும் பிறவியில் நீ சிக்கிக்கொண்டால், மறுபடி இங்கே வர பலநூறுகோடி ஆண்டுகள் ஆகக்கூடும் ஜாக்கிரதை.”

    இப்போது அவன் மிகப்பெரிய நிம்மதியை உணர்ந்தான். சற்றே யோசித்துப்பார்த்ததில், உண்மையில் அவனுக்கு இங்கு என்ன குறை ? கிட்டத்தட்ட மாலை வந்துவிட்டது. சிலமணிகளில் இருட்டிவிடும். இதுவரை பசியென்ற உணர்வே தோன்றவில்லை அவனுக்கு. உடலின் எடையைக்கூட உணரவில்லை. மிக எளிமையாகச் சொன்னால், அவனுக்கு இங்கு தேவையென்றே எதுவுமில்லை. நிம்மதியும் திருப்தியும் சுதந்திரமாகவுமாக இருக்கின்றான். இங்கேயே இப்படியே எந்த அடையாளமுமற்று இருந்துவிடவே அவனுக்கும் விருப்பமிருந்தது.

    ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக, தான் யார் என்று தெரிந்துகொள்ளும் தீராத உந்துதலில் அவன் ஊஞ்சல் நோக்கி நகர்ந்தான். இப்போது அங்கிருந்த மனிதர்களெல்லாம் நடுவில் நெருப்பிட்டு அதைச்சுற்றிவந்து நடனமாடினார்கள். அவர்கள் கைகள் ஒருவருக்கொருவர் சங்கிலிபோலப் பிணைத்திருந்தார்கள். அவர்களது நடனத்தின் லயத்தை ரசித்தபடியே அவன் ஊஞ்சலி உட்கார்ந்துகொண்டான். அவர்கள் இன்னும் பரவசமாக ஆடினார்கள். அந்த நெருப்பின் ஜ்வாலையும்கூட அவர்களோடு சேர்ந்து ஆடியதுபோலத்தோன்றியது அவனுக்கு.

    மெல்ல ஊஞ்சல் ஆடத்தொடங்கியதும் அவனைப் பிறவிகள் ஆக்கிரமித்தன. மாறிமாறி அவன் பல பிறவிகளுக்குள் பிரவேசித்தான். ஒரு பிறவியில் அவன் டைனோசராய் இருந்தான். இன்னொன்றில் அவன் எறும்பாய் இருந்தான். மற்றொன்றில் அவன் அலெக்ஸாண்டராய் இருந்தான். ஒரு விஞ்ஞானியாக, கிழவியாக, புல்லாக, பாம்பாக, உருவமற்ற பிண்டமாக, நீக்ரோவாக, ஐரோப்பியனாக, மரமாக, பசுவாக, காகமாக, எழுத்தாளனாக, நடிகனாக, ரசிகனாக, கடத்தல்காரனாக, பாதிரியாராக, நீச்சல்வீரனாக, கொலைகாரனாக, அடிமையாக, மன்னனாக, அலியாக, தவளையாக, பல்லியாக….. அவன் சலித்துப்போனான்.

    சபிக்கப்பட்ட இத்தனை பிறவிகளிலிருந்தும் அவனால் தான் யார் என்னும்டையாளத்தை மீட்டுக்கொள்ள முடியாத குழப்பத்திலிருந்தபோது, அவன் பட்டாம்பூச்சியாக ஒரு சிறுவனின் கையில் அகப்பட்டபோது ‘ஐயோ’ என்று கத்திவிட்டான்.

    Share
  • தண்ணீரில் தத்தளிப்பவன்

     மாதவன் ஸ்ரீரங்கம்.

    என் நிலையைப் புரிந்துகொள்வது உங்களுக்குச் சற்றுச் சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் இதுதான் நிஜம். அவனை ஒரு அடகுக்கடையில்தான் சந்தித்தேன். நான் யார் என்ன என்னும் வியாக்கியானங்களெல்லாம் வேறொரு சந்தர்ப்பத்தில் சாத்தியப்பட்டால் விளக்குகின்றேன். இப்போது அடகுக்கடை.

    அவன் ஆள் ஒரு மார்க்கமாக இருந்தான். என் மனைவியின் தாலியை அடகுவைக்க சென்றிருந்தேன். பொதுவாக நகைகளை அடகுவைப்பவர்களை புழுபூச்சிகள் போலத்தான் பார்ப்பார்கள். கொத்தாக நெக்லஸ் ஒட்டியானம் மாதிரி பெரிய ஐட்டங்களாக அடகு வைப்பவர்கள் பேங்கிற்குத்தான் செல்வார்கள்.

    இது தாலியாயிற்றே. அங்கெல்லாம் செல்ல நேரமோ விருப்பமோ வாய்க்கவில்லை எனக்கு. தாலியை வாங்கி பார்த்துவிட்டு அல்ரெடி இங்கு வைத்திருக்கிறீர்களா என்று கேட்டார்கள். இல்லையென்றதும் யாரேனும் தெரிந்தவர்களை அழைத்துவா என்று சொல்லிவிட்டார்கள். செய்வதறியாமல் தாடையைச் சொறிந்து கொண்டிருந்தபோதுதான் அவன் அங்கு வந்தான்.

    அவன் பிறகு, முதலில் தாலி. ஒருவன் தாலியை அடகு வைக்கின்றான் என்றால் அதைவிட அவன் ஏழ்மையைப் பறைசாற்ற வேறு எதுவும் தேவையில்லை. வறுமை என்று சொல்ல மனம் ஒப்பாததால் ஏழ்மை என்கிறேன். அவன் உள்ளே நுழைந்து என்னருகில் உட்கார்ந்துகொண்டான். கடை சற்று பிஸியாக இருந்தது.

    நான் எழுந்துகொண்டேன். வெளியே வந்து அருகிலுள்ள டீக்கடையில் டீ சொல்லி சிகரெட் பற்றவைத்துக்கொண்டேன். கையிலிருந்த இருபது ரூபாய் காலி. நீங்கள் நினைக்கலாம், இந்த சிகரெட் சமாச்சாரத்தையெல்லாம் விட்டுவிட்டால் நிறைய சேமித்து உருப்பட்டுவிடலாம் என்று.

    இருப்பதே அந்த ஒரு பழக்கம்தான். அதுவும் பொறுக்கவில்லையா? பக்கத்திலிருந்த ஒரு கோவில் திண்ணையில் நிழலில் ஒன்றிரண்டு ஆடுகள் படுத்திருந்தன. அருகில் நான் உட்கார்ந்தபோது அவை என்னைத் தடைசெய்யவில்லை. இந்த ஆடுகள் மாதிரி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். வேலை காசு பணம் அடகு கல்யாணம் வீட்டுவாடகை பால்பணம் குழந்தைவளர்ப்பு பள்ளிக்கட்டணம் மொய்கள் எதுவும் தேவையில்லை.

    கிடைத்த கிளையில் இலைதின்று கிடைக்கும் நிழலில் அசைபோட்டு நிம்மதியான வாழ்வு. அருகில் நிழலாட அவன் நின்றிருந்தான். என்ன என்பதுபோல் பார்த்தேன். அவன் எனக்கருகில் மெலிதாக என்னை உரசியபடி உட்கார்ந்துகொண்டான். நான் எதுவும் பேசும் மனநிலையிலில்லை. அடகு வைப்பதற்குக்கூட தெரிந்தவர்கள் யாரேனும் வேண்டுமாம். எனக்கு இங்கு யாரையும் தெரியாது. தெரிந்துகொள்ளவில்லை.

    எதற்கு அங்கே உட்கார. அதுதான் எழுந்து வந்துவிட்டேன். எனக்கு அழவேண்டும்போலிருந்தது. வாய்விட்டு மனம்விட்டு அழவேண்டும். அதற்கு தனிமை வேண்டும். அதற்குக்கூட வழியில்லாமல் அருகில் வந்து உட்கார்ந்துகொண்டிருக்கிறான் எவனோ ஒருவன். எனக்கு எல்லையில்லாத கோபம் வந்தது.

    “என்ன பிரச்சனை உனக்கு”? என்றான்.

    “அத தெரிஞ்சு நீங்க என்ன செய்யப்போறீங்க ? போங்க சார். உங்க வேலையப்பாருங்க”

    “ஏன் இவ்ளோ வெறுப்பா பேசுற”?

    எனக்கு வந்த ஆத்திரத்திற்கு அளவேயில்லை. என் பாக்கெட்டிலிருந்த பேப்பர் சுருளை எடுத்து அவனிடம் காண்பித்தேன்.

    “இது என்ன தெரியுமா ? என் பொன்டாட்டி தாலி. இதான் என் வீட்ல இருந்த கடைசீ தங்கம். இத அடகு வச்சா ரெண்டாயிரம் ரூவா கெடைக்கும். அதவச்சுத்தான் ஒருத்தனுக்கு வட்டி கட்டணும். அப்பவும் பத்தாது. புள்ளைக்கி பால்பணம் கட்டாம ரெண்டிநாளா நிப்பாட்டிட்டான். ஊட்ல அரிசி காலி. இதான் என் நெலமை. கோவப்படாம?”

    “புரியுது”…

    “என்ன புரியுது ? அதெல்லாம் ஒன்னும் புரியாது. வார்த்தையா புரியறது இல்ல. வாழ்க்கை புரியணும்” என்றபடி பாக்கெட்டில் அணைத்துவைத்திருந்த பாதி சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டேன். அவன் என்னையே புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

    “உனக்கு ஒரு கதை சொல்றேன்” என்றவனை சற்றே அசூசையாகப் பார்த்தேன். யாரிவன் ? எதற்காக என்னுடன் வந்து உட்கார்ந்துகொண்டிருக்கிறான் ? என்றெல்லாம் யோசித்தபடி சிகரெட்டை இழுத்தபடியிருந்தேன்.

    “என்ன கதைவிடப்போறீங்க?”

    “தண்ணீரில் தத்தளிப்பவன் கதை”

    நான் என் மொபைலை எடுத்துப்பார்த்தேன். இன்னும் நேரமிருக்கிறது. அவன் சொல்லும் கதையைக் கேட்க பெரிதாக ஆர்வமில்லை எனக்கு.

    “ஒன்னு சொல்றேன் கோவிச்சுக்காதீங்க பாஸு. நீங்க சாப்ட்டீங்கன்னு நெனைக்கிறேன். நா இன்னும் சாப்பிடல. வீட்ல அரிசிக்கிக்கூட வழியில்ல. கதை கேக்கணும்னாகூட காதுல பசியடைஞ்சிருக்கும்போது சாத்தியமில்ல”

    “நீ மொத உன் பிரச்சனைகளை சரியா பார்க்கக் கத்துக்கோ. என்னமோ உனக்கு மட்டுந்தான் உலகத்துல பிரச்சனை இருக்கிற மாதிரி?”

    “ஹஹ்ஹ்ஹ்ஹா நா அப்டீன்னு சொன்னனா உங்ககிட்ட ? ஒடனே அட்வைசுக்கி கெளம்பிருவீங்களே”

    “அட்வைஸ்ங்கிறதை ஏன் தப்பா நெனைக்கிற ? அது தகவல்கள்தான். அதோட அடிப்படைல இருக்கிறதுகூட அன்புதான்”

    நான் சிகரெட்டினை முழுதாக இழுத்து வீசியெறிந்துவிட்டு ஒரு கொட்டாவி விட்டேன்.

    “இந்த உலகத்துல எல்லாருக்குமே பிரச்சனைகளும் வருத்தங்களும் இருக்கத்தான் செய்யுது”

    “பாஸ் பாஸ்.. போதும் நிறுத்திக்கங்க. நானே மூச்சுவிடாம மூனுமணிநேரம் பாஸிட்டிவ் ஆட்டிட்யூட் பத்திப் பேசுவேன். பிராக்டிக்கலா செட்டாவற மாதிரி எதாவது இருந்தா சொல்லுங்க. இல்ல கெளம்புங்க”

    அவன் இப்போது விசித்திரமான ஒரு காரியம் செய்தான். சட்டென்று தான் கட்டியிருந்த லுங்கியை விலக்கி தன் இடதுகாலை காட்டினான். அங்கே தொடைக்குக்கீழே மரக்கால் இருந்ததைப்பார்த்து மிரண்டுவிட்டேன்.

    “என்னாச்சு” ? என்றேன் அவனிடம்.

    “கார்கில் வார்ல ஒரு தோட்டா பாஞ்சிருச்சி மொழங்கால்ல. ரிமூவ் பண்ணமுடியாம உள்ளயே இருந்து கொஞ்சகொஞ்சமா அரிச்சு முழு காலையும் எடுக்கவேண்டியதா போயிடுச்சி”

    சட்டென்று எனக்கு அவன் மீது ஒரு பரிவும் மரியாதையும் வந்தது. அவனை நன்றாகக் கவனித்தேன். ஷேவ் செய்யப்படாத நரைமீசை தாடி முகம். மெலிதாக தலையில் வழுக்கைத்தொடங்கியிருந்தது.

    “காலை எடுத்தது தெரிஞ்சப்ப எனக்கிருந்த மனநிலை கொடுமை. என் கர்னல் ஒருத்தரு. ஹிந்திக்காரரு. அவருதான் என்னை மீட்டுக் கொண்டுவந்தாரு”

    நான் அமைதியாக இருந்தேன்.

    “ஒலகத்துல தீராத பிரச்சனைன்னு ஒன்னு இல்லவேயில்ல. சிலதுக்கு கொஞ்சம் டைமெடுக்கும் அவ்ளோதான். தேவையெல்லாம் பொறுமையும் காத்திருப்பும்தான்”

    “ஹஹ்ஹ்ஹா அந்த டைம் நம்மகிட்ட இல்லைன்றதுதான் பிரதர் பஞ்சாயத்தே”

    இப்போது அவன் சிரித்தான்.

    “தி டைம் இஸ் அன் இல்யூஷன். இட்ஸ் ஆல்வேஸ் டிப்பென்டிங் ஆன் அவர் விஷன். நாம இருக்குறவரைதான் நமக்கான டைமும் இருக்கும். டைமை உருவாக்குறதும் அழிக்கிறதும்கூட நம்ம கைலதான் இருக்குன்றது நமக்கு தெரியாததுதான் பிரச்சனை. பொறுமைதான் இல்ல நம்மகிட்ட”

    “இன்னும் அரைமணி நேரத்துல என் கடன்காரன் வீட்டுக்கு வந்துருவான் வட்டிப்பணம் வாங்க. பொறுமை எனக்கிருந்து என்னா செய்ய ? அவுருக்கு இல்லியே?”

    “சும்மா கடன் குடுத்தவன் மேல பழிபோடாத. ஒன்னு: எந்த கடன்காரனும் நம்மளை வற்புறுத்தி நமக்கு கடன் தரதில்ல. ரெண்டு: அவன் சொல்ற தவணைக்கு முன்னாடி நிச்சயம் அவன் நம்மளை தொந்திரவு தரதும் இல்ல. நாம லேட் பண்ணிட்டு அவங்களை திட்டி என்ன செய்ய?”

    எனக்கு அவன் லாஜிக்கில் இருந்த நியாயம் புரிந்தது.

    “உன் தேவைக்கு நீ கடன் வாங்குற. உன்னால திருப்பமுடியுமா முடியாதான்னு நீதான் யோசிச்சிருக்கனும். உன்னால முடியாமப்போனதுக்கு கடன் குடுத்தவன் என்ன செய்வான்”?

    “ஆமாம் பாஸு. பொண்டாட்டிக்கி ஒடம்புக்கு முடியாம ஆப்பிரேஷனுக்கு படுத்திருக்குறப்ப, நமக்கு திருப்பித்தரமுடியுமான்னா யோசிக்கமுடியும்? இல்ல செலவுகள் எல்லாம் நம்மகிட்ட சொல்லிட்டுத்தான் வருதா?”

    “பாரேன் மறுபடி இப்ப சூழ்நிலைமேல பழிபோடுற. இதையெல்லாம் நீதானே முன் கூட்டியோசனை பண்ணி சேமிச்சு வச்சிருக்கனும். வாழ்க்கையப்பத்தின சரியான திட்டமிடலோ, வாழ்வதற்கான புத்திசாலித்தனமோ வளத்துக்காம யாரையாவது எதையாவது பிளேம் பண்ணியே வாழப் பழகிட்டோம்”

    ஒருவகையில் அவன் சொன்னது உண்மை. அலட்சியமாகவே வாழ்க்கையை எதிர்கொண்டது என் பிழைதான்.

    “உனக்கு இருக்குற பிரச்சனைகள் தீரவே தீராதுன்னு இல்ல. அது தீரதுக்கு கொஞ்சம் டைமெடுக்கும். அதுக்கு நீ புத்திசாலித்தனமா யோசிச்சாலே போதும். கோடிக்கோடியா கடன் வச்சிகிட்டு சிரிச்சுக்கிட்டே சுத்துறவங்க பலபேர் இருக்காங்க நாட்ல. மொத, பிரச்சனைகளை சரியாப் பாரு. அந்த வளையத்துல இருந்து எப்டி வெளிய வரலாம்னு யோசி. நியாமா நேர்மையா குறுக்கு வழியில்லாம நடக்குறது லேட்டாகத்தான் செய்யும். ஆனா கண்டிப்பா ஒருநாள் கரைசேரலாம். காத்திருக்கனும். ரொம்ப பொறுமையா காத்திருக்கனும்.”

    எனக்கு தலையை தண்ணீருக்குள் முக்கிமுக்கி எடுப்பதுபோலிருந்தது. தலையை உதறிக்கொண்டேன்.

    “ஒருத்தன் தண்ணீயில தத்தளிச்சிக்கிட்டிருந்தான். அந்த பக்கமா பரிசல்ல போயிட்டிருந்தாரு கடவுள். கடவுளை பார்த்ததும் அவன் சத்தமா கத்த ஆரம்பிச்சுட்டான். யோவ் கடவுளே. நா இங்க சாவக்கெடக்கேன் கண்ணுக்கு தெரியலையான்னு கேட்டான். கடவுள் சிரிச்சுக்கிட்டே,

    “மொத நீ எப்புடி இங்க வந்து மாட்டிக்கிட்ட?” என்றார்.

    “யோவ் அதெல்லாம் எனக்கு ஞாபகமில்ல. அதுக்கு நேரமுமில்ல. எப்டியாச்சும் என்னியக் காப்பாத்து”

    கடவுள் மறுபடி சிரித்தார்.

    “யோவ் சிரிக்காதய்யா. எனக்கு நீச்சல்கூடத் தெரியாது. ப்ளீஸ் கொஞ்சம் கைதூக்கிவிடு”

    “நீ மொத எந்திரிச்சு நில்லு” அப்டீன்னாரு கடவுள்.

    “யோவ் லூசாய்யா நீ ? தண்ணி ஆழம்யா. நின்னா முழுகிருவேன்”

    கடவுள் கேவலமான ஒரு வசவு வார்த்தையை அவன்திசையில் வீசினார்.

    “எந்திரிச்சு நில்லு. அதான் ஒரே வழி” அப்டின்னு சொல்லிட்டு துடுப்பை போட்டு நவுந்து போயிட்டாரு. அவன் கடவுளை கன்னாப்பின்னான்னு திட்டினான். இனிமே உன்னை கும்பிடுறனா பாருன்னு சபதம் எடுத்துக்கிட்டான்.

    கை கால் எல்லாம் பயங்கரமா டயர்டாயிருச்சி அவனுக்கு. மூக்கு வாயெல்லாம் தண்ணி பூந்திடுச்சி. கிட்டத்தட்ட தான் சாகப்போறம்னு அவனுக்கு தெரிஞ்சிருச்சி. செத்துபோன தாத்தா பாட்டியெல்லாம் கண்ணுக்கு தெரிஞ்சாங்க. சுத்திலும் பார்த்தான் ஒரு காக்கா குருவிகூட இல்ல. ரொம்ப நொந்துபோயி அழ ஆரம்பிச்சான். டக்குன்னு என்னமோ தோனுச்சி அவனுக்கு. கடவுள் சொன்ன மாதிரி எந்திரிச்சு நின்னுதான் பார்ப்பமேன்னு காலை தரையில ஊனி முயற்சி பண்ணான். காலுக்கு கீழ மண்ணு வழவழன்னுச்சு. இப்ப தண்ணி அவன் கழுத்துவரை இருந்துச்சி. அப்பத்தான் அவன் யோசிச்சான், அட மடப்பயலே இத்தனைநேரம் ஆழமில்லாத தண்ணியிலயா தத்தளிச்சு அழுது ஒப்பாரி வச்சம்னு சிரிப்பு வந்திடுச்சி அவனுக்கு. நடந்து கரையேறிப்போயிட்டான்”

    நான் கதை சொன்னவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு இதுமாதிரி நிறைய நம்பிக்கை கதைகள் முன்பே கேட்டிருந்தாலும், இது கொஞ்சம் தெம்பாகத்தான் இருந்தது.

    “நம்ம பிரச்சனைகள் எல்லாமே இப்டித்தான். நாம எந்திரிச்சி நிக்கிறவரை தத்தளிப்பாத்தான் இருக்கும். போயி எல்லா பிரச்சனைகளையும் எப்புடி சமாளிக்கலாம்னு யோசி” என்ற படி அவன் எழுந்துகொண்டான். பிறகு ஒருபக்கமாக சாய்ந்துகொண்டபடி நடக்கத்தொடங்கினான்.

    “பாஸு உங்க பேரு”?

    “கடவுள்னு வச்சிக்கயேன்” என்றபடி அவன் திரும்பி என்னைப்பார்த்துச் சிரித்தான்.

    நானும்தான்.

    Share
  • சீரியல்

    –மாதவன் ஸ்ரீரங்கம்.

    ராஜேஸ்வரி அதிர்ந்துபோய் கிடந்தாள். கட்டிலின் சுருக்கமற்ற மெத்தையை அவள் கண்ணீர் ஈரமாக்கியது. சாத்தப்படிருந்த படுக்கையறையினை கடந்தும் ஹாலில் ஓடிக்கொண்டிருந்த சீரியலின் சப்தம் கேட்டது. டிரஸ்ஸிங் டேபிளில் வைத்திருந்த தம்ளரில் ஆடைகட்டிக்கிடந்தது பால். அவள் இதை எதிர்பார்க்கவேயில்லை. என்னதான் காதலித்து திருமணம் செய்துவந்திருந்தாலும் அவள் தன் மாமியாரை பெற்ற தாய்போலத்தான் பாவித்து பிரியமாக இருந்தாள். ஆனால் தன் மாமியார் இப்படியொரு காரியம் செய்வாளென்று அவள் நினைத்துக்கூட பார்த்ததில்லை.

    இத்தனைக்கும் அவள் வெறுங்கையுடன் இந்த வீட்டிற்கு மருமகளாகவில்லை. தன் ரியல் எஸ்டேட் தந்தை முதலில் எதிர்த்தாலும்கூட சுரேஷ் ஒரு வங்கி அதிகாரியாக நல்ல வேலையில் எல்லாம் இருக்கிறான் என்று தெரிந்தபிறகு முழுதாக சம்மதித்து அட்டகாசமாக நகைநட்டுகள் எல்லாம் போட்டு பிரமாதமாக திருமணம் செய்துவைத்திருந்தார். எல்லாம் தன் தலைவிதி என்று நொந்துகொண்டாள் ராஜேஸ்வரி.

    ஆரம்பத்திலிருந்தே மாமியார் கற்பகத்திற்கு தன்னை ஏன் பிடிக்காமல் போயிற்று என்று யோசித்து நிரம்ப சலித்துவிட்டாள். சுரேஷ்தான் சொன்னான். கற்பகத்தின் அண்ணன் மகள் ரேவதியை சுரேஷுக்கு மணமுடிப்பதாக சிறுவயதிலிருந்தே முடிவு செய்திருக்கிறாள், ஆனால் சுரேஷின் கல்லூரியில் தேவதைபோல ராஜேஸ்வரி வரவும் சுரேஷ் காதல்கொண்டு அவளைத்தான் மணப்பேன் என்று கற்பகத்திடம் சத்தியாகிரகம் செய்யவும் வேறு வழியின்றி ராஜேஸ்வரியை கட்டிவைத்தாள்.

    அன்றிலிருந்தே கொடுமைதான். சிறுவயதிலேயே தாயை இழந்த ராஜேஸ்வரி கற்பகத்தின் கொடுமைகள் எல்லாவற்றையும் மவுனமாக பொறுத்துக்கொண்டு சிரித்தபடி நடமாடினாள். சுரேஷிடம் ஒரு வார்த்தைகூட மாமியாரைப்பற்றிக் குற்றம் சொன்னதில்லை. என்றேனும் ஒருநாள் தன் உள்ளன்பைப் புரிந்து ஏற்றுக்கொள்வாள் என்று மனதார நம்பினாள். ஆனால் இன்று இப்போது அவள் மாமியார் செய்திருக்கும் காரியம் ராஜேஸ்வரியின் நம்பிக்கைகளை சுக்குநூறாக உடைத்துவிட்டது.

    எப்பேர்ப்பட்டவரும் ஒரு பெண்ணுக்கு செய்யத்தயங்கும் ஒரு கொடுஞ்செயலை கற்பகம் தன் மருமகளுக்கு செய்துவிட்டாள். ஆமாம் அவள் கருவை கலைப்பதற்கான மருந்தை பாலில் கலந்து கொடுத்திருக்கிறாள். எப்போதுமில்லாமல் இன்று வெகு அதிசயமாக தன்னுடன் சிரித்துப்பேசியபோதே அவள் யூகித்திருக்கவேண்டும். அவள்தான் அன்புமயமானவளாயிற்றே. நல்லவேளையாக வேலைக்காரப்பெண் செண்பகம் மட்டும் விஷயத்தை சொல்லாமலிருந்தால் அந்த பாலை அவள் இன்னேரம் குடித்திருப்பாள்.

    அவளால் சமாதானமே செய்துகொள்ள முடியவில்லை. என்ன இருந்தாலும் அவள் பெற்ற பிள்ளையின் கருவை அல்லவா சுமந்துகொண்டிருக்கிறாள். எப்படி தன் பேரக்குழந்தையை தன் கையாலேயே கொல்லத்துணிந்தாள். கேள்விகள் ராஜேஸ்வரியின் உடலெங்கும் ஊசியாகக் குத்தித்துளைத்தன. ஒரு முடிவிற்கு வந்தவளாக அவள் படுக்கையிலிருந்து மெல்ல எழுந்துகொண்டாள். சீரியல் பார்த்துக்கொண்டிருந்த கற்பகம் ராஜேஸ்வரியையே புருவம் சுருங்க பார்த்துக்கொண்டிருந்தாள்.

    *************************************

    “கட் கட் கட் கட்” என்று திவாகர் சொன்னதும் கேமராவும், எரிந்துகொண்டிருந்த ஃபோகஸ் விளக்குகளும் அணைந்தன. ராஜேஸ்வரியாக நடித்த அந்தப்பெண்ணும் மாமியார் கற்பகமும் வாய்விட்டு சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார்கள். கேமராமேனுடன் மானிட்டரில் எடுத்த காட்சிகளை சரிபார்த்துக்கொண்டிருந்தான் திவாகர். பக்கத்தில் நெருங்கிய ராஜேஸ்வரி திவாகரிடம் சொன்னாள்.

    “திவா சார், நெக்ஸ்ட் வீக் சுந்தர் சார் படத்துக்கு கால்ஷீட் குடுத்துருக்கேன் சார். கொஞ்சம் பார்த்து அட்ஜஸ்ட் பண்ணிக்குடுங்க சார்”

    “எத்தன நாள்மா”?

    “பத்துநாள்னுதான் சொல்லிருக்காங்க. அப்டியே அத முடிச்சிட்டு கோவா டூர் பிளான் பண்ணிருக்காரு என் ஹஸ்பண்ட்”

    “என்னம்மா எப்டி அவ்ளோ நாள் சமாளிக்கிறது சொல்லுங்க. உங்க லாஸ்ட் வீக் டப்பிங்கெல்லாம் முடிச்சிட்டீங்களா”?

    “சார் எல்லாத்தையும் முடிச்சிட்டேன். இன்னிக்கி எடுத்தது மட்டுந்தான் பென்டிங்”

    திவாகர் அரைமனதாக சம்மதித்தான். அது ஒன்றும் அவனுக்கு பிரச்சனையில்லை. அவள் வரும்வரை அவள் சம்பந்தப்பட்ட டிராக்கை விட்டு மற்ற டிராக்குகளை காட்டி சமாளித்திக்கொள்ளலாம். ஆர்டியன்ஸின் எதிர்பார்ப்பும் கொஞ்சம் கூடும். அவள் நகர்ந்தபின்பு டையலாக் ரைட்டருக்கு போன் செய்தான். சற்றுமுன் எடுத்த காட்சிகளின் சில வசனங்களில் மாற்றம் செய்யவேண்டியவை குறித்து பேசியபின்புதான் நண்பன் ராகுல் காத்திருப்பதே அவன் நினைவிற்கு வந்தது. எல்லோருக்கும் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துவிட்டு ராகுலை அழைத்துக்கொண்டு தன் ஆல்ட்டோவில் ஏறி ஸ்டார்ட் செய்தான்.

    “சாரி மச்சி ரொம்ப வெயிட் பண்ணவச்சிட்டனா”?

    “அதெல்லாம் பரவால்ல. மூவி டைரக்ட் பண்றேன்னு ஊர்லருந்து வந்திட்டு சீரியல் பண்ணிட்ருக்க”?

    “பத்து வருஷம் நாயாப்பேயா அலைஞ்சாச்சு மச்சி. கைவசம் நூறு ஸ்கிரிப்டு வச்சிருக்கேன். பத்துகோடி தொடங்கி ஆயிரம் கோடி பட்ஜட் வரை கதையிருக்கு. பேஜிலரா இருந்தவரை தெரியல. கல்யாணம் புள்ளகுட்டிங்க எல்லாம் வேற ஆயிருச்சி. பொழைச்சாகணுமே. பார்ப்போம். நெறைய கான்டாக்ட் இருக்கு. அப்பப்ப புரொடியூசர்ஸையும் பார்த்துகிட்டுத்தான் இருக்கேன்”

    ராகுல் மவுனமாக ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடியிருந்தான்.

    “ஆமா நீ என்ன செய்யிற? காலேஜ் முடிஞ்சப்புறம் ஆளு அட்ரஸேயில்ல? கார்த்திகிட்டதான் அப்பப்ப பொலம்புவேன். பரதேசி ஒருவார்த்தைகூட சொல்லாம அப்ஸ்கான்டாயிட்டானேன்னு”

    “அவங்கிட்டதான் மச்சி நம்பர் வாங்குனேன். நடுல நெறைய பிரச்சனைங்க. அப்பா ஏகப்பட்ட கடனை வச்சிட்டு செத்துட்டாரு. கனடால சொந்தக்காரர் ஒருத்தரு ஏகப்பட்ட பிஸ்னஸ், கூட ஒத்தாசையா இருன்னு கூப்பிடவும் ஓடிட்டேன். கல்யாணங்கூட பண்ணிக்கல. இப்பக்கூட அவுரோட பிராப்பர்ட்டி டீலிங் ஒன்னு முடிக்கத்தான் வந்தேன். அன்னிக்கி கார்த்திய எதேச்சையா மால்ல பாத்தப்பதான் உன்னப்பத்தி சொன்னான். ரெண்டுநாள்ல ரிட்டர்ன் ஆவுறேன்”

    “பட் செம்ம ஹேப்பிடா எனக்கு உன்ன பார்த்ததுல. இந்தப்பக்கம் வர ஐடியா இருக்கா இல்ல அங்கயே செட்டிலா”?

    “வரணும்டா. வந்து என்ன செய்யன்னுதான் யோசிக்கிறேன்”

    “போடா லூஸு. எக்கச்சக்க வழிகள் இருக்கு பொழைக்க. அட எதுமே இல்லாட்டி என் சீரியலுக்கு வந்துரு” என்று கண்ணடித்தான் திவாகர்.

    “ஹஹ்ஹ்ஹா கோவிச்சுக்காத மச்சி. ஜனங்களை முட்டாள்தனமா அடிமையாக்குற சோசியல் பொல்யூஷன் சமாச்சாரம்டா சீரியல்”

    திவாவிற்கு சுருக்கென்றது.

    “தப்பா புரிஞ்சிகிட்ட மச்சி. சீரியல் ஒரு அவுட்லெட். வீட்லயே சமைச்சி தொவச்சி நொந்துபோயிருக்கிற லேடிஸுக்கு பெரிய ரிலாக்ஸ்ட். அவ்ளோ ஏன், முன்ன மாதிரி மாமியார் மருமக சண்டைலாம் பேப்பர்ல வருதா இப்பல்லாம் ? ஏன்னா அவங்க சீரியலை ஒன்னா சேர்ந்து பார்த்து பிரன்ட்ஸ் ஆயிட்டாங்கடா” என்று வாய்விட்டுச்சிரித்தான்.

    “அப்டியில்ல மச்சி. ஒருத்தரை ஒருத்தர் எப்புடி எவிடன்ஸ் இல்லாம கொல்றதுன்னு சீரியல் பார்த்து தெளிவாயிருப்பாங்க” என்று ராகுலும் சிரித்தான்.

    *************************************

    வித்யாவின் கண்ணீர் எழுத்துக்கள்மீது விழுந்தது. ஜன்னல் திரைகள் காற்றிலாட கப்போர்டு மூலையில் ராஜேஸ்வரியும் அழுதுகொண்டிருந்தாள்.

    “இப்பவாச்சும் நீ நம்புறியா விது”?

    வித்யாவால் பேசமுடியவில்லை. அழுகை முட்டிக்கொண்டுவந்தது. கதவை திறந்துகொண்டு கற்பகம் உள்ளே வந்தாள். அக்காவின் மாமியார். அவள் முகம் சோகமாக இருந்தது. வித்யா அழுவதை பார்த்து அவள் தோளில் ஆறுதலாக கைவைத்தாள்.

    “விடு கண்ணு. இனி அழுது என்ன பண்றதுசொல்லு. செத்துப்போன உன் அக்கா திரும்பி உயிரோட வரவாபோறா” என்றாள்.

    வித்யாவிற்கு இப்போதே அந்த பெண்மணியை கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டால் என்னவென்று தோன்றியது. அறைமூலையில் அவள் அக்கா ராஜேஸ்வரி தன் மாமியாரையே எரிப்பது போல பார்த்துக்கொண்டிருந்தாள். வித்யா பதில்பேசாமல் அக்காவின் டைரியுடன் அறையிலிருந்து வெளியேறினாள். கதவை சாத்திக்கொண்டு கற்பகமும் பின்தொடர, ஹாலில் சுரேஷ் யாருடனோ போனில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான்.

    “அதெல்லாம் இப்ப அப்டித்தான் பேசுவ ரேவதி. கல்யாணத்துக்கப்புறம் நீ எப்டின்னு பார்க்கத்தான போறேன்”.

    வித்யாவை கண்டதும் போனை கட்செய்துவிட்டு முகத்தை சோகமாக்கிக்கொண்டான். கற்பகம் கிச்சனுக்குள் செல்ல சுரேஷும் வித்யாவும் தனிமையிலிருக்கும்போது சுரேஷ் சொன்னான்.

    “எனக்கு உண்மையில இஷ்டமேயில்ல வித்யா. அம்மாதான் பாவம் ரொம்ப பிடிவாதம் பண்றாங்க. அவங்களுக்கும் பாவம் வயசாவுதுல்ல. அதான் ஒத்துக்கிட்டேன்”

    வித்யா அமைதியாக இருந்தாள். பொண்டாட்டி செத்தா புதுமாப்பிள்ளை என்னும் பழமொழி அவளுக்கு நினைவுக்கு வந்தது. எத்தனை சுலபமாக இருக்கிறது இவர்களுக்கு. இவர்கள் வீட்டு பெண்ணாக இருந்தால் இப்படி இருப்பார்களா ? இத்தனைக்கும் அக்கா இறந்து ஆறுமாதம்கூட முழுதாய் ஆகவில்லை.

    ராஜேஸ்வரி அவர்களுக்கு அருகே வந்து சோபாவில் உட்கார்ந்துகொண்டு சுரேஷையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் என்ன யோசிப்பாள் என்பதை வித்யாவால் புரிந்துகொள்ளமுடிந்தது. சிலகாலமாக கனவிலும் நேரிலுமாக அக்கா வந்தபோதெல்லாம் தன்னுடைய பிரமை என்றுதான் நினைத்திருந்தாள்.

    “இன்னும் என்னால நம்பவே முடியல வித்யா. அபார்ஷன் ஆனா செத்துக்கூடவா போயிடுவாங்க? ராஜி பாத்ரூம்ல வழுக்கி விழுந்து அபார்ட் ஆயிடுச்சின்னு அம்மா சொன்னப்ப எப்புடி பதறிப்போயிட்டேன் தெரியுமா? ப்ச்… நா வந்து ஆம்புலன்ஸுக்கு சொல்லி ஆஸ்பிடல் போறதுக்குள்ளயே பிளீடிங் ஜாஸ்தியாகி”…

    சுரேஷ் இப்போது நிஜமாகவே அழுதான். ஆனால் அதில்கூட நடிப்பு இருக்குமோ என்றுதான் வித்யாவிற்கு தோன்றியது. ராஜேஸ்வரியும் சுரேஷ் அருகே நின்று மூக்குறிஞ்சிக்கொண்டிருந்தாள்.வித்யா அங்கிருந்து கிளம்பிவிட்டாள். வாசல் கேட் வரை வந்த ராஜேஸ்வரி வித்யாவை பாவமாக பார்த்தாள்.

    “நீ கவலைப்படாதக்கா. நா இவங்களை சும்மாவிடமாட்டேன்” என்றபடி நடக்கத்துவங்கினாள்.

    *************************************

    “சே கட்டைலபோறவன். கரெக்டா இன்ட்ரஸ்டான எடத்துல வந்து தொடரும் போட்டுடறான் கடங்காரன்” என்றபடி எழுந்துகொண்டாள் பார்வதி. ரிமோட்டை அழுத்தி டீவியை அணைத்துவிட்டு பக்கத்து அறையை பார்த்தாள் சாத்தியிருந்தது. மருமகள் தலைவலியென்று படுத்துக்கொண்டிருந்தாள். செல் போன் ஒலித்தது. மதுரையிலிருந்து அண்ணி கோமதிதான்.

    “ஆங் சொல்லுங்கண்ணி”

    “—————————- “

    “ஆங் ஆச்சு. ஆமாமா நல்ல கட்டத்துல நிப்பாட்டிட்டான் பாருங்க”

    “—————————- “

    “தம்பி வேலைக்கி போயிட்டான்”

    “—————————— “

    “ம்ம்ம்ம்….. இருக்கா இருக்கா. உள்ளதான் படுத்திருக்கா”

    “——————————“

    “அட நாந்தான் சொல்றேன்னு சொன்னேன்ல”?

    “——————————– “

    “நேத்து மூலிகைக்கடைக்கி போயிருந்தேன்”

    “——————————— “

    “சும்மா தருவானா ? நாலு பொம்பளைப்புள்ளைங்க இருக்குண்ணே… அப்டின்னு கண்லதண்ணிவிட்டப்பறம் தான் குடுத்தான்”

    “——————————— “

    “ஆமாமா பால்லதான் கலந்து தரணும்”

    “———————————— “

    “அதெல்லாம் கவலைப்படாத நாம்பாத்துக்குறேன். உன் மருமகனைப்பத்தி உனக்கு தெரியாதா”?

    “———————————— “

    “ஒருநிமிஷம் இருங்கண்ணி” என்று போனை அடைத்துக்கொண்டு வேலைக்காரப்பெண்ணிடம் கேட்டாள்.

    “இங்க என்ன செய்யிற ? நாந்தான் உன்ன போயிட்டு சாயந்திரமா வரச்சொன்னன்ல”?

    “இல்லங்கம்மா அப்பாக்கு ஒடம்புக்கு முடியல. டாக்டர்கிட்ட கூட்டிப்போவணும். ஒரு முன்னூறுவா குடுத்திங்கன்னா சம்பளத்தில கழிச்சிக்கலாம்”

    பார்வதி மெல்ல நடந்து ஷோகேஸ் மேலிருந்த தன் ஹேண்ட் பேகிலிருந்து காசு எடுத்துக்கொண்டுவந்து கொடுக்க அந்த பெண் நகர்தாள். மறுபடி போன் பேசத்தொடங்கினாள் பார்வதி.

    “————————————– “

    “இல்லயில்ல. குயிலிதான்”

    “————————————- “

    “என்னமோ அவங்கப்பாக்கு முடிலயாம். காசு கேட்டா”

    “————————————– “

    “ஆமாமா என்ன பண்றது. வந்ததுலயே இவமட்டுந்தான் பரவால்லாம இருக்கா. ச்சே… ச்சே… அதெல்லாம் கெடையாது. கைசுத்தம் வாய்சுத்தம்”

    “————————————— “

    “ஆதார் அட்டையா ? ஆங் வாங்கியாச்சே”

    “————————————- “

    “தெரில தம்பிதான் கூட்டிட்டுப்போனான்”

    “———————————– “

    “தெரியலியே அண்ணி”

    “———————————- “

    “சரி பாருங்க. நான் எல்லாத்தையும் முடிச்சிட்டு சொல்றேன்”

    “————————————- “

    “வேணாம். இதப்பத்திலாம் உன் பொண்ணுகிட்ட எதும் சொல்லவேனாம்”

    “—————————————- “

    “ஆமா அவ சின்னப்பொண்ணுதான”

    “—————————————– “

    “ஆங் சரி”

    “—————————————- “

    “சரி”

    “—————————————– “

    “வச்சிடறேன்” என்றபடி பார்வதி கிச்சனை நோக்கி நகர்ந்தாள்.

    முழுவதும் படித்தபின்பு …

    “நல்லாயிருக்கு தம்பி. இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணி கொண்டுவாங்க. அடுத்த பிராஜகட் உங்களோடதுதான்” என்றார் சிபிச்செல்வன்.

    திவாகருக்கு சந்தோஷத்தில் படபடத்து வந்தது. இப்போதே சென்று வித்யாவிடம் இதைப்பற்றிச் சொல்லவேண்டுமென நினைத்துக்கொண்டான். அவள்தான் இந்த யோசனையையே சொன்னவள். சினிமா சினிமா என்று புரொடியூசர்களாக தேடி அலைந்துகொண்டிருந்தவனை, “பேசாம சீரியல் ட்ரை பண்ணேன் திவா” என்று உற்சாகப்படுத்தியவள். ஐடியாவுடன் கூடவே ஒரு கதையும் கொடுப்பாள் என்று அவன் நினைக்கவேயில்லை. அதை தன் ஸ்டைலில் அழகாக மாடிஃபை செய்து டீவி நிறுவனத்திடம் காட்ட இதோ உடனே சம்மதித்துவிட்டார்.

    வெளியில் வந்து வித்யாவிடம் செல்பேசினான். அவள் குரலிலேயே எத்தனை மகிழ்ச்சி என்பதை புரிந்துகொள்ள முடிந்தது திவாகரால். இது நல்ல ஓப்பனிங். இதில் கிடைக்கும் நற்பெயரும் தொடர்புகளும் தன் சினிமா சம்பந்தமான எதிர்காலத்திற்கு உதவும் என்று கணக்குப்போட்டான்.

    *************************************

    ராஜேஸ்வரி ஒரு முடிவிற்கு வந்தவளாக எழுந்து ஃபோன்பேசினாள். பிறகு ஹாலுக்கு வந்து மாமியாரின் அருகே வந்து உட்கார்ந்துகொண்டாள். மாமியார் கற்பகம் அவளை சந்தேகத்துடன் பார்த்தாள்.

    “ஏங்கண்ணு பால் குடிச்சிட்டியா”?

    “இன்னும் இல்ல அத்தை. கொஞ்சம் கெஸ்ட் எல்லாம் வரேன்னிருக்காங்க. அதான் வெயிட் பண்றேன்”

    கற்பகம் ராஜேஸ்வரியையும் டீவியையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருக்க வாசலில் சுரேஷ் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே வந்தான்.

    “என்ன ராஜி எதுக்கு அர்ஜண்ட்டுன்னு சொல்லி வரச்சொன்ன”?

    மாமியாரின் குழப்பம் நிறைந்த பார்வையை தவிர்த்துவிட்டு சுரேஷிற்கு பதில் சொல்ல வாய்திறக்க வாசலில் இப்போது ஜீப் ஒன்று வந்து நின்றது. உள்ளே நுழைந்த மகளிர் காவலர்கள் கேட்டார்கள்.

    “யாரு இங்க ராஜேஸ்வரி”?

    “என்ன ராஜி என்ன பிரச்சனை போலிஸெல்லாம் வந்திருக்காங்க”? என்று சுரேஷ் கேட்க ராஜேஸ்வரி சொன்னாள்.

    “கொஞ்சம் பொறு சுரேஷ் விளக்கமா சொல்றேன்” என கூறிவிட்டு போலீஸ் பெண்மணியிடம் சென்றாள்.

    “சரி, அந்த பால்தம்ளர் எங்க”?

    ராஜேஸ்வரி படுக்கையறை சென்று அந்த பாலை கொண்டுவந்து கொடுக்க, அதை போலீஸ் பத்திரமாக ஒரு பாலித்தீன் கவரில் ஊற்றி எடுத்துக்கொண்டார்கள்.

    “நீங்க சாயந்திரமா ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கம்ப்ளைன்ட் எழுதிக்கிடுத்திருங்க ராஜேஸ்வரி” எனக்கூறிவிட்டு மாமியார் கற்பகத்தை கொடூரமாக ஒரு முறை முறைத்துவிட்டு சுரேஷிடம் வந்தாள்.

    “பாருங்க மிஸ்டர் சுரேஷ். உங்க மதர் இந்தப்பொண்ணோட கருவை கலைக்க இந்த பால்ல எதோ மருந்து கலந்திருக்காங்க. நாங்க இதை லேபுக்கு கொண்டுபோறோம். டெஸ்ட்ல அது உண்மைனு ரிசல்ட் வந்தா அவங்களை, ஏன் தேவைப்பட்டா உங்களையுமே அரஸ்ட் பண்ணவேண்டியிருக்கும்” என்று சொல்லிவிட்டு வெளியேற,

    சுரேஷ் அதிர்ச்சியுடன் நின்றிருக்க கற்பகம் என்னென்னவோ சொல்லி அழுது புலம்பத்தொடங்கினாள்.

    *************************************

    “கட் கட் கட் கட்..” என்றான் திவாகர்.

    கற்பகம் தன் கிளிஸரின் கண்களை துடைத்துக்கொண்டு செல்போனில் யாரிடமோ பேசத்தொடங்க, வித்யா திவாகர் அருகில் வந்தாள்.

    “நா நெனச்சமாதிரியே வந்துருக்கு திவா. தேங்ஸ்”

    “லூசு. சீரியலா எடுக்குறப்பவே நமக்கு இவ்ளோ கஷ்டமாயிருக்கு. உண்மையிலயே உங்கக்கா இப்டித்தான் இறந்துபோயிருக்காங்க. பாவம் அவங்களுக்கு எப்டி இருந்திருக்கும்”?

    “உண்மைதான் திவா. நா அதை நெனச்சு அழாத நாளில்ல. அந்த பொம்பள என் அக்கா புருஷன் எல்லாரும் ஆக்ஸிடன்ட்ல சாகறவைரைக்கும் நா தெனந்தெனம் தவிச்சிருக்கேன். கடவுளா பார்த்து நல்ல தண்டனை குடுத்துட்டாரு”

    “சரி விடும்மா அழாத. எனக்கு கொஞ்சம் டைமாவும். நீ வேணா ஒரு ஆட்டோ புடிச்சி வீட்டுக்கு கெளம்பிக்கிறியா”?

    “சரி திவா” என்றபடி வித்யா அங்கிருந்து நகர்ந்தபோது, ஷூட்டிங் ஹால் மூலையில் ராஜேஸ்வரி தன் வயிற்றைத்தடவியபடி அழுதுகொண்டிருந்தாள் யார் கண்ணுக்கும் தெரியாமல்.

    *************************************

    Share
  • கதையல்ல நிஜம் …

    –மாதவன் ஸ்ரீரங்கம்.

    டாக்டர் அவனை விசித்திரமாகப் பார்த்தார்.

    “என்ன பண்றீங்க?”

    “பேங்க்ல அக்கவுண்டன்ட்டா இருக்கேன் டாக்டர்”

    “எப்பயிருந்து இது மாதிரி தோணுது உங்களுக்கு?”

    “தோணலை டாக்டர். நடக்குது. சின்னச்சின்னதா நெறைய சம்பவங்கள். என்னோட வேலையை வச்சு ஒரு கதை எழுதினேன். அதாவது என் பேங்குல திடீர்னு ஒருநாள் ராத்திரி தீவிபத்து நடந்து எல்லா டாக்குமெண்ட்ஸும் எரிஞ்சுபோயிடற மாதிரி எழுதுனேன். நாலாவதுநாள் அதேமாதிரி தீவிபத்து நடந்தது. அப்பறம் இன்னொரு கதை எழுதினேன் டாக்டர். அதுல ஹீரோ பைக்ல வேலைக்கி போறப்ப பைக் ஆக்ஸிடன்ட் ஆகி வலதுகால்ல பிராக்சர் ஆகுற மாதிரி எழுதிருந்தேன். நாலாவதுநாள் நா கதைல எழுதியிருந்த அதே இடத்துல, அதே முறையில ஆக்ஸிடன்ட் ஆகி என் வலதுகால் பிராக்சர் ஆயிடுச்சி”

    டாக்டர் அமைதியாயிருந்தார். இதுபோல அவர் அதிகம் கேள்விப்பட்டதில்லை. இதை ஹாலூஸினேஷன் வகையிலும் சேர்க்கமுடியாது என்று தோன்றியது அவருக்கு. எங்காவது நாம் கதையாக எழுதுவதெல்லாம் யதார்த்தத்தில் நடக்குமா? நடக்கிறது என்கிறான் அவன்.

    “இல்ல. மொத நீங்க எப்பயிருந்து இதை கவனிக்க ஆரம்பிச்சீங்கன்னு சொல்லுங்க”

    “நாலு வருஷம் முந்தி நா ஒரு சிறுகதை எழுதுனேன் டாக்டர். ஒரு சின்னப்பொண்ணு மூடாத சாக்கடைக்குள்ள விழுந்து செத்துபோறதுதான் கரு. அதை எழுதி நாலாவது நாள் பக்கத்து வீட்டுப்பொண்ணு அதேமாதிரி செத்துடுச்சி”

    “இது நம்ம நாட்டோட சாபக்கேடுங்க. எத்தனை உசிருங்க. ஆனா இன்னும் அதே தப்பைத்தான் தொடர்ந்துட்டிருக்காங்க. இது பொதுவானதுதாங்க”

    “நானும் அப்டித்தான் நெனச்சிருந்தேன் டாக்டர். பட் அந்த புள்ளைய பார்க்க ஆஸ்பத்திரி போயிருந்தப்பதான் கவனிச்சேன். என் கதைல என்னவிதமா அந்த பொண்ணை வர்ணிச்சனோ அதேமாதிரி இருந்தது எப்படி டாக்டர்”?

    டாக்டர் யோசித்தார். “இது ஒன்னும் பெரிசில்ல… சிவ…”

    “சிவான்னே கூப்பிடலாம் சார்”

    “ஆங்.. சிவா. உங்க பக்கத்துவீடுன்னு சொல்றீங்க. அடிக்கடி பார்த்ததுல அந்த பொண்ணு உருவம் உங்களுக்குள்ள ஆழ்மனசுல பதிஞ்சிருக்கும். அதைத்தான் உங்க கதைல வர்ணிச்சிருக்க சான்ஸ் இருக்கு”

    “இதை நானும் யோசிச்சேன் சார். பட் செத்தப்ப அந்த பொண்ணு போட்ருந்த டிரஸ்கூட கதைல வர்ணிச்ச அதே டிரஸ்தான் சார். இதுக்கு என்ன விளக்கம் சொல்வீங்க”?

    டாக்டருக்கும் உண்மையாகவே சற்று குழப்பமாகத்தான் இருந்தது. இது சாத்தியமில்லை. ஆனால் அதை இவனுக்கு புரியவைக்கவேண்டும்.

    “சரி அதை விடுங்க. வேற சொல்லுங்க”

    “அடுத்தகதை ஒரு நாலுமாசம் கழிச்சு எழுதினேங்க. ஒரு பொண்ணும் பையனும் லவ் பண்றாங்க. வீட்ல ஒத்துக்கல. வீட்டைவிட்டு ஓடிப்போயிடறாங்க. ஒரு ஃபிரண்ட்டை தேடி போறாங்க. போன எடத்துல ஃபிரண்ட் ஊர்ல இல்ல. போன்ல தன்னோட ஃபிரண்ட் அட்ரஸ் குடுக்குறான். அவங்களும் அங்க போறாங்க. அவனும் கொஞ்சம் தயக்கத்தோட தங்க வைக்கிறான். மறுநாள் காலைல ரெண்டுபேரும் வீட்ல வெஷம் சாப்பிட்டு செத்துக்கெடக்காங்க”

    “சோ.. சேட்.. அப்பறம்?”

    “அவ்ளோதாங்க கதை”

    “அப்டியா. சோ சிம்பிள். இதுல என்ன பிரச்சனை?”

    “இல்ல டாக்டர். கதைல அந்த ஃபிரண்ட் தர அட்ரஸா நா எழுதிருந்தது என்னோட ஒரிஜினல் அட்ரஸ் சார்”

    டாக்டருக்கு சிரிப்பு வந்துவிட்டது. “சோ வாட்?”

    “சோ வாட்டா? சார் கதை எழுதுன நாலாவது நாள் உண்மையிலியே ஒரு பொண்ணும் பையனும் என் வீட்டுக்கு வந்துட்டாங்க சார். என் ஃபிரண்ட் போன் பண்ணி தங்க வச்சிக்க சொன்னான். நானும் மடத்தனமா ஒத்துகிட்டேன். காலைல அவங்க ரெண்டுபேரும் என்வீட்ல செத்துகெடக்காங்க”

    “ஓ மைகாட் !! அப்பறம் என்னாச்சு?”

    “அப்பறமென்னங்க. போலீசு கோர்ட்டுன்னு அலையா அலைஞ்சதுதான் மிச்சம். அப்பயிருந்துதான் எனக்கு டவுட்டு வர ஆரம்பிச்சுடுச்சி”

    டாக்டர் அவனையே ஆர்வமாக பார்த்துக்கொண்டிருக்க அவன் தொடர்ந்தான்.

    “சரி இதை டெஸ்ட் பண்ணிப்பார்த்துடலாம் அப்டீன்னு யோசிச்சிட்டிருந்தப்பதான் அடுத்த கதை எழுதுனேன். ஆனா வேற யாரையாச்சும் வச்சி எழுதினா உண்மையா பொய்யான்னு எப்டி தெரிஞ்சுக்கிறது? அதான் என்னையே ஹீரோவா வச்சு ஒரு கதை எழுதினேன்”

    “இன்ட்ரஸ்டிங் சிவா. பட் அது பெரிய ரிஸ்க் இல்லையா? இன்கேஸ் அது உண்மையாவே நடக்கும்பட்சத்தில ..?”

    “ஒரு வகைல அது ரிஸ்க்தான் டாக்டர். ஏன்னா நா எழுதுனது காதல் கதை. மர்டர் கதைக்கெல்லாம் நம்ம பாடி தாங்குமா டாக்டர். அதான் உசாரா காதல் கதை. ஆனா மர்டரே பரவாயில்லைன்ற அளவுக்கு டெரர் பண்ணிருச்சிங்க காதல்”

    டாக்டருக்கு இப்போது ஆர்வம் அதிகரித்திருந்தது. நல்லவேளையாக இரவின் இறுதி நோயாளியாக வந்தான். ஆனால் இவன் நோயாளிதானா? எல்லாவற்றையும் தெளிவாகத்தான் பேசுகிறான். என்றெல்லாம் உள்ளுக்குள் யோசித்தபடி காத்திருந்தார்.

    “ஒரு பொண்ணு டாக்டர். உங்களுக்கு புடிச்சமாதிரி யாரையாச்சும் கற்பனை செஞ்சுக்கங்க. அப்டி ஒரு பொண்ணு. ஒரு கல்யாண மண்டபத்துல சந்திக்கிறான் ஹீரோ. லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்னு சொல்வாங்களே. அதுதான் சார். ஒடம்பு மனசெல்லாம் தீயா எரியுது காதலால. அந்த பொண்ணுக்கும் அவனை புடிச்சிருக்குன்னு அப்பப்ப ஓரக்கண் பார்வை வச்சு புரிஞ்சுக்கிறான். ஆனா எப்டி பட்டுன்னு கேக்குறதுன்னு தயக்கம்.”

    வேற வழியில்லாம பல்லாயிரம் தாத்தாக்கள் காலத்துக்கு முந்தின டெக்னிக் ஒன்னை கையாளலாம்னு நெனச்சி அந்த பொண்ணுக்கு சின்ன பேப்பர்ல புடிச்சிருக்கா? அப்டின்னு எழுதி சின்னப்புள்ளை ஒன்னுகிட்ட குடுக்கலாம்னு யோசிச்சு ஒரு சின்னப்புள்ளைய கூப்பிடுறான். ஓடிவந்த அந்த புள்ள இவனுக்கு முன்னாடி ஒரு துண்டுபேப்பர இவன்கிட்ட குடுக்குது. பார்த்தா. இவன் நெனச்சதை அந்த பொண்ணு செஞ்சிட்டா”

    “சூப்பர் சிவா. அப்டியே மூவி பார்க்கிற மாதிரி இருக்கு. கன்டின்யு”

    “அப்பறம் என்னங்க. வழக்கம்போல பார்க் பீச் எல்லாம் சுத்தியடிச்சிட்டு. அப்டியே கழட்டி விட்ருக்கலாம். லூசு மாதிரி அவங்களுக்கு கல்யாணத்தை பண்ணி கதைய முடிச்சிட்டேன்”

    “ஏம்பா நல்ல முடிவுதானே. என்ன பிரச்சனை? அந்த பொண்ண உண்மையிலியே பாத்தியா?”

    “அட …ஏன் டாக்டர் நீங்க ஒண்னு. அது எல்லாமே அப்டியே நடந்துச்சிங்குறேன். கல்யாணத்துல மீட் பண்ணப்ப நா கதைல எழுதிருந்த அவ புடவை டிசைன்ல அப்டியே வந்து நிக்கிறா. எல்லாமே கதைப்படி நடந்து எனக்கு ஒய்ஃபா வீட்ல இருந்துகிட்டு உசிர வாங்குறா”

    “ஹஹ்ஹ்ஹ்ஹா”

    “நா எவ்ளோ சீரியஸா சொல்லிட்ருக்கேன். நீங்க என்ன சார் சிரிக்கிறீங்க?”

    “அதென்னமோ தெரியல சிவா. உங்க கதை கேட்டா அப்டி சிரிப்பு வருது எனக்கு. மேல சொல்லுங்க”

    “அப்பறம் நா யோசிச்சேன். இது வேலைக்காவாது அப்டின்னு கொஞ்சநாள் எழுதாம இருந்தேன். அப்பறம் என் ஒய்ஃப் தான். உங்களுக்கு நல்லா எழுத வருது. தொடர்ந்து எழுதுங்கன்னு என்கரேஜ் பண்ணா. சரின்னு நானும் எழுதுனேன். இந்த வாட்டி ரொம்ப வெவரமா நடிகர் டேஷ் ஸ்டார் என் வீட்டுக்கு வரமாதிரி ஒரு கதை எழுதுனேன் டாக்டர். நீங்க நம்பினாலும் நம்பாட்டியும் சத்தியமா அப்டியே நடந்ததுங்க.”

    “எங்க தெருவுல ஷூட்டிங் வந்துருக்காரு. எங்க ஏரியால ஜாஸ்தி வீடுங்க எல்லாம் இல்லையா ? இருக்குற ஒன்னுரெண்டு வீடுகள்லயும் பூட்டிட்டு வேலைக்கி போயிருவாங்க. அதனால என் வீட்ல கொஞ்சநேரம் வெயிலுக்கு வெயிட் பண்ணியிருந்திருக்காரு. என் ஒய்ப் ஆபீசுக்கு போன் பண்ணப்ப என் நெலமை எப்டி இருந்திருக்கும்னு யோச்சிப்பாருங்க டாக்டர்”

    டாக்டர் இந்தமுறை சற்று பலமாகவே சிரித்தார்.

    “நீங்களே சொல்லுங்க. அந்த ஏரியாவுலயே வீடுகள் ஜாஸ்தியில்லன்னு சொல்றீங்க. அந்த டேஷ் ஸ்டாரும் பெரிய வேல்யு இல்லாத நார்மல் நடிகர்தான். சோ கேரவன் எல்லாம் அவருக்கு சான்ஸ் இல்ல. அதனால பக்கத்துல இருந்த உங்க வீட்ல வந்து கொஞ்சநேரம் ஒக்காந்துருக்காரு. லாஜிக்கலா எல்லாமே பொருந்துதே. இது சாதாரணமா நடக்கக்கூடிய ஒண்ணுதானே சிவா?”

    இப்போது அவன் சிரிக்கத்தொடங்கினான்.

    “ஏன் சிரிக்கிறீங்க?”

    “சரி டாக்டர். நான் உங்க வழிக்கே வரேன். கொஞ்சநாள் முந்தி ஒரு கதை எழுதினேன். அதுல ஒரு பிளைட்டு மர்மமான முறையில் காணாம போறதாவும், கடைசிவரை கண்டுபிடிக்கவே முடியாம போறதாவும் எழுதிருந்தேன். எழுதி நாலாவதுநாள் நியூஸ் பேப்பர்ல படிக்கிறேன். மலேஷியா ஃபிளைட்டு காணாம போயிருச்சின்னு. இன்னிக்கி வரை கண்டுபிடிக்கலை”

    டாக்டர் சில விநாடிகள் தீவிரமாக யோசித்துவிட்டு சொன்னார்.

    “இது ஒன்னும் பெரிய ட்ரபிள் இல்ல சிவா. சும்மா பெரிய பெரிய மெடிக்கல் டேர்ம்லாம் சொல்லி உங்கள பயமுறுத்தவிரும்பல. இது ஒருவிதமான பிரமைதான். அதாவது இயற்கையா தற்செயலா நடக்குற எல்லாத்துக்கும் ஒரு காரணம் கற்பிச்சுக்குறது. ஃபார் எக்ஸாம்பிள். அந்த செவுத்த பாருங்க”

    அவன் திரும்பி டாக்டர் காட்டிய திசையில் பார்த்தான்.

    “அந்த ஜன்னலுக்கு பக்கத்துல நிழல் தெரியுதா?”

    “தெரியுது டாக்டர்”

    “குட். அந்த நெழல்ல எதாவது உருவம் தெரியுதா பாருங்க”

    “அட ஆமா டாக்டர்.. ஒரு மாதிரி.. ஆங் ஆடுமாதிரி இல்லயில்ல.. குதிரை மாதிரி இருக்கு டாக்டர்”

    “ஹஹ்ஹ்ஹா நான் சொல்லலை? இதான் விஷயம். உண்மையில அங்க நெழல் மட்டுந்தான் இருக்கு. இப்ப ஆடு குதிரைன்னு நாம பார்த்ததெல்லாம் நம்ம கற்பனைதான். இப்டித்தான் லைப்ல பல விஷயங்களுக்கு நாமளா எதாவது நெனச்சிக்கிறோம். இது காமன்தான் சிவா. சில மெடிஸின்ஸ் எழுதித்தரேன். எடுத்துக்கங்க. நல்லா டைமுக்கு சாப்டுங்க. தூங்குங்க. இதைப்பத்தியெல்லாம் நெனைக்காம உங்க வேலைய பாருங்க”

    “அப்ப நான் ஃபேஸ் பண்ணதெல்லாம் எதார்த்தமா நடந்த ஒண்ணுதான்னு சொல்றீங்களா டாக்டர்”?

    “நிச்சயமா சிவா. நீங்களே வீட்டுக்குப்போயி பொறுமையா யோசிச்சுப்பாருங்க. இதையெல்லாம் செய்யிறது நம்மளோட கிரியேட்டிவிட்டி மைன்ட். அது உங்களுக்கு கொஞ்சம் ஜாஸ்தி ஒர்க்காவுது அதான். இதையெல்லாம் கரெக்டா பயன்படுத்திக்கிட்டவங்கதான் பிற்காலத்துல பெரிய செலிபிரட்டியா ஆகிருக்காங்க. நீங்களும் ஒருநாள் பெரிய ஆளா வர வாழ்த்துக்கள்”

    அவன் மிகுந்த குழப்பத்துடன் எழுந்துகொண்டான்.

    “என்ன சிவா? ஃபீஸ் ரிசப்ஷன்ல குடுத்துடுங்க” என்றபடி சிரித்தார் டாக்டர்.

    “அதில்ல சார்.. வந்து…”

    “சொல்லுஙக. என்னமோ தயங்குறீங்க”…

    “ஒண்ணுமில்ல டாக்டர்” என்றபடி அவன் நகர ரிசப்ஷன் பெண் உள்ளே வந்து இன்னொரு பேஷன்ட் வந்திருப்பதாகச் சொன்னாள். டாக்டர் வரச்சொல்ல, இவன் வெளியேறும்போது தோளுரசியபடி டாக்டரின் அறைக்குள் நுழைந்தவனை எங்கோ பார்த்ததுபோலிருந்தது.

    ரிசப்ஷனில் பணமெல்லாம் கொடுத்து பக்கத்து ஃபார்மசியில் மருந்துகள் வாங்கும்போதுகூட யோசித்தான். எங்கோ மிக நெருக்கமாக பார்த்த முகமாக நன்கு அறிமுகமான முகமாக தோன்றியது. முக்கியமாக அவன் வலது புருவத்தின் அருகிலிருந்த மரு. நன்றாக நினைவிருக்கிறது. அது இவனது கதையொன்றின் பாத்திரம்தான்.

    தெருமுனை டீக்கடையில் டீ சொல்லிக்காத்திருக்கும்போது நான்கு நாட்கள் முன்பு தான் எழுதிய கதையை நினைவுபடுத்திப்பார்த்தான்.

    சிட்டியில் தொடர்ந்து நிகழும் சீரியல் கில்லர் ஒருவனைப் பற்றிய கதை அது. அதில் ஹீரோ டாக்டர்களக தேடிக்கண்டுபிடித்து கொலைசெய்வதுதான் கதை. சரியாக சற்றுமுன்பு டாக்டரின் அறைக்குள் நுழைந்தவன் இவன் கதையில் வந்தவனைப்போலவே இருந்தான்.

    இவன் டீ ஆறிக்கொண்டிருந்தது.

    Share
  • கருக்கல்

    மாதவன்.

     

    செல்வி பட்டென்று விழித்துக் கொண்டபோது வாசலில் மெல்லியகுரல் கேட்டது.

    “இந்தா புள்ள செலுவி”

    அது சரசுவின் கிசுகிசுப்பான குரல். செல்வி மெல்ல எழுந்துசென்று கதவைத் திறந்து தலைநீட்டினாள்.

    “தோ ஒரும்சம் சரசு. இப்பம் வந்திடறேன்”

    என்று கூறியபடி செல்வி கலைந்திருந்த தனது புடவையை சரிசெய்துகொண்டாள். தலைமுடியைச் சுருட்டிக் கொண்டையிட்டபடி எரவாணத்தில் சொருகியிருந்த டார்ச் லைட்டை உருவி கையிலெடுத்துக்கொண்டாள். படுக்கையில் சின்ராசு வாய்பிளந்து தூங்கிக்கொண்டிருந்தான். இரவு அவன் செய்த சேட்டைகள் நினைவுக்கு வந்து சிரிப்பையும் வெட்கத்தையும் ஒருங்கே கொடுத்தது.

    டவுன் மார்க்கெட்டில் லோடு வண்டி ஓட்டுகிறான். எங்கோ தொலைவிற்கு சென்று இரவு ஒருமணிக்குத்தான் வீடுவந்தான்.

    “ஏம்யா, சொந்தமா வண்டி வாங்கி ஓட்டுனா இன்னுங்கொஞ்சம் கூட காசு வருமில்லை”?

    “ம்… வரும். ஒங்கப்பாரு கரட்டான்டிபட்டியில ஊரு தலைவருதான? வரையில ஒரு வண்டியயும் கூடவே வாங்கியாந்துருக்கலாம்ல”?

    “அது சரி. ஒமக்கு என்னிய கட்டிக்குடுத்ததே பெருசாம்”

    “பார்ரா.. ஏனாம் ? அப்புடி எதுல புள்ள ஒனக்கு கொறவெச்சிருக்குறேன்னு கேக்குறேன்”? என்றபடி முரட்டுத்தனமாக முயங்கினான் பிரியத்தைப்போலவே வாய்ப்பேச்சும் அதிகம் அவனுக்கு.

    எழுப்பி சொல்லாமல் சென்றால் காலையில் கன்னாப்பின்னாவென கத்துவான். ஆனால் செல்விக்கு தூங்குபவர்களை எழுப்புவதே பிடிக்காது.

    மெல்லப் படியிறங்கி, ஓசையின்றி கதவைச்சாத்தினாள். வீட்டையொட்டிய சந்தில் சரசுவும் குஞ்சக்காவும் நின்றுகொண்டிருந்தார்கள்.

    “ஏம்புள்ள வெரசா வரதில்ல. வெடிஞ்சுப்புடுச்சின்னா ஆருக்கு கஷ்டம்” என்று கடிந்துகொண்டாள் குஞ்சக்கா.

    “இல்லக்கா… ராத்திரி அவுரு வர லேட்டாயிருச்சா ? கொஞ்சம் அசத்திப்புடுச்சிக்கா”…

    “ஆமாம்போ”… என்றபடி சலித்துக்கொண்டே அவள் முன்னால் செல்ல சரசுவும் செல்வியும் பின்தொடர்ந்தார்கள்.

    குஞ்சக்காள் கணவன் கத்தாரில் இருக்கிறான். நாலைந்து வருடத்திற்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவான். அந்த சமயங்களிலெல்லாம் குஞ்சக்காவின் தலையில் கிரீடம் ஏறிக்கொள்ளும். மற்ற நாட்களில் சிடுசிடுவென இருப்பவள் கணவன் லீவில் வந்திருக்கும் நேரத்தில்மட்டும் அத்தனை மகிழ்ச்சியாக பேசிச்சிரிப்பாள். அவள் வீட்டில் கறிக்குழம்பு மணப்பதெல்லாம் அந்த சமயங்களில் மட்டும்தானென்று சரசு சொல்லிக் கேட்டிருக்கிறாள்.

    சரசு கேட்டாள், “என்ன புள்ள ராமுச்சூடும் அண்ணன் தூங்கவிடலியாக்கும்?”

    “ச்சீ நிப்பாட்டுடீ. எல்லாத்துக்கும் உண்டானதுதான. நாளைக்கி நீ கட்டிகிட்டூ போயி மட்டும் வேற என்னத்தை செய்யப்போறியாம்?”

    “அதெல்லாம நடக்குறப்ப பாத்துக்கலாஞ் செலுவி. என் தேங்காப்பல்லுக்குன்னு எவனாச்சும் மாங்காப்பல்லு கெடைக்காமலா போயிருவான்” என்று கூறிய சரசுவின் வார்த்தைகளில் வருத்தமிருந்தது.

    சரசுவிற்கு முன்பற்கள் எந்தி வாய் மூடமுடியாதபடி இருக்கும். நன்றாக இருந்தாலே சொல்லத்தேவையில்லை. எத்தனையோ இடம் வந்துபோயிற்று. ஒன்றும் தகையவில்லை. சரசுவிற்கு என்ன பதில்சொல்வதென்று தெரியாமல் அமைதியாக நடந்தாள் செல்வி.

    “வெரசா வாங்கடீ வாளக்கொமரிங்களா”, என்று முன்னால் சென்ற குஞ்சக்கா நின்று இவர்களை விரட்ட இருவரும் வேகமாக நடக்கத்துவங்கினார்கள்.

    மண்டபத்தில் விடிவிளக்கு எரிந்துகொண்டிருந்த பிள்ளையார் கோவில் கடந்து பாயம்மாவீட்டுச் சந்துநுழைந்தபோது சனியன்பிடித்த நாய் ஒன்று விடாமல் குரைத்தது. ஒன்று தொடங்கியதும் தொடர்ந்து பக்கத்துத்தெரு நாய்களும் சேர்ந்துகொண்டு சகட்டுமேனிக்கு குரைக்கத்தொடங்கின.

    சரசு முன்னால் நகர்ந்து “டேய்.. டேய்.. ச்சும்மாயிரு. ஆளுதெரியாதா ஒனக்கு” என்று குரல்கொடுக்க அது சற்றே அச்சத்துடன்வந்து சரசுவை முகர்ந்துவிட்டு நகர்ந்தது. வீட்டிற்குள்ளிருந்து பாயம்மாள் முனகினாள்.

    “யாருலே அது?”

    “நாந்தான் பாயம்மோவ், சரசு” அதன்பிறகு பாயம்மாவிடமிருந்து பதில் வரவில்லை.

    ஊர்நடுவே பஸ்டாப்பை ஒட்டிய அமைதிவழியும் ஆலமர மேடையில் யாரோ ஒன்றிரண்டு வயசாளிகள் உறக்கம்வராமல் புரண்டுகொண்டிருந்தார்கள். அதுவரை பிரச்சனையில்லை. தெருவிளக்கு வெளிச்சம் இருக்கும். மேடையை தான்டிவிட்டால் கும்மிருட்டுத்தான். இருளை தொட்டதும் குஞ்சக்கா தனது டார்ச் விளக்கை ஒளிரச்செய்தாள். செல்வியும் சரசுவும் கூடவே.

    இருளில் நின்றிருந்த பள்ளிக்கூடத்தை கடக்கும்போது மைதானத்தின் மரங்கள் காற்றில் அசைந்தது உடலில் நடுக்கத்தைக் கொடுத்தது.

    சட்டென்று கருவேலம்புதரிலிருந்து எதுவோ வேகமாக ஓடியது. செல்விக்கு குலைநடுங்கியது. அவளுக்கு இதெல்லாம் புதிது. அவள் புதூருக்கு திருமணமாகி வந்தே ஒருமாதம்தான் ஆகிறது. இந்த ஒருமாதமும் இதே அவஸ்தைதான். அதுவும் வந்த முதல்வாரத்தில் விருந்துச்சோறு தின்று வயிறு காற்றடைந்து கெட்டுக்கிடந்தது. இரவாகி பொழுது விழும்வரை நரகமாகக் கழிந்த நாட்கள் அவை.

    அவள் பிறந்த ஊரான கரட்டான்டிபட்டியில் இத்தனை பிரச்சனைகள் இல்லை. அங்கே சிறிய மலை ஒன்று இருப்பதால் அதன் பின்புறம் மறைவாக ஒதுங்குவது மிகப்பெரிய சவுகரியமாக இருந்தது. விடியும் வரை ஆண்கள் யாரும் மலைப்பக்கம் வரமாட்டார்கள்.

    குஞ்சக்கா ஓரிடத்தில் சற்று நின்றாள். சரசுவும் செல்வியும் அவளருகே சென்று சேர்ந்துகொண்டார்கள்.

    “என்னாச்சுக்கா”

    “ஒன்னுமில்ல புள்ளைங்களா.. சாரை ஒன்னு குறுக்கால போச்சு. அதான் சித்த நின்னேன்”

    “எங்க எங்க”? என்று சரசு துள்ளினாள்.

    “ந்தா.. சார ஒன்னுஞ்செய்யாதுன்னு எத்தன வாட்டி சொல்லிருக்குறேன். குதிக்காம வாடி. அசலூருக்காரிகூட அலுங்காம வாரா. உள்ளூருக்காரிக்கு என்ன நோப்பாளம் வந்துச்சின்னு கேக்குறேன்.”

    வாய்க்கால் பாலம் கடந்து அடைந்த தார்சாலையில் குளிர்ச்சி பூசியிருந்தது. அங்கங்கே தலையில் வெளிச்சப்புள்ளி சுமந்து அலைந்துகொண்டிருந்தன மினுக்கட்டாம் பூச்சிகள். பக்கத்து ஊரான பாலையூர் மசூதியிலிருந்து பாங்கொலி சன்னமாக கேட்டது. இன்று தாமதமாகிவிட்டது. வழக்கமாக திரும்பிச்செல்லும்போதுதான் இந்த பாங்கொலியை கேட்கநேரும். தூரத்தில் பைப்பாஸ் ரோட்டில் லாரிகள் விரையும் சப்தம் கேட்டது. சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்துக்கொண்டு சாலையோரமாக ஆளுக்கொரு பக்கமாக மூவரும் …

    செல்விக்கு அழவேண்டும்போலிருந்தது. சின்ராசிடம் ஜாடைமாடையாக சொல்லியாயிற்று. புரிகிறாமாதிரி தெரியவில்லை. மாமியார் ஒரேவரியில் முடித்துக்கொண்டாள்.

    “இந்த ஊருக்கு நா வாக்கப்பட்டு வந்து எத்தன வருசமாச்சுன்னு ஒனக்குத்தெரியுமா ? இன்னிவரை எனக்கு அதான். நம்மூரு பொம்பளைங்க எல்லாத்துக்கும் அதேதான். இல்ல நீதா சமீந்தாரு ஊட்லயிருந்து வந்தியோ?”

    அவள் கூறியதும் உண்மைதான். ஊரில் ஒன்றிரண்டு மச்சுவீட்டில்தான் கழிவறைகள் இருக்கிறது. மற்றெல்லோருக்கும் இப்படிப் பொதுவெளிதான்.

    குஞ்சக்கா ஒருமுறை சொன்னாள்.

    “கவர்மென்டுல கட்டடம் கட்டியுட்ருக்காங்க புள்ள. கூறில்லாத பயலுவ. ஊர் எல்லையில சுடுகாட்டுல கொண்டுபோயில்ல கட்டிவச்சிருக்கானுங்க. வெடிஞ்சும் வெடியமின்ன பொம்பளையாளுங்க எப்புடிப் போவாங்கன்னு யோசன வேணுமா இல்லியா ? என்னையெல்லாம் இந்த ஊரே வாயாடின்னுதான் பேசும். ஆனா அதுக்காவ பேயிபிசாசுங்ககூடபோயி என்னத்தை வாயாட ? பத்தாததுக்கு எளந்தாரிப்பயலுவ எல்லாரும் அங்க இருந்த தண்ணிக்கொழாயையெல்லாம் ஒடச்சு எடைக்கி போட்டு சாராயம் குடிச்சுப்புடுச்சிங்க.”

    சரசுவிற்கு முடிந்திருக்கவேண்டும். எழுந்து நின்றுகொண்டு சுற்றிலும் பார்த்தபடியிருந்தாள். திடீரென பளாரென்று ஹெட்லைட் வெளிச்சமும் பெரிய ஹாரன் சவுன்டுமாக செவலூர் செல்லும் முதல் பஸ் வந்தது.

    செல்வியும் குஞ்சக்காவும் அவசரமாக எழுந்து சாலையின் விளிம்பில் நின்றுகொண்டார்கள். ஹாரன் அளவிற்கு வேகமில்லாமல் நிதானமாக வந்தது பஸ்.

    டீசல் வாசனையும் வெளிச்சமும் ஜன்னல் தலைகளுமாக அது கடந்தபின் மறுபடி சூழ்ந்த இருள் முன்னைவிடக் கருமையாக இருந்தது. செல்விக்கு ஜன்னல் தலைகளைக் கண்டு அவமானம் பிடுங்கியது. வானத்தில் இப்போது நட்சத்திரங்கள் மறையத்தொடங்கின.

    சரசு அவசரமாக கீச்சுக்குரலில் கத்தினாள்.

    “யக்கா யக்கா ஆளுக வராங்க.”

    பட்டென்று மறுபடி எழுந்துகொண்டார்கள். நல்லவேளை சப்பாணிதான் இரண்டு மாட்டை வயலுக்கு ஓட்டிசென்றான். இவர்களை கடக்கும்போது மாட்டின் கழுத்துமணி ஓசைஅதிகமாக கேட்டது.

    காலை ஒருபக்கமாக இழுந்தபடி இவர்களைப்பார்த்தும் பாராததுபோல ட்ரோய் ட்ரோய் என்று மாடுகளை ஓட்டிச்சென்றான். அவன் தலைமறையும்வரை அடிவயிற்றுச் சங்கடத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆண்களுக்கு பிரச்சனையில்லை. விடிந்தபிறகுகூட கம்மாயி பக்கம் ஒதுங்கிவிட்டு தம்புரான் கேணி பம்புசெட்டிலோ கம்மாயித்தண்ணியிலோ கழுவிக்கொண்டு வீடுசேர்ந்துவிடுவார்கள்.

    பெண்களெல்லாம் கம்மாயிபக்கம் செல்லமுடியாது. அங்கிருக்கும் தீமரம்தான் காரணம். போனவாரம் சுப்பன் அதனடியில்தான் ரத்தம்கக்கி இறந்துகிடந்தான். டாக்டர் மாரடைப்பு என்றார். ஆனால் ஊருக்குள் கருப்பு அடித்துவிட்டதாகத்தான் பேசிக்கொண்டார்கள். சப்பாணி கண்ணைவிட்டு மறைய மறுபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்துகொண்டார்கள்.

    இது ஒரு இம்சை. சிலநாட்களில் சுலபத்தில் வெளியேறாது. நம் சங்கடங்களெல்லாம் அதற்கெப்படித் தெரியும் ? ஆனால் உந்துதல் இருந்தாலும் இல்லாவிட்டால் உட்கார்ந்துவிட்டுத்தான் போகவேண்டும். இந்த கருக்கலை விட்டால்மறுபடி இரவுதான் சந்தர்ப்பம் வாய்க்கும். நடுவில் வயிறு சங்கடம் செய்தால்தான் நிரம்பச்சிரமம். கொள்ளை படல் மறைவில் மூத்திரம்போகத்தான் சாத்தியம்.

    இதுமாதிரியான நேரங்களில் சின்ராசு செல்வியின் முகம் பார்ப்பதை தவிர்த்துவிடுவான்.

    “கோவிச்சுக்காத புள்ள. இருக்குறதே பொறம்போக்கு குடிசை. கக்கூசு எல்லாம் கட்டமுடியாது. டவுனுல வீடு பார்த்துக்கிட்ருக்குறேன். கொஞ்சநாளிக்கி அட்சசு பண்ணிக்க செலுவி” என்று உறுதியாக சொல்லிவிட்டான்.

    சின்ராசு நல்லவன். இவள்மீது மிகுந்த பிரியமுள்ளவன். தினசரி வரும்போது டவுனிலிருந்து இவளுக்குப் பிடித்த காராச்சேவு எல்லாம் வாங்கிவந்த்து தருவான். ஆரம்பத்தில் செல்விக்கு தன் அப்பாமீதுதான் கோபமாக வந்தது. வெளிவாசல் போகக்கூட சாத்தியமில்லாத ஊரில் கட்டிக்கொடுத்துவிட்டாரே என்று.

    சரசு ஒருமுறை சொன்னது ஞாபகம் வந்தது.

    “வெய்யக்காலத்துல தொல்லயில்ல செலுவி. மழக்காலந்தான் ரெம்பக்கஷ்டம். மேல மழத்தூத்தும். கீழச் சேறு வளுக்கும். பூச்சிங்களா ஊறிட்டுத்திரியும். தேளுக்கும் பூராணுக்கும் தப்பிச்சி ஒக்காந்து எந்திரிச்சி போவுறதுக்குள்ள பாதி உசுரு போயிரும்”

    செவலூர் பஸ் மறுபடி அதே ஹாரன் சத்தமும் லைட் வெளிச்சமுமாக ஊரிலிருந்து திரும்பியபோது மீண்டும் எழுந்துகொண்டார்கள். குஞ்சக்கா கெட்டவார்த்தை ஒன்றைச் சொல்லி காறித்துப்பினாள்.

    பஸ் வேகமாக கடந்துசென்றபின்பு டாட்டா எஸு ஒன்றும் எதிர்ப்புறமாக ஊர்நோக்கிச்சென்றது. வானில் மெல்ல வெளிச்சம் வரத்தொடங்கிவிட்டது. குஞ்சக்கா கேட்டாள்.

    “முடிஞ்சிருச்சா செலுவி. கெளக்கு வெளுத்துட்டு. ஜனம்மெல்லாம் வர ஆரம்பிச்சிரும் வெரசாக் கெளம்பு” என்று எச்சரித்தபடி எழுந்து நின்றுகொண்டாள்.

    சரசுவும் குஞ்சக்காளும் நிற்க தான் மட்டும் உட்கார்ந்திருக்க என்னமோ போலிருந்தது செல்விக்கு. அவளும் மெல்ல எழுந்துகொண்டாள். மறுபடி வந்த வழியில் நடந்தபோது ஊர் விழித்துக்கொண்டுவிட்டது. ஆலமர மேடையில் நாலைந்துபேர் வாயில் ஆலங்குச்சியை மென்றபடி உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். மரத்தின்மேல் கணக்குவழக்கின்றி கிளிகள் கத்தியபடி பறந்துகொண்டிருந்தன. டாட்டா ஏஸில் ஆறுமுகஞ்செட்டியார் தக்காளி கூடைகளை ஏற்றிக்கொண்டிருந்தார்.

    மேலத்தெருவில் ஊர்த்தலைவர் வீட்டு காரின் முன் கண்ணாடியில் பனிபடர்ந்து நீர்க்கோடுகளாக வழிந்திருந்தன. பிள்ளையார்கோவில் சிமெண்ட்டுத்தரை கழுவப்பட்டு ஈரமாக இருந்தது. பாயம்மாள் சந்தில் அந்த நாய் சாதுவாக படுத்துக்கொண்டிருந்தது. கொஞ்சநேரம் முன்பு ஆக்கிரோஷமாக குரைத்தது அதுதான் என்று சொன்னால் யாராலும் நம்பமுடியாது.

    வீட்டிற்கும் முன்பாக சந்தில் சின்ராசு மினிடோரைத் துடைத்தபடி நின்றுகொண்டிருந்தான். செல்வியை பார்த்து சங்கடமாக ஒரு புன்னகை செய்தான். செல்வி கொள்ளைக்குச்சென்று இரண்டு சொம்பு தண்ணீர் விட்டுக்கொண்டு அடுப்பை பற்றவைத்து டீ போட்டு கொண்டுவந்து சின்ராசிடம் கொடுத்தாள். சின்ராசு டீயை வாங்கிக்கொண்டு அவள் கைகளைப் பிடித்துக்கொண்டான்.

    இந்த பிரியத்திற்காக எதைவேண்டுமானாலும் பொறுத்துக்கொள்ளலாமென்று தோன்றியது அவளுக்கு. வீடுகளில் எப் எம் ரேடியோக்கள் அலறத்தொடங்கின. கிராமங்களின் வளர்ச்சி மேம்பாட்டிற்கான புதிய திட்டமொன்றிற்கு பிரதமர் 200 கோடி ஒதுக்கியிருப்பதாக ரேடியோச் செய்திகள் தெரிவித்தன.

    Share
  • ’88’

    மாதவன்.

    வெளியே மழை சத்தமின்றி பெய்துகொண்டிருந்தது. ஒருமாதிரி ஊதாநிறத்தில் கண்ணாடி ஜன்னல்களில் கோடுகளாக வழிந்துகொண்டிருந்தது.

    அமில மழை இப்படித்தான் பலவிதவண்ணங்களில் பெய்கின்றது. மூன்றுநாள் முன்பு இளம்பச்சை நிறத்தில் பெய்தது. பார்வைக்கு மிக அழகாக ஓவியச்சிதறல்போல தெரிந்தாலும் அதன் ஆபத்தை வார்த்தைகளில் விளக்கிவிட முடியாது.

    இந்த அமில மழையின் ஒரேயொரு துளி கூட இரும்புமாதிரியான கடினமான உலோகங்களையே கரைத்துவிடக்கூடியது. சென்றவாரத்தின் ஒரு மழையில் அப்படித்தான் அந்த முட்டாள் நாய்க்குட்டி வெளியில் சென்று கருகி இறந்துபோனது.

    இத்தனைக்கும் இந்த வீடு, வீடென்று இதை சொல்லிவிட முடியாது. இது ஒரு பெரிய ஹால் என்றுகூட சொல்லுவது பொருத்தமில்லை. வேண்டுமென்றால் ஒரு ஆராய்ச்சிக்கூடம் என்று சொல்வது சரியாக இருக்கும்.

    தனித்தனியான அறைகளெல்லாம் கிடையாது. பரந்துவிரிந்த பெரிய கூடம். இதன் மேற்கூரை மேலே செல்லச்செல்ல கூர்மையாக இருக்கும்படி அமைக்கப்படிருக்கிறது.

    அமில மழையால் அரித்துப்போய்விடாதபடி ஒருவித கலவையான உலோகத்தால் உருவாக்கப்பட்டது. இந்தக்கூரை மட்டும் இல்லையென்றால் இங்கிருக்கும் 88 உயிர்களும்… சாரி… இப்போது 87 தான். எபோதோ அமிலமழையில் கருகிக்கரைந்திருப்போம்.

    எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சென்ற வருடம் கிபி 2065 கிறிஸ்துமஸ் தினத்திற்கு இரண்டுநாள் முன்பு என் கணவர் வீட்டிற்கு வந்தார். என்னால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால் அவர் இதுவரை எந்த பண்டிகைதினத்திற்கும் வீட்டில் இருந்ததில்லை.

    இஸ்ரோ நாசா என்று அவர் பணிபுரியாத நாடுகளே இல்லை. ஆமாம் அவர் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர். மனிதர்கள் ஐநூறு வருடங்கள்வரை உயிர்வாழும் மருந்து கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் என்று சொன்னால் ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும்.

    வீட்டிற்கு வந்து சிலநாட்கள் பித்துக்குளிபோலத்தான் சுற்றிக்கொண்டிருந்தார். எப்போதும் எங்கள் வீட்டின் மாடியிலுள்ள லேபில் மணிக்கணக்காய் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்.

    ஏதோ புதிய விண்கலம் ஒன்று தாயாரித்துக்கொண்டிருப்பதாக என்னிடம் கூறினார். திருமணம் ஆனதிலிருந்தே அவரைப்பற்றியும் அவரது ஆராய்ச்சிகள் மீதான பைத்தியம் பற்றியும் எனக்குத்தெரியுமென்பதால் விட்டுவிட்டேன்.

    திடீரென்று ஒருநாள் அவரது இன்னும் சில நண்பர்களும் வந்திறங்கியபோது நான் கொஞ்சம் பயந்துபோனேன். கேட்டதற்கு ஏதேதோ சொல்லி சமாளித்தார். நாட்கள் செல்லச்செல்ல இன்னும் சிலநண்பர்கள் குடும்பசகிதமாக எங்கள் வீட்டிற்கு வந்தபோது நான் நச்சரிக்கத்தொடங்கினேன்.

    அவர் அரசாங்கத்திற்கு எதிராக ஏதோ ஆய்வு செய்கின்றாரோ என்னும் எனது சந்தேகத்தை ஒளிவுமறைவின்றி அவரிடம் சொல்லிவிட்டேன். அப்போதுதான் தயங்கித்தயங்கி அவர் சொன்னார். அவரை நாசாவிலிருந்து பணிநீக்கம் செய்துவிட்டதாக. அவர் என்னிடம் படிக்கச்சொல்லித் தந்த நாசாவின் கடிதத்தின் சாராம்சம் இதுதான்.

    ஒரு ஆய்வின் முடிவில் என் கணவர் சமர்ப்பித்த தியரியின்படி, இயற்கை அழிவின் காரணமாகவும் புவிவெப்பமயமாவதன் தொடர்ச்சியின் விளைவாகவும், 2066 மார்ச் மாத வாக்கில், நம் பால்வீதிமுழுக்க ஒரு வித அமில மழை பொழிந்து பூமி அழியப்போகிறது என்று சொல்லியிருக்கிறார்.

    அந்த தியரியைப்படித்த நாசா குழுவினர் இவருக்கு மனநலம் சரியில்லை என்று சொல்லி இடைக்கால பணிநீக்கம் செய்திருக்கிறது. அதனால் தான் இந்த கிறிஸ்த்மஸிற்கு மனிதர் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

    அப்புறம் ஒருநாள் எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள மைதானத்தில் பெரிய பெரிய உலோகத்தகடுகள் எல்லாம் வைத்து மிகப்பெரிய தட்டைவடிவில் ஏதோ ஒன்றை இணைத்து உருவாக்கினார்கள்.

    வந்திருந்த நண்பர்கள் அனைவருமே பெரியபெரிய அறிவியல் மேதைகள். அவர்கள் எல்லோருமே அதிகம் யோசித்தார்கள், அதிகம் பேசினார்கள். அதிகம் சிகரெட் புகைத்தார்கள்.

    பிறகு ஒருநாள் அந்த பறக்கும் தட்டை, ஆமாம் அப்படித்தான் அதை அழைத்தார்கள். அந்த பறக்கும் தட்டை சோதனை ஓட்டம் பார்த்தார்கள். இரண்டு அடிகள் மேலெழும்பி தொப்பென்று விழுந்துவிட்டது. மறுபடி யோசனைகள் பேச்சுக்கள் சிகரெட்டுகள்.

    இறுதியாக ஒரு நன்னாளில் அது பறக்கத்தொடங்கியபோது ராணுவ அதிகாரிகள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். என் கணவரும் நண்பர்களும் என்ன சொன்னார்களோ அவர்கள் சிரித்துக்கொண்டே திரும்பிச்சென்றுவிட்டார்கள்.

    நாங்கள் மொத்தம் 88 பேர்கள் இருந்தோம். அதில் நான்கு நாய் ஒரு முயல் மூன்று பூனைகளும் அடக்கம். அந்த தட்டு அவ்வளவுதான் தாங்குமென்று சொன்னார்கள்.

    சூரிய ஒளி சக்தியாலும் பேட்டரிகளாலும் பெட்ரோல் எரிபொருளாலும் அது பயணிக்கும் என்றார்கள். செவ்வாய்க்கு அருகில் ஏதோ ஒரு வாயில் நுழையாத பெயருள்ள புதிய கிரகம் என்றார்கள். என்னென்னவோ ஒளியாண்டுகள் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். பறக்கும் தட்டில் விண்வெளியில் பயணிக்கும்போது காலம் நின்றுபோய்விடும் எனவே பிரச்சனையில்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

    எனக்கு இவை எதிலும் ஆர்வமோ புரிதலோ இல்லை. நான் உண்டு என் மகள் ஜெஸ்ஸி உண்டு என்று இருந்தேன்.

    அந்த ஆண்டின் பிப்ரவரி கடைசியில் அமிலமழை பொழியத்துவங்கியபோதுதான், அதில் நனைந்து சில பனிக்கரடிகள் கருகிச்சாம்பலாய் கிடந்ததை டிவியில் பார்த்தபோதுதான் என் கணவரை எல்லோருமே ஆச்சரியமாகப் பார்த்தோம்.

    ஆனால் அவர் இதெல்லாம் பெரிய விஷயமில்லை என்பதுபோல சாதாரணமாக இருந்தார். தட்டிலிருந்த எங்களில் சில சீனர்களும் அரேபியர்களும் யூதர்களும் இந்தியர்களும் என்று ஓரளவு எல்லா தேசத்தவர்களும் இருந்தார்கள்.

    எனக்கு என் தாய்மொழி தவிர வேறு எதுவும் தெரியாததால் அமைதியாகவே இருந்தேன். செயற்கைக்கோள்மூலம் அவ்வப்போது எடுக்கப்படும் படங்களை வைத்துப்பார்த்ததில் எங்கள் பயணத்தின் இரண்டாம் நாளே பூமி சாம்பல்மேடாக இருந்ததைக்கண்டோம். எல்லோரும் கணத்த மவுனத்தோடு அழுதுகொண்டிருந்தோம். தனியாக தப்பித்து உயிர்வாழ்வது குறித்த குற்றவுணர்வும் பயமும் எல்லோரையும் வாட்டியது.

    பயணத்தின் பத்தாம்நாள் பறக்கும்தட்டில் கோளாறு ஏற்பட்டது. பிரபஞ்ச வெளியில் மெல்ல தக்கத்தக்கி ஆடத்தொடங்கியது. என் கணவர் ஏதேதோ கணக்குப்போட்டுப்பார்த்துவிட்டு உதட்டைச்சுழித்தார். பெருத்த ஆயாசம் தெரிந்தது அவர் முகத்தில். சாட்டிலைட் படங்கள் மேப்புகள் எல்லாவற்றையும் விரித்து நண்பர்களோடு ஆலோசித்தார்.

    என்னென்னவோ வாக்குவாதமெல்லாம் வந்தது. பளீரென்று ஏதோ யோசனை வந்ததுபோல என் கணவர் ஒரு ஐடியாவைக்கூற சந்தோஷமாக எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள்.

    அதிர்ஷ்டவசமாக வழியில் அகப்பட்ட ஒரு பிரம்மாண்டமான விண்கல்லில் தட்டை இறக்கி கோளாறையெல்லாம் சரிசெய்துவிட்டுப்பிறகு புறப்படுவதுதான் திட்டம்.

    தட்டை விண்கல்லில் இறக்கி சோதனைசெய்ய ஒரு ரோபோவை களமிறக்கியதில் ஆக்ஸிஜனுக்கோ தாவரத்திற்கோ நீருக்கோ எந்த ஒரு உயிருக்கோ வழியில்லாத இடம் அது என்று புரிந்தது. வேறுவழியின்றி ஆக்ஸிஜன் மாஸ்க்குகளோடு இங்குவந்து இறங்கினோம்.

    ரெடிமேட் ஆக தயார் செய்து வைத்திருந்த உலோகத்தகடுகள் கொண்டு இணைத்து இந்த ஆய்வுக்கூடத்தையும் உருவாக்கியாயிற்று.

    தினமும் தூங்கி எழுந்ததும் என் கணவர் அவர் நண்பர்கள் கூட இன்னும் சிலர் அனைவரும் சென்று பறக்கும்தட்டை சரிசெய்ய முயற்சிப்பதும். பிறகு களைத்ததும் திரும்பிவருவதுமாக நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இரவுபகல் என்றெல்லாம் எதுவுமின்றி எப்போதும் அரையிருட்டாகவே இருந்தது. ஒரு இருநூறு தப்படி நடந்தால் நாங்கள் இறங்கியிருக்கும் விண்கல்லின் விளிம்பு வந்துவிடும்.

    அமிலமழையற்ற நாட்களில் நான் ஜெஸ்ஸியை அழைத்துக்கொண்டு மிதந்து அங்கு சென்று அங்கிருக்கும் ஒரு கூரான பாறையைப் பிடித்துக்கொள்வேன்.

    தலைக்குமேலே நட்சத்திரங்களை பார்த்துப்பழகிய ஜெஸ்ஸிக்கும் எனக்கும், எங்கள் கால்களுக்குகீழே ஒளிரும் நட்சத்திரக்கூட்டங்கள் பெரிய பரவசம்.

    அவை ஒவ்வொன்றிற்கும் நாங்கள் பெயர்வைத்திருக்கிறோம். ஜெஸ்ஸிக்கு எல்லாப்பெயர்களும் மனப்பாடம். ஏதேனும் நட்சத்திரத்தைக்காட்டி கேட்டால் சரியாக பெயர் சொல்லிவிடுவாள். சுற்றிலும் எடையற்று அங்கங்கு மிதக்கும் சிறுசிறுகற்களை நகர்த்தியபடி விளையாடிக்கொண்டிருப்போம். ஜெஸ்ஸிக்கு அதில் மிகுந்த விருப்பமுண்டு.

    இன்று கொட்டும் மழையைப்பார்த்தால் இன்னும் இரண்டுநாட்களுக்கு விடாதுபோலத்தெரிகிறது. வெளியில் செல்லாவிட்டாலும் நாய்க்குட்டியுடனாவது ஜெஸ்ஸி பொழுதை போக்கிக்கொண்டிருந்தாள். இப்போது அதுவும் இல்லை.

    கையிருப்பில் இருக்கும் உணவும் நீரும் சிக்கனமாக உபயோகித்தால் இன்னும் ஒருமாதம் வரை வரும். அதற்குப்பிறகு? கொஞ்சம் மழை ஓய்ந்தபின்பு வெளியில் சென்றவர்களெல்லாம் வந்தார்கள். அவர்களில் ஒருசிலர் வாய்விட்டு அழுதார்கள்.

    பறக்கும் தட்டின் ஏதோ ஒரு சிறிய பகுதி பர்மனென்ட் ஆக சிதைந்துவிட்டதாம். அனேகமாக சரிசெய்ய முடியாதென்றுதான் புலம்பிக்கொண்டிருந்தார்கள். என் கணவர் வெற்றுமுயற்சியாக எல்லோரையும் சமாதானம் செய்துகொண்டிருந்தார்.

    நான் ஜெஸ்ஸியோடு வெளியேறி அந்த விளிம்பிற்கு மிதந்தேன். ஜெஸ்ஸி என் கழுத்தை இறுகக்கட்டியிருந்தாள். விளிம்பிற்குச்சென்றதும் ஜெஸ்ஸி கேட்டாள் “நாம எப்ப மம்மி நம்ம வீட்டுக்குப்போவோம்”?

    நான் பதில் சொல்லாமல் அவளுக்கு நட்சத்திரங்களை வேடிக்கை காண்பித்தேன்.

    மெல்ல குளிர்காற்று வீசியது …

    Share
  • கூத்துக்காரன்

    மாதவன்

    கூத்து முடிந்து திரைமெல்லக் கீழிறங்கியதும் சண்முகம் தன் அரிதாரத்தை கலைக்கத்தொடங்கினான். முகம் கழுவுகையில் தனது மீசையில்லாத முகம்பார்த்து அப்பாவை நினைத்துக்கொண்டான். சண்முகம் நாயகத்தன்மைகள் ஏதுமற்ற ஒரு சாமான்யன். பஸ் டிரைவர். அவன் அப்பாபோல மெயின் வேஷமெல்லாம் இல்லை. சைடு வேஷம்தான். சண்முகத்தின் அப்பா சின்னையன் பெரிய ஆள். ஸ்தீரிபார்ட் சின்னையன் என்றால்தான் தெரியும் எல்லோருக்கும். திரவுபதி வேஷமிட்டால் அசல் திரவுபதியே வந்துவிட்டதுபோல இருக்கும் எல்லோருக்கும்.

    அந்தக்காலத்திலேயே சிங்கப்பூர் எல்லாம் சென்றுவந்திருக்கிறார். ஸ்தீரிபார்ட் வேஷம் கட்ட அவர்போல வேறு ஆளில்லை அப்போதெல்லாம். ஆனால் சண்முகத்தின் வகுப்புத்தோழர்கள் எல்லோரும் அவரைப்பற்றி பேசுகையில் மீசையற்ற அவர் முகம்பற்றிக் கேலிசெய்வார்கள்.

    ” ப்பா..”

    “என்ன தம்பு”?

    “நா ஒன்னிய ஒன்னு கேக்கவா”?

    “கேளுய்யா”

    “நீ இனிமேட்டு பொம்பள வேசங்கட்டாதப்பா”

    “ஏன்யா”?

    “பள்ளியூடத்துல எல்லாப்பசங்களும் என்னிய கிண்டல்பண்றாங்கப்பா”

    “என்னன்னு”?

    “நீயொரு பொண்டுகஞ்சட்டியாம். அதனாலதான் அம்மாகூட உன்னியவிட்டு ஓடிப்போயிருச்சாம்”

    அப்பா அவனை இழுத்து அணைத்துக்கொண்டார். அப்படி அணைத்துக்கொண்டால் அவர் குடித்திருக்கிறார் என்று அர்த்தம். அவன்மீது பிரியம் வந்துவிட்டதென்று அர்த்தம். ஆனால் என்ன செய்தாலும் அம்மாவைப்பற்றி எதுவும் கூறமாட்டார்.

    மேனேஜர் கொடுத்த ஐநூறு ரூபாயை வாங்கி தன் அன்ட்ராயரில் வைத்துக்கொண்டான் சண்முகம். மரியாதை என்று சொல்வார்கள் அதை முன்பெல்லாம். ஒரு பெரிய தாம்பாளம் நிறைய வெற்றிலை பாக்கு பழங்கள் வேஷ்டிதுண்டு எல்லாம் வைத்துத்தான் கூத்திற்கு அழைப்பார்கள். கூத்து முடிந்தபின்பும் அதேபோல சன்மானம் வைத்து வண்டிகட்டி வழியனுப்பிவைப்பார்கள். அப்படித்தான் ஒரு ஊரில் இரண்டுரூபாய் நோட்டுக்கட்டை திண்ணையில் தூக்கிப்போட, துண்டை உதறியபடி அதை தொடாமல் திரும்பிவந்தாராம் அப்பா.

    பஸ்டான்ட் கூட்டமாக இருந்தது. அவன் தனக்கான பஸ்ஸை தேடி ஏறியமர்ந்துகொண்டான்.

    அப்பாவுடன் கூத்திற்குச் செல்லும்போதெல்லாம் எல்லோரும் கேட்பார்கள்.

    “ஏஞ்சின்னா, ஒம்மவனுக்கு பிரகலாதன் வேசங்கட்டினா நல்லாயிருக்காது”?

    “ச்சீ சவத்த ஒன் வாயக்கழுவு மொதல்ல. அவனுக்கு எதுக்கு இந்த நாறப்பொழப்பு ? அவன் பள்ளியூடத்துல படிக்கிறான். நல்ல வேலைக்கிப்போவான். சாயம்பூசுற பொழப்பெல்லாம் என்னோட போவட்டும்”

    நகரும் பேருந்தின் ஜன்னல்வழி அவசரமாக நகர்ந்தன மரங்கள். முன்னாலிருந்து ஒரு குழந்தை கைநீட்டியது. சண்முகம் ஒற்றைவிரலால் அதன் கைபற்றினான். அது சிரித்தது.

    அப்பா கடைசிவரை கூத்துக்கட்டியவர். அரவான் வேஷங்கட்டிய அன்று தான் பலியாவதற்கு முன்பான உக்கிரமான காட்சியின்போதுதான் அவருக்கு பக்கவாதம் வந்து கைகால் இழுத்துக்கொண்டது. அதன்பிறகு அதிககாலம் சிரமப்படவில்லை. கொஞ்சநாட்களிலேயே இறந்துபோனார். அதற்குப்பிறகுதான் சண்முகம் கல்யாணமே செய்துகொண்டான்.

    சண்முகத்தின் பள்ளி ஆண்டுவிழாவில் மாறுவேடப்போட்டிக்கு அவன் வேஷங்கட்ட முயன்றபோதுதான் முதல்முறை அவனை அடித்தார்.

    “அது ஒரு சாபம் தம்பு. பெரிய போத. ஒருவாட்டி வேசங்கட்டி கைதட்டு வாங்கிட்டீன்னா, பொறவு சாவறவரை அந்த சத்தம் கேட்டுக்குட்டேயிருக்கத்தோனும். அது ஒரு வல சம்முவம். விழுந்தா ஆள அப்புடியே முழுங்கிப்புடும்.

    “நீங்க மட்டு ஏன் வேசங்கட்டுறீங்க”?

    “எங்கய்யா. ஒந்தாத்தன் பெரிய பாகவதர் தம்பு. சின்னப்புள்ளையில இருந்து என்னிய கூத்துக்கு பழக்கிவச்சாரு. என்னால அத விடவே முடியல. என் சாயம் ஒனக்கு ஒட்டிரக்கூடாதுன்னுதான் ஒன்ன படிக்கவைக்கிறேன்.
    அப்பா இவனோடு நிறைய பேசுவார்.

    “ஒருநாளு எங்கய்யாவோட கீரணூருக்கு போனேன். அடுத்தமாசம் கூத்துக்கு பேச்சுநடத்த போறமின்னு சொல்லித்தான் என்னிய கூட்டிப்போனாரு. அங்க போனபொறவுதான் தெரிஞ்சுது போனது பொண்ணுபாக்கயின்னு. ஒங்கம்மா அத்தன அழகு. நம்மூரு மாரியாத்தா செல இருக்குபாரு அதுமாதிரி ஒரு அழகு.

    ஆயிரம்ரூவா பணம். அஞ்சாறுபவுனு நகயோட அவளக்கட்டிக்கிட்டேன். ஆனா அவளுக்கு என்னிய சுத்தமா புடிக்கலன்னு அப்பறமாத்தான் தெரிஞ்சது. எப்பப்பாரு எரிஞ்சு விழுந்தா. எங்கயாச்சும் வெளிய தெருவுக்கு கூப்புட்டா வரமாட்டா.

    நீயொரு பொண்டுகஞ்சட்டி மாதிரி நடக்குற ஒம்மோட எவ வருவா அப்டீன்னா. அதோட நா கூத்து கட்டுறது அவளுக்கு புடிக்கல. சாடைமாடையா சொல்லியும் நா கேக்கல. அப்பறம் ஒருநாள் வெளிச்சமா வெளக்குனா.

    வேசங்கட்டி நீ கொண்டாற காசவச்சு எம்பொறத்தக் கழுவறதா ? கூத்துக்கருமத்தையெல்லாம் உட்ரு. எங்கப்பாருகிட்ட சொல்லி கொஞ்சம் நெலம் வாங்கியாறேன். பாடுபட்டு கெடக்கலாம்னா.

    அன்னிக்கித்தான் அவள மொதவாச்சி அடிச்சேன். அன்னிலயிருந்துதாம் இந்தக்கருமத்தைக் குடிக்க ஆரம்பிச்சேன். அதும்பொறவு நெதம் சண்ட சச்சரவு”

    பஸ் பைப்பாஸில் எங்கோ ஓரிடத்தில் நிற்க சண்முகம் இறங்கி மூத்திரம்பெய்துவிட்டு டீ குடித்தான். மறுபடி பஸ் ஏறியபோது அப்பா வந்து மனதில் உட்கார்ந்துகொண்டார்.

    ஒருமுறை சினிமாவில் வாய்ப்புவந்தது அவருக்கு. அப்பாவுடன் சண்முகமும் சென்றிருந்தான். வியர்த்துப்பூத்த முகத்துடன் ஒரே வசனத்தை திரும்பத்திரும்ப சொல்லவைத்துக்கொண்டிருந்தார்கள். ‘இந்தாளு தேறமாட்டான்’ என்று யாரோ யாரிடமோ அப்பாவைக்காட்டி சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

    ஒருநாள் திடீரென்று சண்முகத்தை அழைத்து பேசத்தொடங்கினார்.

    “நீ பொறந்தப்ப ஆஸ்வத்திரிக்கி பார்க்க வந்தேன். அவ எங்கூட பேசவேயில்ல. அவ ஆத்தாக்காரி என்னமோ சொல்லிப்பார்த்தா. அவ ஒரே முடிவா சொல்லிப்புட்டா.  ஒங்கூத்துப்பொழப்ப உட்டுட்டு வந்தா வா இல்லாட்டி ஒஞ்சோலியப்பாருன்னு. பச்ச ஒடம்புன்னு பாக்காம உட்டம்பாரு கட்டுலோட ஒரு ஒத. அவ அப்பங்காரன் வந்து என்னிய சட்டயக்கோர்த்து வெளிய தள்ளலைன்னா அன்னிக்கே ஒங்கம்மா செத்துருப்பா.

    கொஞ்சநாள் பொறவு ஒருநாள் அவ அப்பனாத்தாளும் கொஞ்சம் ஒறவுக்காரங்களும் வந்து பஞ்சாயத்து பேசுனாங்க. நான் உறுதியா சொல்லிப்புட்டேன். இது எங்கொலத்தொழிலு. இத்தோட இருக்குறதுன்னா வந்து இருக்கட்டும்னு. அவளும் வந்து கொஞ்சநாள் நல்லாத்தான் இருந்தா. அப்பறம் பழயபடிக்கு ஆரம்பிச்சா.

    அப்டித்தான் ஒருநாளு கூத்து முடிஞ்சு ஊட்டுக்கு வரேன் ஆளக்காணோம். பக்கத்தூட்ல இருந்து ஒன்னிய தூக்கிக்கிட்டு ஊரெல்லாம் தேடுறேன் இல்ல. அவ ஊருக்குபோயி பார்த்தா அங்கயும் தாக்கலில்ல. அப்டியே ஒரு மாசம்போச்சு. நம்மூரு மணியக்காரருதான் ஒருநா வந்து சொன்னாரு. பக்கத்தூரு மைனரு வூட்ல வெப்பாட்டியா கெடந்தாளாம் ஒங்கம்மா.

    மணியக்காரரும் என்னென்னவோ எடுத்துச் சொல்லிருக்காப்ள. அவ அசரவே இல்லியாம். வரவே மாட்டமின்னு சொல்லிட்டாளாம். நானும் போவல”

    சண்முகத்திற்கு படிப்பு நன்றாக வந்தது. முடித்தபிறகு அப்பாதான் எங்கெங்கோ அலைந்து சிபாரிசு பிடித்து சர்க்கார் வேலைவாங்கிக்கொடுத்தார். உடல்நிலை நன்றாக இருந்தவரை கூத்துக்குச் சென்றார்.

    “ஒனக்கு எம்மேல எதுவும் கோவமிருக்கா சம்முவம்”?

    “எதுக்குங்கப்பா”?

    “ஒன் கண்ணுலியே வேசங்கட்ற ஆசையப்பார்க்கமுடியுது தம்பு. ஆனா இது ஒரு சாபப்பொழப்புய்யா. ஒருத்தன் சும்மாவாச்சும் இதய செஞ்சிரமுடியாது. உசுரா நெனச்சு எறங்கினாத்தான் இதுல சரிப்படும். என்னமோ ஒனக்கு இது வேனாமுன்னு எம்மனசுல விளுந்துருச்சி. அதான் ஒன்னிய கடசிவரை உள்ள இழுக்கல்லே”

    “இல்லங்கப்பா. எனக்கும் ஆசயிருந்துச்சி. ஆனா ஒம்பவிசு எனக்கு வராதுன்னு தெரிஞ்சபொறவுதான் தெளிஞ்சிகிட்டேன். எங்கப்பாரு எனக்கு நல்லதுதாம் செய்துருக்கீங்க”

    “இல்ல சம்முவம். நா செஞ்சதுலாம் தப்புத்தான். நாலுபேரு பாராட்டுற கெறக்கம் இருக்குபாரு. அது என்னவேனா செய்யும் நம்மள. என்னிய அப்புடித்தான் கவுத்துவிட்டுருச்சி. நாலு பாட்டிலு குடிச்சமாதிரி ஒரு மெதப்பு. ‘ஸ்தீரிபார்ட் சின்னையனா பிரமாதமான கூத்தாடியாச்சே’ அப்டீன்னு நாலுபேரு சொல்லுறப்ப வர வெறி இருக்குபாரு. அது பொம்பள சொகத்தவிட பெருசா இருக்கும்”

    “நா ஒங்கள ஒன்னு கேக்கவாப்பா”?

    “கேளுய்யா”…

    “அம்மாமேல ஒங்களுக்கு கோவமே வர்லியா”?

    அருகிலிருந்த புல்லைப் பிடுங்கி கொஞ்சநேரம் கடித்துக்கொண்டு யோசித்தார்.

    “அவ செஞ்சதுல தப்பு எதுவுமில்ல தம்பு. ஒரு புருசனா எங்கிட்டதாம் தப்பு. அவள சந்தோசமா வச்சுக்கல. எப்பமும் கூத்து வேசமுன்னே சுத்திக்கிட்டிருந்தேன். சோறு செய்யாதப்போதான் அவ நெனப்பும் அவமேல கோவமும் வரும். ஒன்னக்கூட வுட்டுட்டுபோவும்படி அவள வாட்டிருக்குறேன் பாரு. எந்தப்புதான் எல்லாம்”

    “இல்லங்கப்பா. நீங்க என்ன சொன்னாலும் அம்மா செஞ்சது ஏத்துக்க முடியாது. நா அவள என்ன செஞ்சேன்”?

    அப்பா சிரித்தார். கண்னில் நீர்வரச்சிரித்தார்.

    “நீ எங்கூடவே நெழலு மாதிரி இருந்துட்ட சம்முவம். அதுங்கூட நாஞ்செஞ்ச தப்புத்தான்”

    ஒருநாள் அளவிற்கதிகமாக குடித்துவிட்டு வந்தார். சண்முகம் அவர் குடிப்பதைப்பற்றி எதுவுமே சொன்னதில்லை. ஆனால அன்று மிதமிஞ்சிய போதை. இடுப்புத்துணிகூட நிற்காதபடி. என்னென்னவோ புலம்பினார். சிரித்தார். அழுதார். சுவற்றில் தலையை முட்டிக்கொண்டார்.

    மறுநாள் காலை சாதாரணமாக சங்கதி சொன்னார். அம்மா இறந்துபோய்விட்டாளாம். எத்தனை மோசமான உயிரென்றாலும் இறந்தபிறகு வெறுக்கமுடியாதுபோல. சண்முகம் மறுத்துவிட அவர்மட்டும் சென்று காடுவரை வழியனுப்பிவிட்டு வந்தார். அன்றுதாம் அரவான் கூத்தாடி பக்கவாதத்தில் விழுந்தது. அம்மா இறந்தது அவரை ஏதோ ஒரு வகையில் பாதித்துவிட்டது.

    வாழ்வின் போக்குகளைபற்றி எத்தனை யோசித்தும் குழப்பம்தான் மிஞ்சியது சண்முகத்திற்கு. அப்பா கூத்துக்கட்டுவதை விட்டிருந்தால் அம்மா கூட இருந்திருக்கலாம். அம்மாவிற்கும் கூத்திலோ அப்பாமேலோ விருப்பமிருந்திருந்தால் அம்மா கூட இருந்திருக்கலாம். கடைசிகாலத்தில் அப்பா குழறலாக சொன்னதெல்லாம் ஒன்றுதான்.

    ஒலகத்துல எல்லாத்தையும்விட மனுஷங்கதான் முக்கியம் சம்முவம். அதுங்களை கூட வச்சுக்கத்தான் வாழ்க்கை. அதுங்களுக்கு புடிசமாதிரி இருந்து சந்தோசமா வச்சுக்கத்தான் போராட்டம். கூட இருக்குறவன் அழுதா என்ன செத்தா என்னன்னு இருக்குறதுல மனுசனாப்பொறந்து பலனில்ல.

    வீட்டிற்குள் நுழைந்தபோது பிள்ளை தூங்கிக்கொண்டிருந்தான். நைட்டியில் சோம்பல் முறித்த மனைவியிடம் பணத்தை கொடுத்துவிட்டு வந்து படுத்துக்கொண்டேன். காலை எழுந்ததுமே மகன் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆட்டம்போட்டான். அவன் ஸ்கூலுக்குச்சென்றபின்பு மனைவி அந்த போட்டோவைக் கொண்டுவந்து காட்டினாள்.

    மகனின் ஸ்கூல் மாறுவேடப்போட்டியில் எடுக்கப்பட்ட போட்டோ. தெர்மாக்கோல் கதாயுதத்துடன் கர்ணன் வேஷத்தில் மகன் சிரித்தபடி நின்றிருந்தான்.

    Share