வரம்
— மாதவன் ஸ்ரீரங்கம்.
மணியடித்ததும் பையைத்துக்கிக்கொண்டு சண்முகத்தைப் பார்த்தன பிள்ளைகள். அவன் கையிலிருந்த கடிகாரத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டான். புத்தகத்தை மூடிவைத்துவிட்டுத் தலையாட்ட சிட்டாகப் பறந்தார்கள் எல்லோரும். கடைசியாக தமிழரசியும் வந்து மேஜைமீதிருந்த அவள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிய பின் சண்முகம் எழுந்திருக்காமல் உட்கார்ந்திருந்தான்.
வெளியே மழைவருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. காற்று மைதானத்தின் மணற்புழுதியை வாரிக்கொண்டுவந்து வகுப்பில் போட்டுவிட்டுச் சென்றது. கரையான் அரித்திருந்த மர ஜன்னல்கள் தடுப்புக்கட்டையைத் தாண்டி ஆடிக்கொண்டிருந்தன.
பியூன் துரை வந்து ஹெட்மாஸ்டர் அழைப்பதாகக் கூற, தயக்கத்துடன் எழுந்துகொண்டான். வராந்தாவில் நடக்கையில் பீட்டி மாஸ்டர் செபாடியன் சிரித்தபடி கையசைத்தார். மைதானத்தில் இன்னும் சில பெரிய பையன்கள் ஃபுட் பால் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஹெட்மாஸ்டர் அறையில் கற்பகம் டீச்சர் பேசிக்கொண்டிருந்தாள். இவன் மரியாதை நிமித்தம் கதவை சப்தம் செய்ய ஹெட்மாஸ்டர் “எஸ் கமின்” என்றார்.
சண்முகம் உள்ளே நுழைந்ததும் கற்பகம் எழுந்து கிளம்பிவிட்டாள். இவனைப்பார்த்து ஒரு வருத்தத்துடன்கூடிய புன்னகையை அவள் வெளியிட்டதாகத் தோன்றியது தனது பிரமையாக இருக்குமோ என யோசித்தான். ஹெட்மாஸ்டர் ராமகண்ணப்பன் இவனை உட்காரச்சொல்லிவிட்டு ஜன்னலுக்கு வெளியே நின்ற அசோகமரங்களை வேடிக்கை பார்க்கத்துவங்கினார். அவர் எதைப்பற்றி பேசப்போகிறார் என்று ஊகிக்கமுடிந்தது.
“சொல்லுங்க சார்” என்று சண்முகமே பேச்சைத் தொடங்கினான்.
அவர் தனது விரல்நகங்களை ஆராய்ந்தபடி கேட்டார்.
“எதாச்சும் வெவரம் தெரிஞ்சிச்சா சண்முகம்?”
அவன் எதிர்கொள்ளவே விரும்பாத கேள்வி அது. பலருக்கும் பதில்கூறிச் சலித்துவிட்ட கேள்வி. கடந்த ஒருமாதமாக செல்லுமிடமெங்கும் சண்முகத்தை விடாமல் துரத்திவரும் கேள்வி. பள்ளிக்குக்கூட பலநாள் விடுப்பெடுத்து வீட்டிற்குள்ளேயே முடக்கிவைத்த கேள்வி. அவனுக்கு மிகவும் அயர்ச்சியாயிருந்தது. ஆனால் பதில்கூறாமலிருக்கமுடியாது. கேலிக்காகவும் ஆர்வத்திலும் எழும் கேள்வியல்ல அது. ஹெட்மாஸ்டர் ராமகண்ணப்பன் சண்முகத்தின்மீது மிகுந்த அக்கறை கொண்ட மனிதர். நிச்சயம் மற்றவர்களைப்போல அவரை தவிர்த்துவிடமுடியாது.
” விசாரிச்சவரைக்கும் மதுரையில இருக்கிறதாச் சொல்றாங்க சார்”
“பொறவு என்ன ? நேருல போயி நாலு நல்லவார்த்தை சொல்லிக் கூட்டியாந்திர வேண்டியதான சண்முகம்?”
எத்தனை சுலபமான தீர்வு ? யதார்த்தத்தில் அது சாத்தியமா என்ன ? என்றென்றைக்குமாய் வேண்டவே வேண்டாமென்று தூக்கிப்போட்டுவிட்டுச் சென்றவளை நேரில் சென்று வா என்றால் வந்துவிடுவாளா என்ன ?
” இல்ல சார். நேத்து அவ தங்கச்சி வந்திருந்திச்சி. எம்முன்னாடிதான் ஃபோன்ல பேசிச்சு. ஒரே முடிவா வரமாட்டன்னு சொல்லிருக்காப்ள”
ஹெட்மாஸ்டர் அவனை தர்மசங்கடமாகப் பார்த்தார். கடைசியில் அதுமட்டும்தான் எல்லோராலும் சாத்தியம். ஊருலகமே அப்படித்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றது. அய்யோ பாவம் என்று அவர்கள் உச்சுக்கொட்டும் சப்தம்தான் கேட்கவில்லை. நிஜத்தில் இந்த அனுதாபங்கள் தான் அவனை அதிகம் இம்சிக்கின்றன.
” எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல சண்முகம். நீ ரெம்ப நல்ல மனுசன். ஒனக்கு இது நடந்துருக்கவேணாம்”
அவன் பதிலேதும் கூறாமல் அமைதியாக இருந்தான். துரை கதைவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தான். கையிலிருந்த சாவிக்கொத்துகளை ஹெட்மாஸ்டர் டேபிள்மேல் வைத்துவிட்டு கிளம்புவதற்கான அவர் அனுமதிக்காக காத்திருந்தான். அவர் அவனிடம் வழக்கமான விசாரிப்புகள் முடித்துவிட்டு அனுப்பினார். அவன் சென்றபின் மறுபடி கேட்டார்,
” அவங்க அப்பாம்மா என்ன சொல்றாங்க?”
” அவங்க என்னத்தை சொல்லுவாங்க. வரப்ப போறப்ப எல்லாம் ஓன்னு அழுவையும் ஒப்பாரியுந்தான்”
“சாப்பாடு போக்குவரத்தெல்லாம் ?”
” நானாத்தான் செஞ்சுக்கிறேன் சார்”
வெளியே மெலிதான மழை தூறத்தொடங்கியது. ஹெட்மாஸ்டருக்கு பின்புறமிருந்த ஜன்னலின்வழி சாரல் அறைக்குள் புகுந்தது. சற்றுநேரத்திற்கெல்லாம் பீட்டி மாஸ்டர் சில பையன்களுடன் வந்தார். பையன்கள் கையிலிருந்த ஃபுட் பாலை உள்ளறைக்குள் கொண்டுபோய் வைத்துவிட்டு ஓசையின்றிக் கிளம்பினார்கள். இவர்கள் பர்சனலாக பேசிக்கொண்டிருப்பதை குறிப்பாலுணர்ந்தபடி பீட்டி மாஸ்டரும் ராமகண்ணப்பனிடம் தலையாட்டிவிட்டு வெளியேறினார்.
“மதுரைல நமக்கு வேண்டப்பட்டவங்க இருக்காங்க சண்முகம். எதாச்சும் ஒத்தாசை வேணும்னா தயங்காம சொல்லு”
“தேவைப்பட்டா அவசியம் சொல்றேன் சார்” என்றபடி சண்முகம் எழுந்துகொண்டான்.
” நா கெளம்பறேன் சார்”
“சரி சண்முகம். நா அப்பறமா வீட்டுப்பக்கம் வரேன்” என்று விடைகொடுத்தார்.
லேசாக தலையில் கைவைத்து மழைக்கு மறைத்தபடி கேட்டை கடந்தபோது, அருகாமை பஸ்டாப்பில் பீடி புகைத்துக்கொண்டிருந்த துரை தனது முதுகையே உற்றுப்பார்த்ததுபோலிருந்தது.
ஒரு பெண் தனது புருஷனை விட்டுவிட்டு வேறொருவனுடன் ஓடிவிடுவது அந்த புருஷனுக்கு உண்மையிலேயே பெருத்த அவமானம்தான்போல என்று நினைத்துக்கொண்டான்.
வீடு அதிக தூரமில்லை. பள்ளியிலிருந்து பத்துநிமிட நடையில் சேர்ந்துவிடலாம். சண்முகம் பிரதான சாலையைத் தவிர்த்து ரைஸ்மில்லை ஒட்டிய சிறிய சந்தில் நுழைந்து நடந்தான். பிரதான சாலையில் கடைவீதியைக் கடந்து செல்லவேண்டியிருக்கும். சிறிய ஊரின் மிகச்சிறிய கடைத்தெரு என்பதால் எல்லோருக்குமே சண்முகத்தை தெரிந்திருக்கும்.
எத்தனை யோசித்தும் அவனால் காரணத்தை கண்டுபிடிக்கவே முடியவில்லை. சண்முகத்தின் குடும்பம் மதுரைக்கு அருகே இருக்கிறது. இந்த ஊரில் வாத்தியார் வேலை கிடைத்ததும் வரவேண்டியதாயிற்று. அப்பா ஊர் நாட்டாமை. மேலிடங்களில் மாற்றலுக்கு பேசிப்பார்த்தார். ஒன்றும் நிகழவில்லை. அம்மாவிற்கு உடல்நிலை அத்தனை சிலாக்கியமில்லை என்பதால் சண்முகம் இங்கே தனியாகவே இருக்கவேண்டியதாயிற்று.
இங்கு வேலைக்கு வந்தபின் சாப்பாடுதான் பெரிய பிரச்சனையாக இருந்தது ஆரம்பத்தில். அதற்காகவே அவனுக்குத் திருமணம் செய்வதென்று முடிவெடுத்தார்கள் வீட்டில். முயற்சியில் இறங்கியபோதுதான் தெரிந்தது பெண் கிடைப்பதன் சிரமங்கள். செய்தித்தாள்கள் மூலமும், புரோக்கர்கள் மூலமும் நிறைய அலைந்து, இறுதியாக தூரத்து உறவினர் மூலம் அருப்புக்கோட்டையிலிருந்து ஜாதகம் வந்தது.
குடும்பத்துடன் சென்று பார்த்து, பஜ்ஜி பலகாரங்கள் தின்றுவிட்டு பத்து சவரனுக்கு ஒப்புக்கொண்டு நிச்சயம் செய்தார்கள். செல்வியுடன் தனியாக சிலநிமிடங்கள் பேசியபோது அவளுக்கும் சம்மதம் என்பதாகத்தான் கூறினாள். காதல் கீதல் எதிலும் விருப்பமில்லை என்றாள். சண்முகத்தின் வேலைபற்றி, பள்ளியிருக்கும் ஊர்பற்றியெல்லாம் நிறைய ஆர்வத்துடன் கேட்டு தெரிந்துகொண்டாள். திருமணம் பற்றிய எவ்விதக் கனவுகளும் சண்முகத்துக்கு இருந்ததில்லை.
ரைஸ் மில் கனத்த மவுனத்துடன் நின்றிருந்தது. பவர் கட்டாக இருக்குமென்று நினைத்துக்கொண்டான். வீடிருக்கும் தெருவில் ஒரு காலிமனை நிறைய எருக்கஞ்செடிகள் வளர்ந்திருந்தன. செல்விக்கு எருக்கஞ்செடியென்றாள் நிரம்பப்பிடிக்கும். அதன் மொட்டுக்களை பட்பட்டென்று உடைத்து குழந்தைபோல குதூகலிப்பாள். அவளுடன் வாழ்ந்தது மூன்றுமாதங்கள்தான் என்றாலும் அசைபோட ஆயிரம் விஷயங்கள் எஞ்சிக்கிடப்பது அவனுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.
மழை பெரிய துளிகளுடன் படார் படாரென்று முகத்திலைறையும்போது அவன் வீட்டுத்திண்ணையில் ஏறி நின்றுகொண்டான். பூட்டைத்திறந்து வீட்டிற்குள் நுழையவே விருப்பமில்லை அவனுக்கு. பாக்கெட்டில் கைநுழைத்து வீட்டுச்சாவியை எடுத்தான். சிலசமயம் சாவியை மறந்து பள்ளி மேஜை டிராயரிலேயே வைத்துவிட்டு வந்துவிடுவான். நல்லவேளையாக இன்று மறக்கவில்லை.
சலிப்புடன் வீட்டிற்குள் செல்ல வெறுமை வரவேற்றது. வீட்டின் நடுவே செல்வியின் புடவை கொடியில் ஆடிக்கொண்டிருந்தது. திருமணமாகி வந்தபின் அவன் செல்விக்கு வாங்கித்தந்த முதல் புடவை அது. அதை நகர்த்தாமல் குனிந்து உள்ளே சென்றான். சமையல் மேடையில் காலை சமைத்த பாத்திரங்கள் கழுவாமலிருந்தன. ஒரு பால் பாத்திரத்தையும் தம்ளரையும் மட்டும் கழுவினான். பிரிட்ஜைத் திறந்து பால் பாக்கெட்டை உடைத்து தேநீர் தயாரித்துக்கொண்டான்.
செல்வி பிரமாதமாக சமைப்பாள். அவள் போடும் தேநீரின் ருசி குடித்து அரைமணியாகியும் நாக்கைவிட்டு அகலாது. தேநீருடன் வந்து திண்ணையில் உட்கார்ந்து மழையை கவனித்தான். மழைநீர் அவன் கால்களை நனைத்ததை சட்டைசெய்யாமலிருந்தான்.
மூன்றுமாதத்தில் ஒரு சண்டையில்லை, சங்கடங்கள் இல்லை. அவள் முகம் வாடியதுகூட இல்லை. மாலையானால் பஸ்ஸேறி டவுனுக்குச்சென்று ஊர்சுற்றிவிட்டு ஏதேனும் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வருவார்கள். அவளுக்கு சண்முகத்தை பிடிக்காமல் போவதற்கான எவ்வித முகாந்திரங்களும் தெரியவேயில்லை. தாம்பத்ய உறவும்கூட பிரச்சனைகளின்றி சரியாகவே இருந்தது. அவளுடைய திருப்தியைக் கேட்காமல் முடித்துக்கொண்டதேயில்லை அவன் முயக்கங்களை.
செல்போன் ஒலித்தது. செல்வியின் அம்மாதான். இப்போதெல்லாம் இது வாடிக்கையாகிவிட்டது. பள்ளிவிட்டு வரும் நேரத்தில் சரியாக போன் செய்து விசாரிக்கிறாள். சண்முகம் அழைப்பை எடுக்கவில்லை. எடுத்தால் அழுவாள். மன்னிப்புக் கேட்பாள். யார் செய்த பிழைக்கு யார் மன்னிப்புக்கேட்பது ? உண்மையில் சண்முகத்திற்கு உள்ளுக்குள் ஏதோ அறுந்துவிட்டது. வாழ்வு பற்றிய அபிப்பிராயங்கள் அர்த்தங்கள் அனைத்துமே குழப்பமாகத் தோன்றின. எவ்வித கெட்ட பழக்கங்களுமில்லாத ஒருத்தனை ஏன் ஒரு பெண் விட்டுச்செல்கிறாள் ?
சண்முகத்தின் அப்பாதான் இடிந்துபோய்விட்டார். வரன் பார்த்துக்கொடுத்த உறவினருடன் சண்டையிட்டு முறித்துக்கொண்டார். ஊரோடு வந்துவிடும்படி வற்புறுத்திக்கொண்டிருந்தார். அம்மா வேறு பெண் பார்க்கிறேன் என்று கிளம்பினாள். சண்முகம் மறுத்துவிட்டான். சமீபமாக செய்தித்தாள்களின் மணமக்கள் தேவை விளம்பரங்கள் பார்க்கும்போதெல்லாம், மார்க்கெட்டில் தனக்கான விலை குறைந்திருப்பதை புரிந்துகொண்டான். மறுபடி ஒரு திருமணம் பற்றி யோசிக்கவே முடியவில்லை அவனால்.
மழை விட்டு விட்டு பெய்துகொண்டேயிருந்தது. உள்ளே சென்று பாத்திரங்களைக் கழுவிவைத்தான். அழுக்குத்துணிகளை ஒரு ஓரமாக குவித்து வைத்தான். இரவு உணவுக்கு ஏதாவது செய்யலாமா என்று யோசித்து, பிறகு சலிப்புடன் ஓட்டலில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான். உடைமாற்றிக்கொண்டு வீட்டைப்பூட்டிவிட்டு குடையுடன் வெளியேறினான். டவுனுக்குச் சென்று ஏதேனும் ஒரு தியேட்டருக்குப்போய் சினிமா பார்த்துவிட்டு அப்படியே சாப்பிட்டுவிட்டு வரலாமென்று முடிவு செய்தான்.
சினிமா பார்க்கும் மனநிலை இல்லைதான். ஆனால் வீட்டிலிருந்தால் மனம் யோசித்தே மாய்ந்துபோகும். எல்லாமே கனவாக இருந்தால் எத்தனை நன்றாக இருக்குமென்று நினைத்துப்பார்த்தான். எல்லாம்விட, கடைசிவரை அவள் தன்னை விட்டுச்சென்றதன் காரணம் தெரியாததுதான் அதிகம் வதைத்தது. இம்முறை ரைஸ்மில்லைக் கடக்கும்போது கடகடகடவென இரைந்துகொண்டிருந்தது. கரண்ட் வந்திருக்கவேண்டும்.
பிரதான சாலைக்கு வந்து நகரத்துவங்கிய டவுன் பஸ் ஒன்றை நிறுத்தி ஏறிக்கொண்டான். பேருந்தில் கூட்டமில்லை. மூடியிருந்த ஜன்னலை திறக்க மழை சண்முகத்தை நனைத்தது.