சிறுகதைகள்

தண்ணீரில் தத்தளிப்பவன்

 மாதவன் ஸ்ரீரங்கம்.

என் நிலையைப் புரிந்துகொள்வது உங்களுக்குச் சற்றுச் சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் இதுதான் நிஜம். அவனை ஒரு அடகுக்கடையில்தான் சந்தித்தேன். நான் யார் என்ன என்னும் வியாக்கியானங்களெல்லாம் வேறொரு சந்தர்ப்பத்தில் சாத்தியப்பட்டால் விளக்குகின்றேன். இப்போது அடகுக்கடை.

அவன் ஆள் ஒரு மார்க்கமாக இருந்தான். என் மனைவியின் தாலியை அடகுவைக்க சென்றிருந்தேன். பொதுவாக நகைகளை அடகுவைப்பவர்களை புழுபூச்சிகள் போலத்தான் பார்ப்பார்கள். கொத்தாக நெக்லஸ் ஒட்டியானம் மாதிரி பெரிய ஐட்டங்களாக அடகு வைப்பவர்கள் பேங்கிற்குத்தான் செல்வார்கள்.

இது தாலியாயிற்றே. அங்கெல்லாம் செல்ல நேரமோ விருப்பமோ வாய்க்கவில்லை எனக்கு. தாலியை வாங்கி பார்த்துவிட்டு அல்ரெடி இங்கு வைத்திருக்கிறீர்களா என்று கேட்டார்கள். இல்லையென்றதும் யாரேனும் தெரிந்தவர்களை அழைத்துவா என்று சொல்லிவிட்டார்கள். செய்வதறியாமல் தாடையைச் சொறிந்து கொண்டிருந்தபோதுதான் அவன் அங்கு வந்தான்.

அவன் பிறகு, முதலில் தாலி. ஒருவன் தாலியை அடகு வைக்கின்றான் என்றால் அதைவிட அவன் ஏழ்மையைப் பறைசாற்ற வேறு எதுவும் தேவையில்லை. வறுமை என்று சொல்ல மனம் ஒப்பாததால் ஏழ்மை என்கிறேன். அவன் உள்ளே நுழைந்து என்னருகில் உட்கார்ந்துகொண்டான். கடை சற்று பிஸியாக இருந்தது.

நான் எழுந்துகொண்டேன். வெளியே வந்து அருகிலுள்ள டீக்கடையில் டீ சொல்லி சிகரெட் பற்றவைத்துக்கொண்டேன். கையிலிருந்த இருபது ரூபாய் காலி. நீங்கள் நினைக்கலாம், இந்த சிகரெட் சமாச்சாரத்தையெல்லாம் விட்டுவிட்டால் நிறைய சேமித்து உருப்பட்டுவிடலாம் என்று.

இருப்பதே அந்த ஒரு பழக்கம்தான். அதுவும் பொறுக்கவில்லையா? பக்கத்திலிருந்த ஒரு கோவில் திண்ணையில் நிழலில் ஒன்றிரண்டு ஆடுகள் படுத்திருந்தன. அருகில் நான் உட்கார்ந்தபோது அவை என்னைத் தடைசெய்யவில்லை. இந்த ஆடுகள் மாதிரி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். வேலை காசு பணம் அடகு கல்யாணம் வீட்டுவாடகை பால்பணம் குழந்தைவளர்ப்பு பள்ளிக்கட்டணம் மொய்கள் எதுவும் தேவையில்லை.

கிடைத்த கிளையில் இலைதின்று கிடைக்கும் நிழலில் அசைபோட்டு நிம்மதியான வாழ்வு. அருகில் நிழலாட அவன் நின்றிருந்தான். என்ன என்பதுபோல் பார்த்தேன். அவன் எனக்கருகில் மெலிதாக என்னை உரசியபடி உட்கார்ந்துகொண்டான். நான் எதுவும் பேசும் மனநிலையிலில்லை. அடகு வைப்பதற்குக்கூட தெரிந்தவர்கள் யாரேனும் வேண்டுமாம். எனக்கு இங்கு யாரையும் தெரியாது. தெரிந்துகொள்ளவில்லை.

எதற்கு அங்கே உட்கார. அதுதான் எழுந்து வந்துவிட்டேன். எனக்கு அழவேண்டும்போலிருந்தது. வாய்விட்டு மனம்விட்டு அழவேண்டும். அதற்கு தனிமை வேண்டும். அதற்குக்கூட வழியில்லாமல் அருகில் வந்து உட்கார்ந்துகொண்டிருக்கிறான் எவனோ ஒருவன். எனக்கு எல்லையில்லாத கோபம் வந்தது.

“என்ன பிரச்சனை உனக்கு”? என்றான்.

“அத தெரிஞ்சு நீங்க என்ன செய்யப்போறீங்க ? போங்க சார். உங்க வேலையப்பாருங்க”

“ஏன் இவ்ளோ வெறுப்பா பேசுற”?

எனக்கு வந்த ஆத்திரத்திற்கு அளவேயில்லை. என் பாக்கெட்டிலிருந்த பேப்பர் சுருளை எடுத்து அவனிடம் காண்பித்தேன்.

“இது என்ன தெரியுமா ? என் பொன்டாட்டி தாலி. இதான் என் வீட்ல இருந்த கடைசீ தங்கம். இத அடகு வச்சா ரெண்டாயிரம் ரூவா கெடைக்கும். அதவச்சுத்தான் ஒருத்தனுக்கு வட்டி கட்டணும். அப்பவும் பத்தாது. புள்ளைக்கி பால்பணம் கட்டாம ரெண்டிநாளா நிப்பாட்டிட்டான். ஊட்ல அரிசி காலி. இதான் என் நெலமை. கோவப்படாம?”

“புரியுது”…

“என்ன புரியுது ? அதெல்லாம் ஒன்னும் புரியாது. வார்த்தையா புரியறது இல்ல. வாழ்க்கை புரியணும்” என்றபடி பாக்கெட்டில் அணைத்துவைத்திருந்த பாதி சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டேன். அவன் என்னையே புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

“உனக்கு ஒரு கதை சொல்றேன்” என்றவனை சற்றே அசூசையாகப் பார்த்தேன். யாரிவன் ? எதற்காக என்னுடன் வந்து உட்கார்ந்துகொண்டிருக்கிறான் ? என்றெல்லாம் யோசித்தபடி சிகரெட்டை இழுத்தபடியிருந்தேன்.

“என்ன கதைவிடப்போறீங்க?”

“தண்ணீரில் தத்தளிப்பவன் கதை”

நான் என் மொபைலை எடுத்துப்பார்த்தேன். இன்னும் நேரமிருக்கிறது. அவன் சொல்லும் கதையைக் கேட்க பெரிதாக ஆர்வமில்லை எனக்கு.

“ஒன்னு சொல்றேன் கோவிச்சுக்காதீங்க பாஸு. நீங்க சாப்ட்டீங்கன்னு நெனைக்கிறேன். நா இன்னும் சாப்பிடல. வீட்ல அரிசிக்கிக்கூட வழியில்ல. கதை கேக்கணும்னாகூட காதுல பசியடைஞ்சிருக்கும்போது சாத்தியமில்ல”

“நீ மொத உன் பிரச்சனைகளை சரியா பார்க்கக் கத்துக்கோ. என்னமோ உனக்கு மட்டுந்தான் உலகத்துல பிரச்சனை இருக்கிற மாதிரி?”

“ஹஹ்ஹ்ஹ்ஹா நா அப்டீன்னு சொன்னனா உங்ககிட்ட ? ஒடனே அட்வைசுக்கி கெளம்பிருவீங்களே”

“அட்வைஸ்ங்கிறதை ஏன் தப்பா நெனைக்கிற ? அது தகவல்கள்தான். அதோட அடிப்படைல இருக்கிறதுகூட அன்புதான்”

நான் சிகரெட்டினை முழுதாக இழுத்து வீசியெறிந்துவிட்டு ஒரு கொட்டாவி விட்டேன்.

“இந்த உலகத்துல எல்லாருக்குமே பிரச்சனைகளும் வருத்தங்களும் இருக்கத்தான் செய்யுது”

“பாஸ் பாஸ்.. போதும் நிறுத்திக்கங்க. நானே மூச்சுவிடாம மூனுமணிநேரம் பாஸிட்டிவ் ஆட்டிட்யூட் பத்திப் பேசுவேன். பிராக்டிக்கலா செட்டாவற மாதிரி எதாவது இருந்தா சொல்லுங்க. இல்ல கெளம்புங்க”

அவன் இப்போது விசித்திரமான ஒரு காரியம் செய்தான். சட்டென்று தான் கட்டியிருந்த லுங்கியை விலக்கி தன் இடதுகாலை காட்டினான். அங்கே தொடைக்குக்கீழே மரக்கால் இருந்ததைப்பார்த்து மிரண்டுவிட்டேன்.

“என்னாச்சு” ? என்றேன் அவனிடம்.

“கார்கில் வார்ல ஒரு தோட்டா பாஞ்சிருச்சி மொழங்கால்ல. ரிமூவ் பண்ணமுடியாம உள்ளயே இருந்து கொஞ்சகொஞ்சமா அரிச்சு முழு காலையும் எடுக்கவேண்டியதா போயிடுச்சி”

சட்டென்று எனக்கு அவன் மீது ஒரு பரிவும் மரியாதையும் வந்தது. அவனை நன்றாகக் கவனித்தேன். ஷேவ் செய்யப்படாத நரைமீசை தாடி முகம். மெலிதாக தலையில் வழுக்கைத்தொடங்கியிருந்தது.

“காலை எடுத்தது தெரிஞ்சப்ப எனக்கிருந்த மனநிலை கொடுமை. என் கர்னல் ஒருத்தரு. ஹிந்திக்காரரு. அவருதான் என்னை மீட்டுக் கொண்டுவந்தாரு”

நான் அமைதியாக இருந்தேன்.

“ஒலகத்துல தீராத பிரச்சனைன்னு ஒன்னு இல்லவேயில்ல. சிலதுக்கு கொஞ்சம் டைமெடுக்கும் அவ்ளோதான். தேவையெல்லாம் பொறுமையும் காத்திருப்பும்தான்”

“ஹஹ்ஹ்ஹா அந்த டைம் நம்மகிட்ட இல்லைன்றதுதான் பிரதர் பஞ்சாயத்தே”

இப்போது அவன் சிரித்தான்.

“தி டைம் இஸ் அன் இல்யூஷன். இட்ஸ் ஆல்வேஸ் டிப்பென்டிங் ஆன் அவர் விஷன். நாம இருக்குறவரைதான் நமக்கான டைமும் இருக்கும். டைமை உருவாக்குறதும் அழிக்கிறதும்கூட நம்ம கைலதான் இருக்குன்றது நமக்கு தெரியாததுதான் பிரச்சனை. பொறுமைதான் இல்ல நம்மகிட்ட”

“இன்னும் அரைமணி நேரத்துல என் கடன்காரன் வீட்டுக்கு வந்துருவான் வட்டிப்பணம் வாங்க. பொறுமை எனக்கிருந்து என்னா செய்ய ? அவுருக்கு இல்லியே?”

“சும்மா கடன் குடுத்தவன் மேல பழிபோடாத. ஒன்னு: எந்த கடன்காரனும் நம்மளை வற்புறுத்தி நமக்கு கடன் தரதில்ல. ரெண்டு: அவன் சொல்ற தவணைக்கு முன்னாடி நிச்சயம் அவன் நம்மளை தொந்திரவு தரதும் இல்ல. நாம லேட் பண்ணிட்டு அவங்களை திட்டி என்ன செய்ய?”

எனக்கு அவன் லாஜிக்கில் இருந்த நியாயம் புரிந்தது.

“உன் தேவைக்கு நீ கடன் வாங்குற. உன்னால திருப்பமுடியுமா முடியாதான்னு நீதான் யோசிச்சிருக்கனும். உன்னால முடியாமப்போனதுக்கு கடன் குடுத்தவன் என்ன செய்வான்”?

“ஆமாம் பாஸு. பொண்டாட்டிக்கி ஒடம்புக்கு முடியாம ஆப்பிரேஷனுக்கு படுத்திருக்குறப்ப, நமக்கு திருப்பித்தரமுடியுமான்னா யோசிக்கமுடியும்? இல்ல செலவுகள் எல்லாம் நம்மகிட்ட சொல்லிட்டுத்தான் வருதா?”

“பாரேன் மறுபடி இப்ப சூழ்நிலைமேல பழிபோடுற. இதையெல்லாம் நீதானே முன் கூட்டியோசனை பண்ணி சேமிச்சு வச்சிருக்கனும். வாழ்க்கையப்பத்தின சரியான திட்டமிடலோ, வாழ்வதற்கான புத்திசாலித்தனமோ வளத்துக்காம யாரையாவது எதையாவது பிளேம் பண்ணியே வாழப் பழகிட்டோம்”

ஒருவகையில் அவன் சொன்னது உண்மை. அலட்சியமாகவே வாழ்க்கையை எதிர்கொண்டது என் பிழைதான்.

“உனக்கு இருக்குற பிரச்சனைகள் தீரவே தீராதுன்னு இல்ல. அது தீரதுக்கு கொஞ்சம் டைமெடுக்கும். அதுக்கு நீ புத்திசாலித்தனமா யோசிச்சாலே போதும். கோடிக்கோடியா கடன் வச்சிகிட்டு சிரிச்சுக்கிட்டே சுத்துறவங்க பலபேர் இருக்காங்க நாட்ல. மொத, பிரச்சனைகளை சரியாப் பாரு. அந்த வளையத்துல இருந்து எப்டி வெளிய வரலாம்னு யோசி. நியாமா நேர்மையா குறுக்கு வழியில்லாம நடக்குறது லேட்டாகத்தான் செய்யும். ஆனா கண்டிப்பா ஒருநாள் கரைசேரலாம். காத்திருக்கனும். ரொம்ப பொறுமையா காத்திருக்கனும்.”

எனக்கு தலையை தண்ணீருக்குள் முக்கிமுக்கி எடுப்பதுபோலிருந்தது. தலையை உதறிக்கொண்டேன்.

“ஒருத்தன் தண்ணீயில தத்தளிச்சிக்கிட்டிருந்தான். அந்த பக்கமா பரிசல்ல போயிட்டிருந்தாரு கடவுள். கடவுளை பார்த்ததும் அவன் சத்தமா கத்த ஆரம்பிச்சுட்டான். யோவ் கடவுளே. நா இங்க சாவக்கெடக்கேன் கண்ணுக்கு தெரியலையான்னு கேட்டான். கடவுள் சிரிச்சுக்கிட்டே,

“மொத நீ எப்புடி இங்க வந்து மாட்டிக்கிட்ட?” என்றார்.

“யோவ் அதெல்லாம் எனக்கு ஞாபகமில்ல. அதுக்கு நேரமுமில்ல. எப்டியாச்சும் என்னியக் காப்பாத்து”

கடவுள் மறுபடி சிரித்தார்.

“யோவ் சிரிக்காதய்யா. எனக்கு நீச்சல்கூடத் தெரியாது. ப்ளீஸ் கொஞ்சம் கைதூக்கிவிடு”

“நீ மொத எந்திரிச்சு நில்லு” அப்டீன்னாரு கடவுள்.

“யோவ் லூசாய்யா நீ ? தண்ணி ஆழம்யா. நின்னா முழுகிருவேன்”

கடவுள் கேவலமான ஒரு வசவு வார்த்தையை அவன்திசையில் வீசினார்.

“எந்திரிச்சு நில்லு. அதான் ஒரே வழி” அப்டின்னு சொல்லிட்டு துடுப்பை போட்டு நவுந்து போயிட்டாரு. அவன் கடவுளை கன்னாப்பின்னான்னு திட்டினான். இனிமே உன்னை கும்பிடுறனா பாருன்னு சபதம் எடுத்துக்கிட்டான்.

கை கால் எல்லாம் பயங்கரமா டயர்டாயிருச்சி அவனுக்கு. மூக்கு வாயெல்லாம் தண்ணி பூந்திடுச்சி. கிட்டத்தட்ட தான் சாகப்போறம்னு அவனுக்கு தெரிஞ்சிருச்சி. செத்துபோன தாத்தா பாட்டியெல்லாம் கண்ணுக்கு தெரிஞ்சாங்க. சுத்திலும் பார்த்தான் ஒரு காக்கா குருவிகூட இல்ல. ரொம்ப நொந்துபோயி அழ ஆரம்பிச்சான். டக்குன்னு என்னமோ தோனுச்சி அவனுக்கு. கடவுள் சொன்ன மாதிரி எந்திரிச்சு நின்னுதான் பார்ப்பமேன்னு காலை தரையில ஊனி முயற்சி பண்ணான். காலுக்கு கீழ மண்ணு வழவழன்னுச்சு. இப்ப தண்ணி அவன் கழுத்துவரை இருந்துச்சி. அப்பத்தான் அவன் யோசிச்சான், அட மடப்பயலே இத்தனைநேரம் ஆழமில்லாத தண்ணியிலயா தத்தளிச்சு அழுது ஒப்பாரி வச்சம்னு சிரிப்பு வந்திடுச்சி அவனுக்கு. நடந்து கரையேறிப்போயிட்டான்”

நான் கதை சொன்னவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு இதுமாதிரி நிறைய நம்பிக்கை கதைகள் முன்பே கேட்டிருந்தாலும், இது கொஞ்சம் தெம்பாகத்தான் இருந்தது.

“நம்ம பிரச்சனைகள் எல்லாமே இப்டித்தான். நாம எந்திரிச்சி நிக்கிறவரை தத்தளிப்பாத்தான் இருக்கும். போயி எல்லா பிரச்சனைகளையும் எப்புடி சமாளிக்கலாம்னு யோசி” என்ற படி அவன் எழுந்துகொண்டான். பிறகு ஒருபக்கமாக சாய்ந்துகொண்டபடி நடக்கத்தொடங்கினான்.

“பாஸு உங்க பேரு”?

“கடவுள்னு வச்சிக்கயேன்” என்றபடி அவன் திரும்பி என்னைப்பார்த்துச் சிரித்தான்.

நானும்தான்.

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (2)

  1. Avatar

    அருமையான தன்னம்பிக்கைக் கதை.
    பிரச்சினைகள் என்றதும் ஐயகோ என்று புலம்புவதை விட ‘இதுவும் கடந்து போகும்’ என்று எதிர்கொள்ளும் பக்குவம் வந்து விட்டால்…
    எல்லாம் முழங்கால் அளவுத் தண்ணீர் தான்!

  2. Avatar

    மிக்க நன்றி தோழர் கனவு திறவோன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க