கவியோகி வேதம்

yoga21

 ‘தீவிர இச்சை’யைக் கட்டுப்படுத்துவது எப்படி?

….. யான் சில அன்பர்கட்கு யோகா கற்றுக்கொடுத்துவரும்போது ஒரு இளம்பெண் கூச்சத்தோடு என்னிடம் சொன்னாள். ‘வேதம் சார்!நீங்கள் சொல்லிக்கொடுக்கும் எல்லாப் பயிற்சிகளையும் நான் தினசரி வீட்டில் தவறாமல் செய்துவருகிறேன். ஆயின் இப்போதெல்லாம் யோகா செய்தபின் கடும் பசி ஏற்படுகிறது. எதையாவது உடனே நிறைய சாப்பிடணும்போல் தீராத ஆசை உண்டாகிறதே.அது ஏன்? முன்பு போல் என்னால் இப்போ தின்னும் ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லையே? ஏன் சார்?’-என்றாள்.

……….. நான் சொன்னேன். ஆமாம். யோகா செய்தபின் பசிக்கும்தான். காரணம் என்னவென்றால், உன் உடம்பிலுள்ள கெட்ட ரத்தம்,கழிவுகள் எல்லாம் அவ்வப்போது உடன் வெளியேறுகிறது.ரத்தமும் சுத்தமாகிறது. வயிற்றிலும்  அதிக அமிலம் சுரந்து ஏதாவது  ‘தின்னத்தா, தின்னத்தா’ என்று நாட்டிய ஜதி  போல் அது பேசுகிறது. இங்குதான் நாம் அதி ஜாக்கிரதையாக இருக்கணும். வயிற்றை அடக்கத்தெரியணும். மெதுவாக அதனிடம் பேசு. ஓவராகத் தின்று என் வயிற்றில் தொப்பை போட விடாதே! உனக்கு வேண்டியது கொஞ்சம் தான் தருவேன். நீ அமிலத்தைக் கிளப்பி நான் அதிகம் தின்று குண்டாகணுமா உன்னால்?,’ என்று  வெறியுடன் கேள். அந்த மன உணர்ச்சியை நீ சரியாகப் புரிந்துகொண்டு அது வெறும்  ‘போலிப்பசி’ என்று உணர்ந்தாயானால் , அந்தந்த வேளையில் மட்டும் மிக அளவாக  உன்  வயிற்றுக்குப்  போட்டாயானால்,உடம்பு சிக் என்று இருக்கும். இல்லையெனில் இருபது வயதுக்குள்   ‘குட்டியானை’ ஆகிவிடுவாய். இது உனக்குத் தேவையா? என யோசி, பின் நன்கு செயல்படு” என்றேன்.

.. அவள் புரிந்துகொண்டாள். அந்த உணர்வு நசையினை அடக்கி இன்னும் தீவிரமாகப் பயிற்சிகள் செய்து, சிப்ஸ், சாக்லெட், முறுக்கு போன்ற எண்ணெய்ப் பதார்த்தங்களை அறவே நீக்கிவிட்டாள். காலை, மதியம், இரவு என்று உணவு வேளைகளையும், உணவின் தரத்தையும் ஒரு  கட்டுக்குள் கொண்டுவந்தாள்.          ……….அந்தக் கன்னிப்பெண்ணின் முகம்இதனால்அதீதப்பொலிவுற்றது. உடம்பும் சிக் என மாறியது. நான் மேலே சொன்ன இந்த அதீத (வேண்டாத)உணர்வுகளைத்தான்   ‘ தீவிர இச்சை’ என்கின்றோம்.

 மனம் ஒன்று சொன்னால் யோசியாமல், சட்டெனச் செயல்படாதிருக்கும் நிலையே யோக ஆன்ம நிலை ஆகும்.. நிதானம் அப்போதுதான் பிடிபடும்.

இதேபோல்தான் யோகாவைத் தீவிரமாகப் பயின்றால் மெதுவாக உங்கள் உள்ளே ஒரு சாத்தான் தோன்றி ‘ செக்ஸ்’ தாகத்தைத் தூண்டும். இது ஒரு கழிவு மாதிரிதானே என்றெல்லாம் அந்த சாத்தான் சமாதானம் சொல்லி உங்களை ‘டெம்ப்ட்’ செய்து படுகுழியில் விழத்தூண்டும். அதற்கு இடம் கொடுத்தால் அவ்வளவுதான். நீங்கள் அம்போ என்று ஆகிவிடுவீர்கள். உடல் சக்தி இழந்து, ஞாபகசக்தி,ஆன்ம சக்தியும் இழந்து, ஒரு ஒல்லிப்பிச்சானாக, எதுவும் பேச சக்தியற்றவனாக ஆகிவிடுவீர்கள். ஜாக்கிரதை! செக்ஸ் உணர்வைக் கட்டுப்படுத்தி,  அதுதரும் நிறைய ஆன்ம சக்தியில்அதனை மெதுவாக கலைகள், கவி, கதை இயற்றல் போன்ற நல்ல வழிகளில் மனத்தைத்  திருப்பிவிட்டீர்களாயின்  உங்கள் வாழ்க்கையே ப்ரம்மானந்தமாகிவிடும்.

 இதனை அவசியம் யோகா பயில்பவர்கள் ஆரம்பத்திலேயே உணர்ந்து ஜாக்கிரதையாகி  அதுதரும் பேரின்ப சக்திமூலம் நல்ல வழிகள் கண்டு வாழ்க்கையை ரம்மியமானதாக ஆக்கிக்கொள்ளவேண்டும். என் யோக ஆசான் ஒரு சமயம் சொன்னார்.. ‘எப்படி பளுதூக்கும் குண்டு உன் கைகால் சதைகளை வலிமைப்படுத்துகிறதோ, அப்படியே  ‘டெம்ப்டேஷன்’ என்கிற தீவிர இச்சையைக் கட்டுப்படுத்தும்  உன் உள்மன  ‘ஆற்றல்’ உன்னைத் தூக்கி  மேலே நிறுத்தி  ஆத்மாவிற்கு அதிகமான தெய்வீக சக்தியைக் கொடுக்கிறது. இதற்கு  நான் சந்தித்த ஒரு நல்ல  மனிதனின்கதையை உதாரணமாகச் சொல்கிறேன். அப்போதுதான் உங்களுக்குப்புரியும்!

    ……எங்கள் ஊருக்கு அருகே ரங்கசமுத்திரம் எனும் சிற்றூர் இருக்கிறது. சிறுவயதில் நச்சுத்தீனி தின்று உடம்பு குண்டான ,  ‘சக்திகாந்தன்’ எனும் ஒரு வாலிபர் ஒரு யோகியிடம் தியானம், ஆசனங்கள் முதலியன கற்றபின் குருவின் மந்திர உபதேசத்தால் கவரப்பட்டு அவர் சொன்னபடியே இந்த தீவிர இச்சைகளை எல்லாம் அடக்குவதில் வெற்றி கண்டு, சகல யோக வித்தைகளும் மனோபலத்தால், தினசரிப் பயிற்சியால்  கைகூடப்பெற்று பின்பு தீவிர சன்னியாசி ஆனார்.

 அவரது முகப்பொலிவையும், உடல் அழகையும் கண்டு நேசித்த எத்தனையோ பணக்காரர்கள் அவரிடம்  என் பொண்ணைக் கட்டிக்கோ, என் சொத்து பூரா உனக்குத்தரேன், என் வியாபாரத்தில் நீ கலந்துகொண்டாயானால் நிச்சயம் இந்த ஊரிலேயே நீ பெரிய பணக்காரனாவாய் என்றெல்லாம் அவரை(tempt) செய்து வசியப்படுத்த முயன்றார்கள். அந்த வாலிபரோ (சாமியாரோ?)- குரு வாக்கைப் பரிபாலனம் பண்ணுவதிலேயே குறியாக இருந்தார். தன் முகத்தின் தேஜஸ்  தன்   குருவின் ஆன்மிக உபதேசத்தாலும் , பயிற்சியாலும்,  ரகசிய மந்திர  தீட்சையாலுமே வந்தது என்று பரிபூரணமாக உணர்ந்து அவர்கள் பேச்சுக்கெல்லாம் ஒரு பெரிய ‘நோ’ போட்டு ஒதுங்கிவிட்டார். அதனால் அவரது வைராக்கியத்தைக் கண்டு மகிழ்ந்து அந்த குரு தம் பெரிய ஆஸ்ரமத்தையே அவரிடம் ஒப்படைத்துவிட்டார்.அவரது சமாதி நிலைக்குப்பிறகு அந்த சக்திதாசர் ஆஸ்ரம வேலைகளை மிக அற்புதமாக விஸ்தரித்து, காயத்ரி யக்ஞம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணங்கள் போன்றவற்றால் தம் ஊரையும் பக்கத்து ஊர்களையும்  ஆன்மிகச் செழிப்பு  மிக்க ஸ்தலங்களாக்கிவிட்டார்.. தனது மந்திரங்களாலும்,யோக சக்தியாலும், மூலிகை மருத்துவத்தாலும்  ஊராரின்  சகல நோய்களையும், வாழ்வுப் பிரச்னைகளையும் தீர்த்துவைத்து வெற்றிகண்டார்.

 இதனால் திடீர் என்று ரங்கசமுத்திரத்துக்கு வந்த ஒரு  ‘ஹிமாலயன் யோகி’ அவரது நற்செயல்களையும், ஆன்மப்பணிகளையும் பாராட்டி, தனது ஆன்ம சக்தியையும் அவருக்கு ‘தீட்சை’ மூலம் கொடுத்து  ‘ப்ரம்மாநந்த  சக்திதாசர்’என்னும் பட்டப்பேரையும் கொடுத்துத் தன் தீர்த்த யாத்திரையைத் தொடங்கினார்.  இந்த உண்ணும்  ‘பேராசை நச்சை’ச் சாமர்த்தியமாக தன் வைராக்யத்தால் வென்றவர் எப்படி உண்மையான தீவிர பரிபூரண யோகியானார் என்பதற்காக  இந்த வரலாற்றைச் சொன்னேன்.,

.. ஆதலால் அன்பர்களே! இந்தத் தீவிர நசையை,இச்சையை (temptation) வென்றோர் நிச்சயம் இறைவனுக்குப் பக்கத்திலேயே ஒரு  ‘சீட்’ போட்டுக்கொண்டு வசிப்போர் ஆவர்.இவர்களால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை.

 மக்களுக்குப் பல விதத்திலும் இவர்கள் தொண்டு செய்வார்கள். அகம்பாவத்தின் சாயல்கூட அவரிடம் இருக்காது.. ஒருசமயம் இயேசு கிருஸ்து தன்  மாணவர்களுக்கு உபதேசித்தார். உங்கள் ஆன்ம வலிமையைக்குலைக்கும் வினோதமான இச்சை உங்கள் பக்கம் வரும்போது, சட்டென மனத்தால் அதனை அடித்துப்போட்டு, “ஏ சாத்தானே! என் ஆன்ம பலத்துக்கு முன் உன் நொண்டிக்கைகளை நீட்டாதே. உன்னைப் பிய்த்து எறிந்துவிடுவேன். என் பின்னால் பயந்து நீ ஒரு மைல் தள்ளிப்போய்விடு. முன்னால் நின்றால் உனக்கே ஆபத்து! வாலாட்டாதே! என்னிடம்’ என்று சொல்லி அதனை விரட்டுங்கள் என்றாராம். இந்தத் தீவிர இச்சை யாரை (பிரபலங்களை)எப்படியெல்லாம் வளைத்து அடிமையாக்கி அவர்கள் வாழ்க்கையையே நாசமாக்கியிருக்கிறது என்று அடுத்த அத்தியாயத்தில்,சொல்கின்றேன்.

(தொடரும்)-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.