மாதவன்

கூத்து முடிந்து திரைமெல்லக் கீழிறங்கியதும் சண்முகம் தன் அரிதாரத்தை கலைக்கத்தொடங்கினான். முகம் கழுவுகையில் தனது மீசையில்லாத முகம்பார்த்து அப்பாவை நினைத்துக்கொண்டான். சண்முகம் நாயகத்தன்மைகள் ஏதுமற்ற ஒரு சாமான்யன். பஸ் டிரைவர். அவன் அப்பாபோல மெயின் வேஷமெல்லாம் இல்லை. சைடு வேஷம்தான். சண்முகத்தின் அப்பா சின்னையன் பெரிய ஆள். ஸ்தீரிபார்ட் சின்னையன் என்றால்தான் தெரியும் எல்லோருக்கும். திரவுபதி வேஷமிட்டால் அசல் திரவுபதியே வந்துவிட்டதுபோல இருக்கும் எல்லோருக்கும்.

அந்தக்காலத்திலேயே சிங்கப்பூர் எல்லாம் சென்றுவந்திருக்கிறார். ஸ்தீரிபார்ட் வேஷம் கட்ட அவர்போல வேறு ஆளில்லை அப்போதெல்லாம். ஆனால் சண்முகத்தின் வகுப்புத்தோழர்கள் எல்லோரும் அவரைப்பற்றி பேசுகையில் மீசையற்ற அவர் முகம்பற்றிக் கேலிசெய்வார்கள்.

” ப்பா..”

“என்ன தம்பு”?

“நா ஒன்னிய ஒன்னு கேக்கவா”?

“கேளுய்யா”

“நீ இனிமேட்டு பொம்பள வேசங்கட்டாதப்பா”

“ஏன்யா”?

“பள்ளியூடத்துல எல்லாப்பசங்களும் என்னிய கிண்டல்பண்றாங்கப்பா”

“என்னன்னு”?

“நீயொரு பொண்டுகஞ்சட்டியாம். அதனாலதான் அம்மாகூட உன்னியவிட்டு ஓடிப்போயிருச்சாம்”

அப்பா அவனை இழுத்து அணைத்துக்கொண்டார். அப்படி அணைத்துக்கொண்டால் அவர் குடித்திருக்கிறார் என்று அர்த்தம். அவன்மீது பிரியம் வந்துவிட்டதென்று அர்த்தம். ஆனால் என்ன செய்தாலும் அம்மாவைப்பற்றி எதுவும் கூறமாட்டார்.

மேனேஜர் கொடுத்த ஐநூறு ரூபாயை வாங்கி தன் அன்ட்ராயரில் வைத்துக்கொண்டான் சண்முகம். மரியாதை என்று சொல்வார்கள் அதை முன்பெல்லாம். ஒரு பெரிய தாம்பாளம் நிறைய வெற்றிலை பாக்கு பழங்கள் வேஷ்டிதுண்டு எல்லாம் வைத்துத்தான் கூத்திற்கு அழைப்பார்கள். கூத்து முடிந்தபின்பும் அதேபோல சன்மானம் வைத்து வண்டிகட்டி வழியனுப்பிவைப்பார்கள். அப்படித்தான் ஒரு ஊரில் இரண்டுரூபாய் நோட்டுக்கட்டை திண்ணையில் தூக்கிப்போட, துண்டை உதறியபடி அதை தொடாமல் திரும்பிவந்தாராம் அப்பா.

பஸ்டான்ட் கூட்டமாக இருந்தது. அவன் தனக்கான பஸ்ஸை தேடி ஏறியமர்ந்துகொண்டான்.

அப்பாவுடன் கூத்திற்குச் செல்லும்போதெல்லாம் எல்லோரும் கேட்பார்கள்.

“ஏஞ்சின்னா, ஒம்மவனுக்கு பிரகலாதன் வேசங்கட்டினா நல்லாயிருக்காது”?

“ச்சீ சவத்த ஒன் வாயக்கழுவு மொதல்ல. அவனுக்கு எதுக்கு இந்த நாறப்பொழப்பு ? அவன் பள்ளியூடத்துல படிக்கிறான். நல்ல வேலைக்கிப்போவான். சாயம்பூசுற பொழப்பெல்லாம் என்னோட போவட்டும்”

நகரும் பேருந்தின் ஜன்னல்வழி அவசரமாக நகர்ந்தன மரங்கள். முன்னாலிருந்து ஒரு குழந்தை கைநீட்டியது. சண்முகம் ஒற்றைவிரலால் அதன் கைபற்றினான். அது சிரித்தது.

அப்பா கடைசிவரை கூத்துக்கட்டியவர். அரவான் வேஷங்கட்டிய அன்று தான் பலியாவதற்கு முன்பான உக்கிரமான காட்சியின்போதுதான் அவருக்கு பக்கவாதம் வந்து கைகால் இழுத்துக்கொண்டது. அதன்பிறகு அதிககாலம் சிரமப்படவில்லை. கொஞ்சநாட்களிலேயே இறந்துபோனார். அதற்குப்பிறகுதான் சண்முகம் கல்யாணமே செய்துகொண்டான்.

சண்முகத்தின் பள்ளி ஆண்டுவிழாவில் மாறுவேடப்போட்டிக்கு அவன் வேஷங்கட்ட முயன்றபோதுதான் முதல்முறை அவனை அடித்தார்.

“அது ஒரு சாபம் தம்பு. பெரிய போத. ஒருவாட்டி வேசங்கட்டி கைதட்டு வாங்கிட்டீன்னா, பொறவு சாவறவரை அந்த சத்தம் கேட்டுக்குட்டேயிருக்கத்தோனும். அது ஒரு வல சம்முவம். விழுந்தா ஆள அப்புடியே முழுங்கிப்புடும்.

“நீங்க மட்டு ஏன் வேசங்கட்டுறீங்க”?

“எங்கய்யா. ஒந்தாத்தன் பெரிய பாகவதர் தம்பு. சின்னப்புள்ளையில இருந்து என்னிய கூத்துக்கு பழக்கிவச்சாரு. என்னால அத விடவே முடியல. என் சாயம் ஒனக்கு ஒட்டிரக்கூடாதுன்னுதான் ஒன்ன படிக்கவைக்கிறேன்.
அப்பா இவனோடு நிறைய பேசுவார்.

“ஒருநாளு எங்கய்யாவோட கீரணூருக்கு போனேன். அடுத்தமாசம் கூத்துக்கு பேச்சுநடத்த போறமின்னு சொல்லித்தான் என்னிய கூட்டிப்போனாரு. அங்க போனபொறவுதான் தெரிஞ்சுது போனது பொண்ணுபாக்கயின்னு. ஒங்கம்மா அத்தன அழகு. நம்மூரு மாரியாத்தா செல இருக்குபாரு அதுமாதிரி ஒரு அழகு.

ஆயிரம்ரூவா பணம். அஞ்சாறுபவுனு நகயோட அவளக்கட்டிக்கிட்டேன். ஆனா அவளுக்கு என்னிய சுத்தமா புடிக்கலன்னு அப்பறமாத்தான் தெரிஞ்சது. எப்பப்பாரு எரிஞ்சு விழுந்தா. எங்கயாச்சும் வெளிய தெருவுக்கு கூப்புட்டா வரமாட்டா.

நீயொரு பொண்டுகஞ்சட்டி மாதிரி நடக்குற ஒம்மோட எவ வருவா அப்டீன்னா. அதோட நா கூத்து கட்டுறது அவளுக்கு புடிக்கல. சாடைமாடையா சொல்லியும் நா கேக்கல. அப்பறம் ஒருநாள் வெளிச்சமா வெளக்குனா.

வேசங்கட்டி நீ கொண்டாற காசவச்சு எம்பொறத்தக் கழுவறதா ? கூத்துக்கருமத்தையெல்லாம் உட்ரு. எங்கப்பாருகிட்ட சொல்லி கொஞ்சம் நெலம் வாங்கியாறேன். பாடுபட்டு கெடக்கலாம்னா.

அன்னிக்கித்தான் அவள மொதவாச்சி அடிச்சேன். அன்னிலயிருந்துதாம் இந்தக்கருமத்தைக் குடிக்க ஆரம்பிச்சேன். அதும்பொறவு நெதம் சண்ட சச்சரவு”

பஸ் பைப்பாஸில் எங்கோ ஓரிடத்தில் நிற்க சண்முகம் இறங்கி மூத்திரம்பெய்துவிட்டு டீ குடித்தான். மறுபடி பஸ் ஏறியபோது அப்பா வந்து மனதில் உட்கார்ந்துகொண்டார்.

ஒருமுறை சினிமாவில் வாய்ப்புவந்தது அவருக்கு. அப்பாவுடன் சண்முகமும் சென்றிருந்தான். வியர்த்துப்பூத்த முகத்துடன் ஒரே வசனத்தை திரும்பத்திரும்ப சொல்லவைத்துக்கொண்டிருந்தார்கள். ‘இந்தாளு தேறமாட்டான்’ என்று யாரோ யாரிடமோ அப்பாவைக்காட்டி சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் திடீரென்று சண்முகத்தை அழைத்து பேசத்தொடங்கினார்.

“நீ பொறந்தப்ப ஆஸ்வத்திரிக்கி பார்க்க வந்தேன். அவ எங்கூட பேசவேயில்ல. அவ ஆத்தாக்காரி என்னமோ சொல்லிப்பார்த்தா. அவ ஒரே முடிவா சொல்லிப்புட்டா.  ஒங்கூத்துப்பொழப்ப உட்டுட்டு வந்தா வா இல்லாட்டி ஒஞ்சோலியப்பாருன்னு. பச்ச ஒடம்புன்னு பாக்காம உட்டம்பாரு கட்டுலோட ஒரு ஒத. அவ அப்பங்காரன் வந்து என்னிய சட்டயக்கோர்த்து வெளிய தள்ளலைன்னா அன்னிக்கே ஒங்கம்மா செத்துருப்பா.

கொஞ்சநாள் பொறவு ஒருநாள் அவ அப்பனாத்தாளும் கொஞ்சம் ஒறவுக்காரங்களும் வந்து பஞ்சாயத்து பேசுனாங்க. நான் உறுதியா சொல்லிப்புட்டேன். இது எங்கொலத்தொழிலு. இத்தோட இருக்குறதுன்னா வந்து இருக்கட்டும்னு. அவளும் வந்து கொஞ்சநாள் நல்லாத்தான் இருந்தா. அப்பறம் பழயபடிக்கு ஆரம்பிச்சா.

அப்டித்தான் ஒருநாளு கூத்து முடிஞ்சு ஊட்டுக்கு வரேன் ஆளக்காணோம். பக்கத்தூட்ல இருந்து ஒன்னிய தூக்கிக்கிட்டு ஊரெல்லாம் தேடுறேன் இல்ல. அவ ஊருக்குபோயி பார்த்தா அங்கயும் தாக்கலில்ல. அப்டியே ஒரு மாசம்போச்சு. நம்மூரு மணியக்காரருதான் ஒருநா வந்து சொன்னாரு. பக்கத்தூரு மைனரு வூட்ல வெப்பாட்டியா கெடந்தாளாம் ஒங்கம்மா.

மணியக்காரரும் என்னென்னவோ எடுத்துச் சொல்லிருக்காப்ள. அவ அசரவே இல்லியாம். வரவே மாட்டமின்னு சொல்லிட்டாளாம். நானும் போவல”

சண்முகத்திற்கு படிப்பு நன்றாக வந்தது. முடித்தபிறகு அப்பாதான் எங்கெங்கோ அலைந்து சிபாரிசு பிடித்து சர்க்கார் வேலைவாங்கிக்கொடுத்தார். உடல்நிலை நன்றாக இருந்தவரை கூத்துக்குச் சென்றார்.

“ஒனக்கு எம்மேல எதுவும் கோவமிருக்கா சம்முவம்”?

“எதுக்குங்கப்பா”?

“ஒன் கண்ணுலியே வேசங்கட்ற ஆசையப்பார்க்கமுடியுது தம்பு. ஆனா இது ஒரு சாபப்பொழப்புய்யா. ஒருத்தன் சும்மாவாச்சும் இதய செஞ்சிரமுடியாது. உசுரா நெனச்சு எறங்கினாத்தான் இதுல சரிப்படும். என்னமோ ஒனக்கு இது வேனாமுன்னு எம்மனசுல விளுந்துருச்சி. அதான் ஒன்னிய கடசிவரை உள்ள இழுக்கல்லே”

“இல்லங்கப்பா. எனக்கும் ஆசயிருந்துச்சி. ஆனா ஒம்பவிசு எனக்கு வராதுன்னு தெரிஞ்சபொறவுதான் தெளிஞ்சிகிட்டேன். எங்கப்பாரு எனக்கு நல்லதுதாம் செய்துருக்கீங்க”

“இல்ல சம்முவம். நா செஞ்சதுலாம் தப்புத்தான். நாலுபேரு பாராட்டுற கெறக்கம் இருக்குபாரு. அது என்னவேனா செய்யும் நம்மள. என்னிய அப்புடித்தான் கவுத்துவிட்டுருச்சி. நாலு பாட்டிலு குடிச்சமாதிரி ஒரு மெதப்பு. ‘ஸ்தீரிபார்ட் சின்னையனா பிரமாதமான கூத்தாடியாச்சே’ அப்டீன்னு நாலுபேரு சொல்லுறப்ப வர வெறி இருக்குபாரு. அது பொம்பள சொகத்தவிட பெருசா இருக்கும்”

“நா ஒங்கள ஒன்னு கேக்கவாப்பா”?

“கேளுய்யா”…

“அம்மாமேல ஒங்களுக்கு கோவமே வர்லியா”?

அருகிலிருந்த புல்லைப் பிடுங்கி கொஞ்சநேரம் கடித்துக்கொண்டு யோசித்தார்.

“அவ செஞ்சதுல தப்பு எதுவுமில்ல தம்பு. ஒரு புருசனா எங்கிட்டதாம் தப்பு. அவள சந்தோசமா வச்சுக்கல. எப்பமும் கூத்து வேசமுன்னே சுத்திக்கிட்டிருந்தேன். சோறு செய்யாதப்போதான் அவ நெனப்பும் அவமேல கோவமும் வரும். ஒன்னக்கூட வுட்டுட்டுபோவும்படி அவள வாட்டிருக்குறேன் பாரு. எந்தப்புதான் எல்லாம்”

“இல்லங்கப்பா. நீங்க என்ன சொன்னாலும் அம்மா செஞ்சது ஏத்துக்க முடியாது. நா அவள என்ன செஞ்சேன்”?

அப்பா சிரித்தார். கண்னில் நீர்வரச்சிரித்தார்.

“நீ எங்கூடவே நெழலு மாதிரி இருந்துட்ட சம்முவம். அதுங்கூட நாஞ்செஞ்ச தப்புத்தான்”

ஒருநாள் அளவிற்கதிகமாக குடித்துவிட்டு வந்தார். சண்முகம் அவர் குடிப்பதைப்பற்றி எதுவுமே சொன்னதில்லை. ஆனால அன்று மிதமிஞ்சிய போதை. இடுப்புத்துணிகூட நிற்காதபடி. என்னென்னவோ புலம்பினார். சிரித்தார். அழுதார். சுவற்றில் தலையை முட்டிக்கொண்டார்.

மறுநாள் காலை சாதாரணமாக சங்கதி சொன்னார். அம்மா இறந்துபோய்விட்டாளாம். எத்தனை மோசமான உயிரென்றாலும் இறந்தபிறகு வெறுக்கமுடியாதுபோல. சண்முகம் மறுத்துவிட அவர்மட்டும் சென்று காடுவரை வழியனுப்பிவிட்டு வந்தார். அன்றுதாம் அரவான் கூத்தாடி பக்கவாதத்தில் விழுந்தது. அம்மா இறந்தது அவரை ஏதோ ஒரு வகையில் பாதித்துவிட்டது.

வாழ்வின் போக்குகளைபற்றி எத்தனை யோசித்தும் குழப்பம்தான் மிஞ்சியது சண்முகத்திற்கு. அப்பா கூத்துக்கட்டுவதை விட்டிருந்தால் அம்மா கூட இருந்திருக்கலாம். அம்மாவிற்கும் கூத்திலோ அப்பாமேலோ விருப்பமிருந்திருந்தால் அம்மா கூட இருந்திருக்கலாம். கடைசிகாலத்தில் அப்பா குழறலாக சொன்னதெல்லாம் ஒன்றுதான்.

ஒலகத்துல எல்லாத்தையும்விட மனுஷங்கதான் முக்கியம் சம்முவம். அதுங்களை கூட வச்சுக்கத்தான் வாழ்க்கை. அதுங்களுக்கு புடிசமாதிரி இருந்து சந்தோசமா வச்சுக்கத்தான் போராட்டம். கூட இருக்குறவன் அழுதா என்ன செத்தா என்னன்னு இருக்குறதுல மனுசனாப்பொறந்து பலனில்ல.

வீட்டிற்குள் நுழைந்தபோது பிள்ளை தூங்கிக்கொண்டிருந்தான். நைட்டியில் சோம்பல் முறித்த மனைவியிடம் பணத்தை கொடுத்துவிட்டு வந்து படுத்துக்கொண்டேன். காலை எழுந்ததுமே மகன் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆட்டம்போட்டான். அவன் ஸ்கூலுக்குச்சென்றபின்பு மனைவி அந்த போட்டோவைக் கொண்டுவந்து காட்டினாள்.

மகனின் ஸ்கூல் மாறுவேடப்போட்டியில் எடுக்கப்பட்ட போட்டோ. தெர்மாக்கோல் கதாயுதத்துடன் கர்ணன் வேஷத்தில் மகன் சிரித்தபடி நின்றிருந்தான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *