— மாதவன் ஸ்ரீரங்கம்.

படுத்தபடியே சொட்டுச்சொட்டாக டியூபிற்குள் விழுந்துகொண்டிருந்த சலைன் திரவத்தையே பார்த்தபடியிருந்தாள் நிஷா. உடல் முழுக்க அசதி அழுத்தியது. மனம் கழற்றிவைக்கவே முடியாதபடி கனத்தது. அடிவயிறு முட்டியது. சற்றே அசைய முற்பட கத்திபட்ட இடத்தில் வலி ஒரு மின்சாரம்போல் தாக்கியது. இப்படித்தானே அந்த பிஞ்சுக்குழந்தைக்கும் வலித்திருக்கும் என்று யோசித்தபோது கண்ணீர் பீறிட்டது.

அருகில் உட்கார்ந்திருந்த ரிடானா பதற்றமாய் எழுந்துவந்தாள்.

“நோ நிஷா டோண்ட் ஸ்ட்ரைன் ப்ளீஸ்”

நிஷா ஒற்றை விரலைக் காட்டி சமிக்ஞை செய்தாள். ரிடானா நெருங்கிவந்து ஒரு கைபிடித்து மெல்லத்தூக்கிவிட, மறுபடி அந்த உச்சகட்ட வலி. உந்துதல் இருந்த அளவிற்கு அவளால் வெளியேற்ற இயலவில்லை. ஒன்றிரண்டு துளிகள் வெளியேற்றுவதற்குள் உயிர்போய்விட்டது. ரிடானா பொறுமையுடன் நிஷாவின் தோளணைத்துக் காத்திருந்தாள். மிகநல்ல ஸ்நேகிதி. அவள்மட்டும் இல்லாமல் இருந்தால் இந்த பெருநகரத்தில் நிஷாவை வேறுயார் பார்த்துக்கொள்வார்கள் இந்த பெங்களூரில்.

அறைத்தோழி ரிடானா தில்லியைச் சேர்ந்த ஆங்கிலோ இந்தியப்பெண். மிக அழகாக குட்டையாகக் கத்திரிக்கப்பட்ட கூந்தலுடன் வசீகரமான புன்னகைகள் வைத்திருப்பாள் எப்போதும். நிஷாவின் அப்பட்டமான அப்பாவித்தனம் பிடித்துப்போனதில் நிரம்ப நெருங்கினார்கள். பெங்களூரை அதன் அழகை அதன் வலிகளை அதன் சிரமங்களை எல்லாம் ரிடானாதான் கற்றுத்தந்தாள்.

மறுபடி படுத்துக்கொண்டபோது அதீத களைப்பேற்பட்டது. மெலிதான குரலில் அர்ஜுனை விசாரித்தாள்.

” ஹீ இஸ் ஆன் தி வே நிஷா”

மெல்ல ஏதேதோ சிந்தனைகள் கிளற உறங்கிப்போனாள். சம்பந்தமின்றி என்னென்னவோ யோசனைகள் எண்ணங்கள் அலைக்கழித்தன. கூட்டமாக பட்டாம்பூச்சிகள் துரத்தின. பெரிய பெரிய ராட்சத பட்டாம்பூச்சிகள். திடுக்கிட்டு விழித்துக்கொள்ள அருகே அர்ஜுன் நின்றிருந்தான். வியர்த்திருந்தான். அர்ஜுனுக்கு பதற்றத்தில் அதிகம் வியர்க்குமென்று அவளுக்குத் தெரியும்.

“ஹவ் அர் யு நிஷா? ஃபீல் பெட்டர் நவ்?”

இல்லை. நிச்சயம் இல்லை. ஆனால் இதை எப்படிப் புரியவைப்பது அவனுக்கு? உடல் ரீதியிலும் மனரீதியிலும் வெளிப்படுத்திவிடமுடியாதபடி வலித்துக்கொண்டிருக்கிறது. இப்படியே இந்த இடத்தில் வாழ்வு நின்றுவிடாதா என்று தோன்றுகின்றது. இதை எந்த மொழியில் சொன்னால் அவனுக்குப் புரியும்?

“இட்ஸ் ஓகேம்மா. யு டேக் ரெஸ்ட். நா கூடவே இருக்கேன்”

இரவு டியூட்டி டாக்டர் வந்து கேஸ் ஷீட்டை பார்த்துவிட்டு நர்ஸிடம் உத்தரவுகளை வழங்கிவிட்டுச் சென்றாள். போகும்போது அர்ஜுனிடம் சொன்னாள்.

“ஐ ஹோப் யு அண்டர்ஸ்டாண்ட் தி டி அன் சி இஸ் ஈக்வல் டு டெலிவெரி. ப்ளீஸ் டேக் கேர் ஆப் ஹெர்”

அவள் கூறியது எத்தனை உண்மை என்று தோன்றியது நிஷாவிற்கு. இந்த மருத்துவமனை இதற்கென்றே பெயர்போனது. நகரத்தின் முக்கால்வாசி சிசுக்களின் கருக்கள் இங்குதான் கலைக்கப்படுகின்றனவாம். சென்றமுறை கலைத்ததின் மிச்சசொச்சங்கள் தேங்கியிருந்ததில் தீராத உதிரப்போக்கில் அவதிப்பட்டாள். சில டெஸ்டுகள் எடுத்துப்பார்த்துவிட்டு கட்டாயம் சுத்தம் செய்தாகவேண்டும் எனச் சொல்லிவிட்டார்கள். ஆனால் இது தன் வாழ்வில் சுலபத்தில் மறக்கக்கூடிய நிகழ்வில்லை என்றுமட்டும் தோன்றியது அவளுக்கு.

நர்ஸ் மறுபடியும் உள்ளே வந்து உறக்கத்திற்கான இஞ்செக்ஷன் ஒன்றினை போட்டுவிட்டுச் சென்றாள். ரிடானா நிஷாவைத் மெதுவாகத்தொட்டு காலை வருவதாகச் சொல்லி விடைபெற்றுக்கொண்டாள். அவள் சென்ற பின்னர் ஏதோ ரிப்போர்ட்டிற்காக நர்ஸ் வந்து அழைக்க, வாங்கி வருவதாகக்கூறி அர்ஜுனும் வெளியேறியபின் நிஷா தனித்திருந்தாள்.

அர்ஜுன் திரும்பிவந்தபோது. சிகரெட் நெடியடித்தது. மிண்ட் ப்ளேவரில் ஏதோ மிட்டாயை வாயில் அதக்கிக்கொண்டிருந்தான். அதையும்மீறி வாடைவந்தது. அர்ஜுன் எப்போதாவதுதான் சிகரெட் பிடிப்பான். மிதமிஞ்சிய டென்ஷன் அடையும்போது. இதைவிட பிரமாதமாக வேறு டென்ஷன் என்ன இருக்கப்போகிறது அவனுக்கு? அவன் சற்றே நிஷாவை நெருங்கி அவள் கைகளை மிருதுவாக பிடித்துக்கொண்டான்.

“ஐம் ரியலி சாரி டா. ஐம் தி ரீஸன் பார் திஸ் எவ்ரிதிங். ரியலி சாரி”

அவளுக்கு பாவமாயிருந்தது. கிட்டத்தட்ட அழுதுவிடுவதுபோல் காணப்பட்டான். வழக்கமாக நிஷாதான் தொட்டதெற்கெல்லாம் உணர்ச்சிவசப்படுவாள். அவன் ஆறுதல் கூறுவான்.

“நோ அஜ்ஜு. ப்ளீஸ் டோண்ட் டாக் லைக் தட். வீ டிடிண்ட் எக்ஸ்பெக்ட் திஸ்” என்று அவனிடம் கூறிய நிஷாவிற்குமே அழுகை வந்துவிட்டது.

அவளுக்குத் தன் அம்மாவை பார்க்கவேண்டும்போலிருந்தது. இன்னேரம் அவள் என்ன செய்துகொண்டிருப்பாள் என்று யோசித்தாள். அவளுக்கு இதெல்லாம் தெரியாது. ஏற்றுக்கொள்ளவே மாட்டாள். திருமணத்திற்கு முன்பே உண்டான கருவைக் கலைக்க எந்த அம்மாதான் ஒப்புக்கொள்வாள்? கோயம்பத்தூரின் மிடில்கிளாஸ் குடும்பத்தில் இதெல்லாம் மிகப்பெரிய அதிர்ச்சியை தரக்கூடியவை.

இன்ன இடத்தில் வேலை என்றதும் கூடவே கூடாதென்று மறுத்துவிட்டாள் அம்மா. “ஊரொலகமே வந்து இவ்வடத்தாலிக்கி வேலவாக்கிது. இவளெங்கியோ ———- போறாளாமா. செவனேன்னு இங்கியே எதாச்சும் பாரு. இல்லீன்னா ஊட்டோட இருந்துக்க. வெளியூரெல்லாம் நம்மூட்டுக்கு சுத்தப்படாது” என்று உறுதியாகக் கூறிவிட்டாள். அப்பாவின் நம்பிக்கையும் உற்சாகமும், தொடர்ந்த தனது பிடிவாதத்தினாலும்தான் அரைமனத்துடன் சம்மதித்தாள்.

அப்பாவிற்கு மட்டும் விஷயம் தெரிந்தால் மிகவும் நொறுங்கிவிடுவார். அவர் நினைவு வரும்போதெல்லாம் தவறாமல் மனம்முழுக்கக் கறையான்கள் ஊருகின்றன.

“பாரம்முணி, நீயி ஒங்கம்மாளாட்ட ஊட்டோடில்லாம நாலு விசயங்கத்துக்கோனும்னுதான் வேலைக்கே அனுப்புறங்கண்ணு. அங்க எதாச்சும் பிரச்சனையின்னா அடுத்தவஸ்ஸுல ஏறி வந்துருதாயி. நல்லா தெகிரியமா இருக்கோனுமாக்கும். புரிஞ்சுதா?”

புரியவில்லை. நிஷாவை ஹாஸ்டலில் விட்டுச்செல்கையில் அவர் கூறிய எதுவுமே புரியவில்லை. நகரத்தில் தவறுதலாய் தொலைந்துவிட்ட ஒரு காட்டுவாசியாகத் தன்னை உணர்ந்தாள். அப்பாவின் பேச்சு மட்டுமல்ல. அந்த நகரமே பெரிய பிரமிப்பாகவும் புதிராகவும்தான் இருந்தது அவளுக்கு. பிரம்மாண்டமான மால்களும், புகைப்பிடிக்கும் பெண்களும், எப்போதும் எப்போதும் வெளிச்சமும் இரைச்சலும் வழியும் பகல்கள் எல்லாம் இரவுகளில் அதீத மவுனத்தைத் தடவிய அந்த நகரத்தில் எல்லாமே புதிதாயிருந்தது.

பணிபுரியும் பளபள கட்டிடங்களில் அழகினைக் கடந்தும் தொக்கிநிற்கும் இயந்திரத்தனம் வெகுநாள் பிடிபடவில்லை அவளுக்கு. டிஸ்கொதேக்களிலும் பப்களிலும் அரையிருளில் நிகழும் அத்துமீறல்கள் அந்நியாயமாகவே தோன்றியது முதலில்.

கோவையின் தெருக்களில் சுடிதாருடன் அலைந்தவளுக்கு, நகரத்தில் அரைடிராயரும் லெக்கின்ஸுகளும் லோஹிப் ஜீன்ஸுகளுமாய் பார்த்தது நிச்சயம் கலாச்சார அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதனால்தான் அர்ஜுனுடனான ஒரு சந்திப்பில் அவனை பளாரென்று அறைந்தாள். அதுகூட ஒரு பப்பில்தான். இத்தனைக்கும் அவன் நிஷாவின் டீம்லீடரும்கூட.

நிஷாவிற்கு உடல் நடுங்கியது. குளிர்ஜுரம்போல் உதடுகள் கிட்டித்தன. அர்ஜுன் பக்கத்து பெஞ்சில் மெலிதாக குறட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருந்தான். தானாக எழுந்துகொள்ள முயன்றபோது வலி தாவியணைத்துக்கொண்டது. வேறுவழியின்றி வறண்ட உதடுகளை நாவினால் ஈரப்படுத்திக்கொண்டு அவனை அழைத்தாள்.

நாலைந்துமுறை அழைத்தபின்பே அர்ஜுன் விழித்துக்கொண்டான்.

“வாட் யா”? என்றான் பரிவுடன். நிஷா கைகாட்ட, அங்கே சலைன் திரவம் முழுதும் இறங்கிவிட்டிருந்தது. அவன் சென்று நர்ஸை அழைத்துவந்தான். மற்றொரு போத்தலை மாற்றிவிட்ட நர்ஸ் முகத்தில் உறக்கம் தொலைத்த சலிப்பு தென்பட்டது நிஷாவிற்கு.

ஆனால் அர்ஜுன் அவளை எப்போதுமே சலித்துக்கொண்டதில்லை. ஆந்திராக்காரப் பையன். தன் வாழ்வில் யாருமே தன்னை அடித்ததில்லை என்று நிரம்ப வருந்தினான். நிஷா தனது வாழ்வின் முதல் பியர் அருந்திய அன்றுதான் அது நிகழ்ந்தது. மிகமெலிதான போதை ஆக்கிரமித்திருந்தது அவளை. வேறிடத்திற்கு மாறிச்செல்லும் ஒரு சக பணியாளினிக்கான பிரிவுபச்சார நிகழ்வு அது. எல்லோரும் டீஜேவின் கட்டற்ற இசைவெள்ளத்தில், மதுவின் போதையில் கரைந்திருந்த தருணம் அது. அர்ஜுன் மெல்ல நிஷாவை நெருங்கியணைத்து முத்தமிட முனைந்தபோதுதான் அவனை அறைந்தாள்.

அத்தனை சத்தத்தில் எவருக்குமே அதை கவனிக்க நேரமில்லை. நிஷா அவனை அறைந்தபின் வந்த வாரங்களில் அர்ஜுன் அதைப்பற்றி ஒரு சிறிய சலனத்தைக்கூட வெளிப்படுத்தாததில்தான் நிஷாவிற்கு அர்ஜ்ஜுனைப் பிடித்திருந்தது. அவளை நேராகப் பார்ப்பதைக்கூட அவன் தவிர்த்ததில்தான் அவன்மீது காதல் வந்தது.

எப்போதும் சுறுசுறுவென ஆக்டீவாக இருக்கும் அர்ஜுனை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் நெருங்கிப் பழகத்தொடங்கிய சில நாட்களிலேயே அவன் தெளிவுபடுத்திவிட்டான். கல்யாணம் மாதிரியான அமைப்புகளில் தனக்கு நம்பிக்கையோ விருப்பமோ இல்லையென்பதை உறுதிபடக் கூறிவிட்டான். நிஷாவிற்கு அதெல்லாம் ஆச்சரியம்தான். காதலிப்பதே மணந்துகொள்ளத்தானே இது என்ன புதிதாக இருக்கிறதென்று வியந்தாள்.

காலம் செல்லச்செல்ல தானும் அந்த பெருநகரத்தின் எந்திரத்தில் நசுங்கி, அதற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொண்டாள். நடை உடை உணவு எல்லாவற்றிலும் அந்த நகரில் வளையவரும் மற்ற பெண்களைப்போலவே மாறிப்போனாள். அதன் பிறகு செப்டிக் டேங்குகளை அடைத்திருக்கும் எண்ணற்ற காண்டம்களைப்பற்றி அவள் அதிர்ச்சியோ ஆச்சரியங்களோ அடையவில்லை.

அர்ஜுன் எழுப்பியபோது நிஷாவினருகே அந்த டாக்டர் நின்றிருந்தாள். மறுநாள் டிஸ்சார்ஜ் செய்துவிடலாம் என்றாள். இவள் மிகவும் பலவீனமாக இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி எச்சரித்தாள். அர்ஜுன் முகம் களைத்து வெளுத்துக்கிடந்தது. இந்த ஒருவார அலைச்சல் அவனை சக்கையாக்கிவிட்டிருந்தது. அடுத்தவாரம் கனடா செல்கிறான். இன்னும் ஒரு வாரம்தான் அவனுடன் இருக்கப்போகிறோம் எனும் நினைப்பு அவள் துயரத்தை அதிகமாக்கியது.

இப்போது நினைத்தாலும் நிஷா அர்ஜுனை நிறுத்திவிடலாம். அதற்கான குற்றவுணர்வு அவனிடம் இருக்கிறது. இந்த நிலையில் அது மிகச் சுலபமாக சாத்தியமே. அவளுக்கு இப்போது நினைத்தாலும் அதிசயமாகத்தான் இருக்கிறது. திருமணமே செய்துகொள்ளாமல் அவனுடன் வாழ்ந்த சிலகாலங்கள்….

“டிட் யு காட் எவ்ரித்திங் அர்ஜுன்”?

“யா அல்மோஸ்ட் நிஷா” கூச்சத்துடன்.

“யு டோல்ட் மி அபவுட் நியூ லேப்டாப்”

“லேட்டர் டியர். நாட் நவ்”

கூடுமானவரை அவள் கண்களைத் தவிர்த்தான். பாவம் அவனை மட்டும் எப்படி பழிசொல்வது? எத்தனையோ கவனமாக இருந்தும் இது நிகழ்ந்துவிட்டது. டாக்டர்கூட கிளியராகக்கூறினாள், “தேர் ஆர் 15 பர்ஸண்ட் சான்சஸ் பார் காண்டம். ஈவன் லூப்ஸ் ஆல்சோ நாட் சென்பர்ஸண்ட் சேஃப்”

பாவம் அர்ஜுனால் நம்பவே முடியவில்லை. விஷயத்தைக் கூறிய அன்றிலிருந்து அவன் முகம் சாணத்தை மிதித்ததுபோல்தான் ஆயிற்று. அவளுக்கே தன்மீது அருவருப்புத்தான் ஏற்பட்டது. பெரியதோர் குற்றம் செய்து பிடிபட்டதுபோலதான் இருந்தது. இது என்ன சினிமாவா? அவன் நினைவாக ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டு தனியாக வாழ்ந்துவிட?

வெளியே மழை ஆரம்பித்திருந்தது இடியொலியின் வழி தெரிந்தது. அறையின் சீதோஷ்ணம் சட்டென மாறியது. முதலில் சற்று வியர்க்கத்துவங்கி பின்பு குளிரத்தொடங்கியது. அர்ஜுன் எழுந்து ஜன்னலை மூடிவிட்டு வந்தான்.

“யூ கேன் கோ அர்ஜுன்”

“இட்ஸ் ஓகே பேபி. ஐ வில், ஆஃப்டர் ரிடானா”

அவள் வர இன்னும் நேரமிருந்தது. நிஷா தன் எதிர்காலம் பற்றி யோசித்தாள். எல்லாம் சரியாகிவிடும். ஒரு வாரத்தில் பணிக்குத்திரும்பிவிடலாம். ஊரிலிருந்து ஓயாமல் திருமணம் பற்றிப்பேசும் அம்மாவிடம் சம்மதம் கூறலாம். ஏன் ஊருக்கேக்கூட திரும்பிவிடலாம். யாருக்கும் எதுவும் தெரியப்போவதில்லை. எவனையேனும் மணந்துகொண்டு, அர்ஜுனுடன் வாழ்ந்த இனிமை நிறைந்த தருணங்களை அசைபோட்டபடியே எஞ்சிய வாழ்நாளைக் கழித்துவிடலாம். மனதின் ஒரு ஓரத்திலிருக்கும் கறையைத்தான் கழுவவே முடியாது.

கல்லூரி படிக்கும்போது அவளுக்கிருந்த கனவுகளெல்லாம் சம்பந்தமின்றி நினைவிற்கு வந்தது. அதற்கெல்லாம் எந்த அர்த்தமுமில்லை இப்போது. அர்ஜுன் அவளையே பாவமாக பார்த்துக்கொண்டிருந்தான்.

“ஷல் ஐ டெல் யு சம்திங் அஜ்ஜு?”

“ஷ்யூர் பேபி” என்றபடி அவள் கைகளை மென்மையாகக் கோர்த்துக்கொண்டான்.

“டோண்ட் கில்ட் அஜ்ஜு. இட் வாஸ் எ கிரேட் கிஃப்ட் பார் அவர் மொமெண்ட்ஸ். அன்பார்ச்சுனேட்லி வீ காண்ட் கீப் இட்” என்று கூறியபோது நிஷா உடைந்து அழுதாள்.

வெளியே மழை பலமாகப்பெய்யத்தொடங்கியது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *