இலக்கியம்

பழமொழி கூறும் பாடம்

தேமொழி.

 

பழமொழி: அணியெல்லாம் ஆடையின் பின்

 

அறிவினால் மாட்சியொன் றில்லா ஒருவன்
பிறிதினால் மாண்ட தெவனாம்? – பொறியின்
மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன
அணியெல்லாம் ஆடையின் பின்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

 

பதம் பிரித்து:
அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம்?-பொறியின்
மணி பொன்னும், சாந்தமும், மாலையும், இன்ன
அணி எல்லாம், ஆடையின் பின்.

பொருள் விளக்கம்:
அறிவுடையவர் என்ற பெருமையைப் பெற்றிராத ஒருவருக்கு, பிற செல்வங்களைப் பெற்றிருப்பினும் அவை என்ன பெருமையைத் தந்துவிடும்? (சாணைத் தீட்டும்), பொறியினால் தீட்டி பொலிவு பெற்ற அரிய மணிகளும், பொன் நகையும், சந்தனமும், மாலையும் என மற்ற பிற அணிகலன்கள் எவை அணிந்திருந்தாலும், அவை ஆடை உடுத்தியது போன்ற பயனைத் தராது.

பழமொழி சொல்லும் பாடம்:
பொருட்செல்வம் ஒருவருக்குப் பெருமை தருவதில்லை, அறிவுடைமையே ஆன்ற பெருமை தரும். அறியாமை நிறைந்தவர் ஒருவர் தான் பொருள் பெற்றிருப்பதை பெருமை என நினைப்பது, ஆடை அணியாது விலையுயர்ந்த அணிகலன்களை மட்டும் அணிந்திருந்திருப்பதை பெருமையாகக் கருதுவதற்கு ஒப்பாகும். அறிவுடைமையின் பெருமையை வள்ளுவர் கூறும் பொழுது,

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். (குறள்: 430)

எதுவும் இல்லாது போனாலும் அறிவுள்ளவர் ஒருவர் எல்லாவற்றையும் பெற்றவராகவே மதிக்கப்படுவார், அறிவில்லாதவர் எல்லாவற்றையும் பெற்றும் அறிவில்லாததால் ஒன்றும் இல்லாதவராகவே கருதப்படுவர் என்கிறார்.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க