“தங்கத் தலைவர்” – கர்மவீரர் காமராசர்!

–சுமதி ராஜசேகரன். 

முன்னுரை:

பண்டித ஜவஹர்லால் நேரு புகழ்ந்தது: காமராசரின் ஆட்சியில் பெரிய திட்டங்களிலும் சரி, அன்றாட அரசாங்க நிர்வாகத்திலும் சரி, ஊழலே இல்லை. காமராசரின் நிர்வாகத் திறமைக்கு இது ஓர் உதாரணம் !

என்றும் …

மத்திய மந்திரி நந்தா புகழ்ந்த உரை: எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு முன்னேற்ற மானிய நிதி வழங்குகிறது. இருப்பினும் அதை முறையாகப் பயன்படுத்தி தமிழகத்தை வளர்ச்சி காணச் செய்தவர் காமராசர். “

என்றும் …

குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் புகழ்ந்துரைத்தது: காமராசர் தமிழக முதலமைச்சர் பதவி வகித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில் தமிழகம் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. கல்வியிலும் தொழில்துறையிலும் மற்ற மாநிலங்கள் தமிழகத்தைப் பின்பற்ற வேண்டும். “

இப்படியெல்லாம் புகழப்பட்ட காமராஜரின் நிர்வாகத் திறமையினால் தமிழ்நாடு இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் காமராசருக்கு அழைப்பு விடுத்த பெருமையின் வழி உணரலாம்.

1976 -ஆம் ஆண்டு மத்திய அரசு காமராசரின் பெயரில் ” பாரத ரத்னா ” விருது வழங்கியது.

“ஜனநாயகமும், சோஷலிசமுமே நமது உயிர் மூச்சாகும்” என்று சொற்பொழிவாற்றிய இடம் புவனேஸ்வரம். ‘காலா காந்தி’ என்று இந்தியிலும் கறுப்பு காந்தி தமிழிலும் அழைக்கப்பட்ட நமது விருதுநகர் காமராசரின் தொண்டினையும், எளிமையையும் படிக்கும்போது புரிகிறது… கட்டுரையில் எழுதமுடியாத எண்ணற்றப் பணிகளை…சிந்தனைகளை…

காமராஜர் சென்ற நாடுகளிலுள்ள நாளிதழ்கள் எல்லாம் காமராஜரின் எளிமையையும், தன்னலம் கருதாத தொண்டினைப் பற்றியும் புகழுரைகள் எழுதின என்றெல்லாம் புகழப்பட்ட காமராசர் சென்ற வெளிநாட்டுப்பயணம் 1966 -ஆம் வருடம். அவரின் கால் பதிந்த, தமிழ் பேசிய நாடுகளைப் பற்றியெல்லாம் சொல்லிவிட்டு பிறகு அவரின் வாழ்க்கையைப் புரட்டிப் பார்க்கலாம் என்றே எனக்குத் தோன்றியது.

காமராசரின் தொண்டின் கடைசி சில வருடங்கள் என்றாலும் அவையெல்லாம் அவரின் எளிமையின் வடிவத்தையும், சிந்தனைச் சொற்களையும், கல்வி, விவசாயம்,தொழில்துறை என்று கர்மவீரரின் சாதனைகள் பல நாடுகளுக்கும் தெரிந்து அழைப்புக்கள் விடுத்த வண்ணம் இருந்தனவாம்.

அழைப்பு வந்த நாடுகள் + சென்று பேசிய நாடுகள்:
ரஷ்யாவின் பிரதமர் கொசிஜின் அழைத்தார். 1966 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் நாள் மாஸ்கோ சென்றார். ரஷ்யாவின் குளிரிலும் தன் எளிமை உடையில் சென்ற காமராஜரை வியப்பாகப் பார்த்தனராம் ரஷ்யா மக்கள்.
◆ லெனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்
◆ மாஸ்கோ நகர மேயருடன் அந்நகர் மக்களின் பிரச்சனைகள் பற்றிக் கேட்டு அறிந்தார்
◆ சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதம காரியதரிசி பிரஸ்நோவைச் சந்தித்துப் பேசினார்
◆ 1966 , ஜூலை 31-ஆம் நாளில் காலையில் ‘மாஸ்கோ வானொலியில் ‘ உரை நிகழ்த்தினார்
◆ கிழக்கு ஜெர்மனி சென்றார். அங்குள்ளத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்
◆ செக்கொஸ்லோவோக்கியா பயணம் செய்தார். அங்குள்ள இந்தியர்கள் சிறப்பான வரவேற்பு தந்தனர்
◆ ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி, பல்கேரியா, யுகோஸ்லோவியா போன்ற நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தார்
◆ பிறகு ரோம் நாட்டிற்கும் சென்றுவிட்டு ஆகஸ்ட் 15- 1966 இந்தியா திரும்பினார்

இப்படிப்பட்ட பெருமைமிகு காமராசரின் சிறுவயதும், இளவயதும், அரசியல் பிரவேசமும் நாம் அனைவரும் அறிந்ததென்றாலும் அவரின் பிறந்தநாள் கொண்டாடும் ஒவ்வொருவருடம் ஜூலை பதினைந்தாம் நாளும் நாம் ஒவ்வொருவரும் ஏனோ அவரின் மாதிரியாக வாழும் ஒரு அரசியல்வாதி வேண்டும் என்றே நினைக்கிறோம் என்றால் மிகையுமில்லை, பொய்யுமில்லை, போலித்தனமும் இல்லை.

எளிமை மிகு மனிதர்கள் மிகச் சிலரே. மனிதர்கள் ஆடம்பரம் என்ற வலைக்குள் அகப்படும் மீனாகிப் போனதால் இன்று எளிமைமிகுந்த அரசியல்வாதி யார் என்று தேடிக்கொண்டிருக்கிறோம்.

மக்கள் பணியில் இன்றைய காலகட்டத்தில் அது சாத்தியமா என்றாலும் அன்றைய நாளில் வாழ்ந்து மறைந்த கர்மவீரர், எளிமை காமராசர் என்று அடையாளம் காணப்பட்ட அவர் தானே முன்னுதாரணமாக மனக்கண்முன் தோன்றுகிறார். காந்தியை நாம் கோட் போன்ற நவநாகரிக உடையில் பார்த்திருக்கிறோம். ஆனால் காமராசர் அரசியல் நுழையவே எளிமை என்ற பேராயுதம் தன்னுள்ளே கொண்டிருந்தவரல்லவா?

பிறப்பும் இளமையும் என்று கொண்டால் ‘ஏழைகளின் ஏந்தல்’, கல்வி வள்ளல் என்றும் பெயர் பெரும் அளவு ஏழை, எளிமை, தன் படிப்பு நின்றுவிட்டாலும் தமிழ்நாட்டு மக்களின் கல்விக்கு அடிப்படைத் தேவையை ஒரு சிறுவனிடம் கேட்டு அதன்வழி சிந்தித்து செயல்வழிப்படுத்தி வெற்றியும் கண்டவர்.

ஜூலை 15 , 1903-ஆம் ஆண்டு பிறந்த அந்தக் கறுப்புக் குழந்தைதான் பின்னாளில் ‘ தமிழகத்தின் பொற்காலம் ‘ என்று நல்லாட்சி தந்து ‘ கறுப்புத் தங்கம் காமராசர் ‘ என்ற பெயரும் பெற்றவர்.

சமதர்மம் என்பதைத் தனது பள்ளிப்படிப்பின் போதே உணர்த்தியவர். ஒருமுறை அவர் படித்த பள்ளியில் ஒரு அணா வாங்கி பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடியபோது பிரசாதம் தருவதில் அதிகம் பெறாமல் குறைவாகக் கிடைத்ததைப் பற்றி பாட்டி கேட்டபோது ‘எல்லா மாணவர்களிடமும் ஒரே மாதிரி காசு வாங்கினோம் ; எல்லோருக்கும் சமமாகப் பிரசாதம் தரவேண்டும் என்று ஆசிரியருக்கு இருக்கவேண்டும்,’ என்று “நியாயத்தின் பக்கம் நிற்பவன்” என்ற உணர்வுடன் தன்னுடைய ஐந்து வயதிலேயே புரியவைத்தவர்.

காமராசரின் 6-வது வயதிலேயே தாத்தாவை இழந்து அதே வருடத்திலேயே தந்தை குமாரசாமியும் இறந்த சோகம் வருமானத்திற்கு சிவகாமி அம்மாள் , காமராசரின் தங்கை நாகம்மையாருடன் கலங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது. சமயோசிதப் புத்தியினால் தெருவில் யானையின் துரத்துதலால் ஓடிக்கொண்டிருந்த மக்களைக் காப்பாற்றியவர் சிறுவயது காமராசர். யானைப் பாகன் கொண்டுவர மறந்த கால் சங்கிலியை கோவிலுக்குச் சென்று எடுத்துவந்து ஓடும் யானையின் முன்னே வீசிய புத்திசாலி காமராசர். அந்தச் சிந்தனையின் வழிதான் அவரின் அரசியல் பிரவேசத்தில் பல இக்கட்டான நேரங்களில் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தார்.

காந்திஜி 1921 -ஆம் ஆண்டு மதுரைக்கு வந்தார். காமராசர் படிப்பை நிறுத்திவிட்டு மளிகைக் கடையில் வேலை செய்ததாலும் வந்தே மாதரம் என்ற முழக்கங்களும், மேடையில் பேசுபவர்களின் மூலம் பத்திரிக்கைச் செய்திகளாலும் ஈர்க்கப்பட்டார். காங்கிரஸ் கூட்டத்தில் மதுரை வக்கீல் ஜார்ஜ் ஜோசப், சாலவாடி ஐயர், மதுரை சுந்தரம் பிள்ளை, மதுரை லெட்சுமண பிள்ளை ஆகியோர் பஞ்சாப் படுகொலையை பற்றிப் பேசியதும் காமராஜர் தேசிய காங்கிரசில் பற்றுக் கொண்டார்.

1931-இல் ஜனவரி 1-ம் நாள் காங்கிரஸ் ஊர்வலம் நடைபெற்றது. திருப்பூர் குமரன் கதராடை அணிந்து ‘வந்தே மாதரம்’ என்று கொடியேந்தி கொடியைக் காப்பாற்றியபடியே மண்டை உடைந்து ரத்தம் வழிந்து உயிர் துறந்தார். தேசியக் கொடியை நழுவிடாமல் காத்த செயல் மெய்சிலிர்த்தார் காமராசர்.

சிறைவாசம் சென்ற அனுபவமும் காமராசருக்கு பொதுவாழ்வில் இரண்டு, மூன்று முறை நிகழ்ந்தது. முதல்முறையாக 1930ல் 31-ல் தமிழகத்தில் உப்புச் சத்தியாகிரகம் இராஜாஜி தலைமையில் நடைபெற்றது. தண்டியில் நடைபெற்ற போராட்டத்தில் காந்தியடிகள் தலைமையேற்றார். பொதுவாழ்வில் நுழைந்த காமராஜர் அனுபவித்த முதல் சிறைவாசம் தமிழகத்தில் உப்புச்சத்தியாகிரகம் போராட்டத்தில் நடந்தது. காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் 1931 மார்ச் பன்னிரெண்டாம் நாள் காமராசர் விடுதலையானார் தன் சகாக்களோடு. காமராசரின் பாட்டி பார்வதி அம்மாள் அவர் விடுதலை அடைந்த இரண்டொரு நாளில் உயிர் துறந்தார்.

இரண்டாவது முறையாக காமராசர் கைதாகும் படியான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. வெலிங்டன் பிரபு , காந்திஜியையும் 4.6.1932 அன்று கைது செய்தது. காந்திஜியைக் கைது செய்ததால் ஆங்கிலேய காவல்துறையினர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது. இராஜாஜியும், சத்தியமூர்த்தியும் கைது செய்யப்பட்டனர். இதையறிந்து விருதுநகரில் கண்டன ஊர்வலம் நடத்தினார். காமராசர் கைது செய்யப்பட்டு சிவகாசி நீதிமன்றத்தில் கொண்டுசெல்லப்பட்டு ஒரு ஆண்டு சிறைவாசம் அனுபவித்தார்.

காமராசர் நிரபராதி என்று நிரூபிக்கும் வகையில் ஆங்கிலேயரிடம் வாதாடி வெற்றியும் பெற்றதில் தீரர் சத்தியமூர்த்தி, மற்றும் ஜார்ஜ் ஜோசப் இருவருக்கும் பங்கு உண்டு. இரண்டாவது முறையாகக் கைது செய்த ஆங்கிலேயர்கள் கர்மவீரரை வேலூர் சிறைச்சாலைக்கு மாற்றியபோது அங்கு பகத்சிங் அவர்களின் நண்பர்கள் ஜெயதேவ் கழரையும், கமல்நாத் திவாரியையும் சந்தித்துப் பேசினார். இதனால் காமராசர் ஒரு தீவிரவாதி போல சித்தரிக்கப்பட்டு பழியைப் போட்டது. மேலும் 1933 , உதகமண்டலத்திற்கு வந்த வங்காள ஆளுநராக இருந்த சர்.ஜான் ஆண்டர்சன் அவர்களை சுட்டுக் கொள்ள முயன்றார்கள் என்று கே . அருணாசலமும், காமராசரும் என்ற அபாண்டப் பழி விழுந்தது. அது மட்டுமல்லாமல் ஸ்ரீவில்லிப்புத்தூர், விருதுநகர் காவல் நிலையங்களில் வெடிகுண்டு வீச முற்பட்டதாகக் காமராஜர் மீது வேறொரு பழியை சுமத்தினார்கள். அந்தப் பழியில் இருந்து காமராசர் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டது. ஆனால் காமராசரின் சொத்துக்கள் எல்லாம் செலவழிந்தன என்பதும் உண்மை. இரண்டாம் உலகப் போரின் போதும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டதால் (1940) முன்னெச்செரிக்கையாக கைது செய்யப்பட்டார். பின்னர் 1942 சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

தமிழகக் காங்கிரஸ் தலைவர்:
விருதுநகர் நகரமன்றத் தேர்தல் நடந்ததில் 1936 ஆம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தல் நடந்தது. காமராஜர் ஏழாவது வார்டில் வெற்றிபெற்றார். வெற்றி பெற்றாலும் நகரமன்றத் தலைவர் பொறுப்பை ஏற்கவில்லை. 1936-ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் காமராஜரைக் கட்சியின் செயலாளராக அறிவிக்கப் பட்டார். 1941 – இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் விருதுநகர் நகரமன்றத் தலைவராக காமராஜர் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிராம முன்னேற்றம்:
‘கிராமங்களின் முன்னேற்றமே ஒரு நாட்டின் முன்னேற்றமாக இருக்க முடியும் !’ என்று மகாத்மா காந்தியடிகள் கூறினார். காந்திய வழியில் சென்ற காமராசர் அக்கருத்தை முதல் கொள்கையாகக் கடைபிடித்தார். நேருவின் ஆலோசனைப்படி 1954-ஆம் ஆண்டு காமராஜர் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
வெற்றிபெற்றபின் காமராசரைப் பற்றி நேரு கூறியது :
காமராஜர் கல்வி பயின்றவரோ, அல்லது நிர்வாக அனுபவம் வாய்ந்தவரோ என்பது பற்றி கவலைப்படாமல் மக்களாட்சியின் மகத்துவத்தையும், மக்கள் சக்தியின் வலிமையையும் உணர்ந்திருத்த நேருவின் தீர்க்கமான சிந்தனையால் காமராசர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தனது அமைச்சரவையில் எந்தவித உட்பூசல்களும் உருவாகக் கூடாது; அமைதியான முறையில் நாட்டுப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று காமராசர் தனது அமைச்சரவையை அமைத்தார்.

காமராசரின் பொற்கால ஆட்சி:
1954 -ல் பதவியேற்ற பின் 1943-ல் துவங்கிய கடுமையான வறட்சியை நீக்க ( ஆறு ஆண்டுகள் – வறட்சி ) காமராசர் மேற்கொண்ட திட்டங்கள் :
◆ தமிழகத்தில் உணவு உற்பத்தியைப் பெருக்குதல்
◆ வறுமையை அகற்றுதல்
◆ அடிப்படை ஆதாரங்களைப் பெருக்குதல்
◆ கல்வியறிவு, ஏழைகளுக்கான நல்ல பல திட்டங்கள்
◆ உழைப்பிற்கு ஏற்ற ஊதியம்
◆ ஒருவர் மற்றவரைச் சுரண்டாமை

“நமது நாட்டின் முன்னேற்றத்திற்கான முக்கியக் கொள்கையாக வறுமையை ஒழிப்பது, கல்வி இல்லாதவர்களுக்குக் கல்வி, நம் நாட்டின் செல்வத்தைப் பெருக்க வேண்டும்; அது அனைவருக்கும் பயன்படும் வகையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் ” என்று காமராசர் கூறினார். சுமார் ஒன்பதரை ஆண்டுகள் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகத் தான் கொண்ட கொள்கைகளை முறையாகக் கடைபிடித்தார். மிகப் பெரிய சாதனைகள் படைத்து மிகப் பெரும் புகழைப் பெற்றார். காமராசரின் ஆட்சிக் காலம் “தமிழகத்தின் பொற்காலம்” என்று அனைத்து மக்களாலும் போற்றப்பட்டது.

வளர்ச்சித் திட்டங்கள்:
◆ இயற்கையாக நீரைத் தடுத்து , அவற்றை விவசாயத்திற்குப் பயன்படுத்துவதில் அக்கறை காட்டினார்
◆ 1957-ஆம் ஆண்டு உள்ளாட்சி சட்டம் கொண்டுவரப்பட்டது
◆ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதிக்கீடு, விவசாயம், கால்நடை வளர்ச்சி , கிராம கைத் தொழில்கள், பெண்கள், குழந்தைகளுக்கான சமூக நலத் திட்டங்கள், கல்வி போன்ற அரும்பணிகள் துவங்கப்பட்டன
◆ கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் உதவியுடன் பல கிராமக் கைத்தொழில்கள் உருவாக்கப்பட்டன
◆ தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களை அமைத்தார். கூட்டுறவுச் சங்கங்களே இல்லையென்ற நிலையைக் கொண்டுவந்தார்
◆ கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் ஏழை விவசாயிகளுக்குக் கடன் வழங்குதல், போன்ற நல்ல திட்டங்கள் அமலுக்கு வந்தன
◆ நெசவுத் தொழில் ஆயிரக்கணக்கான மக்களின் முக்கியத் தொழிலாக இருப்பதைக் கண்டார். அதனால் பல திட்டங்கள் தீட்டினார்
◆ “ஜமீன் ” ஒழிப்புச் சட்டம் விரிவடைந்தது. ” நில உச்ச வரம்பு சட்டம்” இவர் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. ஏழைகளுக்கு நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

காமராசரின் காலத்தில் கட்டப்பட்ட அணைகளும், நீர்ப்பாசனத் திட்டங்களும், அளப்பரிய பணிகளும் :
◆ கீழ்பவானி, மணிமுத்தாறு, காவிரி டெல்டா, ஆரணியாறு, வைகை அணை, புள்ளம்பாடி அணை, வீடூர் அணை, பரம்பிக்குளம், ஆளியாறு அணை, கட்டளை மேல்நிலைக் கால்வாய்த் திட்டம், நொய்யாறு அணை போன்றவை ஆகும்
◆ கிணறு வெட்டக் கடன் வழங்கப்பட்டது
◆ மின்சார பம்புசெட்டுகள், ஆயில் இஞ்சின்கள் வாங்கவும் கடன்கள் வழங்கப்பட்டன
◆ தமிழகத்தில் 1600 குளங்கள் சீரமைக்கப்பட்டன. இதனால் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நீர்ப்பாசன வசதி பெற்றது.

கல்வியில் மறுமலர்ச்சி செய்த காமராசர் :
“தானத்தில் சிறந்த தானம் கல்வி தானம்” என்று சான்றோர் உரைப்பர். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியில் தான் ‘கல்வி மறுமலர்ச்சி’ ஏற்பட்டது.

பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்துவது, கூடுதலாக புதிய ஆசிரியர்களை நியமிப்பது. ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவது என்று திட்டங்கள் தீட்டினார்.
◆ ஒருமைல் தொலைவிற்குள் பள்ளிக்கூடங்கள் இருக்குமாறு, பள்ளிகளைத் திறந்தனர்.
◆ பள்ளிக்கானக் கட்டிடம், பொருள்கள் முதலியவற்றைச் செல்வந்தர்களே தர முன்வந்தனர். காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு ஆண்டிற்குள் (1954-55) தமிழகத்தில் சுமார் 3000 பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.
◆ காமராசரின் திட்டங்கள் ஒவ்வொன்றும் உண்மை நிலையைக் கண்ட பின்பே கொண்டுவந்த திட்டங்கள். இந்திராகாந்தி அவர்களே காமராசரிடம் பேசவேண்டும் என்கிற அளவுக்கு வளமான சிந்தனையும், திட்டங்களும் தருபவர்.
◆ ஆனாலும் சுற்றுப்பயணத்தின் மூலமும் வறுமையைக் கண்டு கல்விக்கும் வயிற்றுக்கும் உணவுக்கும் உள்ள இடைவெளியை நிரப்பத் தான் பயின்ற ‘பிடி அரிசி’ திட்டத்தின் மகிமையையும், கல்வி என்றால் அதற்கும் உடைக்கும் சம்பந்தம் உண்டு என்ற சமயோசிதப் பண்பால் வேற்றுமையின்றி ‘சீருடைக் கல்வித் திட்டத்தை ‘ அறிவித்தவர். சீருடை வந்த பிறகு சீருடையால் பேதங்கள் களையப்பட்டது உண்மை. பள்ளிக்கூடத்துக்குப் போனா பசி தீருமா ? என்ற கேள்வியில் ‘மதிய உணவுத் திட்டம்’ ஏற்பட்டது.
◆ எல்லா ஏழைகளும் படிக்கணும் “அவர்களுக்குத் தான் தேசம்” என்று ஆணித்தரமாகக் காமராஜர் கூறினார்
◆ ஆசிரியர்களின் ஊதியத்தையும் உயர்த்தினார். ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கிடைக்க ஏற்பாடு செய்தார்
◆ அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகைகள் தந்தார்

1966 -ஆம் ஆண்டில் காமராசருக்கு அமைச்சர் பொறுப்பு வந்தபோதும் மறுத்துவிட்டு கட்சிப்பணி மட்டும் செய்தார். 1967-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றதற்கு இராஜாஜிக்கும், காமராசருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடும் காரணம். எனவே தோல்வியின் காரணமாகத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

தோல்வி : 1971-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கும், தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது. இராஜாஜியின் சுதந்திரா கட்சியும், காமராசரின் ஸ்தாபனக் காங்கிரஸ் இணைந்து கொண்டன. இந்திரா காங்கிரசும் தி.மு.க. வுடன் கூட்டணி வைத்தது. தமிழகத்தில் தி.மு.க. வெற்றிபெற்றது.

பெ. சீனிவாசன் என்ற தி.மு.க இளைஞரிடம் 1285 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். ஆனால் அந்த இளைஞர் காமராசர் ஏற்படுத்திய பள்ளியில் படித்த மாணவர். இதனைப் பாராட்டி வைக்கம் வீரர் பெரியார் அவர்கள் ‘போஸ்டர் ‘ ஒட்டியதாகவும் கூறுவார். அண்ணா, காமராசரின் தோல்வியை எதிர்பார்க்கவில்லை.

முடிவுரை:
காமராசர் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அரசியல் ரீதியாகக் காமராஜர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்கள் என்பது உண்மை. அப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் “காமராசர் எனக்குத் தலைவர்; அண்ணா எனக்கு வழிகாட்டி !” என்று கூறினார். இந்திரா காந்தியும் காமராசர் மீது வைத்திருந்த மரியாதையை குறைத்துக் கொள்ளவில்லை.

தொடர்ந்த பயணம், ஓயாத உழைப்பு போன்ற பல காரணங்களால் காமராசரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஜூலை 15, 1975 காமராசரின் எழுபத்திரண்டாவது பிறந்த நாள் வந்தது. எளிமையாகக் கொண்டாடினார். இந்திரா காந்தி வாழ்த்து அனுப்பியிருந்தார்.

அக்டோபர் 2-ஆம் நாள் காந்தி ஜெயந்தி. காலையில் எழுந்த காமராஜர் நாளிதழ்கள் அனைத்தையும் படித்தார். கிருபாளனி கைது செய்யப்பட்டதையும், கைது செய்யப்பட்ட தலைவர்கள் அனைவரும் விடுதலைச் செய்யப்படவில்லை என்பதையும் அறிந்தார். உடல்நிலை மிகவும் பலவீனப்பட்டுவிட்டது.

“தமிழகம் தவமிருந்து பெற்ற தங்கத் தலைவர் காமராசர் இவ்வுலகை விட்டுச் சென்று விட்டார்.” வானொலி மூலம் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்திற்கு அருகே உரிய மரியாதையுடன் மழையிலும் காமராசரது இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடுகளைச் செய்தார் கருணாநிதி. பிரதமர் இந்திரா காந்தி காமராசரின் இறுதிச் சடங்கிற்கு வந்தார். தங்கள் மனத்துயரைக் கட்டுப்படுத்தாமல் பல தலைவர்களும் வாய்விட்டு அழுதனர். காமராசர் நினைவு மண்டபம் தமிழக அரசால் கட்டப்பட்டது. கன்னியாகுமரியிலும் நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது.

நல்லாட்சி நாயகரின் நினைவாகச் சென்னை தியாகராய நகர் வீடு ‘நினைவு இல்லமாக ‘ மாற்றப்பட்டது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.