–மாதவன் ஸ்ரீரங்கம்.

ராஜேஸ்வரி அதிர்ந்துபோய் கிடந்தாள். கட்டிலின் சுருக்கமற்ற மெத்தையை அவள் கண்ணீர் ஈரமாக்கியது. சாத்தப்படிருந்த படுக்கையறையினை கடந்தும் ஹாலில் ஓடிக்கொண்டிருந்த சீரியலின் சப்தம் கேட்டது. டிரஸ்ஸிங் டேபிளில் வைத்திருந்த தம்ளரில் ஆடைகட்டிக்கிடந்தது பால். அவள் இதை எதிர்பார்க்கவேயில்லை. என்னதான் காதலித்து திருமணம் செய்துவந்திருந்தாலும் அவள் தன் மாமியாரை பெற்ற தாய்போலத்தான் பாவித்து பிரியமாக இருந்தாள். ஆனால் தன் மாமியார் இப்படியொரு காரியம் செய்வாளென்று அவள் நினைத்துக்கூட பார்த்ததில்லை.

இத்தனைக்கும் அவள் வெறுங்கையுடன் இந்த வீட்டிற்கு மருமகளாகவில்லை. தன் ரியல் எஸ்டேட் தந்தை முதலில் எதிர்த்தாலும்கூட சுரேஷ் ஒரு வங்கி அதிகாரியாக நல்ல வேலையில் எல்லாம் இருக்கிறான் என்று தெரிந்தபிறகு முழுதாக சம்மதித்து அட்டகாசமாக நகைநட்டுகள் எல்லாம் போட்டு பிரமாதமாக திருமணம் செய்துவைத்திருந்தார். எல்லாம் தன் தலைவிதி என்று நொந்துகொண்டாள் ராஜேஸ்வரி.

ஆரம்பத்திலிருந்தே மாமியார் கற்பகத்திற்கு தன்னை ஏன் பிடிக்காமல் போயிற்று என்று யோசித்து நிரம்ப சலித்துவிட்டாள். சுரேஷ்தான் சொன்னான். கற்பகத்தின் அண்ணன் மகள் ரேவதியை சுரேஷுக்கு மணமுடிப்பதாக சிறுவயதிலிருந்தே முடிவு செய்திருக்கிறாள், ஆனால் சுரேஷின் கல்லூரியில் தேவதைபோல ராஜேஸ்வரி வரவும் சுரேஷ் காதல்கொண்டு அவளைத்தான் மணப்பேன் என்று கற்பகத்திடம் சத்தியாகிரகம் செய்யவும் வேறு வழியின்றி ராஜேஸ்வரியை கட்டிவைத்தாள்.

அன்றிலிருந்தே கொடுமைதான். சிறுவயதிலேயே தாயை இழந்த ராஜேஸ்வரி கற்பகத்தின் கொடுமைகள் எல்லாவற்றையும் மவுனமாக பொறுத்துக்கொண்டு சிரித்தபடி நடமாடினாள். சுரேஷிடம் ஒரு வார்த்தைகூட மாமியாரைப்பற்றிக் குற்றம் சொன்னதில்லை. என்றேனும் ஒருநாள் தன் உள்ளன்பைப் புரிந்து ஏற்றுக்கொள்வாள் என்று மனதார நம்பினாள். ஆனால் இன்று இப்போது அவள் மாமியார் செய்திருக்கும் காரியம் ராஜேஸ்வரியின் நம்பிக்கைகளை சுக்குநூறாக உடைத்துவிட்டது.

எப்பேர்ப்பட்டவரும் ஒரு பெண்ணுக்கு செய்யத்தயங்கும் ஒரு கொடுஞ்செயலை கற்பகம் தன் மருமகளுக்கு செய்துவிட்டாள். ஆமாம் அவள் கருவை கலைப்பதற்கான மருந்தை பாலில் கலந்து கொடுத்திருக்கிறாள். எப்போதுமில்லாமல் இன்று வெகு அதிசயமாக தன்னுடன் சிரித்துப்பேசியபோதே அவள் யூகித்திருக்கவேண்டும். அவள்தான் அன்புமயமானவளாயிற்றே. நல்லவேளையாக வேலைக்காரப்பெண் செண்பகம் மட்டும் விஷயத்தை சொல்லாமலிருந்தால் அந்த பாலை அவள் இன்னேரம் குடித்திருப்பாள்.

அவளால் சமாதானமே செய்துகொள்ள முடியவில்லை. என்ன இருந்தாலும் அவள் பெற்ற பிள்ளையின் கருவை அல்லவா சுமந்துகொண்டிருக்கிறாள். எப்படி தன் பேரக்குழந்தையை தன் கையாலேயே கொல்லத்துணிந்தாள். கேள்விகள் ராஜேஸ்வரியின் உடலெங்கும் ஊசியாகக் குத்தித்துளைத்தன. ஒரு முடிவிற்கு வந்தவளாக அவள் படுக்கையிலிருந்து மெல்ல எழுந்துகொண்டாள். சீரியல் பார்த்துக்கொண்டிருந்த கற்பகம் ராஜேஸ்வரியையே புருவம் சுருங்க பார்த்துக்கொண்டிருந்தாள்.

*************************************

“கட் கட் கட் கட்” என்று திவாகர் சொன்னதும் கேமராவும், எரிந்துகொண்டிருந்த ஃபோகஸ் விளக்குகளும் அணைந்தன. ராஜேஸ்வரியாக நடித்த அந்தப்பெண்ணும் மாமியார் கற்பகமும் வாய்விட்டு சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார்கள். கேமராமேனுடன் மானிட்டரில் எடுத்த காட்சிகளை சரிபார்த்துக்கொண்டிருந்தான் திவாகர். பக்கத்தில் நெருங்கிய ராஜேஸ்வரி திவாகரிடம் சொன்னாள்.

“திவா சார், நெக்ஸ்ட் வீக் சுந்தர் சார் படத்துக்கு கால்ஷீட் குடுத்துருக்கேன் சார். கொஞ்சம் பார்த்து அட்ஜஸ்ட் பண்ணிக்குடுங்க சார்”

“எத்தன நாள்மா”?

“பத்துநாள்னுதான் சொல்லிருக்காங்க. அப்டியே அத முடிச்சிட்டு கோவா டூர் பிளான் பண்ணிருக்காரு என் ஹஸ்பண்ட்”

“என்னம்மா எப்டி அவ்ளோ நாள் சமாளிக்கிறது சொல்லுங்க. உங்க லாஸ்ட் வீக் டப்பிங்கெல்லாம் முடிச்சிட்டீங்களா”?

“சார் எல்லாத்தையும் முடிச்சிட்டேன். இன்னிக்கி எடுத்தது மட்டுந்தான் பென்டிங்”

திவாகர் அரைமனதாக சம்மதித்தான். அது ஒன்றும் அவனுக்கு பிரச்சனையில்லை. அவள் வரும்வரை அவள் சம்பந்தப்பட்ட டிராக்கை விட்டு மற்ற டிராக்குகளை காட்டி சமாளித்திக்கொள்ளலாம். ஆர்டியன்ஸின் எதிர்பார்ப்பும் கொஞ்சம் கூடும். அவள் நகர்ந்தபின்பு டையலாக் ரைட்டருக்கு போன் செய்தான். சற்றுமுன் எடுத்த காட்சிகளின் சில வசனங்களில் மாற்றம் செய்யவேண்டியவை குறித்து பேசியபின்புதான் நண்பன் ராகுல் காத்திருப்பதே அவன் நினைவிற்கு வந்தது. எல்லோருக்கும் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துவிட்டு ராகுலை அழைத்துக்கொண்டு தன் ஆல்ட்டோவில் ஏறி ஸ்டார்ட் செய்தான்.

“சாரி மச்சி ரொம்ப வெயிட் பண்ணவச்சிட்டனா”?

“அதெல்லாம் பரவால்ல. மூவி டைரக்ட் பண்றேன்னு ஊர்லருந்து வந்திட்டு சீரியல் பண்ணிட்ருக்க”?

“பத்து வருஷம் நாயாப்பேயா அலைஞ்சாச்சு மச்சி. கைவசம் நூறு ஸ்கிரிப்டு வச்சிருக்கேன். பத்துகோடி தொடங்கி ஆயிரம் கோடி பட்ஜட் வரை கதையிருக்கு. பேஜிலரா இருந்தவரை தெரியல. கல்யாணம் புள்ளகுட்டிங்க எல்லாம் வேற ஆயிருச்சி. பொழைச்சாகணுமே. பார்ப்போம். நெறைய கான்டாக்ட் இருக்கு. அப்பப்ப புரொடியூசர்ஸையும் பார்த்துகிட்டுத்தான் இருக்கேன்”

ராகுல் மவுனமாக ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடியிருந்தான்.

“ஆமா நீ என்ன செய்யிற? காலேஜ் முடிஞ்சப்புறம் ஆளு அட்ரஸேயில்ல? கார்த்திகிட்டதான் அப்பப்ப பொலம்புவேன். பரதேசி ஒருவார்த்தைகூட சொல்லாம அப்ஸ்கான்டாயிட்டானேன்னு”

“அவங்கிட்டதான் மச்சி நம்பர் வாங்குனேன். நடுல நெறைய பிரச்சனைங்க. அப்பா ஏகப்பட்ட கடனை வச்சிட்டு செத்துட்டாரு. கனடால சொந்தக்காரர் ஒருத்தரு ஏகப்பட்ட பிஸ்னஸ், கூட ஒத்தாசையா இருன்னு கூப்பிடவும் ஓடிட்டேன். கல்யாணங்கூட பண்ணிக்கல. இப்பக்கூட அவுரோட பிராப்பர்ட்டி டீலிங் ஒன்னு முடிக்கத்தான் வந்தேன். அன்னிக்கி கார்த்திய எதேச்சையா மால்ல பாத்தப்பதான் உன்னப்பத்தி சொன்னான். ரெண்டுநாள்ல ரிட்டர்ன் ஆவுறேன்”

“பட் செம்ம ஹேப்பிடா எனக்கு உன்ன பார்த்ததுல. இந்தப்பக்கம் வர ஐடியா இருக்கா இல்ல அங்கயே செட்டிலா”?

“வரணும்டா. வந்து என்ன செய்யன்னுதான் யோசிக்கிறேன்”

“போடா லூஸு. எக்கச்சக்க வழிகள் இருக்கு பொழைக்க. அட எதுமே இல்லாட்டி என் சீரியலுக்கு வந்துரு” என்று கண்ணடித்தான் திவாகர்.

“ஹஹ்ஹ்ஹா கோவிச்சுக்காத மச்சி. ஜனங்களை முட்டாள்தனமா அடிமையாக்குற சோசியல் பொல்யூஷன் சமாச்சாரம்டா சீரியல்”

திவாவிற்கு சுருக்கென்றது.

“தப்பா புரிஞ்சிகிட்ட மச்சி. சீரியல் ஒரு அவுட்லெட். வீட்லயே சமைச்சி தொவச்சி நொந்துபோயிருக்கிற லேடிஸுக்கு பெரிய ரிலாக்ஸ்ட். அவ்ளோ ஏன், முன்ன மாதிரி மாமியார் மருமக சண்டைலாம் பேப்பர்ல வருதா இப்பல்லாம் ? ஏன்னா அவங்க சீரியலை ஒன்னா சேர்ந்து பார்த்து பிரன்ட்ஸ் ஆயிட்டாங்கடா” என்று வாய்விட்டுச்சிரித்தான்.

“அப்டியில்ல மச்சி. ஒருத்தரை ஒருத்தர் எப்புடி எவிடன்ஸ் இல்லாம கொல்றதுன்னு சீரியல் பார்த்து தெளிவாயிருப்பாங்க” என்று ராகுலும் சிரித்தான்.

*************************************

வித்யாவின் கண்ணீர் எழுத்துக்கள்மீது விழுந்தது. ஜன்னல் திரைகள் காற்றிலாட கப்போர்டு மூலையில் ராஜேஸ்வரியும் அழுதுகொண்டிருந்தாள்.

“இப்பவாச்சும் நீ நம்புறியா விது”?

வித்யாவால் பேசமுடியவில்லை. அழுகை முட்டிக்கொண்டுவந்தது. கதவை திறந்துகொண்டு கற்பகம் உள்ளே வந்தாள். அக்காவின் மாமியார். அவள் முகம் சோகமாக இருந்தது. வித்யா அழுவதை பார்த்து அவள் தோளில் ஆறுதலாக கைவைத்தாள்.

“விடு கண்ணு. இனி அழுது என்ன பண்றதுசொல்லு. செத்துப்போன உன் அக்கா திரும்பி உயிரோட வரவாபோறா” என்றாள்.

வித்யாவிற்கு இப்போதே அந்த பெண்மணியை கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டால் என்னவென்று தோன்றியது. அறைமூலையில் அவள் அக்கா ராஜேஸ்வரி தன் மாமியாரையே எரிப்பது போல பார்த்துக்கொண்டிருந்தாள். வித்யா பதில்பேசாமல் அக்காவின் டைரியுடன் அறையிலிருந்து வெளியேறினாள். கதவை சாத்திக்கொண்டு கற்பகமும் பின்தொடர, ஹாலில் சுரேஷ் யாருடனோ போனில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான்.

“அதெல்லாம் இப்ப அப்டித்தான் பேசுவ ரேவதி. கல்யாணத்துக்கப்புறம் நீ எப்டின்னு பார்க்கத்தான போறேன்”.

வித்யாவை கண்டதும் போனை கட்செய்துவிட்டு முகத்தை சோகமாக்கிக்கொண்டான். கற்பகம் கிச்சனுக்குள் செல்ல சுரேஷும் வித்யாவும் தனிமையிலிருக்கும்போது சுரேஷ் சொன்னான்.

“எனக்கு உண்மையில இஷ்டமேயில்ல வித்யா. அம்மாதான் பாவம் ரொம்ப பிடிவாதம் பண்றாங்க. அவங்களுக்கும் பாவம் வயசாவுதுல்ல. அதான் ஒத்துக்கிட்டேன்”

வித்யா அமைதியாக இருந்தாள். பொண்டாட்டி செத்தா புதுமாப்பிள்ளை என்னும் பழமொழி அவளுக்கு நினைவுக்கு வந்தது. எத்தனை சுலபமாக இருக்கிறது இவர்களுக்கு. இவர்கள் வீட்டு பெண்ணாக இருந்தால் இப்படி இருப்பார்களா ? இத்தனைக்கும் அக்கா இறந்து ஆறுமாதம்கூட முழுதாய் ஆகவில்லை.

ராஜேஸ்வரி அவர்களுக்கு அருகே வந்து சோபாவில் உட்கார்ந்துகொண்டு சுரேஷையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் என்ன யோசிப்பாள் என்பதை வித்யாவால் புரிந்துகொள்ளமுடிந்தது. சிலகாலமாக கனவிலும் நேரிலுமாக அக்கா வந்தபோதெல்லாம் தன்னுடைய பிரமை என்றுதான் நினைத்திருந்தாள்.

“இன்னும் என்னால நம்பவே முடியல வித்யா. அபார்ஷன் ஆனா செத்துக்கூடவா போயிடுவாங்க? ராஜி பாத்ரூம்ல வழுக்கி விழுந்து அபார்ட் ஆயிடுச்சின்னு அம்மா சொன்னப்ப எப்புடி பதறிப்போயிட்டேன் தெரியுமா? ப்ச்… நா வந்து ஆம்புலன்ஸுக்கு சொல்லி ஆஸ்பிடல் போறதுக்குள்ளயே பிளீடிங் ஜாஸ்தியாகி”…

சுரேஷ் இப்போது நிஜமாகவே அழுதான். ஆனால் அதில்கூட நடிப்பு இருக்குமோ என்றுதான் வித்யாவிற்கு தோன்றியது. ராஜேஸ்வரியும் சுரேஷ் அருகே நின்று மூக்குறிஞ்சிக்கொண்டிருந்தாள்.வித்யா அங்கிருந்து கிளம்பிவிட்டாள். வாசல் கேட் வரை வந்த ராஜேஸ்வரி வித்யாவை பாவமாக பார்த்தாள்.

“நீ கவலைப்படாதக்கா. நா இவங்களை சும்மாவிடமாட்டேன்” என்றபடி நடக்கத்துவங்கினாள்.

*************************************

“சே கட்டைலபோறவன். கரெக்டா இன்ட்ரஸ்டான எடத்துல வந்து தொடரும் போட்டுடறான் கடங்காரன்” என்றபடி எழுந்துகொண்டாள் பார்வதி. ரிமோட்டை அழுத்தி டீவியை அணைத்துவிட்டு பக்கத்து அறையை பார்த்தாள் சாத்தியிருந்தது. மருமகள் தலைவலியென்று படுத்துக்கொண்டிருந்தாள். செல் போன் ஒலித்தது. மதுரையிலிருந்து அண்ணி கோமதிதான்.

“ஆங் சொல்லுங்கண்ணி”

“—————————- “

“ஆங் ஆச்சு. ஆமாமா நல்ல கட்டத்துல நிப்பாட்டிட்டான் பாருங்க”

“—————————- “

“தம்பி வேலைக்கி போயிட்டான்”

“—————————— “

“ம்ம்ம்ம்….. இருக்கா இருக்கா. உள்ளதான் படுத்திருக்கா”

“——————————“

“அட நாந்தான் சொல்றேன்னு சொன்னேன்ல”?

“——————————– “

“நேத்து மூலிகைக்கடைக்கி போயிருந்தேன்”

“——————————— “

“சும்மா தருவானா ? நாலு பொம்பளைப்புள்ளைங்க இருக்குண்ணே… அப்டின்னு கண்லதண்ணிவிட்டப்பறம் தான் குடுத்தான்”

“——————————— “

“ஆமாமா பால்லதான் கலந்து தரணும்”

“———————————— “

“அதெல்லாம் கவலைப்படாத நாம்பாத்துக்குறேன். உன் மருமகனைப்பத்தி உனக்கு தெரியாதா”?

“———————————— “

“ஒருநிமிஷம் இருங்கண்ணி” என்று போனை அடைத்துக்கொண்டு வேலைக்காரப்பெண்ணிடம் கேட்டாள்.

“இங்க என்ன செய்யிற ? நாந்தான் உன்ன போயிட்டு சாயந்திரமா வரச்சொன்னன்ல”?

“இல்லங்கம்மா அப்பாக்கு ஒடம்புக்கு முடியல. டாக்டர்கிட்ட கூட்டிப்போவணும். ஒரு முன்னூறுவா குடுத்திங்கன்னா சம்பளத்தில கழிச்சிக்கலாம்”

பார்வதி மெல்ல நடந்து ஷோகேஸ் மேலிருந்த தன் ஹேண்ட் பேகிலிருந்து காசு எடுத்துக்கொண்டுவந்து கொடுக்க அந்த பெண் நகர்தாள். மறுபடி போன் பேசத்தொடங்கினாள் பார்வதி.

“————————————– “

“இல்லயில்ல. குயிலிதான்”

“————————————- “

“என்னமோ அவங்கப்பாக்கு முடிலயாம். காசு கேட்டா”

“————————————– “

“ஆமாமா என்ன பண்றது. வந்ததுலயே இவமட்டுந்தான் பரவால்லாம இருக்கா. ச்சே… ச்சே… அதெல்லாம் கெடையாது. கைசுத்தம் வாய்சுத்தம்”

“————————————— “

“ஆதார் அட்டையா ? ஆங் வாங்கியாச்சே”

“————————————- “

“தெரில தம்பிதான் கூட்டிட்டுப்போனான்”

“———————————– “

“தெரியலியே அண்ணி”

“———————————- “

“சரி பாருங்க. நான் எல்லாத்தையும் முடிச்சிட்டு சொல்றேன்”

“————————————- “

“வேணாம். இதப்பத்திலாம் உன் பொண்ணுகிட்ட எதும் சொல்லவேனாம்”

“—————————————- “

“ஆமா அவ சின்னப்பொண்ணுதான”

“—————————————– “

“ஆங் சரி”

“—————————————- “

“சரி”

“—————————————– “

“வச்சிடறேன்” என்றபடி பார்வதி கிச்சனை நோக்கி நகர்ந்தாள்.

முழுவதும் படித்தபின்பு …

“நல்லாயிருக்கு தம்பி. இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணி கொண்டுவாங்க. அடுத்த பிராஜகட் உங்களோடதுதான்” என்றார் சிபிச்செல்வன்.

திவாகருக்கு சந்தோஷத்தில் படபடத்து வந்தது. இப்போதே சென்று வித்யாவிடம் இதைப்பற்றிச் சொல்லவேண்டுமென நினைத்துக்கொண்டான். அவள்தான் இந்த யோசனையையே சொன்னவள். சினிமா சினிமா என்று புரொடியூசர்களாக தேடி அலைந்துகொண்டிருந்தவனை, “பேசாம சீரியல் ட்ரை பண்ணேன் திவா” என்று உற்சாகப்படுத்தியவள். ஐடியாவுடன் கூடவே ஒரு கதையும் கொடுப்பாள் என்று அவன் நினைக்கவேயில்லை. அதை தன் ஸ்டைலில் அழகாக மாடிஃபை செய்து டீவி நிறுவனத்திடம் காட்ட இதோ உடனே சம்மதித்துவிட்டார்.

வெளியில் வந்து வித்யாவிடம் செல்பேசினான். அவள் குரலிலேயே எத்தனை மகிழ்ச்சி என்பதை புரிந்துகொள்ள முடிந்தது திவாகரால். இது நல்ல ஓப்பனிங். இதில் கிடைக்கும் நற்பெயரும் தொடர்புகளும் தன் சினிமா சம்பந்தமான எதிர்காலத்திற்கு உதவும் என்று கணக்குப்போட்டான்.

*************************************

ராஜேஸ்வரி ஒரு முடிவிற்கு வந்தவளாக எழுந்து ஃபோன்பேசினாள். பிறகு ஹாலுக்கு வந்து மாமியாரின் அருகே வந்து உட்கார்ந்துகொண்டாள். மாமியார் கற்பகம் அவளை சந்தேகத்துடன் பார்த்தாள்.

“ஏங்கண்ணு பால் குடிச்சிட்டியா”?

“இன்னும் இல்ல அத்தை. கொஞ்சம் கெஸ்ட் எல்லாம் வரேன்னிருக்காங்க. அதான் வெயிட் பண்றேன்”

கற்பகம் ராஜேஸ்வரியையும் டீவியையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருக்க வாசலில் சுரேஷ் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே வந்தான்.

“என்ன ராஜி எதுக்கு அர்ஜண்ட்டுன்னு சொல்லி வரச்சொன்ன”?

மாமியாரின் குழப்பம் நிறைந்த பார்வையை தவிர்த்துவிட்டு சுரேஷிற்கு பதில் சொல்ல வாய்திறக்க வாசலில் இப்போது ஜீப் ஒன்று வந்து நின்றது. உள்ளே நுழைந்த மகளிர் காவலர்கள் கேட்டார்கள்.

“யாரு இங்க ராஜேஸ்வரி”?

“என்ன ராஜி என்ன பிரச்சனை போலிஸெல்லாம் வந்திருக்காங்க”? என்று சுரேஷ் கேட்க ராஜேஸ்வரி சொன்னாள்.

“கொஞ்சம் பொறு சுரேஷ் விளக்கமா சொல்றேன்” என கூறிவிட்டு போலீஸ் பெண்மணியிடம் சென்றாள்.

“சரி, அந்த பால்தம்ளர் எங்க”?

ராஜேஸ்வரி படுக்கையறை சென்று அந்த பாலை கொண்டுவந்து கொடுக்க, அதை போலீஸ் பத்திரமாக ஒரு பாலித்தீன் கவரில் ஊற்றி எடுத்துக்கொண்டார்கள்.

“நீங்க சாயந்திரமா ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கம்ப்ளைன்ட் எழுதிக்கிடுத்திருங்க ராஜேஸ்வரி” எனக்கூறிவிட்டு மாமியார் கற்பகத்தை கொடூரமாக ஒரு முறை முறைத்துவிட்டு சுரேஷிடம் வந்தாள்.

“பாருங்க மிஸ்டர் சுரேஷ். உங்க மதர் இந்தப்பொண்ணோட கருவை கலைக்க இந்த பால்ல எதோ மருந்து கலந்திருக்காங்க. நாங்க இதை லேபுக்கு கொண்டுபோறோம். டெஸ்ட்ல அது உண்மைனு ரிசல்ட் வந்தா அவங்களை, ஏன் தேவைப்பட்டா உங்களையுமே அரஸ்ட் பண்ணவேண்டியிருக்கும்” என்று சொல்லிவிட்டு வெளியேற,

சுரேஷ் அதிர்ச்சியுடன் நின்றிருக்க கற்பகம் என்னென்னவோ சொல்லி அழுது புலம்பத்தொடங்கினாள்.

*************************************

“கட் கட் கட் கட்..” என்றான் திவாகர்.

கற்பகம் தன் கிளிஸரின் கண்களை துடைத்துக்கொண்டு செல்போனில் யாரிடமோ பேசத்தொடங்க, வித்யா திவாகர் அருகில் வந்தாள்.

“நா நெனச்சமாதிரியே வந்துருக்கு திவா. தேங்ஸ்”

“லூசு. சீரியலா எடுக்குறப்பவே நமக்கு இவ்ளோ கஷ்டமாயிருக்கு. உண்மையிலயே உங்கக்கா இப்டித்தான் இறந்துபோயிருக்காங்க. பாவம் அவங்களுக்கு எப்டி இருந்திருக்கும்”?

“உண்மைதான் திவா. நா அதை நெனச்சு அழாத நாளில்ல. அந்த பொம்பள என் அக்கா புருஷன் எல்லாரும் ஆக்ஸிடன்ட்ல சாகறவைரைக்கும் நா தெனந்தெனம் தவிச்சிருக்கேன். கடவுளா பார்த்து நல்ல தண்டனை குடுத்துட்டாரு”

“சரி விடும்மா அழாத. எனக்கு கொஞ்சம் டைமாவும். நீ வேணா ஒரு ஆட்டோ புடிச்சி வீட்டுக்கு கெளம்பிக்கிறியா”?

“சரி திவா” என்றபடி வித்யா அங்கிருந்து நகர்ந்தபோது, ஷூட்டிங் ஹால் மூலையில் ராஜேஸ்வரி தன் வயிற்றைத்தடவியபடி அழுதுகொண்டிருந்தாள் யார் கண்ணுக்கும் தெரியாமல்.

*************************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *