Blog

  • பார், பகலும் கழிந்தது இரவும் போனது

     

    -கீதா மதிவாணன்

    பார், பகலும் கழிந்தது  இரவும் போனது,

    சூரியன் மேற்கை அடைந்து  மறைந்தது.

    அந்திப்பொழுது வந்து ஆக்கிரமித்தது.

    முந்தைய அந்திப்பொழுதுகள் போலவே

    அந்தப்பொழுதும் இருந்தது.

    எழுந்தது முதலாகவே ஏனோ எண்ணியிருந்தேன்,

    பகலில் ஏதேனும் புதுமை நிகழுமென்று!

    பார், பகலும் கழிந்தது இரவும் போனது.

     

    பையப் பையப் புறப்பட்ட விண்மீன்கள்

    மெல்ல மெல்லப் பரவின வானமெங்கும்.

    முந்தைய இரவுகளைப் போலவேதான்

    அந்த இரவும் இருந்தது.

    அந்திவேளையில் ஏனோ சிந்தித்திருந்தேன்,

    இரவில் ஏதேனும் அதிசயம் நிகழும் என்று.

    பார், பகலும் கழிந்தது இரவும் போனது.

     

    பறவைகள் கீச்சிசைத்தன,

    அரும்புகள் மலர்ந்து மணம்வீசின.

    கிழக்கிலிருந்து மீண்டும் கதிரவன் எழுந்தது.

    வழக்கம்போல் வைகறைப்பொழுது புலர்ந்தது.

    உறங்கும்வேளையில் ஏனோ உத்தேசித்திருந்தேன்,

    விடியலில் ஏதேனும் விநோதம் நிகழும் என்று.

    பார், பகலும் கழிந்தது  இரவும் போனது.

     

    (மூலம்: ஹரிவம்ஷ்ராய் பச்சன் அவர்கள் எழுதிய ‘lo dhin beetha hai, lo raat gayee’ என்னும் இந்திக் கவிதை,

    தமிழாக்கம்: கீதா மதிவாணன்)

     

    படத்துக்கு நன்றி: http://srilankaoneness.blogspot.com/2010/06/oneness.html

     

    Share
  • அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை!..7

     

    சாகர்


    எகிப்திய அருங்காட்சியகம்

     

    நான்காயிரம் வருட தொன்மையான பொருட்களை உள்ளடங்கிய அருங்காட்சியகம் என்பதால், புகைப்படம் மற்றும் திரைப்படம் எடுக்க அனுமதி இல்லை. கையில் இருந்த கேமராக்கள் மற்றும் காம்கார்டரை வாயிலில் உள்ள அலுவகர்களிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றோம்.பாரிஸில்(Paris) உள்ள லூவ்ரு(Louvre), லண்டனில் உள்ள பிரிட்டிஷ்(British Museum) அருங்காட்சியகங்களை முன்பே பார்த்திருந்ததால் எகிப்திய கலைப்பொருட்களை பற்றி ஓரளவு இருந்த ஆர்வம், லண்டனில் துடுக்கமன்(Thutukhamun) மன்னரின் புதையல் பொருட்காட்சியை பார்த்தபின் இன்னும் அதிகமாயிற்று. இப்போது அவை எல்லாம் தோன்றிய இடத்தில உள்ள அருங்காட்சியகம் என்பதால், இது எப்படி இருக்கும் என்ற ஆவல் தூண்ட துரிதமாக உள்ளே போனோம்.

    கைரோ அருங்காட்சியத்தில் நுழைவு சீட்டு மம்மிகளின் அறைக்கு அனுமதி வழங்குவதில்லை அதற்க்கு தனி சிறப்பு கட்டணம். இவ்வளவு தூரம் வந்தாயிற்று அவற்றையும் பார்போம் என்று அதையும் வாங்கினோம்.

    எங்கோ பார்த்தாலும் ஸ்பின்க்ஸ் உருவங்கள். அருங்காட்சியகம் எகிப்திய வரலாற்றின்படி பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருந்தது.எங்கள் வழிகாட்டி இந்த கலை கண்காட்சியை பார்க்க ஒரு மாதம் இருந்தாலும் போதாது எனவே நான் மிக முக்கியமானவை மற்றும் காட்டுகிறேன் மேற்கொண்டு தாங்கள் இஷ்டப்பட்டதை சுற்றி பாருங்கள் என்றார்.

    முதலில் எங்களை எகிப்திய தொல்பொருள் ஆய்வுகளில் ஈடுபட்ட பல அயல் நாடு தொல்பொருள் ஆராய்சியாளர்களில்  சிலைகளை காட்டினார், கார்டர்(Carter), சாம்பியன்(Champillon) போன்ற இந்த மேதைகளை கடந்து உள்ளே சென்றோம்.

    ஒரு பெரிய படகு இருந்தது, செடார் (Sedar) மரத்தில் அமைக்கபற்ற இந்த படகு சுமார் நான்காயிரம் ஆண்டு தொன்மையானது. அஸ்வான் பாறைகளை நைல் நதியில் கொண்டுவந்து பிரமிடுகளை கட்ட உபயோகிக்க பட்டதாம் இந்த படகுகள்.

    பிரமிடுகளை கட்டிய குப்ர்(Khufre), மேன்கோவ்ரே(Menkuare) போன்ற பாரோக்களின் சிலைகளை பார்த்தபோது, இதுபோல் நமது நாட்டில் நம் மன்னர்களில் உருவங்கள் இன்று இல்லே என்று தோன்றியது.

    கிறிஸ்துவிற்கு 3100 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட நார்மர்(Normar) மன்னரின் சிலைவடிவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் முதல் முறையாக மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தை முதல் முறையாக ஒரு தேசமாக ஆண்டவர், இவர்.

    திரும்பிய பக்கம் எல்லாம் பாரோக்களின் உருவங்கள் சிறுதும் பெரிதுமாக நின்றும்,அமர்ந்தும், படுத்தும் காணப்பட்டன.அவற்றில் ராமேசெஸ்ஸின் (Rameses) உருவச்சிலைகள் மிகவும் சிறப்பாக இருந்தன. அவற்றில் பாரோ (Pharoh) சிறுவனாக விரல் சூப்பும் காட்சி அழகாக இருந்தது.

    மம்மிகளின் சிறப்பு அறைக்கு அடுத்ததாக சென்றோம். 4000, 3000 வருடங்களுக்கு முன் ஆண்ட அந்த அரசர்கள் மற்றும் அரசிகளின் உடல்கள் மம்மிகளின் வடிவில் இன்னமும் பதப்படுத்திய நிலையில் காட்சியளித்தன. ஒரு சவக்கிடங்கு போன்ற ஒரு காட்சியளித்தாலும், எகிப்திய மருத்துவ கலாச்சர மகத்துவத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    இறந்தவரின் உடலை கோவிலின் குருமார்கள் அறுத்து உள்ளே உள்ள இருதயம், குடல், நுரையீரல் போன்றவற்றை எடுத்து தனித்தனி ஜாடிகளில் பதபடுத்தி வைத்தனர். பின்னர் உடலை பலவேறு முலிகை மற்றும் வாசனை பொருட்களை கொண்டு பதப்படுத்தி,துணி கொண்டு சுற்றி பதப்படுத்தினர். உடலை சவப்பெட்டியில் வைத்து மூடி,  அதனை சமாதி கையில் அல்லது பிரமிடுகளில் வைத்தனர். கூடவே ஜாடிகளில் உள்ள மற்ற அங்கபாகங்களையும் வைத்தனர்.

    அழுகும் அபாயம் உள்ள பாகங்கள் இல்லாமல் பதப்படுதபட்ட இந்த மம்மிகள் சுருங்கி மரப்பாச்சி பொம்மைகள் போல் காட்சியளித்தன.ஆயிரகணக்கான வருடங்களுக்கு முன் இறந்தாலும் இவை இன்றும் வரலாற்றின் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றன.

    மூன்றாம்  ராமேசெஸ் மன்னரின் மனைவி அவரை கொல்ல ஆள்வைத்து முயற்சித்ததாக வரலாறு. அவர் மம்மியை ஸ்கேன் செய்து அவர் குரல்வளை அறுக்கப்பட்டு இறந்தார் என்று இன்று உறுதி செய்து ஆயிரக்கணக்கான வருட கொலைக் கதைக்கு முடிவுரை எழுதின.

    சிறு வயதில் இறந்த துடுகமுன் அரசர் மிகவும் சிறப்பானவர் ஏன் என்றால் அவர் இரவு கோயிலில் கணக்கில் அடங்காத புதையல் மற்றும் புராதன பொருட்கள் கண்டெடுக்கப் பட்டன. இவர் சிறுவயதில் இறந்ததால் இவர் விஷம் கொடுத்துகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று வரலாறு. சமிபத்தில் இவர் மம்மியை பரிசோதனை செய்து இவர் கால் எலும்பு முறிந்து இறந்தார், விஷம் உட்கொண்டதற்க்கு அறிகுறி இல்லை என தெரிய வந்தது.

    மம்மிகளின் அறையில் இரண்டாம் ரமேசிஸ்(Rameses), டுத்மொசிஸ்(Thutmosis), அவர் அன்னை ஹத்ஷேபுட்(Hatsheput) மற்றும் பல எகிப்திய மன்னர்களின் உடல்கள் மட்டுமன்று பல்வேறு மிருகங்கள் மற்றும் பறவைகளும் பதப்படுதப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த பறவைகளும் மிருகங்களும் ஆயிரகணக்கான வருடம் பழமையானவை.  இறந்தவரின் பரலோக யாத்திரைக்கு துணையாகவும் உணவாகவும் இவை அமைந்தனவாம்.

    இந்த கதைகளை கேட்டறிந்தவாறு மெல்ல துடுகமுன் ராஜாவின் விசேஷ புதையல் கட்சி பகுதிக்கு வந்தோம். கார்ட்டர் என்னும் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர் கண்டு பிடித்த இந்த அரசரின் இரவு கோயில் மிகவும் விஷேசமானது. அரசர்களில் பள்ளத்தாக்கு (Valley of Kings) என்றழைக்கப்படும் இடம் லக்சர்(Luxor) அருகில் உள்ளது. மற்ற கோயில்களில் இருந்த பொக்கிஷம் பொறும எல்லாம் திருடர்களால் களவாடப்பட்ட நிலையில் இந்த கோயிலில் ஆண்டு புதைத்த மேனிக்கு தங்கமும், பொக்கிஷங்களும் அப்படியே இருந்தன.

    இவற்றில் அந்த மன்னரின் மம்மி, மற்றும் தங்க முகமூடி அச்சு(Facemask), அவரை புதைத்த சவப்பெட்டி எல்லாம்  சிறிதளவும் சிதலமடையாமல் கிடைத்தன. மன்னரின் மம்மி அவர் உடல் அளவில் ஒரு பேட்டியின் வைக்கப்பட்டு அந்த பெட்டி மற்றும் ஒரு பெரிய வேலைப்பாடு கொண்ட பெட்டியில் வைக்கப்பட்டு. கடைசியாக இவை ஒரு தங்க மூலம் பூசபட்ட ஒரு பெரிய பெட்டியில்(Sacrophagus) வைக்கபட்டிருந்தது. மன்னரின் உடல் பகுதிகள் முன்னர் குறிப்பிட்டது போல் பளிங்கினால் ஜாடிகளில் வைக்கபட்டிருந்தன.

    மன்னரின் தங்கமுகமூடி 11 கிலோ தங்கத்தினால் செய்யப்பட்டது. எகிப்தின் புராதன கிரீடமும் ஒட்டுதாடியும் கொண்ட இந்த குழந்தை முகம் பார்ப்பவரை வசீகரிக்கும் சக்தி கொண்டது.

    துடுகமுன் அரசரின் சிங்க சிங்காசனம், தேர், செங்கோல் மற்றும் கிரீடம் போன்றவையும் கண்டேக்கபட்டன. இவை அனைத்தும் ஓரிடத்தில கட்சி அளிப்பது கண்கொள்ள கட்சி. ஏற்கனவே லண்டனில் ஒரு முறை பார்த்திருந்தாலும் மீண்டும் பார்க்கும்போதும் அலுப்பு தட்டவே இல்லை.

    நேரம் போவது தெரியாமல் இந்த கலை பொக்கிஷங்களை பார்த்து கொண்டேயிருக்க மஹ்மூத் வந்து காட்சியகம் மூடும் தருணம், நாம் போகவேண்டும் என்றார்.

    வண்டியில் ஏறியதும் நாம் இப்போது எகிப்தின் மிகவும் புராதனம் வாய்ந்த கான் அல் கலிலி(Kahn el Khalili Bazaar)அங்காடி போய் சிறிது நேரம் செலவிடலாம். அதன் பின்னர் உங்களை கீஸா(Giza) ரயில் நிலையில் லக்சர் செல்லும் இரவு வண்டியில் கொண்டு ஏற்றிவிடுகிறோம் என்றார். (தொடரும்)

     

    Share
  • ராமகிரி நரசிம்மர்!…

    விசாலம்                                                                                                                                                                                                                              தட்டை நாட்டை ஆண்டு வந்த சாமைய நாயக்கர் ஒரு தடவை வேட்டை ஆடப்போனார்   கூடவே அவரது வேட்டை நாய்களும்  அவருடன் சென்றன . அப்போது ஒரு அதிசயம் நடந்தது .திடீரென்று வேட்டை நாய்கள் தாங்கள் மற்ற மிருகங்களைத் துரத்துவதற்குப்பதிலாக  பயந்தபடி ஓடி வந்தன .அதைத்துரத்தியதோ ஒரு கீரி . இது எதனால் நடந்திருக்கும் என   சிந்தனையில் ஆழ்ந்த மன்னர் அந்த இடத்தை ஆராய உத்தரவிட்டார்.அந்த இடத்தில் “கல்யாண நரசிம்மர்  “அருள் பாலித்து வருகிறார் என்று சேவகர்கள் செய்தியைக்கொண்டுவந்தார்கள்.

    அன்று இரவு அவர் கனவில் நரசிம்மர் தோன்றித் தனக்கு ஒரு ஆலயம் எழுப்பும்படிச்சொன்னார்.  அந்தக்கனவை அப்படியே நனவாகச்செய்து   ஶ்ரீ லக்ஷ்மிநரசிம்மருக்குப் பெரிய ஆலயம் ஒன்றைக் கட்டினார் இந்த ஆலயத்தின்  வயது சுமார் அறநூறு ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் .

    இந்த  ஆலயத்தை அடைய நாம்  கரூர் செல்லும் பாதையில் போய்  கோவிலூர்  என்ற ஊரை அடைய வேண்டும்  அந்தச்சாலையில் சுமார் இரண்டு கிமீ தூரம் செல்ல “ராமகிரி” என்ற இடம்  வருகிறது ,

    இந்த ராமகிரி என்ற இடத்தில் தான் திரு கல்யாண நரசிம்மப்பெருமாள் திருக்கோயில்   அமைந்திருக்கிறது. மூன்று நிலை ராஜகோபுரம்  கம்பீரமாக நிற்க உள்ளே பெரிய பிரகாரத்துடன் இருக்கும்    இந்தக்கோயிலில் தான் கல்யாண நரசிங்கப்பெருமாள் கமலவல்லித்தாயாருடன்  அருள் பாலிக்கிறார் .

    இதன் புராணக்கதையைப்பார்த்தால்  உக்கிரமாக வந்த நரசிம்மப்பெருமாள் பின்னால் சாந்தமாக மாறி அருள் பாலித்தார். இதன் காரணம் என்னவென்றால்  முதலில் அவரது உக்ரத்தைக்கண்டு  பலரும் பயந்து நகர சிறுவன் பிரஹ்லாதன் அமைதியாக கைகளைக்கூப்பியபடி  அவரைத்துதித்தான்.    நரசிம்மர் சிறிது சாந்தமாக  முப்பத்து முக்கோடி தேவர்களும்  ரிஷிகளும்  அங்கு வந்து வணங்கினர் . பின்  நரசிம்மர் லக்ஷ்மியை அரவணைத்தபடி  காட்சியளித்தார் .அந்த நேரத்தில் தேவர்கள் அவரிடம்  தங்கள் வேண்டுகோளை வைத்தனர்

    “ஸ்வாமி தங்களை நாங்கள் கல்யாண  நரசிங்கப்பெருமாளாகக்காண  விரும்புகிறோம் தாங்கள் இந்த இடத்தில் அமர்ந்து சேவை சாதிக்க வேண்டும்” அவர்கள் ஆசையும் நிறைவேறியது .அந்த இடத்திலேயே நரசிம்மரும்  அமர்ந்துவிட்டார் .

    அந்த வனப்பகுதியில்  “ராமகிரி” யில்  ஶ்ரீதேவி பூதேவி சமேதராய் கல்யாண  நரசிம்மப்பெருமாளாக அருள் பாலிக்கிறார்.அவர் திருமுகத்தைப்பார்க்கவே  மனதில் ஒரு அமைதியும் . ஒருவித பக்தியும் தோன்றி நம்மையறியாமலே நம் கைகளைக்கூப்பிச் சேவிக்கிறோம்  .

    ஸ்வாதி நக்ஷத்திரம் அன்றும் நரசிம்ம ஜயந்தி அன்றும் மிகவும்   பிரமாதமாக  இங்கு பூஜை நடைப்பெருகிறது .பானகமும் நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படுகிறது .நரசிம்மரைத்தொழுதால்  சத்ரு பயம் .பில்லிசூன்யம் கண்திருஷ்டி போன்றவைகள் அகன்றுவிடும் . எல்லாவற்றிலும் வெற்றி கிட்டும்

    Share
  • குறளின் கதிர்களாய்…(4)

     

    செண்பக ஜகதீசன்

     

    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

    நோக்கக் குழையும் விருந்து.

              -திருக்குறள்-90 (விருந்தோம்பல்)

     

    புதுக் கவிதையில்…

     

    முகந்து பார்த்தாலே

    முகஞ்சுருங்கி வாடிவிடும்

    அனிச்ச மலர்..

     

    அதுபோல்தான்,

    அகம்நொந்து வாடிடுவர்

    விருந்தினரும்

    முகம் மலரா ஒருநேர்

    பார்வையிலே…!

     

    குறும்பாவில்…

     

    வாடிடும் அனிச்சம் முகந்தாலே,

    விருந்தினர் நிலையிதுதான்

    வரவேற்கும் விருப்பிலாப் பார்வையிலே…!

     

    மரபுக் கவிதையில்…

     

    கையில் எடுத்துக் கசக்கவேண்டாம்

    காலில் போட்டு மிதிக்கவேண்டாம்,

    பைய எடுத்து முகந்தாலே

    பட்டென வாடிடும் அனிச்சமலர்,

    வைய மிதனில் வாழ்வினிலே

    வந்திடும் விருந்தை வரவேற்க

    மையென முகமது கறுத்துநோக்கில்

    மெய்யது சோர்ந்துதான் வாடுவரே…!

     

    லிமரைக்கூவில்…

     

    அனிச்சமலர் முகந்தாலே வாடும்,

    வரும்விருந்தை விருப்பின்றிப் பார்வையொன்று

    பார்த்தாலே பதைபதைத்து ஓடும்…!

     

    கிராமிய பாணியில்…

     

    கேட்டுக்கோ கேட்டுக்கோ

    குடும்பசேதி கேட்டுக்கோ..

    வாட்டவேண்டாம் வதக்கவேண்டாம்

    வாரியெடுத்து மோந்தாலே

    வாடிப்போவும் அனிச்சம்பூவு..

    ஊடுவந்த விருந்துகள

    ஓபசரிச்சி நடத்தவேணும்,

    மொகங்கறுத்துப் பாத்தாலே

    ஒன்னவுட்டு ஓடிப்போவும்..

    பாத்துக்கோ பாத்துக்கோ

    படிப்பினதான் பாத்துக்கோ…!


    Share
  • திருடி

    -தனுசு

    எங்கே சென்றாய்
    என்னவளே
    என்னை விட்டுசென்றது
    ஏனடி?

    எங்கே இருக்கிறாய்
    கள்ளியே
    என்னை பிரிந்து சென்றது
    ஏனடி?

    நித்தம் பித்தம்
    தந்தவளே
    இன்று மறைந்து சென்றது
    ஏனடி?

    இத்தனை அழைத்தும்
    மறுப்பவளே
    இன்று என்னடி ஆனது
    உனக்கு?

    பார்
    நீ இல்லாத இந்த இரவு
    எத்தனை இருட்டு?
    யார்
    சிறைவைத்து உன்னை
    விளையாடிப் பார்ப்பது!

    நீயும் ஒத்துக்கொண்டு
    ஓடி விளையாட
    இது நேரமா?
    உன்னைக்காணாமல்
    ஒடிந்துவிழும்
    என்னுயிரைப் பாரம்மா!

    சொல்லாமல்
    போன தேவியே
    அதனால்
    கொல்லாமல் கொல்லுது
    என் ஆவியே!

    எத்தனை இருளிலும்
    என்னால்
    உன்னை உணர முடியும்
    எத்தனை தொலைவிலும்
    என்னால்
    உன் திசையை அறிய முடியும்.

    ஆனால் இன்று
    உணரவோ அறியவோ முடியவில்லை
    இதை
    யாரிடம் கேட்டும் பயனில்லை.

    கேட்டால்
    இன்று அமாவாசை என்கிறார்கள்
    என் பிரயாசை அறியாதவர்கள்
    என்னை காக்க வைத்தது போதும்
    சீக்கிரம்
    ஓடோடி வா நிலா…..

     

    Share
  • ஓடும் பஸ்ஸில் ஒரு பைபாஸ் சர்ஜரி

     

    – டாக்டர் அல்கேட்ஸ்


    stock-illustration-7915155-medical-symbol-with-snakes-wings-and-skullநான் பொறந்தோன்ன, ஜோசியர கூப்ட்டாங்க. அவரு சொன்னாரு “இவனுக்கு சனி. நாக்குல ஜென்ம சனி”ன்னு.

    எனக்கு 18 வயசு இருக்கும் போது, அம்மா, “இவங்கப்பா ஊர்ல பெரும் புள்ளியா இருந்தாரு. இவன் நாக்குல கரும்புள்ளியோட சுத்தறான். ஐயோ”ன்னு தலைல அடிச்சுக்கிட்டாங்க.

    நம்ம வாய் திறந்தா அங்க சண்டை வந்துடும், பங்காளிங்க பிரிஞ்சுடுவாங்க, தலாக் நடக்கும், வீடு எரியும், இல்ல ஊர்க் கலவரம் கூட ஆகும்

    ———————————————————————————————————————

    Medical college- சேர்ந்த 18ஆவது நாள்….

    நம்ம கிராமத்துலேந்து தினமும் காலேஜுக்கு பஸ் தான். இப்போ ஊரில எல்லாரும் நான் ‘கோட்’டை தோள்ல தொங்கப் போட்டுட்டு போறத பாத்துட்டதுனால, எனக்கும் அலுத்துப்போச்சு. கோட்டை பைக்குள்ளேயே வச்சு தூக்கிட்டுக் கிளம்பிடுவேன்.

    பஸ்ல போகும் போதும் படிப்பேன், திரும்பி வரும் போதும் படிப்பேன். அப்போ நிறைய பேரு, நான் என்ன படிக்கிறேன்னு எட்டிப்பார்ப்பாங்க. நம்ம அனாடமி புக்ல தான் எலும்பு, சதை, தசைன்னு வெளிப்படையாவே படங்கள் இருக்குமே. அதைப் பாத்துட்டு வேற பக்கம் போயிடுவாங்க. நைட்ல அவங்களை எலும்பு மனிதன் அட்டாக் பண்ற மாதிரி கனவெல்லாம் வருமாயிருக்கும்.

    ஒரு நாள், என் புக்கை எட்டிப் பாத்து ஒருத்தர் பஸ்லையே மயங்கிட்டார். சோடாவுக்கு என்கிட்டயே காசு புடுங்கிட்டாங்க. அப்புறம் கண்டக்டர் வந்து, “தம்பி, நீங்க டாக்டருக்கு படிக்கிறீங்க, பெரிய விக்ஷயம் தான். அதுக்காக எவனாவது பஸ்ல மண்டையப் போட்டான்னா, என் வேலை போயிரும். தயவு செஞ்சு இனிமே நம்ம பஸ்ல படிக்காதீங்க தம்பி” ன்னாரு. ஸ்டார்ட்டிங்ல அவரும் எட்டிப்பாத்துருக்காரு. அப்புறம் 3 நாள் ஜீரம். இப்ப தான் திரும்ப டூட்டில ஜாயின் பண்ணினார். கனவுல அவருக்கு சதை மனிதன், எலும்பு மனிதனோட தொடை எலும்பைக் கடன்வாங்கிட்டு அத தூக்கிட்டு அவரை தொறத்துற மாதிரி வந்துருக்குமோ?

    சரின்னு அவர் குடும்பம் குட்டியெல்லாம் நெனச்சுப் பாத்து, அன்னைலேந்து பஸ்ல புக்க எடுக்காம நோட்ஸ் மட்டும் படிச்சேன்.

    ஒரு நாள், ஒருத்தர் நான் படிக்கிறதைப் பாத்துட்டு, “தம்பி. என்ன படிச்சாவுது?”ன்னார்.

    சிக்கிட்டான். “நான் டாக்டருக்கு படிக்கிறேன்”னேன்.

    “அப்படியா! பரவாயில்லயே. எங்க படிக்கிறீங்க?”

    “எலிப்புழுக்கை ஊருல”

    “என்ன சொல்றீங்க. அங்க மாட்டு டாக்டர் பள்ளிக்கூடம் தானே இருக்கு. ஓஹோ. மாட்டு டாக்டர் படிச்சவங்களும் டாக்டர் தானே! சரி தம்பி, நம்ப கிடேறி ஆட்டுக்கு 2 நாளா பேதி. மருந்து சீட்டு எழுதி கொடுங்களேன்”ன்னு கேப்பு விடாம பேசினார்.

    “ஐயா. நான் மனுச டாக்டருக்குத் தான் படிக்கிறேன். எலிப்புழுக்கைல நாலு வருக்ஷமா மெடிக்கல் காலேஜ் இருக்கு”ன்னேன் கோவமா.இருக்காதா பின்ன. வெட்னரி சைன்ஸ், என் 12 வது மார்க்குக்கே கெடச்சுது. MBBSக்காக் தான் யூரியா சாக்குல பணத்தை கொண்டாந்து கட்டினோம்?

    “ஹிஹி, வேகப்படாதீங்க தம்பி, ஹிஹி”

    “சரி” என்று நோட்ஸைப் பாத்தேன். (ulna and radius are the two bones in forearm. the muscles of forearm are ………….)

    “டாக்டர் தம்பி…”

    நானா? டாக்டரா? அப்படியே உச்சி வெயில்ல ஜில்லுனு லஸ்ஸி அடிச்ச மாதிரி இருந்தது.

    “க்கும். சொல்லுங்க”

    “நமக்கு ஒரு 6 மாசமா வலது தோள்பட்டைல வலி. கொஞ்சம் என்னானு பாருங்களேன்”.

    என்னது, அதுக்குள்ள பேக்ஷன்ட்டா? காலேஜ் சேந்தே 2 வாரம் தான் ஆவுது. இப்ப தான் கொஞ்ச நாளா டெட்பாடிக்கிட்ட நிக்கவே தைரியம் வந்துருக்கு. சரி என்னான்னு பாப்போம்

    “எங்க வலிக்குது?”

    அவர் திரும்பி, “இங்க தான் தம்பி”ன்னார்.

    ஒகே. தோள் பட்டை. க்ஷோல்டர். அங்க என்னா இருக்கு? ம்ம்ம் டெல்டாய்ட் மசிள் (மசிள்னா தசை. அது 2 எலும்புல அட்டாச் ஆயிருக்கும். அதால தான் நாம அசையவோ, நடக்கவோ, எழுதவோ முடியுது).

    “ஓகே. உங்களுக்கு டெல்டாய்ட் மசிள்ல வலிக்குது”

    “பாலிடாலா? அது 13 வருக்ஷம் முன்னாடி பொண்டாட்டி ஓடிப்போனப்போ குடிச்சது. அது சரியாயிட்டு தம்பி”

    ஓகே. டெல்டாய்ட் மசிளுக்கு ரத்தம் கொடுக்குறது, ஆக்ஸிலரி ஆர்ட்டரி, நெர்வ் சப்ளை (மூளைலேந்து நரம்பு) என்னவாயிருக்கும்??

    “ஒரு நிமிஷம், பாத்துட்டு சொல்றேன்”

    அவர், (தம்பி என்னாத்த பாக்கப் போவுது? ஏ யப்பா, இவ்ளோ பெரிய புத்தகத்த எடுக்குறாரே? நமக்கு புத்து நோயோ?)

    ஓகே. ம்ம்ம்ம். ஒகே. டெல்டாய்ட் மசிள் இஸ் சப்ளைட் பை மீடியன் நெர்வ் (Deltoid muscle is supplied by median nerve). மீடியன் நெர்வ் எங்கேந்து வருது? ஸ்பைனல் கார்ட் (தண்டுவடம்). ஸ்பைனல் கார்ட் எங்கேந்து வருது? ஓ மூளைலேந்தா. சரி தான். சொல்லிருவோம்.

    “இங்க பாருங்க”, நோட்டில் பேனாவை எடுத்து வரைந்து காட்டினேன். “இதான் தோள்பட்டை, இதான் டெல்டாய்ட் மசிள், இது அதோட நெர்வ். மூளைலேந்து வருது”.

    அவருக்கு வேர்க்க ஆரம்பிச்சுது.

    “இதுல எங்க வேணா ப்ராப்ளம் இருக்கலாம், தசை, இல்லாட்டி ரத்தக் கொழா, இல்ல தண்டுவடமோ, ஏன் மூளைல கூட இருக்கலாம்”

    அவர் கண்கள் போண்டா போல விரிஞ்சுது. வாய் ஆன்னு பொளந்துக் கெடக்கு.

    “இதுல பாருங்க, மூளைல செரிப்ரம்….”

    “எலிப்புழுக்கைல்லாம் எறங்கு”ன்னு கண்டக்டர் கத்தினார்.

    “அய்யோ. என் ஸ்டாப் வந்திரிச்சி. வரேங்க” என ஓடிப்போய் எறங்கிட்டேன்.

    பஸ் என்னைத் தாண்டிப் போவுது. பஸ் ஜன்னல்ல பாத்தா, அவரு கைகளால தலய புடிச்சுக்கிட்டு குலுங்கி குலுங்கி அழுதுக்கிட்டுருக்காரு.

    ———————————————————————————————————————

    நாலு நாள் கழிச்சி…..

    வீட்டுக்குப் போக பஸ் ஏறப் போனேன்.

    “டாக்டர் தம்பி”ன்னு சத்தமா ஒருத்தர் கூப்ட்டாரு.

    அட இவரு நம்ம மொத பேக்ஷன்ட் ஆச்சே.

    “வாங்க. எப்படி இருக்கீங்க?”ன்னேன்.

    ஆள் மூனு நாள் தாடியோட, ஒரு அஞ்சு கிலோ கொறஞ்சிருந்தாரு. “தம்பி, நல்லாயிருக்கீங்களா? வாங்க டீக்குடிச்சிக்கிட்டே பேசுவோம்”ன்னு சோகமா கூப்ட்டாரு.

    ஹையா, ரொம்ப நாளா அந்தக் கடையில சூடா பக்கோடா சாப்பிடணும்னு ஆசை. நம்ம பாக்கெட் மணி அதுக்கு எடம் கொடுக்காது.

    2 ப்ளேட் பக்கோடா, 1 ப்ளேட் வாழைக்கா பஜ்ஜிய நானே முடிச்சேன். அவரு அப்படியே வீடு எரிஞ்சு போன மாதிரி என்ன சோகமா பாத்துட்டிருந்தாரு.

    “தம்பி. அன்னைக்கு பாதில உட்டுட்டீங்க”

    “ஆங். ஆமா. எங்க விட்டேன்?”

    “மூளைல செரிமானம்னு முடிச்சீங்க”

    “செரிப்ரம். இருங்க புக்கைப் பாக்குறேன்” என்று பையிலேந்து, ஒரு தலகாணி புக்க எடுத்தேன் (இது ரெஃப்ரன்ஸ் புக், 2300 பக்கம்).

    அவர் அப்படியே டெரராகி, பெஞ்ச்ல ஓரமா உக்காந்துட்டார்.

    நமக்கு இருந்த வியாதி முத்திருச்சு போல. இவ்ளோ பெரிய புக்க பாக்குறாரே..

    நான் படிச்சுக் காட்டினேன், “arm is supplied by axillary artery, which is a branch of subclavian artery, originating from arch of aorta, which starts from heart. இதுல என்ன சொல்லுதுன்னா, இதயத்துலேந்து அங்க ஒரு ரத்தக் கொழா வருது. அங்க கூட பிரச்சினை இருக்கலாம்”.

    “ஐயோ, என்ன சொல்ல வரீங்க?”

    “பிரச்சினை கைலேயும் இருக்கலாம், இல்ல தண்டு வடத்திலேயோ, இல்ல மூளை, இதயத்துல கூட இருக்கலாம்”

    “புத்து நோயோ?”

     

    “அட எனக்கே தோணல, நீங்க சொல்லிட்டீங்க. அதா கூட இருக்கலாம். மூளைல, செரிப்ரம், செரிபெல்லம்….அய்யோ, பஸ்சை எடுத்திட்டான்” என்று வேகமாக ஓடி, ஒடற பஸ்ல தொத்திக்கிட்டு போயே போயிட்டேன்.

    ———————————————————————————————————————————-   காலேஜில் ஜில்லாக்கு மண்டைன்னு ஒரு சீனியர். அவருக்கிட்ட போய், “அண்ணா, தோள் பட்டைல வலின்னா என்னவாயிருக்கும்”ன்னேன்.

    அவரு, தலைய சொரிஞ்சுக்கிட்டே, என்னை ஒரு ஃபைனல் இயர் பெரிய சீனியர் கிட்ட கூட்டிட்டு போனாரு.

    பெரிய சீனியர், “வாடா ஜில்லாக்கு மண்டை, இவன் யார்றா?”

    ஜில்லாக்கு, “அண்ணா இவன் புதுசா வந்துருக்குற ஜுனியர். ஸ்கூல்லயே தெரியும்”.

    என்ன பாத்தாரு, “என்னடா?”

    எனக்கு கைக்கால் ஒதற ஆரம்பிச்சுது. “அண்ணா, என்கிட்ட ஒரு பேக்ஷன்ட் வந்தாரு”

    “அடிங்ங். வந்து ஒரு மாசம் கூட ஆவல, அதுக்குள்ள கடை விரிச்சிட்டியா?” ன்னு செல்லமா தட்டினாரு. நான் டேபிள் மேல போய் விழுந்தேன்.

    எழுந்து, “இல்லணா, க்ஷோல்டர்ல வலியாம், பஸ்ட்டாண்ட்ல வச்சி மறிக்கிறாரு”

    “என்ன வயசு?”

    “நாப்பத்தஞ்சு அம்பது இருக்கும். விவசாயி”

    “அட, எதையாவது வெயிட்டா தூக்கிருப்பாரு. இந்தா, இந்த சீட்டுல ஒரு ஆயின்ட்மென்ட்டும் ஒரு மாத்திரையும் எழுதியிருக்கேன். போடச் சொல்லு. 4 நாள்ல சரியாயிடும்”

    நான் தயங்கியபடி, “அண்ணா, மூளை, இதய பிரச்சினை இருக்காதா?”

    “யார்ரா இவன். மாமரத்துல கொய்யாக்கா காய்க்குமா? இனிமே இப்படில்லாம் கடை விரிச்ச, குடல வாய் வழியா வெளிய இழுத்திருவேன். போடா, ஓடு…”

    அப்படியே பைய தூக்கிக்கிட்டு, ரெண்டு கிலோ மீட்டர் ஒடியே பஸ்டாண்டுக்கு வந்துட்டேன். அடிவாங்காம தப்பிச்சோம்டா சாமி.

    ———————————————————————————————————————————-

    பத்து நாள் கழிச்சு…..

    “டாக்டர் தம்பி”

    ஆஹா. பெரியவரே உங்களுக்கு ஒன்னுமில்லன்னு சொல்ல நெனச்சு திரும்பினா…

    மூனு குண்டர்கள் அவர் பக்கத்துல. அப்படியே அடிவயத்துல கிறுகிறுங்குது. அவர் பைனஞ்சு கிலோ எடை கொறஞ்சிருந்தார்.

    “தம்பி, எனக்கு மூளைப்புத்து நோய்ன்னு, அன்னைக்கு நீங்க சொன்னிங்க இல்ல. அதே தான் தம்பி. பாருங்க வெயிட் எவ்ளோ குறைஞ்சிடிச்சி. எட்டு வயசுல போட்ட சட்டை இப்போ கொள்ளுது தம்பி. இவங்க நம்ம பசங்க. கருவண்டு, சில்வண்டு, டைனோசார்”

    “என்னது, டைனோசாரா?” ந்னு இரண்டு ஸ்டெப் பின்வாங்கினேன். இன்னும் ஒரு ஸ்டெப் வச்சிருந்தேன்னா, சாக்கடை.

    “ஆமா தம்பி. பொண்வண்டுன்னு தான் வெச்சேன். ஆனா பய, வீட்ல உள்ள எல்லாத்தையும் முழுங்க ஆரம்பிச்சுட்டான். சும்மா டேபிள் சேரையெல்லாம் கடிச்சே சாப்புடுவான்”ன்னு நாய்க்கு தலைய தடவற மாதிரி, அவன் தலைய தடவினார். “இப்போ கூட வீட்ல இருந்த புல்லட் வண்டிய கொஞ்சம் கொஞ்சமா சாப்ட்டுகிட்டுருக்கான். அதான் டைனோசார்னு பேரு”.

    அவன் பல்லு கொஞ்சம் கூரா இருக்கோ? அய்யய்யோ….இவனுங்க நம்மளை அடிக்கவே வேணாம். ரெண்டு பேருக்கு நடுவில நம்மள நிக்க வெச்சு கட்டிப்புடிச்சாலே போதும். தொண்டை காது வழியா வந்துடும், மூளை மூக்கு வழியா வந்துரும்.

    பெரியவர், எடை குறைஞ்சிருந்தாலும், நல்லா வெள்ளையும் சொல்லையுமா இருந்தார்., “தம்பி. ஒரு வாரமா தூங்கல. அப்புறம் யோசிச்சு பாத்தேன். அட பொறந்த எல்லாரும் ஒருநாள் சாவ வேண்டியது தான. என்ன நமக்கு கொஞ்சம் முன்னாடியே சாவு வரப்போவுது. அவ்ளோ தான்”

    நான், “சார். நான் பெரிய டாக்டர்க்கிட்ட கேட்டேன். உங்களுக்கு ஒன்னுமி…”

    அவர் மறித்து, “உங்கள விட பெரிய டாக்டர் யார் இருக்கா தம்பி. நம்ம கதைய தான் அந்த தலகாணி புக்ல படிச்சீங்களே. சரி விடுங்க. நம்ம செல்லப் பயலுங்க, உங்கக் கிட்ட பேசணுமாம். மூனு நாளா இந்த பஸ்ட்டாண்ட்ல சுத்திக்கிட்டு இருக்கோம். வேற ஸ்டாப்ல ஏறீட்டீங்களோ. ஹஹ பரவால்ல”.

    தானாகவே எச்சில் விழுங்கினேன். இந்த நேரம் பாத்து, தொண்டை வரண்டுடிச்சி. வலியோட முழுங்கினேன்.

    கருவண்டு கரகரப்பான குரலில், “டாக்டர் தம்பி”ன்னான். அவனை அண்ணாந்து மேல பாத்தேன். யம்மா…பஸ்ல மூனு பேர் சீட்ல இவன் ஒருத்தனே ஒக்காந்தாலும் பத்தாதே. தல வேற இடிக்குமே. திரும்பயும் வலியோட எச்சில் முழுங்கல். அவன், “அப்பாக்கு மூளைல புத்து நோயா?”ன்னான்.

    “இ..இ..இல்லீங்க. அவருக்கு ஒஒ ஒன்னுமில்ல”

    பெரியவர் நெஞ்சை விரைத்துக் கொண்டு, “தம்பி, உண்மைய சொல்ல ஏன் இப்படி தயங்குறீங்க? புத்து நோய்ன்னு தைரியமா சொல்லுங்க தம்பி”

    நான் கருவண்டைப் பாத்து, “இல்லீங்க அண்ணா. அவரு…”

    பெரிசு, “அட தம்பி கிழிஞ்ச ஊரு போலருக்கு. அங்க தான் வெளங்காத சாக்கு மூட்டைப் பயலுவோல அண்ணாம்பாங்க”.

    “அதெல்லாம் இல்லைங்கண்ணா”. மூதேவி பெருசு, கரெக்ட்டா ஊர் பேரைக் கண்டு புடிச்சிட்டாரே. ஐயோ, என்ன பண்ணுவேன்.

    கருவண்டு கண்கள் சிவந்து சத்தமா, “தம்பி, அப்பாக்கு புத்து நோயா இல்லையா?” என்ற படி பின் சட்டைக் காலரை தொட்டான்.

    “இல்ல. ஆமா. இல்ல.” அவன் கையை பின்னாடிலேந்து, லைட்டா தலைக்கு மேல எடுத்தான். கைப்பிடி தெரிஞ்சுது.

    “ஆமா அவருக்கு மூளைப் புத்துநோய்”ன்னு கத்தினேன். பேண்ட் ஏதோ ஒரு காரணத்துனால நனைஞ்சுது.

    கருவண்டு கைப்புடிய பழயபடி உள்ள எறக்கினான். மூனு பேரும் முட்டிப் போட்டு என் கையப் புடிச்சாங்க. “நன்றி தம்பி”. பெரிசு இப்போ நாலு கிலோ கூடின மாதிரி என்னைப் பெருமையா பாத்தார்.

    அவர், “நீங்க சொன்ன உடனேயே உயில் எழுதிட்டேன் தம்பி. இவனுங்க நான் சாகப் போறத நம்பாம நேர்ல தெரிஞ்சுக்கிட்டாத் தான் நம்புவோம்னு அடம் புடிச்சாங்க. அதான்”.

    “சரி சரி”, ஐயோ நான் நினைக்காமலேயே வாய்லேந்து தானா வார்த்தை வருதே.

    “வரோம் தம்பி, இந்தாங்க ஃபீஸ். பத்து ருபாய்”

    ——————————————————————————————————————–

    15 வருக்ஷம் கழிச்சு….

    சரி, அவருக்கு என்னாச்சுன்னு கேக்கறீங்களா. அடப் போங்க பாஸு. நான் இன்னிக்கும் எலிப்புழுக்கை ஊருக்கு போறதுன்னா, சொரிப்பேட்டைக்கு பஸ் புடிச்சி, 30 கிலோமீட்டர் சுத்தி, எலிப்புழுக்கை பஸ்ட்டாண்டுல பஸ் நுழையறதுக்கு முன்னால, ஓடுற பஸ்லேந்து எறங்கி ஒடுவேன். நீங்க வேற.

     

    Share
  • வார ராசி பலன்!…24-06-13 – 30-06-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

     

    மேஷம்: இந்த வாரம் மாணவர்கள் பட்ட பாடுக்கு நல்ல பல்ன் கிடைக்கும். வேலை செய்யும் போது பணியில் இருப்பவர்கள் மறதிக்கும், அஜாக்கிரதைக்கும் இடம் கொடுத்தால், அவர்கள் தீட்டிய திட்டங்களில் சிறிது தாமதம் உண்டாகும். பிள்ளைகளுக்கு பணம் கொடுக்கையில் பெற்றோர்கள் கவனமாக இருப்பது நல்லது. சக கலைஞர்களுடன் கலைஞர்கள் இணக்கமாக பழகினால், வேலைகளை நிம்மதியாக செய்ய இயலும். வேலை செய்யும் இடங்களில், பெண்கள் சில மாற்றங்களை சந்திக்க வேண்டி இருக்கும். ஈனவே தன்னுயைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. போட்டிகளில் வியாபாரிகள் புது யுக்திகளைக் கையாள்வது மூலம் வெற்றி பெற்லாம்.

    ரிஷபம்: பொது வாழ்வில் இருப்பவ்ர்கள் வார்த்தைகளை விட, செயலில் வேகம் காட்டுவது நல்லது என்பதை நினவில் கொண்டு செயல்பட்டால் அவர்களின் முன்னேற்றம் வளமாக இருக்கும். கூடுத் தொழில் புரிபவர்கள் பங்குதாரர்களிடையே ஒறுமையையை வள்ர்த்துக் கொண்டால், வாடிக்கையாள்ர்களின் தேவைகளை கவனிப்பது என்பது எளிதாகும். மாணவர்கள்பாராட்டுக்குரிய செயல்களை செய்து நல பியரைப் பெறுவார்கள். வார முதலி சுய தொழில் புரிபவர்களுக்கு, வங்கிக் கடன் தொடர்பாக இருந்த நீண்ட நாள் பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். வேலைப்பளுவின் காரணமாக கலைஞர்களுக்கு இந்த வாரம் சற்று நெருக்கடியான வாரமாக அமையும்.

    மிதுனம்:  பொது வாழ்வில் இருப்பவர்கள் பிறரை வெல்ல குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம். அலுவலக ரீதியில் பதவிக்கேற்றவாறு பொறுப்பு கூடும். இந்த வாரம் மாணவர்கள் அதிக பயணங்களை மேற்கொள்வார்கள். பொது வாழ்வில் இருப்பவர்க ளுக்கு உறவுகளுக்கு உதவி மகிழும் வாய்ப்பு கிட்டும். நினைத்த காரியம் கைகூட, பேச்சு வார்த்தைகளில் இனிமையின் சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதை பெண்கள் நினைவில் வைப்பது நல்லது. சுயதொழில் புரிபவர் க கள் ஆரோக்கியத்தை நன்கு பாராமரித்து வருவது அவசியம். கலைஞர்கள் தொழில் ரீதியாக போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    கடகம்: பணியில் இருப்பவர்கள் தங்கள் அறிவுப் பூர்வமான கருத்துக்களை பயன்படுத்தி பிறர் நல்ல பெயரைத் தட்டிக் கொண்டு போக விடாமல் விழிப்புடன் செயல்படுதல் அவசியம். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவால்,புதிய கிளைகளைத் திறக்கும் வாய்ப்பு மலரும். பெண்கள் இந்த வாரம் கட்டட பராமரிப்பிற்கென்று அதிக பணம் எடுத்து வைக்க வேண்டியிருக்கும்.கலைஞர்கள் ஏட்டிக்குப் போட்டியான வாக்குவாதங்களைத் தவிர்த்து, உறுதியான செயல் பாட்டை கடைபிடியுங்கள்.நல்ல பெயர் நிலைத்திருக்கும். சுய தொழில் புரிபவர்கள் பண விஷயங்களில் அவசரமான போக்கைக் கடைபிடிக்க வேண்டாம்..

    சிம்மம்: கலைஞர்களுக்கு மனதிற்கு பிடித்த ஆபரண வகைகளை வாங்கி மகிழும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் நல்லவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொண்டால், நன்மைகள் பல உண்டு. இந்த வாரம் பணியில் இருப்பவர்கள் சுறுசுறுப் பாக பணிபுரிதாலும், சில நேரம் சில்லறைத் தொந்தரவுகள் வந்து போகும். வியாபாரிகள் மனக் குழப்பத்திற்கு இடம் தராமல்,இருந்தாலே பாதி கவலை குறைந்து விடும். கலைஞர்களுக்கு உங்கள் கலைத் திறமைக்குக்குரிய கௌரவம் கிடைத்தாலும், சில நேரங்களில் திட்டமிட்டபடி வேலைகள் நடக்காமல் சற்றே இழுத்தடிக்கலாம்.

    கன்னி: கலைஞர்கள் தாழ்வு மனப் பான்மைக்கு இடம் தராமல் செயல்பட்டால்,ஒளிந்திருந்த திறமைகள் மீண்டும் சுடர்விட ஆரம்பிக்கும். வியாபாரி களுக்கு உங்கள் உழைப்பிற்குரிய பலனோடு உரிய தொகையும் சேர்ந்து கிடைப்பதால், மனதில் சந்தோஷம் பூக்கும். சுயதொழில் புரிபவர் கள் சரக்குத் தட்டுப்பாடு இல்லாதவண்ணம் பார்த்துக் கொண்டால், வாடிக்கையாளர்களின் தேவை எளிதில் நிறைவேறும். இந்த வாரம் விரும்பத்தகாத விஷயங்களால் பொது வாழ்வில் இருப்பவர் களின் மன அமைதி குறையலாம். பொறுப்பில் இருப்பவர்கள் ஊழியரிடம் வீண் வாக்குவாதம், சச்சரவு போன்றவற்றில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் அவசியம்.

    துலாம்: பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் இந்த வாரம் அதிக தொகை செலவு செய்ய வேண்டி இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர் கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வந்தால், அலைச்சல், வேதனை- இரண்டையும் கட்டுக்குள் வைத்து விட லாம். பணியில் இருப்பவர்கள் பேச்சில், படபடப்பும், பதற்றமும் இல்லாமல் இருக்கு மாறு பார்த்துக் கொண்டால் அலுவலக உறவுகள் சீராகத் திகழும். வியாபாரி கள் செலவுகளை அதிகபடுத்தாம லிருப்பது அவசியம். சுயதொழில் புரிபவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தால்,வேலைகள் தேங்காமலிருக்கும். கலைஞர்கள் எந்த சூழலிலும், பதற்றத்திற்கு இடமின்றி நடந்து கொள்வது அவசியம்.

    விருச்சிகம்: பொது வாழ்வில் இருப்பவர்கள் எல்லோரிடமும், எல்லா விஷயங்களையும் விவாதிக்க வேண்டாம். பெண்கள் சண்டைக்கு அஸ்திவாரம் போடுபவர்களிடமிருந்து விலகியிருப்பது புத்திசாலித்தனம். மாணவர்கள் சுற்றியிருப்பவர்களின் வீண் புகழ்ச்சி யில் மாட்டிக்கொள்ளமல் கவனமாக இருப்பது நலம். சுயதொழில் புரிபவர்கள் இழப்புக்களை நினைத்து வருந்தாமல் முன்னேறிச் சென்றால், வெற்றியும் விரும்பும் புகழும் உங்கள் வசமாகும்.! கலைஞர்கள் கூட்டு முயற்சி மூலம் மேற்கொள்ளும் காரியங்களில் வீண் விவாதம், அவநம்பிக்கை ஆகியவை குறிக்கிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

    தனுசு: இந்த வாரம் சுயதொழில் புரிபவர்கள் கணக்கு வழக்குகளில் நிலவும் சிக்கல்களை சீக்கிரமாக தீர்த்து விட்டால், அபராதம் கட்ட வேண்டிய நிலையிலிருந்து தப்பித்து விடலாம். மாணவர்கள் பாடங்களை சேர்த்துப் போடாமலிருந்தால், தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ளும் துணிவு பிறக்கும். வியாபாரிகள் தங்களைத் தேடி வரும் வாய்ப்புக்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால், வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி. குடும்ப சச்சரவுகள் சச்சரவுகள் பெரிதாகாமலிருக்க பெண்கள் இணக்கம், பொறுமை இரண்டையும் கடைபிடிப்பது அவசியம். கலைஞர்கள் பண விவகாரங்களில் எவரையும் நம்பி செயல்படுவதை தவிர்த்து விடவும் .

    மகரம்: கலைஞர்கள் முக்கியமான விவகாரங்களில் பிறரின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொண்டால், திட்டமிட்டப்படி செயல்கள் நடை பெறும். வியாபாரிகள் நீண்ட தூர பயணங்களில் கவனமாக இருப்பது அவசியம். பெண்கள் , முன்னுக்குப் பின் முரணாகப் பேசுபவர்களை நம்பி பிறருக்கு எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்களின் உற்சாகம் குறையாமலிருக்க உணவு உரையாடல் இரண்டி லும் கட்டுப்பாடாக இருப்பது நல்லது. மாணவர்கள் சோம்பேறித்தனம் உங்களை பின் தள்ளிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முதியவர்கள் ஆரோக்கிய பராமரிப்பிற்காக அதிக செலவுகள் செய்ய நேரிடும்.

    கும்பம்:  பொது வாழ்வில் இருப்பவர்கள் நினைத்த காரியத்தை முடிக்கும் வரை பிறரிடம் வீண் வாக்குவாதத்தில் இறங்க வேண்டாம். பெண்கள் பணியிடத்தில் அவசியமற்ற உரையாடல்களைத் தவிர்த்து விடுங்கள். வேலைகள் சீராக நடைபெறும். பணியில் இருப்பவர்கள் வேண்டாத விஷயங்களில் ஆர்வம் காட்டுவதைத் தவிர்த்து விட்டாலே மனம் நிம்மதியாய் இருக்கும். மாணவர்கள் உணர்ச்சிகளின் உந்துதல்படி முடிவெடுப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். இழப்புக்களை பெருமளவு குறைத்து விடலாம். கலைஞர்கள் அதிக பரபரப்பு, அதிக ஓய்வு இரண்டும் உங்களின் இயல்பு வாழ்க்கையை மாற்ற இடம் கொடாதீர்கள்.

     மீனம்:மறைமுகப்போட்டிகளால், பொறுப்பான பணியில் இருப்பவர்கள், தங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சில தடுமாற்றம் ஏற்பட்டாலும், தங்கள் திறமையால், நினைத்த காரியத்தை முடித்து விடுவார்கள். இந்த வாரம் தூக்கமின்மை, சோர்வு ஆகியவை பொது வாழ்வில் இருப்பவர்கள் செய்யும் பணிகளின் வேகத்தைக் குறைக்கலாம். பெண்கள் அக்கம் பக்கத் தாரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகுவது அவசியம். கலைஞர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். மாணவர்கள் கேளிக்கைக்கக நேரம் செலவழிப்பதை குறைப்பது நல்லது

    Share
  • அறுமுகநூறு (18)

     

    சச்சிதானந்தம்

    ஆற்றல்நிறை ஆதவனும் வணங்கி நிற்க,

    ஆலயமாய்க் கானகமே அமைந்து நிற்க,

    ஆற்றங்கரை நாகரிகம் பிறக்கும் முன்னே,

    ஆறுமுகன் அவதரித்து அகிலம் காத்தான்!                                                                     86

     

     

    வெட்டிரும்பின் விசையுடனே உள்ளத்தில் பாய்ந்து,

    உட்செருக்கைக் கட்டறுத்து, நற்குணத்தின் மொட்டவிழ்த்து,

    பற்றறுக்கும் பணியேற்று, எக்கணமும் துணையிருக்கும்,

    தண்டபாணி கொண்டிருக்கும், காக்குந் தனிவேல்!                                                        87

     

    சிற்றின்பக் கோட்டுக்குள் கட்டுண்ட உலகை,

    மற்றின்ப மாயைக்குள் மூழ்கிடும் மனதை,

    அற்றின்ப துன்பங்கள், வாழ்ந்திடும் வழியில்,

    கற்ற்பித்து வழிநடத்தும் கந்தனின் கருணை!                                                                 88

     

    நிறமற்ற நீருக்கு நிறம்தரும் அருவியைப்போல,

    உயிருக்கு நிறம்தந்து நிரந்தரமானவன் நாதன்,

    மணமற்ற நிலத்துக்கு மணம்தரும் மழைத்துளிபோல,

    மனதுக்குள் நறுமணம் பரவிடச்செய்வான் நாதன்!                                                        89

     

    நிலவின் தனித்துவம் இரவில் உதிப்பது,

    இரவின் தனித்துவம் நிலவைச் சுமப்பது!

    உயிரின் தனித்துவம் குகனைத் துதிப்பது,

    குகனின் மகத்துவம் கருணை நிறைந்தது!                                                                      90

    Share
  • மாற்றிக் காட்டுவோம்

    வே.ம.அருச்சுணன் – மலேசியா

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
    என்றோ சொன்ன வார்த்தை இன்றும்
    நன்றே பயன் படுகிறது……!

    நூற்றாண்டுகள்  எப்படியோ
    வாழ்ந்து விட்டோம் இனி யாரும்
    சிவப்புக் கம்பளம் விரித்து
    வண்ண மலர்கள் தூவி
    மஞ்சள் சிம்மாசனத்தில் அமர்த்த
    அணுசரணையாய்க்  கொடி பிடித்து நம்மை
    வரவேற்கப் போவதில்லை……!

    நாட்டின் நடப்புகள் நாளும்
    நடுக்கத்தைத் தருகின்றன
    கனவுகள் நிறைவேறும் சூழல்
    மங்கலாகத் தெரிகிறது நாட்டின்
    சுதந்திரத்துக்குக் கைகொடுத்தும்
    வாழ்க்கைப் போராட்டம்
    தாளம் தப்பாமல் குதிபோட்டு நிற்கிறது………!

    கவன ஈர்ப்புத் தீர்மானத்தை
    சமூகம் உச்சத்தில் கொள்ள வேண்டும்
    கரணம் தப்பினால் மரணம்
    பிளவுகளை வீசிவிட்டு
    தினம் செத்து பிழைக்கும் அவலத்தை
    துணிவாய்த் துறந்து
    அடிமை விலங்கை உடைத்து
    அறியாமையைத் துடைத்து
    தலைநிமிர்ந்து
    போராட்டத்தைத் தொடங்குவோம்………!

    மொழியைக் காப்பதற்குத்
    தமிழ்ப்பள்ளிகளின் ஆயுளை நீட்டிவைப்போம்
    பெற்ற பிள்ளைகள் தவறாமல் தாய்ப்பால்
    அருந்த வழிகாண்போம்
    கலாச்சாரம் அழிவதற்கு சூது
    செய்வோரைத் தரைமட்டம் ஆக்கிடுவீர்……!

    ஆணவத்தால் அடக்கிவைக்கும்
    அவமானச்சின்னங்களை வேரறுப்பீர்
    நேற்று முளைத்த காளான்கள்
    நம்மை மிரட்டுவதோ?
    கிழடுகள் சில வரிந்து நின்றே
    சிண்டுமுடிக்கும் வேலைகளைக்
    கச்சிதமாய்  முறியடிப்பீர்……..!

    நம்மைக் கிள்ளுக்கீரையாய்
    எண்ணித்திரிவோர் கொட்டம்
    அடங்கும் காலம் தொலைவில் இல்லை
    நன்றியைக் கொன்று
    சதா வம்புக்கு நிற்கும்
    ஒற்றுமைக்கு ஊறு செய்யும்
    முந்திரிக் கொட்டைகள்
    முகத்தில் கரியைப்பூசுவோம்
    உலகத்தார் காறி துப்பட்டும்………!

    அறிஞர்கள், கல்விமான்கள்
    தொழிலதிபர்கள்,நிபுணர்கள்,
    கொடைநெஞ்சர்கள்,இலக்கியவாதிகள்,
    கலைஞர்கள்,தொண்டர்கள்,
    தியாகிகள்,அரசியல்வாதிகள்
    வழக்கறிஞர்கள்,இளைஞர்கள்
    இனமானம் காக்க இன்றே
    ஒன்றாய்  எழுவோம்
    நாட்டின் தலையெழுத்தை
    மாற்றிக் காட்டுவோம் வாரீர்……!

    படத்துக்கு நன்றி

    http://www.dreamstime.com/stock-images-united-hands-image2370904

    Share
  • கோபுர பொம்மையாய்…

    செண்பக ஜெகதீசன்

     கிடைத்திருக்கும் உயர்ந்த இடம்,

    கோபுர பொம்மைக்குக்

    கொண்டுவந்துவிடுகிறது கர்வத்தை-

    கோபுரத்தையே தாங்குவதாய்..

     

    கவலைப்படுவதில்லை கோபுரம்,

    உண்மை அதற்குத் தெரிவதால்..

     

    இதுதான் கதை மனிதனிடமும்-

    அவனுக்குக் கர்வம்

    அதிகமாகும்போது சிரிக்கிறான்

    ஆண்டவன்…!

    படத்துக்கு நன்றி

       http://www.elanguages.org/20283

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(62)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலுடன் உங்கள் முன்னே !

    நம் பிறந்து வளர்ந்து எமது தாய்மண்ணில் தவழ்கிறோம். எமது தாய்மொழி எமது உதடுகளில் இருந்து முதல் மொழியாக வெளி வருகிறது.

    இதே முறையில் வளர்ந்து பெரியவர்களானதும் அம்மொழியின் விரிவாக்கம் எமது உள்ளத்தினுள் வியாபித்து விடுகிறது. வசரத்தில், ஆபத்தில் எம் தாய்மொழியே முதல் மொழியாக எம் உதடுகளுக்குளிருந்து பீறிட்டு வருகிறது.

    ஆம் அம்மொழி , அம்மொழியை நாம் பேசும் வகை, எமது மொழியின் உச்சரிப்பு இவைகளே எமது அடையாளங்களாகின்றன.

    தாய்மொழியைத் தொலைத்தால் நாம் முகவரி தொலைந்தவர்கள் ஆகிறோம்.

    ஆங்கிலம் என்பது ஒரு அகிலம் முழுவதுமே பேசப்படும் பொதுமொழியாகக் கணிக்கப்படுகிறது இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் அவர்களின் தாய்மொழி ஆங்கிலமாக இருந்து வருகிறது.

    ஆனால் இம்மொழி இந்நாடுகளில் பேசப்படும் போது அவர்கள் உச்சரிக்கும் முறையில் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று இலகுவாகக் கூறி விடலாம். ஏனெனில் அவர்களது ஆங்கில உச்சரிப்பு அந்தந்த நாடுகளுக்கே உரித்தான வகியில் அமைந்திருக்கும்.

    ஒரு உதாரணத்திர்கு இலங்கைத் தமிழர் ஒருவரை எடுத்துக் கொள்வோம் அவர் தாமிழ்நாட்டில் வந்து தமிழ் பேசும்போது அவர்களுக்கேயுரிய பொதுமொழியாகத் தமிழ் இருந்தாலும் அவர் இலங்கையச் சேர்ந்த தமிழர் என்பதை தமிழ்நாட்டில் இலகுவாகப் புரிந்து கொள்வார்கள். இல்லையா?

    என்னடா இது ? வழக்கத்திற்கு விரோதமாக மிகவும் அழமான கருதை அழுத்தமான பீடிகையுடன் ஆரம்பிக்கிறானே என்று எண்ணுகிறீர்களா?

    சரி எனது இந்தப் பீடிகைக்கான காரணத்தைப் பார்ப்போமே !

    சமீபத்தில் நான் படித்த ஒரு விசித்திரமான செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்தப் பீடிகை. அவுஸ்திரேலியாவை அண்மித்த ஒரு தீவகமே டாஸ்மேனியா (Tasmania) ஆகும். இங்கு வசித்து வரும் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியின் வாழ்வில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவமே எனது ஆச்சரியத்திற்குக் காரணம்.

    லியான் ரோவ் (Leanne Rowe) எனும் இந்தப் பெண் எட்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

    இவ்விபத்தின் போது இவருக்கு தஒயில் பலத்த அடி பட்டுள்ளது. மேலும் இவ்விபத்தின் காயங்களாக இவரது அலகும், முதுகெலும்பும் முறிவடைந்து அதற்கான சிஒகிச்சை பெற்றிருந்திருக்கிறார்.

    கொஞ்சம் கொஞ்சமாக இவரது அலகு குணமடைந்து வருகையில் இவரது வாயிலிருந்து சம்மந்தமில்லாத வார்த்தைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இவர் தனது உடம்பின் வலியைத் தாங்கிக் கொள்ல எடுக்கும் மாத்திரைகளின் வீரியமே இவரது இந்தச் சம்மபந்தமில்லாத பேச்சுக்குக் காரணம் என்று வைத்தியர்கள் கூறியிருந்திருக்கின்றனர்.

    இவர் தனது தாய்மொழியான ஆங்கிலத்தைப் பேசத் தொடங்கியதும் அனைவரும் திகைக்கும்படியான விடயம் நடந்துள்ளது. அது என்ன என்கிறீர்களா ?

    ஒரு அவுஸ்திரேலியப் பிரஜையான இப்பெண்மணி இதுவரை காலமும் ஒரு அவுச்திரேலியப் பாணியில் ஆங்கிலத்தை பேசிவந்திருந்தார் ஆனால் இப்போதோ ஒரு பிரெஞ்சுக்காரர் எப்படி ஆங்கிலத்தைப் பேசுவாரோ அதே உச்சரிப்பிலேயே இவரால் தனது தாய்மொழியான ஆங்கிலத்தைப் பேசக்கூடியதாக இருக்கிறது.

    டாஸ்மேனியாவில் பிறந்து வளர்ந்த இவர் ஒருபோதும் பிரெஞ்சு நாட்டுக்கே சென்றிருக்கவில்லை. அப்படியான தான் பிரெஞ்சு உச்சரிப்பில் ஆங்கிலத்தைப் பேசுவது இவருக்கு ஆழ்ந்த மனவருத்தத்தையும், அமனழுத்தத்தையும் கொடுத்துள்ளது என்கிறார்.

    பொதுஇஅடங்களில் பேசுவதையே தவிர்த்து வரும் இவருக்காகப் பொதுஇடங்களில் இவரது மகளே பேசிவருகிறாராம்.

    இவரது குடும்ப வைத்தியரான ரோபேர்ட் நியூட்டன் (Robert Newton) என்பவர் கூறும்போது தான் இவரை அறிந்த நாள் நாள் முதல் சாதாரண அவுஸ்திரெலியப் பாணியிலான ஆங்கிலத்தைப் பேசிவந்த இவர் இந்த விபத்திற்குப்பின்னர் தான் இப்படி மாறியுள்ளார் என்கிறார்,

    பாடசாலை மாணவியாக இருந்தபோது பிரெஞ்சு மொழியை ஒரு மேலதிகப் பாடமாகப் பயின்றிருக்கிராரெ ஒழிய இவர் பிரெஞ்சு நாட்டுக்குக் கூட சென்றதில்லை என்றார் குடும்ப வைத்தியர்.

    இதுவரை உலகில் ஏறத்தாழ 60 பேர் வரை இத்தகைய ஒரு நிலைமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

    இப்படிப்பட்ட ஒருவகை வியாதியால் பீடிக்கப்பட்ட முதலாவது அறிந்த வியாதி 1907ம் ஆண்டு பதியப்பட்டுள்ளதாம்.

    2010ம் ஆண்டு மல்டிப்பில் செல்ரோசிஸ் (multiple sclerosis ) எனும் ஒருவகை வியாதியால் பீடிக்கப்பட்ட நியூசிலாந்துப் பெண் ஒருவர் தனது நியூசிலாந்து உச்சரிபிலான ஆங்கிலத்திலிருந்து மாறி வேல்ஸ், ஸ்கொட்லாந்து,வட இங்கிலாந்துப் பகுதிகளின் பாணியிலான உச்சரிப்பில் பேசினார்

    கடந்த வருடம் பேர்மிங்காம் நகரைச் சேர்ந்த டெபி ரோய்ஸ்டன் (Debie Royston ) என்பவர் பயங்கரமான ப்ளூவிலிருந்து மீளும்போது தனது வழமையான ஆங்கில உச்சரிப்பிலிருந்து மாறி பிரெஞ்சுக்காரர் ஆங்கிலம் பேசும் வகையில் பேசத்தொடங்கியுள்ளார்.

    அதேபோல இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த81 வயது அலன் மோர்கன் (Alun Morgan ) ஸ்ட்ரோக் எனும் இருதய வியாதியிலிருந்து மீளும் போது வேல்ஸ் பாணி ஆங்கிலத்தைப் பேசியுள்ளார்.

    இதைப்பற்றி ஆராய்ச்சி செய்த வைத்திய நிபுணர்கள் மூளைப்பகுதியில் பேச்சைக் கட்டுப்படுத்தும் நரம்புகளில் ஏற்படும் சிலவகையான பாதிப்புகளே இதற்குக் காரணம் என்கிறார்கள்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    19.06.2013

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

     

    Share
  • வாழ்க்கை நலம் – 14

    குன்றக்குடி அடிகள்

    14. ஒட்ட ஒழுகல்

    ஒழுக்கம் உடையராதல் அரிது. ஆயினும் ஒழுக்கம் உடையராக வாழ்தலே வாழ்தல். “ஒழுக்கம்” என்ற சொல் பலராலும் கேட்கப் பெறும் சொல். ஆயினும் ஒழுக்கம் என்ற சொல்லுக்கு மக்கள் மன்றத்தில் கற்பிக்கப் பெற்றுள்ள பொருள் மிகச் சுருங்கியது. அதாவது ஆண் பெண் உறவுகளில் குற்றம் ஏற்படாமல் வாழ்வதே ஒழுக்கமுடமையாகும் என்பது வலிமை சான்ற ஒரு கருத்து. இதில் தவறில்லை; உண்மை இருக்கிறது. ஆயினும் பெண் வழி நேரிடும் பிழைகளைத் தவிர்த்தல் மட்டுமே ஒழுக்கமுடமையாகாது. இது ஒழுக்கமுடைமையின் ஒரு கூறு.

    மேலும் கள்ளுண்ணல், கவறாடல் முதலியன செய்யாமை ஒழுக்கம் என்று கூறுவாரும் உளர். இதிலும் உண்மை இருக்கிறது. ஆயினும் கள்ளுண்ணாதிருத்தல், கவறாடாதிருத்தல் மட்டும் ஒழுக்கமுடைமையாகாது. இவையும் ஒழுக்கத்தின் கூறுகளே! இந்த அளவில் மட்டும்தான் ஒழுக்கம்பற்றி நமது நட்டு மக்கள் அறிந்திருக்கின்றனர். கள்ளுண்ணாதிருத்தல் கவறு (சூது) ஆடாதிருத்தல், முறை தவறான பால் ஒழுக்கங்கள் மேற்கொள்ளாதிருத்தல் மட்டும் உடையவரே ஒழுக்கமுடையவர் என்று கருதும் கருத்து நமது சமுதாய அளவில் மேம்பட்டிருக்கிறது. இவைகள் ஒழுக்கத்தின் கூறுபாடுகளே. ஆனால் நிறை நலம் மிக்க ஒழுக்கம் எது?

    நாம் இந்த உலகத்தில் வாழ்கின்றோம். இந்த உலக சமுதாயம் நம் கண்முன்னே இயங்கிக் கொண்டிருக்கிறது; வளர்ந்து கொண்டிருக்கியது; நாம் இந்த மானுட சமுதாயத்துக்குள் சங்கமமாக வேண்டும். மானுட சமுதாயத்தின் நடைமுறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப ஒழுகி வெற்றி பெறுதல் வேண்டும். உலக நடைமுறை தீயதாக இருக்கலாம். அத்தீய ஒழுக்கமும் ஏற்புக்குரியதா என்ற கேள்வி தோன்றும். இல்லை. இல்லை. தீயஒழுக்கத்தை ஏற்றுக் கொள்ளல் இல்லை! உலகத்தைப் புரிந்து கொண்டு அதற்குத்தக ஒழுகுதல் என்பதே பொருள். உலக இயலுக்குத் தக்கவாறு என்றால் ஒத்து ஒழுகுதல் என்று மட்டுமே பொருள் கொள்ளுதல் வேண்டா. உலக நடையினைப் புரிந்து கொண்டு அதனோடு மோதாமல் ஒத்துப் போகக் கூடியதாயின் ஒத்து ஒழுகுதல் வேண்டும். ஒத்து ஒழுக இயலாதது எனில் அதனை நாம் விரும்பும் நிலைக்கு மாற்ற முயலுதல் வேண்டும். இங்ஙனமின்றி முரண்பட்டு நின்றும், கலகங்களை வளர்த்தும் வாழ்தல் கூடாது.

    இந்த உலகில் எல்லாவற்றுக்கும் மேலானது மனித நேயமே ஆதலால் உலக மாந்தர்க்கு நல்லது செய்யும் வழியில் வாழ்தலே ஒழுக்கமுடைய வாழ்க்கை. உலக மானுட சமுதாயத்துடன் ஒத்து உடன் நின்று வாழ்தலே ஒழுக்கமுடைமை.

    “உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
    கல்லார் அறிவிலா தார்”
    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • ‘லட்சுமி வண்டு’ !…

    விசாலம்

    நான் போன வருடம் மன்னார்குடிக்குச்சென்றிருந்தேன்.அங்குக்கொல்லைப்பக்கம் குளிக்கும் அறை இருந்தது  அதன் அருகில் பெரிய பித்தளை அண்டாவும்  ஒரு மண் அடுப்பும் இருந்தது காய்ந்த குச்சிகள் போட்டு வெந்நீர் வைப்பது வழக்கம் அந்தக்குளியல் அறையில் இரண்டு கரப்பான் பூச்சிகள் தன் மீசையை ஆட்டியபடி என்னைப்பயமுறுத்திக்கொண்டிருந்தன ,நான் பாம்பின் முன்னால் கூட நின்றுவிடுவேன் என நினைக்கிறேன் ஆனால் இந்தக்கரப்பாம்பூச்சிகள் கண்டால் சிம்மசொப்பனந்தான்.  அவ்வளவு பயம் ஒருதடவை அப்பளம் பொரித்து அவைகளை ஒரு தட்டில் நான் போன வருடம் மன்னார்குடிக்குச்சென்றிருந்தேன். அங்குக் வைத்து எடுத்துவருகையில் ஒரு கரப்பு சன்னல் வழியே பறந்து வர  …….சிவசிவா    அது நான் நடந்த வழியில்தான்  வரவேண்டுமா என்ன …….வீலென்ற சத்தம் ……என் கையிலிருந்த  தட்டு கீழே விழ அப்பளங்கள்  சுக்குநூறாக உடைய  என் கணவரின் வருகை என்னை………… மேலும் அழாத குறைதான்

    “அது என்ன செய்துவிடும்  கடித்து  தின்றுவிடுமா என்ன ?  என்று மேலும் சில அடைமொழிகளை அடுக்கி வீச  …….என் கோபமெல்லாம் அந்தக்கரப்பான் பூச்சிமேல் சென்றது    எனக்கு மட்டும் மந்திர சக்தி இருந்தால் அந்த்க்கரப்பு என் ஒரு பார்வையிலேயே பஸ்மம் ஆகி இருக்கும் .

    இந்த நினைவில் அந்தக்கரப்பைப்பார்த்தபடியே குளிக்க முயற்சி செய்தேன் ஆனால் என் பயத்தைத்தெரிதுக்கொண்டு என் பக்கமே அது வேகமாக நகர்ந்துவந்தது .இனி குளிக்கமுடியாது என்று ஒரு பழையபுடவைச்சுற்றியபடி வெளிவந்தேன்

    என் அத்தை  என்னிடம் “ஏண்டி இப்பத்தான் உள்ளே நுழைந்தாய்   அதுக்குள்ளே குளிச்சாச்சா?”

    இல்ல அத்தே   உள்ளே ரெண்டு கரப்பான் பூச்சி இருக்கே எப்படி குளிக்கறது?

    “இதுக்கா ஓடி வந்துட்டே ,சிவகாமியைக்கூப்பிட்டு விரட்டச்சொல்லு “

    வேலைக்காரி சிவகாமியைக்கூப்பிட்டேன்  …”சிவகாமி இங்க வாயேன்  இந்த…   இந்த  .கரப்பை அடி அல்லது விரட்டு “

    சிவகாமி வந்தாள் ”  அக்கா இது லட்சுமி வண்டுன்னா இத எப்படி அடிக்கறது ?அது ஒன்னும் செய்யாது அத கொன்னா வூட்லேந்து  லட்சுமி போய்விடுவா அக்கா ?நீ மாட்டும் குளிச்சுக்கோ “

    நான் மறுக்க அவள் தன் கையால் பிடித்து  அதை ஆசையாக எடுத்து கொல்லைப்பக்கம் வீசி எறிந்தாள் ……அப்பாடி போச்சு …. அதன் கலரும் அதன் மீசையும்  பார்த்தாலே மனதில் ஒரு அறுவருப்பு…..

    ஆனால் இன்னும் பலர் அது செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமிக்கு மிகப்பிடித்தமான  பூச்சி என்று நம்புகிறார்கள் .    கரப்பான் பூச்சியைக்கொன்றால் அல்லது அடித்தாலோ செல்வம் போய்விடும் என்று நம்புகிறார்கள்.கிராமபுரங்களில்

    அதிகமாக  இதை நம்புகிறார்கள் யாராவது அடிக்க வந்தாலும் தடுத்து விடுகிறார்களாம்  ஏன்  ! என் அம்மா கூட அதைக்கொல்லாமல் துணியால் பிடித்து வெளியே வீசிப்போடுவார் .அதுவும் செவ்வாய் வெள்ளி என்றால் கேட்கவே வேண்டாம் .லட்சுமியின்  அம்சமாயிற்றே !

    மனிதகுலத்திற்குத்தீமையை     அளிக்கும் இந்தக்கரப்பான் பூச்சியை  இவர்கள் காப்பாற்றுவதேன் ? அசுத்தமான அறைகள் , இருள் சூழ்ந்த இடங்கள் சாக்கடைகள் போன்ற  பகுதிகள் செப்டிக் டாங்கின் மூடிகள் போன்ற இடங்களில் அப்படியே  அடை அடையாக தரிசனம் தருவது இவைகள்தான் .மூலைகள் இதற்கு மிகவும் பிடித்த இடம்.    இரவு நேரங்களில் தான் இவைகளுக்கு சாப்பாட்டு நேரம்.   உணவு  பண்டங்களை மெல்ல பதம் பார்க்கும் .சில சமயத்தில் அசந்து தூங்கும் மனிதனின் விரல்களைக் கண்டுப்பிடித்து கடித்து வைக்கும்     அந்த இடம் மறுநாள் சுரீரென்று எரியும் போதுதான் கரப்பு கடித்துபோனது தெரியும். அவ்வளவு சுகமான ஆழ்ந்த தூக்கம் .

    சாப்பாடு தான் சாப்பிடுகிறதே திரும்ப தன் இடம் போகிறதா என்றால் அதுவும் இல்லை அந்த இடத்திலேயே புழுக்கை என்ற கழிவுபொருளை கழித்துவிட்டு செல்கிறது அதன் துற்நாற்றம் ஒரு ஸ்பெஷல்  தான்

    டாக்டர் இதைப்பற்றிச்சொல்வது என்னவென்றால் இதன் மூலம் உண்டாகும் நோய்க்கிருமிகள்  தொற்றிய பாத்திரங்கள் அல்லது நீரையோ கையாளும் போது பல வியாதிகள் உண்டாகுகின்றன காலரா   க்ஷயரோகம் தொழுநோய் டைபாய்டு போன்றவைகள்  இந்தபூச்சிகளால் பரவுகின்றன   தவிர வயிற்றுவலியும் வயிற்றுகடுப்பும் வருகின்றனவாம்

    தடுக்கும் முறைகள்

    வீடு அதிக சாமானகள் சேராமல் சுத்தமாக இருக்க வேண்டும்  சுற்றுப்புறங்கள் சுத்தமாக இருக்கவேண்டும்

    வீட்டில் இருக்கும் பழைய சாமான்களை அப்புறப்படுத்தவேண்டும் பழையபேபர்களை சேர்க்காமல் கபாடிவாலாவுக்கு போடவேண்டும்

    பாத்ரூம் இடுக்கில் அப்பப்போது மருந்து அடிக்கவேண்டும். எதாவது ஓட்டை இருந்தாலும் அதை அடைக்க வேண்டும்

    கிச்சன் மேடையை வேலை முடிந்தப்பின் சுத்தமாகத்துடைத்து வைக்கவேண்டும்  பாத்திரங்களை ஈரத்துடன் அப்படியே அலமாரியில் வைக்கக்கூடாது  ஒரு காய்ந்த  துணியால் துடைத்து வைக்க வேண்டும்

    வருடத்தில் இரண்டு முறையாவது முனிசிபாலிடி மூலம் பூச்சி மருந்து அடிக்கச்சொல்ல வேண்டும்  புடவை அலமாரியை நன்றாக இடுக்கில்லாமல் சார்த்தி வைக்க வேண்டும்

    கரப்பான் பூச்சிக்கொல்லிகளையும் உபயோகிக்கலாம்

    Share
  • கம்பன் காரைக்குடி

    75 ஆண்டுகாலமாக கம்பன் புகழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகமும், பவளவிழாவின் அடையாளமாகத் தோற்றுவிக்கப் பெற்ற கம்பன் தமிழ் ஆய்வு மையமும் இனி ஆற்ற வேண்டிய பணிகள், ஆய்வுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், அறக்கட்டளைகள், நூலகம், பதிப்புப் பணிகள்- கல்வி நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றுக்குச் சென்று அவர்களுடன் இணைந்து இளைஞர்கள்- மாணக்கர்களிடம் விழிப்புணர்வு உண்டாக்குதல் போன்ற எவ்வெவற்றை எங்களிடம் தமிழ் ஆர்வலர்களும்,சுவைஞர்களுமாகிய நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என சுருக்கமாக இருபக் கஅளவில் எழுத்து வடிவில் ஒரு வரைவுத் திட்டம் ( அஞ்சல் குறியீட்டு எண், தொலைபேசி எண், உள்ளடக்கிய தங்கள் முழு முகவரியுடன்) 20.07.2013 ஆம் தேதிக்குள் நேரிலோ அஞ்சலிலோ தந்துதவ மிகப் பணிவுடன் வேண்டுகின்றோம். கூட்டத்திற்கு வர இயலாதவர்களும் வெளியூர் அன்பர்களும் அஞ்சலில் அனுப்பிஉதவிடுக. இவை தொகுக்கப் பெற்று 3.8.2013 அன்று 7-9-2013 அன்று நடைபெறும் மாதக்கூட்டத்தில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வாகக் கூட்டப் பெறும். அஞ்ஞான்று விரும்பும்தமிழ் ஆர்வலர்கள் எவரும் பங்கேற்று உரையாடி பைந்தமிழ்ப் பணியில்பங்கேற்க அழைக்கிறோம்

    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழ்த்துறைத்தலைவர்
    மன்னர் துரைசிங்கம் அ்ரசு கலைக்கல்லூரி
    சிவகங்கை
    மற்றும்

    காரைக்குடி கம்பன் தமிழ் ஆய்வு மைய உறுப்பினர்

    Share
  • நீயும் நானும் விஞ்ஞானமும் – 3

    இன்னம்பூரான்

    ‘அவர் (கரியமாணிக்கனார்) புகழ் வாய்ந்த விஞ்ஞானி மட்டுமல்ல; அவர் அதற்கெல்லாம் மேலே மிகவும் உயர்ந்தவர்; புருஷோத்தமன்; லட்சியப் பிரஜை; முழுமையான மனிதர். ‘ – ஜவஹர்லால் நேரு.

    உங்களுக்கு சிவக்கொழுந்து சாரைத் தெரியுமோ? தெரிந்திருக்க நியாயமில்லை. அவர் பெளதிக பாடம் எடுத்த காலக்கட்டம், நூறு வருடங்களுக்கு முன்னால்: 1911: 9ஆவது வகுப்பு: ஹிந்து உயர்நிலை பள்ளி: ஶ்ரீவில்லிபுத்தூர். தமிழில் பெளதிகத்தையும், பூகோளத்தையும்/ வேதியியலையும்  எளிதில் விளக்கி எனக்கு அதில் ஆர்வமூட்டினார், என்கிறார் ஒரு விஞ்ஞானி. அவரும் சளைத்தவரல்ல. மதிய விருந்துண்ணும் வேளையில், போகிற போக்கில், பாட அட்டவணையில்லாமல், பெளதிகத்தை போதித்து இறவாப் புகழ் பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் அருமையான விஞ்ஞான கட்டுரைகள் எழுதியவர்.

    விஞ்ஞானத்துக்கும் நமக்கும் காத தூரம் என்று நமக்குள் பச்சாதாபப்பட்டுக்கொண்டு மருகி வாடவேண்டிய தேவை ஒன்றுமில்லை. விடுதலை பெற்ற காலக்கட்டத்தில், அறுபது ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞானத்தின் மீதும், பொறியியல் மேலாண்மை மீதும், மாபெரும் தொழிற்சாலைகளை அமைப்பதிலும் ஆர்வமும் தீவிரமும் இருந்தது. பிரதமர் நேருவின் தீர்க்கதரிசனமும், கற்றோர்களின் தொண்டும், அன்றைய இளைய சமுதாயத்தின் தீவிர ஆர்வமும் அதற்குத் துணை நின்றன. காரைக்குடியில் இருக்கும் நவீன மின் – ரசாயன பரிசோதனை சாலையில் நடந்த இரும்பு துருப்பிடிப்பதைக் கட்டுப்படுத்தும் ஆய்வுகளும், அந்த மையத்தின் தலைவர் டாக்டர் பி.பி.டே அவர்கள் அளித்த பேட்டியும் நினைவலையில் உலவி வந்த போது, புனே நகரில், பெளதிகம் சார்ந்த பரிசோதனை மையம் கண் முன் வந்து நின்றது. மாபெரும் கட்டடம். ஒரு குட்டி கலாட்டா. கவின் அழகைப் பாதிக்கிறது என்று இரு மரங்களை வெட்டிக்கொண்டு இருந்தனர். காரில் அந்த பக்கம் வந்த ஒருவர் ‘சட்’ என்று இறங்கி ஓடோடி வந்து அரைகுறை ஹிந்தியில் சத்தம் போடுகிறார். மரத்தை வெட்டக் கூடாது என்கிறார். மற்ற அதிகாரிகள் வந்து வினயத்துடன் பிரச்சினையைச் சொன்னவுடன், மலர்ந்த முகத்துடன், ‘ மூன்றாவது மரம் நட்டு விட்டால், அழகு கூடுமே’ என்றார். கணக்குப் புலி; பாவ்லாவோ பாலே நாட்டியத்திலும் ரசனை. அவர் தான் இன்றைய தலைமாந்தன், கரியமாணிக்கனார்.

    இராமனும் கிருஷ்ணனும் இணைந்து விஞ்ஞான சாதனைகள் புரிந்த கதை, இது. அணுக்களுக்குள் புகுந்து விளையாடிய சர். கே.எஸ்.கிருஷ்ணன் அவர்களை ராயல் சொஸைட்டியில் அனுமதிக்கப் பரிந்துரை செய்த சர்.சி.வி.ராமனின் பரிசோதனைகளுக்கு உடனிருந்து பல ஆராய்ச்சிகளை செய்த தம்பி கிருஷ்ணனை வானாளவ புகழ்கிறார், அண்ணா. ராமன் எஃப்பெக்ட்’ என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞான சாதனை, சொல்லப் போனால், ‘ராமகிருஷ்ண எஃப்பெக்ட்’ தான். ஆனால், தன்னடக்கத்துடனும் பெருந்தன்மையுடனும், ராமன், ‘இது கிருஷ்ணன் எஃப்பெக்ட்’ என்கிறார். கிருஷ்ணன், ‘இது ராமன் எஃப்பெக்ட் தான்’ என்கிறார்.  பெளதிக சாத்திரத்தின் மற்ற கிளைகளிலும் இவரது கொடி பறந்தது. தற்காலத்தில், ஒளஷதங்கள், வர்ணங்கள், பிளாஸ்டிக், எரிபொருள்கள், நடையுடை யாவற்றிலும் கரியமாணிக்கனாரின் கைவண்ணம் மிளிர்கிறது.

    வத்திராயிருப்பு கிராமத்தில் டிசம்பர் 4, 1898இல் பிறந்த நமது கரியமாணிக்கம் சிவக்கொழுந்து சாரைப் பற்றி சொல்வது,’…அவர் விஞ்ஞானியல்ல. ஆனால். விஞ்ஞானத்தை விளக்குவதில் மன்னன். மகுடிக்கு மயங்கிய அரவம் போல எங்களைக் கட்டிப் போட்டார். பெளதிகமோ, பூகோளமோ, வேதியியலோ, அவரது ஸ்டைலே தனி. அவர் பாடம் மட்டும் நடத்தமாட்டார். பரிசோதனைகளைச் செய்து காட்டுவார். எங்களைச் செய்ய ஊக்குவார். அவரால் தான் நான் விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டேன்…’.

    சிவக்கொழுந்து சாருக்கு நெடுஞ்சாண்கிடையாக தாள் பணிந்து வந்தனம் செலுத்தும்

    இன்னம்பூரான்

    சித்திரத்துக்கு நன்றி:

    http://royalsociety.org/DServe/dserve.exe?dsqIni=Dserve.ini&dsqApp=Archive&dsqCmd=ImageView.tcl&dsqDb=Catalog&dsqImage=EC_1940_12.jpg

    உசாத்துணை:

    http://www.vigyanprasar.gov.in/scientists/KS_Krishnan/KariamanikkamSKrishnan.htm

    Share