ஓடும் பஸ்ஸில் ஒரு பைபாஸ் சர்ஜரி

3

 

– டாக்டர் அல்கேட்ஸ்


stock-illustration-7915155-medical-symbol-with-snakes-wings-and-skullநான் பொறந்தோன்ன, ஜோசியர கூப்ட்டாங்க. அவரு சொன்னாரு “இவனுக்கு சனி. நாக்குல ஜென்ம சனி”ன்னு.

எனக்கு 18 வயசு இருக்கும் போது, அம்மா, “இவங்கப்பா ஊர்ல பெரும் புள்ளியா இருந்தாரு. இவன் நாக்குல கரும்புள்ளியோட சுத்தறான். ஐயோ”ன்னு தலைல அடிச்சுக்கிட்டாங்க.

நம்ம வாய் திறந்தா அங்க சண்டை வந்துடும், பங்காளிங்க பிரிஞ்சுடுவாங்க, தலாக் நடக்கும், வீடு எரியும், இல்ல ஊர்க் கலவரம் கூட ஆகும்

———————————————————————————————————————

Medical college- சேர்ந்த 18ஆவது நாள்….

நம்ம கிராமத்துலேந்து தினமும் காலேஜுக்கு பஸ் தான். இப்போ ஊரில எல்லாரும் நான் ‘கோட்’டை தோள்ல தொங்கப் போட்டுட்டு போறத பாத்துட்டதுனால, எனக்கும் அலுத்துப்போச்சு. கோட்டை பைக்குள்ளேயே வச்சு தூக்கிட்டுக் கிளம்பிடுவேன்.

பஸ்ல போகும் போதும் படிப்பேன், திரும்பி வரும் போதும் படிப்பேன். அப்போ நிறைய பேரு, நான் என்ன படிக்கிறேன்னு எட்டிப்பார்ப்பாங்க. நம்ம அனாடமி புக்ல தான் எலும்பு, சதை, தசைன்னு வெளிப்படையாவே படங்கள் இருக்குமே. அதைப் பாத்துட்டு வேற பக்கம் போயிடுவாங்க. நைட்ல அவங்களை எலும்பு மனிதன் அட்டாக் பண்ற மாதிரி கனவெல்லாம் வருமாயிருக்கும்.

ஒரு நாள், என் புக்கை எட்டிப் பாத்து ஒருத்தர் பஸ்லையே மயங்கிட்டார். சோடாவுக்கு என்கிட்டயே காசு புடுங்கிட்டாங்க. அப்புறம் கண்டக்டர் வந்து, “தம்பி, நீங்க டாக்டருக்கு படிக்கிறீங்க, பெரிய விக்ஷயம் தான். அதுக்காக எவனாவது பஸ்ல மண்டையப் போட்டான்னா, என் வேலை போயிரும். தயவு செஞ்சு இனிமே நம்ம பஸ்ல படிக்காதீங்க தம்பி” ன்னாரு. ஸ்டார்ட்டிங்ல அவரும் எட்டிப்பாத்துருக்காரு. அப்புறம் 3 நாள் ஜீரம். இப்ப தான் திரும்ப டூட்டில ஜாயின் பண்ணினார். கனவுல அவருக்கு சதை மனிதன், எலும்பு மனிதனோட தொடை எலும்பைக் கடன்வாங்கிட்டு அத தூக்கிட்டு அவரை தொறத்துற மாதிரி வந்துருக்குமோ?

சரின்னு அவர் குடும்பம் குட்டியெல்லாம் நெனச்சுப் பாத்து, அன்னைலேந்து பஸ்ல புக்க எடுக்காம நோட்ஸ் மட்டும் படிச்சேன்.

ஒரு நாள், ஒருத்தர் நான் படிக்கிறதைப் பாத்துட்டு, “தம்பி. என்ன படிச்சாவுது?”ன்னார்.

சிக்கிட்டான். “நான் டாக்டருக்கு படிக்கிறேன்”னேன்.

“அப்படியா! பரவாயில்லயே. எங்க படிக்கிறீங்க?”

“எலிப்புழுக்கை ஊருல”

“என்ன சொல்றீங்க. அங்க மாட்டு டாக்டர் பள்ளிக்கூடம் தானே இருக்கு. ஓஹோ. மாட்டு டாக்டர் படிச்சவங்களும் டாக்டர் தானே! சரி தம்பி, நம்ப கிடேறி ஆட்டுக்கு 2 நாளா பேதி. மருந்து சீட்டு எழுதி கொடுங்களேன்”ன்னு கேப்பு விடாம பேசினார்.

“ஐயா. நான் மனுச டாக்டருக்குத் தான் படிக்கிறேன். எலிப்புழுக்கைல நாலு வருக்ஷமா மெடிக்கல் காலேஜ் இருக்கு”ன்னேன் கோவமா.இருக்காதா பின்ன. வெட்னரி சைன்ஸ், என் 12 வது மார்க்குக்கே கெடச்சுது. MBBSக்காக் தான் யூரியா சாக்குல பணத்தை கொண்டாந்து கட்டினோம்?

“ஹிஹி, வேகப்படாதீங்க தம்பி, ஹிஹி”

“சரி” என்று நோட்ஸைப் பாத்தேன். (ulna and radius are the two bones in forearm. the muscles of forearm are ………….)

“டாக்டர் தம்பி…”

நானா? டாக்டரா? அப்படியே உச்சி வெயில்ல ஜில்லுனு லஸ்ஸி அடிச்ச மாதிரி இருந்தது.

“க்கும். சொல்லுங்க”

“நமக்கு ஒரு 6 மாசமா வலது தோள்பட்டைல வலி. கொஞ்சம் என்னானு பாருங்களேன்”.

என்னது, அதுக்குள்ள பேக்ஷன்ட்டா? காலேஜ் சேந்தே 2 வாரம் தான் ஆவுது. இப்ப தான் கொஞ்ச நாளா டெட்பாடிக்கிட்ட நிக்கவே தைரியம் வந்துருக்கு. சரி என்னான்னு பாப்போம்

“எங்க வலிக்குது?”

அவர் திரும்பி, “இங்க தான் தம்பி”ன்னார்.

ஒகே. தோள் பட்டை. க்ஷோல்டர். அங்க என்னா இருக்கு? ம்ம்ம் டெல்டாய்ட் மசிள் (மசிள்னா தசை. அது 2 எலும்புல அட்டாச் ஆயிருக்கும். அதால தான் நாம அசையவோ, நடக்கவோ, எழுதவோ முடியுது).

“ஓகே. உங்களுக்கு டெல்டாய்ட் மசிள்ல வலிக்குது”

“பாலிடாலா? அது 13 வருக்ஷம் முன்னாடி பொண்டாட்டி ஓடிப்போனப்போ குடிச்சது. அது சரியாயிட்டு தம்பி”

ஓகே. டெல்டாய்ட் மசிளுக்கு ரத்தம் கொடுக்குறது, ஆக்ஸிலரி ஆர்ட்டரி, நெர்வ் சப்ளை (மூளைலேந்து நரம்பு) என்னவாயிருக்கும்??

“ஒரு நிமிஷம், பாத்துட்டு சொல்றேன்”

அவர், (தம்பி என்னாத்த பாக்கப் போவுது? ஏ யப்பா, இவ்ளோ பெரிய புத்தகத்த எடுக்குறாரே? நமக்கு புத்து நோயோ?)

ஓகே. ம்ம்ம்ம். ஒகே. டெல்டாய்ட் மசிள் இஸ் சப்ளைட் பை மீடியன் நெர்வ் (Deltoid muscle is supplied by median nerve). மீடியன் நெர்வ் எங்கேந்து வருது? ஸ்பைனல் கார்ட் (தண்டுவடம்). ஸ்பைனல் கார்ட் எங்கேந்து வருது? ஓ மூளைலேந்தா. சரி தான். சொல்லிருவோம்.

“இங்க பாருங்க”, நோட்டில் பேனாவை எடுத்து வரைந்து காட்டினேன். “இதான் தோள்பட்டை, இதான் டெல்டாய்ட் மசிள், இது அதோட நெர்வ். மூளைலேந்து வருது”.

அவருக்கு வேர்க்க ஆரம்பிச்சுது.

“இதுல எங்க வேணா ப்ராப்ளம் இருக்கலாம், தசை, இல்லாட்டி ரத்தக் கொழா, இல்ல தண்டுவடமோ, ஏன் மூளைல கூட இருக்கலாம்”

அவர் கண்கள் போண்டா போல விரிஞ்சுது. வாய் ஆன்னு பொளந்துக் கெடக்கு.

“இதுல பாருங்க, மூளைல செரிப்ரம்….”

“எலிப்புழுக்கைல்லாம் எறங்கு”ன்னு கண்டக்டர் கத்தினார்.

“அய்யோ. என் ஸ்டாப் வந்திரிச்சி. வரேங்க” என ஓடிப்போய் எறங்கிட்டேன்.

பஸ் என்னைத் தாண்டிப் போவுது. பஸ் ஜன்னல்ல பாத்தா, அவரு கைகளால தலய புடிச்சுக்கிட்டு குலுங்கி குலுங்கி அழுதுக்கிட்டுருக்காரு.

———————————————————————————————————————

நாலு நாள் கழிச்சி…..

வீட்டுக்குப் போக பஸ் ஏறப் போனேன்.

“டாக்டர் தம்பி”ன்னு சத்தமா ஒருத்தர் கூப்ட்டாரு.

அட இவரு நம்ம மொத பேக்ஷன்ட் ஆச்சே.

“வாங்க. எப்படி இருக்கீங்க?”ன்னேன்.

ஆள் மூனு நாள் தாடியோட, ஒரு அஞ்சு கிலோ கொறஞ்சிருந்தாரு. “தம்பி, நல்லாயிருக்கீங்களா? வாங்க டீக்குடிச்சிக்கிட்டே பேசுவோம்”ன்னு சோகமா கூப்ட்டாரு.

ஹையா, ரொம்ப நாளா அந்தக் கடையில சூடா பக்கோடா சாப்பிடணும்னு ஆசை. நம்ம பாக்கெட் மணி அதுக்கு எடம் கொடுக்காது.

2 ப்ளேட் பக்கோடா, 1 ப்ளேட் வாழைக்கா பஜ்ஜிய நானே முடிச்சேன். அவரு அப்படியே வீடு எரிஞ்சு போன மாதிரி என்ன சோகமா பாத்துட்டிருந்தாரு.

“தம்பி. அன்னைக்கு பாதில உட்டுட்டீங்க”

“ஆங். ஆமா. எங்க விட்டேன்?”

“மூளைல செரிமானம்னு முடிச்சீங்க”

“செரிப்ரம். இருங்க புக்கைப் பாக்குறேன்” என்று பையிலேந்து, ஒரு தலகாணி புக்க எடுத்தேன் (இது ரெஃப்ரன்ஸ் புக், 2300 பக்கம்).

அவர் அப்படியே டெரராகி, பெஞ்ச்ல ஓரமா உக்காந்துட்டார்.

நமக்கு இருந்த வியாதி முத்திருச்சு போல. இவ்ளோ பெரிய புக்க பாக்குறாரே..

நான் படிச்சுக் காட்டினேன், “arm is supplied by axillary artery, which is a branch of subclavian artery, originating from arch of aorta, which starts from heart. இதுல என்ன சொல்லுதுன்னா, இதயத்துலேந்து அங்க ஒரு ரத்தக் கொழா வருது. அங்க கூட பிரச்சினை இருக்கலாம்”.

“ஐயோ, என்ன சொல்ல வரீங்க?”

“பிரச்சினை கைலேயும் இருக்கலாம், இல்ல தண்டு வடத்திலேயோ, இல்ல மூளை, இதயத்துல கூட இருக்கலாம்”

“புத்து நோயோ?”

 

“அட எனக்கே தோணல, நீங்க சொல்லிட்டீங்க. அதா கூட இருக்கலாம். மூளைல, செரிப்ரம், செரிபெல்லம்….அய்யோ, பஸ்சை எடுத்திட்டான்” என்று வேகமாக ஓடி, ஒடற பஸ்ல தொத்திக்கிட்டு போயே போயிட்டேன்.

———————————————————————————————————————————-   காலேஜில் ஜில்லாக்கு மண்டைன்னு ஒரு சீனியர். அவருக்கிட்ட போய், “அண்ணா, தோள் பட்டைல வலின்னா என்னவாயிருக்கும்”ன்னேன்.

அவரு, தலைய சொரிஞ்சுக்கிட்டே, என்னை ஒரு ஃபைனல் இயர் பெரிய சீனியர் கிட்ட கூட்டிட்டு போனாரு.

பெரிய சீனியர், “வாடா ஜில்லாக்கு மண்டை, இவன் யார்றா?”

ஜில்லாக்கு, “அண்ணா இவன் புதுசா வந்துருக்குற ஜுனியர். ஸ்கூல்லயே தெரியும்”.

என்ன பாத்தாரு, “என்னடா?”

எனக்கு கைக்கால் ஒதற ஆரம்பிச்சுது. “அண்ணா, என்கிட்ட ஒரு பேக்ஷன்ட் வந்தாரு”

“அடிங்ங். வந்து ஒரு மாசம் கூட ஆவல, அதுக்குள்ள கடை விரிச்சிட்டியா?” ன்னு செல்லமா தட்டினாரு. நான் டேபிள் மேல போய் விழுந்தேன்.

எழுந்து, “இல்லணா, க்ஷோல்டர்ல வலியாம், பஸ்ட்டாண்ட்ல வச்சி மறிக்கிறாரு”

“என்ன வயசு?”

“நாப்பத்தஞ்சு அம்பது இருக்கும். விவசாயி”

“அட, எதையாவது வெயிட்டா தூக்கிருப்பாரு. இந்தா, இந்த சீட்டுல ஒரு ஆயின்ட்மென்ட்டும் ஒரு மாத்திரையும் எழுதியிருக்கேன். போடச் சொல்லு. 4 நாள்ல சரியாயிடும்”

நான் தயங்கியபடி, “அண்ணா, மூளை, இதய பிரச்சினை இருக்காதா?”

“யார்ரா இவன். மாமரத்துல கொய்யாக்கா காய்க்குமா? இனிமே இப்படில்லாம் கடை விரிச்ச, குடல வாய் வழியா வெளிய இழுத்திருவேன். போடா, ஓடு…”

அப்படியே பைய தூக்கிக்கிட்டு, ரெண்டு கிலோ மீட்டர் ஒடியே பஸ்டாண்டுக்கு வந்துட்டேன். அடிவாங்காம தப்பிச்சோம்டா சாமி.

———————————————————————————————————————————-

பத்து நாள் கழிச்சு…..

“டாக்டர் தம்பி”

ஆஹா. பெரியவரே உங்களுக்கு ஒன்னுமில்லன்னு சொல்ல நெனச்சு திரும்பினா…

மூனு குண்டர்கள் அவர் பக்கத்துல. அப்படியே அடிவயத்துல கிறுகிறுங்குது. அவர் பைனஞ்சு கிலோ எடை கொறஞ்சிருந்தார்.

“தம்பி, எனக்கு மூளைப்புத்து நோய்ன்னு, அன்னைக்கு நீங்க சொன்னிங்க இல்ல. அதே தான் தம்பி. பாருங்க வெயிட் எவ்ளோ குறைஞ்சிடிச்சி. எட்டு வயசுல போட்ட சட்டை இப்போ கொள்ளுது தம்பி. இவங்க நம்ம பசங்க. கருவண்டு, சில்வண்டு, டைனோசார்”

“என்னது, டைனோசாரா?” ந்னு இரண்டு ஸ்டெப் பின்வாங்கினேன். இன்னும் ஒரு ஸ்டெப் வச்சிருந்தேன்னா, சாக்கடை.

“ஆமா தம்பி. பொண்வண்டுன்னு தான் வெச்சேன். ஆனா பய, வீட்ல உள்ள எல்லாத்தையும் முழுங்க ஆரம்பிச்சுட்டான். சும்மா டேபிள் சேரையெல்லாம் கடிச்சே சாப்புடுவான்”ன்னு நாய்க்கு தலைய தடவற மாதிரி, அவன் தலைய தடவினார். “இப்போ கூட வீட்ல இருந்த புல்லட் வண்டிய கொஞ்சம் கொஞ்சமா சாப்ட்டுகிட்டுருக்கான். அதான் டைனோசார்னு பேரு”.

அவன் பல்லு கொஞ்சம் கூரா இருக்கோ? அய்யய்யோ….இவனுங்க நம்மளை அடிக்கவே வேணாம். ரெண்டு பேருக்கு நடுவில நம்மள நிக்க வெச்சு கட்டிப்புடிச்சாலே போதும். தொண்டை காது வழியா வந்துடும், மூளை மூக்கு வழியா வந்துரும்.

பெரியவர், எடை குறைஞ்சிருந்தாலும், நல்லா வெள்ளையும் சொல்லையுமா இருந்தார்., “தம்பி. ஒரு வாரமா தூங்கல. அப்புறம் யோசிச்சு பாத்தேன். அட பொறந்த எல்லாரும் ஒருநாள் சாவ வேண்டியது தான. என்ன நமக்கு கொஞ்சம் முன்னாடியே சாவு வரப்போவுது. அவ்ளோ தான்”

நான், “சார். நான் பெரிய டாக்டர்க்கிட்ட கேட்டேன். உங்களுக்கு ஒன்னுமி…”

அவர் மறித்து, “உங்கள விட பெரிய டாக்டர் யார் இருக்கா தம்பி. நம்ம கதைய தான் அந்த தலகாணி புக்ல படிச்சீங்களே. சரி விடுங்க. நம்ம செல்லப் பயலுங்க, உங்கக் கிட்ட பேசணுமாம். மூனு நாளா இந்த பஸ்ட்டாண்ட்ல சுத்திக்கிட்டு இருக்கோம். வேற ஸ்டாப்ல ஏறீட்டீங்களோ. ஹஹ பரவால்ல”.

தானாகவே எச்சில் விழுங்கினேன். இந்த நேரம் பாத்து, தொண்டை வரண்டுடிச்சி. வலியோட முழுங்கினேன்.

கருவண்டு கரகரப்பான குரலில், “டாக்டர் தம்பி”ன்னான். அவனை அண்ணாந்து மேல பாத்தேன். யம்மா…பஸ்ல மூனு பேர் சீட்ல இவன் ஒருத்தனே ஒக்காந்தாலும் பத்தாதே. தல வேற இடிக்குமே. திரும்பயும் வலியோட எச்சில் முழுங்கல். அவன், “அப்பாக்கு மூளைல புத்து நோயா?”ன்னான்.

“இ..இ..இல்லீங்க. அவருக்கு ஒஒ ஒன்னுமில்ல”

பெரியவர் நெஞ்சை விரைத்துக் கொண்டு, “தம்பி, உண்மைய சொல்ல ஏன் இப்படி தயங்குறீங்க? புத்து நோய்ன்னு தைரியமா சொல்லுங்க தம்பி”

நான் கருவண்டைப் பாத்து, “இல்லீங்க அண்ணா. அவரு…”

பெரிசு, “அட தம்பி கிழிஞ்ச ஊரு போலருக்கு. அங்க தான் வெளங்காத சாக்கு மூட்டைப் பயலுவோல அண்ணாம்பாங்க”.

“அதெல்லாம் இல்லைங்கண்ணா”. மூதேவி பெருசு, கரெக்ட்டா ஊர் பேரைக் கண்டு புடிச்சிட்டாரே. ஐயோ, என்ன பண்ணுவேன்.

கருவண்டு கண்கள் சிவந்து சத்தமா, “தம்பி, அப்பாக்கு புத்து நோயா இல்லையா?” என்ற படி பின் சட்டைக் காலரை தொட்டான்.

“இல்ல. ஆமா. இல்ல.” அவன் கையை பின்னாடிலேந்து, லைட்டா தலைக்கு மேல எடுத்தான். கைப்பிடி தெரிஞ்சுது.

“ஆமா அவருக்கு மூளைப் புத்துநோய்”ன்னு கத்தினேன். பேண்ட் ஏதோ ஒரு காரணத்துனால நனைஞ்சுது.

கருவண்டு கைப்புடிய பழயபடி உள்ள எறக்கினான். மூனு பேரும் முட்டிப் போட்டு என் கையப் புடிச்சாங்க. “நன்றி தம்பி”. பெரிசு இப்போ நாலு கிலோ கூடின மாதிரி என்னைப் பெருமையா பாத்தார்.

அவர், “நீங்க சொன்ன உடனேயே உயில் எழுதிட்டேன் தம்பி. இவனுங்க நான் சாகப் போறத நம்பாம நேர்ல தெரிஞ்சுக்கிட்டாத் தான் நம்புவோம்னு அடம் புடிச்சாங்க. அதான்”.

“சரி சரி”, ஐயோ நான் நினைக்காமலேயே வாய்லேந்து தானா வார்த்தை வருதே.

“வரோம் தம்பி, இந்தாங்க ஃபீஸ். பத்து ருபாய்”

——————————————————————————————————————–

15 வருக்ஷம் கழிச்சு….

சரி, அவருக்கு என்னாச்சுன்னு கேக்கறீங்களா. அடப் போங்க பாஸு. நான் இன்னிக்கும் எலிப்புழுக்கை ஊருக்கு போறதுன்னா, சொரிப்பேட்டைக்கு பஸ் புடிச்சி, 30 கிலோமீட்டர் சுத்தி, எலிப்புழுக்கை பஸ்ட்டாண்டுல பஸ் நுழையறதுக்கு முன்னால, ஓடுற பஸ்லேந்து எறங்கி ஒடுவேன். நீங்க வேற.

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “ஓடும் பஸ்ஸில் ஒரு பைபாஸ் சர்ஜரி

  1. என்ன ஒரு நகைச்சுவை… சிரிப்பு தாளவில்லை, ஹரிஹரன்.

    “மூளைல செரிமானம்னு முடிச்சீங்க”
    “அடிங்ங். வந்து ஒரு மாசம் கூட ஆவல, அதுக்குள்ள கடை விரிச்சிட்டியா?”
    “அட தம்பி கிழிஞ்ச ஊரு போலருக்கு. அங்க தான் வெளங்காத சாக்கு மூட்டைப் பயலுவோல அண்ணாம்பாங்க”

    எனப் பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைத்தது கதையின் வரிகள். நன்றி.

    அன்புடன்
    ….. தேமொழி

  2. அங்கங்கே வரும் மைண்ட் வாய்ஸ் வடிவேல் பட காமெடி போல் இருந்தது. பாராட்டுக்கள்.

  3. ஆஹா..கிழிஞ்ச ஊர் லேந்து வந்த டாக்டர் கிழி,கிழின்னு கிழிகிறார். முடியல..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *