ராமகிரி நரசிம்மர்!…

விசாலம்                                                                                                                                                                                                                              தட்டை நாட்டை ஆண்டு வந்த சாமைய நாயக்கர் ஒரு தடவை வேட்டை ஆடப்போனார்   கூடவே அவரது வேட்டை நாய்களும்  அவருடன் சென்றன . அப்போது ஒரு அதிசயம் நடந்தது .திடீரென்று வேட்டை நாய்கள் தாங்கள் மற்ற மிருகங்களைத் துரத்துவதற்குப்பதிலாக  பயந்தபடி ஓடி வந்தன .அதைத்துரத்தியதோ ஒரு கீரி . இது எதனால் நடந்திருக்கும் என   சிந்தனையில் ஆழ்ந்த மன்னர் அந்த இடத்தை ஆராய உத்தரவிட்டார்.அந்த இடத்தில் “கல்யாண நரசிம்மர்  “அருள் பாலித்து வருகிறார் என்று சேவகர்கள் செய்தியைக்கொண்டுவந்தார்கள்.

அன்று இரவு அவர் கனவில் நரசிம்மர் தோன்றித் தனக்கு ஒரு ஆலயம் எழுப்பும்படிச்சொன்னார்.  அந்தக்கனவை அப்படியே நனவாகச்செய்து   ஶ்ரீ லக்ஷ்மிநரசிம்மருக்குப் பெரிய ஆலயம் ஒன்றைக் கட்டினார் இந்த ஆலயத்தின்  வயது சுமார் அறநூறு ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் .

இந்த  ஆலயத்தை அடைய நாம்  கரூர் செல்லும் பாதையில் போய்  கோவிலூர்  என்ற ஊரை அடைய வேண்டும்  அந்தச்சாலையில் சுமார் இரண்டு கிமீ தூரம் செல்ல “ராமகிரி” என்ற இடம்  வருகிறது ,

இந்த ராமகிரி என்ற இடத்தில் தான் திரு கல்யாண நரசிம்மப்பெருமாள் திருக்கோயில்   அமைந்திருக்கிறது. மூன்று நிலை ராஜகோபுரம்  கம்பீரமாக நிற்க உள்ளே பெரிய பிரகாரத்துடன் இருக்கும்    இந்தக்கோயிலில் தான் கல்யாண நரசிங்கப்பெருமாள் கமலவல்லித்தாயாருடன்  அருள் பாலிக்கிறார் .

இதன் புராணக்கதையைப்பார்த்தால்  உக்கிரமாக வந்த நரசிம்மப்பெருமாள் பின்னால் சாந்தமாக மாறி அருள் பாலித்தார். இதன் காரணம் என்னவென்றால்  முதலில் அவரது உக்ரத்தைக்கண்டு  பலரும் பயந்து நகர சிறுவன் பிரஹ்லாதன் அமைதியாக கைகளைக்கூப்பியபடி  அவரைத்துதித்தான்.    நரசிம்மர் சிறிது சாந்தமாக  முப்பத்து முக்கோடி தேவர்களும்  ரிஷிகளும்  அங்கு வந்து வணங்கினர் . பின்  நரசிம்மர் லக்ஷ்மியை அரவணைத்தபடி  காட்சியளித்தார் .அந்த நேரத்தில் தேவர்கள் அவரிடம்  தங்கள் வேண்டுகோளை வைத்தனர்

“ஸ்வாமி தங்களை நாங்கள் கல்யாண  நரசிங்கப்பெருமாளாகக்காண  விரும்புகிறோம் தாங்கள் இந்த இடத்தில் அமர்ந்து சேவை சாதிக்க வேண்டும்” அவர்கள் ஆசையும் நிறைவேறியது .அந்த இடத்திலேயே நரசிம்மரும்  அமர்ந்துவிட்டார் .

அந்த வனப்பகுதியில்  “ராமகிரி” யில்  ஶ்ரீதேவி பூதேவி சமேதராய் கல்யாண  நரசிம்மப்பெருமாளாக அருள் பாலிக்கிறார்.அவர் திருமுகத்தைப்பார்க்கவே  மனதில் ஒரு அமைதியும் . ஒருவித பக்தியும் தோன்றி நம்மையறியாமலே நம் கைகளைக்கூப்பிச் சேவிக்கிறோம்  .

ஸ்வாதி நக்ஷத்திரம் அன்றும் நரசிம்ம ஜயந்தி அன்றும் மிகவும்   பிரமாதமாக  இங்கு பூஜை நடைப்பெருகிறது .பானகமும் நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படுகிறது .நரசிம்மரைத்தொழுதால்  சத்ரு பயம் .பில்லிசூன்யம் கண்திருஷ்டி போன்றவைகள் அகன்றுவிடும் . எல்லாவற்றிலும் வெற்றி கிட்டும்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க