செண்பக ஜகதீசன்

 

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

          -திருக்குறள்-90 (விருந்தோம்பல்)

 

புதுக் கவிதையில்…

 

முகந்து பார்த்தாலே

முகஞ்சுருங்கி வாடிவிடும்

அனிச்ச மலர்..

 

அதுபோல்தான்,

அகம்நொந்து வாடிடுவர்

விருந்தினரும்

முகம் மலரா ஒருநேர்

பார்வையிலே…!

 

குறும்பாவில்…

 

வாடிடும் அனிச்சம் முகந்தாலே,

விருந்தினர் நிலையிதுதான்

வரவேற்கும் விருப்பிலாப் பார்வையிலே…!

 

மரபுக் கவிதையில்…

 

கையில் எடுத்துக் கசக்கவேண்டாம்

காலில் போட்டு மிதிக்கவேண்டாம்,

பைய எடுத்து முகந்தாலே

பட்டென வாடிடும் அனிச்சமலர்,

வைய மிதனில் வாழ்வினிலே

வந்திடும் விருந்தை வரவேற்க

மையென முகமது கறுத்துநோக்கில்

மெய்யது சோர்ந்துதான் வாடுவரே…!

 

லிமரைக்கூவில்…

 

அனிச்சமலர் முகந்தாலே வாடும்,

வரும்விருந்தை விருப்பின்றிப் பார்வையொன்று

பார்த்தாலே பதைபதைத்து ஓடும்…!

 

கிராமிய பாணியில்…

 

கேட்டுக்கோ கேட்டுக்கோ

குடும்பசேதி கேட்டுக்கோ..

வாட்டவேண்டாம் வதக்கவேண்டாம்

வாரியெடுத்து மோந்தாலே

வாடிப்போவும் அனிச்சம்பூவு..

ஊடுவந்த விருந்துகள

ஓபசரிச்சி நடத்தவேணும்,

மொகங்கறுத்துப் பாத்தாலே

ஒன்னவுட்டு ஓடிப்போவும்..

பாத்துக்கோ பாத்துக்கோ

படிப்பினதான் பாத்துக்கோ…!


பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “குறளின் கதிர்களாய்…(4)

  1. புதுக் கவிதை, குறும்பா, மரபுக் கவிதை, லிமரைக்கூ, கிராமிய பாணி என ஒவ்வொன்றும் அதற்குரிய அழகில் அருமையாக இருக்கிறது.
    எனினும் கிராமிய பாணி மனத்தை மிகவும் கவர்வது பாடலில் வந்து விழும் வார்த்தைகளின் எளிமையால் இருக்கலாம் எனத் தோன்றுகிறது. இது நான் விரும்பி எதிர்நோக்கும் கவிதைப் படைப்புத் தொடராக மாறிவிட்டது.
    நன்றி ஐயா.
    அன்புடன்
    ….. தேமொழி

  2. வழக்கமான சுவைகளுடன் இன்றும் ஒரு விருந்து தந்த செண்பக ஜெகதீசன் அவர்களுக்கு பாராட்டுக்கள். நம் ஊர் மணம் மிக்க கிராமிய பாணி அசத்தலோஅசத்தல்.

  3. குறளின் கதிர்களுக்குத் தங்கள் பாராட்டுக்
    குரல்களை வழங்கி ஊக்கப்படுத்திவரும்
    திருவாளர்கள், பார்வதி இராமச்சந்திரன்,
    தேமொழி மற்றும் தனுசு அவர்களுக்கு என்
    நெஞ்சார்ந்த நன்றி…!
    -செண்பக ஜெகதீசன்…

  4. ஐயா, எனக்கும் ‘குரளின் கதிர்களாய்’ பிடித்த தொடர். தொடர்ந்து எழுதவும்! வாழ்த்துகள்! 

  5. ஐயா, எனக்கும் ‘குறளின் கதிர்களாய்’ பிடித்த தொடர். தொடர்ந்து எழுதவும்! வாழ்த்துகள்! 

  6. மிக்க நன்றி மாதவன்,
    மீண்டும் வருகிறேன் ‘இனியவை கூறி’…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *