வே.ம.அருச்சுணன் – மலேசியா

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
என்றோ சொன்ன வார்த்தை இன்றும்
நன்றே பயன் படுகிறது……!

நூற்றாண்டுகள்  எப்படியோ
வாழ்ந்து விட்டோம் இனி யாரும்
சிவப்புக் கம்பளம் விரித்து
வண்ண மலர்கள் தூவி
மஞ்சள் சிம்மாசனத்தில் அமர்த்த
அணுசரணையாய்க்  கொடி பிடித்து நம்மை
வரவேற்கப் போவதில்லை……!

நாட்டின் நடப்புகள் நாளும்
நடுக்கத்தைத் தருகின்றன
கனவுகள் நிறைவேறும் சூழல்
மங்கலாகத் தெரிகிறது நாட்டின்
சுதந்திரத்துக்குக் கைகொடுத்தும்
வாழ்க்கைப் போராட்டம்
தாளம் தப்பாமல் குதிபோட்டு நிற்கிறது………!

கவன ஈர்ப்புத் தீர்மானத்தை
சமூகம் உச்சத்தில் கொள்ள வேண்டும்
கரணம் தப்பினால் மரணம்
பிளவுகளை வீசிவிட்டு
தினம் செத்து பிழைக்கும் அவலத்தை
துணிவாய்த் துறந்து
அடிமை விலங்கை உடைத்து
அறியாமையைத் துடைத்து
தலைநிமிர்ந்து
போராட்டத்தைத் தொடங்குவோம்………!

மொழியைக் காப்பதற்குத்
தமிழ்ப்பள்ளிகளின் ஆயுளை நீட்டிவைப்போம்
பெற்ற பிள்ளைகள் தவறாமல் தாய்ப்பால்
அருந்த வழிகாண்போம்
கலாச்சாரம் அழிவதற்கு சூது
செய்வோரைத் தரைமட்டம் ஆக்கிடுவீர்……!

ஆணவத்தால் அடக்கிவைக்கும்
அவமானச்சின்னங்களை வேரறுப்பீர்
நேற்று முளைத்த காளான்கள்
நம்மை மிரட்டுவதோ?
கிழடுகள் சில வரிந்து நின்றே
சிண்டுமுடிக்கும் வேலைகளைக்
கச்சிதமாய்  முறியடிப்பீர்……..!

நம்மைக் கிள்ளுக்கீரையாய்
எண்ணித்திரிவோர் கொட்டம்
அடங்கும் காலம் தொலைவில் இல்லை
நன்றியைக் கொன்று
சதா வம்புக்கு நிற்கும்
ஒற்றுமைக்கு ஊறு செய்யும்
முந்திரிக் கொட்டைகள்
முகத்தில் கரியைப்பூசுவோம்
உலகத்தார் காறி துப்பட்டும்………!

அறிஞர்கள், கல்விமான்கள்
தொழிலதிபர்கள்,நிபுணர்கள்,
கொடைநெஞ்சர்கள்,இலக்கியவாதிகள்,
கலைஞர்கள்,தொண்டர்கள்,
தியாகிகள்,அரசியல்வாதிகள்
வழக்கறிஞர்கள்,இளைஞர்கள்
இனமானம் காக்க இன்றே
ஒன்றாய்  எழுவோம்
நாட்டின் தலையெழுத்தை
மாற்றிக் காட்டுவோம் வாரீர்……!

படத்துக்கு நன்றி

http://www.dreamstime.com/stock-images-united-hands-image2370904

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.