Blog

  • ஜெர்மனியின் செயற்கைச் சூரியனும் சென்னையின் சூரிய சக்தியும்!

    பவள சங்கரி

    புதுமைக்கும் அரசின் அணுகுமுறைக்கும் ஏற்படும் மற்றுமொரு போராட்டம். நடுவன் அரசாகட்டும், சமூக ஆர்வலர்களாகட்டும், சூரிய ஒளியை பெருவாரியாக பயன்பாட்டிற்குக் கொண்டுவரவேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் இந்நாளில், 2022இல் 20,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள இன்றைய நிலையில் இஸ்ரோ, குறைந்த விலையில் சோலார் பேனல் கிடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நமது மின்சாரப் பங்கீட்டு நிர்வாகம் ஒவ்வொரு தனி மனிதர்களும் தங்கள் இடத்தில் உற்பத்தி செய்யும் சூரிய மின்சாரத்தை வாங்குவதற்கும் தேவையற்ற கெடுபிடிகள் செய்ய ஆரம்பித்துள்ளனர். 200 யூனிட்டிற்கு மேல் 500 யூனிட்டிற்கு மேல் உபயோகிப்பாளர்களுக்குரிய கட்டண வேறுபாடுகளைக்காட்டி ஏற்க மறுப்பதாக செய்திகள் கூறுகின்றன.

    4400 (1)

    4400
    ஜெர்மனியில் சூரியனுக்கு நிகராக ஒரு செயற்கைச் சூரியனையே உருவாக்கிவிட்டனர்! நாம் சோலார் பேனலிலிருந்து வீட்டு உபயோகத்திற்காக மின்சாரம் எடுப்பதற்கே இத்தனை குளறுபடிகள் நாமே ஏற்படுத்திக்கொள்கிறோமே, நாம் எப்போதுதான் ஜெர்மனி போல முன்னேறப்போகிறோம்? செயற்கை சூரியன் என்பது மிகப்பெரிய பல சக்திகளின் சிறு பெயர்! அதனுடைய விரிவாக்கங்களைப் பார்த்தால் நாம் எந்த அளவிற்கு பின் தங்கியிருக்கிறோம் என்பது புரியும் .. 🙁

    Share
  • இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 40

    மீனாட்சி பாலகணேஷ்

    முடிப்பூவின் பிரச நாறும் பிரம்பான்!

    பிள்ளைத்தமிழ் நூல்களின் காப்புப்பருவத்தில் வழக்கமாக விளிக்கப்படும் தெய்வங்களின் பட்டியலிலிருந்து வேறுபட்டு வெவ்வேறு தெய்வங்களையும், அடியார்களையும், திருச்சின்னங்களையும் விளிப்பதனைச் சில நூல்களில் காணலாம். திருவைந்தெழுத்தினையும் திருநீற்றினையும் விளித்தலை முன்னொரு அத்தியாயத்தில் கண்டோம். முருகனின் மற்றொரு தாயான கங்கையையும் வாகனமான மயிலையும் ஆயுதமான வேலையும் விளிப்பதனையும் கண்டோம். இந்தக்கட்டுரையில் எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் (கோவை கவியரசு நடேச கவுண்டர்) சிவனடியார்களும், முருகனடியார்களும் கழுத்திலணியும் உருத்திராக்கத்தினையும், சிவபிரானின் வாகனமாகிய திருநந்தி தேவரையும் விளித்துக் குழந்தை முருகனைக் காக்க வேண்டுவதனைப் பார்க்கலாம். இதுவும் ஒருவிதமான இறையன்பு கலந்த தாயன்பின் வெளிப்பாடே!

    ame

    சூரியன் விண்மணி எனப்படுபவன். அவனைச் சிவனார் தனது ஒரு கண்ணாகக் கொண்டவர். சிவனாரின் முக்கண்களும் முறையே சூரியன், சந்திரன், நெருப்பு ஆகியவை ஆகும். ஆகவே சூரியனைத் தனது ஒரு வடிவாகக்கொண்ட முக்கண்மணியாகிய சிவபிரான் எனப்பொருள் கொள்ளவேண்டும். முப்புரத்தார் எனும் மூன்று அரக்கர்கள் பறக்கும் கோட்டைகளைத் தம்வசம் வைத்துக்கொண்டு தேவர்களைக் கொடுமை செய்து வந்தனர். தேவர்கள் சிவபிரானிடம் முறையிடவே அவர் ஒரு சிரிப்பாலேயே முப்புரங்களையும் அழித்து தேவர்களைக் காத்தார். அவருடைய கண்ணினின்றும் உகுத்த நீரில் தோன்றியது உருத்திராக்கம். இதனை அதனால் சிவகண்மணி எனவும் கூறுவது வழக்கமாகும். இதனைப் பிறவிப்பிணியைப் போக்கும் மணி எனவும் கூறுவர். ஏனெனில் உருத்திராக்கம் அணிவதனால் விளையும் நன்மைகள் மிகப்பலவாம். பிறவிநோய் நீக்குவதற்கு திருநீறு மருந்தும், உருத்திராக்கம் மணியும், திருவைந்தெழுத்து மந்திரமும் ஆவன என்பது பெரியோர் விளக்கமாம். ஆகவே அடியார்கள் இத்தகைய உருத்திராக்கமணியின் சிறப்புகளை எண்ணி உளம் மகிழ்வர்.

    இத்தகைய உருத்திராக்கமணியை விளித்து நமது முருகமணியைக்காக்க வேண்டுகிறார்.

    தெளிந்த மாசுமறுவற்ற மாணிக்கமணி போன்றவன் முருகப்பிரான். அந்தணர்கள் தமது பூசனைகளாலும் மந்திரங்களாலும் எப்போதும் தேடுகின்ற சுப்பிரமணியன் அவன். தேவர்களின் தலைவன் எனப்படும் தெய்வசிகாமணியும் அவனே! அவனை வழிபடும் அடியார்கள் தமது உள்ளத்தில் (உண்மையாக, நியாயமாக) வேண்டும் பொருட்களை வாரிவழங்கும் சிந்தாமணியும் அவனே!

    ame1

    ஒருதரம் சரவணபவா என்று உரைப்பவர் உளத்தினில் நினைத்ததெல்லாம் உடனே கைகூடுமென வேதங்கள் மொழியுதே உண்மையறி வானபொருளே! என்ற சீர்காழி கோவிந்தராஜனின் பாடலைக் கேட்டு உருகாதவர் யார்?

    அவன் எட்டிக்குடி எனும் ஊரில் உறைகிறான். அவ்வூரின்கண் பெருமதிப்புள்ள மாணிக்கங்களால் இழைக்கப்பட்ட மாடமாளிகைகள் மிகுந்துள்ளன. அந்த வேலவனை நீ காத்தருள வேண்டும் என உன்னை வேண்டுகிறேன் எனப்பாடுகிறார்.

    உருத்திராக்கம்:

    விண்மணியை ஓருருவாக் கொண்ட முக்கண் மணிமுன்

    விண்ணவர்கள் முப்புரத்தார் செய்கொடுமை விளம்பக்

    கண்மணிநீ ருகுப்பவரு கண்மணியைப் பிறவிக்

    கடியவினை நோய்கடியும் மணியையெணி மகிழ்வாம்

    தெண்மணியை விப்பிரர்கள் தேடுசுப்ர மணியைத்

    தேவசிகா மணியையடி யார்கள்சிந் தாமணியை

    எண்மணிக ளொன்பதிழை மாடமலி கின்ற

    எட்டிகுடி வேலவனைக் காவல்செய் கவெனவே.

    (எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்- காப்புப்பருவம்- நடேச கவுண்டர்)

    ***

    அடுத்து நாம் காண்பது சிவபிரானின் அணுக்கத்தொண்டரும், வாகனமுமாகிய நந்திதேவரை விளித்து முருகனைக் காக்க வேண்டும் பாடல்.

    ஒரு பசு அல்லது காளையானது தாம்புக்கயிற்றினால் பிணிக்கப்பட்டிருக்கும்; பசும்புல்லை உணவாகக்கொள்ளும். மானிடர்க்கு அடிமைப்பட்டு இருக்கும். இக்கருத்தினை மனித வாழ்விற்கும் உவமையாக்கி, நந்திதேவரை விளிக்கும் இப்பாடலில் அழகுறப் பொருத்தியுள்ளார் புலவர்பிரான்.

    மானிட வாழ்வு மும்மலங்கள் ஆகிய பாசம் எனும் தாம்பினால் பிணிப்புண்டுள்ளதாகும்; நாம் உண்ணும் உணவும் விளைநிலங்களிலிருந்து பெறப்படும் புல்லாகிய உணவே! ஐம்புலன்களிலிருந்து பெறப்படும் நிரந்தரமற்ற இன்பங்களே இவை! ‘பராதீனப்படுதல்’ என்பது சுதந்திரமின்றி, மற்றோர் சொற்படி நடத்தல் என்பதாகும். ஏதோ ஒரு எசமானனுக்கு அடிபணிந்து அவன் கட்டளைப்படியே நாம் வாழ்கின்றோம் அல்லவா? நாமும் அந்தப் பசு போன்றவர்களே! இங்ஙனம் பாசத்தில் பசுக்களாக உழலும் நம்மைப் பதியாக நின்று நிலையான தனது பதத்தை அளித்துக் காக்க வல்லவன் அச்சிவபிரான் ஒருவனே! அவ்வாறு நாம் மேலான நற்கதியை அடையுமாறு நம்மீது கொண்ட நேசத்தால் ஈசன் அருளுகிறான். எவ்வாறு தெரியுமா?

    ஆகமங்களும் வேதங்களும் விளக்கிடும் அத்துவித நெறியை- அதாவது பரமாத்மாவும் சீவாத்மாவும் ஒன்றே எனும் உண்மையை- அது தொடர்ந்து அவ்வாறே நடைபெறுமாறு மிகுந்த அருளுடனும் நேசத்துடனும் செய்விப்பவன் அந்தச் சிவபெருமானே; அவன் கல்லால மரத்தின் நிழலிலமர்ந்து மௌனகுருவாக முனிவோர்க்கு உபதேசிக்கும் சம்புவாவன். அது சரி. இங்கு நந்திதேவரைப்பற்றிக் கூறப்புகுந்தவர், சிவபிரானைப் பற்றிக் கூறுவானேன் எனும் வினா எழுகிறதல்லவா? இப்படிப்பட்ட சம்புவினிடம் அவனை அடுத்து, அவன் பக்கத்திலேயே நிற்பவர் நந்திதேவர். ‘சிவபிரானின் பக்கத்தில் இருப்பவர்,’ எனப் பேசப்படும் பெருமை உடையவனே என விளிக்கிறார் புலவனார். இப்போது அவருடைய முக்கியத்துவம் புரிகின்றதல்லவா?

    மேலும் நகர்வலம் வரும்போதும் உலாப்போதுகளிலும் சிவபிரானைத் தரிசிக்க வருபவர்கள் கூட்டமாக வந்து அவர் பாதையை மறித்து நிற்கும்போது, தனது கைப்பிரம்பினால் அவர்களைத் தட்டி, விலக்கி, கூட்டத்தினை ஒழுங்கு செய்பவர் நந்திதேவர். அதனால் அவர் கையிலுள்ள பிரம்பு பிரமன் முதலானோர்களின் முடியிலுள்ள பூக்களின் தேனையும் வாசனையையும் உடையதாக இருக்கின்றது. ‘பிரமன் முதலானோர் முடிப்பூவின் பிரச நாறும் பிரம்பானே!’- அற்புதமான கற்பனை, இல்லையா? பெரிய பெயரான ‘நந்தி’ எனும் பெயர் படைத்தவனே, நறுமணம் கமழும் தாமரை மலரில் உறையும் இருநால்வரான எட்டுப் பெண்கள்- எட்டு இலக்குமிகளும் வாழும் செல்வவளம் படைத்த எட்டிக்குடியில் மருவும் வடிவேலவனைக் காக்கவே, என வேண்டுகிறார்.

    திருநந்திதேவர்

    பாசத் தாம்பிற் பிணிப்புண்டு பயிலும் புலப்புல் லுணவார்ந்துame2

    பராதீ னப்பட் டுளபசுக்கள் பதியாய் மேலாங் கதியுறவே

    நேசத் தாலா கமவேத நிகழ்த்துஞ் சுத்தாத் துவிதநெறி

    நிகழக் கல்லால் நிழலிருந்து நிகழ்த்துஞ் சம்புக் கடுத்தவனாய்

    பேசப் படுசீ ருடையானே பிரமன் முதலோர் முடிப்பூவின்

    பிரச நாறும் பிரம்பானே பெருமா னந்திப் பெயரானே

    வாசக் கமல மலர்மேவு மடவா ரிருனால் வரும்வாழும்

    வளமா ரெட்டிக் குடிமருவும் வடிவே லவனைக் காத்தருளே.

    (எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்- காப்புப்பருவம்- நடேச கவுண்டர்)

    எண்ணற்ற கற்பனைகள், தொன்மங்கள், நயங்கள், சொல்லாடல்கள்- அருமையான பாடல்கள்! பிள்ளைத்தமிழ் நூல்கள் இவையனைத்தும் நிரம்பிய சிற்றிலக்கியச் செல்வங்கள். இன்னும் தொடர்ந்து காண்போம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}
    ************

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (52)

    நிர்மலா ராகவன்

    சவாலைச் சமாளி!

    நலம்-1-1
    சுவரும் சித்திரமும்

    அமெரிக்க பல்கலைக்கழகமொன்றில், முனைவர் பட்டப்படிப்புக்கு பத்துபேர் சேர்ந்திருந்தனர். இறுதியில் இருவர் மட்டுமே நிலைக்க, மற்றவர்கள், `மிகக் கடினம்!’ என்று பாதியிலேயே விட்டுவிட்டுப் போய்விட்டார்களாம்.

    `ஏன் அப்படி நம்மைவிட்டுப் போய்விட்டார்கள்? என்று எதிர்மறையாகச் சிந்திக்காது, `நம்மிருவருக்குள் என்ன ஒற்றுமை?’ என்று ஆராய்ந்தபோது, எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அடிக்கடி உணவு உட்கொள்ளும் பழக்கம் இருவருக்கும் இருந்தது தெரியவந்தது. அவர்களுள் ஒருத்தி என் மகள்.

    அவள் பள்ளி இறுதியாண்டு பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தபோது, மணிக்கொருமுறை ஏதாவது தின்னக் கொடுத்துக்கொண்டே இருப்பேன். (என் தாய் எனக்குச் செய்தது). உதாரணமாக, தக்காளிப்பழத்தை வில்லைகளாக நறுக்கி, அரிந்த வெங்காயம், கொத்துமல்லி ஆகியவைகளுடன் உப்பு, மிளகுபொடி தூவித் தின்பது புத்துணர்வைத் தரும்.

    அப்போதெல்லாம், `என்னைக் குண்டா ஆக்கப் பாக்கறியா?’ என்று கேலியாகச் சிரித்தபடி, வேண்டாவெறுப்பாகச் சாப்பிட்டவள், தான் தனியாகப் போனபின்னரும், தன்னையும் அறியாது, அதே பழக்கத்தைக் கடைப்பிடித்திருக்கிறாள்.

    நிறைய வேலை இருந்தால், அடிக்கடி சிறிதேனும் நல்ல ஆகாரம் உட்கொள்ள வேண்டும். மனிதன் ஒட்டகமில்லை. அவ்வப்போது சாப்பிட்டால்தான் உடலைப் பேண முடியும்.

    சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையமுடியும்?

    `வேலை மும்முரம்’ என்று பலர் உடல்நிலையைச் சரியாகக் கவனிக்காது விட்டுவிட்டு, `நான் மட்டும் ஏன் சிறிது நேரத்திலேயே அயற்சி அடைகிறேன்!’ என்று அயர்கிறார்கள். ஓரிடத்திற்கு எவ்வளவுதான் அவசரமாகப் போகவேண்டும் என்றாலும், காரில் போதிய பெட்ரோல் இருக்கிறதா என்று முதலிலேயே பார்த்துக்கொள்வது அவசியமில்லையா?

    காப்பியும் டீயும்

    ஓயாமல் காப்பி குடித்தால் சுறுசுறுப்பு வரலாம். ஆனால் தலை நரைக்கும்! “பரீட்சைக்குப் படிக்கும்போது, ஒரு நாளைக்கு பதினாறு கப் காப்பி குடிப்பேன்! அதில் சர்க்கரை சேர்க்கிறோமா! ரொம்ப குண்டாகிவிட்டேன்!” — இது ஓர் இளைஞன் என்னிடம் புலம்பியது.

    அளவுக்கு அதிகமாக டீ குடித்தாலோ, ஒரு கப் டீ குடித்தவுடனேயே, `அடுத்து எப்போது கிடைக்கும்?’ என்று அந்த போதையை எதிர்பார்க்க ஆரம்பித்துவிடும் மனம். வேளாவேளைக்கு குடித்தே ஆகவேண்டும், இல்லையேல் தலைவலி என்று பாடுபடுத்தும். சிலருக்கு பித்தம் அதிகமாகி, தலை சுற்றல், வாந்தி, பாதத்தில் வெடிப்பு போன்ற தொல்லைகளும் எழும்.

    பிறர் சிரிப்பார்களே!

    வாழ்வில் எல்லாம் எளிதாகவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் சராசரிக்குக் கீழேயே காலமெல்லாம் இருக்கத் தயாராக வேண்டும்.

    ஏதாவது புதிய காரியம் ஒன்றைச் செய்ய முற்படும்போது தவறுகள் நிகழத்தான் செய்யும். `தவறுகள் நிகழ்ந்துவிடுமோ?’ என்ற பயமோ, பிறர் நம்மைப் பார்த்துச் சிரிப்பார்களே என்ற கலக்கமோ கொள்பவர்களால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது.

    உன்னால் முடியும்!

    ஒரு புதிய காரியத்தை நாம் செய்ய முற்படும்போது, `உன்னால் முடியாது!’ என்று நமக்கு நெருங்கியவர்கள் அவநம்பிக்கை தெரிவித்தால், அது நம் நலனைக் கருதிச்சொல்லும் வார்த்தைகள் என்று எடுத்துக்கொள்ள முடியாது. மறைந்துகிடக்கும் நம் ஆற்றல் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். பொறாமையாலும் இருக்கலாம்.
    ஒரு காரியத்தை ஒன்பது முறை செய்ய முயன்று, பத்தாவது முறை வெற்றி அடைபவர் என்ன சொல்வார், தெரியுமா? `ஒன்பது முறை இதை எப்படியெல்லாம் செய்யக்கூடாது என்பதைக் கற்றேன்!’

    இவர் தன் ஆற்றலில் நம்பிக்கை வைத்திருப்பவர். ஒருவர் தன்னைத்தானே நம்பாவிட்டால், எடுத்த காரியத்தை எப்படி முடிக்க முடியும்?

    தோல்வியால், அல்லது பிறரது கேலியால், ஒருவர் சிறிது காலம் மனம் தளரலாம். ஆனால், அந்த தோல்வியையே எண்ணி மறுகாது, திரும்பத் திரும்ப அதே காரியத்தை வெவ்வேறு விதங்களில் செய்வது நன்மையில் முடியும். இப்படித்தான் பல கண்டுபிடிப்புகள் உருவாகி இருக்கின்றன. விஞ்ஞானம் மட்டுமில்லை, இசை, சினிமா, என்று பல துறைகளிலும் இப்படித்தான் மாறுதல்கள் ஏற்படுகின்றன. சமையலில்கூட.
    சமையலிலா!

    சாதாரணமாக, உருளைக்கிழங்கின் தோலைச் சீவிவிட்டுத்தான் சமையலுக்குப் பயன்படுத்துவார்கள். இல்லாவிட்டால். வேகவிட்டு, தோலை உரித்து.. என, நிறைய நேரத்தைச் செலவழிக்க வேண்டும்.

    எனக்குக் கண்புரைச் சிகிச்சை நடந்தபின், ஒரு மாதமேனும் அனலில் நிற்கக்கூடாது என்று எச்சரித்திருந்தார்கள்.

    ஒரு நாள் சமைத்துத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட, தோலைச் சீவாது, சற்றே பெரிய துண்டங்களாக நறுக்கி, அரிந்த வெங்காயம், கறிவேப்பிலையுடன், பொரியலுக்கு வேண்டிய உப்பு, பெருங்காயம், மிளகாய்த்தூளைச் சேர்த்து, கடிகாரத்தில் அலாரம் வைத்து இருபது நிமிடங்கள் கழித்து நிறுத்திவிட்டேன். Pressure Pan -ல் குறைந்த சூட்டில் சமைத்தேன். அப்போதுதான் அடுப்படியில் நின்று கிளறிக்கொண்டே இருக்க வேண்டாம். தோலுடன் சமைப்பதால், வாயுத்தொல்லை கிடையாது.

    `இனி எப்போதும் இப்படித்தான் ஆக்கவேண்டும்!’ என்று நினைக்கும் அளவுக்கு பதம் நன்றாக அமைந்திருந்தது. இன்று அதன் பெயர், `Accidental Potato Curry!” — தற்செயலாக நிகழ்ந்த நற்காரியம்.

    எளிதில் உணர்ச்சிவசப்படுவது

    சிலரைப் பார்த்தால், இவர்கள் மட்டும் பெரும்பாலும் அமைதியாக இருப்பது எப்படி, இவர்களுக்கு உணர்ச்சிகளே கிடையாதா என்ற ஆச்சரியமெல்லாம் எழும்.

    ஒருவர் தன்னைத் திட்டினால், பதிலுக்குத் தானும் அடித்தோ, திட்டியோ ஆகவேண்டும் என்ற சினிமாத்தனமான கொள்கை இவர்களுக்குக் கிடையாது. அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட்டால், தெளிவான சிந்தனை எழாது என்பதால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரிந்தவர்கள் இவர்கள்.

    உணர்ச்சிவசப்பட்டு நல்ல எதிர்காலத்தை இழந்தவர்கள் பலர்.

    கதை

    இளம்பெண்ணான தேவிகாவுக்கு சிபாரிசால் ஒரு நிறுவனத்தில் உத்தியோகம் கிடைத்தது.

    போனஸ் அறிவிக்கப்பட்டபோது, மேலதிகாரியிடம் போய், தன்னை ஏமாற்றிவிட்டதாக அழுதாள். தான் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவள் என்பதை மறந்து சண்டை பிடித்தாள். காரணம்: அது எப்படி மேலாளருக்கு அவளைவிட அதிகமான தொகை அளிக்கலாம்?

    சம்பளத்துடன், தேவிகாவின் உத்தியோக உயர்வுக்கான மேற்படிப்புச் செலவையும் அந்த நிர்வாகமே ஏற்றுக்கொண்டிருப்பது சுட்டிக் காட்டப்பட்டது.

    உணர்ச்சிக் கொந்தளிப்பில், எந்த சமாதானத்தையும் ஏற்க இயலவில்லை அவளால். ஆத்திரத்துடன் வேலையை ராஜிநாமா செய்தாள். இப்போது படிப்பும் அரைகுறையாக நின்றுபோயிற்று. இதனால் யாருக்கு நஷ்டம்?

    இதனால், எப்போதும் அமைதியாக இருப்பதாகக் காட்டிக் கொள்பவர்கள் சரியானவர்கள் என்றில்லை. இவர்கள் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை கொண்டவர்கள். அதனாலேயே, எந்த விஷயத்திலும் ஆழம் பாராது ஈடுபட்டு மாட்டிக்கொள்வதும் உண்டு.

    மனோதிடம் வளர..

    பிறர் செய்ய அஞ்சும் (நல்ல) காரியங்களைச் செய்யப் பழகிக்கொள்வது மனோதிடத்தை வளர்க்கும்.

    ஒரு வேளை, வெற்றி கிட்டாமல் போகலாம். அதனால் என்ன! செய்ய காரியங்களா இல்லை?

    ஒரு காரியத்தைச் செய்துவிட்டு, உடனுக்குடனே பலனை எதிர்பார்ப்பது சமூகத்தின் அடித்தளத்திலிருப்பவர்களின் தன்மை என்கிறார்கள் சமூக இயலில்.

    கதை

    எங்கள் உறவினர் வீட்டில் வேலை பார்த்த பெண்மணியின் பதினைந்து வயது மகள் அவ்வப்போது துணைக்கு வருவாள். சிறுமிக்கு எழுதப் படிக்கச் சொல்லிக்கொடுத்த முயற்சி பயனற்றுப்போனது. அவளைப் பொறுத்தமட்டில், வீட்டு வேலை செய்தால், மாதக்கடைசியில் பணம் கிடைக்கும். பிடித்ததாக ஏதாவது வாங்கிக்கொள்ளலாம். படிப்பதால் என்ன லாபம்?

    உடலை வருத்தி நாளெல்லாம் சம்பாதித்ததை அன்றிரவே புதிய திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்ப்பதற்காகவோ, மதுபோதைக்காகவோ செலவிடுபவர்களும் இந்த ரகம்தான்.

    ஊக்கத்தைக் கைவிடாது பல வருடங்கள் கல்வி கற்றால், அல்லது ஏதாவது தொழிலைக் கற்றால் நல்ல வேலையும் அதற்குரிய ஊதியமும் கிடைக்காது போகாது. ஆனால் அத்தகைய தூரநோக்குப்பார்வை எல்லாருக்கும் இருப்பதில்லை.

    சில பிரபல நடிகர்கள் (நடிகைகள்) ஆரம்ப காலத்தில் நடித்த படங்களைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. நடிப்பு அவ்வளவு சுமார்.

    ஆனால், `இதுதான் நான் பயணிக்கப்போகும் பாதை!’ என்று முடிவெடுத்துக்கொண்டு, தேர்ந்தவர்களிடம் கற்று, விடாமுயற்சியுடன் சிறுகச் சிறுக முன்னேறி இருக்கிறார்கள்.
    இவர்கள் உடனடியாக ஆதாயம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து, அதன்படி நடக்கவில்லை. ஏளனமோ, தோல்வியோ, எதையும் கண்டு ஒரேயடியாக அயர்ந்துவிடவுமில்லை. தம் இலக்கினையே குறி வைத்து எவ்வித சவாலையும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.

    எத்துறையை எடுத்துக்கொண்டாலும், சவாலைச் சமாளிக்கும் நெஞ்சுறுதி உள்ளவர்கள்தாம் இறுதியில் மனதில் நிற்கிறார்கள்.

    தொடருவோம்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 74

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றலின் பாதைகளும் அதன் தாக்கங்களும்

    education-1-1-1

    மகாபாரதக் கதையிலே ஒரு நிகழ்வு. பஞ்ச பாண்டவர்கள் தங்கள் குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு முறை அர்ச்சுனன் தன்னுடைய தாத்தா பீஷ்மரிடம் சென்று கேட்கின்றான்

    “என்னுடைய கற்றல் எப்போது முடிவுபெறும்?” என்று. அந்தக்கேள்விக்கு பொறுமையாக பதிலளிக்கிறார் பீஷ்மர்

    “உனது கற்றலில் கால் பகுதி உன்னுடைய குருவிடமிருந்து கிடைக்கும்.
    இன்னொரு கால் பகுதி உன்னுடைய சுய கற்றலினால் கிடைக்கும்.
    மூன்றாவது கால் பகுதி உன்னுடைய சுற்றத்தோடு உறவாடும்பொழுது கிடைக்கும்.
    கடைசிப் பகுதி காலப் போக்கில் நிறைவுபெறும்.”

    காலத்தைக் கடந்து பொருள் தரும் அரிய கருத்தன்றோ இது!

    தற்காலத்தில் உண்மை நிலையை இது சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது. தற்காலத்தில் கல்வி வல்லுநர்கள் மாணவர்கள் மீது கற்றலின் தாக்கம் கீழ்கண்ட நான்கு முறைகளில் ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.

    1. முறைசார் கற்றல் (Formal learning)
    2. முறைசாராக் கற்றல் (informal learning)
    3. இடைக்கற்றல் (incidental learning)
    4. தற்செயலான கற்றல் (accidental learning)

    பொதுவாக பள்ளிக்கூடங்கள் மூலமாக கிடைக்கும் கற்றல் திறன்கள், மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட பயிற்சிகள் மூலமாகக் கிடைக்கும் கற்றல் நுணுக்கங்கள், புத்தகங்கள் படிப்பதன் மூலமாக கல்வித்திட்டங்களுக்குட்பட்ட அறிவு அமைப்புகள் முறைசார் கற்றலின் வழியில் கிடைப்பவை.

    குடும்பத்தில் உறவுகள் மூலமாகக் கிடைக்கும் அறிவுத் துளிகள், வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் மற்றும் வெளி உலகின் தகவல் மையங்கள் மூலமாக கல்வித் திட்டங்களுக்குட்பட்ட மற்றும் அவைகளுக்கு அப்பாற்பட்ட கற்றல் வகைகள் முறைசாராக் கற்றல் வழியில் நமக்கு கிடைப்பன,

    வாழ்க்கைப் போக்கில் நாம் செய்கின்ற பல செயல்கள் மூலமாகவும், அனுபவங்கள் மூலமாகவும் உணர்வுகள் மூலமாகவும் நாம் சேகரித்துக் கொள்ளும் பல விஷயங்கள் இடைக்கற்றலாக நமது வாழ்வில் பரிணமிக்கின்றன.

    திடீரென்று நமக்கு ஏற்படும் பல அனுபவங்கள் சில மறக்கமுடியாத, மறக்ககூடாத அறிவை நமக்குத் தந்து செல்கின்றன. இந்த கற்றல் பரிமாணங்களை நாம் எதிர்பார்த்திருக்கவோ அல்லது திட்டமிட்டிருக்கவோ மாட்டோம். ஆனால் இவற்றில் பல நம்முடைய வாழ்க்கை வளம் பெறுவதற்கான வாழ்க்கைக் கல்வியாக அமைந்து விடுகின்றன. இவை அனைத்தும் தாற்காலிகக் கற்றலாக அமைகின்றன.

    இந்த நான்கு வகையான கற்றல் வழிகளும் நம்முடைய அறிவையும்,(knowledge) புத்திக்கூர்மையையும் (intelligence), திறன்களையும் (skills) மேம்படுத்தவும் வளம்பெறச்செய்யவும் உதவுகின்றன. ஆயினும், இந்த நான்கு வழிகளின் தாக்கங்களின் விழுக்காடுகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக அமைவது மட்டுமின்றி தாக்கங்களின் ஆழப்பரிமாணங்களும் மாறுபட்டு நிற்கின்றன.

    சமுதாயச் சூழ்நிலைகள், குடும்பச் சூழ்நிலைகள், பொருளாதாரச் சூழ்நிலைகள், பூகோளச் சூழ்நிலைகள் ஆகிய பல வெளியுலக தாக்கங்களின் காரணமாக இந்த நான்கு கற்றல் வழிகளும் அவற்றின் தன்மைகளும், அவற்றின் பரிமாணங்களும் மாறுபடுகின்றன. உதாரணமாக சில பத்தாண்டுகளுக்கு முன்பு கற்றலின் பெரும் பங்கு முறைசார் கல்வி மூலாமாகவும், ஓரளவு முறைசாராக் கல்வி வழியிலும் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகளின்படி கிட்டத்தட்ட 90 விழுக்காடு கற்றல் தாக்கங்கள் முறைசாராக் கல்வி வழியில் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது.

    ஆகவே தற்காலக் கல்வி முறைகளில் பள்ளிகளில் முறைசார் மற்றும் முறைசாரா கற்றல் முறைகளுக்கான இணைப்புகளும், பாலங்களும் அமைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இதன் காரணமாக பள்ளிகளில் ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் முறைகளிலும் நுட்பங்களிலும் தேவையான மாற்றங்கள் கொண்டுவர வேண்டிய நிர்பந்தமும், முறைசார் கற்றல் மூலமாக முறைசாரக் கற்றலையும் மேம்படுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

    தொழில்நுட்பங்கள், கணினிகள், அலைபேசிகள் போன்றவற்றின் அளவற்ற உபயோகங்களும், தொழில்நுட்பக் கருவிகளின் மேம்பட்ட ஒருங்கிணைந்த பயன்கள் மூலமாகவும் மற்றும் வேகமான, தடையற்ற, அதீதமான கல்வி கற்கும் முறைகளாலும் கல்வி கற்கும் வேகமும் இடங்களும் மாறுபட்டும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டும் வளர்ந்து வருகின்றன.

    ஒருவகையில் இந்த மாற்றங்கள் கற்றலை சிறப்பித்துக்கொண்டும் மேம்படுத்திக்கொண்டும் எளிமையாக்கிக்கொண்டும் வருகின்ற நேரத்தில் கற்பவர்களிடையே அதிக வேறுபாடுகளையும் எதிர்பார்ப்புக்களையும் மனஅழுத்தங்களையும் உண்டாக்கி வருகின்றன. இந்தத் தாக்கங்கள் கற்றலை மட்டுமின்றி வாழ்க்கை முறைகளையும் சிந்திக்கும் செயல்படும் திறன், வளம் மற்றும் பாங்குகள் ஆகியவற்றை மாற்றிய வண்ணம் இருக்கின்றன.

    ஆகவே, பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றலுக்கு உகந்த சூழ்நிலைகளை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு சிறப்புத் திறன்களின் தேவை வலுக்கின்றதுஇந்த மாறிவரும் தேவைகளுக்கான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு எந்த அளவு கிடைக்கின்றன என்ற கேள்வி ஒரு பக்கம். இந்தப் பயிற்சிகளை எந்த அளவுக்கு அவர்கள் தங்கள் வகுப்பறைகளில் உபயோகித்துக்கொள்கிறார்கள் என்ற கேள்வி ஒரு பக்கம். இதை வெறும் தொழில் சார்ந்த மாற்றமாக மட்டும் கருதுகின்றார்களா அல்லது இந்த மாற்றங்களை வருங்காலச் சமுதாயத்திற்கு வித்திட வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்படுகின்றார்களா என்ற ஐயங்கள் மற்றொரு பக்கம்.

    இதற்கு நடுவில் முன்நிற்கின்ற  உண்மை என்னவென்றால் எந்தக்கல்வி முறையிலே கல்வி கற்றாலும் மாணவர்கள் மாற்றங்களை பள்ளிகளைவிட ஆசிரியர்களைவிட அதிக வேகமாகவும் அதிக எளிதாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான். இதைக் கருத்தில் கொண்ட ஒரு கல்வி வல்லுனரின் கூற்று: “தற்காலத்தில் மாணவர்களோடு ஆசிரியர்களும் கற்றலின் பங்குதாரர்களாக இருக்கிறார்கள்” என்பதே.

    (தொடரும்)

    Share
  • படக்கவிதைப் போட்டி 107-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    வானவீதியில் கானம்பாடித் திரியும் அழகுப் புறாவைத் தன் ஒளிப்படப்பெட்டியில்  களிப்போடு அடைத்துவந்திருக்கிறார் திரு. சரவணன் ரவி. அப்படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    pegion

    பறவைகளில் புறாக்கள் தனித்தன்மையானவை. அவற்றின் இயல்பை விளக்கவந்த பாவேந்தர் பாரதிதாசன்,

    ஒருபெட்டைத் தன் ஆண் அன்றி
    வேறொன்றுக்கு உடன் படாதாம்;
    ஒருபெட்டை மத்தாப்பைப்போல் 
    ஒளிபுரிந்திட நின்றாலும்
    திரும்பியும் பார்ப்பதில்லை
    வேறொரு சேவல்! தம்மில்
    ஒருபுறா இறந்திட்டால் தான்
    ஒன்றுமற்றொன்றை நாடும்!  என்று அவற்றின் தன்னேரிலா ஒழுக்கத்தை, ஓர் ஆணுக்கு ஒரு பெட்டை என்று வாழும் அவற்றின் உயர்குணத்தைப் போற்றுகின்றார்.

    இனி, புறாவுக்குப் போட்டியாகத் தம் கற்பனைச் சிறகைக் காற்றில் விரிக்க வருகின்றார்கள் கவிஞர்கள்!

    ***

    ”கடவுள் படைப்பில் கண்ணைக் கவர்பவை பறவைகள்! வானில் பறக்கும் ஆசையை மனிதனிடம்  விதைத்தவை பறவைகள். வீடுகட்டி வாழ்வதெப்படி என்பதைக் கூடுகட்டி விளக்கியவை பறவைகள். அம்மட்டோ? இல்லறத்தை நல்லறமாய் நடாத்தவும் மாந்தர்க்குப் பயிற்சிதந்தவை பறவைகள்” எனப் பறவைகளின் இறவாப் புகழை மறவாது பாடுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

     

    பறவையைக் கண்டேன்

    கடவுள் படைப்பிலே நமது
    கண்ணைக் கவர்வது,
    நெஞ்சில் நிலைப்பது
    பறவையினம்.
    நீர்க்கோள் தோன்றி
    பலயுகம் கடந்து
    நாலறிவு பெற்ற புள்ளினம்
    நீல வானில் பறந்தன !
    பறவைகள்
    பலவிதம், பல்லினம், பலநிறம் !
    ஆறறிவு மானிடர்க்கு
    வெறும் நாரில்
    வீடு கட்டச் சொல்லிக் கொடுக்கும்
    கூடு கட்டும்
    தூக்கணாம் குருவி !
    பறந்து செல்லும் பருந்து
    வானூர்தி ஆக்க விதி வகுக்கும் !
    பஞ்சவர்ணக் கிளி
    சொன்னதைச் சொல்லும் !
    ஆண், பெண் புள்ளினம்
    ஒன்றாய்
    இல்லறம் நடத்திக் காட்டும் !
    மானிடர் போல்
    ஆணும், ஆணும் கூடா !
    பூத்தேன் சேர்க்கும்
    தேனீக்களும் பறவை இனமே !
    உயரப் பறக்கும் கழுகு
    உள்ளவ தெல்லாம் உயர்வாய்
    எண்ணிடச் சொல்லும் !
    வண்ண வண்ணப் பறவைகள்
    வானில் பறப்பதே
    காணக் கிடைக்கா காட்சி !

    ***

    ”விண்ணில் பறக்கும் வண்ணப் புறாவே! காதலுக்குத் தூதுசெல்வதும் நீ; மோதலைத் தடுக்க அமைதிப் பாதை அமைப்பதும் நீ; கவிவேந்தர் பாரதியிடம் செல்வாய்த் தூது! புவிமாதர் வாழவும், தாய்மொழி பழிப்போர் வீழவும் கருத்தாய்க் கவி வாங்கிவா!” என்று புறாவிடு தூது நடத்துகின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    பறவை விடு தூது

    விண்ணில் பறக்கும் வண்ணப் புறாவே !
    சிறகடித்துப் பறக்க உள்ளம் ஏங்குதம்மா!
    சிகரம் தொட சிந்தை விரும்புதம்மா !
    நிலவில் உறங்க ஆசை வந்ததம்மா !
    நீ சிறகடிக்கும் ஓசை, லயம் சேர்ந்த இசையம்மா!
    உயரப் பறப்பதினால் உன் எண்ணமும் உயர்ந்ததம்மா !
    புத்தருக்கு ஞானம் வந்தது போதி மரத்தடியில்!
    எங்களுக்கு ஞானம் வரும், நீ காட்டும் வழியில்!
    நீ செல்லாத தூரம் இல்லை!
    சொல்லாத சேதி இல்லை!
    அமைதித் தூது செல்ல உனக்கு நிகர் யாருமில்லை!
    நீ சென்ற தூது ஒரு போதும் தோற்றதில்லை !
    அமைதிக்கு பரிசு, வெற்றியன்றி வேறில்லை!
    காதல் தேவதை, உண்மையில் நீ தான்!
    நீ சென்ற காதல் தூது எத்தனை எத்தனை!
    உன்னால் இனைந்த காதலர் தான்
    எத்தனை எத்தனை!
    நீ எனக்காக தூது சென்றிருந்தால்!
    எனக்கொரு காதலி கிடைத்திருப்பாள்!
    இருந்தாலும் என்ன ! அழகுப் புறாவே!
    எனக்கு இப்போது தூது செல்வாயா?
    மனைவியின் மனதறிந்து வேண்டியதைச்
    சொல்வாயா!
    பாரதியிடம் தூது சென்று கவிதை ஒன்று
    கேட்பாயா ?
    தமிழை இழிவு செய்யும் மனிதரெல்லாம்
    ஊமையாய் போவதற்கு கவிதை கேட்பாயா!
    பெண்ணை இழிவு செய்யும் கயவரெல்லாம்
    செத்தொழிந்து போவதற்கு கவிதை ஒன்று
    கேட்பாயா?
    கண்ணால் துகில் உரியும் , துச்சாதன ஆண்களெல்லாம் !
    குருடாய் போவதற்கு வழி கேட்டுச் சொல்வாயா?
    பிள்ளைகள் மனதினிலே பாசத்தை விதைப்பாயா!
    ஈன்றவரைப் பேணாத பிள்ளையெல்லாம்
    முதியவராய் உடன் மாற வரம் பெற்று வருவாயா?
    மாமியார், மருமகள் இணக்கமாய் இருப்பதற்கு
    வழி ஒன்று சொல்வாயா!
    உழவுத் தொழில் தான் உலகில் உயர்ந்ததென்று
    ஊரெங்கும் சொல்வாயா?
    ஆறறிவு பெற்றதினால் அகந்தை மிகக்
    கொண்டு அழிந்து வரும் மனித இனம்
    மீண்டு வருவதற்கு நல்ல வழி சொல்வாயா!
    நான் விரும்பும் கோகிலமே !

    ***

    ”கொண்டவனுக்கு உண்மையாய் வாழும்; உண்ட இரையுமிழ்ந்து குஞ்சுகட்கு ஊட்டும்; தேடியதைப் பதுக்காது கூடியுண்ணும்; பல்வண்ணம் காட்டி நம்எண்ணம் கவரும்; அன்புக்குத் தூது செல்லும்; அமைதிக்கும் பாதை சொல்லும்” என்று புறாவின் உயர்பண்புகளைப் பட்டியலிட்டுள்ளார் பெருவை திரு. பார்த்தசாரதி.   

    மனிதனும் புறாவும்

    ஒருவனுக்கு ஒருத்தியென்ற உறுதி கொண்ட
    உயிரினமாம் அரியபுறா..!

    கோவிலுயர் கோபுரமதில் வாழும் புள்ளின..மது
    கூடிவாழும் கூட்டினம்..!

    பறவையில் தனிப் பிறவியது தண்ணீரை
    உறிஞ்சிக்குடிப்பதோர் அற்புதம்..!

    கூட்டமாய் கூரை தரையிலும் உலவும்
    வட்டமாய்ப்பறந்து வானிலேகோலமிடும்..!

    படபடக்கும் ஓசையுடன் ஜோடியாக ஜன்னலோரம்
    கடகடவெனக் காதல்மொழிபேசும்..!

    உண்டதை உமிழ்ந்துதன் உயிர்க் குஞ்சின்
    குடல்நிரப்பும் தாய்ப்புறா..!

    பெட்டை யிட்ட முட்டையை அன்புடனே
    அடைகாக்கும் தந்தைப்புறா..!

    பகுத்துண்ணும் எண்ணத்துடன் பலதும் கூடி
    தொகுத்துண்ணும் பரந்தகுணம்..!

    ஆடல் கலையில் வல்லவன் நானே..யென
    பாடல்போன்ற முனகலோடு..

    ஒருகாலைத் தூக்கி நடராசன் போலே
    மறுகாலைமறைக்கும் தன்சிறகாலே..!

    பறக்க ரெண்டு இறக்கை உண்டுனக்கு
    பலமைல்பறக்க சக்தியுண்டு..!

    வழித்தடமில்லா வானத்திலே போகும்வழி..வந்த
    வழியறியும் நுண்ணறிவுமுண்டு..!

    உண்ணாமல் பறந்து ஓராயிரம் மைல்கடக்கும்
    உன்னததிறன்பெற்ற அற்புதபறவை..!

    அறுகாதஆதி தகவல் தொடர்புநான் தானென
    அரசனுக்கு ரகசியதூதுசெல்லும்..!

    விரோதத்தின் விளைவான வன்முறைக்குச் சமாதானமென
    வீரமாகப்பறக்கும் வெள்ளைப்புறா..!

    தன்மானம் காத்திடும் பண்பிற்கு..தலைதாழ்த்தி
    தன்னையே வளையவரும்..!

    வெண்சாம்பல் வெள்ளை கரு நிறமென
    பன்னிறவண்ண முன்பகட்டு..!

    வேற்றுமைக்கு பலநிற முன்னில் இருக்கு..மது
    ஒற்றுமையை எடுத்துக்காட்டும்..!

    பகுத்தறிவு முனக்குண்டு..மனிதரோடு நெருங்கிப்
    பழகிடுமடிமைப் பண்பு..!

    ***
    ”கலக்கமின்றித் தடை தகர்த்து இலக்கைத் தொடக் கற்றுக்கொள் சிறகடிக்கும் இந்தச் சின்னப் பறவையிடம்” என்கிறார் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணன்.

    கற்றுக்கொள்!

    சிறகடித்து சிகரம் தொடும்
    சிறு பறவை., இளைப்பாராமல்..
    கற்றுக்கொள் அதே போல உழைத்துச் சிகரம் தொட..

    வெட்ட வெளியில் சலிப்பின்றி
    வெயில் பாராமல் சுற்றித் திரியும்..
    கற்றுக்கொள் அதே போல உழைத்து முன்னேற..

    தடைகளைத் தட்டி எறிந்து
    இலக்கை எட்ட அயராது உழைத்தால்
    தொடலாம் வானை.. வண்ணப் பறவையைப் போலே..

    ***

    வானில் வட்டமிடும் வண்ணப் பறவை விண்ணைத்தொடும் எண்ணச் சிறகை நம் கவிஞர்களுக்கு வழங்கியிருப்பதை அவர்தம் கவிதைகள்வழி அறியமுடிகின்றது. பாராட்டுக்கள் கவிஞர்களே!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து வருகின்றது…

    தெரிந்துகொள்…

    சிறகை விரித்தது பறவை,
    சின்னதாகிப்போனது வானம்..

    உழைப்பு எழுதிய கவிதை,
    உயரம் தாண்டுது வனப்பு..

    துணிச்சல் போட்ட பாதை,
    துச்சமானது தூரம்..

    இயற்கை எழுதிய கவிதை,
    இன்னும் வனப்பானது வையம்..

    தெரிந்துகொள் மனிதா,
    தேவைப்படுகிறது உனக்கு-
    பறவையின் திறமை…!

    ”முயற்சி எனும் சிறகை விரித்தால் அகன்ற வானமும் உள்ளங்கைக்குள் அடங்கும்! துணிச்சல் எனும் பாதை போட்டால் தூரமும் துச்சமாகும்!” எனும் பெரிய உண்மைகளையெல்லாம் சிறிய பறவையொன்று தன் செயலால் விளக்கிடுதே!” என்று பறவையின் திறமையை வியந்திடும் திரு. செண்பக ஜெகதீசன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் தகுதியைப் பெறுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

    Share
  • அகிம்சைக்காரனின் காதல்

    ராஜகவி ராகில்

     

     

    அவனுடைய சுவாசம் காத்திருந்தது

    தென்றலுக்காக

    அவன் சோலையில் இருந்தாலும்

    அவனுடைய பூ

    இன்னமும் மலரவில்லை

     

    அதோ

    அந்தக் கவிதை வருகிறாள்

    இதுவரை பத்திரமாகப் பிடித்து வைத்திருந்த

    அந்தப் பட்டாம் பூச்சியைக் கொடுத்து

    தன் காதலைச் சொன்னான் அவன் .

     

    அந்த தேவதை அவனை

    ஒரு வகையாகப் பார்த்தபடி கேட்டாள்

    இந்தப் பெரிய சோலையில் உங்களுக்கு

    ஒரு ரோஜாப்பூ கிடைக்கவில்லையா

     

    என் காதலைக் கூறுவதற்கு

    ஒரு கொலை செய்வது எனக்குப் பிடிக்கவில்லை

    பூவை

    செடியில் வைத்து ரசிப்பதுதான் அழகும் தர்மமும்

     

    இந்தப் பட்டாம் பூச்சியை நான் என்ன செய்வது

     

    பறக்க விடு

    காதல் சிறகு கொண்டு அது புதிதாகப் பறக்கட்டும்

     

    எனக்கு

    பூதான் வேண்டும்

    அந்தப் பூ பிடிவாதம் பிடித்தாள்

     

    ஒரு பூ செடியில் இருக்கும் போதுதான்

    அது உயிரோடு இருக்கும்

    அதைப் பறித்தால் அந்த மலர் இறந்துவிடும்

    உயிரில்லாத பூ தந்துதான்

    என் காதலை நான் வெளிப்படுத்த வேண்டுமா

     

    பட்டாம் பூச்சி உயிருள்ளது

    அது போல என் காதலும் உயிருள்ளது

     

    அந்தக் கார்முகில் குளிர் அழகி

    ஏற்றுக் கொண்டாள்

     

    நான் இனி கூந்தலுக்குப் பூக்கள் வைக்க மாட்டேன்

    உயிரில்லாதவற்றை யார் சூடுவார்

    இனி அதன் வாசங்கூட எனக்குப் பிடிக்காது

    என்றாள்

     

    அப்போ

    பட்டாம் பூச்சிகள் பிடித்துத் தருகிறேன்

    உன் கூந்தலில் சூடு என்றான் அவன் .

     

    அவை மணக்காதே

     

    உன் கூந்தல் நறுமணத்தில்

    பட்டாம் பூச்சிகள் மணக்கட்டுமே

     

    உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு

    ஒரு பூவைக் கூட பறிக்க விரும்பாத நீங்க

    என்னை நல்லாப் பார்த்துக்குவீங்க…என்றவள்

     

    ஒரு முத்தப் பூப்பறிக்கத் தயாரானாள்

    காதலைக் கட்டிப் பிடித்தபடி .

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 234

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – கட்டுரை காதை

    கை குறைத்த கொற்றவன்

    இப்பாண்டிய மன்னனின் சிறப்புக் குறித்து
    இன்னமும் கூறுவேன் கேட்பாயாக!
    பிறர்க்கு உதவி செய்ய இயலாத
    வறுமையில் வாழ்ந்து கொண்டிருந்தனன்
    கீரந்தன் எனும் அந்தணன்.
    பொருள்தேட முற்பட்டு அவன்    Artist : Company school (India, estab. late 18th century, closed late 19th century) Title : Date : circa 1800 Medium Description: opaque watercolour with gold on paper Dimensions : Credit Line : Gift of Mr George Sandwith 1957 Image Credit Line : Accession Number : 9636
    வெளியூர் செல்ல விரும்பினான்.
    “நீங்கள் வெளியூர் போய்விட்டால்
    எனக்குத் துணை யாரும் இல்லையே”
    என்றாள் அவன் மனைவி.

    அந்தணன் அவளிடம்,
    “குடிமக்களுக்குக் காவலாய்
    அரசனது செங்கோலே
    பாதுகாப்பு வேலியாய் நிற்கும்;
    அதைவிடச் சிறந்த வேலி
    வேறு எதுவும் இல்லை;
    எனவே பயப்படாதே”
    என்று கூறி வெளியூர் சென்றான்.

    இக்குடியில் பிறந்த மன்னன் ஒருநாள்
    மாறுவேடம் பூண்டு
    அந்தப் பெண் இருந்த வீட்டின் அருகே வந்து
    உள்ளே இருப்பது யார் என்றறியக்
    கதவைத் தட்டினான்.
    கதவின் ஒலி கேட்டு அஞ்சிய அப்பெண்,
    “அரசனது காவல் சிறந்தது எனக்கூறி
    எனைத் தனியே இங்கே விட்டுச் சென்றாயே,
    இன்று அந்த அரசன் காவல்
    எனைக் காத்திடாதோ”
    எனக் கூறிப் புலம்பினாள்.

    அப்பெண்ணின் சொல் பழுக்கக் காய்ச்சிய
    இரும்பைப் போல
    அந்த மன்னனின் மனத்தைச் சுட்டது.
    ‘நம் செயலால் இப்பெண்ணுக்குப் பழி நேருமோ’
    என அஞ்சிய அந்தப் பாண்டிய மன்னன்,
    வச்சிரப்படையை உடைய இந்திரன் மணிமுடியை
    ஒளிபொருந்திய தனது சக்கரப் படையால்
    உடைத்திட்ட தன் கையினைத்
    தானே வெட்டிக் கொண்டான்.

    இத்தகைய செங்கோன்மை தவறாத
    வெற்றிகொண்ட பாண்டியர் குலத்தில் பிறந்தவர்களுக்கு
    ஒருபோதும் இழுக்கு ஏற்பட்டதில்லை.

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(164)

     

    செண்பக ஜெகதீசன்

     

    நல்லார்கண் பட்ட வறுமையி னின்னாதே

    கல்லார்கண் பட்ட திரு.

           –திருக்குறள் –408(கல்லாமை)

     

    புதுக் கவிதையில்…

     

    கல்லாதாரிடம்

    சேர்ந்த செல்வத்தினால்

    பயனேதுமில்லை..

     

    அது

    நல்லோரைச் சேர்ந்த

    வறுமையைவிட

    அதிகமாய்த் தரும்

    அல்லலையே…!

     

    குறும்பாவில்…

     

    நல்லவரைச் சேர்ந்த வறுமையைவிட

    அதிக துன்பந்தரும்,   

    கல்லாதவரிடம் சேர்ந்த செல்வம்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    கல்வி யேதும் கல்லார்பால்

         கட்டுக் கட்டாய்ச் சேர்ந்திடினும்,

    செல்வ மதனாற் பயனில்லை

       சேரும் துன்பமும் குறைவில்லை,

    நல்லோர் தம்மைத் துன்புறுத்த

      நாடி வந்திடும் வறுமைதரும்

    பொல்லாத் துன்ப அளவினிலும்

      பெரிதாய்த் தந்திடும் கல்லார்க்கே…!

     

    லிமரைக்கூ..

     

    வதைத்திடும் வறுமை நல்லாரை, 

    அதனிலும் அதிகமாய்த் துன்பந்தந்தே

    அழித்திடும் செல்வமது கல்லாரை…!

     

    கிராமிய பாணியில்…

     

    படிக்கவேணும் படிக்கவேணும்

    நல்லாயிருக்க

    நாலெழுத்து படிக்கவேணும்,

    படிக்கலண்ணா வாழ்க்கயில

    பலதுன்பம் வந்துடுமே..

     

    படிக்காதவன் சேத்துவச்ச

    பணத்தாலயும் பலனில்ல,

    அது

    நல்லவன வாட்டுகிற

    வறுமயவிட அதிகமாவே

    துன்பந்தரும்,

    பெருந் துன்பந்தரும்..

     

    அதால,

    படிக்கவேணும் படிக்கவேணும்

    நல்லாயிருக்க

    நாலெழுத்து படிக்கவேணும்,

    படிக்கலண்ணா வாழ்க்கயில

    பலதுன்பம் வந்துடுமே…!

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170416 - Gopala Vimshati 05 -lores

    ’’கோபியர் ,ஞானியர், கும்பிடும் கோபாலர்
    பாபியர் நூறழிய பாரதப்போர் -JOBபிவர்:
    வந்ததும் வ்ருஷ்ணிசேய், நந்தகோபர் இல்லம்பு
    குந்ததுய சோதைக் காய்’’….!கிரேசி மோகன்….

    Share
  • பால்வீதி ஒளிமந்தையின் கருந்துளை, கரும்பிண்டம் வடிவெடுக்கும் நுணுக்கத் திறன் முதன்முதல் வெளியாகி உள்ளது

    aj

    கருந்துளை வடிவு

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++

    காலக் குயவன் ஆழியைச் சுற்றி
    ஞாலத்தை வார்க்க
    களி மண்ணை வேண்டி
    கரும்பிண்டம் படைத்தான்
    உருவினைக் கண்டான் மனிதன்  !
    சேமிக்கப் பூதக் கருந்துளை
    தாமாய், மறைவாய்த் தோன்றும்.
    கதிர் வீசும் கரும்பிண்டம்
    கண்ணுக்குத் தெரியா.
    கருவிக்குப் புலப்படும், அதன்
    கவர்ச்சி விசை
    குவிந்த ஆடி போல்
    ஒளிக்கதிரை வளைக்கும் !
    கரும்பிண்டம் இல்லையேல்
    ஒளிமந்தை எதுவும்
    உருவாகாது !
    விண்மீன்கள் கண் விழிக்கா  !
    அண்டக் கோள்கள்
    உண்டைக் கட்டியாகா !
    சூரியனுக்  கருகில்
    பேரளவு கரும்பிண்டம் மிதக்குது !
    கரும்பிண்டத் துகள்களை
    கால் பந்தாய் உருட்டிப்
    பொரி உருண்டை பண்ணுவது
    ஈர்ப்பு விசை !
    அண்டக் கோடிகளைத் துளைக்கும்
    நுண்துகள்
    அற்ப நியூடிரினோ பிரபஞ்சத்தின்
    சிற்பச் செங்கல் !
    அகிலப் பெருவெடிப்பில் சிதறிய
    கோடான கோடி
    அக்கினிப் பூக்கள் இவை :
    குவார்க்ஸ், குளுவான், நியூடிரினோ,
    நியூட்ரான், புரோட்டான்
    எலெக்டிரான் !

    ++++++++++

    Image result for first image of dark matter filaments

    கரும்பிண்ட நுண்ணிழைகள்  [Dark Matter Filaments]

    ஒளிமந்தைகளுக் கிடையே பின்னிப் பிணைக்கும் வலைபோல் தெரியும் கரும்பிண்ட நுண்ணிழைகள்  [Dark Matter Filaments] இருப்பை வானியல் ஆய்வாளர் பல பத்தாண்டுகளாக முன்னறிவித்துள்ளார்.  இப்போது விஞ்ஞானிகள் வடித்துள்ள முதன்முறைப் படக்காட்சி முன்னறிப்புக்கு அப்பால் நம்மை தூக்கிச் சென்று, அவற்றைக் காணும்படியும், அளக்கும் படியும் செய்துள்ளது.  23,000 ஒளிமந்தை இரட்டைகளைக் [காலக்ஸிகள்] ஈர்ப்பியல் குவிநோக்கு முறையில் சேர்த்து, இணைத்து கரும்பிண்ட நுண்ணிழைகள் பின்னலை அமைப்பைக் கண்டதோடு, அவை ஒளிமந்தைகளை எப்படி இணைக்கின்றன என்றும் அறிய முடிந்தது.

    மைக்கேல் ஹட்ஸன், [பேராசிரியர், வானியல், வாடர்லூ பல்கலைக் கழகம், கனடா]

    Image result for dark matter filaments image

    கரும்பிண்ட நுண்ணிழைகள் இணைப்பு

    கரும்பிண்ட வலைப்பின்னல் வடிவம் முதன்முறைப் படமெடுப்பு 

    பல பத்தாண்டுகளாக கரும்பிண்ட வலை நுண்ணிழைகள் [Dark Matter Web Filaments] இருப்பை முன்னறிவித்த வானியல் விஞ்ஞானிகள், இப்போது முதன்முறை அவற்றைக் கண்டு, வடிவத்தைப் படமெடுக்கும் நுணுக்கத் திறனையும் பெற்றுள்ளார்கள்.  இதை 2017 ஏப்ரல் 12 இல் அறிவித்தவர் கனடா வாடர்லூ பல்கலைக் கழகத்தின் வானியல் பேராசிரியர் மைக்கேல் ஹட்ஸன்.  மேலும் அவற்றை அளக்கவும் தம்மால் முடிகிறது என்றும் கூறுகிறார்.  இவ்வடிவமைப்பு பிரபஞ்சம் ஆதியில் எப்படித் தோன்றியது என்னும் மர்மத்தை விளக்கும்.

    கீழ்வரும் ஒளிமந்தைக் கூட்டமைப்புப் படம் பல்வேறு தனிப்பட்ட படங்களைச் சேர்த்து, கரும்பிண்ட நுண்ணிழைகள் இணைத்துப் பிரபஞ்ச வலையைப் பின்னியுள்ளது.  இதுவரை கரும்பிண்டம் காணப் படாமலே ஒளிந்து கொண்டிருந்தது.  ஒளிமய காலக்ஸிகள் வெண்மை நிறத்திலும், இணைக்கும் நுண்ணிழைகள் செந்நிறத்திலும் உள்ளன.  பிரபஞ்சத்தில் 25% இருப்பான மாயக் கரும்பிண்டம் நமது கண்களுக்குப் புலப்படாமல், கருவிகளால் உணரப்பட்டு மறைந்துள்ளது.

    Eagle_Project-1024x576

    கரும்பிண்ட நுண்ணிழைகள் [Dark Matter Fliments]

    கரும்பிண்டம் ஒளிர்வதில்லை, ஒளியை விழுங்குவதில்லை, ஒளியை எதிரனுப்புவதில்லை.  அவற்றின் ஈர்ப்பு விசை மட்டுமே அவற்றைக் காட்டிக் கொடுக்கும்.  வாடர்லூ பல்கலைக் கழக வானியல் விஞ்ஞானி மைக்கேல் ஹட்ஸன் [Mike Hudson], அவரது இணைக் கூட்டாளி சேத் ஏப்ஸ் [Seth Epps], இருவரும் கையாண்ட நுணுக்கம், பலவீன ஈர்ப்பியல் குவிநோக்கு முறையைப்  [Weak Gravitational Lensing] பின்பற்றியது. அதற்குப் பயன்படுத்திய விண்ணோக்கிக் கருவி கனடா பிரான்ஸ் ஹவாயி தொலைநோக்கி [Canada-France-Hawaii Telescope].

    4.5 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள 23,000 ஒளிமந்தை இரட்டைகளின் ஈர்ப்புவிசைக் குவிநோக்கு முறையில் கிடைத்த, கூட்டு வடிவமைப்பு படங்களே இப்போது இணைக்கப் படுகின்றன.  அந்தச் சேர்க்கையில் அறிந்தது :  40 மில்லியன் ஒளியாண்டு தூரத்திற்குக் குறைந்த இடைவெளி உள்ள இரு ஒளிமந்தைக் கிடையே கரும்பிண்ட இணைப்பு ஆற்றலே எல்லாவற்றிலும் மிகையானது.  அதற்குப் பயன் படுத்திய “கணினிப் போலி மாடலின்” பெயர் ஈகில் திட்டம் [EAGLE Project (Evalution & Assembly of GaLaxies and their Environment)]. ஈகில் திட்டம், ஒருபுறத்து 300 ஒளியாண்டு தூரக் கொள்ளளவு ஒளிமந்தைக் கொத்துகளை நாமறிந்த பௌதிக முறையில் ஆராயும்.

    Image result for For First Time We Have the Technology to Observe Milky Way's Supermassive Black Hole

    முதன்முறை பால்வீதியின் பூதக்கருந்துளை வடிவைக் கண்டார். 

    நமது நிலவில் உள்ள ஓர் எலுமிச்சைப் பழத்தைக் காணும், படமெடுக்கும் நுணுக்கம் இப்போது வானியல் விஞ்ஞானிகளுக்கு உள்ளது.  2017 ஏப்ரல் 12 ஆம் தேதி ஸ்பெயினில் தொடங்கி, ஹவாயி முதல் அண்டார்க்டிகா வரை உள்ள பல்வேறு தொலைநோக்கி இணைப்புகளில் பயிற்சி பெற்று, நமது பால்மய ஒளிமந்தையை ஆராய்ந்து முதன்முறை அதன் நடுவில் உள்ள பூதக் கருந்துளையின் வடிவைப் படமெடுத்துள்ளது.  அந்த தனித்தனிப் படங்களை இணைத்து முழுவடிவைத் தயாரிக்க இன்னும் பல மாதங்கள் எடுக்கும்.  இதன் விளைவுகள், மர்மமான பிரபஞ்சம் எப்படி ஆதியில் தோன்றியது என்றும், எப்படி இதுவரை வளர்ச்சியுற்றது என்றும் வானியல் விஞ்ஞானிகள் அறிய உதவி செய்யும்.

    aj

    [Click to Enlarge]

    பேரளவு நிதி செலழித்து மாபெரும் ஓர் தொலைநோக்கி அமைப்பதற்குப் பதிலாக, நாங்கள் ஏற்கனவே உள்ள சிறிய எட்டு நோக்ககங்களைப் [Observatories] பயன்படுத்தி அவற்றின் படங்களை ஒட்டிப் பூதக்கருந்துளை உருவைத் தயாரிக்கச் சில மாதங்கள் ஆகும். எட்டு நோக்ககங்கள் பூமியளவு 10,000 கி.மீ. [6200 மைல்] விட்டமுள்ள தொலைநோக்கிக்குச் சமமானது.  பால்வீதி ஒளிமந்தையின் பூதக் கருந்துளை, பூமியிலிருந்து 26,000 ஒளியாண்டு தூரத்தில்,  ஸாகிட்டேரியஸ் தாரகை மந்தை [Sagittarius Constellation] அரங்கில் உள்ளது என்று மைக்கேல் பிரேமர் கூறியுள்ளார்.  அவர் தொடுவான் நிகழ்வு தொலைநோக்கியின் ஆளுநர்  [Director, Event Horizon Telescope].

    “சூரியனுக்கு அருகிலே கரும்பிண்டம் உள்ள தென்பதில் இப்போது நாங்கள் 99% உறுதிப்பாடு கொண்டுள்ளோம்.   ஏராளமாய்க் கரும்பிண்டம் பரிதிக்கு அருகில் இருக்கிறது என்பதில் 90% உறுதிப்பாடுதான் உள்ளது.   இதுவே கரும்பிண்டத் தட்டு ஒன்று நமது காலாக்ஸி ஒளிமந்தையில் இருப்பதற்கு முதல் சான்றாய்  அமைகிறது.   இதைச் சமீபத்திய ஒரு நியதியும், காலக்ஸி தோற்றத்தின் போலி எண்ணியல் கணனி வடிவமைப்பும் (Numerical Simulations of Galaxy Formation) முன்னறிவிப்பு செய்துள்ளன.   அல்லது  உள்ளரங்கு கரும்பிண்டத்தின் திரட்சியை (Local Dark Matter Density) வலுப்படுத்தும் காலக்ஸியின் “கரும்பிண்ட ஒளிவளையம்” (Dark Matter Halo of  our Galaxy) தகர்க்கப் படுகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.”

    ஸில்வியா கர்பாரி  (Silvia Garbari, Scientist, University of Zurich, Switzerland)

    “கரும்பிண்டம் ஒரு மூலாதாரத் துகளாயின், பில்லியன் கணக்கான இந்தத் துகள்கள் நமது உடம்பினூடே இப்போதும் நுழைந்து செல்கின்றன.  செயற்திற விஞ்ஞானிகள் இவற்றில் சில துகள்களைச் சோதனையில் பிடித்துக் கொள்கிறார்.   கரும்பிண்டத்தின் உள்ளரங்கின் பண்பாடுகளை அறிந்து கொள்வது, அவை எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை வெளிப்படுத்தும்.”

    பேராசிரியர் ஜார்க் லேக் (கூட்டாசிரியர், ஸூரிக் பல்கலைக் கழகம்)

     

    “மங்கித் தெரியும் விண்வெளி விளிம்புக்குப் படிப்படியாக வந்தடைகிறோம்.  நாம் அங்கே நிழல்களை அளக்கிறோம்.  மேலும் மர்மமான தவறுகளில் அங்கே அபூர்வமாகப் பரவிக் கிடக்கும் மிகப்பெரும் பிரபஞ்ச எல்லைக்குறிகளைத் தேடுகிறோம் !

    அமெரிக்க வானியல் மேதை எட்வின் ஹப்பிள்

    “அதனுடைய திணிவு நிறை எலெக்டிரானை விட மிகச் சிறியது !  என்ரிகோ ஃபெர்மி அந்த நுண்துகளுக்கு “நியூடிரினோ” என்று பெயரிட்டார் ! அதன் சுழற்சி 1/2 (Spin 1/2) என்று இருக்கலாம் என்பது எனது யூகம்.  அதற்கு மற்ற பிண்டத் துகளுடனும், ஒளித்திரளுடனும் எந்த இணைப்பாடும் இல்லை. (No Interactions with Matter or Photons)”

    நோபெல் பரிசு விஞ்ஞானி : உல்ஃப்காங் பாலி (Wolfgang Pauli) (1930)

    fig-1c-gravitational-lensing

    “பிரபஞ்சத்தில் கரும்பிண்டம் சாதாரணப் பிண்டத்தை விட ஐந்து மடங்கு அளவு உள்ளது.  இந்த ஆராய்ச்சி நம்முடலை அமைக்கும் பொருளைப் பற்றி அல்லாது வேறான புதுவிதப் பிண்டம் ஒன்றைப் பற்றி விளக்குவது.  நாமந்தக் கரும்பிண்டத்தைப் பேராற்றல் வாய்ந்த இரு காலாக்ஸி மந்தைகள் மோதலில் உளவ முடிந்தது !”

    மருஸா பிராடக் (ஸான்டா பார்பரா, கலிஃபோர்னியா பல்கலைக் கழகம்)

    “இரவு வானத்தில் ஒளிவீசித் தெரியும் விண்மீன்களின் கொள்ளளவுப் பிண்டங்களை விட நியூடிரினோக்களின் திணிவு பேரளவு மிஞ்சி இருப்பதாக நாம் அறிவோம்.  விண்மீன்களை விட மிக்கப் பரிமாணம் கொண்டவையாக நியூடிரினோ துகள்கள் இருக்கலாம்.  அதனால் கருமைப் பிண்டத்தைப் பற்றிக் கணிக்கும் போது அகிலவியல்வாதிகள் (Cosmologists) நியூடிரினோ துகள்களைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.”

    ஜான் லேனர்டு விஞ்ஞானி ஹவாயி பல்ககைக் கழகம்

    fig-1d-composition-of-the-cosmos

    சூரியனுக்கு அருகிலே பேரளவு கரும்பிண்டம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

    2012 ஆகஸ்டு 15 இல் ஸூரிச் பல்கலைக் கழக வானியல் விஞ்ஞானிகளும், மற்ற அகில நாட்டு ஆய்வு நிபுணர்களும்,  நமது சூரியனுக்கு அருகில் ஏராளமான கரும்பிண்டம் கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.   அவரது ஆராய்ச்சி முடிவுகள்,  நமது பால்வீதி காலக்ஸியைச் சுற்றிலும் கனமான கரும்பிண்ட வளையம் உள்ளது என்னும் கோட்பாட்டு நியதிக்குச் சான்றாக இருக்கிறது.    ஆயினும் இதுதான் முதன்முதலில் செய்த  உறுதியான ஆய்வு முடிவுகள்.   இந்த ஆய்வுகள் தரமான போலிக் கணனி வடிவமைப்பு  (High Quality Computer Simulations) மூலம் தீவிர மாகச் சோதிக்கப் பட்டன.    அத்துடன் விஞ்ஞானிகள்  நமது பால்வீதி காலக்ஸியில் கரும்பிண்டத்தின் ஒரு புதிய உட்பிரிவையும் (A New Dark Matter Component) கண்டிருக்கிறார்.

    1930 ஆண்டில்தான் சுவிஸ் வானியல் விஞ்ஞானி ஃபிரிட்ஸ் ஸுவிக்கி  [Fritz Zwicky] கரும்பிண்டத்தின் இருப்பு  பற்றித் தன்  கருத்தை வெளியிட்டார்.   மர்மமான  கரும்பிண்டம் காலக்ஸி கொத்துகளில் [Clusters of Galaxy]  நிரம்பி, விலகிச் செல்லாமல் சேர்ந்துள்ளன என்று கண்டறிந்தார்.   ஏறக்குறைய அதே சமயத்தில் நெதர்லாந்தை சேர்ந்த ஜான் ஓர்ட் (Jan Oort) என்பவர் சூரியனுக்கு அருகில் கரும்பிண்டத்தின் திரட்சி [Density of Dark Matter] வெறும் விண்மீன் வாயுவுடன் உள்ள பளுவைவிட ஏறக்குறைய இரட்டிப்பு அளவில் உள்ளது  என்று கண்டுபிடித்தார்.

    fig-1c-dark-energy-dark-matter

    கரும்பிண்டம் பற்றிக் கடந்த பத்தாண்டு விஞ்ஞான விருத்திகள்

    இடைப்பட்ட கடந்த பத்தாண்டுகளில் வானியல் விஞ்ஞானிகள் கரும்பிண்டத் தோற்றத்தைப் பற்றி ஒரு நியதியை விருத்தி செய்தார்கள்.    அது பிரபஞ்சக் காலக்ஸிக் கொத்துக்களின் பண்பாடுகளை விளக்கியது.   ஆயினும் சூரியனுக்கு அருகில் இருந்த கரும்பிண்ட அளவு தெரியாமல் மர்மமாகவே இருந்தது !   ஜான் ஓர்ட் கணித்த பிறகு செய்த ஆய்வுகள்  எதிர்பார்த்த அளவுக்கு 3 –6 மடங்கு மிகையாய்க் கரும்பிண்டம் இருப்பதாய் அறியப் பட்டது.   சென்ற ஆண்டு சேகரித்த தகவல் ஒன்றில், ஒரு புதிய முறை மிகக் குறைந்த அளவைக் குறிப்பிட்டது.    உறுதியாக அளக்க முடியாமல் தடுமாறி  விளைந்த இந்த முரண்பாடுகள் பல விஞ்ஞானிகளைக் குழப்பத்தில் தள்ளியது !   பிறகுதான் பால்வீதி போலிக் கணனி வடிப்பமைப்பு முறைச் சோதிப்பு (Testing the method on a Simulated Milky Way) மூலம் அழுத்தமாக அறியப் பட்டது.

    இருவகைக் கரும்பிண்டம் : குளிர்ந்த பிண்டம் ! சூடான பிண்டம் !

    பிரபஞ்சம் எங்கும் கரும்பிண்டம் நிரம்பி உள்ளது என்று நம்புவதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன.  அந்தக் கரும்பிண்டங்களே ஈர்ப்பாற்றல் மூலம் உருவாகிய பிரபஞ்சத்தைப் படிப்படியாக வடித்து விருத்தி செய்யத் தூண்டியவை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.  ஆனால் அந்தக் கரும்பிண்டங்களை தற்போதைய கருவிகள் மூலம் நேரடியாகக் காண முடியாதவாறு விண்வெளி இருள் வெள்ளத்தில் அவை ஒளிந்துள்ளன. இப்போது கரும்பிண்டம் என்று விஞ்ஞானிகள் சொல்லும் போது அதனுள் இருக்கும் “குளிர்ப் பிண்டம்” “சூடான பிண்டம்” என்னும் இருவகைப் பிண்டங்களின் கலப்பைத்தான் (Mixed Dark Matter or Cold & Hot Dark Matter) குறிப்பிடுகிறார்.  இந்தக் கூட்டு வகைக் கரும்பிண்டத்தில் குளிர்ந்த கரும்பிண்டமே பெரும்பான்மை யாக மிகுதியாகவும், சூடான கரும்பிண்டம் மிகச் சிறியதாகவும் உள்ளதாக அறியப்படுகின்றன.  சமீபத்திய சோதனை ஆய்வுகளில் சூடான கரும்பிண்டம் சிறு சதவீதமாகவும், சுடாத கரும்பிண்டம் பிரபஞ்சத்தில் சுமார் 30% ஆகவும் இருப்பதாய்க் கணிக்கப் படுகின்றன.

    சூடான கரும்பிண்டம் அல்லது கணப்புக் கரும்பிண்டம் என்றால் என்ன ?

    சூடான கரும்பிண்டம் என்பது பூஜிய நிறை அல்லது பூஜிய நிறைக்கு ஒட்டிய பளுவுள்ளது !  அவற்றில் பிரதானமாக நிறையில்லாத நியூடிரினோ நுண்துகள்கள் (Massless Neutrino Particles) இடம் பெறுகின்றன.  ஐன்ஸ்டைனின் சிறப்பு ஒப்பியல் நியதிப்படி (Special Theory of Relativity) நிறையில்லாத் துகள்கள் ஒளிவேகத்தை ஒட்டிய விரைவில் பயணம் செய்கின்றன.  அவ்விதம் மிகச்சிறு நிறையுடைய துகள்கள் மிகப் பெரும் வேகத்தில் செல்வதால் அவற்றின் விரைவியக்கம் வெப்பத்தை உண்டாக்கும் (As per the Kinetic Theory of Gases) நிலையைப் பெறுகின்றன.

    fig-1a-cold-dark-matter

    சுடாத கரும்பிண்டம் அல்லது குளிர்க் கரும்பிண்டம் என்றால் என்ன ?

    பிரபஞ்சத்தில் பெரும்பான்மையாக ஒளிந்திருக்கும் கரும்பிண்டம் குளிர்க் கரும்பிண்டமே !  அந்தப் பிண்டங்களுக்கு மிகுந்த நிறை உள்ளதால் அவை ஒளிவேகத்துக்குக் குறைந்த ஒப்பியல் வேகத்தில் நகர்கின்றன.  ஆதலால் அவை தணிந்த உஷ்ண நிலையில் உலவு கின்றன.  அதிக உஷ்ணத்தில் உள்ள நுண்துகள் கரும்பிண்டம் ஒளிவேகத்துக்கு ஒட்டிய வேகத்தில் செல்வதால் அவை பிரபஞ்சத்தில் எந்த வடிவமைப்பும் செய்ய உதவாது சிதைத்து விடுகின்றன. அதே சமயத்தில் மெதுவாக நகரும் குளிர்ந்த கரும்பிண்டம் பிரபஞ்சத்தில் வடிவமைப்பு உண்டாக்க வழி வகுக்கிறது.

    fig-1e-particles-zoo

    சூடான கரும்பிண்டம் என்னும் நியூடிரினோ நுண்துகள்கள்

    கோடான கோடி பில்லியன் எண்ணிக்கையில் உள்ள நியூடிரினோ நுண்துகள்களே சூடான கரும்பிண்டத்தின் பெரும்பான்மைப் பிண்டமாக அறியப் பட்டுள்ளன. நியூடிரினோ நுண்துகள்கள் நகர்ச்சியைக் கருவிகள் மூலம் பதிவு செய்து விஞ்ஞானிகள் காண முடியும்.  1931 ஆம் ஆண்டில் ஜெர்மன் விஞ்ஞானி உல்ஃப்காங் பாலி (Wolfgang Pauli) முதன்முதல் நியூடிரினோ நுண்துகள்கள் இருப்பைக் கண்டுபிடித்தார்.  ஆனால் அதற்கு நியூடிரினோ என்று முதலில் பெயரிட்டவர் இத்தாலிய அமெரிக்க விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மி (Enrico Fermi). என்ரிக்கோ ·பெர்மிதான் முதன்முதல் (1934) அணுப்பிளவு செய்து அதை அறியாமல் போனவர்.  இரண்டாம் உலகப் போர் சமயத்தில் 1942 இல் அணு ஆயுத ஆராய்ச்சியின் போது சிகாகோவில் முதன்முதல் அணுக்கருத் தொடரியக்கத்தை (Nuclear Chain Reaction) நிகழ்த்திக் காட்டி அணு ஆயுதக் குண்டு ஆக்குவதற்கு உதவியவர்.

    fig-1f-matter-energy

    நியூடிரினோ நுண்துகளின் மாபெரும் பங்கு பல்வேறு வானியல் பௌதிக இயக்கங்களில் பரவிக் கடந்த இருபது ஆண்டு களாய் அமெரிக்கா, கனடா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஆராய்ச்சிகள் பெருகி “நியூடிரினோ வானியல்” (Neutrino Astronomy) விஞ்ஞானமாகத் தனித்துத் தலைதூக்கி யுள்ளது.  பிரபஞ்சவியல் நிலைப்படி பெரு வெடிப்பில் நிகழ்ந்த “அணுக்கருச் சேர்க்கைக்” கணிப்புகளில் (Nucleosynthesis) ஹீலியம், லிதியம், பெரிலியம், போரான், கார்பன் போன்ற எளிய மூலகங்கள் தோற்ற காலத்து அணுக்கரு இயக்கங்களில் உருவாகும் போது நியூடிரினோ நுண்துகள்கள் எண்ணிக்கை பேரளவில் பெருத்தன என்பது அறியப்படுகிறது.  ஆதலால் எளிய மூலகங்கள் எண்ணற்றுத் தோன்றும் போது எண்ணற்ற நியூடிரினோக்கள் பிரபஞ்சத்தில் பேரளவில் பெருகின என்பது யூகிக்கப் படுகிறது.

    fig-1f-power-spectrum

    இப்போதுள்ள அகில நுண்ணலைப் பின்புலம் (CMB ~ Cosmic Microwave Background) உருவாகி யிருக்கும் பெரும்பான்மைக் “கதிர்வீச்சுக் களம்” (Radiation Field) பெரு வெடிப்பு நிகழ்ந்த சில நிமிடங்கள் பிண்டத்தி லிருந்து பிரித்து விட்டிருக்கிறது.  அந்தச் சமயம் கோடான கோடி பில்லியன் நியூடிரினோக்கள் பிண்டத்திலிருந்து விலக்கப்பட்டு வெளியேறின !  ஆதலால் பிரபஞ்சப் பெரு வெடிப்புக்குப் பின் ஒரு காலத்தில் “முன்னறிவித்த அகில நியூடிரினோ பின்புலம்” (Predicted Cosmic Neutrino Background) எப்படிப் ·போட்டான் (Photon ~ ஒளித்துகள்) திரட்சி CMB (Cosmic Microwave Background) தன்னை நிரப்பி இருந்ததோ அதுபோல் ஆக்கிரமித்திருக்கிறது.

    fig-1g-neutrinos-in-the-universe

    பிரபஞ்சத்தைக் கைக்கொண்ட கணப்பு & குளிர்ப்பு கரும்பிண்டங்கள்

    விண்வெளி மண்டலம் முழுவதிலும் பரவியுள்ள குறிப்பாக காலாக்ஸிகளில் கணப்பு அல்லது குளிர்ப்பு கரும்பிண்டம் ஆக்கிரமித்திருந்ததது ஒரு தெளிவடைந்த விஞ்ஞான அறிவிப்பாகும்.  பிரபஞ்சத்தில் காணப்படும் காலாக்ஸிகள் உருவான வரையமைப்பில் (Pattern of Galaxies) நியூடிரினோக்கள் முழுப்பங்கு எடுத்துக் கொள்ள வில்லை.  முன்பு கூறியபடி பெரு வெடிப்பிலிருந்து ஒளிவேகத்துக்கு ஒட்டிய விரைவில் நியூடிரினோக்கள் வெளியேறியதால், அவை யாவும் பிண்டத் திணிவு ஏற்ற இறக்கத்தை சமப்படுத்த (Smoothen the Fluctuations in Matter Density) முற்பட்டன !

    பிரபஞ்சத்தின் ஆரம்ப காலங்களில் “நியூடிரினோ திணிவு” (Neutrino Density) பேரளவு கொண்டதாய் இருந்தது.  ஆதலால் பெரும்பான்மைப் பிண்டத் திணிவு நியூடிரினோ நுண்துகள்களால் நிரம்பி இருந்ததாக முடிவானது.  வேகம் மிகையாக அவை கொண்டிருப்பதால் நியூடிரினோக்கள் அடர்த்தி மீறிக் கெண்டிருந்த அரங்குகளை (Overdense Regions) – அதாவது பிரபஞ்ச சராசரி திணிவை மிஞ்சிய அரங்குகளை விடுவித்தன !  அதன் விளக்கம் என்ன வென்றால் நியூடிரினோக்களின் வேகம் மிகுதியாகத் தணியும் போது “திணிவு ஏற்ற இறக்கம்” (Density Fluctuations) தோன்றும் என்பதே.  அதாவது பிரபஞ்சம் விரியும் போது அதன் உஷ்ணம் தணிவு நிலை அடைந்து நியூடிரினோ துகள்கள் குளிர்ந்து போகின்றன.

    fig-1h-ordinary-matter-inside-dark-matter

    சுமாராகச் சொல்லப் போனால் பிரபஞ்சத்தில் 75% கருமைச் சக்தி (Dark Energy), 21% கருமைப் பிண்டம் (Dark Matter) 4% தான் சூரிய மண்டலம் போன்ற ஒளிமய மந்தைகள் (Named as Normal Matter).  சற்று விபரமாகச் சொன்னால் கருமைச் சக்தி 65%, கருமைப் பிண்டம் 30%, விண்மீன்கள் 0.5% [Stars], உலவும் ஹைடிரஜன், ஹீலியம் சேர்ந்து 4% [Free Hydrogen & Helium], கன மூலகங்கள் 0.03% [Heavy Elements], மர்ம நியூடிரினோக்கள் 0.3% [Ghostly Neutrinos].

    கருமைப் பிண்டத்தின் மர்மான நியூடிரினோ நுண்ணணுக்கள் !

    பிரமாண்டமான பிரபஞ்சத்தில் முக்கால் திணிவுப் பகுதியான கருமைச் சக்தி (Dark Energy) மனிதக் கண்ணுக்குப் புலப்படாமலும் என்னவென்று விளக்க முடியாமலும் “அகிலப் புதிராக” (Heavenly Mystery) இன்னும் இருந்து வருகிறது !  அதைப் போன்று அடுத்து மர்மமானது பிரபஞ்சத்தின் கால் பகுதியாக இருக்கும் “கருமைப் பிண்டம்” (Dark Matter) !  புதிருக்குள் புதிரான நியூடிரினோ துகள்கள் பிரபஞ்சப் பிண்டத்தின் மூலத்துக்கு அடிப்படை என்று நிரூபிக்க உதவலாம் !  அகிலவெளிப் புதிர்களை ஆழ்ந்து ஆராய விஞ்ஞானிகள் நுண்ணணு விரைவாக்கிகள் (Particle Accelerators), தொலைநோக்கிகள், துணைக்கோள்கள் ஆகியவற்றைத் தற்போது பயன்படுத்தி வருகிறார்.  சில உயர்ச் சீரமைப்பு நுண்ணணுக்கள் (Super Symmetric Particles) மிகப் பலவீனமாக உடனியங்கும் துகள்களின் பிரதானக் குடிகள் (Prime Candidates for the very weakly interacting Particles) என்று ஜப்பானிய விஞ்ஞானி முராயமா கருதுகிறார்.  விரைவாக்கிகள் நுண்ணணுக்கள் எவ்விதம் தம்முள் உடனியங்குகின்றன என்று உளவவும், அவற்றின் திணிவு நிறையை (Mass) அளக்கவும் உதவுகின்றன.  அம்முறையில் “நியூடிரினோ பௌதிகம்” (Neutrino Particle Physics) ஓர் மகத்தான இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது !

    fig-1j-gravitational-lensing-dark-matter

    பிரபஞ்சத்தின் கரும்பிண்டம் என்றால் என்ன ?

    1930 இல் டச் வானியல் மேதை ஜான் ஓர்ட் (Jan Oort) சூரியனுக்கருகில் விண்மீன்களின் நகர்ச்சிகளை ஆராயும் போது,  முதன்முதல் கரும் பிண்டத்தின் அடிப்படை பற்றிய தன்மையை அறிந்தார்.  அவரது அதிசய யூகம் இதுதான்.  நமது பால்மய வீதி போன்று, பல்லாயிர ஒளிமய மந்தைகள், (Galaxies) மந்தை ஆடுகள் போல் அடைபட்ட ஒரே தீவுகளாய் சிதைவில்லாமல் தொடர்ந்து நகர்கின்றன.  அதாவது அந்த மந்தை அண்டங்கள் வெளியேறாதபடி ஒன்றாய் குவிந்திருக்க மகாப் பெரும் கனமுள்ள பொருட்கள் அவற்றில் நிச்சயம் பேரளவில் இருக்க வேண்டும் என்று நம்பினார்.  அந்த கனமான பொருட்களே விண்மீன்கள் தப்பி ஓடாதபடி, காலாக்ஸின் மையத்தை நோக்கிக் கவர்ச்சி விசையால் இழுத்து வைக்கப் படுகின்றன என்று திட்டமாகக் கண்டறிந்தார்.

    ஜான் ஓர்ட் சூரியனுக்குப் பக்கத்தில், விண்மீன்களின் நகர்ச்சியை நோக்கிய போது, சூரிய ஒளிப் பண்டத்தை விட அத்தகைய கரும் பண்டத்தின் திணிவு மூன்று மடங்கு இருக்க வேண்டும் (Dark Matter Existed 3 times as much Bright Matter) என்னும் தனது கருத்தை வெளியிட்டார்.  பின்னர் ஆய்வுகளைத் தொடர்ந்த வானியல் வல்லுநர்கள் ஒளித்தட்டுகளையும் (Luminous Disks), காலாக்ஸிகளைச் சுற்றிலும் தெரிந்த ஒளி வளையங்களை (Halos) கண்ட போது ஓர்டின் கரும் பிண்டத்தின் அளவு உறுதியாக்கப்பட்டது.

    fig-5-visible-dark-matter

    குளிர்ப்புக் கரும்பிண்டம் பற்றி விளக்கங்கள்

    குளிர்ப்புப் பிண்டம் என்பது பெரு வெடிப்பு நியதி செம்மையாக்கப் பட்டதின் விளைவே. அந்தப் புதிய நியதியில் பிரபஞ்த்தில் உள்ள பெரும்பான்மைப் பிண்டத்தை அதன் மின்காந்தக் கதிர்வீச்சால் காண முடியா தென்னும் ஓர் அனுமானம் சேர்க்கப் பட்டுள்ளது.  அதனால் அந்தப் பிண்டம் கருமை யானதாகக் கருதப்படுகிறது.  அத்துடன் அதில் உள்ள துகள்கள் குளிர்ந்து போனவை என்றும் மெதுவான வேகத்தைக் கொண்டவை என்றும் ஊகிக்கப் படுகின்றன. 2006 ஆண்டில் செய்த கருத்துச் செம்மையில் (Update) அநேக அகிலவியல் விஞ்ஞானிகள் (Cosmologists) எப்படிப் பிரபஞ்சம் தோற்ற காலத்தில் சமமான நிலையிலிருந்து (Shown by Cosmic Microwave Background Radiation) நாமின்று காணும் பெருங்காட்சிப் பிரபஞ்சமாய்த் திரண்ட நிலை பரவிய காலாக்ஸிகளாகவும் அவற்றின் கொத்துக்களாகவும் (Lumpy Distribution of Galaxies & their Clusters) ஆயின என்னும் குளிர்ப்புக் கரும்பிண்ட நியதியை ஆதரிக்கிறார்கள்.

    ஒரு பிரச்சனை என்ன வென்றால் குளிர்ப்பு கரும்பிண்ட நியதி கருமைப் பிண்டம் என்ன உட்துகள்கள் கொண்டவை என்று தெளிவாகச் சொல்வதில்லை.  கருமைப் பிண்டத்தில் உள்ள நலிவியக்கப் பெருநிறைத் துகள்கள் (WIMPs – Weakly Interacting Massive Particles) என்பவை அறியப்படாத ஒருவகை கனநிறைத் துகள்களே.   அவற்றைக் காண வேண்டுமானால் பிரான்சில் தற்போது அமைக்கப் பட்டிருக்கும் பூத வடிவான செர்ன் விரைவாக்கி யந்திரம் (Cern Accelerator) மூலம்தான் உண்டாக்கிக் காண வேண்டும்.

    கனநிறைச் சிக்கன வளையொளி வடிவுகள் (MACHO -Massive Compact Halo Objects எனப்படுபவை, கருந்துளைகள், நியூட்ரான் விண்மீன்கள், வெள்ளிக் குள்ளிகள், மங்கிய விண்மீன்கள் அல்லது கோள்கள் போன்ற ஒளியற்ற வடிவுகள் (Non-Luminous Objects) கொண்ட ஆறிப்போன வடிவண்டங்கள் (Condensed Objects). இவற்றை எல்லாம் காலாக்ஸிகளின் பின்புலத்தில் ஈர்ப்பாற்றல் லென்சின் மூலம் (Gravitational Lensing) கண்டுபிடிக்கலாம்.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – What is Dark Matter ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40711221&format=html[கருமைப் பிண்டம் என்றால் என்ன ?]
    21 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40806122&format=html[மர்மான நியூடிரினோ]
    22 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40809041&format=html[காலாக்ஸிகள் மோதிக் காணப்பட்ட கரும்பிண்டம்]
    23 The Search for Infinity – Solving the Mysteries of the Universe “The Dark Side of Matter -The Missing Universe” (1995)
    24 Discover Magazine – A Field Guide to the Invisible Universe By : Martin Rees & Priyamvada Natarajan [Fall 2008]

    25  http://en.wikipedia.org/wiki/Dark_matter  [August 12, 2012]

    26  Stellar Chemistry – Plenty of Dark Matter Near the Sun, Staff Writers, Zurich, Switzerland (SPX)  [August 13, 2012]

    27  NASA Science -Astrophysics –  http://science.nasa.gov/astrophysics/focus-areas/what-is-dark-energy/

    28.  http://www.forbes.com/sites/alexknapp/2012/08/15/astronomers-detect-dark-matter-near-the-sun/ [August 15, 2012]

    29. http://earthsky.org/space/waterloo-image-dark-matter-cosmic-web-2017  [April 12, 2017]

    30. http://www.dailygalaxy.com/my_weblog/2017/04/for-first-time-we-have-the-technology-to-observe-milky-ways-supermassive-black-hole-can-spot-a-golf-.html  [April 12, 2017]

    31. http://www.ibtimes.com/first-ever-image-dark-matter-reveals-filaments-link-galaxies-2524864  [April 13, 2017]

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  April 15, 2017

    Share
  • மின்னணுப் பரிமாற்றங்களின் அதிர்ச்சித் தகவல்..

    பவள சங்கரி

    மின்னணுப்பரிமாற்றங்களை ஊக்குவிக்கின்ற மத்திய அரசு அதிலுள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிசாரா அமைப்புகளின்றி அனைத்து நிதி மின்னணுப் பரிவர்த்தனைகளும் பாதுகாக்கப்பட வேண்டிய சூழலில் உள்ளது. இதைப்பற்றி சமீபத்தில் NSA (National Security Agency) உலகின் அனைத்து வங்கி சேவைகளும் தங்களால் முடக்கப்படும் என்று அறிவித்து சில நாட்களுக்குள்ளாகவே வங்க தேசத்திலிருந்து 89 மில்லியன் டாலர் பரிவர்த்தனை முறைகேடாகச் செய்யப்பட்டு அது நமது இந்தியாவின்,  யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சேர்மன் மற்றும்  தேசிய வங்கித்துறை பாதுகாப்பு ( National Security Advisor) ஆலோசகரும் இணைந்து அந்தத் தொகைக்கு இருமடங்கு சுமாராக 180 மில்லியன் டாலரை மறுபரிவர்த்தனை மூலமாக திரும்பப்பெறச் செய்துள்ளனர்.  சுமார் 6 நாட்களுக்குள் இந்தத் தொகை திரும்பப் பெறப்பட்டுள்ளது. நமது அனைத்து வங்கிகளும், மத்திய ரிசர்வ் வங்கியும் மத்திய அரசின் நிதி பரிவர்த்தனைகளும் இதுபோன்ற முறைகேடான பரிவர்த்தனைகளிலிருந்து பாதுகாக்கவும், முறைகேடாக அனைத்து வங்கிக் கணக்குகளும், நிதித்துறைக் கணக்குகளும் முடக்குவதிலிருந்து தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவேண்டியது அவசியம். வங்கித் துறைகளின் நடவடிக்கைகள் மின்னணுப் பரிமாற்ற வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் கிரைமும் வளர்ச்சியடைகிறது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். சமீபத்தில் சிலிகான் மூலம் வங்கி அட்டைகளின் கணக்கு எண்ணும்,  பின் நம்பரும் எளிதில் கைப்பற்றக்கூடியதாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே மின்னணுப் பரிமாற்றங்கள் பற்றிய முழு பாதுகாப்பும் இன்றைய அத்தியாவசியம் ஆகிறது. ஆறு நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாகக் கூறினாலும், ஆறு நாட்கள் ஆகியுள்ளதே என்று அதிர்ச்சியடையாமல் இருக்க முடியவில்லை.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170415 - Gopala Vimshati 04 -lores

    ”பூனைக்கண் மூடுது பூலோகக் கங்குலாம்(இருளாம்)
    ஆனை பசிக்(கு)அவலா ஆகாரம் : -காணும்
    புவிநா டகங்களை பாராது பார்க்கும்
    கவிதே சிகர்வாக்கைக் காண்’’….கிரேசி மோகன்….!

    Share
  • வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்…

    சித்ரா பவுர்ணமி சிறப்பு தினத்தில்ஐஸ்வர்யம் அருளும் 1,116 கலசங்களுடன்பிரமாண்ட ஸ்ரீசத்யநாராயண பூஜை, ஹோமத்துடன் ஸ்ரீமகேஸ்வர பூஜை

    நாள்: 09.05.2017 செவ்வாய், 10.05.2017 புதன்

    வேலூர் மாவட்டம் வாலாஜா நகரத்தில் சோளிங்கர் செல்லும் சாலையில் அனந்தலை மதுராவில் அமைந்திருக்கிறது ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்.

    யக்ஞ பூமியாய் திகழும் இந்த புனித பீடத்தில் இதுவரை பல்லாயிரக்கணக்கான ஹோமங்கள் நடந்துள்ளன. இந்த ஹோமங்களில் கலந்து கொண்டு ஏராளமானோர் நினைத்த காரியம் கைகூடப் பெற்றனர். இதனால், பலனும் நிம்மதியும் அடைந்துள்ளனர்.

    வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்துக்கு ஒரு முறை நேரில் வந்து தரிசித்துச் செல்கிற பக்தர்கள், மீண்டும் மீண்டும் இங்கு நடக்கிற வைபவங்களில் கலந்து கொள்ள வருவதே இதற்கு சாட்சி!

    வருகிற மே மாதம் 9 (செவ்வாய்) மற்றும் 10 (புதன்) ஆகிய இரு தினங்களில் பிரத்தியேகமான 1,116 கலசங்கள் வைத்து பிரமாண்டமான ஸ்ரீசத்யநாராயண ஹோமம் பூஜை மற்றும் ஸ்வாமிகளின் குருவான பெற்றோர்களுக்கு மகேஸ்வர பூஜையும் நடக்க இருக்கிறது.

    சித்ரா பவுர்ணமி காலத்தில் நடக்க உள்ள இந்த ஸ்ரீசத்யநாராயண வழிபாட்டிலும் மகேஸ்வர பூஜையிலும் கலந்து கொண்டால், குரு அருளுடன் அனைத்து ஐஸ்வர்யங்கள் உட்பட எல்லா நலன்களும் பெறலாம் என்று ஆன்மிக நூல்கள் சொல்கின்றன. பூஜையும் ஹோமங்களும் பூர்த்தி ஆன பின் இந்தக் கலசங்கள் அனைத்தும் பக்தர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்ற கொள்கையின் அடிப்படையில் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் – கயிலைமாமணி டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் இதை ஏற்பாடு செய்திருக்கிறார்.

    இரு நாள் வைபவங்களில் முதல் நாளான மே 9-ஆம் தேதி காலை ஸ்ரீகணபதி ஹோமம், ஸ்ரீநவக்கிரக ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும், அன்றைய தினம் மாலை பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ள 1,116 கலசங்களுக்கு சிறப்பு பூஜையும் நடக்க உள்ளது.

    மறுநாள் 10-ஆம் தேதி காலையில் ஸ்ரீசத்யநாராயண பூஜையும் ஹோமமும்,மதியம் ஸ்வாமிகளின் குருவும் பெற்றோர்களும் ஆன தந்தை ஸ்ரீமான் K.B. ஸ்ரீநிவாசன், தாய் ஸ்ரீமதி கோமளவல்லி அவர்களின் திருவுருவ சிலைகளுக்குமகாஅபிஷேகமும் மகேஸ்வர பூஜையும் மாலையில் ஸ்ரீசத்யநாராயண ஹோமத்தின் மகாபூர்ணாஹுதியும் நடைபெறும். அதன் பின், யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசத்தின் புனிதநீர், ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பிரத்தியேகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீசத்யநாராயணர் விக்கிரகத்துக்கு திரளான பக்தர்களின் முன்னிலையில் 16 திரவியங்களை கொண்டு திருமஞ்சனமும் செய்யப்படும்.அன்று இரவு பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதீஸ்வரர் மகான்கள், 468 சித்தர்கள், ஸ்ரீ காயத்ரி தேவி, மற்றும் ஸ்ரீ மகாமேருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறும்.இதனை தொடர்ந்து கோபூஜையுடன் 5 விதமான திரவியங்கள்கொண்டு ஸ்ரீ அன்னபூரணி தேவிக்கு மகா அபிஷேகம் நடைபெற்று அன்னபூரணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.
    .

    இரண்டு நாட்கள் பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட இந்த 1,116 கலசங்களும் வருகின்ற பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இந்தக் கலசத்தில் அரிசி, தேங்காய், வஸ்திரம், ஜாக்கெட் பிட், வெற்றிலை பாக்கு, ஒரு ரூபாய் நாணயம் போன்றவை இருக்கும்.

    கலசத்தில் வைக்கப்பட்டிருக்கும் அரிசியில் சிறிது எடுத்து, உங்கள் இல்லத்தில் சமையலுக்கு சேகரித்து வைத்திருக்கும் அரிசியோடு சேர்க்கவும். இதில் மேலும் சிறிதை எடுத்துக் கொண்டு அதோடு, உங்களது சக்திக்கு ஏற்றவாறு ஒரு கிலோவோ அல்லது அதற்கு மேலோ சேர்த்து தகுதி உள்ளவர்களுக்கு தானம் செய்து விடவும்.அல்லது தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் அன்னதானத்திற்கு அளித்து அன்னபூரணியின்அருளைபெறலாம். இத்தகைய கைங்கர்யத்தால் உங்கள் இல்லத்தில் உணவுப் பஞ்சம் வரவே வராது.

    இந்தக் கலசத்தை பூஜையறையில் நிரந்தரமாக வைத்து வணங்கி வந்தால் குடும்பத்தில் அந்நியோன்னியம், பணியில் எதிர்பார்க்கின்ற நல்மாற்றம், திருமணம் போன்ற சுப வைபவங்கள், குடும்பத்தில் ஒற்றுமை, தொழிலில் அபிவிருத்தி போன்றவை உட்பட அனைத்தும் கிடைக்கும்.

    வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர், கயிலைமணி டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் இந்த வைபவத்துக்குத் தலைமையேற்று நடத்தி வைக்க… எண்ணற்ற மடாதிபதிகள், ஆதீனங்கள்,சாதுக்கள் மற்றும்சிவனடியார்கள்முக்கயஸ்தர்கள்கலந்துகொண்டுசிறப்பிக்க உள்ளார்கள். அன்று நடைபெறும் ஸ்ரீ மகா பெரியவா புகழ் பி.சுவாமிநாதன் அவர்களின் ஆன்மீக உரையை கேட்டு பயன்பெற பக்தகோடிகள் அனைவரையும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் குருவருளும் ஸ்ரீதன்வந்திரி பகவானின் திருவருளும் பெற அன்புடன் அழைத்து மகிழும்,

    தன்வந்திரி குடும்பத்தினர்.

    Share
  • மருத்துவர்களின் தேவையும் – சேவையும்

    பவள சங்கரி

    பிரெக்ஸிட் (BREXIT) அதாவது பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் நடவடிக்கைகள் ஆரம்பித்த பிறகு இங்கிலாந்தில் மருத்துவர்களின் தேவை அதிகரித்தவண்ணம் உள்ளது. குறிப்பாக இந்திய மருத்துவர்களின் தேவை அதிகரித்துள்ளதால் அந்த அரசு இந்திய மருத்துவர்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. இங்கு 2000 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் மக்களின் நலனில் அக்கறை கொண்டு அந்நாட்டு அரசு செயல்படுகிறது. இந்தியாவில் 10,000 பேருக்கு ஒரு மருத்துவர்தான் என்று இருக்கும் நிலையில் ஒரு மருத்துவரை உருவாக்குவதற்கு அரசிற்கு பல இலட்சங்கள் செலவாகிறது. இங்கே படித்துவிட்டு இந்த மருத்துவர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கு சென்றுவிடுகின்றனர். ஒவ்வொரு நாளும் அரசு மருத்துவமனையில் சென்று பார்ப்பவர்களுக்கு இதன் ஆதங்கமும், வேதனையும் புரியும். ஆகவே நமது இந்தியாவில் படித்து பட்டம் பெறுகின்ற அனைத்து மருத்துவர்களும், வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமாவது அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவம் செய்வது கட்டாயமாக்கப்படவேண்டும். இது இருதய அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள், உயர் மருத்துவம் புரியும் மருத்துவர்களுக்கும் பொருந்துதல் வேண்டும். இம்மருத்துவர்கள் தங்களது சொந்த மருத்துவமனையிலாவது வாரத்திற்கு ஒரு நாளாவது இலவச சிகிச்சை அளிக்க முன்வருவது கட்டாயமாக்கப்படவேண்டும். தில்லியில் நடைமுறையில் உள்ளது போன்று அனைத்து நகரங்கள், பெரு நகரங்களிலும் இதைச் செயல்படுத்த வேண்டியது அவசியம்.

    Share
  • உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவும் ஆத்திரேலியா எழுத்தாளர் ம. செயராம சர்மாவுக்குப் பாராட்டுவிழாவும்!

    aje

          புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் புதுச்சேரி நீட இராசப்பையர் தெருவில் அமைந்துள்ள, செகா கலைக்கூடத்தில்   14.04.2017, வெள்ளிக் கிழமை, மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை தொல்காப்பியத் தொடர்பொழிவு நடைபெற்றது.

          வில்லிசைவேந்தர் இ. பட்டாபிராமன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். முனைவர் ப. பத்மநாபன்   வரவேற்புரையாற்றினார்.  முனைவர் மு.இளங்கோவன் அறிமுகவுரைற்றினார். முனைவர் சிவ. மாதவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர் தெ. முருகசாமி தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் தாக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.  தொல்காப்பியத்துள் குறிப்பிடப்படும் இலக்கணச் செய்திகள் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் உள்ளிட்ட நூல்களில் பொதிந்து கிடக்கும் தன்மையை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

          ஆத்திரேலியாவிலிருந்து வருகை தந்த எழுத்தாளர் ம. செயராம சர்மாவின் எழுத்துப்பணியைப் பாராட்டும் வகையில், மரபுப் பாமணி என்ற விருதளித்து இந்த நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டது. மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு உழைத்துவரும் ஏம்பலம் செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு திரு. சர்மா அவர்களுக்கு விருதளித்துப் பாராட்டினார். ஆத்திரேலியாவில் தமிழும் தமிழர்களும் தொடர்பான அரியதோர் கருத்துரையச் செயராம சர்மா வழங்கினார். திரு. தூ. சடகோபன், தனித்தமிழ்ப்பாவலர் தமிழியக்கன், திருவாசகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தமிழறிஞர்களைச் சிறப்பித்தனர்.

          முனைவர் இரா. கோவலன் நன்றியுரை வழங்கினார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    Share