செண்பக ஜெகதீசன்

 

நல்லார்கண் பட்ட வறுமையி னின்னாதே

கல்லார்கண் பட்ட திரு.

       –திருக்குறள் –408(கல்லாமை)

 

புதுக் கவிதையில்…

 

கல்லாதாரிடம்

சேர்ந்த செல்வத்தினால்

பயனேதுமில்லை..

 

அது

நல்லோரைச் சேர்ந்த

வறுமையைவிட

அதிகமாய்த் தரும்

அல்லலையே…!

 

குறும்பாவில்…

 

நல்லவரைச் சேர்ந்த வறுமையைவிட

அதிக துன்பந்தரும்,   

கல்லாதவரிடம் சேர்ந்த செல்வம்…!

 

மரபுக் கவிதையில்…

 

கல்வி யேதும் கல்லார்பால்

     கட்டுக் கட்டாய்ச் சேர்ந்திடினும்,

செல்வ மதனாற் பயனில்லை

   சேரும் துன்பமும் குறைவில்லை,

நல்லோர் தம்மைத் துன்புறுத்த

  நாடி வந்திடும் வறுமைதரும்

பொல்லாத் துன்ப அளவினிலும்

  பெரிதாய்த் தந்திடும் கல்லார்க்கே…!

 

லிமரைக்கூ..

 

வதைத்திடும் வறுமை நல்லாரை

அதனிலும் அதிகமாய்த் துன்பந்தந்தே

அழித்திடும் செல்வமது கல்லாரை…!

 

கிராமிய பாணியில்…

 

படிக்கவேணும் படிக்கவேணும்

நல்லாயிருக்க

நாலெழுத்து படிக்கவேணும்,

படிக்கலண்ணா வாழ்க்கயில

பலதுன்பம் வந்துடுமே..

 

படிக்காதவன் சேத்துவச்ச

பணத்தாலயும் பலனில்ல,

அது

நல்லவன வாட்டுகிற

வறுமயவிட அதிகமாவே

துன்பந்தரும்,

பெருந் துன்பந்தரும்..

 

அதால,

படிக்கவேணும் படிக்கவேணும்

நல்லாயிருக்க

நாலெழுத்து படிக்கவேணும்,

படிக்கலண்ணா வாழ்க்கயில

பலதுன்பம் வந்துடுமே…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *