நான் அறிந்த சிலம்பு – 234
-மலர் சபா
மதுரைக் காண்டம் – கட்டுரை காதை
கை குறைத்த கொற்றவன்
இப்பாண்டிய மன்னனின் சிறப்புக் குறித்து
இன்னமும் கூறுவேன் கேட்பாயாக!
பிறர்க்கு உதவி செய்ய இயலாத
வறுமையில் வாழ்ந்து கொண்டிருந்தனன்
கீரந்தன் எனும் அந்தணன்.
பொருள்தேட முற்பட்டு அவன்
வெளியூர் செல்ல விரும்பினான்.
“நீங்கள் வெளியூர் போய்விட்டால்
எனக்குத் துணை யாரும் இல்லையே”
என்றாள் அவன் மனைவி.
அந்தணன் அவளிடம்,
“குடிமக்களுக்குக் காவலாய்
அரசனது செங்கோலே
பாதுகாப்பு வேலியாய் நிற்கும்;
அதைவிடச் சிறந்த வேலி
வேறு எதுவும் இல்லை;
எனவே பயப்படாதே”
என்று கூறி வெளியூர் சென்றான்.
இக்குடியில் பிறந்த மன்னன் ஒருநாள்
மாறுவேடம் பூண்டு
அந்தப் பெண் இருந்த வீட்டின் அருகே வந்து
உள்ளே இருப்பது யார் என்றறியக்
கதவைத் தட்டினான்.
கதவின் ஒலி கேட்டு அஞ்சிய அப்பெண்,
“அரசனது காவல் சிறந்தது எனக்கூறி
எனைத் தனியே இங்கே விட்டுச் சென்றாயே,
இன்று அந்த அரசன் காவல்
எனைக் காத்திடாதோ”
எனக் கூறிப் புலம்பினாள்.
அப்பெண்ணின் சொல் பழுக்கக் காய்ச்சிய
இரும்பைப் போல
அந்த மன்னனின் மனத்தைச் சுட்டது.
‘நம் செயலால் இப்பெண்ணுக்குப் பழி நேருமோ’
என அஞ்சிய அந்தப் பாண்டிய மன்னன்,
வச்சிரப்படையை உடைய இந்திரன் மணிமுடியை
ஒளிபொருந்திய தனது சக்கரப் படையால்
உடைத்திட்ட தன் கையினைத்
தானே வெட்டிக் கொண்டான்.
இத்தகைய செங்கோன்மை தவறாத
வெற்றிகொண்ட பாண்டியர் குலத்தில் பிறந்தவர்களுக்கு
ஒருபோதும் இழுக்கு ஏற்பட்டதில்லை.