ராஜகவி ராகில்

 

 

அவனுடைய சுவாசம் காத்திருந்தது

தென்றலுக்காக

அவன் சோலையில் இருந்தாலும்

அவனுடைய பூ

இன்னமும் மலரவில்லை

 

அதோ

அந்தக் கவிதை வருகிறாள்

இதுவரை பத்திரமாகப் பிடித்து வைத்திருந்த

அந்தப் பட்டாம் பூச்சியைக் கொடுத்து

தன் காதலைச் சொன்னான் அவன் .

 

அந்த தேவதை அவனை

ஒரு வகையாகப் பார்த்தபடி கேட்டாள்

இந்தப் பெரிய சோலையில் உங்களுக்கு

ஒரு ரோஜாப்பூ கிடைக்கவில்லையா

 

என் காதலைக் கூறுவதற்கு

ஒரு கொலை செய்வது எனக்குப் பிடிக்கவில்லை

பூவை

செடியில் வைத்து ரசிப்பதுதான் அழகும் தர்மமும்

 

இந்தப் பட்டாம் பூச்சியை நான் என்ன செய்வது

 

பறக்க விடு

காதல் சிறகு கொண்டு அது புதிதாகப் பறக்கட்டும்

 

எனக்கு

பூதான் வேண்டும்

அந்தப் பூ பிடிவாதம் பிடித்தாள்

 

ஒரு பூ செடியில் இருக்கும் போதுதான்

அது உயிரோடு இருக்கும்

அதைப் பறித்தால் அந்த மலர் இறந்துவிடும்

உயிரில்லாத பூ தந்துதான்

என் காதலை நான் வெளிப்படுத்த வேண்டுமா

 

பட்டாம் பூச்சி உயிருள்ளது

அது போல என் காதலும் உயிருள்ளது

 

அந்தக் கார்முகில் குளிர் அழகி

ஏற்றுக் கொண்டாள்

 

நான் இனி கூந்தலுக்குப் பூக்கள் வைக்க மாட்டேன்

உயிரில்லாதவற்றை யார் சூடுவார்

இனி அதன் வாசங்கூட எனக்குப் பிடிக்காது

என்றாள்

 

அப்போ

பட்டாம் பூச்சிகள் பிடித்துத் தருகிறேன்

உன் கூந்தலில் சூடு என்றான் அவன் .

 

அவை மணக்காதே

 

உன் கூந்தல் நறுமணத்தில்

பட்டாம் பூச்சிகள் மணக்கட்டுமே

 

உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு

ஒரு பூவைக் கூட பறிக்க விரும்பாத நீங்க

என்னை நல்லாப் பார்த்துக்குவீங்க…என்றவள்

 

ஒரு முத்தப் பூப்பறிக்கத் தயாரானாள்

காதலைக் கட்டிப் பிடித்தபடி .

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *