நிர்மலா ராகவன்

சவாலைச் சமாளி!

நலம்-1-1
சுவரும் சித்திரமும்

அமெரிக்க பல்கலைக்கழகமொன்றில், முனைவர் பட்டப்படிப்புக்கு பத்துபேர் சேர்ந்திருந்தனர். இறுதியில் இருவர் மட்டுமே நிலைக்க, மற்றவர்கள், `மிகக் கடினம்!’ என்று பாதியிலேயே விட்டுவிட்டுப் போய்விட்டார்களாம்.

`ஏன் அப்படி நம்மைவிட்டுப் போய்விட்டார்கள்? என்று எதிர்மறையாகச் சிந்திக்காது, `நம்மிருவருக்குள் என்ன ஒற்றுமை?’ என்று ஆராய்ந்தபோது, எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அடிக்கடி உணவு உட்கொள்ளும் பழக்கம் இருவருக்கும் இருந்தது தெரியவந்தது. அவர்களுள் ஒருத்தி என் மகள்.

அவள் பள்ளி இறுதியாண்டு பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தபோது, மணிக்கொருமுறை ஏதாவது தின்னக் கொடுத்துக்கொண்டே இருப்பேன். (என் தாய் எனக்குச் செய்தது). உதாரணமாக, தக்காளிப்பழத்தை வில்லைகளாக நறுக்கி, அரிந்த வெங்காயம், கொத்துமல்லி ஆகியவைகளுடன் உப்பு, மிளகுபொடி தூவித் தின்பது புத்துணர்வைத் தரும்.

அப்போதெல்லாம், `என்னைக் குண்டா ஆக்கப் பாக்கறியா?’ என்று கேலியாகச் சிரித்தபடி, வேண்டாவெறுப்பாகச் சாப்பிட்டவள், தான் தனியாகப் போனபின்னரும், தன்னையும் அறியாது, அதே பழக்கத்தைக் கடைப்பிடித்திருக்கிறாள்.

நிறைய வேலை இருந்தால், அடிக்கடி சிறிதேனும் நல்ல ஆகாரம் உட்கொள்ள வேண்டும். மனிதன் ஒட்டகமில்லை. அவ்வப்போது சாப்பிட்டால்தான் உடலைப் பேண முடியும்.

சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையமுடியும்?

`வேலை மும்முரம்’ என்று பலர் உடல்நிலையைச் சரியாகக் கவனிக்காது விட்டுவிட்டு, `நான் மட்டும் ஏன் சிறிது நேரத்திலேயே அயற்சி அடைகிறேன்!’ என்று அயர்கிறார்கள். ஓரிடத்திற்கு எவ்வளவுதான் அவசரமாகப் போகவேண்டும் என்றாலும், காரில் போதிய பெட்ரோல் இருக்கிறதா என்று முதலிலேயே பார்த்துக்கொள்வது அவசியமில்லையா?

காப்பியும் டீயும்

ஓயாமல் காப்பி குடித்தால் சுறுசுறுப்பு வரலாம். ஆனால் தலை நரைக்கும்! “பரீட்சைக்குப் படிக்கும்போது, ஒரு நாளைக்கு பதினாறு கப் காப்பி குடிப்பேன்! அதில் சர்க்கரை சேர்க்கிறோமா! ரொம்ப குண்டாகிவிட்டேன்!” — இது ஓர் இளைஞன் என்னிடம் புலம்பியது.

அளவுக்கு அதிகமாக டீ குடித்தாலோ, ஒரு கப் டீ குடித்தவுடனேயே, `அடுத்து எப்போது கிடைக்கும்?’ என்று அந்த போதையை எதிர்பார்க்க ஆரம்பித்துவிடும் மனம். வேளாவேளைக்கு குடித்தே ஆகவேண்டும், இல்லையேல் தலைவலி என்று பாடுபடுத்தும். சிலருக்கு பித்தம் அதிகமாகி, தலை சுற்றல், வாந்தி, பாதத்தில் வெடிப்பு போன்ற தொல்லைகளும் எழும்.

பிறர் சிரிப்பார்களே!

வாழ்வில் எல்லாம் எளிதாகவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் சராசரிக்குக் கீழேயே காலமெல்லாம் இருக்கத் தயாராக வேண்டும்.

ஏதாவது புதிய காரியம் ஒன்றைச் செய்ய முற்படும்போது தவறுகள் நிகழத்தான் செய்யும். `தவறுகள் நிகழ்ந்துவிடுமோ?’ என்ற பயமோ, பிறர் நம்மைப் பார்த்துச் சிரிப்பார்களே என்ற கலக்கமோ கொள்பவர்களால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது.

உன்னால் முடியும்!

ஒரு புதிய காரியத்தை நாம் செய்ய முற்படும்போது, `உன்னால் முடியாது!’ என்று நமக்கு நெருங்கியவர்கள் அவநம்பிக்கை தெரிவித்தால், அது நம் நலனைக் கருதிச்சொல்லும் வார்த்தைகள் என்று எடுத்துக்கொள்ள முடியாது. மறைந்துகிடக்கும் நம் ஆற்றல் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். பொறாமையாலும் இருக்கலாம்.
ஒரு காரியத்தை ஒன்பது முறை செய்ய முயன்று, பத்தாவது முறை வெற்றி அடைபவர் என்ன சொல்வார், தெரியுமா? `ஒன்பது முறை இதை எப்படியெல்லாம் செய்யக்கூடாது என்பதைக் கற்றேன்!’

இவர் தன் ஆற்றலில் நம்பிக்கை வைத்திருப்பவர். ஒருவர் தன்னைத்தானே நம்பாவிட்டால், எடுத்த காரியத்தை எப்படி முடிக்க முடியும்?

தோல்வியால், அல்லது பிறரது கேலியால், ஒருவர் சிறிது காலம் மனம் தளரலாம். ஆனால், அந்த தோல்வியையே எண்ணி மறுகாது, திரும்பத் திரும்ப அதே காரியத்தை வெவ்வேறு விதங்களில் செய்வது நன்மையில் முடியும். இப்படித்தான் பல கண்டுபிடிப்புகள் உருவாகி இருக்கின்றன. விஞ்ஞானம் மட்டுமில்லை, இசை, சினிமா, என்று பல துறைகளிலும் இப்படித்தான் மாறுதல்கள் ஏற்படுகின்றன. சமையலில்கூட.
சமையலிலா!

சாதாரணமாக, உருளைக்கிழங்கின் தோலைச் சீவிவிட்டுத்தான் சமையலுக்குப் பயன்படுத்துவார்கள். இல்லாவிட்டால். வேகவிட்டு, தோலை உரித்து.. என, நிறைய நேரத்தைச் செலவழிக்க வேண்டும்.

எனக்குக் கண்புரைச் சிகிச்சை நடந்தபின், ஒரு மாதமேனும் அனலில் நிற்கக்கூடாது என்று எச்சரித்திருந்தார்கள்.

ஒரு நாள் சமைத்துத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட, தோலைச் சீவாது, சற்றே பெரிய துண்டங்களாக நறுக்கி, அரிந்த வெங்காயம், கறிவேப்பிலையுடன், பொரியலுக்கு வேண்டிய உப்பு, பெருங்காயம், மிளகாய்த்தூளைச் சேர்த்து, கடிகாரத்தில் அலாரம் வைத்து இருபது நிமிடங்கள் கழித்து நிறுத்திவிட்டேன். Pressure Pan -ல் குறைந்த சூட்டில் சமைத்தேன். அப்போதுதான் அடுப்படியில் நின்று கிளறிக்கொண்டே இருக்க வேண்டாம். தோலுடன் சமைப்பதால், வாயுத்தொல்லை கிடையாது.

`இனி எப்போதும் இப்படித்தான் ஆக்கவேண்டும்!’ என்று நினைக்கும் அளவுக்கு பதம் நன்றாக அமைந்திருந்தது. இன்று அதன் பெயர், `Accidental Potato Curry!” — தற்செயலாக நிகழ்ந்த நற்காரியம்.

எளிதில் உணர்ச்சிவசப்படுவது

சிலரைப் பார்த்தால், இவர்கள் மட்டும் பெரும்பாலும் அமைதியாக இருப்பது எப்படி, இவர்களுக்கு உணர்ச்சிகளே கிடையாதா என்ற ஆச்சரியமெல்லாம் எழும்.

ஒருவர் தன்னைத் திட்டினால், பதிலுக்குத் தானும் அடித்தோ, திட்டியோ ஆகவேண்டும் என்ற சினிமாத்தனமான கொள்கை இவர்களுக்குக் கிடையாது. அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட்டால், தெளிவான சிந்தனை எழாது என்பதால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரிந்தவர்கள் இவர்கள்.

உணர்ச்சிவசப்பட்டு நல்ல எதிர்காலத்தை இழந்தவர்கள் பலர்.

கதை

இளம்பெண்ணான தேவிகாவுக்கு சிபாரிசால் ஒரு நிறுவனத்தில் உத்தியோகம் கிடைத்தது.

போனஸ் அறிவிக்கப்பட்டபோது, மேலதிகாரியிடம் போய், தன்னை ஏமாற்றிவிட்டதாக அழுதாள். தான் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவள் என்பதை மறந்து சண்டை பிடித்தாள். காரணம்: அது எப்படி மேலாளருக்கு அவளைவிட அதிகமான தொகை அளிக்கலாம்?

சம்பளத்துடன், தேவிகாவின் உத்தியோக உயர்வுக்கான மேற்படிப்புச் செலவையும் அந்த நிர்வாகமே ஏற்றுக்கொண்டிருப்பது சுட்டிக் காட்டப்பட்டது.

உணர்ச்சிக் கொந்தளிப்பில், எந்த சமாதானத்தையும் ஏற்க இயலவில்லை அவளால். ஆத்திரத்துடன் வேலையை ராஜிநாமா செய்தாள். இப்போது படிப்பும் அரைகுறையாக நின்றுபோயிற்று. இதனால் யாருக்கு நஷ்டம்?

இதனால், எப்போதும் அமைதியாக இருப்பதாகக் காட்டிக் கொள்பவர்கள் சரியானவர்கள் என்றில்லை. இவர்கள் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை கொண்டவர்கள். அதனாலேயே, எந்த விஷயத்திலும் ஆழம் பாராது ஈடுபட்டு மாட்டிக்கொள்வதும் உண்டு.

மனோதிடம் வளர..

பிறர் செய்ய அஞ்சும் (நல்ல) காரியங்களைச் செய்யப் பழகிக்கொள்வது மனோதிடத்தை வளர்க்கும்.

ஒரு வேளை, வெற்றி கிட்டாமல் போகலாம். அதனால் என்ன! செய்ய காரியங்களா இல்லை?

ஒரு காரியத்தைச் செய்துவிட்டு, உடனுக்குடனே பலனை எதிர்பார்ப்பது சமூகத்தின் அடித்தளத்திலிருப்பவர்களின் தன்மை என்கிறார்கள் சமூக இயலில்.

கதை

எங்கள் உறவினர் வீட்டில் வேலை பார்த்த பெண்மணியின் பதினைந்து வயது மகள் அவ்வப்போது துணைக்கு வருவாள். சிறுமிக்கு எழுதப் படிக்கச் சொல்லிக்கொடுத்த முயற்சி பயனற்றுப்போனது. அவளைப் பொறுத்தமட்டில், வீட்டு வேலை செய்தால், மாதக்கடைசியில் பணம் கிடைக்கும். பிடித்ததாக ஏதாவது வாங்கிக்கொள்ளலாம். படிப்பதால் என்ன லாபம்?

உடலை வருத்தி நாளெல்லாம் சம்பாதித்ததை அன்றிரவே புதிய திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்ப்பதற்காகவோ, மதுபோதைக்காகவோ செலவிடுபவர்களும் இந்த ரகம்தான்.

ஊக்கத்தைக் கைவிடாது பல வருடங்கள் கல்வி கற்றால், அல்லது ஏதாவது தொழிலைக் கற்றால் நல்ல வேலையும் அதற்குரிய ஊதியமும் கிடைக்காது போகாது. ஆனால் அத்தகைய தூரநோக்குப்பார்வை எல்லாருக்கும் இருப்பதில்லை.

சில பிரபல நடிகர்கள் (நடிகைகள்) ஆரம்ப காலத்தில் நடித்த படங்களைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. நடிப்பு அவ்வளவு சுமார்.

ஆனால், `இதுதான் நான் பயணிக்கப்போகும் பாதை!’ என்று முடிவெடுத்துக்கொண்டு, தேர்ந்தவர்களிடம் கற்று, விடாமுயற்சியுடன் சிறுகச் சிறுக முன்னேறி இருக்கிறார்கள்.
இவர்கள் உடனடியாக ஆதாயம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து, அதன்படி நடக்கவில்லை. ஏளனமோ, தோல்வியோ, எதையும் கண்டு ஒரேயடியாக அயர்ந்துவிடவுமில்லை. தம் இலக்கினையே குறி வைத்து எவ்வித சவாலையும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.

எத்துறையை எடுத்துக்கொண்டாலும், சவாலைச் சமாளிக்கும் நெஞ்சுறுதி உள்ளவர்கள்தாம் இறுதியில் மனதில் நிற்கிறார்கள்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *