தேமொழி
அவசரக் குறிப்பொன்று எழுதி
கொடுக்கிறேன் அதைத் தோழிக்கு
படித்தபின் அவள் சொன்னது
சொன்னதே இல்லையே இதுவரை!!!
குறுங்கவிதையும் எழுதுவாயா நீ?
படம் உதவி:
http://southyourmouth.blogspot.com/2012/08/lunchbox-notes.html
தேமொழி
அவசரக் குறிப்பொன்று எழுதி
கொடுக்கிறேன் அதைத் தோழிக்கு
படித்தபின் அவள் சொன்னது
சொன்னதே இல்லையே இதுவரை!!!
குறுங்கவிதையும் எழுதுவாயா நீ?
படம் உதவி:
http://southyourmouth.blogspot.com/2012/08/lunchbox-notes.html
காயத்ரி பாலசுப்பிரமணியன்
மேஷம்: பொது வாழ்வில் இருப்போர்கள், வீண் வதந்திகளை நம்பி செயலில் இறங்காமலிருந்தால், உங்களின் உயர்வு சீராக இருக்கும். கலைஞர்களுக்கு: உங்கள் திறமைகளை மிளிரச் செய்யும் வாய்ப்புக்கள் பல தேடி வரும். அதனை நல்ல முறையில் பயன்படுத்துவது உங்கள் கையில்தான் உள்ளது!
மாணவர்கள் புதிய இடங்களில் பழக்கமில்லாதவர்களிடம் அதிகம் ஒட்டி உறவாட வேண்டாம். பெண்கள் குடும்ப விஷயங்களில் கோப தாபத்தை கட்டுக்குள் வைத்தால், எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விடலாம்! சிறிய சச்சரவுகளை பெரிதாக்காதவாறு சமாதானமாக நடந்துகொள்ளுங்கள். அலுவலகச்சூழலில் இருக்கும் இறுக்கமும் தானே விலகி விடும். வியாபாரிகள் எதிலும் நேர்மைக்கு இடம் கொடுக்க, வெற்றியோடு நல்மதிப்பும் உங்களுக்கே!
ரிஷபம்: வியாபார வாய்ப்புக்களில், சில சந்தர்ப்பங்களில், கைக்கெட்டிய பொருள் வாய்க்கெட்டவில்லை என்ற நிலை நேரிடும். எனினும் விடாமுயற்சியால் விரும்பியதை அடைந்து விடுவீர்கள். பெண்கள் உழைப்பிற்கு நேரம் ஒதுக்குவதைப் போல, ஆரோக்கியத்திற்கும் நேரம் ஒதுக்கினால், மருத்துவச்செலவுகள் கணிசமாகக் குறையும். வரவும் செலவும் சமமாக இருப்பதால், சேமிப்பு என்பது பெயரளவில்தான் இருக்கும். தம்பதிகள் மன வேற்றுமைகள் நீங்க மனம் விட்டுப் பேசுங்கள். குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சி மலர்ந்து விடும். பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும், அதிக ஆசை யினால் அதிக பணம் முடங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஞாபக மறதியால் வரும் சிக்கல்களைத் தவிர்க்க, எதையும் உடனுக்குடன் குறித்து வைப்பது நல்லது.
மிதுனம்: பொருட்களை வாங்கி விற்பவர்கள் தேடி வரும் வாய்ப்புகளை வியாபாரமாக, உங்கள் வாய்ச் சொல்லால் மாற்றி விடுவீர்கள். உங்கள் தொழில் தொடர்பான பிரச்சனைகளை வளர விடாமல் உடனுக்குடன் சுமூகமான முறையில் முடித்துக் கொண்டால், தேக்க நிலை உருவாகாமலிருக்கும். மாணவர்கள் எந்தச் சூழலிலும், தவறான திசைப் பக்கம் திரும்பாமலிருங்கள்! வாழ்க்கை வசந்தமாகும். பண விவகாரங்களில் பிறர்க்கு சிபாரிசு செய்யும் முன் அவர்களின் பின்புலம் பற்றி அறிந்து செயல்பட்டால், சட்டச்சிக்கல்களுக்கு இடமிராது. நெருங்கிய நண்பர்களுடன் வாக்குவாதத்தில் இறங்குவதைத் தவிர்த்துவிட்டால், நட்பின் இழை விலகாமலிருக்கும்.
கடகம்: பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவைகள் உங்களின் விருப்பப்படியே நடைபெறும் . வீண் செலவுகளைக் குறைப்பதில் சற்று கவனமாக இருங்கள். சேமிப்பதற்கான வழி வகைகள் மேலும் அதிகரிக்கும். வியாபாரிகளும், தொழிலதிபர்களும், பொருளாதாரத்தில் அகலக் கால வைக்காமல், கட்டுக் கோப்பாய் செயல்பட்டால், லாபத்தின் வரவில் குறைவிராது. பணிபுரியும் இடங்களில் முரண்பட்ட கருத்துள்ளவர்களுடன் மோதுதலைத் தவிர்க்கவும். பெண்கள் கணவன் வழி உறவினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முதலிடம் கொடுத்து விடுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்!
சிம்மம்: பெண்கள் எந்த நல்ல விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனடியாக செயலில் இறங்குங்கள். கிடைக்கும் பலனும், மகிழ்ச்சியும் இரட்டிப்பாகும். நண்பர்களின் சந்தோஷத்திற்காக அதிக பணம் செலவழித்து சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! வியாபார விரிவாக்க விவகாரங்களில், பங்குதாரர்களுடன் கலந்து பேசி செயல்படுதல் நல்லது. நீண்ட நாட்களாக பிரிந்த உறவுகள் மீண்டும் குடும்பத்தில் இணைவதால், மகிழ்ச்சிப்பூ மீண்டும் மலர்ந்து விடும். மாணவர்கள் தேவையில்லாமல் அதிக நேரம் கண் விழித்தலைக் குறைத்துக் கொண்டால், ஆரோக்கியம் சீராகத் திகழும்.
கன்னி: பிறரிடம் உள்ள குறைகளை விடுத்து, நிறைகளை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள். நேசம் பாராட்டி உதவுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும். மாணவர்கள் வாகனம் ஓட்டும் போது சிந்தனையை சிதற விடாமலிருப்பது நல்லது. வரும் வாய்ப்புகளை தட்டிப் பறிப்பவரிடம் கலைஞர்கள் உஷாராக இருந்தால், உங்கள் திறமைகளை பிறர் எளிதில் கண்டு கொள்ள முடியும். அலுவலக அளவில் பொதுப் பிரச்னைகளுக்காக, நண்பர்கள் சிலரின் நட்பை முறித்துக் கொள்ள நேரிடும். முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்களுக்கு எதிரிகளின் தொல்லை சற்று அதிகரிக்கலாம். எனவே கவனமாகச் செயல்படுவது அவசியம்.
துலாம்: நிலுவையில் உள்ள பாக்கியெல்லாம் வசூலாகி விடுவதால், புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் இறங்குவீர்கள். பொதுவாழ்வில் இயங்கிக் கொண்டிருப்பவர்கள் தம்முடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால், உங்கள் பணிகளில் எவரும் பழுது சொல்ல முடியாது. மாணவர்கள் புதிய சூழலில் வீண் வம்பு தும்புக்கு வேலை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகிவருவது நல்லது. வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெற, சில நெருக்கடிகளை தாண்டிச் செல்ல வேண்டியிருக்கும் .எனவே நிதானமாக செயல்படுவது அவசியம்.
விருச்சிகம்: இயன்ற வரை வீண் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். வரவுக்குள் செலவுகள் அடங்கிவிடும். காரணமற்ற கோபம் மற்றும் எரிச்சலால் பெண்களுக்கு வேலைகள் தேங்கும் நிலை உருவாகலாம். போட்டிகள் மூலம் உங்கள் திறமை வெளிப்படும்வரை கலைஞர்கள் பொறுமையாய் இருப்பது நல்லது. வியாபாரிகள் ஆரோக்யமான போட்டி மூலம் வாடிக்கையாளர்களின் வரவைத் தக்க வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமாகும். முதியவர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். சுறுசுறுப்புடன் திகழலாம். சொத்து விஷயங்களில் உங்களின் நேரடி கவனம் தேவை.
தனுசு: புதுப்புது யுக்திகளை பயன்படுத்துவதன் மூலம், கூட்டுத் தொழிலில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். பொருளாதாரச் சிரமங்கள் குறைவதால், பெண்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். இல்லத்தில்,கோபத்தைக் குறையுங்கள். பிரச்சனைகளின் தாக்கமும் தானே குறைந்து விடும். சக மாணவர்களின் மனோபாவத்திற்கேற்றவாறு , உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொண்டால், கல்வி தொடர்பான வேலைகள் கடகடவென்று முடிந்து விடும். கடும் பணியில் உள்ளவர்கள் உழைப்பில் சலிப்பு சேராமல், பம்பரமாய்ச் சுழல, சத்தான உணவு வகைகள் சாப்பிடுவது நல்லது. இது நாள் வரை எட்டியும், தட்டியும் சென்ற வாய்ப்புகள் மீண்டும் கலைஞர்களை நாடி வரும்.
மகரம்: வாழ்க்கைத் துணையுடன் இணக்கமாக இருக்கும் தம்பதிகளுக்கு வாழ்வு இனிக்கும். மாணவர்கள் கல்லூரி விழா, போட்டிகள் ஆகியவற்றில் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள்.சில நேரங்களில் உடன் பணி புரிபவர் ஏட்டிக்குப் போட்டியாக செயல்படுவர். முக்கிய பொறுப்புக்களை ஏற்றுள்ளவர்கள் பதவிக்குரிய அதிகாரம் வரம்பு மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நினைத்ததைவிட நல்ல பலன் நிறையவே கிடைக்கும். வியாபாரிகள் நிர்ப்பந்தத்தின் பேரில் சலுகைகளை வலுக்கட்டாயமாய் பெற முயற்சிப்பவர்களோடு கூட்டு முயற்சியில் இறங்க வேண்டாம்.சிறு உடல் உபாதைகளால், பெண்கள் அவதிப்பட நேரிடும்.
கும்பம்: பெண்கள் பணச் செலவில் கட்டுப்பாடாய் இருந்தால்,கடன்களை கட்டுக்குள் வைத்துவிடலாம். பங்குச் சந்தை வியாபாரத்தில் இருக்கும் ஏற்றமும், இறக்கத்திற்கேற்ப வியாபாரிகள் செயல்படுவது அவசியம். வேலையில் இருப்போர்கள், பல சமயம் நேரம் காலம் பாராமல் உழைக்க வேண்டியிருக்கும் .சிலர் சொந்த வீடு வாங்குவதற்காக எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் சில இழப்புக்கள் சில லாபங்கள் இரண்டையும் பெறுவர். அன்புக் கட்டளையால், நண்பர்களுக்கு சில உதவிகளை மகிழ்வுடன் செய்து கொடுப்பீர்கள்.
மீனம்: வியாபாரிகளுக்கு முன்பிருந்த சுணக்கமான நிலை என்பது மறைந்து இணக்கமான சூழல் நிலவும். பெண்கள் வேலைப்பளு ஆரோக்கியத்தோடு மோதாமல் பார்த்துக் கொள்ளவும். மாணவர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். புதிதாக வேலையில் சேர்ந்திருப்பவர்கள் பேச்சில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், பணியில் கவனம் செலுத்தினால், பாராட்டு பல வந்து சேரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் நடவடிக்கைகளில் தென்படும் மாறுதல்களை இதமாகச் சுட்டிக் காட்டுங்கள். உங்களை புரிந்து கொள்வார்கள்.
பெருவை பார்த்தசாரதி ::
இறை வழிபாட்டு முறைகளை நமது முன்னோர்கள் மிக நேர்த்தியாக வகைப்படுத்தி, அதை எவ்வாறேல்லாம் பின்பற்ற வேண்டும் என்று பின் வரும் சந்ததியினருக்கு மிகத் தெளிவாக வழங்கி இருக்கிறார்கள். இவ்வழிபாட்டு முறைகளை எல்லாம் மஹான்கள், ரிஷிகள், ஆசார்ய புருஷர்கள், குருமார்கள் போன்றோர்கள் அவ்வப்போது நமக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இவ்விதம் புனிதமான ஆலயங்களுக்குச் செல்லுதல், தீர்த்த யாத்திரை, பாதயாத்திரை, நாம சங்கீர்த்தனம், பஜனை செய்தல், அனுதினமும் வீட்டிலேயே பெருமானை ஆராதனம் செய்தல் போன்ற பல வழிகளைப் பின்பற்றும் அன்பர்கள் இருக்கிறார்கள். நமது வசதிக்காக நாம் பின்பற்றும் வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொள்ளாமல் முறைப்படி பின்பற்றுவதே மேல் என்றும், மாறாக வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொண்டால் புனிதத்தலங்களின் ‘சாந்நித்தியம்’ மாசுபடத்தொடங்கிவிடும் என்பதையும் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே எடுத்துரைத்திருக்கிறார்கள். இறை வழிபாட்டுக்கென்று இடமும், தகுந்த நேரமும் இருக்கிறது, ‘ஏதோ நமக்கு நேரம் கிடைக்கிறது’ என்று நினைத்து ஆலயங்களுக்கும், பூஜை போன்ற சுபகாரியங்களுக்கும் நாம் நினைத்த நேரத்தில் செல்ல முடியாது, அதற்கும் பகவானின் அருள் வேண்டும் என்பதால்தான், “ஏழுமலையான் அழைத்தால் மட்டுமே திருமலைக்குச் செல்ல முடியும்” என்பதைச் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக இறை சிந்தனையும் நம்மோடு கைகோர்க்கவேண்டும். ‘பசி’ எடுக்கிறது என்று யாரும் நமக்குச் சொல்வதில்லை, அதுபோல் ‘தாகம்’ எடுக்கிறது தண்ணீர் குடி என்று யாரும் தூண்டுவதில்லை. பசியும், தாகமும் இயற்கையாக தோன்றுவதுபோல், ‘இறை சிந்தனை’ என்பதும் இயற்கையாகவே எழவேண்டுமாம். நம்மை அறியாமலேயே நமது உடம்பும் மனமும் மாசு படிந்து இருக்கலாம். ஆதலால் தான் நாம் குளித்து முடித்து, மடித்துணி தரித்த சமயத்தில் மாத்திரம் இறைச்சிந்தனையோடு ஆலயத்துக்குச் செல்கிறோம். தருமமிகு பாரதத்தில் எண்ணற்ற ஆலயங்கள் இருக்கின்ற போதிலும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்துவிக்கப் பட்ட வைணவ திவ்ய ஆலயங்களுக்கு (108) செல்வதையும், இதேபோல ‘அப்பர்’, ‘சுந்தரர்’, ‘மாணிக்கவாசகர்’ போன்ற நாயன்மார்களால் பாடல்பெற்ற சைவத்தலங்களுக்கு (274) யாத்திரை செல்லுதலை மட்டுமே ஒரு கடமையாகக் கொண்டுள்ள பக்தர்களையும் நம்மிடையே காணலாம். இப்படிக் குறிப்பிட்ட தலம், குறிப்பிட்ட நேரம் என்பது மனிதன் செய்கின்ற எல்லா நல்ல காரியங்களோடும் இணைந்து விடுவது மிகவும் அவசியமாகிறது, அது மாறும் போது தவறாகிறது. இப்படிப்பட்ட நல்ல நேரமும், சந்தர்ப்பமும் கைகூடும் சமயத்தில்தான் மனமொத்த கருத்துடைய நண்பர்கள் ஒருங்கே இணைந்து, மார்கழித் திங்களில், ‘ஓங்கி உலகளந்த உத்தமனின் பேர் பாடிக்கொண்டு’ (திருப்பாவையின் மூன்றாவது பாசுரம்) பாதயாத்திரையை பதினெட்டு நண்பர்களுடன் சென்னை மகாலிங்கபுரத்திலிருந்து பிரசன்னவேங்கடேஷ் என்பவரது வழிகாட்டுதலுடன் தொடங்கினோம். நான்கு நாட்கள் பாதயாத்திரை சென்ற அனுபவத்தில், பல ஆலயங்களைக் காண முடிந்த போதிலும், மிகச்சிறப்பாக அமைந்த ஒரு சில விஷேசமான ஆலயங்களின் சிறப்பை மட்டுமே இங்கே மிகச்சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். என்னதான் பத்திரிகையிலும், மாத இதழ்களிலும் இத்தலங்களைப் பற்றி அனேகர் அறிந்திருந்தாலும், புதிதாக பாதயாத்திரை தொடங்கும் அன்பர்களுக்கு நிச்சயமாக உதவும் என்பதால், ஆலய பட்டர்களிடமிருந்தும், பக்தர்களிடமிருந்தும் நேரடியாக பெறப்பட்ட இத்தகவல்களை உங்கள் முன் வைக்கிறேன். இந்த அரிய ஆலயத் தகவல்கள், நம்மை ஆச்சரியத்துக்குள் ஆழ்த்துகின்றன.முறைகளை நமது முன்னோர்கள் மிக நேர்த்தியாக வகைப்படுத்தி, அதை எவ்வாறேல்லாம்
பாற்கடலைக் கடைந்து, அமுதத்தை எடுக்கும்போது ஆலகால விஷத்தை ஈஸ்வரன் உண்டதாக நாம் படித்திருக்கிறோம். அந்த விஷத்தை அப்படியே விழுங்கி விட்டதால் சர்வ லோகமும் அழியும் என்பதாலும், விழுங்கியதை உமிழ்ந்து விட்டால் அதைவிட ஆபத்து என்பதாலும் பார்வதி தேவி, ஈஸ்வரனை தன் மடியில் கிடத்தி, அவ்விஷத்தை கண்டத்தில்(கழுத்தில்) கைவைத்து அதே இடத்தில் நிறுத்திவிட்டார். ஆலகால விஷத்தைத் தடுத்து சர்வ லோகத்தையும் காப்பாற்றி அமுதத்ததயும் வழங்கியதால் இறைவி “அமுதாம்பிகை” என்றும், இறைவன் “பள்ளி கொண்ட பரமன்” என்றும் அழைக்கப் படும் ‘சுருட்டப் பள்ளி என்ற இடத்தில் முதல் நாள் இரவு தங்கினோம். சயனத் திருக்கோலத்தில் ஈஸ்வரன், பார்வதிதேவியின் மடியில் பள்ளிகொண்டிருக்கும் ஒரே ஆலயம் என்று சொல்லும்படியாக சுருட்டப்பள்ளி திகழ்கிறது. இங்கே வைணவ ஆலயத்தைப் போல், பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, துளசி வழங்குவது ஆலய சிறப்பம்சத்தில் ஒன்று. குடும்ப சமேதரராக தட்சிஷினாமூர்த்தியை இவ்வாலயத்தில் மட்டுமே காணமுடியும்.
அடுத்து வருவது நாகலாபுரம் ‘ஸ்ரீவேதநாராணப் பெருமாள்’ ஆலயம். திருவரங்கத்தில் பெருமாள் தெற்கு நோக்கி அருள்பாலிப்பதுபோல், இங்கே வித்தியாசமாக அனைத்து ஆலயங்களிலிருந்தும் மாறுபட்டு மேற்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வருடத்தில் ஒரு நாள் சூரியாஸ்தமனத்தின் போது, ஒரு குறிப்பிட்ட நாழிகையில் சூரியநாராயணனின் சூரியக்கிரணங்கள் வேதநாராயணப் பெருமானின் சன்னிதியில் பகவானின் பாதம் தொடங்கி, நாபி, சிரசு என்று மூன்று நாட்கள் தொடர்ந்து விழுந்து கொண்டே இருப்பது அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் சூரியபூஜை என்று நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டு தெப்போற்சவமும் நடைபெறுமாம். பத்து அவதாரங்களில் முதலாவதாரத்தில் “மச்சாவதாரம்” என்கிற மீன் வடிவத்தில் ‘மூலவர்’ தோற்றமளிக்கிறார். கோவிலின் சிற்பங்கள் அனைத்திலும் மச்சாவதாரத்தின் மகிமையைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
மூன்றாவதாக நாராயண வனத்தில் எழுந்தருளியிருக்கும் “கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள்” ஆலயம். ஆலயத்தின் தோற்றமே அனனவரையும் பிரமிக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. பகவான் ஸ்ரீனிவாசனுக்கும், பத்மத்தில் (தாமரை மலர்) அமர்ந்திருக்கும் தேவி பத்மாவதிக்கும் திருமணம் நடந்த இடம் என்று தலவரலாறு சொல்கிறது. திருமணத்தின் போது பங்கு கொண்ட அனைவருக்கும் ‘மஞ்சள் பிரசாதம்’ வழங்குவதற்காக சுமார் ஒரு டன் எடைகொண்ட மஞ்சள் தயாரிக்கும் மிகப் பெரிய பாறைக்கல்லால் ஆன இயந்திரம் ஒன்று தாயாரின் சந்நிதிக்கு முன்பு வைக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறது. எம்பெருமான் வேட்டைக்கு வரும்போது இச்சம்பவங்கள் நிகழ்ந்ததால், எம்பெருமானின் விழிகள் திறந்த நிலையிலும், திருக்கரத்தில் உடைவாளுடன், திருஒட்டியானத்தில் பத்து அவதாரங்களின் தோற்றங்களும் இடம்பெற்றிருப்பது அபூர்வம். யாத்திரையின் இடையில் ‘ராமகிரி’ என்றொடு தலத்தைப் பற்றிய தகவலை அறிந்தோம், பிரதான சாலையிலிருந்து சற்று தொலைவில் இருப்பதாலும், நேரக்குறைவின்மையாலும் அங்கு செல்லமுடியவில்லை.
நீண்ட தூரம் நடந்து ஒரு இடத்தைக் கடப்பது, அவ்வளவு எளிதல்ல என்பதை பாதயாத்திரையின் போது தோன்றும் ‘உடல் உபாதைகள்’ மூலம் அறியலாம். இதனைக் கருத்தில் கொள்ளும்போது, இங்கே திருமங்கையாழ்வார் பாசுரம் ஒன்று நினைவுக்கு வருகிறது. திருமங்கையாழ்வார் தனது பெரியதிருமொழியில் “நாராயணா” என்னும் திருநாமத்தை அனுசந்தித்துக் கொண்டிருக்கும் அடியார்களுக்கு, அவர்கள் படும் துன்பங்களெல்லாம் கதிரவனைக் கண்ட பனித்துளிபோல் மறைந்து விடும் என்கிறார். மகத்தான இச்சொல், சகலவிதமான செல்வத்தையும், தாய் தன் மகவுக்குச் செய்யும் நலனைவிடவும், தீவினைகளைப் போக்கி பரமபதத்தையும் கூட அளித்துவிடும் என்பதை பின்வரும் பாடல் மூலம் விளக்குகிறார். அதனால்தான் ‘நாராயணா’ என்ற சொல்லை “நலம் தரும் சொல்” என்கிறார்.
“குலம்தரும் செல்வந் தந்திடுமடியார் படுதுய ராயின வெல்லாம்
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும் பருளும் அருளொடு பெருநிலமளிக்கும்
வலம்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன் ‘நாராயணா’ வென்னும் நாமம்”
அடியார்கள் அனைவரும் மாஹாலிங்கபுரத்தில் ஒன்றுகூடித் தொடங்கிய பாதயாத்திரை, சூளைமேடு, அண்ணாநகர், வில்லிவாக்கம், கொளத்தூர் வழியாக ரெட் ஹில்ஸ், பிறகு கண்ணணோடை பாலம், மதுரவாயல், சூளைமேனி, ஊத்துக்கோட்டை, சுருட்டப்பள்ளி, நாகலாபுரம், பிச்சாட்டூர், நாராயணவனம், புத்தூர், ‘புடி’ ரயில் நிலையம், திருச்சானூர் வழியாக முடிவில் திருமலை சென்றடைந்து ஏழுமலையானைத் தரிசித்து சென்னை வந்தடைந்தோம்.
“திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒர் திருப்பம் நேருமடா” என்பது போல், பாத யாத்திரை முடித்து சென்னை திரும்பிய அன்று (20-12-12)எனக்கோர் மகிழ்ச்சியான செய்தி, வல்லமை குழுவினர் மீண்டும் ஓர் முறை தொடர் கட்டுரைக்கு “வல்லமை விருது” வழங்கி சிறப்பித்திருந்தார்கள்.
(1819-1892)
(புல்லின்இலைகள் -1)
அவனுக்கு ஒருபாடல்
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
வால்ட்விட்மன் வாழ்க்கை வரலாறு:
அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே அவர் சிறு வயதிலேயே ஓர் அச்சகத்தில் பணிசெய்ய வேண்டிதாயிற்று. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நாளிதழ் களுக்கு எழுதியும், அவற்றுக்குப் பிறகு தொகுக்கும் ஆசிரியராகவும் பணி யாற்றினார். அவரது 17 வயதில் பள்ளி ஆசிரியராகச் சில காலம் வேலை செய்தார். 27 ஆவது வயதில் புரூக்லின் தின இதழின் ஆசிரியரானார். புரட்சி கரமான அவரது கவிதைப் படைப்புகள் மிகவும் தனித்துவ முறையில் பாலுறவு உட்பட ஆவேச உணர்ச்சியில் எழுதப் பட்டவை. அவர் அமெரிக்கக் குடியாட்சியை பேரளவு மதிப்புடன் கொண்டாடியவர். படைப்புகளில் குறிப்பாக அவர் முதலில் வெளியிட்ட சிறிய கவிதைத் தொகுப்பு “புல்லின் இலைகள்” [Leaves of Grass] அவராலே பன்முறைத் திருத்தமாகிப் பின்னால் விரிவு செய்யப் பட்டது.
வால்ட் விட்மன் தனது கவிதைகளில் ஒளிமறைவின்றி எதையும் வெளிப் படையாக வெளியிட்டதால், அவரது படைப்புகள் ஆபாசமானவை, வெறுக்கத் தக்கவை என்று முதலில் பலரால் ஒதுக்கப் பட்டன ! அவரது கவிதைகள் அனைத்தும் எதுகை, மோனைத் தளை அசையின்றி இலக்கண விதிக்கு அப்பாற்பட்ட வசன நடைக் கவிதைகளாய்[Free Verse] எழுதப் பட்டவை. அவரது கவிதைகளை உயர்வாகப் பாராட்டி யவருள் ஒருவர் கவிஞர் எமர்ஸன் [Ralph Waldo Emerson]. 1855 இல் 12 பாடல்களுடன் முதற்பதிப்பு “புல்லின் இலைகள்” புத்தகத்தை வெளியிட்டார். பின்னால் அது 300 கவிதைகளுடன் விரிவானது. அதற்கு ஆரம்பத்தில் அமெரிக்கர் ஆதரவு கிடைக்க வில்லை.
1848 இல் வால்ட் விட்மன் நியூயார்க்கிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் சென்றார். அவர் அங்கேதான் முதன் முதலில் அடிமைகள் நடுத்தெருவில் ஏலம் விடப்படும் அருவருப்பு வாணிபத்தையும்,அடிமைக் கறுப்பர் படும் கொடுமைகளையும் கண்டு மனவேதனை அடைந்தார். ஆர்வமாய்ப் படிக்கும் வேட்கை மிகுந்த வால்ட் விட்மன் 1848 இல் தனது சொந்தச் செய்தித்தாள் “உரிமைப் பூமி“ [Free Soil] என்பதை வெளியிட்டு அதற்கு அதிபதி ஆனார். மின்சார உடல் பற்றி என் பாடல் [I Sing the Body Electric] & என்னைப் பற்றிய எனது பாடல்[Song of Myself] ஆகிய இரண்டு நூல்களும் மனித உடம்பைப் பற்றியும், உடல் நலம்,பாலுறவு பற்றியும் எழுதப் பட்டவை.
தென்னக மாநிலங்களில் கொடுமைப் படுத்தப்படும் அடிமைகளை விடுவிக்க ஆப்ரஹான் லிங்கன் கடுமை யான போர் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. அதுவே சகிக்க முடியாத “சிவில் போர்” [Civil War] எனப்படும் உள்நாட்டுப் போரானது. அரசாங்க ஐக்கியப் படைக்கும், “கூட்டு மாநிலங்கள்” என்னும் கன்ஃபெடரேஷன் படைக்கும் யுத்தம் உண்டானது. இறுதியில் இருபுறமும் சமப்போர் புரிந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 30,000 மேற்பட்டது. அப்போது ஐக்கியப் படைகளுடன் போர் புரிந்த வால்ட் விட்மன் சகோதரன் ஜார்ஜ் விட்மன் காய முற்றதால் அவரைக் குணப்படுத்த வால்டயர் வாஷிங்டன். D.C. வர வேண்டிய தாயிற்று. அவர் சுயப்பணி யாளராய்ச் சேர்ந்து காயமுற்ற சுமார் 100,000 நபர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது. வாஷிங்டன் D.C., மருத்துவ மனைக்கு பணிபுரிய வால்ட் விட்மன் 600 தடவை வந்ததாக அறியப் படுகிறது.
சிவில் போர் வெற்றியில் முடிந்து, ஆப்ரஹாம் லிங்கன் இரண்டாம் முறையாக நின்று, ஜனாதிபதி தேர்வு வெற்றி பெற்ற விழாவில் வால்ட் விட்மன் கலந்து கொண்டவர் என்று அறியப் படுகிறது. போர் முடிந்து சட்ட மூலமாக அடிமை வைப்பு முறை அமெரிக்காவில் நீக்கப் பட்டது. போர் நின்ற ஐந்தாம் நாள், அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் பலியானார். லிங்கன் சுடப்பட்டு மரித்ததைப் பற்றி வால்டர் விட்மன் எழுதிய இரங்கற்பா “ஓ காப்டன், என் காப்டன்” படிப்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவது. 19 ஆம் நூற்றாண்டில் கவிதைப் படைப்புகள் எழுதிய வால்ட் விட்மனுக்கு 20 ஆம் நூற்றாண்டில்தான் அவரது படைப்புகளின் உன்னதம் வெளியாகிப் பரவியது. அவருடைய படைப்புகளின் செல்வாக்கு,மேன்மை புகழ் பெற்ற கவிஞர்கள் பாப்லோ நெரூடா, அல்லன் கின்ஸ்பெர்க், [அமெரிக்கா] ஃபெர்னான்டோ பெஸ்ஸோவா [போர்ச்சுகல்] ஆகியோர் ஆக்கங்களில் தெரிகிறது. வால்ட் விட்மன் கவிதைப் படைப்புகள் சில : அடிமை ஒழிப்புப் போர் பற்றி “டிரம் டாப்ஸ்”, “பீட் பீட் டிரம்ஸ்”, “இரங்கற்பா ஆப்ரஹாம் லிங்கனுக்கு”, குடியாட்சித் திறப்புகள்,” “இந்தியா நோக்கிப் பாதை.” [Drum-Taps, Beat ! Beat ! Drums !” “When Lilacs Last in the Dooryard Boom’d”, Democratic Vistas,” “A Passage to India.”].
1873 இல் மூளை அடிப்பில் [Stroke] அவர் பாதிக்கப் பட்டு ஒரு பகுதி உடலுறுப்புகள் பயன்படுத்த இயலாது போயின. அதோடு ஒன்பது ஆண்டுகள் காலந் தள்ளி 1892இல் அமெரிக்கக் கவிதை மேதை வால்ட் விட்மன் தனது 73 ஆம் வயதில் காலமானார்.
+++++++++++++++++++++++++++++
அவனுக்கு ஒரு பாடல்
[வால்ட் விட்மன்]
அவனுக்காக நான் பாடுகிறேன்
முற்காலத்தின் மேலிருந்து எழுப்புகிறேன்
தற்காலத்தை நான் !
என்றும் நிலைத்த மரவேரி லிருந்து
இழுப்பது போல்
இறந்த காலத்தின் மேலிருந்து
எடுத்து வருகிறேன்
இந்த நிகழ் காலத்தை !
காலவெளி நீட்சியில் நான் அவனை
மேலாக்கி வருகிறேன்.
தனக்கென விதிகள் படைத்து
அந்த முறைகளால்
தன்னையே தான் ஆக்கிக் கொள்ள
பின்னிப் பிணைக்கிறேன்
காலம் அழிக்கா விதிகளை !
++++++++++++++++++++++
மாநிலங்களுக்கு எச்சரிக்கை
[To the States]
ஒரு மாநிலத் துக்கு அல்லது
எந்த ஒரு மாநிலத் துக்கும்
அல்லது மாநிலத்தில் உள்ள
எந்நகரத் துக்கும் என்னுரை இதுவே :
எதிர்த்து நில் தீவிரமாய் !
எதற்கும் சிறிது கூட அடிபணி யாதே !
ஏனென்று எந்த வினா யின்றி
அடி பணிந்து நீ ஓர்
அடிமை யாக ஆக்கப் பட்டால்,
முழு அடிமை யாக ஆக்கப் படின்,
இந்த பூமியிலே
எந்த நாட்டுக்கும், எந்த நகரத் துக்கும்,
எந்த மாநிலத் துக்கும்
இழந்த சுதந்திரம் மீளாது
என்றென்றும் !
+++++++++++++
தகவல்:
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
[ஆப்ரஹாம்லிங்கன்நாடகம்]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (December 27, 2012)
http://jayabarathan.wordpress.com/
ராஜேஸ்வரி ஜெகமணி
ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்
கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்”
திருமயிலையில் சாம்பலாகிய பெண்ணை உயிர்ப்பிக்க திருஞான சம்பந்தர் பாடிய மயிலையில் கொண்டாடப்படும் பல்வேறு சிறப்பு மிக்க திருவிழாக்களுள் திருவாதிரையும் ஒன்று.
ஆருத்ரா தரிசனம் சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் ஒன்று
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளோடு இணைந்து திருவாதிரை வருவதால் விண்ணிலிருந்து சந்திரன் தன்னை தலையில் அணிந்து சாப விமோசனம் அளித்த சிவபெருமானின் அன்பர்களை தன் பதினாறு அமுத கலைகளால் தழுவுகின்றான்.
ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாக
ஓருருவம் ஓர் நாமம் இல்லாத சிவ பெருமான் செம்பவள மேனி வண்ணன் என்பதனால் அவரை சிவப்பு நட்சத்திரமான திருவாதிரைக்கு உரியவனாக்கி அவரை திருவாதிரையான் என்றும் அழைத்தும் அந்த திருவாதிரையன்று, ஆடும் அந்த அம்பலக்கூத்தனை சிறப்பாக வழிபடுகின்றோம்..
ஆருத்ரா என்பது ஆதிரையை குறிக்கும் சொல். சிவனுக்கு உரிய ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை. எனவேதான் இந்த திருவாதிரை நாளில் ஆடல் அரசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது
ஆருத்ரா தரிசன விழா ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில்
அருள்பாலிப்பார்.
ஆண்டுக்கு ஓரு முறை ஆருத்ரா தரிசனத்தன்று சிலையில் சந்தனம் களையப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும்..
கும்பகோணத்தில், மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக நடைபெறும்.
அன்று 16 கோயில்களிலிருந்து சிவகாமியுடன் நடராஜர் தனித்தனியே புறப்பட்டு, திருக்குடந்தைக்கு ராஜாவாகிய அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயிலைப் பிரதட்சணம் செய்கின்றனர்.
தொடர்ந்து கிழக்கு வீதியில் ஒவ்வொரு கோயிலிலிருந்தும் வந்த நடராஜரும், ராஜாவாகிய ஆதி கும்பேஸ்வரர் சுவாமிக்கு தங்களுடைய மரியாதையைச் செலுத்தும் வகையில் அர்ச்சனைகள் நடைபெறும்.
பதிலுக்கு,ராஜாவாகிய ஆதி கும்பேஸ்வர ஸ்வாமியும் அந்தந்த கோயிலுக்கு உண்டான ஸ்வாமிக்கு பதில் மரியாதை செய்வார்.
திருமணமான பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைக்கக் காண வேண்டிய விழா ஆருத்ரா தரிசனம்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புண்ணிய ஸ்தலமான சுசீந்திரம் அறம் வளர்த்த நாச்சியார் கோவில் பிரசித்தமானது.
“ஆடல்வல்லான்’ என்று போற்றப்படும் ஆனந்த தாண்டவமாடும் நடராஜரை வழிபட்டால், மகிழ்ச்சி என்றென்றும் நிலைக்கும்.
சிவபெருமானுக்குரிய வடிவங்களில் முதன்மையானது நடராஜர் வடிவமே. இவர் ஆடுவது ஆனந்த தாண்டவம். அம்பலவாணர், சபாபதி, கூத்தப்பெருமான், நடேசன், சித்சபேசன், நடராஜன், கனகசபாபதி, பொன்னம்பலம் என்ற பெயர்கள் உண்டு.
திருவாதிரை நட்சத்திரம் நாள் தில்லை அம்பலத்தரசனுக்கு சிறப்பான விரத நாளாகும்.
திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனம் செய்து சகல பாவங்கள், தோஷங்கள், தடைகள் நீங்கி வளமான வாழ்வு பெறலாம் ..
ஆருத்ரா தரிசனத்தன்று ஆதிரைக் களி படைக்கும் வழக்கம் உண்மையான பக்தியுடன் எளிமையான உணவு படைத்தாலும் ஆண்டவன் ஏற்றுக்கொள்வான் என்பதே தாத்பர்யம்
திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி.
எனவே மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். இதே திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது.
திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி தின்னாதவர் நரகக்குழி என்பது பழமொழி மூலம் பிரசாதத்தின் மகிமை விளங்கும்.
களி என்றால் ஆனந்தம் என்று ஒரு அர்த்தம் ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜரை நாம் உண்மையான உள்ளன்புடன் வழி பட்டால் அவர் நமக்கு உண்மையான ஆனந்தமான மோக்ஷத்தை வழங்குவார் என்பதை உணர்த்துவதே களி படைப்பதன் உள்ளார்த்தம்.
கோவை பேருரில் எம்பெருமானின் பின்னே பின்னி தொங்கவிடப்பட்டிருக்கும் ஜடா முடியையும் நாம் கண்டு ஆனந்தம் பெறலாம்.
சப்த விடங்க ஸ்தலமான திருநள்ளாற்றிலும் அருணோதய காலத்தில் ஒரே சமயம் நடராஜப் பெருமானுக்கும், தியாகராஜப் பெருமானுக்கும் அபிஷேகம் நடப்பதை நாம் கண்டு ஆனந்தம் அடையலாம்.
சுயம்புவாக தோன்றி மிகப்பெரிய திருவுருவமாக விளங்கும் திருநல்லம் என்னும் கோனேரி ராஜபுரத்திலும் திருவாதிரைத்திருவிழா பத்து நாள் மாணிக்கவாசகர் விழாவாக கொண்டாடப்படுகின்றது.
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர்குழாங்கள் திசையணைத்தும்
நிறைந்து
பாரார் தொல் புகல் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.
என்று ஆனந்த சேந்தன் பாடிப் பரவியபடி, திருமால், பிரம்மன், இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் வந்து எம்பெருமான் ஆதிரைத் தேரோட்டத்தை காணும் அழகை தரிசிக்கும் திருநாளே திருவாதிரைத்திருநாள் ..
கோயிலின் உள்ளே சென்று வழிபட முடியாதவர்களுக்காக தானே வெளியே வந்து தேரார் வீதியில் திருத்தேரில் வந்து நடராஜப் பெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் அருட்காட்சி அளித்து ஆனந்தம் பொழியும் அற்புதத்திருநாள் ..!
போதி மரத்துப் புனிதன் சொன்னான்
“சாவினை அறியாத் தனி மனை இல்லை”
“பிறந்தவர் இறப்பதும் இறந்தவர் பிறப்பதும்
உலகினில் இயல்பாம். ஒழித்திடு சோகம்”
கண்ணன் உரைத்தான் கடும் சமர் நாளில்
“நேற்றைய வலியும் நாளைய கனவும்
நெஞ்சினில் பாரம். நீக்குக அதனை.
இன்றெது உள்ளதோ இதுவே உண்மை”
தத்துவ ஞானி ஜே.கே. பகர்ந்தான்.
“சென்றது மீளுதல் செகத்தினில் இல்லை
இன்று தான் புதிதாய்ப் பிறந்தோ மென்று
எண்ணிக் களிக்க. இன்பமாய் வாழ்க.”
ஆசையாய்ப் போற்றும் மீசைக் கவிஞன்
அழுத்திச் சொன்ன கருத்துக ளாமிவை.
அனைத்தும் கற்றேன். அறிஞன் ஆனேன்.
இத்தனை அறிவையென் மூளைக்கனுப்பிய
எந்தன் கண்களோ இன்னமும் அசடு.
எட்டுச் சுரைக்காய் சுவைக்க அறியா.
கண்டிராக் க்ண்ணனைக் காணவே வேண்டி
கரைந்து உருகினாள் கவிதையில் மீரா.
நிசிதின் பரசத நைன ஹமாரி
(இரவும் பகலும் சொரியுதெம் கண்கள்)
பெற்ற உறவைப் பிரிந்து நிற்கையில்
இரவும் பகலும் சொரியுதெம் கண்கள்.
ஏட்டுக் காயை எடுத்துச் சமைத்து
அசட்டுக் கண்களுக் கருத்துவார் உளரோ?
படத்துக்கு நன்றி
http://nutrihealth.in/health/bottle-gourd-guard-against-diseases/
திரு நு த லோகசுந்தரம்
உ
நமசிவய
பொருள்முறைத் திருமுறை ©
இதனில்
திருஆதிரை திருமுறை ©
தமிழகத்து சித்தாந்த சைவநெறியின்
பன்னிரு திருமுறை 18000+ பாடல்களில்
திருஆதிரை நாள் சிறப்பு வைகும்
37 பாடல்களின் தொகுப்பு
தொகுப்பாசிரியன்
நூ. த. முத்துமுதலி-மயிலை
ஞானசம்பந்தர் தேவாரம்
திருமுறை 1
1 ஆரூர்-வியாழக் குறிஞ்சி
பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள்
சூடலன் மூவிலைய சூலம் வலன் ஏந்திக்
கூடலர் மூ எயிலும் எரி உண்ணக் கூர் எரி கொண்டு எல்லி
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே 1.105.1
திருமுறை 2
2 ஆமாத்தூர்-சீகாமரம்
தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்தன்
நாள் ஆதிரை என்றே நம்பன்தன் நாமத்தால்
ஆளானார் சென்(று)ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச் செவி எல்லாம் கேளாச் செவிகளே 2.44.8
3 மயிலை-கபாலீச்சரம்-சீகாமரம்
ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய் 2.47.4
திருமுறை 3
4 திருக்காட்டுப்பள்ளி(மேலை)-கொல்லி
ஞாலத்தார் ஆதிரை நாளினான் நாள்தொறும்
சீலத்தான் மேவிய திருமழ பாடியை
ஞாலத்தான் மிக்கசீர் ஞானசம்பந்தன் சொல்
கோலத்தால் பாடுவார் குற்றமற் றார்களே 3.29.11
5 வெண்டுறை-பஞ்சமம்
ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆரழகன்
பாதியோர் மாதினொடும் பயிலும் பரமாபரமன்
போதியலும் முடிமேல் புனலோ(டு) அரவம் புனைந்த
வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே
3.61.1
நாவுக்கரசர் தேவாரம்
திருமுறை 4
6 ஆரூர்-காந்தாரம்
ஊர்திரை வேலை உள்ளானும் உலகு இறந்த ஒண்பொருளானும்
சீர்தரு பாடல் உள்ளானும் செங்கண் விடைக் கொடியானும்
வார்தரு பூங்குழலாளை மருவி உடன் வைத்தானும்
ஆதிரைநாள் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
4.4.6
திருமுறை 5
7 திருவாரூர் திருஆதிரைப் பதிகம்-குறிஞ்சி
முத்து விதான மணிப்பொன் கவரி முறையாலே
பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே
வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரைநாளால் அதுவண்ணம் 4.21.1
8
நணியார் சேயார் நல்லார் தீயார் நாள்தோறும்
பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்(கு)
அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம் 4.21.2
9
வீதிகள் தோறும் வெண்கொடியோடு விதானங்கள்
சோதிகள் விட்டுச் சுடர்மா மணிகள் ஒளி தோன்றச்
சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம் 4.21.3
10
குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்
பிணங்கித் தம்மில் பித்தரைப் போலப் பிதற்றுவார்
வணங்க ¢நின்று வானவர் வந்து வைகலும்
அணங்கும் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம் 4.21.4
11
நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரும் இட்ட கல்லவடங்கள் பரந்(து) எங்கும்
கலவ மஞ்ஞை கார் என்(று) எண்ணிக் களித்துவந்(து)
அலமர் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம் 4.21.5
12
விம்மா வெருவா விழியாத்தெழியா வெருட்டுவார்
தம் மாண்பிலராய்த் தரியார் தலையால் முட்டுவார்
எம்மான் ஈசன் எந்தை எனப்பன் என்பார்கட்(கு)
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம் 4.21.6
13
செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்
மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார்
இந்திரன்ஆதி வானவர் சித்தர் எடுத்(து)ஏத்தும்
தந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம் 4.21.7
14
முடிகள் வணங்கி மூவாதார் கண்முன் செல்ல
வடிகொள் வேய்த்தோள் வான்அர மங்கையர் பின்செல்லப்
பொடிகள் பூசிப்பாடும் தொண்டர் புடை சூழ
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம் 4.21.8
15
துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்
இன்பம் நும்மை ஏத்தும் நாள்கள் என்பாரும்
நும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும்
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம் 4.21.9
16
பார் ஊர் பௌவத்தானைப் பத்தர் பணிந்(து) ஏத்தச்
சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்(து)
ஓரூர் ஒழியா(து) உலகம் எங்கும் எடுத்(து) ஏத்தும்
ஆரூரன்தன் ஆதிரை நாளால் அதுவண்ணம் 4.21.10
17 பயற்றூர்-திருநேரிசை
மூ வகை மூவர் போலும் முற்றுமா நெற்றிக்கண்ணர்
நாவகை நாவர் போலும் நான்மறை ஞானம் எல்லாம்
ஆ வகை ஆவர்போலும் ஆதிரை நாளர் போலும்
தேவர்கள் தேவர் போலும் திருப்பயற் றூரனாரே 4.32.5
திருமுறை 5
18 வீழிமிழலை-குறுந்தொகை
ஏற்று வெல்கொடி ஈசன் தன் ஆதிரை
நாற்றம் சூடுவர் நல்நறும் திங்களார்
நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்
வேற்றுக் கோலம் கொள் வீழி மிழலையே 5.12.2
19 ஆதிபுராணம்-குறுந்தொகை
வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே 5.100.1
திருமுறை 6
20 கழிப்பாலை-தாண்டகம்
பொடிநாறு மேனியர் பூதிப் பையர் புலித் தோலர் பொங்(கு)அரவர் பூண நூலர்
அடிநாறு கமலத்தர் ஆரூர் ஆதி ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார் தாம்
கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபாலப்பனார்
மடிநாறு மேனி இம்மாயம் நீங்க வழி வைத்தார்க்(கு) அவ்வழியே போதும் நாமே
6.12.4
21 கருகாவூர்-தாண்டகம்
அரை சேர் அரவனாம் ஆலத்தானாம் ஆதிரை நாளானாம் அண்ட வானோர்
திரைசேர் திருமுடித் திங்களானாம் தீ வினை நாசன் என் சிந்தையானாம்
உரை சேர் உகத்தார் உள்ளானுமாம் உமையாள் ஓர் பாகனாம் ஓத வேலிக்
கரை சேர் கடல் நஞ்சை உண்டானாம் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே
6.15.7
22 ஆக்கூர்-தாண்டகம்
மாதூரும் வாள் நெடும்கண் செவ்வாய் மலைமகளை மார்பகத்(து) அணைத்தார் போலும்
மூதூர் முது திரைகள் ஆனார் போலும் முதலும் இறுதியும் இல்லார் போலும்
தீதூர நல்வினையாய் நின்றார் போலும் திசை எட்டும் தாமே ஆகும் செல்வர் போலும்
ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே
6.21.6
23 பள்ளியில் முக்கூடல்-தாண்டகம்
பூதியனைப் பொன்வரையே போல்வானைப் புரிசடைமேல் புனல் கரந்த புனிதன் தன்னை
வேதியனை வெண்காடு மேயானை வெள்ஏற்றின் மேலானை விண்ணோர்க்(கு) எல்லாம்
ஆதியனை ஆதிரை நன்னாளான் தன்னை அம்மானை மைம்மேவு கண்ணியாள் ஓர்
பாதியனைப் பள்ளியில் முக்கூடலானைப் பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே
6.69.3
24 தலையாலங்காடு-தாண்டகம்
தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைச் சூழ்நரகில் வீழாமே காப்பான் தன்னை
அண்டத்துக் கப்பாலைக்(கு) அப்பாலானை ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை
முண்டத்தின் முளைத்தெழுந்த தீஆனானை மூஉருவத்து ஓருருவாய் முதலாய் நின்ற
தண்டத்தில் தலையாலங்காடன் தன்னைச் சாராதே சாலநாள் போக்கினேனே
6.79.1
25 புகலூர்-தாண்டகம்
அங்கமே பூண்டாய் அனலாடினாய் ஆதிரையாய் ஆலநிழலாய் ஆனேறு ஊர்ந்தாய்
பங்கம் ஒன்றில்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகைதீர்த்து ஆண்டாய்
சங்கை ஒன்றின்றியே தேவர் வேண்டச் சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்
சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன் திருப்புகலூர் மேவிய தேவதேவே
6.99.2
சுந்தரர் தேவாரம்
திருமுறை 7
26 இடையாற்றுத்தொகை-கொல்லி
திங்களூர் திருஆதிரையான் பட்டினமூர்
நங்களூர் நறையூர் நனிநாலிசை நாலூர்
தங்களூர் தமிழான் என்று பாவிக்க வல்ல
எங்களூர் எய்தமான் இடையாறு இடைமருதே 7.31.6
27 நனிபள்ளி-பஞ்சமம்
ஆதியன் ஆதிரையன் அயன் மால் அறிதற்கு அரிய
சோதியன் சொல் பொருளாய்ச் சுருங்காமறை நான்கினையும்
ஓதியன் உம்பர் தங்கோன் உலகத்தினுள் எவ்வுயிர்க்கும்
நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளியதே 7.97.1
சேந்தனார்
திருமுறை 9
28 திருப்பல்லாண்டு-பஞ்சமம்
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசை அனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே 9.300
காரைக்கால்அம்மையார்
திருமுறை 11
29 இரட்டைமணிமாலை
வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்(கு)
ஆதியனை ஆதிரை நன்னாளானைச்-சோதிப்பான்
வல் ஏனமாய்ப் புக்கு மாலவனும் மாட்டாது
கில்லேனமா என்றான் கீழ் 11.31
30
தலையாய ஐந்தினையும் சாதித்துத் தாழ்ந்து
தலையாயின உணர்ந்தோர் காண்பர்-தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்(டு)இருண்ட
கண்டத்தான் செம்பொன் கழல் 11.33
சேக்கிழார்
திருமுறை 12
31 திருத்தொண்டர் புராணம்
மேவு திருஆதிரைநாள் வீதி விடங்கப் பெருமாள் பவனி தன்னில்
தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து
மூவுலகும் களிகூரவரும் பெருமைமுறைமை எல்லாம் கண்டு போற்றி
நாவினுக்குத் தனிஅரசர் நயக்குநாள் நம்பர் திருஅருளினாலே
32 12.1495
சித்தம் நிலாவும் தென்திருஆரூர் நகர் ஆளும்
மைத்தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ்செல்வம்
இத்தகைமைத்து என்று என்மொழிகேன் என்று அருள் செய்தார்
முத்து விதானமணிப் பொன்கவரி மொழி மாலை 12.1501
33
ஆய செய்கையில் அமரும் நாள்ஆதிரை நாளில்
மேய பூசனை நியதியை விதியினால் முடித்துத்
தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த
நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார் 12.1839
34
அருக்கன் முதல் கோன் அனைத்தும் அழகிய உச்சங்களிலே
பெருக்க வலியுடன் நிற்கப் பேணிய நல்லோரை எழத்
திருக்கிளரும் ஆதிரைநாள் திசை விளங்கப் பரசமயத்
தருக்கொழியச் சைவம் முதல் வைதிகமும் தழைத்(து) ஓங்க 12.1920
35
மெய்த்திரு ஞானசம்பந்தர் வாக்கின் வேந்தரை விருப்பினாலே
அப்பரை இங்கு அணையப் பெறும் பேர் அருள் உடையோம் அந்தண் ஆரூர்
எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று வினவிட ஈறில் பெரும் தவத்தோர்
செப்பிய வண்தமிழ் மாலையாலே திருஆதிரை நிகழ்செல்வம் சொன்னார்
36 12.2393
ஆறு அணிந்த சடைமுடியார்க்கு ஆதிரை நாள்தொறும் என்றும்
வேறுநிறை வழிபாடு விளக்கிய பூசனை மேவி
நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும்பொன்
நூறு குறையாமல் அளித்து இன்அமுது நுகர்விப்பார் 12.3986
37
ஆன செயல் முறை புரிவார் ஒரு திருஆதிரை நாளில்
மேன்மை நெறித்தொண்டர்க்கு விளங்கிய பொன் இடும் பொழுதில்
மான நிலைஅழி தன்மை வரும் காமக்குறி மலர்ந்த
ஊனம் திகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார் 12.3987
திருச்சிற்றம்பலம்
கடவுள் கொடுத்த முகத்தைக்
கழற்றி வைத்துவிட்டு,
கைவசம் தயாராய் உள்ள
கபட முகங்களை
கணத்துக்கொன்றாய் மாட்டிக்கொண்டு
காட்சியளிக்கிறான்
காசினியில் மனிதன்..
இங்கு வந்து பார்க்கும் இறைவனும்,
இவர்கள் எழுப்பிய கோவில்களில்
இருப்பதாய்ச்சொல்லும் இறைவனும்
ஏமாந்து விழிக்கிறான்-
எந்தமுகம் இவர்களுக்கு நாம்
தந்தமுகம் என்பதை அறியாமல்…!
படத்துக்கு நன்றி
தேவா
மந்திரிக்கு காத்திருக்கும் ”கொடிக்கம்பம்”’
வாடிப்போன பூக்கள்
சோர்ந்துபோன மாணவர்கள்
வியர்த்து ஒழுகும் ஆசிரியர்கள்
சுதந்திரதினத்தில் சுதந்திரம் இல்லா மனிதர்கள்,
சரித்திரம் படித்தவர்களும்
சரித்திரம் படைத்தவர்களை மறந்துபோனார்கள்
புலம்பும் தியாகியின் கிழிந்த சட்டையில் காந்தியின்
புகைப்படம் ….
மறுநாள் செய்தித்தாளில்
கொடியெற்றிய மந்திரி
கொடிக்கம்பம் நட்டதில் ஊழலால் கைது ,…
என்ன!!,
ஆங்கிலேயன் நம்மிடம் சுரண்டிச்சென்றானா??..
இவர்களும்,அவர்களும் ,
சுரண்டினார்கள்!
சுரண்டுகிறார்கள்!!
சுரண்டிக்கொண்டிருப்பர்கள்!!!
படத்துக்கு நன்றி: http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=8250
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
கடலை நோக்கி ஆறுகள் பாய்கின்றன. நோக்குவது ஒரே இடத்தை. ஆனாலும் பாயும் வழிகள்? ஒரே தன்மைத்தனவா?
சிவாச்சாரியார் நீராட்டுவார், மலர் தூவுவார், தூபமிடுவார், திருவமுது படைப்பார், போற்றிகள் பாடுவார், சிவனாகிய இறைவனை வழிபடுவார். அவர் வழி அஃதாம்
கருவறையை நோக்கிக் கற்களை எறிவார், சிவனாகிய இறைவனை வழிபடுவார், புத்தத் துறவி வேடத்தில் சாக்கிய நாயனார். அவர் வழி அஃதாம்.
அம்மையே அப்பா எனச் சிவனை அழைப்பார் மணிவாசகர், அதை விடுத்துப் பித்தனே என்பார் சுந்தரர்.
பித்தன் என்று அழைத்தாய், அப்படியா பாடு என்பார் சிவனாரும்!
வழி எது? வழி எது? வழி இது.. வழி இது.. என அவரவர் கொள்ளும் வழியே வழி, அதுவே மனிதம் அதுவே இயற்கை என்ற செய்தியைச் சென்னை மார்கழி இசை விழாவில் சொல்ல முயல்கிறார், தீர்மான அழகுமுறையாளர், வழக்குரைஞர், கலைமாமணி அனிருத்தர்.
திருமூலரின், ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆடரங்கம், ஆனந்தம் பாடல்கள், ஆனந்தம் பல்லியம், ஆனந்தம் வாச்சியம் ஆனந்தமாகி ஆனந்தம் அகில சராசரம் ஆனந்தம் ஆனந்தக் கூத்துகந்தானுக்கே என்ற வரிகள் நாட்டியத்துக்கான ஒரு மணி நேர ஆடலின் அடிநாதம்.
வாய்க்குள் நீர், தலையில் பூ, எச்சிலாக்கிச் சுவை பார்த்த இறைச்சி, இவை பூசனைப் பொருள்கள். ஏற்பாரா இறைவன்? அதையே தா எனக் கேட்பவரே
இறைவன். கண்ணப்பர் அன்புடன் கொடுத்ததை ஏற்றார்.
அலாரிப்புடன் தொடங்கும், தில்லானாவுடன் நிறைவுறும். அதுவே 300 ஆண்டு கால மரபு வழிப் பரதம். தில்லானாவுடன் தொடங்கினால்? திருவமுதுக்குப் பதிலாக எச்சிலாக்கிய இறைச்சியைப் படைப்பது போலாகாதா? தில்லானாவுடன் தொடங்கலாம் என்கிறார் அனிருத்தர்.
நடனத்தில் இல்லாத ஞானம் இல்லை, நடனத்தில் இல்லாத சிற்பம் இல்லை, நடனத்தில் இல்லாத கல்வி இல்லை, நடனத்தில் இல்லாத யோகம் இல்லை, நடனத்தில் இல்லாத நாளாந்த செயலும் இல்லை என நாட்டிய நன்னூல் கூறும் வரிகளுடன் கல்யாணி இராகத்தை அழைத்துக்கொண்டு அரங்கத்துள் நுழையும் நாட்டியமணிகள் பிரியா முரளி, பிரியா தீட்சிதர், கிருத்திகா சுப்பிரமணியம், பிரபா தீட்சிதர் நால்வரும் அரங்கத்தை ஆட்கொண்டனர்.
என்றுமில்லா அழகுடன் அரங்கம் அமைந்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்காகத் தயாரித்த அரங்கத்தில், நிலவு தண்ணொளி வீசியது. கோயிலின் கோபுரம் நிமிர்ந்தது. மஞ்சள் வண்ண மலர் மாலைகள் நெடுந் தோரணமாகத் தொங்கின.
நாட்டை இராகத்தில் சிறீகாந்தரின் கணீர் குரலில், திருமூலரின் வரிகளுக்கு நடனத்தில் பொருள் சொல்லியவாறே அம்சநாதத்தில் மதுரை என். கிருஷ்ணன் தந்த தில்லானாவைத் தொடர்ந்தனர் நடன மணிகள். கண்ணனின் கானத்தைச் சரணமாக்கினர்.
ஏற்றமும் இறக்கமும் மென்மையும் குழைவுமாய்க் கலைமாமணி சசிரேகாவின் சொற்கட்டுகள் தந்த சோதி, அருட்பெருஞ்சோதி வரிகள் வர்ணத்துள் நடன மணிகளை அழைத்துச் சென்றன. பிரீதி இராமபிரசாதரின் ஆங்கில வரிக் குரலாக்கம் மெருகூட்டியது.
வண்ணக் குழையலாய் சந்திரகாந்தமான ரூபமாய் எனக் கரகப்பிரியாவில் தொடங்கி, ஆதாரம் நீயே பல்லவிக்குள் நுழைந்து, கருத்தினில் உனை நிறுத்தி
வழிபட அருள் செய்வாய் எனத் தோடியில் வியந்து, தா நிதம் தா, அருள் தா, பொருள் தா எனப் பந்துவராளியில் மிதந்து, உன்னையே நம்பினேன் செகநாதா எனப் பைரவியில் நயந்து, நடனமணிகள் அரங்கை அசத்தினர்.
நந்தினி ஆனந்தனாரின் குரல் வளத்தில், தெளிவான உச்சரிப்பில், இசையின் எழிலில் அரங்கத்தார் மயங்கினர். அவருடன் சிறீகாந்தரும் இசைத்து மகிழ்வித்தார்.
இடையிடையே சசிரேகாவின் சொற்கட்டுகளுக்குப் பதம்பிடித்து, காலடிகளைப் பணிவித்து, கையசைவுகளை மெருவாக்கி, விரல்வழி கண்ணசைத்து, கழுத்தசைவில் செழிப்புற்ற பரதத்தின் பண்பட்ட முத்திரைகளை ஒருங்கிணைத்து அனிருத்தரின் அடிநாதக் கருத்துக்கு உயிரூட்டினர் பிரியா, பிரியா, கிருத்திகா, பிரபா நால்வரும்.
அடிமேல் அடி வைத்தால் நடனம். அடிமேல் அடிவைத்தல் படிப்படியாக முன்னேறும் முயற்சி. அதற்காக அடிமேல் அடிவாங்குவது துன்பம். அவ்வடியவன் நாடுவதோ மேலேயுள்ள இறைவனின் அடி, எனப் பல்பொருளை முன்னிறுத்திக் கருத்து விருந்து தந்தவர் அனிருத்தர். சொற்கட்டாக்கிச் செவிக்கு விருந்து தந்தவர் சசிரேகா, நடனமாகக் கண்ணுக்கு விருந்து தந்தவர் நடனமணிகள் நால்வரும்.
அலாரிப்பில் துயரத்தைக் காட்டி, தோடியில் சீறீகாந்தர் சங்கடம் தீர்த்திடக் கடைக்கண் பாராய் என இசைக்க, ஆனந்தம் ஆனந்தம் எனச் சசிரேகாவின் குறுகுறுவான எத்துக்கடைச் சொற்கட்டில் நாட்டியத்தின் வழி ஆனந்தம் அடைவதை நடனமணிகள் காட்டினர்.
தூணிலும் இருப்பவன் துரும்பிலும் இருப்பவனைச் சிறீகாந்தர் கீரவாணியில் இசைக்க, உள்ளத்தைக் கடைந்து உள்ளத்தைக் கடந்து, நமக்குள்ளேயே கடவுள் இருப்பார் எனத் தொடரும் சசிரேகாவின் சொற்கட்டுகளுக்கு அப்பால் சப்தத்தில், நந்தினியின், கடவுளே வினை தீர்க்கும் முழுமுதற் கடவுளே எனும் காம்போதிக்குப் பரதம் தந்தனர் நடன் மணிகள்.
சுருதியை Strauss எனும் மேற்கத்திய இசை சார்ந்து, நான் இசையின் வழியே என்ற பாடலை வேதாந்தர் தர, பிரியா முரளி பரதத்தை ஆடி அசத்தினார்.
லயத்தைக் கருவிகளூடே தனஞ்செயன் மிருதங்கத்திலும் வேங்கடசுப்பிரமணியன் காலக்கட்டிலும் தர, சசிரேகாவின் சொற்கட்டுகளில் பிரபா மெய்மறந்து ஆடி, பரதக் கலையின் நுண்ணிமைகளில் திண்ணியராகினார்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும், ஆள்பாதி ஆடை பாதி, புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு, அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டான், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன், போதுமென்ற மனமே பொன்செயும் மருந்து, பொறுத்தார் பூமியாள்வார் ஆகிய பழமொழிகளுக்கு முக பாவங்களைத் தந்தவர் பிரியா தீட்சிதர்.
சிருங்காரித்தலைச் சிறீகாந்தர் இசைக்கக் கிருத்திகா ஆடினார். அதற்காக அவர் தன்னை அலங்கரித்து வந்தார், அரங்கம் பொலிந்தது.
நடனத்தின் வழி நம் மனம் இறைவனை நோக்கிப் புறப்படுவதாகச் சொல்ல வருகிறார் அனிருத்தர். நாட்டிய நன்னூலின் உட்பொருளை மல்லாரியில் நாகசுரமும் தவிலுமாய் இராசேந்திரனும் கசேந்திரனும் இசைக்க, கால்நுனியில் உடலை உயர்த்தி, தோளை நிமிர்த்திய நடன மணிகள், இறைவனை உலாக் கொணர்ந்த பாங்கினை அரங்கம் நயந்து வியந்தது.
அமைதி நிலவுக எனும் உயர் நோக்கை வாத்தியர்கள் வடமொழியில் பாராயணமாக்க, நடன மணிகள் நால்வரும் அரங்கத்தை ஆட்கொள்ள, பார்வையாளர் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினர்.
சிறீகாந்தரின் கம்பீரக் கணீர்க் குரலிசை, நந்தினியின் தேன் மழலைச் சிந்திசை, சசிரேகாவின் தாளம்பிறழாச் சொற்கட்டும் நட்டுவாங்கமும், தனஞ்செயனின் மத்தள ஓசை, வல்லுநரின் வயலினின் நாதம், புல்லாங்குழலின் ஊதோசை, ஏனைய கருவிகளின் செவ்விசை, யாவும் ஒன்றுக்கொன்று மாறுபடாமல் ஒன்றோடொன்று ஒத்திசைத்ததால் கேட்போர் காதுகள் இசைத் தேனில் ஊறின.
விரலசைவில் கையசைந்தது. கைகள் செல்வழி கண்கள் சென்றன. கண்களின் வழி மனம் சென்றது. மனத்தின் வழி காலடி கட்டமைத்தது. காலடி அசைவுக்குக் கழுத்தசைந்தது. செம்மைசார் நுண் இடையார் பிரியா, பிரியா, கிருத்திகா, பிரபா நால்வரும் செவ்விதாய் ஆடிச் செழிப்புற, அவையோரின் கண்கள் ஆடக அரங்குடன் ஒட்டிக்கொண்டன.
கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல, ஐயநுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார், என மிதிலைப் படலத்தின் 8ஆம் பாடலில் கம்பன் கூறியதை நினைவூட்டினர் ஆடல் வல்லார்.
அனிருத்தரையும் அவர் கருத்துக்குச் செம்மாந்த இசையும் செழுமைசேர் நடனமும் குவித்த கலைஞர் யாவரையும் சுவைஞர் மீண்டும் மீண்டும் கைதட்டிப் பாராட்டிப் போற்றினர்.
பத்மசிறீ விருது பெற்ற பேரா. சுதாராணி இரகுபதியின் 65 ஆண்டுகால நடன வாழ்வுக்கும் வாத்தியார் மதுரை என். கிருஷ்ணன் நினைவுக்கும் பெரும் பொருட்செலவில் இந்நிகழ்ச்சியைத் தயாரித்து, தன் குருவுக்கு நடனக் காணிக்கையாக்கிய கிருத்திகா சுப்பிரமணியனை எத்துணை போற்றினும் தகும்.
05. 12. 2012இல் இராயப்பேட்டை சங்கீத வித்துவ சபையில் அரங்கேறிய இந்நிகழ்ச்சி, 19. 12. 2012இல் கார்த்திகை நுண்கலைக் கழகம் சார்பில் மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவனில் மீளேறியது. இரு நிகழ்ச்சிகளையும் கண்ணாரக் காணும் பேறுற்றேன்.a
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
2012ம் ஆண்டு தனது முடிவை நெருங்கிக் கொண்டு இருக்கும் வேளியிலே ஒரு பரபரப்பு , பலரது புருவங்களை உலகளாவிய ரீதியில் சுருங்க வைக்கும் வகையில் பரப்பப்பட்ட ஒரு செய்தி ஏன் வதந்தி என்று கூடச் சொல்லலாம்.
என்ன அது ?
2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி உலகம் அழிந்து விடப்போகிறதாம் ! கொஞ்சக் காலமாகவே ஒருவகையான மன்க்கிலேசம் உள்ளவர்களின் மத்தியிலும் இணையத்தளங்களிலும், இணையசமூகத் தளங்களிலும் பரபரப்பாக பரவி வந்த ஒருவகை பீதியுடனான ஒரு செய்தி.
ஓ ! இன்று என்ன தேதி ! டி சம்பர் 24 அல்லவா ? அப்படியானால் உலகம் அழிவிலிருந்து தப்பித்துக் கொண்டது போலும் …. சரி இதெல்லாம் என்ன ஒரே பிதற்றல் போல இதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்து என்ன பயன் ? உங்கள் அலுப்புடனான ஆதங்கத்தை உணர்கிறேன்.
தென் அமெரிக்க பகுதியில் வாழும் ஆதி மக்களாகிய “மாயன்” இனத்தவரின் புராதான நாட்காட்டியின் கணிப்புகளின் படி 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதியுடன் உலகம் அழிந்து போயிருக்க வேண்டும் என்பது ஒருவகை அபிப்பிராயம்.
ஆனால் தொலைபேசியில் அதே “மாயன்” வம்சத்தைச் சேர்ந்த ஒருவரின் கூற்றுப்படி அந்நாட்காட்டியின் படி ஒருபோதுமே உலகம் முற்றாக அழிந்து போய்விடும் என்று கூறப்படவில்லையா. 34000 வருடங்களுக்கு ஓடிய ஒரு காலச்சக்கரம் முடிவுக்கு வந்து இப்போ ஒரு புது காலச்சக்கரம் உருளத்தொடங்கியுள்ளதாம்.
ஆத்திகவாதியாகட்டும், நாத்திகவாதியாகட்டும் உலகத்தின் அழிவிலிருந்து அப்பபடிப்பட்ட ஒரு அழிவு ஏற்படுமாயின் தப்பித்துக் கொள்ள முடியாது.
சரியோ, தவறோ ……. உணமையோ, பொய்யோ எது எப்படி குறிப்பிடப்பட்டிருந்தாலும் ஒன்று மட்டும் கண்ணுக்கு முன்னே தெட்டத்தெளிவாகத் தெரிகிறது. அது என்ன என்கிறீர்களா?
உலகத்தின் மாற்றத்தையே குறிப்பிடுகிறேன்.
ஆதிகால மனிதன் வெறும் இலைகளையே ஆடையாகக் கட்டிக் கொண்டிருந்த காலத்திலிருந்து இன்று இலட்சக்கணக்கில் செலவழித்து உடையணியும் காலம்( அது கூட அரைகுறையாகத் தான் இருக்கிறது என்கிறீர்களோ ! உஷ் …. நமக்கெதுக்கடா வம்பு ) வரை மனிதனுடைய ஆசைகளும், அந்த ஆசைவழி எழுந்த தேடல்களும் அந்தத் தேடல்களின் வழி வந்த கண்டுபிடிப்புகளும் மனிதனின் வாழ்க்கைமுறையையும் அவன் வாழும் சூழலையும் மாற்றித்தான் இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையே .
தனது கட்டுப்பாட்டுக்கு மீறிய, தனது ஆஅசை எனும் பெயரில் வளரும் பேராசைகளைக்கூட நியாயப்படுத்திக் கொண்டு வாழும் ஒரு காலகட்டத்திலே நாம் இருக்கிறோம்.
எமது தேவைகளுக்காக நாம் வாழும் இயர்கையைச் சுரண்டிக் கொண்டே இருக்கிறோம். அந்த இயற்கையின் பொறுமையின் எல்லைகளை சோதித்த வண்ணமே இருக்கிறோம்.
இப்படியான ஒரு கட்டத்திலே இதோ அடுத்தவாரம் நான் வாழும் இந்தப்புலம்பெயர் நாட்டின் மிக முக்கியமான கொண்டாட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது என்ன ?
அன்பையும், அருளையும் மனிதனுக்குப் போதித்து, தன்னைப் போல பிறரையும் நேசி எனும் தத்துவத்தைத் தனது வாழ்க்கையாக்கி வாழ்ந்து காட்டிய தேவகுமாரன் இயேசுநாதரின் பிறந்தநாளை, கிறிஸ்துவ மக்களின் வாழ்வில் ஒரு உன்னதமான நாளான கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் நாம் வாழும் இச்சமூகம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
வேலையற்றோர் பட்டியல் என்றுமில்லாதவாறு அதிகரித்து விட்டது, நாட்டின் பொருளாதாரம் பள்ளத்தாக்கில் விழுந்து அங்கிருந்து எழுவதற்கு ஒரு அடி முன்னாலும் இரு அடி பின்னாலுமாக சறுக்கி, சறுக்கி ஏறிக் கொண்டிருக்கிறது.வங்கிகளில் கடன்வாங்கி தாம் வாழும் இல்லங்களை வாங்கியபலர் அக்கடனைத் திரும்பச் செலுத்தமுடியாமல் திண்டாடி தமது இல்லங்களைப் பறிகொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள், சமுதாயத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ………………..
இன்று எமது இல்லத்திற்கு அருகாமையில் இருக்கும் அங்காடிக்கு (Super Market) சென்றிருந்தேன். அப்பப்பா !
கூட்டமென்றால் அப்படிப்பட்ட கூட்டம். காரை பார்க் செய்வதற்கு விமான நிலையத்தில் இறங்க முடியாமல் வானில் சுற்றிக் கொண்டிருக்கும் ஆகாயவிமானத்தைப் போல ஒரு இரண்டு தடவைகள் ரவுண்டு அடித்த பின்னால்தான் பார்க் செய்யவே இடம் கிடைத்தது.
அப்படி எதைத்தான் வாங்க வந்திருக்கிறார்கள் ?
“பொருளாதாரச் சிக்கலில் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்” இங்கிலாந்து ஊடகங்களின் வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது இந்தனோடு சம்மந்தப்பட்ட செய்திகள் தான்.
ஆனால் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து பொருட்களை அள்ளிக் கொண்டு வெளியே வரும் மக்களைப் பார்த்தால் அல்லல் படுபவர்களைப் போலத்தெரியவில்லையே !
சரி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விருந்துபசாரங்களுக்கான அவசியப் பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள் என்று பார்த்தால் , 50″ திரையுடைய தொலைக்காட்சி தொடக்கம், நவீன வகையிலான கணினிகள் என அவர்கள் கஷ்டப்பட்டுத் தூக்கிச் செல்லும் பொருட்களைக் காணும் போது பொருளாதாரச் சிக்கல் போலத் தெரியவில்லையே !
கிறிஸ்துவ பண்டிகை அதற்கான விடுமுறை நாட்கள் இதனை எமது இந்து நண்பர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் ?
புலம்பெயர்ந்து வாழும் மக்கள் அந்நாட்டுக் கலாச்சாரங்களோடு ஒத்துப் போனால்தான் இனிவரும் காலங்களில் அவர்கள் நிம்மதியாக வாழலாம் என்று பல புத்திஜீவிகள் கொடுத்த அறிவுரைகளை இந்தக் கிறிஸ்துமஸ் பண்டிகையில் தான் எமது மக்கள் அழகாகக் கடைபிடிக்கிறார்கள் போலும் !
மாறி,மாறி கிழமைக்குக் கிழமை ஒவ்வொரு பகுதியாக நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எம்மவர் மத்தியில் ஏராளம்.
அது மட்டுமா? ஒருவருக்கொருவர் கொடுக்கும் பரிசுப்பொருட்களில் கிறிஸ்துவ நண்பர்களை மிஞ்சி விட்டார்கள் போங்கள் ……….
அன்பு, அருள் இவைகளின் ஆழத்தை அமைதியாகப் புகட்டியவர் இயேசுநாதர் இன்று நாமோ அடுதவரின் வாழ்வின் இன்னல்களை எள்ளளவும் எண்ணாமல் இயேசுநாதரின் பிறப்பைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோமோ ?
கவிஞர் வாலியின் அற்புதமான பாடலின் வரிகள் ஒன்று நினைவிற்கு வருகிறது.
“எதையும் வாங்கிட மனிதன் வந்தான்
விலை என்னவென்றாலும் அவன் தந்தான்
இதயம் என்பதை விலையாய்க் கொடுத்து
அன்பை வாங்கிட எவருமில்லை “
மீண்டும் அடுத்த மடலில்
சக்தி சக்திதாசன்
லண்டன்