இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் .. (38)

 சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

2012ம் ஆண்டு தனது முடிவை நெருங்கிக் கொண்டு இருக்கும் வேளியிலே ஒரு பரபரப்பு , பலரது புருவங்களை உலகளாவிய ரீதியில் சுருங்க வைக்கும் வகையில் பரப்பப்பட்ட ஒரு செய்தி ஏன் வதந்தி என்று கூடச் சொல்லலாம்.

என்ன அது ?

2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி உலகம் அழிந்து விடப்போகிறதாம் ! கொஞ்சக் காலமாகவே ஒருவகையான மன்க்கிலேசம் உள்ளவர்களின் மத்தியிலும் இணையத்தளங்களிலும், இணையசமூகத் தளங்களிலும் பரபரப்பாக பரவி வந்த ஒருவகை பீதியுடனான ஒரு செய்தி.

ஓ ! இன்று என்ன தேதி ! டி சம்பர் 24 அல்லவா ? அப்படியானால் உலகம் அழிவிலிருந்து தப்பித்துக் கொண்டது போலும் …. சரி இதெல்லாம் என்ன ஒரே பிதற்றல் போல இதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்து என்ன பயன் ? உங்கள் அலுப்புடனான ஆதங்கத்தை உணர்கிறேன்.

தென் அமெரிக்க பகுதியில் வாழும் ஆதி மக்களாகிய “மாயன்” இனத்தவரின் புராதான நாட்காட்டியின் கணிப்புகளின் படி 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதியுடன் உலகம் அழிந்து போயிருக்க வேண்டும் என்பது ஒருவகை அபிப்பிராயம்.

ஆனால் தொலைபேசியில் அதே “மாயன்” வம்சத்தைச் சேர்ந்த ஒருவரின் கூற்றுப்படி அந்நாட்காட்டியின் படி ஒருபோதுமே உலகம் முற்றாக அழிந்து போய்விடும் என்று கூறப்படவில்லையா. 34000 வருடங்களுக்கு ஓடிய ஒரு காலச்சக்கரம் முடிவுக்கு வந்து இப்போ ஒரு புது காலச்சக்கரம் உருளத்தொடங்கியுள்ளதாம்.

ஆத்திகவாதியாகட்டும், நாத்திகவாதியாகட்டும் உலகத்தின் அழிவிலிருந்து அப்பபடிப்பட்ட ஒரு அழிவு ஏற்படுமாயின் தப்பித்துக் கொள்ள முடியாது.

சரியோ, தவறோ ……. உணமையோ, பொய்யோ எது எப்படி குறிப்பிடப்பட்டிருந்தாலும் ஒன்று மட்டும் கண்ணுக்கு முன்னே தெட்டத்தெளிவாகத் தெரிகிறது. அது என்ன என்கிறீர்களா?

உலகத்தின் மாற்ற‌த்தையே குறிப்பிடுகிறேன்.

ஆதிகால மனிதன் வெறும் இலைகளையே ஆடையாகக் கட்டிக் கொண்டிருந்த காலத்திலிருந்து இன்று இலட்சக்கணக்கில் செலவழித்து உடையணியும் காலம்( அது கூட அரைகுறையாகத் தான் இருக்கிறது என்கிறீர்களோ ! உஷ் …. நமக்கெதுக்கடா வம்பு ) வரை மனிதனுடைய ஆசைகளும், அந்த ஆசைவழி எழுந்த தேடல்களும் அந்தத் தேடல்களின் வழி வந்த கண்டுபிடிப்புகளும் மனிதனின் வாழ்க்கைமுறையையும் அவன் வாழும் சூழலையும் மாற்றித்தான் இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையே .

தனது கட்டுப்பாட்டுக்கு மீறிய, தனது ஆஅசை எனும் பெயரில் வளரும் பேராசைகளைக்கூட நியாயப்படுத்திக் கொண்டு வாழும் ஒரு காலகட்டத்திலே நாம் இருக்கிறோம்.

எமது தேவைகளுக்காக நாம் வாழும் இயர்கையைச் சுரண்டிக் கொண்டே இருக்கிறோம். அந்த இயற்கையின் பொறுமையின் எல்லைகளை சோதித்த வண்ணமே இருக்கிறோம்.

இப்படியான ஒரு கட்டத்திலே இதோ அடுத்தவாரம் நான் வாழும் இந்தப்புலம்பெயர் நாட்டின் மிக முக்கியமான கொண்டாட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது என்ன ?

அன்பையும், அருளையும் மனிதனுக்குப் போதித்து, தன்னைப் போல பிறரையும் நேசி எனும் தத்துவத்தைத் தனது வாழ்க்கையாக்கி வாழ்ந்து காட்டிய தேவகுமாரன் இயேசுநாதரின் பிறந்தநாளை, கிறிஸ்துவ மக்களின் வாழ்வில் ஒரு உன்னதமான நாளான கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் நாம் வாழும் இச்சமூகம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வேலையற்றோர் பட்டியல் என்றுமில்லாதவாறு அதிகரித்து விட்டது, நாட்டின் பொருளாதாரம் பள்ளத்தாக்கில் விழுந்து அங்கிருந்து எழுவதற்கு ஒரு அடி முன்னாலும் இரு அடி பின்னாலுமாக சறுக்கி, சறுக்கி ஏறிக் கொண்டிருக்கிறது.வங்கிகளில் கடன்வாங்கி தாம் வாழும் இல்லங்களை வாங்கியபலர் அக்கடனைத் திரும்பச் செலுத்தமுடியாமல் திண்டாடி தமது இல்லங்களைப் பறிகொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள், சமுதாயத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ………………..

இன்று எமது இல்லத்திற்கு அருகாமையில் இருக்கும் அங்காடிக்கு (Super Market) சென்றிருந்தேன். அப்பப்பா !

கூட்டமென்றால் அப்படிப்பட்ட கூட்டம். காரை பார்க் செய்வதற்கு விமான நிலையத்தில் இறங்க முடியாமல் வானில் சுற்றிக் கொண்டிருக்கும் ஆகாயவிமானத்தைப் போல ஒரு இரண்டு தடவைகள் ரவுண்டு அடித்த பின்னால்தான் பார்க் செய்யவே இடம் கிடைத்தது.

அப்படி எதைத்தான் வாங்க வந்திருக்கிறார்கள் ?

“பொருளாதாரச் சிக்கலில் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்” இங்கிலாந்து ஊடகங்களின் வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது இந்தனோடு சம்மந்தப்பட்ட செய்திகள் தான்.

ஆனால் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து பொருட்களை அள்ளிக் கொண்டு வெளியே வரும் மக்களைப் பார்த்தால் அல்லல் படுபவர்களைப் போலத்தெரியவில்லையே !

சரி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விருந்துபசாரங்களுக்கான அவசியப் பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள் என்று பார்த்தால் , 50″ திரையுடைய தொலைக்காட்சி தொடக்கம், நவீன வகையிலான கணினிகள் என அவர்கள் கஷ்டப்பட்டுத் தூக்கிச் செல்லும் பொருட்களைக் காணும் போது பொருளாதாரச் சிக்கல் போலத் தெரியவில்லையே !

சரி அதை விடுவோம் ………

கிறிஸ்துவ‌ பண்டிகை அதற்கான விடுமுறை நாட்கள் இதனை எமது இந்து நண்பர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் ?

புலம்பெயர்ந்து வாழும் மக்கள் அந்நாட்டுக் கலாச்சாரங்களோடு ஒத்துப் போனால்தான் இனிவரும் காலங்களில் அவர்கள் நிம்மதியாக வாழலாம் என்று பல புத்திஜீவிகள் கொடுத்த அறிவுரைகளை இந்தக் கிறிஸ்துமஸ் பண்டிகையில் தான் எமது மக்கள் அழகாகக் கடைபிடிக்கிறார்கள் போலும் !

மாறி,மாறி கிழமைக்குக் கிழமை ஒவ்வொரு பகுதியாக நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எம்மவர் மத்தியில் ஏராளம்.

அது மட்டுமா? ஒருவருக்கொருவர் கொடுக்கும் பரிசுப்பொருட்களில் கிறிஸ்துவ நண்பர்களை மிஞ்சி விட்டார்கள் போங்கள் ……….

அன்பு, அருள் இவைகளின் ஆழத்தை அமைதியாகப் புகட்டியவர் இயேசுநாதர் இன்று நாமோ அடுதவரின் வாழ்வின் இன்னல்களை எள்ளளவும் எண்ணாமல் இயேசுநாதரின் பிறப்பைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோமோ ?

கவிஞர் வாலியின் அற்புதமான பாடலின் வரிகள் ஒன்று நினைவிற்கு வருகிறது.

“எதையும் வாங்கிட மனிதன் வந்தான்
விலை என்னவென்றாலும் அவன் தந்தான்
இதயம் என்பதை விலையாய்க் கொடுத்து
அன்பை வாங்கிட எவருமில்லை “

மீண்டும் அடுத்த மடலில்
சக்தி சக்திதாசன்
லண்டன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.