நெறியல்லா நெறிதன்னை நெறியாகக் கொள்வேனை….

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

கடலை நோக்கி ஆறுகள் பாய்கின்றன. நோக்குவது ஒரே இடத்தை. ஆனாலும் பாயும் வழிகள்? ஒரே தன்மைத்தனவா?

சிவாச்சாரியார் நீராட்டுவார், மலர் தூவுவார், தூபமிடுவார், திருவமுது படைப்பார், போற்றிகள் பாடுவார், சிவனாகிய இறைவனை வழிபடுவார். அவர் வழி அஃதாம்

கருவறையை நோக்கிக் கற்களை எறிவார், சிவனாகிய இறைவனை வழிபடுவார், புத்தத் துறவி வேடத்தில் சாக்கிய நாயனார். அவர் வழி அஃதாம்.

அம்மையே அப்பா எனச் சிவனை அழைப்பார் மணிவாசகர், அதை விடுத்துப் பித்தனே என்பார் சுந்தரர்.

பித்தன் என்று அழைத்தாய், அப்படியா பாடு என்பார் சிவனாரும்!

வழி எது? வழி எது? வழி இது.. வழி இது.. என அவரவர் கொள்ளும் வழியே வழி, அதுவே மனிதம் அதுவே இயற்கை என்ற செய்தியைச் சென்னை மார்கழி இசை விழாவில் சொல்ல முயல்கிறார், தீர்மான அழகுமுறையாளர், வழக்குரைஞர், கலைமாமணி அனிருத்தர்.

திருமூலரின், ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆடரங்கம், ஆனந்தம் பாடல்கள், ஆனந்தம் பல்லியம், ஆனந்தம் வாச்சியம் ஆனந்தமாகி ஆனந்தம் அகில சராசரம் ஆனந்தம் ஆனந்தக் கூத்துகந்தானுக்கே என்ற வரிகள் நாட்டியத்துக்கான ஒரு மணி நேர ஆடலின் அடிநாதம்.

வாய்க்குள் நீர், தலையில் பூ, எச்சிலாக்கிச் சுவை பார்த்த இறைச்சி, இவை பூசனைப் பொருள்கள். ஏற்பாரா இறைவன்? அதையே தா எனக் கேட்பவரே இறைவன். கண்ணப்பர் அன்புடன் கொடுத்ததை ஏற்றார்.

அலாரிப்புடன் தொடங்கும், தில்லானாவுடன் நிறைவுறும். அதுவே 300 ஆண்டு கால மரபு வழிப் பரதம். தில்லானாவுடன் தொடங்கினால்? திருவமுதுக்குப் பதிலாக எச்சிலாக்கிய இறைச்சியைப் படைப்பது போலாகாதா? தில்லானாவுடன் தொடங்கலாம் என்கிறார் அனிருத்தர்.

நடனத்தில் இல்லாத ஞானம் இல்லை, நடனத்தில் இல்லாத சிற்பம் இல்லை, நடனத்தில் இல்லாத கல்வி இல்லை, நடனத்தில் இல்லாத யோகம் இல்லை, நடனத்தில் இல்லாத நாளாந்த செயலும் இல்லை என நாட்டிய நன்னூல் கூறும் வரிகளுடன்  கல்யாணி இராகத்தை அழைத்துக்கொண்டு அரங்கத்துள் நுழையும் நாட்டியமணிகள் பிரியா முரளி, பிரியா தீட்சிதர், கிருத்திகா சுப்பிரமணியம், பிரபா தீட்சிதர் நால்வரும் அரங்கத்தை ஆட்கொண்டனர்.

என்றுமில்லா அழகுடன் அரங்கம் அமைந்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்காகத் தயாரித்த அரங்கத்தில், நிலவு தண்ணொளி வீசியது. கோயிலின் கோபுரம் நிமிர்ந்தது. மஞ்சள் வண்ண மலர் மாலைகள் நெடுந் தோரணமாகத் தொங்கின.

நாட்டை இராகத்தில் சிறீகாந்தரின் கணீர் குரலில், திருமூலரின் வரிகளுக்கு நடனத்தில் பொருள் சொல்லியவாறே அம்சநாதத்தில் மதுரை என். கிருஷ்ணன் தந்த தில்லானாவைத் தொடர்ந்தனர் நடன மணிகள். கண்ணனின் கானத்தைச் சரணமாக்கினர்.

ஏற்றமும் இறக்கமும் மென்மையும் குழைவுமாய்க் கலைமாமணி சசிரேகாவின் சொற்கட்டுகள் தந்த சோதி, அருட்பெருஞ்சோதி வரிகள் வர்ணத்துள் நடன மணிகளை அழைத்துச் சென்றன. பிரீதி இராமபிரசாதரின் ஆங்கில வரிக் குரலாக்கம் மெருகூட்டியது.

வண்ணக் குழையலாய் சந்திரகாந்தமான ரூபமாய் எனக் கரகப்பிரியாவில் தொடங்கி, ஆதாரம் நீயே பல்லவிக்குள் நுழைந்து, கருத்தினில் உனை நிறுத்தி வழிபட அருள் செய்வாய் எனத் தோடியில் வியந்து, தா நிதம் தா, அருள் தா, பொருள் தா எனப் பந்துவராளியில் மிதந்து, உன்னையே நம்பினேன் செகநாதா எனப் பைரவியில் நயந்து, நடனமணிகள் அரங்கை அசத்தினர்.

நந்தினி ஆனந்தனாரின் குரல் வளத்தில், தெளிவான உச்சரிப்பில், இசையின் எழிலில் அரங்கத்தார் மயங்கினர். அவருடன் சிறீகாந்தரும் இசைத்து மகிழ்வித்தார்.

இடையிடையே சசிரேகாவின் சொற்கட்டுகளுக்குப் பதம்பிடித்து, காலடிகளைப் பணிவித்து, கையசைவுகளை மெருவாக்கி, விரல்வழி கண்ணசைத்து, கழுத்தசைவில் செழிப்புற்ற பரதத்தின் பண்பட்ட முத்திரைகளை  ஒருங்கிணைத்து அனிருத்தரின் அடிநாதக் கருத்துக்கு உயிரூட்டினர் பிரியா, பிரியா, கிருத்திகா, பிரபா நால்வரும்.

அடிமேல் அடி வைத்தால் நடனம். அடிமேல் அடிவைத்தல் படிப்படியாக முன்னேறும் முயற்சி. அதற்காக அடிமேல் அடிவாங்குவது துன்பம். அவ்வடியவன் நாடுவதோ மேலேயுள்ள இறைவனின் அடி, எனப் பல்பொருளை முன்னிறுத்திக் கருத்து விருந்து தந்தவர் அனிருத்தர். சொற்கட்டாக்கிச் செவிக்கு விருந்து தந்தவர் சசிரேகா, நடனமாகக் கண்ணுக்கு விருந்து தந்தவர் நடனமணிகள் நால்வரும்.

அலாரிப்பில் துயரத்தைக் காட்டி, தோடியில் சீறீகாந்தர் சங்கடம் தீர்த்திடக் கடைக்கண் பாராய் என இசைக்க, ஆனந்தம் ஆனந்தம் எனச் சசிரேகாவின் குறுகுறுவான எத்துக்கடைச் சொற்கட்டில் நாட்டியத்தின் வழி ஆனந்தம் அடைவதை நடனமணிகள் காட்டினர்.

தூணிலும் இருப்பவன் துரும்பிலும் இருப்பவனைச் சிறீகாந்தர் கீரவாணியில் இசைக்க, உள்ளத்தைக் கடைந்து உள்ளத்தைக் கடந்து, நமக்குள்ளேயே கடவுள் இருப்பார் எனத் தொடரும் சசிரேகாவின் சொற்கட்டுகளுக்கு அப்பால் சப்தத்தில், நந்தினியின், கடவுளே வினை தீர்க்கும் முழுமுதற் கடவுளே எனும் காம்போதிக்குப் பரதம் தந்தனர் நடன் மணிகள்.

சுருதியை Strauss எனும் மேற்கத்திய இசை சார்ந்து, நான் இசையின் வழியே என்ற பாடலை வேதாந்தர் தர, பிரியா முரளி பரதத்தை ஆடி அசத்தினார்.

லயத்தைக் கருவிகளூடே  தனஞ்செயன் மிருதங்கத்திலும் வேங்கடசுப்பிரமணியன் காலக்கட்டிலும் தர, சசிரேகாவின் சொற்கட்டுகளில் பிரபா மெய்மறந்து ஆடி, பரதக் கலையின் நுண்ணிமைகளில் திண்ணியராகினார்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும், ஆள்பாதி ஆடை பாதி, புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு, அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டான், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன், போதுமென்ற மனமே பொன்செயும் மருந்து, பொறுத்தார் பூமியாள்வார் ஆகிய பழமொழிகளுக்கு முக பாவங்களைத் தந்தவர் பிரியா தீட்சிதர்.

 சிருங்காரித்தலைச் சிறீகாந்தர் இசைக்கக் கிருத்திகா ஆடினார். அதற்காக அவர் தன்னை அலங்கரித்து வந்தார், அரங்கம் பொலிந்தது.

நடனத்தின் வழி நம் மனம் இறைவனை நோக்கிப் புறப்படுவதாகச் சொல்ல வருகிறார் அனிருத்தர். நாட்டிய நன்னூலின் உட்பொருளை மல்லாரியில் நாகசுரமும் தவிலுமாய் இராசேந்திரனும் கசேந்திரனும் இசைக்க, கால்நுனியில் உடலை உயர்த்தி, தோளை நிமிர்த்திய நடன மணிகள், இறைவனை உலாக் கொணர்ந்த பாங்கினை அரங்கம் நயந்து வியந்தது.

அமைதி நிலவுக எனும் உயர் நோக்கை வாத்தியர்கள் வடமொழியில் பாராயணமாக்க, நடன மணிகள் நால்வரும் அரங்கத்தை ஆட்கொள்ள, பார்வையாளர் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினர்.

சிறீகாந்தரின் கம்பீரக் கணீர்க் குரலிசை, நந்தினியின் தேன் மழலைச் சிந்திசை, சசிரேகாவின் தாளம்பிறழாச் சொற்கட்டும் நட்டுவாங்கமும், தனஞ்செயனின் மத்தள ஓசை, வல்லுநரின் வயலினின் நாதம், புல்லாங்குழலின் ஊதோசை, ஏனைய கருவிகளின் செவ்விசை, யாவும் ஒன்றுக்கொன்று  மாறுபடாமல் ஒன்றோடொன்று ஒத்திசைத்ததால் கேட்போர் காதுகள் இசைத் தேனில் ஊறின.

 விரலசைவில் கையசைந்தது. கைகள் செல்வழி கண்கள் சென்றன. கண்களின் வழி மனம் சென்றது. மனத்தின் வழி காலடி கட்டமைத்தது. காலடி அசைவுக்குக் கழுத்தசைந்தது. செம்மைசார் நுண் இடையார் பிரியா, பிரியா, கிருத்திகா, பிரபா நால்வரும் செவ்விதாய் ஆடிச் செழிப்புற, அவையோரின் கண்கள் ஆடக அரங்குடன் ஒட்டிக்கொண்டன.

கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல, ஐயநுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார், என மிதிலைப் படலத்தின் 8ஆம் பாடலில் கம்பன் கூறியதை நினைவூட்டினர் ஆடல் வல்லார்.

அனிருத்தரையும் அவர் கருத்துக்குச் செம்மாந்த இசையும் செழுமைசேர் நடனமும் குவித்த கலைஞர் யாவரையும் சுவைஞர் மீண்டும் மீண்டும் கைதட்டிப் பாராட்டிப் போற்றினர்.

பத்மசிறீ விருது பெற்ற பேரா. சுதாராணி இரகுபதியின் 65 ஆண்டுகால நடன வாழ்வுக்கும் வாத்தியார் மதுரை என். கிருஷ்ணன் நினைவுக்கும் பெரும் பொருட்செலவில் இந்நிகழ்ச்சியைத் தயாரித்து, தன் குருவுக்கு நடனக் காணிக்கையாக்கிய கிருத்திகா சுப்பிரமணியனை எத்துணை போற்றினும் தகும்.

05. 12. 2012இல் இராயப்பேட்டை சங்கீத வித்துவ சபையில் அரங்கேறிய இந்நிகழ்ச்சி, 19. 12. 2012இல் கார்த்திகை நுண்கலைக் கழகம் சார்பில் மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவனில் மீளேறியது.  இரு நிகழ்ச்சிகளையும் கண்ணாரக் காணும் பேறுற்றேன்.a

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *