புவனா கோவிந்த்

“என்னங்க, நெக்ஸ்ட் வீக் எங்க சித்தப்பாவும் சித்தியும் அவங்க பொண்ணுக்கு மாப்ள பாக்கற விஷயமா ஊர்ல இருந்து வராங்க. நாமளும் கூட போகணும், லீவ் சொல்லிடுங்க” என்றவள் கூற

“ஐயையோ… புதன்கிழமையா மட்டும் இருக்கக்கூடாது கடவுளே” என வேண்டியபடியே “எப்போ?” என்றான்

“புதன்கிழமை” என குண்டை வீசினாள்

“ஓ நோ… எனக்கு புதன்கிழமை ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. லீவ் போட முடியாது” என்றான்

“ஆமா… எங்க வீட்டு சொந்தம் வராங்கனு சொன்னாலே உங்களுக்கு மீட்டிங், டெட்லைன், கோ-லைவ் எல்லாம் வந்துடும்” என சண்டையை துவங்கினாள்

“ஏன் புரியாம பேசற? நீயும் வேலைக்கு போறவ தான, தெரியாதா?” என புரியவைக்க முயன்றான்

“போன மாசம் உங்க அக்கா வந்தப்ப மட்டும் மூணு நாள் லீவ் போட்டீங்க, என்னையும் போட வெச்சீங்க. எனக்கு கூட தான் வேலை இருந்தது, உங்களுக்காக செய்யலையா?”

“எங்கக்கா ரெண்டு மாசம் முன்னாடியே வர்றத பத்தி இன்பார்ம் பண்ணினா, சோ பிளான் பண்ண வசதியா இருந்தது” என நியாப்படுத்தினான்

“ஓஹோ… உங்க சொந்தமெல்லாம் ரெம்ப இங்கிதம் தெரிஞ்சவங்க, எங்களுக்கு அவ்ளோ பத்தாதுன்னு சொல்ல வரீங்க, அப்படி தானே” என அவள் கோபமாய் சீற

“ஸ்டாப் இட், டோண்ட் புட் வோர்ட்ஸ் இன் மை மௌத்… உன்கிட்ட பேச முடியாது ச்சே” என சலிப்பாய் நகர்ந்தான்

“ஆமா என்கிட்டயெல்லாம் பேச முடியாது. உங்க டீம்ல இருக்காளே அவ பேரென்ன… நின்னாவோ உக்காந்தாவோ, அவகிட்ட பேசறதுன்னா மட்டும் இனிக்கும்” என கழுத்தை நொடித்தாள்

“அது நின்னாவும் இல்ல உக்காந்தாவும் இல்ல… நீனா” என பற்களை கடித்தான் எரிச்சலில்

“அது ரெம்ப முக்கியம் இப்ப… நீங்க லீவ் போட முடியுமா முடியாதா?” என அவள் பிடிவாத குரலில் கேட்கவும்

“அட்ஜஸ்ட் பண்ண பண்ண ஓவரா டாமினேட் பண்றா, திமிரு” என மனதிற்குள் எரிச்சல்பட்டவன் “முடியாது” என ஒரே வார்த்தையில் எழுந்து சென்றான்

அதன்  பின் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இரவு உணவின் போது கூட மௌனமே ஆட்சி  செய்தது

பின்  அவன் இருப்பையே உணராதவள் போல் ஒரு புத்தகத்தை எடுத்து  கொண்டு அறைக்குள் செல்ல, “நானும் உனக்கு சளைத்தவனல்ல” என்பது போல் அவன் முன்னறையில் லேப்டாப் சகிதம் இல்லாத வேலையில் மூழ்கினான்

நடுஇரவில் அவன் வரும் அரவம் கேட்டு தூங்குவது போல் பாவனையில்  கண் மூடினாள். மெல்லிய  படலம் போல் அவன் அவளை பார்ப்பதை  உணர்ந்தும் கண் திறக்காமல் இருந்தாள்

மெல்ல அவளருகே குனிந்தவன் “ராட்சசி… பேசறதெல்லாம் பேசிட்டு கொழந்த மாதிரி மூஞ்சிய வெச்சுட்டு தூங்கரத பாரு” என மெல்ல  முணுமுணுத்தபடி, அவளை எழுப்பி விடாவண்ணம் மெல்ல நெற்றியில் இதழ் ஒற்றினான்

“உறங்குவது போல் நடித்தேன்

உன்ரகசிய நாடகத்தை ரசிக்க”

என  இன்ஸ்டன்ட் ஹைக்கூ உதித்தது அவள் மனதில்

திறக்க  துடித்த இமைகளை அடக்கி நாடகத்தை தொடர்ந்தாள், அப்படியே உறங்கியும் போனாள்

காலையில்  கண் விழித்தவளுக்கு அவனின் முகதரிசனம் முன்னிரவை நினைவூட்ட “வெவ்வவெவே” என பழித்தபடி, செல்லமாய் அலுங்காமல் அவன் கேசத்தை கலைத்தாள்

அடுத்த  நாள் இரவும் இதே நாடகம் தொடர்ந்தது. ஆனால் பகலில் ஜென்ம விரோதிகள்  போல் முகத்தை திருப்பி கொண்டனர்

மூன்றாம்  நாள் கண் விழித்ததும் இரு  நாளின் வழக்கம் போல் தனிச்சையாய்  அவன் முன்னுச்சி கேசத்தை  கலைத்துவிட்டு விலகியவளின்  கரம் பற்றினான் அவன்

“அய்யோ நாடகம் அம்பலமாகி விட்டதே” என வெட்கமும், கூடவே சிறு கோபமும் சேர “கைய விடுங்க, நான் இன்னும் கோபமாத்தான் இருக்கேன்” என கையை உதறினாள்

“நான் கூட ரெம்ப கோவமாத்தான் இருக்கேன்” என்றான் அவனும்

“எதுக்கு?” என முறைத்தாள்

“ம்… தூங்கற மாதிரி நடிச்சு ஏமாத்தினதுக்கு” என்றான் கேலியாய் சிரித்தபடி

“அதுவும் தெரிஞ்சு போச்சா? ச்சே” என அவள் மனதிற்குள் புலம்ப

“ஆமா, அதுவும் தெரிஞ்சு போச்சு” என்றான் அவள் மனதை படித்தது போல்

“எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு” என அவன் பிடியில் இருந்து ஓட விழைந்தவளை அருகே இழுத்தவன்

“இன்னிக்கி நீ வொர்க் ப்ரம் ஹோம்னு எனக்கு தெரியும்… அதான் நானும் வொர்க் ப்ரம் ஹோம் சொல்லிட்டு வந்துட்டேன்” என கண் சிமிட்டினான்

“ஐயோ கடவுளே… நேத்து சாயங்காலம் அந்த நீனா என்னை பாத்து ‘என்ஜாய் வொர்கிங் ப்ரம் ஹோம்’னு சிரிச்சது இதுக்கு தானா, ஏன் இப்படி மானத்த வாங்கறீங்க?” என பொய்யாய் சலித்தாள்

“ஒரே ஆபீஸ்ல வொர்க் பண்றதுல கூட சில அட்வான்டேஜ் இருக்கு இல்லடி”

“எனக்கு ‘டி’ போட்டா கோபம் வரும்”

“அப்ப காபி போடட்டுமா?” என சிரிக்க, அதற்கு மேல் நடிக்க இயலாமல் தானும் சேர்ந்து சிரித்தாள்

“ஏய்… ஒரு நியூ இயர் ரெசல்யூசன் எடுக்கலாமா?” என்றவன் கேட்க

“என்ன? இனிமே அடிக்கடி வொர்க் ப்ரம் ஹோம் பண்றதுனா?” என்றவள் சிரிக்க

“எனக்கொன்னும் அப்ஜக்சன் இல்ல” என சீண்டியவன் “இன்னொன்னும் கூட” என்றான்

“என்ன?” என அவள் புரியாமல் பார்க்க

“இந்த 2013 வருசத்துல நானும் நீயும் சண்டையே போடாம இருக்கணும். டீல்?” என அவன் கை நீட்ட

“நோ டீல்” என அவன் கையை தட்டி விட்டாள்

“அடிப்பாவி… ஏன்?” என விழிக்க

“சண்டையே இல்லைனா என்ன லைப் அது, செம போர். மாசத்துக்கு நாலு சண்டை போடணும், ரெண்டு நாள் மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு யார் மொதல்ல பேசுவாங்கனு தவிக்கனும், ஒருத்தருக்கு தெரியாம ஒருத்தர் ரசிக்கணும். சண்டைய சாக்கா வெச்சு உங்ககிட்ட நாலு கிப்ட் தேத்தணும், இதெல்லாம் இல்லைனா என்ன சுவாரஷ்யம் இருக்கு லைப்ல” என அவள் அபிநயத்துடன் கூற, அதை கண்ணெடுக்காமல் ரசித்தவன்

“பொண்ணுங்க எல்லாம் பிளான் பண்ணிதான் பண்றீங்க… இது புரியாம பசங்க நாங்க பீலிங்க்ல பீஸ் பீஸா போறோம்… ஹ்ம்ம்” என பாவமாய் அவன் கூற, அதை பார்த்தவளுக்கு சிரிப்பு பீறிட சத்தமாய் வாய் விட்டு சிரித்தாள்

சிரிப்பு  ஓய்ந்ததும் “ஹாப்பி நியூ இயர்… ரெண்டு நாள் அட்வான்சா  சொல்றேன், ஏன்னா என்னோட விஷ் தான் உங்களுக்கு முதல் விஷ்ஷா இருக்கணும்” என்றாள் தன் உரிமையை பறைசாற்றுவது போல்

அதையும் ரசித்தவன் “ஐ லவ் யு” என்றான், அவளை விட்டு பார்வையை விலக்காமல்

“ஹாப்பி நியூ இயர் சொன்னா திருப்பி ஹாப்பி நியூ இயர் தான் சொல்லுவாங்க, ஐ லவ் யு சொல்ல மாட்டாங்க… இது கூட தெரியாதா?” என்றாள் வேண்டுமென்றே

“ஐ லவ் யு சொன்னா திருப்பி ஐ லவ் யு டூ சொல்லுவாங்க, சண்டை போட மாட்டாங்க… இது கூட தெரியாதா?” என்றான் அவனும் வேண்டுமென்றே

“இப்ப யாரு சண்டை போட்டா?” என அவள் முறைக்க, மீண்டும் அங்கு ஒரு சண்டை (!) ஆரம்பமாகியது.

(முற்றும்)

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “கண் பேசும் வார்த்தைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *