நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-23

2

பெருவை பார்த்தசாரதி

ஒரு குறிப்பிட்ட  வயது வரை “சிறார்” என்று  அழைக்கப்படுபவர்கள், 15 வயதை எட்டும்போது “இளைஞர்கள்”, “இளைய தலைமுறையினர்” என்ற பட்டத்திற்கு உரியவராகிறார்கள். பள்ளிப் படிப்பில் பத்தாம்  வகுப்பைத் தாண்டிவிட்டாலே, வாலிபன் ஆகி விடுகிறான். இன்றைய காலகட்டத்தில், இளைஞர்களின், திறமைகள், அவர்களின் குறிக்கோள், நோக்கம், செயல்பாடுகள் பற்றிய எண்ணங்களை இக்கட்டுரை மூலம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

முதலில் இந்திய இளைஞர்களின்  சாதனைகளைப் பற்றிய ஒரு சிறிய  கண்ணோட்டத்தோடு இக்கட்டுரையை ஆரம்பிக்கிறேன். அண்மையில் இந்தியாவிலிருந்து இன்சாட் செயற்கைக்கோள் மற்றும் பிருதிவி ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து உலக அளவில் இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சிக்கு மேலும் ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் வெற்றியின் பின்னணியில் இரவு பகலாக உழைத்த எத்துனையோ இளைஞர்களின் திறமைகள் ஒளிந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். சில பட்டதாரி இளைஞர்கள் கிராமப்புறங்களில் விவசாயத்தில் புதிய உத்திகளைக் கொண்டு பயிர் விளைச்சலிலும், மகசூலிலும் சாதனை படைக்கிறார்கள்.  சிலர் விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் புதிய தொழில்நுட்பத்தோடு புதிய கருவிகளைக் கண்டுபிடித்து உலக சாதனை நிகழ்த்தி வருவதையும் ஊடகங்கள் மூலமாக அறிந்து கொள்கிறோம். இப்படி இளைஞர்களின் ஆற்றல்களுக்கு சவால் விடும் துறைகள் பல இந்தியாவில் இருந்தாலும், இன்று படித்த இளைஞர்கள் வேலை தேடி அதிகம் நாடுவது வெளிநாடுகளைத்தான் என்ற பரவலான கருத்து நிலவுகிறது.  ஏனென்றால் வெளிநாடுகளில் இளைஞர்களுக்கு கட்டுக்கடங்காத சுதந்திரம் உண்டு, இங்கே தனிப்பட்ட கலாச்சாரம் அனைத்தையும் கட்டுக்கோப்புக்குள் வைக்கிறது. மேலும் படித்தவுடன் இங்கே உடனே வேலைகிடைப்பதில்லை, உலக அளவில் 20 கோடியே 50 இலட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள், இந்தியாவில் 6 கோடிக்கும் மேல் படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதால், வங்கிகளில் வசூலாகாத கல்விக் கடன்கள் அதிகரித்துள்ளது என்பதை ‘தினமலர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

பிறவிகளிலேயே மனிதப் பிறவி அரிது. அதிலும் இளைமைப் பருவம் என்பது மிக அரிது. இப்படி அரும்பிறவி எடுத்த அனைவரும் தம் வாழ்நாள் முழுவதும் நல்ல ஒழுக்கத்துடன், நன்னடத்தையுடன் வாழ்கின்றனரா .என்பது கேள்விக்குறியே. நூற்றில் ஒரு சிலரே நல்ல மனிதராக வாழ்கின்றனர். ஏன் என்றால், ஏனயவர்கள் சிறார் முதலே நல்ல பண்புடனும், ஒழுக்கத்துடனும் வளர வழிகாட்டப்படாததுதான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறமுடியும். அனைத்துத் தரப்பினரிடமிருந்து இன்றய இளைஞர்களைப் பற்றிய சிந்தனையை மதிப்பிடும்போது, ஒருமித்த கருத்தாக வெளிப்படுவது “இன்றைய இளைஞர்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள்” என்பதுதான். இப்படி வெறும் சொல்லிலே மட்டும் சொல்லிவிட்டால் போதுமா?.. அதற்கான காரணங்களையும், தீர்வுகளையும் ஆராயத் தவறி விடுகிறோம் என்பதே  உண்மை நிலை.

குழந்தையாகப் பள்ளிப்  படிப்பை முடித்துவிட்டு, வளர்ச்சியடைந்த வாலிபனாக கல்லூரியிலிருந்து வெளிவந்து,  அபரிமிதமான கனவுகளோடு சமுதாயத்தில் கலக்கும்போதுதான் பலவித இன்னல்களுக்கு ஆளாகி விடுகிறான். ஒரு அரை நூற்றாண்டுக்கு பின்னே சென்று பார்த்தால், இதே கனவு சற்று வேறுபடும். அன்று இருந்த பொருளாதார சூழ்நிலையில் ஒரு சைக்கிள், ரேடியோ அல்லது தொலைபேசியோ ஒரு வளர்ச்சியடைந்த கிராமத்தில் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. அப்போது வளர்ந்த சூழ்நிலை, இளைஞர்களுக்கு சிந்தனையை சிதறவிடுவதற்கு வழிவகுக்கவில்லை. தானுண்டு தன்பள்ளியுண்டு, படிப்புண்டு என்றிருந்த போது கடமையும் ஒழுக்கமும், பண்பும் இளைஞர்களோடு ஒட்டி உறவாடியது. ஆனால் இப்போது காணும் விஞ்ஞான வளர்ச்சியினால், இணையதளம் (net), முகநூல் (Facebook) சினிமா, எலக்ட்ரானிக் கேட்கெட்டுகள் (Electronic gadgets) போன்றவற்றில் கவனம் சிதறி படிப்பிலும், பண்பிலும் நாட்டம் குறைந்து விட்டது. ஒரு விதத்தில் இன்றைய இளைஞர்களை தவறான பாதையில் செல்ல, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதிக அளவில் காரணிகளாக இருக்கின்றன என்று கூடச் சொல்லலாம்..  ஒன்றுக்கும் உதவாத இத்தகைய களிப்பூட்டும் நிகழ்ச்சிகளில் அதிக அளவில் நேரத்தைச் செலவிடுவதால், இளைமையில் கல்லாது ஊர்சுற்றித் திரிந்து, வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்கின்ற பலரைக் காணமுடிகிறது. இப்படிச் சமுதாயத்தில் நிலவி வரும் சீர்கேடுகளே இளைஞர்களுக்கு ஒரு சவாலாக அமைந்துவிடுவதை நாம் உணர்ந்து கொண்டு வருகிறோம்.

இச்சமுதாயச் சூழ்நிலையை மேலும் சற்று ஆராய்ந்து  நோக்கினால், உண்மை நிலவரம்  புரியும். இப்போது வெளிவருகின்ற பெரும்பாலான திரைப்படங்கள், ஊடகங்கள், தொலைக்காட்சிகள், வலைதளம், வானொலி, செய்தித்தாள் போன்றவை வெளியிடும் தலையங்கச் செய்திகள் அனைத்துமே, இளைஞர்களுக்கு வக்கிரத்திற்கும், வன்முறைக்கும் வழிகாட்டுகின்றன என்பதே பெற்றோர்களின் ஒருமித்த கருத்து. இவர்களின் கூற்றுப்படி, இன்றைய சமுதாய சூழ்நிலை இளைஞர்களுக்கு நல்வழி காட்டுகிறதா?… என்றால் ‘இல்லை’ என்று அடித்துக் கூறமுடியும். இளைஞர்கள் தவறான பாதையில் செல்லும்போது, ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?….என்பதற்கு இந்த வருடத்தில் நிகழ்ந்த ஒரு சில சம்பவங்களை உதாரணங்களாக உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

சமீபத்தில்  தமிழகத்தில் ‘பாங்க் கொள்ளை’  பல இடங்களிலும் பரவலாக சர்வ சாதாரணமாக நிகழும் ஒன்றாக ஆகிவிட்ட நிலையில், இந்தக் குற்றங்களுக்குப் பின்னணியில்  பொறியியல் துறையில் நன்றாகப் படித்துப் பட்டம் பெற்ற  இளைஞர்களே காரணமாக இருந்தனர்  என்ற தகவல் தமிழக மக்களை அதிர்ச்சி அடையவைத்தது. காவல்துறையினர் இவர்களைக் கைது செய்யமுடியாமல் கடைசியில் அந்த இளைஞர்களைச் அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றது, அனைவரின் நினைவை விட்டு அகலவில்லை. பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் மாணவன் தனது ஆசிரியரைக் கத்தியால் குத்தி கொலைசெய்து விட்டு, சிறையில் அடைக்கப் பட்டுள்ளான். அந்த மாணவனை இத்தகைய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளியது எது?……என்ற கேள்விக்கு கல்வி அறிஞர்களும், சான்றோர்களும் பெற்றோர்களும் ஒரே ஒரு காரணத்தை மட்டுமே முன் வைக்காமல், இன்றைய சீர்கெட்ட சமூகம், தரமற்ற கலாசாரம், வன்முறை நிறைந்த சினிமா போன்றவை உடந்தையாக இருந்திருக்கிறது என்று அன்றைய  பத்திரிக்கையிலும், தொலைக்காட்சிகளிலும் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

படித்துப் பட்டம் பெற்ற  ஒரு குழுவினர், தங்களின் ஆடம்பரத்திற்கு அதிகப் பணம் தேவைப்பட்டது. இளவயதிலேயே இணையதள வியாபாரத்தில் தோற்று நஷ்டமடைந்த இவர்கள் தேர்ந்தெடுத்த குறுக்கு வழி என்ன?…..ஒரு பணக்காரரின் பள்ளிக் குழந்தையைக் கடத்தி பணம் பறிக்க முயன்று, கடைசியில் சிறைச்சாலையில் இளைமைக் காலத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்று 20-12-12 இச்சம்பவங்களைப் பற்றி எழுதும் போது கூட, தலைநகர் புதுதில்லியில், நான்கு இளைஞர்கள் ஒரு பெண்ணுக்கு இழைத்த கொடூரச் சம்பவத்தையும் படித்திருப்பீர்கள். ஒட்டு மொத்த இந்திய மக்களையே உலுக்கும் செய்தியாக, இந்த இளைஞர்கள் இக்கொடூரச் செயலைச் செய்திருக்கிறார்கள்.

அனைத்து வசதிகளையும்  ஒரே நாளில் அனுபவித்து விடவேண்டும் என்கிற இளைஞர்களின் பேராசைகளைப் பூர்த்திசெய்ய பெற்றோர்கள் செவிசாய்ப்பது இன்னொரு காரணம். நம்ம பையன் நன்றாகக் படிக்கிறானே என்று ‘ப்ராவிடண்ட் பண்ட்’ (Provident Fund), ‘த்ரிஃப்ட் சொஸைட்டி லோன்’ (Society loan) என்று அனைத்து விதமான கடனையும் வாங்கி அம்மாவும், அப்பாவும் கஷ்டப்பட்டு தினமும் 12 மணிநேரம் உழைத்தது போதாது என்று ‘ஒவர்டைமில்’ (OT) சேமித்த பணத்தில் விலைமதிப்பு மிகுந்த அதிவேகமாகப் பறக்கும் இரு சக்கர வாகனங்களை வாங்கிக் கொடுக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் படும் அல்லல்களை என்றாவது ஒருநாள் இந்த இளைஞர்கள் சிந்தித்திருக்கிறார்களா?….மாறாக பெற்றோர்களை மதிக்காமல், முகத்தை மூடியபடி, பனியன் அணிந்த யுவதிகளோடு இருசக்கர வாகனங்களில் ஊர் சுற்றுவது, போதைப் பொருள் பரிச்சயம் இவற்றால் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு பெற்றோரைப் புறக்கணித்தல் போன்ற சம்பவங்களையும் கேள்வியுறுகிறோம்.

அப்பா, அம்மாவினுடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளுகிற இன்னொரு விஷயம் பாக்கெட் மணி (pocket money). பெற்றோர்களை  வற்புறுத்திப் பெறுகின்ற  இந்த பாக்கெட் மணி, இளைஞர்களை  அழைத்துச் செல்லும் இடம் எது தெரியுமா?………அவசர கதியில் நின்று கொண்டே சாப்பிடும் ‘துரித உணவகம்’ (Fast food), சுகாதாரம் சற்றும் இல்லாத ‘சாலையோர கையேந்திபவன்’ (Roadside eatables), பள்ளி, கல்லூரிக்கு அருகாமையில் சந்துமூலையில் அவ்வப்போது முளைக்கும் ‘சாட்ஷாப்’ (chat shop) ‘பானிபூரி’ அல்லது ‘பான்ஷாப்’ (pan shop). இதைப்போல், இன்னும் பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இன்று இளைஞர்களின் கல்வி அறிவுக்குப் பஞ்சமில்லை என்றாலும் நல்வாழ்க்கைக்கு இட்டுச் செல்லுகின்ற பாதைகள்தான் அவ்வப்போது தடம் மாறுகிறது. ஒரு வகையில் அபரிமிதமான விஞ்ஞான வளர்ச்சியும் கூட இளைஞர்களின் சிந்தனையைத் திசை திருப்புகிறது என்பதை முன்பே சொல்லியிருந்தேன். “தனிமரம் தோப்பாகாது” என்பது போல, பலதரப்பட்ட மக்களைக் கொண்ட ஒரு சமுதாயம் சிறப்பாக அமையவேண்டுமானால், நல்லொழுக்கமும், பண்பும் நிறைந்த இளைஞர்களின் பங்கு மிக மிக அவசியம். இளைஞர்களின் பிரச்சினைகளை மட்டுமே சீர்தூக்கிப் பார்க்காமல், நல்வழி காணும் யோசனைகளையும் ஒவ்வொரு மனிதனும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

வாழ்க்கையில்  பலவித இன்னல்களைச் சந்தித்த பிறகுதான் ஒரு தாய் தன்  மகவை ஈன்றெடுக்கிறாள், பின்னர்  அவன் வளந்து வாலிபனாகி அறிவிற்சிறந்து விளங்கினால் மட்டுமே அந்தத் தாயின் இன்னல்கள் மறைந்து வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி நீடிக்கிறது. தந்தைக்கு மகனைச் சான்றோனாக்குகின்ற கடமை மற்ற கடமைகளுள் முன்னிலை வகிக்கிறது. இத்தகைய கடமைகள் எல்லோருக்குமே பொதுவானது என்றாலும், அதை நிறைவேற்றுவதில்தான் ஒவ்வொருவரும் வேறுபட்டு நிற்கின்றனர். இன்றைக்குக் கூட தந்தையின் அன்புக்கு ஏங்கும் பல குழந்தைகளைக் காணமுடியும். அவர்களுக்கெல்லாம் துருவனின் சாதனையையையும், பிரகலாத சரித்திரத்தையும் எடுத்துக் கூற வேண்டிய காலக்கட்டாயத்தில் இன்று நாம் உள்ளோம்.

அன்னிய ஆதிக்கத்தின் பிடியில் இந்தியா சிக்கித் தவித்தபோது, இந்தியாவின் பெருமைக்குரிய கலை, கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் போன்றவையும் அடிமைப்பட்டுக் கிடந்தது. இந்திய இளைஞர்கள் குருட்டு நம்பிக்கையிலும், வேலையில்லாத் திண்டாட்டத்தினாலும், சமயப் பூசல்களிலும் உழன்று கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு இளைஞன் குறுகிய காலத்தில் அரும் பெரும் தலைவனாகவும், இந்திய கலாச்சாரத்தையும் ஆன்மீகத்தையும் உலகுக்கு அறியச் செய்து அரும்பணியாற்றி உலக சாதனை செய்யமுடிந்தது. தியாக மனப்பான்மையோடு சேவையாற்றுகின்ற இளைஞர்களை எல்லாம் ஒன்று திரட்டி “ராமகிருஷ்ணாமிஷன்” என்ற பேரியக்கத்தை நிறுவமுடிந்தது. அவரது இளமைப்பருவத்தில் பண்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கியதால்தான் ஒரு ‘மஹானாக’ முடிந்தது. குடும்பத்தில் பெண்குழந்தைகளுக்கு நடுவே அதிக தவம் செய்து பெற்ற ஆண்குழந்தை அவர். நல்லொழுக்கம் நிறைந்து ‘நரேந்திரன்’ என்ற பெயரோடு தனது இளைமைப் பருவத்தில் ஆற்றிய பணி பாரதப் பண்பாட்டை வெளிஉலகுக்கு அறிமுகப் படுத்தியதோடு மட்டுமில்லாமல் உலக அளவில் இந்தியாவின் மதிப்பும் உயர்ந்தது. இவர் ஆற்றிய உரையில் மனம் நெகிழ்ந்து போன மக்கள் இவரை “ஸ்வாமி” என்றே அழைத்தனர். அன்று முதல் ஸ்வாமி விவேகானந்தர் என்று உலகத்தாரால் அழைக்கப்பட்டார். ஒரு இளைஞனாக தமது 39 வயது முடிவதற்கு முன், மற்ற இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக் காட்டாக விளங்கி, தன்னம்பிக்கையே வாழ்க்கை, உடலின் சக்தியே பலம், பலவீனம் மனித வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதல் எழுந்திருங்கள், விழித்திருங்கள் குறிக்கோளை எட்டும் வரை அயராது உழையுங்கள் என்று வீரமுழக்கம் செய்தவர்.

இன்றைய இளைஞர்கள் தவறான பாதையில் செல்ல பல காரணங்கள் இருந்தாலும், நல்வழியில் செல்வதற்கு ஒரு சில வழிகளே உள்ளன. தற்காலத்தில் இளைஞர்களின் அபரிமிதமான செயல்திறம் அதிகமாக இருந்தாலும் ஒழுக்கமும் பண்பும் மிகக் குறைந்து காணப்படுகிறது என்பதால்தான்…..இந்திய விஞ்ஞானிகளும், பொருளாதார வல்லுனர்களும் மற்றும் அறிஞர்களும் இன்றைய இளைஞர்களை மையமாக வைத்து, அவர்களின் மேம்பாட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் என்ற மாபெரும் சக்தி இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டும் என்பதில் சந்தேகமில்லை.  ஒரு வலுவான, ஒழுக்கமுள்ள சமுதாயத்தை உண்டாக்க முதன் முதலில் வழிகாட்டுபவர் ஈன்றெடுத்த அன்னை பிறகு கடமையை உணர்த்தும் தந்தை அடுத்தடுத்து ஆசிரியர், சமூகம் இவையெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து, கடைசியில் இறை நம்பிக்கையோடு கலந்து நிற்கவேண்டும். இளைமைபருவத்தில் எந்த ஒரு செயலுக்கும் முடிவெடுக்கும் திறன் மிக முக்கியம், முடிவெடுக்க முடியாத நிலை வரும்போது பெரியோர்களின் வழிகாட்டல் இளைஞர்களுக்கு அவசியமாகிறது. தற்போது இருக்கும் சமுதாய சூழ்நிலையில், இளைஞர்களை நல்வழியில் செயல்பட வைப்பது அனைவருக்கும் ஒரு “சவால்” என்றே கூறமுடியும்!..அதில் வெற்றி கிடைத்தால் “சாதனை” என்று கூடச் சொல்லிக்கொள்ளலாம். இதனால்தான், இளைஞர்களின் முன்னேற்றப் பாதைக்கு வழிவகுத்த, இந்தியாவில் தோன்றிய எண்ணற்ற மகான்களும், அறிஞர்களும், தலைவர்களும் நிகழ்த்திய சாதனைகளையும், அருமை, பெருமைகளையும், அவ்வப்போது இன்றய இளைஞர்களுக்கு ஞாபகப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் இன்றும் நாம் இருக்கின்றோம்.

தொடரும்………

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-23

  1. அருமையான ஒரு கவர் ஸ்டோரி.
    நீங்கள் எழுதும் ஒவ்வொரு தலைப்பும் அருமையாக உள்ளது. 
    இது எல்லோருக்கும் மிகவும் பயன் தரும் என்று நினக்கிறேன்.
    உங்களுடைய அனைத்து மின் அஞ்சல்களையும் என் நண்பர் எல்லோருக்கும் அனுப்புகிறேன். நன்றி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.