முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்

அழகிய பூங்கா அது. மரக்கிளைகளில் பற்பல ஜோடிக்கிளிகள் கிரீச் கிரீச் சத்தத்தோடு பேசிச் சிரித்து கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தன. மரநிழலில் ஒரு ஜோடிக்கிளி ஒருவரையொருவர் கொஞ்சிக் கொண்டிருந்தது. அந்த ஜோடிக்கிளியின் பெயர் அறிவழகன் – நிலா. கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாகக் காதலித்து வரும் ஜோடிகள். தங்கள் காதலை வளர்த்தது இந்தப் பூங்காவில் தான். இரண்டு பேரும் வேறு வேறு சாதியில் பிறந்தவர்கள்.

இன்றும் வழக்கம்போல் அதே இடத்தில் அதே மரத்தின் நிழலில் ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்தபடி ஒருவர் நகத்தை ஒருவர் கடித்தபடி ஒருவரை ஒருவர் கொஞ்சியபடி காதலில் மூழ்கிக் கிடந்தனர்.
‘இன்னும் எத்தன நாளைக்குத்தான் நாம ரெண்டு பேரும் இப்டியே இருக்கிறது?’ என்றான்.

‘என்னடா பண்றது? கூடிய சீக்கிரம் நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம். அப்றம் இப்ப இருக்கிறது மாதிரியே எப்பவுமே பிரியாம வாழலாம்’ என்றபடி தன்மடியில் படுத்துக் கிடந்த அறிவழகனின் தலையைக் கோதிவிட்டபடியே சொன்னாள்.

அந்த மென்மையான ஸ்பரிச உணர்வும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதலும் நேரம் மறந்து காலம் மறந்து இருக்கும் இடம் மறந்து இலயித்துக் கிடக்கச் சொன்னது.
நிமிர்ந்து பார்த்தாள் நிலா. மெல்ல மெல்ல வானில் மேலெழும்பிக் கொண்டிருந்த வான்நிலா பூமியில் உள்ள நிலாவைப் பார்த்து வியந்தது. வெட்கத்தில் மேகக் கூட்டங்களுக்கிடையே ஓடி ஒளிந்தது.

நிலா திடுக்கிட்டு எழுந்தாள். தன் மடியில் கிடந்த அவனை தட்டி எழுப்பினாள். ‘டே அறிவு, எழுந்திருடா, இருட்டிருச்சு’ என்றபடியே பதறினாள். ‘ஆம் நிலா’ என்றபடியே அவளின் தலைகோதிவிட்டு நெற்றியில் ஒரு முத்தமிட்டான். அவளும் அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு ‘நான் கேளம்புறேண்டா’ என்றபடி அவனிடம் விடைபெற்றுக் கொண்டு வேகமாக வீடு நோக்கி நடந்தாள். அவனும் தன் வீடு நோக்கி நடந்தான்.
வீட்டிற்குள் நுழைந்தாள் நிலா. அவளின் அப்பா கேட்டார்

‘நிலா, எங்க போய்ட்டு வர்ற?’.

‘தோழி வீட்டுக்கு போய்ட்டு வர்றேன் ப்பா’.

‘தோழி வீட்டுக்கா? இல்ல காதலனோடு கொஞ்சிக் குலவீட்டு வர்றியா?’

நிலாவுக்கு தூக்கி வாரிப் போட்டது. ‘அப்பாவுக்கு எப்படித் தெரியும்?’ மனதிற்குள்ளேயே தீவிரமாக யோசித்தாள்.

‘எனக்கு எப்டித் தெரியும் னு யோசிக்கிறியா?’ என்றபடியே ‘அந்த வழியே போனபோது நானும் உன்னையும் ஒரு பையனையும் பார்த்தேனே’ என்று உண்மையை ஆவேசமாகக் கத்தினார் அவர்.

‘அப்பா, அது… அதுவந்துப்பா…’ என்று இழுத்தபடியே நிறுத்தினாள்.

‘நானே எப்படியும் அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும்’ என நினைத்தவள் அவரே கேட்டவுடன் சொல்லிவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்தாள்.

‘அப்பா, நான் அந்த அறிவழகனைத் தான் காதலிக்கிறேன் ப்பா. அவன் ரொம்ப நல்லவன் ப்பா. என் மேல் ரொம்ப பாசம் வச்சிருக்கான் ப்பா’ என்றபடி பக்கத்தில் வந்து அவரின் நாடிபிடித்து ‘என் செல்ல அப்பால்ல’ என்றபடியே கொஞ்சினாள்.

அவர் அமைதியாக இருந்தார். நிமிர்ந்து அவள் முகம் பார்த்தார். சிரித்தபடி கண்ணீர் விட்டார். ‘உன் விருப்பப்படியே நடக்கட்டும் ம்மா. என் மகளைப் பற்றி எனக்குத்தான் நன்றாகத் தெரியுமே’. என்றபடி கர்வப்பட்டார். அவளின் உச்சி முகர்ந்தார்.

அவள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்.

அறிவழகன் ஒரு நல்ல எழுத்தாளன். அவனின் எழுத்தையும் அவனின் சிந்தனைகளையும் நல்ல குணத்தையும் பார்த்துப் பழகிக் காதலிக்கத் தொடங்கினாள் நிலா. அவனும் காதலால் ஜாதிகள் அடியோடு அற்றுப்போகும் சமுதாய மலர்ச்சி பெறும் என உறுதியாக நம்பினான்.

அறிவழனும் அம்மாவிடம் பேசத் துவங்கினான். ‘அம்மா, அம்மா, அது… அதுவந்து…’ என்றபடி நிறுத்தினான்.
‘என்னடா மென்னு முழுங்குற? ம்… சொல்லு’ என்றபடி அவன் முகம் பார்த்து நின்றாள்.

‘நான் நிலா ன்னு ஒரு பொண்ணை விரும்புறே ம்மா. அவளையே கல்யாணம் செஞ்சுக்கிறேன் ம்மா’ என்றபடி அவள் அருகில் வந்தான்.

‘நானே உனக்கு ஒரு நல்ல பொண்ணாப் பார்க்கணும் னு நெனச்சேன். எனக்கு வேல வைக்காம நீயே பார்த்துட்ட போல. சந்தோசம் ப்பா’ என்றாள்.

அறிவழகன் எதிர்பார்த்த பதிலைத்தான் அவள் சொன்னாள்.

மகிழ்ச்சியில் திளைத்தான் அவன்.

நல்லபடியாய்த் திருமணம் நடந்தேறியது. இன்பமான இல்லறம். மகிழ்ச்சியான வாழ்க்கை. அன்பான துறுதுறுவென ஆண் குழந்தையும் பிறந்தது.

குழந்தையையும் நல்லபடியாக அன்புடன் வளர்த்தார்கள் நிலாவும் அறிவழகனும்.

குழந்தையை பள்ளியில் சேர்க்க முதல்முறையாக அக்குழந்தைக்கு சாதிச்சான்றிதழ் வாங்க வேண்டியிருந்தது.

தன்னுடைய ஜாதியே தன் குழந்தையின் ஜாதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. திடுக்கிட்டான். ‘ஜாதியால் ஜாதி ஒழியும்’ என்ற அவனுடைய முழுமையான நம்பிக்கை உடைந்தது. ‘காதலால் ஒரு ஜாதி இன்னொரு ஜாதியைத்தான் அழிக்கும்.’ ஆக மொத்தத்தில் மனித மனங்கள் ஒன்றிணைந்து மனித நேயத்தைப் போற்றாத வரை ஜாதிகள் புரையோடிப் போய் மனித மனங்களில் கொலுவீற்றிருக்கும் என்ற சிந்தனையில் மூழ்கிப் போனான்.

அவன் யோசனை தொடர்ந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.