ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகுமா?
போதி மரத்துப் புனிதன் சொன்னான்
“சாவினை அறியாத் தனி மனை இல்லை”
“பிறந்தவர் இறப்பதும் இறந்தவர் பிறப்பதும்
உலகினில் இயல்பாம். ஒழித்திடு சோகம்”
கண்ணன் உரைத்தான் கடும் சமர் நாளில்
“நேற்றைய வலியும் நாளைய கனவும்
நெஞ்சினில் பாரம். நீக்குக அதனை.
இன்றெது உள்ளதோ இதுவே உண்மை”
தத்துவ ஞானி ஜே.கே. பகர்ந்தான்.
“சென்றது மீளுதல் செகத்தினில் இல்லை
இன்று தான் புதிதாய்ப் பிறந்தோ மென்று
எண்ணிக் களிக்க. இன்பமாய் வாழ்க.”
ஆசையாய்ப் போற்றும் மீசைக் கவிஞன்
அழுத்திச் சொன்ன கருத்துக ளாமிவை.
அனைத்தும் கற்றேன். அறிஞன் ஆனேன்.
இத்தனை அறிவையென் மூளைக்கனுப்பிய
எந்தன் கண்களோ இன்னமும் அசடு.
எட்டுச் சுரைக்காய் சுவைக்க அறியா.
கண்டிராக் க்ண்ணனைக் காணவே வேண்டி
கரைந்து உருகினாள் கவிதையில் மீரா.
நிசிதின் பரசத நைன ஹமாரி
(இரவும் பகலும் சொரியுதெம் கண்கள்)
பெற்ற உறவைப் பிரிந்து நிற்கையில்
இரவும் பகலும் சொரியுதெம் கண்கள்.
ஏட்டுக் காயை எடுத்துச் சமைத்து
அசட்டுக் கண்களுக் கருத்துவார் உளரோ?
படத்துக்கு நன்றி
http://nutrihealth.in/health/bottle-gourd-guard-against-diseases/