Blog
-
காதலியுடன் வாழ்வு! (வசந்த காலம்)
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++++++++++++
<< காதலியுடன் வாழ்வு >>
(வசந்த காலம்)++++++++++++++++++++++++
என் ஆத்மாவைக்
கவர்ந்து கொள்ளும்
மிருதுவான முரட்டுக்
கரங்கள் யாருடையவை ?
கசப்பான களிப்பும்,
இனிப்பான வலியும்
கலந்து என் இதயத்தில்
ஊறிப் போயிருக்கும்
ஒயின் எது ?
இரவின் மௌன வேளையில்
என் தலையணை மேல்
பறக்கும் அந்த
இறக்கைகள் யாவை ?
என் தூக்கம் கலைக்கும் அவை !
என்ன நடக்கு தென்று
எவரும் அறியக்
காணாது !
ஆனந்தக் களிப்பை விடப்
பேருன்னத மான
சிரிப்பின்
பிரதிபலிப்பை விடப்
பேரழகுத் துயரம்
கலந்திருக்கும் எனது
பெரு மூச்சில் !
கலில் கிப்ரான்என் கண்மணியே ! வா
இந்தக் குன்றின் மேல்
இருவரும் உலாவி வருவோம் !
பனிப் பொழிவுகள்
நீராய் ஓடும் !
உறக்கத்தி லிருந்து வாழ்க்கை
உயிர்த் தெழுந்து
மேடு பள்ளங்களில்
திரிந்து வருகிறது !
வசந்த காலம்
வைத்த தடங்களைப்
பின்பற்றுவோம்
தூரத் தளங்களில் !
பசுமைக் குளிர்
வயல்களுக்கு மேல்
உயர்ந்த
மலை உச்சிக்கு நாம்
ஏறுவோம்
மகத்தான உள்ளெழுச்சி நம்மை
இழுத்துக் கொள்ள !விடிந்துள்ள வசந்த காலம்
குளிர் காலத்து
அங்கியை
மடித்து வைத்து
எலுமிச்சை மரங்கள் மேல்
படிய விட்டது !
பார்ப்பதற்கு
இரவில் அலங்கரித்த
பெருநகர்த்
திருமணப் பந்தலில் உள்ள
மணப்பெண் போல்
தெரிகிறது !ஒருவரை ஒருவர்
தழுவிக் கொள்ளும்
காதல் ஜோடிகள் போல்
தெரிகின்றன
திராட்சைக் கொடிகள் !
பாறைகளுக் கிடையில்
நடனமிடும்
சிற்றோடைகள் களிப்புடன்
பாடிக் கொண்டு !
மொட்டுகளில் சட்டென
முகிழ்த் தெழும் பூக்கள்
இயற்கை இதயத்தில்
களஞ்சியாய்ச் செழித்த
கடல் வயிற்றி லிருந்து வரும்
நுரை போல் !என் கண்மணியே ! வா
மல்லிகைக் கிண்ணத்தில்
கடந்த காலத்தில் குளிர்ந்த
கண்ணீர்த் துளிகளைக்
குடித்துத்
தேற்றுவோம் நம் ஆத்மாவை !
பறவைகள் பொழிந்திடும்
கீதங்களைக் கேட்டு
உலாவித் திரிவோம்
உவகை யோடு
மதி மயக்கம் உண்டாக்கும்
தென்றலில் !ஊதாப் பூக்கள்
ஒளிந்திருக்கும்
அந்தப் பாறை அருகிலே நாம்
அமர்ந்தி ருப்போம் !
அவை கொடுக்குக் கொள்ளும்
இனிய முத்தங்களை
பரிமாறிக் கொள்வோம்
நாமிருவரும் !+++++++++++++ -
காதல் பூமியாய் காந்த பூமி..!
ஜெயஸ்ரீ ஷங்கர்.சுழன்று செல்லும் தேராக

வெட்டவெளியில் வெள்ளோட்டம்ஆதவனும் வெண்மதியும் ஆளுக்கோர் திக்கில்
பவனியாய் ஊர்கோலத் தேர் திருவிழா..!நாயகர்கள் வாழ்த்தோத ‘செவ்வாயில்’ புன்சிரிப்பும்
கோளங்களின் நட்பும் பகையும் மாயைக்
காதலைப் போற்றுமே…!கடலும் மலையும் மண்ணும் காற்றும்
அடைந்து திமிரும் எரிமலைகளும்
மாயக் காதலுள் கட்டுண்டு கிடக்க…காதல்வானம் அள்ளித் தெளித்த
காதல் வனமே பூகோளம்..!
பூக்கோல காதல் விதைகள் முக்காலமும்..!வேரூன்றி எழுந்து நின்று பல்கிப்
பெருகி கருகி அமிழ்ந்து
மீண்டும் துளிர்க்கும் தளிராம் என்றும்சாகா வரம் பெற்று வந்த
போகக் குழந்தை “அது” – மனித
நெஞ்சங்களுக்குள் போதை தரும்
பொற்குடமாம் பாற்குடம்..!வேண்டாத இதயத்தையும் வேகவைத்தும்
வாழாத மனங்களை வாழ விடும்
வீழாத புகழ்கொடியை உச்சத்தில் ஏற்றும்…!மாயாவிக் காதலே…! நீ…!
பொற்கொடியா…..வடம் நீளும்
தேர் சக்கரத்தின் அச்சாணியா ?இருந்தும் இல்லாமலும்…கண்டும் காணாமலும்
உனைக் காக்கவென்றே காதல் பூமியாய் சுழலும்
காலகாலமாய் காந்த பூமி..!================================================
-
வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6
தேமொழி
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போலே ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததாவரிகள்: வாசன்
<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5>>
-
கண்ணன் என் காதலன் – ‘கண்டால் சொல்லு!’
காதோரம் கிசுகிசுக்கும் காற்றேநீ கண்டாயோ?
ஆற்றோரம் அசைந்திருக்கும் நாற்றேநீ கண்டாயோ?
வானெங்கும் வட்டமிடும் வெண்ணிலவே கண்டாயோ?
தேனெடுக்க சுற்றிவரும் சின்னவண்டே கண்டாயோ?மூடியுள்ள கண்ணுக்குள்ளே மோகனமாய் சிரித்திடுவான்!
நாடியென்றன் நெஞ்சுக்குள்ளே நர்த்தனங்கள் புரிந்திடுவான்!
கண்திறந்து பார்த்துவிட்டால் கணத்தினில் மறைந்திடுவான்!
மண்மயங்கும் வண்ணக்கண்ணன் மாயம்பல புரிந்திடுவான்!ஆடும்மயில் கண்டாலோ அவன்நினைவே வருகுதடி;
பாடுங்குயில் குரலினிலே வேய்ங்குழலே ஒலிக்குதடி;
கார்மேகம் கண்டாலோ கண்ணமுகம் தெரியுதடி;
பார்புகழும் அவன்நினைவே மார்த்துடிப்பாய் ஆச்சுதடி;கால்கடுக்க சுற்றிவரும் காற்றேநீ கண்டால் சொல்லு…
கடலேறி விளையாடும் அலையேநீ கண்டால் சொல்லு…
ஊருக்கெல்லாம் ஒளிகொடுக்கும் சூரியனே கண்டால் சொல்லு…
பாருக்குள்ளே மணியாம்என் மன்னவனைக் கண்டால் சொல்லு!படத்துக்கு நன்றி: http://www.radhagopaljiutempel.com/srikrishnasriradhe.htm
-
காதலின் வேதம்
பவள சங்கரி
காதலின் கீதம் – Song Of Love (Khalil Gibran) – மொழிபெயர்ப்பு
காதலர்களின் விழிகளும் யானே
இச்சையூட்டும் இன்பரசமும் யானே
மற்றுமந்த உளத்தின் ஊட்டமும் யானேவிடியலில் மலரும் மனமும் முத்தமிட்டுத்தம் அமுதகத்தின்மீது கிடத்திக்கொள்ளும் அக்கன்னியவளையும் கொண்டதோர் ரோசாவும் யானே.
நிலையான செல்வத்தின் இல்லமும் யானே
இன்புறவின் துவக்கமும் யானே.
சாந்தம் மற்றும் கலக்கமின்மையின் தொடக்கமும் .யானே
இரமியத்தின் இதழின் மீதான் மென்னகையும் யானே
எம்மைத் தொடர்ந்து பற்றும் தருணமதிலந்த யுவன்தம் கடமையையும் மறந்து, அவர்த்ம் முழு வாழ்வும் இன்பக்கனாவின் நிதர்சனமாகிறது.பாவலரின் எழுச்சியும் யானே,
கலைஞனின் வெளிப்படுத்துகையும் யானே,
மற்றுமந்த இசைக்கலைஞனின் அருட்கிளர்ச்சியும் யானேகருணைநிறைத் தாயினால் நேசிக்கப்பட்டதோர் குழவியின் இதயமதின் புனிதாலயமும் யானே.
ஓர் இருதயத்தின் கதறலில் தோன்றுபவன் யான்;

ஓர் கோரிக்கையதைத் தவிர்ப்பவன் யான்;
எம் அமைவு தேடுமந்த இருதயத்தின் இச்சையதை;
அஃது குரலின் வெற்றுக் கோரிக்கையை விலக்குகிறது.ஆதாமிற்கு ஏவாளின் மூலமாகவே காட்சியளித்தேன் யான்.
நாடு கடத்தலே அவர்தம் தேர்வாக இருந்தபோழ்தும் எம்மையே சாலமனுக்கு வெளிப்படுத்தியதோடு
எம்மால் அவர் இதமும் பெற்றார்.ஹெலேனாவைப் பார்த்து யான் புன்னகைத்ததால் தர்வாடாவை அழித்தாளவள்:
இருப்பினும் கிளியோப்பாட்ராவிற்கு யான் மகுடம் சூட்டியதால் அந்த நைல் நதிக்கரையில் அமைதி நிலவியது.காலங்களைப் போன்றவன் யான் – இன்று கட்டமைந்து நாளை அழிந்து படக்கூடியது;
ஆக்கலும், அழித்தலும் புரியுமோர் இறையைப் போன்றோன் யான்;
ஓர் ஊதாப்பூவின் பெருமூச்சைக் காட்டிலும் இனிமையானவன் யான்;
பொங்கியெழும் புயலைக் காட்டிலும் உக்கிரமானவன் யான்.வெகுமதிகள் மட்டுமே வசீகரிப்பதில்லை எம்மை;
பிரிவு ஊக்கமிழக்கச் செய்வதில்லை எம்மை;
இன்மையும் செதுக்குவதில்லை எம்மை;
இழப்பச்சம் மெய்ப்பிப்பதில்லை எம் விழிப்புணர்வை;
உன்மத்தமும் எமக்கோர் ஆதாரமாவதில்லை.ஓ நாடிச்செல்வோரே, உண்மையை ம்ன்றாடும் உளமையே யான்;
மேலும் தேடலிலும், பெறுதலிலும் மற்றும் எம்மைக் காப்பதிலும் உள்ள உம் நேர்மையே எம் நடத்தையைத் தீர்மானிக்கலாம்SONG OF LOVE – WATCH IN YOUTUBE
-
பார்வை என்ன மணல் வெளியோ?
ஷைலஜா
காதலா என்றிது தெரியவில்லை மனம்

ஆதலால் என் வசமில்லை-உடல்
விறகாய் எரிவதைப்பார்த்தாயா-நறு
மணத்தை அதனில் சேர்ப்பாயா?
பாடாப்பாடல் அறிந்துகொண்டேன் – அது
உன் பேர்தான் எனவும் உண்ர்ந்துகொண்டேன்
இரவுப்பூவை மலர வைத்தாய்-பின்
உறக்கத்தில் சுகத்தை வரவழைத்தாய்-உன்
பார்வை என்ன மணல் வெளியோ-நினைவுப்
புதைந்து அழுந்தி மீள்கிறதே
உன் வழிப்பாதையில் என் இதயம் -அது
மீட்டும் ராகம் இன்று உதயம்!
நெஞ்சிற்குள் ஏன் இந்நெருப்பு-அட
நீதானடா இதற்குப்பொறுப்பு! -
காதலர் தினம்
தமிழ்த்தேனீ
இந்தக் காதலர் தினக் கொண்டாட்டமே வாலன்டைன் என்னும் ஒருவரது மரணத்தில்தான் கொண்டாடப்படுகிறது.
விவரங்கள் வேண்டுவோர் ; http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
என்னும் விக்கிபீடியா தளத்தில் படிக்கலாம்
To-morrow is Saint Valentine’s day,

All in the morning betime,
And I a maid at your window,
To be your Valentine.
Then up he rose, and donn’d his clothes,
And dupp’d the chamber-door;
Let in the maid, that out a maid
Never departed more.—William Shakespeare, Hamlet, Act IV, Scene 5
என்று வில்லியம் ஷேக்ஸ்பியர் கூறியதை மேற்கோளாகத் தருகிறேன்
நாம் காதலிக்கும் ஒருவருக்கு ஒரு தினையளவு துன்பம் வந்தாலும் மனம் தாங்காமல் அவர் துன்பத்தைப் போக்கும் முயற்சியில் ஈடுபடுவதுதான் உண்மைக் காதல்
காதலுக்காக காதலியையே ,அல்லது காதலனையே விட்டுக் கொடுக்கலாம், ஆமாம் அவர் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் போதும் என்று எந்த மனம் நினைக்கிறதோ அந்த மனம் கொள்வதுதான் உண்மைக் காதல்
காதலர் தினம் என்று கொண்டாடும் நாம் என்னென்ன செய்கிறோம் என்று எண்ணிப் பார்த்தால்
எதிர் பாலினத்தில் இருப்பவர் நம்மைக் காதலிக்கிறாரா என்றே தெரியாமல் தன் விருப்பத்தை மட்டும் தெரிவிக்கும் நாளாக நினைக்கிறோம்.
அப்படி அவர் நம் காதலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவரை அழிக்கத் திட்டமிடுகிறோம். இதல்ல காதல்
“இன்னுமா இருக்கிறது காதல்” திருமணம் செய்து கொண்ட மனைவியை காதலித்து அவளை அன்பாக ,மரியாதையாக, நடத்தத் தெரியாத இந்த நாளில் இன்னுமா இருக்கிறது காதல்? என்றே கேட்கத் தோன்றுகிறது
பருவ ஈர்ப்பை காதல் என்று எண்ணி அதற்கு உடன்படாத பெண்ணை திராவகம் ஊற்றி துடிக்க வைக்கும் எண்ணம் கொண்ட இளைஞர்கள் இருக்கும் இக்காலத்தில் இன்னுமா இருக்கிறது காதல் ? என்றே கேட்கத் தோன்றுகிறது
“ஒருவரை ஒருவர் உண்மையாகப் புரிந்து கொளுவது “ காதல் “ அது இது வரையில் ஏற்படவே இல்லை “
-தமிழ்த்தேனீ
ஒருவரைக் காதலித்தால் அது காதல், முதல் காதல் ,இரண்டாம் காதல் என்று ஆரம்பித்தாலே ,அங்கு காதல் புனிதம் இழந்துவிடுகிறது .
“காதல் ஒரு மலர்” ,அது ஒரு முறைதான் பூக்க வேண்டும். மீண்டும் பூக்க முடியாது , காதல் தவறு என்று நான் சொல்வேயில்லை . காதலைத்தவிர இன்னும் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது
காதல் என்பது நம் வாழ்க்கையின் ஒரு அங்கம் ,ஆனால் காதலைக் காமம் என்று புரிந்துகொண்டு அதைத்தவிர வேறு ஒன்றுமே பெரிதல்ல என்று எண்ணும் இக்கால இளைஞர்களின் மனப் போக்கு தவறு என்றுதான் சொல்லுகிறேன் . அதற்கேற்றார்ப் போல் பத்திரிகைகள்,,தொலைக் காட்சிகள்,திரைப் படங்கள் எல்லாமே காதலையே மையமாக வைத்து இளைஞ்ஞர்கள் மனதைக் கெடுத்து விட்டார்கள் .
“ உலகத்திலே நீர்விழுச்சியிலிருந்து விழும் தண்ணீர் சுத்தமானது என்று கூறுவர், அந்தத் தண்ணீரும் கீழ்நோக்கிதான் விழும். அது மிக எளிது ஆனால் தண்ணீரை மேலேற்றவேண்டுமானால் ஒரு விசை தேவைப் படுகிறது
அது போல பரிசுத்தமான மனதும் கீழ்த்தரமான எண்ணங்களை நோக்கி வெகு எளிதாக ஓடும் ,அதைக் கட்டுப் படுத்தி ஒழுக்கம் என்னும் விசை கொண்டு மனதை நல் வழிப் படுத்தவேண்டும் .
அது போல காதலின் சக்தி கொண்டு ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தன் காதலனை அல்லது தன் காதலியை ஒரு நல்ல உன்னதமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் நோக்கோடு காதலித்தால் அந்தக் காதலை நானும் வரவேற்கிறேன்.
நான் ஒன்றும் முனிவனல்ல ,எனக்கும் காதல்,அதாவது உண்மையான காதல்,பரஸ்பரம் இருவரும் மனம் விட்டுப் பேசி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் காதல்,சுயநலமில்லாத காதல் ,அனைத்தும் பிடிக்கும் .காதல் வாழ வைக்க வேண்டுமே தவிற பெற்றோர்களுக்கும்,அவர்களுக்கும் துன்பம் தரக்கூடியதென்றால் அதை காதல் என்று என் மனம் இடம் தரவில்லை .. காதலியுங்கள் ,கண்ணியமாக ,வாழ்க்கையை நன்றாக அமைத்துக் கொள்ள காதலியுங்கள் .” காதல்தான் இளைஞனையும் சரி யுவதியையும் பக்குவப்படுத்துகிறது என்பது என் எண்ணம்…அது தோல்வியோ அல்லது வெற்றியோ என்பதல்ல முக்கியம்…இதன் மூலம்
அவர்கள் அடையும் அனுபவம் அது அவர்களை ” செம்மைப் படுத்தினால் பரவாயில்லை, இப்போது பல காதல்கள் அனைவரையும் சீரழிக்கிறது என்பதே உண்மை . காதல் என்பதே பருவமடைந்த பெண்ணிற்கும் , வயது வந்த ஆணுக்கும் இயல்பாய் மலர்வது.
ஆனால் இப்போது அடுத்தவன் மனைவி மேல் காதல் வருகிறது. அடுத்த பெண்ணின் கணவன் மேல் காதல் வருகிறது ? அப்படியானால் அடுத்தவன் மனைவியை கடத்திக் கொண்டு போகலாம் தவறில்லை,மேலும் அவள் அனுமதித்தால் ,உலக ஒழுக்கம் மறந்து அவளை அடையவும் அடையலாம் ,அதுவும் தவறில்லை, அப்படித்தானே….? இப்படிப் போகிறது இந்தக் காலத்து நியாயம் … இவையெல்லாம் காதலா? இன்னமும் காதல் இருக்கிறதா? இல்லை இல்லை இல்லவே இல்லை என்பதே உண்மை.
அச்சம் ,மடம் நாணம் அப்பிடி…இப்பிடீன்னு சொல்வதெல்லாம் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும்தான் ,அதில் தவறியவர்கள் தான் கெட்டுப் போவது மட்டுமல்லாமல் தன் வாரிசுகளுக்கும் எயிட்ஸ் போன்ற நோயைப் பரப்புகிறார்கள் நண்பரே ,நன்றாக சிந்தித்துப் பாருங்கள் .கற்பு என்பது மடமையல்ல ஒழுக்கம்.
வாலிப வயதில் பெண்களை வெறிக்க வெறிக்கப் பார்க்கும் ஒவ்வொரு ஆணும் தனக்கு திருமணம் ஆனவுடனே தன் மனைவியைப் பார்த்து சொல்லும் முதல் வார்த்தையே “நல்லா போர்த்திகிட்டு வா கண்டவன் கண்டபடி பாக்குறான்” என்பதே . தனக்கென்றால் ஒரு நியாயம் , அடுத்தவருக்கென்றால் ஒரு நியாயமா? தனக்கு வரும் மனைவி மட்டும் தன்னைத் தவிர வேறு யாரையும் நினைத்துகூட பார்க்கக் கூடாது ,என்று நினைக்கும் ஒவ்வொரு ஆண்மகனும் ஏன் தானும் ஒழுக்கமாக இருந்து ஒரு மனைவிக்கும் உண்மையானவனாக இருக்கக் கூடாது .?
பெண்கள் வீரமா இருக்கலாம் ,வீரமா இருப்பது வேறு,விவேகமா இருப்பது வேறு . பொதுவாக இருக்கட்டும். காதலிக்கும் பெண் ஜீன்ஸ் போட்டுகிட்டு வந்தால் பிடிக்கும் ஆனால் அவளே திருமணம் ஆன பின் அவளே புடவைக் கட்டிக்கிட்டு வரணும். அச்சம் என்பது எல்லாவற்றிர்க்கும் அஞ்சுவது என்று பொருளல்ல,
அஞ்சுவது அஞ்சாமை கூடாது என்று பெரியவர்கள் சொல்வதன் பொருளே எதற்கு அஞ்சவேண்டுமோ அதற்கு அஞ்சித்தான் ஆகவேண்டும் ,எதற்கு அஞ்சக் கூடாதோ அதற்கு அஞ்சக் கூடாது என்பதுதான்
நாணம் எதற்கு எங்கு வரவேண்டுமோ அங்கு வராமலிருந்தால் அது துன்பம் பயக்கும். இந்தக் காலத்துப் பெண்கள் “ நிமிர்ந்த நன்நடை நேர் கொண்ட பார்வை “ என்று பாரதி சொன்னதை தவறாக புரிந்து கொள்கிறார்கள்
தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு பெண் உண்மையாக விரும்பினால் அவளின் அழகிய நகங்களும் ஆயுதமாக மாறும் என்று மஹாத்மா காந்தி சொன்னது …உண்மை . எத்தனை பேரால் அது போல தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது
முடியாமல் போவதால் தானே பல பெண்களின் வாழ்க்கையை சில மிருகங்கள் சீரழிக்கின்றன . பெண்கள் அச்சம் ,நாணம் போன்றவற்றைக் குறைத்ததனால்தான் வேலைக்குப் போக முடிகிறது என்று சொல்கிறார்கள்
அதல்ல காரணம் .பெண்கள் வேலைக்கு போக முடிகிறது என்றால் (midnight network support ) அது மட்டுமல்ல ” இன்னும் மொத்த ஆண்களுமே மிருகமாய் மாறாமலிருப்பதும் கூடத்தான். இன்னும் மனிதம் கொஞ்சம் மிச்சமிருப்பதால்தான் பெண்கள் வேலைக்கோ , கடைகளுக்கோ செல்ல முடிகிறது (midnight network support ).. செல்ல முடிகிறது
தயவு செய்து பெரியவர்கள்அக்கறையோடு,அன்போடு, சொல்வதை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள் . இப்பொழுதும் பெண்கள் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் வரை பத்திரமாக வரவேண்டுமே என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர்களைப் புரிந்து கொள்ளுங்கள்.
ஏனென்றால் இப்போதைய பெண்களும் ஒரு காலத்தில் திருமணமாகி தாயாகப் போகிறவர் தான் .வருங்காலத்தில் திருமணமாகி குழந்தைகள் பிறக்கலாம் .ஆண் குழந்தையும் பிறக்கலாம்,பெண்குழந்தையும் பிறக்கலாம் நீங்களும் உங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டு காத்திருக்க வேண்டி வரலாம்
நாம் எதாக நினைக்கிறோமோ அதாக ஆகிறோம், நல்லதே நினையுங்கள் நல்லது நடக்கும். every action is having a equvalant re action . எப்படி காலடி எடுத்து வைக்கிறீர்களோ அதற்கேற்றார்ப் போலதான் பலனும் கிடைக்கும் .
பல தற்கொலைகளும் ,கள்ளக் காதலுக்காக கணவனைக் கொலைசெய்வதும் , மனைவியைக் கொலை செய்வதும் இப்போதெல்லாம் அதிகமாகிவருகிறது. மிகக் கேவலமாக இருக்கிறது திருமணமான பின்னரும் ஏற்படும் கள்ளக் காதலுக்காக தாம் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்யும் அளவுக்கு போகும் ஆணையும் ,பெண்ணையும் நினைத்தால் நாம் மீண்டும் கற்காலத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அது மட்டுமல்ல காதலை காமம் என்று தவறாக புரிந்து கொண்டதனால் ஏறப்டும் கேவலமான வாழ்க்கைத் தரம், இந்த நிலையை மாற்றியே ஆகவேண்டும்.
காதலிப்பதே ஒரு தற்கொலைக்கு சமமானதுதான், அதற்குப் பிறகு மீண்டும் ஒரு தற்கொலையா…? வாழ்வதற்கு தைரியம் வேண்டுமா..? அல்லது சாவதற்கு தைரியம் வேண்டுமா..? யோசித்துப் பார்த்தால் சாவதற்கு அசட்டுத் தைரியம் போதும் . ஆனால் வாழ்வதற்கு புத்திசாலித்தனமான தைரியம் வேண்டும். வாழ்வதுதான் கடினம், சாவது சுலபம் .
“கண்ணில் காதலியர் கடைக்கண் காட்டி விட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் சிறு கடுகாம்”
என்னும் யுகக் கவிஞன் பாரதியின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன
“ துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே
காதல் பொல்லாதே” என்று கொஞ்சம் மாற்றிப் பாடத் தோன்றுகிறது
வாழ்க்கையின் நிதர்சனத்தை எதிர்கொள்ளத் தைரியமில்லாதவர்கள் காதலிக்கத் தகுதி இல்லாதவர்கள் என்பது என் கருத்து,
“வாழ்ந்து பார்ப்போம் வா நைனா
வாழ்க்கை இது சுலபம் சுலபம்
வாழத்தெரிந்தால் வா நைனா தடைகளெல்லாம் விலகும் விலகும்”
என்று பழைய பாட்டை மாற்றிப் பாடலாம்
காதலிக்கும் முன்னர் கொஞ்சம் யோசித்து திடமாக திட்டமிட்டு காதலித்தால் காதலில் இவ்வளவு அவஸ்தைகள் இல்லை.பருவ ஈர்ப்பை காதல் என்று நம்பி காதலிக்க ஆரம்பித்தால் இதுதான் கதி
அதுவும் தவிர ஒவ்வொன்றிற்கு ஒவ்வொரு தகுதி நிர்ணயம் இருப்பதைப் போல காதலிக்கவும் சில தகுதிகள் வேண்டும். என்று ஒரு நியதி நாமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்தத் தகுதிகள் இருக்கிறதா என்று ஆராயந்து அதற்குப் பின் காதலிக்கத் தொடங்கவேண்டும்.
அப்படி தகுதியில்லாத காதல் என்றால்,மறு பரிசீலனை செய்து ஏற்படப் போகும் பின் விளைவுகள் அத்தனையையும் தாங்களே சமாளிக்க வேண்டும் யாரையும் உதவிக்கு அழைக்கக் கூடாது அப்படி அழைத்தாலும் யாரும் உதவிக்கு போகக் கூடாது. என்று ஒரு கட்டுப்படு விதிக்கவேண்டும்.அப்போது முன்கூட்டியே யோசிப்பார்கள்
இன்னும் சற்று மேலே போய் சிந்தித்தால் வயதுக்கு வராத இளம் தளிர்களைக் கற்பழிப்பதும் கொல்வதும் நாமெல்லாரும் மனிதர்களா அல்லது மிருகமா என்று ஆத்திரம் வருகிறது
இப்போது புதியதாக ஒரு அசிங்கமான கலாச்சாரம் பத்திரிகையில் வெளியிட்டுள்ளார்கள், ஆண் விபசாரிகள் என்று தலைப்பிட்டு . ஒரு ஆண் விபசாரி சொல்லுகிறார் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பாதிப்பாராம், மாதத்துக்கு 10 நாட்கள் மட்டுமே மற்ற நாட்களில் சம்பாதித்த வருமானத்தை வைத்து சந்தோஷமாக இருப்பாராம், இதை பத்திரிகைகள் வெளியிடுகின்றன , கேவலமாக இல்லையா நாட்டின் நிலைமை.
இதைப் போன்ற இழி செயல்களைக் கட்டுப்படுத்தாமல் இருந்தால் அது அரசுக்கே கேவலமில்லையா……..? உண்மைக் காதல் வாழ்க
தற்கால இளைஞர்கள் தங்களுடைய உண்மையான மனோசக்தியை நாட்டுக்காகவோ, தங்களின் உண்மையான நல்ல நோக்கத்துக்காகவோ பயன் படுத்துவதை விட்டு எப்பொழுது பார்த்தாலும் காதல்,காதல்,காதல் என்று அலைவதைப் பார்க்கும் போது என் மனம் குமுறுகிறது ,அதனால்தான் பெரியவர்களாகிய நாம் , சிறியவர்கள் நம்மை திட்டினாலும் பரவாயில்லை
என்று கூடியமட்டும் நல்லதைச் சொல்லுவோம் , வருங்காலம் வளமாக வேண்டுமானால் இளைஞர்கள் விழிப்புணர்வு பெற்று ,நம் நாட்டை உயர்த்த கீழ்த்தரமான உணர்வுகளை களைந்து விட்டு உன்னதமான லட்ஷியத்துடன் வாழ ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடுதான் எழுதுகிறேன் . நம் நாடு முன்பு ஆங்கிலேயர்களிடம் அடிமைப் பட்டிருந்தது
இப்போது நம்மவர்களிடமே அடிமைப் பட்டிருக்கிறது இதை உணர்ந்து நாம் மீண்டும் ஒரு சுதந்திரத்தை அடைந்து வருங்கால வாரிசுகளுக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான வளமான நாட்டைஉருவாக்க இளைஞர்கள் முன் வரவேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் .
காதலுக்கு நேரம் ஒதுக்குங்கள்,இது வாலிப வயது .உலகத்தில் உள்ள மொத்த தவறையும் நாமே செய்து ,அதன் மூலமாகவரும் விளைவுகளை பட்டுத் தெரிந்து கொள்ள நம்மால் மட்டும் முடியாது,ஏனென்றால் அதற்கு நமக்கு நாம் வாழும் காலம் போதாது .அதனால் மற்றவர்கள் அனுபவத்தையும் கண்டு கேட்டு அதில் உள்ள குறைகளை நீக்கிவிட்டு காதலியுங்கள் .அப்போது இனிமையான காதல் வாழ்க்கை அமையும் .
உண்மையாக சொல்லுகிறேன் ஆண்களும் பெண்களும் எப்போதுமே தவறு செய்யும் நோக்கத்தோடு இருப்பதில்லை , அவர்களின் பாலின உணர்வுகள் தூண்டப்படும்போதுதான் அவர்கள் தன் வயமிழக்கிறார்கள் .ஆனால் தூண்டப் படுதலின் காரணமாகவே அப் “பாவிகள் ” ஆகின்றனர் .ஆகவே பெண்களும் ஆண்களும் “தூண்டாமலும் ,ஒழுக்கம் தாண்டாமலும் இருந்தால் ஆணும் பெண்ணும் சமமான ஒரு நல்ல சமூதாயம் மலரும்
“ஆண்களிலும் ,பெண்களிலும் இதற்கு முன்னுதாரணமும் , விதி விலக்குகளும் உண்டு ” நான் ஒட்டு மொத்த ஆண்களையும் ,ஒட்டு மொத்த பெண்களையும் குறை சொல்லவில்லை . ஆனால் சிலர் செய்யும் தவறுகளுகளால் நாம் அனைவருமே பாதிக்கப் படுகிறோம் .தார்மீகப் பொறுப்பு ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப் படுகிறோம் .
ஆகவே காதல் இன்னும் இருக்கிறதா என்று இக்கால இளைஞர்கள்தான் சிந்திக்க வேண்டும்.
அது மட்டுமல்ல உண்மையாய்க் காதலிப்பவர் திருமணத்துக்கு முன்னர் யாரைக் காதலித்தார்களோ அவரையே திருமணத்துக்குப் பின்னும் உண்மையாகக் காதலிப்பார்கள். ஆகவே உண்மையாய்க் காதலியுங்கள்.காதலிப்பவரையே திருமணம் செய்து கொள்ளுங்கள். அப்போது ப்ரச்சனைகள் வராது.
அல்லது நாம் காதலிப்பவர் வேறு ஒருவரைக் காதலிக்கிறார் அவருடன் வாழ்ந்தால் இன்பமாக இருப்பார் என்று தெரிந்தால் அவரை அவர் இஷ்டத்துக்கு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் உரிமைகளை அளித்து அவருடைய அடிப்படை உரிமைகளை மறுக்காமல் வாழக் கற்றுக் கொள்வோம்
இப்படி ஒரு நடைமுறைக்கு நாமெல்லோரும் மாறி விட்டு அதன் பின்னர் காதலர் தினம் கொண்டாடுவோம்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
படத்திற்கு நன்றி :
http://www.sonofthesouth.net/leefoundation/civil-war/1864/february/valentines-day.htm
-
பாதுகாப்பு!
பாகம்பிரியாள்

காதலில் வீழ்ந்தாலும், வெளியே தெரியாது
கட்டிக் காக்க, ஒளிய வேண்டும் என்ற உந்துதலில்
ஓர் அறை ஒன்றைத் தேடுகையில்
குயுக்தியாய் தோன்றியது ஓர் எண்ணம்,
சர்க்கரைப் பாகில் செய்ததை தேர்வு செய்யலாமென்று!
பளிச்சென்று இருந்ததால் உள்ளேயிருந்து
வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன்
பாதுகாப்பாய் இருக்கிறது என்றே
ஆனால் ஒவ்வொரு தடவையும் அருகில் வந்து
அழகாய் குவியும் உன் உதடுகள் பட்டு
உருகப்போவது கண்ணாடி மட்டுமல்ல நான்
என்ற என் இறுமாப்பும் என்றே தெரியாமல்!படத்துக்கு நன்றி
http://www.colourbox.com/image/close-up-shot-of-a-woman-s-lips-kissing-image-1729702
-
போந்தை
உ
நமசிவாய‘போந்தை’
பதினோராம் திருமுறை வைப்புத்தலம்
நூ த முத்து முதலி
மயிலைதமிழகத்து சித்தாந்த சைவ நெறியின் பெருமறைகளாம் பன்னிரு திருமுறைகளிலுள்ள 18000+
பாடல்களில் பதிகம் ஏதும் கிட்டாது குறிக்கப்படும் பேறு மட்டும் பெற்ற மிக்க பழமைவாய்ந்த திருத்
தலங்கள் ‘வைப்புத்தலங்கள்’ என வகைப்படுத்திய மரபில் காணும் ஓர் தொண்டைநாட்டுத் தலம்‘திருப்போந்தை’
தமிழகத்து வடஎல்லையில் அமைந்த திருவள்ளூர் மாவட்டத்தில் கவரப்பேட்டை மேற்காக ஊத்துக்
கோட்டைக்கு வடக்காக ஆந்திர சத்தியவேடுக்கு அருகமைந்த சிற்றூராகும் இத்திருப்போந்தை.
பராமரிப்பிலிருந்து இந்நாள் தனித்து விடப்பட்ட நிலையில் காணும் நூற்றுக்கணக்கான தமிழகத்துப்
பழங்கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.பதினோராம் திருமுறையில் தொகுக்கப்பெற்ற பட்டினத்தாரின் 5 நூல்களுள் நான்காவதான திரு
ஏகம்பமுடையார் திருவந்தாதியில் (65)“ஆலையங்கார் கருகாவை கச்சூர் திருக்காரிக்கரை
வேலையங்கேறு திருவான்மியூர் திருஊறல் மிக்க
சோலையங்கார் திருப்’போந்தை’ முக்கோணம் தொடர் கடுக்கை
மாலையன் வாழ் திருஆலங்காடு ஏகம்பம் வாழ்த்துமினே” 11.990எனவரும் பாடலில்,
கச்சூர், திருவான்மியூர், ஊறல், ஆலங்காடு காரிக்கரை எனும் தொண்டைநாட்டுத் தலங்களுடனேயே
இப் போந்தையையும் பட்டினத்தார் பாடியுள்ளார்.போந்தை எனும் சொல் அடிமரத்தில் குடம்போல் பருத்துக்காணும் உள்ளினமாகிய பனைவகையைக்
குறிக்கும் (புறம் 85) நன்கு வளர்ந்து விளங்கும் தொடர்பால் ஆகுபெயர்வழி ஓர் இடப்பொயரும் ஆனது“நாளிகேரம் செருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்
கோளி சாலந்தம் ஆலம் குளிர்மலர்க் குரவம் எங்கும்
தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்
நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும்”
78 திருத்தொண்டர் புராணம்என சேக்கிழார் பல்வகை பயிரினங்களைக் காட்டுமிடத்து நம் ‘போந்தை’யையும் குறித்துள்ளார். சங்க
நூல்களிலும் போந்தை பெரிதும் பயின்றுள்ளமை இக்கருத்துரைக் கடைக்கண் இணைப்பில் காண்க.

நம் ‘போந்தை’த் தலத்தின் (‘போந்தை’வாக்கம்) அமைவிடம் (இணைத்துள்ள வரை படங்கள் காண்க)
ஆந்திர எல்லை மிகமிக அருகு சென்னை மாநகருக்கு ஏறக்குறைய 55 கிமீ வடமேற்காகவும், டில்லி
கல்கத்தா என வடக்காகச் செல்லும் பெருவழிக்கு (கவரப்பேட்டை) 15 கிமீ மேற்காகவும் காணலாம்.தன்னார்வத் தொண்டர்கள் வைத்துள்ள சிதலம் அடைந்த பிசாலீசுவரர் கோவிலின் தோற்றம் காண்க.
தாய்நாட்டுப் பண்பாட்டை போற்றுவதில் தமிழ் மக்களை அவ்வப்போது விழித்தெழச்செய்யும் தூண்டுகோல்
ஏந்துவோர் மக்கட்தொகைக்கு ஏற்ப வளர்தலும் வேண்டும்.திருச்சிற்றம்பலம்
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
புள்இரியும் புகர்ப்போந்தை பட்டினப்பாலை 74
இரும்பனம் போந்தைத் தோடும் பொருநர் ஆற்றுப்படை 141
போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள் 16 அகம் 238
முழாஅரைப் போந்தை பொருந்தி நின்று 7 புறம் 85
வட்கர் போகிய வளரிளம் போந்தை 3 புறம் 100
போந்தையம் தோட்டின் புனைந்தநர் தொடுத்து3 புறம் 265
மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே 10 புறம் 297
நெடுவேள் ஆதன் போந்தை அன்ன
பெருஞ்சீர் அருங்கொண் டியளே கருஞ்சினை
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் 6 புறம் 338
(ஈங்கு போந்தை பனைதான் என்பது தெளிவு
மேலும் இப்புப்பாடலின் தலைப்புக் கொளுவில்
“நெடுவேள் ஆதனுக்கு உரிய போந்தைப் பட்டினம்
பற்றிய குறிப்பு” என உள்ளமை வரியின் பொருளுக்கு
இயைய போந்தை இடப்பெயருக்கு இரட்டைச்சான்று)முழா அரைப் போந்தை அரவாய் மாமடல் 4 புறம் 375
கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோட்டு 2 குறுந். 281
தூஇரும் போந்தைப் பொழில்அணி பொலிதந்து10 பதிற்று. 51
மறம்கெழு போந்தை வெண்தோடு புனைந்து 31 பதிற்று. 51
வண்டிசை கடாவாத் தண்பனம் போந்தை 6 பதிற்று. 70
புரைதீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன் 46 சிலம்பு 26 கால்கோள்
வாகை தும்பை மணித்தோட்டுப் போந்தை 70 சிலம்பு 26 கால்கோள்
போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை 219 சிலம்பு 26 கால்கோள்
தோடார் போந்தை தும்பையொடு முடித்து 45 சிலம்பு 27 நீர்ப்படை
தோடார் போந்தை தும்பையொடு முடித்த 112 சிலம்பு 27 நீர்ப்படை
போந்தைக் கண்ணிப் பொறைய கேட்டருள் 126 சிலம்பு 27 நீர்ப்படை
தோடார் போந்தை வேலோன் தன்னிறை 175 சிலம்பு 27 நீர்ப்படை
அரியிற் போந்தை அருந்தமி ழாற்றல் 189 சிலம்பு 27 நீர்ப்படை
தோள்நலம் உணீஇய தும்பை போந்தையொடு 248 சிலம்பு 27 நீர்ப்படை
போந்தைக் கண்ணிப் பொலம்பூந் தெரியல் 9 சிலம்பு 28 நடுகல்
போந்தைக் கண்ணிநின் ஊங்கண்ஓர் மருங் 134 சிலம்பு 28 நடுகல்
ஆரும் அணிஇளம் போந்தையும் வேம்பும் 262 பாண்டிக்கோவை
தொடுத்த வேம்பின்மிசை துதைந்த போந்தை நச்சி. உரை மேற்கோள்
போர்எதிரில் போந்தையாம் பூ பு வெ.மா.240
போந்தை வேம்பே ஆர்என வரூஉம் 5 தொல்.புறத்திணையியல்
-
கண்டதும் கொண்டதும்
-வருணன்–

மாளிகையின் மையத்தில்
ஆடத் துவங்குகிறாள் தாசி
வளைந்து நெளியுமவள் வளைகரங்களில்
பொங்கிப் பெருக்கெடுக்கிறது கடலலை
சிலும்புமவள் கேசத்தினின்று
சப்தித்து வீழ்கிறதோர் கருப்பு அருவி
தளைத்த இளமையுடன் திளைத்தாடுபவளின்
அங்கம் தின்னும் விழிகளோடு
மதுக்கோப்பை ஏந்திய கரங்கள்
ஆயிரமாயிரம் பூட்டுகளைத் திறந்திடும்
விழிச் சாவிகளிரண்டும்
அவள் வசம் பத்திரம்
தொலைத்தது அவளிதயப் பூட்டினை
மாத்திரம்.
படத்துக்கு நன்றி: http://www.miradha.com/historia-del-bharatanatyam/?lang=en -
பாரதியின் வேத முகம் – 1
-சு. கோதண்டராமன்-
பாரதி ஒரு பன்முகக் கவிஞர். நாட்டுப் பற்று, மொழி்ப் பற்று, சமயப் பற்று இவற்றிற்கு விரோதமி்ல்லாத வகையில் அனைத்து உலக மக்களையும் அனைத்து மொழிகளையும், அனைத்துச் சமயங்களையும் நேசிக்கும் பண்பு, சொல் புதிது பொருள் புதிதாய் கவிதை இசைத்த புலமை, பெண் விடுதலை, சமூக நீதிக்குப் போராட்டம் இப்படிப் பல முகங்கள் உண்டு அவருக்கு.நாடகத்தில் ராவணனாகவோ முருகனாகவோ வேடம் போடுபவர் பல அட்டைத் தலைகளைத் தாங்கி வருவதைப் பார்க்கிறோம். எல்லா முகங்களும் ஒன்று போல இருந்தாலும் உண்மை முகம் ஒன்று தான், அதன் வடிவத்தை ஒட்டியே மற்ற முகங்கள் அமைக்கப் பட்டுள்ளன, அந்தத் தலை தான் மற்ற தலைகளையும் தாங்குகிறது என்பதையும் நாம் அறிவோம்.
பல முகம் கொண்ட பாரதியின் உண்மை முகம் எது? எந்த முகத்தின் அடிப்படையில் மற்ற முகங்கள் அமைந்துள்ளன?
வேதங்களின் மீது அவர் கொண்டிருந்த மரியாதை தான் அவரது உண்மை முகமாகத் தோன்றுகிறது. தான் பிறந்த குலத்துக்கு உரிய ஆசாரங்களைக் கைவிட்டதோடு அல்லாமல், தன் சாதியினரையும் எள்ளி நகையாடியவர் பாரதி. அப்படிப்பட்ட புரட்சிக்காரர், பழைமையான தனது குல வித்தையாகிய வேதத்தினிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்பது வியப்புக்குரிய உண்மை.
தனது பாடல்களிலும், கட்டுரைகளிலும், கதைகளிலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அவர் வேதத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார். அவரது இந்த வேதப் பற்று தெய்வ பக்திப் பாடல்களில் மட்டுமல்லாது சமூக விடுதலைப் பாடல்களிலும், தேச பக்திப் பாடல்களிலும் கூட வெளிப்படுவதைக் காணலாம்.
வேதம் பாரத நாட்டின் கலாசாரத்தின் ஆணி வேராக இருந்து வந்துள்ளது. ஆனால் இடைக்காலத்தில் சில தவறான கருத்துகளும் தவறான விளக்கங்களும் வேத இலக்கியத்தில் புகுந்துவிட்டன. இவற்றையும் அக்கால வேதியர்கள் வேதம் என்ற பெயரிட்டே அழைத்தனர். இந்தப் போலி வேதங்களை நீக்கி விட்டு வேதத்தை அதன் தொன்மையான தூய நிலையில் கொண்டு வைக்க வேண்டும் என்பது அவரது பேரவா. இந்தக் கருத்து அவரது ஒவ்வொரு பாடலின், கதையின், கட்டுரையின் அடிநாதமாக ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. அவற்றில் சிலவற்றை அடுத்து வரும் வாரங்களில் காண்போம்.
ஒன்று: பரம் பொருள்
பாரதி இந்து மதத்தின் மீதும் வேதங்களிடத்தும் பெரு மதிப்புக் கொண்டிருந்த போதிலும் பிற மதங்களைச் சமமாகவே போற்றினார். அவரது இந்தச் சமயப் பொதுமைக்கு அடிப்படை ரிக் வேதமும் பகவத்கீதையும் தாம். ரிக் வேதத்தில் வரும் ஒரு புகழ் பெற்ற வசனம், “ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி” என்பது. “ஒன்றே மெய்ப் பொருள், அதனை ரிஷிகள் பலவிதமாய்ச் சொல்லினர்,” என்று பாரதி அதை மொழி பெயர்க்கிறார். கீதையில் கண்ணன் கூறுகிறான், “யார் யார் என்னை எந்தெந்த வடிவில் வழிபடுகிறார்களோ அவரவரை அந்தந்த நம்பிக்கையில் நான் நிலைக்கச் செய்கிறேன்.” இவற்றை நன்கு உள்வாங்கிக் கொண்ட பாரதி தன் எழுத்துகளில் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இக் கருத்தை வலியுறுத்தத் தவறவில்லை.
எல்லாச் சமயங்களும் கடவுள் ஒன்றே என்று தான் கூறுகின்றன. ஆயினும் ஏன் தகராறு? தன் சமயத்தையே நன்கு அறியாத அரை குறை மனிதர்கள், “நான் வணங்குவது மட்டுமே கடவுள், மற்ற சமயத்தவர் வணங்குவது பேய்களை, பேய் வழிபாடு செய்வோரைத் திருத்துவது அல்லது அழிப்பது என் கடவுளுக்கு உகப்பானது,” என்ற வகையில் பேசுகிறார்கள். அத்தகையோருக்குப் பாரதி அறிவுறுத்துகிறார் –
வேடம்பல் கோடியோ ருண்மைக்குள வென்று
வேதம் புகன்றிடுமே– ஆங்கோர்
வேடத்தை நீருண்மையென்று கொள்வீரென்றவ்
வேதமறியாதே
நாமம் பல்கோடி ஓர் உண்மைக்கு உள என்று
நான்மறை கூறிடுமே– ஆங்கோர்
நாமத்தை நீருண்மை என்று கொள்வீரென்று அந்
நான்மறை கண்டிலதே.
வெவ்வேறு பெயர்களில் வழிபடப்படுபவை வெவ்வேறு தெய்வங்கள் அல்ல. அவை அனைத்தும் ஒரு தெய்வத்தின் வெவ்வேறு வேடங்களே. இந்த வேடங்களைத் தெய்வத்தின் மீது மனிதர் தாம் சுமத்துகின்றனர். அதன் உண்மையான சொரூபம் சுத்த அறிவு ஆகும். வள்ளுவர் இறைவனை வாலறிவன் என்று போற்றுகிறார். இறைவன் எல்லாம் அறிந்தவன் என்று தான் எல்லாச் சமயங்களும் கூறுகின்றன. இதை உணர்த்தும் வேத வசனம், “ப்ரக்ஞானம் ப்ரம்ம” (அறிவே கடவுள்) என்பதைப் பாரதி மிக எளிமையாக வெளிப்படுத்துகிறார்.
“ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் –பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ” என்று பாரதி கேட்கிறார்.
நாம் என்ன செய்கிறோம்? “மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறுங் கதைகள் சேர்த்துப் பல கள்ள மதங்கள் பரப்பிக் கொண்டிருக்கிறோம்.” இது முறையா? அச்சமும் அறியாமையுமே வன்முறையின் அடிப்படை. எனது சமயம் அழிந்து விடுமோ என்ற அச்சமும், எல்லா மதங்களுக்கும் உட்புகுந்த கருத்து ஒன்றே என்பதை அறியாமையுமே மாற்றுச் சமயத்தாரை அழித்தால் நம் சமயம் வாழும் என்ற மூட நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது. வீரமில்லாமல் இந்த அச்சங்களுக்கு இடமளிப்பவர் எந்தச் சமயத்தவரானாலும் இறைவனை அடைய முடியாது என்கிறார் பாரதி.
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்
பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பூணல் வேண்டும்
“ஒவ்வொரு மனிதனும் தனித் தனி இயல்பினன். அவனவன் மதம் அவனது தனித் தன்மையைப் பொறுத்தது. எனவே இன்னும் இரண்டு கோடி மதங்கள் பெருகட்டும். எத்தனை பேர் எத்தனை விதமாக வழிபட்டாலும் உண்மை ஒன்றே” என்கிறார் விவேகானந்தர். பாரதி அதனை வழிமொழிகிறார்-
பூமியிலே கண்டமைந்து மதங்கள் கோடி
புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம்
சாமிஎன ஏசுபதம் போற்றும் மார்க்கம்
ஸநாதனமாம் இந்துமதம் இஸ்லாம் யூதம்
நாமமுயர் சீனத்துத் தாவு மார்க்கம்
நல்ல கண்பூசி மத முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள்பல உளவாமன்றே
யாவினுக்கும் உட்புகுந்த கருத்திங்கொன்றே
தெய்வம் பல பல சொல்லிப் பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்
உய்வதனைத்திலும் ஒன்றாய் எங்கும்
ஓர் பொருளானது தெய்வம்
என்கிறார் பாரதி. அல்லாவைப் போற்றி அவர் பாடுவதைக் கேட்போம்-
பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள்
எல்லாத் திசையிலுமோர் எல்லையில்லா வெளிவானில்
நில்லாது சுழன்றோட நியமம் செய்தருள் நாயகன்
சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெருஞ்சோதி
அல்லா அல்லா அல்லா
இதே கருத்தைக் காளி மீது ஏற்றிப் பாடுகிறார்.
விண்டுரைக்க அறிய அரியதாய்
விரிந்த வான வெளியென நின்றனை
அண்டம் கோடி வானில் அமைத்தனை
அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை
பாரதி விநாயகருக்குச் செய்யும் அர்ச்சனையைக் கவனியுங்கள். தொல் பழம் தெய்வங்கள் உள்பட, வெவ்வேறு பெயர்களில் வணங்கப்படும் இந்துக் கடவுள்கள் மட்டுமல்லாது இஸ்லாமிய கிருத்துவப் பெயர்களும் ஒரே பரம்பொருளைக் குறிப்பதை விளக்குகிறது அது.
விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்
பிறநாட்டிருப்போர் பெயர்பலகூறி
அல்லா யெஹோவா எனத் தொழுது இன்புறும்
தேவரும் தானாய் திருமகள் பாரதி
உமை எனும் தேவியர் உகந்த வான்பொருளாய்
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்
இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகித்
தாயாய்த் தந்தையாய்ச் சக்தியும் சிவனுமாய்
உள்ளொளியாகி உலகெலாம் திகழும்
பரம்பொருளேயோ, பரம்பொருளேயோ
ஆதிமூலமே அனைத்தையும் காக்கும்
தேவதேவா சிவனே கண்ணா
வேலா சாத்தா விநாயகா மாடா
இருளா சூரியா இந்துவே சக்தியே
வாணீ காளீ மாமகளேயோ
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ள
யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே
வேதச்சுடரே மெய்யாங் கடவுளே
சமயங்கள், சாத்திரங்கள், சடங்குகள் எல்லாம் உண்மையை அடைவதற்கான படிகளே அன்றி அவையே இறுதி நிலை அல்ல. மனதைச் செம்மைப்படுத்திப் பரம்பொருளை உள்ளத்தால் தொட முடிந்தால் இவை தேவையற்றதாகி விடும்.
காவித் துணி வேண்டா கற்றைச் சடை வேண்டா
பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே
சாத்திரங்கள் வேண்டா சதுர்மறைகள் ஏதுமில்லை
தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டு நின்றால் போதுமடா
தவமொன்றும் இல்லை ஒரு சாதனையுமில்லையடா
சிவமொன்றே உள்ளதெனச் சிந்தை செய்தாற் போதுமடா
அறிவு விளக்கம் பெறாத குழந்தை நிலையில் உள்ளோர் தாம் விரும்பிய வெவ்வேறு வடிவங்களில் பரம்பொருளை வழிபடட்டும். ஆனால் அதே நிலையில் நின்று விடாமல் படிப்படியாக மேலே உயர்ந்து வடிவங்கள், வழிபாட்டு முறைகள், வேதங்கள், தவங்கள் இவற்றைக் கடந்து பரம்பொருளை உள்ளத்தால் உணரும் நிலைக்கு வரட்டும். இவை எல்லாமே உண்மை தான். இதை உலகுக்கு உணர்த்தவல்ல ஒரே நாடு நமது நாடு தான் என்பதில் பெருமை கொள்கிறார் பாரதி.
ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்
உலகின்பக் கேணிஎன்றே
நன்று பல்வேதம் வரைந்தகை பாரத
நாயகிதன் திருக்கை
-
நினைவுகள்
விசாகை மனோகரன்
கடந்து போன பாதையின்,
வழி நடந்த வாழ்க்கையின்
விபரீத விளையாட்டுகளை
நினைத்துப் பார்க்கிறேன்.இளமைப் பிராயத்தின் இளரத்த வேகத்தில்
செய்யக் கூடாது என் தெரிந்தும் செய்த தவறுகள்
நிகழக்கூடாது என தெரிந்தும் நிகழ்ந்த நிகழ்வுகள்
மாட்டோம் என நினைத்தும் புகைத்த பெட்டிகள்
தொடவே கூடாது என் நினைத்தும் திறந்த புட்டிகள்நண்பர்களை சந்தேகித்து, பகைவர்களை சம்பாதித்த
விபரீதங்கள்
கேளிக்கையை பிரதானமாக்கி செலவான நிமிடங்கள்
நாணயங்கள்கேளிக்கையான வாழ்க்கையின் நடுவில் திடீர் மாற்றம்
அனைத்தும் மாறிவிட்டன எனக்கென வந்த ஒருத்தியால்
அன்று தாய் சொன்னதை கேட்க மனதில்லை
இன்று இவள் சொல்வதை மறுக்க முடியவில்லை
தாயால் முடியாதது தாரத்தால் முடியும்
என இதைத் தான் சொன்னார்களோ?புகையை விட்டேன், மதுவையும் விட்டேன்
நண்பர்கள் வந்தனர், நல்ல நட்பும் வந்தது,
காரணம், அன்றே சொன்னானே அந்த தெய்வக் கவிஞன்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று
நினைவலைகள் நீங்க மனதிற்குள் ஒரு பாட்டு கேட்டது
நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம்!!!படத்திற்க்கு நன்றி: கூகுள்
-
வால்ட் விட்மன் வசன கவிதை -11
என்னைப் பற்றிய பாடல் – 4
(Song of Myself)
(1819-1892)
(புல்லின் இலைகள் -1)மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
+++++++++++++++++++++++++++++
வலிமை படைத்த இசை அறிவுடன்
உலவி வருகிறேன் நான்
எனது மேள தாள மோடு
இன்னிசைக் கருவிக ளோடு.
வெற்றி வீரருக்கு மட்டும் அல்ல,
நான் வாசிப்பது,
தோற்றோ ருக்கும், மாண்டோ ருக்கும்
வாசிப்பது நான் !
தெரியுமா அது அன்றைய தினத்தின்
ஆதாயம் என்று !
தோற்பது கேவல மில்லை !
போர்களில் தோற்பதும், வெல்வதும்
ஒரே ஆன்மக் கிளிர்ச்சி யில்தான் !
இறந்தோர்க்குப் பரிந்து
முரசடிக்கிறேன், மனம் துடிக்கிறேன் !
ஊது குழலில் நளினமாய்
ஓங்கிய குரலில் பாடுகிறேன்
தோற்றோரும் நீடு வாழட்டும் !
கடலில் மூழ்கிப் போன
படகுப் போர் வீர்ர்கள் நீடு வாழ்க !
கடலில் தனியாய் மூழ்கிப் போன
காளையர் நீடு வாழ்க !
வேலை இழந்த போர்த் தளபதியும்
இழப்பை மீறி முற்படும்
வலிய வீரரும் வாழ்க !
பேரளவில் தெரியாமல் போன
வீர்ர்களும் நீடு வாழ்க
பேரளவில் அறிந்தவரைப் போல் !
எதிர்ப்பேன் எனது பன்முகப்பாடு மீறி
மதிப்பெய்தி உள்ளன வற்றை !
சுவாசிப்பேன் காற்றை,
மிகுதிப் பங்கைப் பிறர்க்கு விட்டு வைத்து,
முடங்கிக் கிடப்பதில்லை நான்
ஏற்றவோர்
இடத்தில் இருக்கிறேன்.
பூச்சியும், மீன் முட்டைகளும்
ஏற்ற இடத்தில் உள்ளன.
ஒளிமிக்கப் பரிதிகளும், தெரியாத
ஒளியற்ற பரிதிகளும்
தமக்குரிய இடத்தில் தான் உள்ளன.
உணர்வுள்ள வையும், இல்லாத வையும்
உள்ளன தம்மிடத்தில் !
+++++++++++++
தகவல்:
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (February 12, 2013)







இருவரும் மீண்டும் நாற்காலியில் உட்கார்ந்தோம். “அந்த தாளக் கொடு, அளவைப் பார்ப்போம்,” என்றார் மாமா.


