காதலியுடன் வாழ்வு! (வசந்த காலம்)
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++++++++++++
<< காதலியுடன் வாழ்வு >>
(வசந்த காலம்)
++++++++++++++++++++++++
என் ஆத்மாவைக்
கவர்ந்து கொள்ளும்
மிருதுவான முரட்டுக்
கரங்கள் யாருடையவை ?
கசப்பான களிப்பும்,
இனிப்பான வலியும்
கலந்து என் இதயத்தில்
ஊறிப் போயிருக்கும்
ஒயின் எது ?
இரவின் மௌன வேளையில்
என் தலையணை மேல்
பறக்கும் அந்த
இறக்கைகள் யாவை ?
என் தூக்கம் கலைக்கும் அவை !
என்ன நடக்கு தென்று
எவரும் அறியக்
காணாது !
ஆனந்தக் களிப்பை விடப்
பேருன்னத மான
சிரிப்பின்
பிரதிபலிப்பை விடப்
பேரழகுத் துயரம்
கலந்திருக்கும் எனது
பெரு மூச்சில் !
கலில் கிப்ரான்
என் கண்மணியே ! வா
இந்தக் குன்றின் மேல்
இருவரும் உலாவி வருவோம் !
பனிப் பொழிவுகள்
நீராய் ஓடும் !
உறக்கத்தி லிருந்து வாழ்க்கை
உயிர்த் தெழுந்து
மேடு பள்ளங்களில்
திரிந்து வருகிறது !
வசந்த காலம்
வைத்த தடங்களைப்
பின்பற்றுவோம்
தூரத் தளங்களில் !
பசுமைக் குளிர்
வயல்களுக்கு மேல்
உயர்ந்த
மலை உச்சிக்கு நாம்
ஏறுவோம்
மகத்தான உள்ளெழுச்சி நம்மை
இழுத்துக் கொள்ள !
விடிந்துள்ள வசந்த காலம்
குளிர் காலத்து
அங்கியை
மடித்து வைத்து
எலுமிச்சை மரங்கள் மேல்
படிய விட்டது !
பார்ப்பதற்கு
இரவில் அலங்கரித்த
பெருநகர்த்
திருமணப் பந்தலில் உள்ள
மணப்பெண் போல்
தெரிகிறது !
ஒருவரை ஒருவர்
தழுவிக் கொள்ளும்
காதல் ஜோடிகள் போல்
தெரிகின்றன
திராட்சைக் கொடிகள் !
பாறைகளுக் கிடையில்
நடனமிடும்
சிற்றோடைகள் களிப்புடன்
பாடிக் கொண்டு !
மொட்டுகளில் சட்டென
முகிழ்த் தெழும் பூக்கள்
இயற்கை இதயத்தில்
களஞ்சியாய்ச் செழித்த
கடல் வயிற்றி லிருந்து வரும்
நுரை போல் !
என் கண்மணியே ! வா
மல்லிகைக் கிண்ணத்தில்
கடந்த காலத்தில் குளிர்ந்த
கண்ணீர்த் துளிகளைக்
குடித்துத்
தேற்றுவோம் நம் ஆத்மாவை !
பறவைகள் பொழிந்திடும்
கீதங்களைக் கேட்டு
உலாவித் திரிவோம்
உவகை யோடு
மதி மயக்கம் உண்டாக்கும்
தென்றலில் !
ஊதாப் பூக்கள்
ஒளிந்திருக்கும்
அந்தப் பாறை அருகிலே நாம்
அமர்ந்தி ருப்போம் !
அவை கொடுக்குக் கொள்ளும்
இனிய முத்தங்களை
பரிமாறிக் கொள்வோம்
நாமிருவரும் !