காதல் பூமியாய் காந்த பூமி..!

 
ஜெயஸ்ரீ ஷங்கர்.

சுழன்று செல்லும் தேராக
வெட்டவெளியில் வெள்ளோட்டம்

ஆதவனும் வெண்மதியும் ஆளுக்கோர் திக்கில்
பவனியாய் ஊர்கோலத் தேர் திருவிழா..!

நாயகர்கள் வாழ்த்தோத ‘செவ்வாயில்’ புன்சிரிப்பும்
கோளங்களின் நட்பும் பகையும் மாயைக்
காதலைப் போற்றுமே…!

கடலும் மலையும்  மண்ணும் காற்றும்
அடைந்து திமிரும் எரிமலைகளும்
மாயக் காதலுள் கட்டுண்டு கிடக்க…

காதல்வானம் அள்ளித் தெளித்த
காதல் வனமே பூகோளம்..!
பூக்கோல காதல் விதைகள் முக்காலமும்..!

வேரூன்றி எழுந்து நின்று பல்கிப்
பெருகி கருகி அமிழ்ந்து
மீண்டும் துளிர்க்கும் தளிராம் என்றும்

சாகா வரம் பெற்று வந்த
போகக் குழந்தை “அது” – மனித
நெஞ்சங்களுக்குள் போதை தரும்
பொற்குடமாம்  பாற்குடம்..!

வேண்டாத இதயத்தையும் வேகவைத்தும்
வாழாத மனங்களை வாழ விடும்
வீழாத புகழ்கொடியை உச்சத்தில் ஏற்றும்…!

மாயாவிக்  காதலே…! நீ…!
பொற்கொடியா…..வடம் நீளும்
தேர் சக்கரத்தின் அச்சாணியா ?

இருந்தும் இல்லாமலும்…கண்டும் காணாமலும்
உனைக் காக்கவென்றே காதல் பூமியாய்  சுழலும்
காலகாலமாய் காந்த பூமி..!

================================================

About ஜெயஸ்ரீ ஷங்கர்

எழுத்தாளர்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க