உ
                         நமசிவாய

                        ‘போந்தை’

                 பதினோராம்  திருமுறை வைப்புத்தலம்

                    நூ த முத்து முதலி
                         மயிலை

தமிழகத்து சித்தாந்த சைவ நெறியின் பெருமறைகளாம் பன்னிரு திருமுறைகளிலுள்ள 18000+
பாடல்களில் பதிகம் ஏதும் கிட்டாது குறிக்கப்படும் பேறு மட்டும் பெற்ற மிக்க பழமைவாய்ந்த திருத்
தலங்கள் ‘வைப்புத்தலங்கள்’ என வகைப்படுத்திய மரபில் காணும் ஓர் தொண்டைநாட்டுத் தலம்

 ‘திருப்போந்தை’

தமிழகத்து வடஎல்லையில் அமைந்த திருவள்ளூர் மாவட்டத்தில் கவரப்பேட்டை மேற்காக ஊத்துக்
கோட்டைக்கு வடக்காக ஆந்திர சத்தியவேடுக்கு அருகமைந்த சிற்றூராகும் இத்திருப்போந்தை.
பராமரிப்பிலிருந்து இந்நாள் தனித்து விடப்பட்ட நிலையில் காணும் நூற்றுக்கணக்கான தமிழகத்துப்
பழங்கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

பதினோராம் திருமுறையில் தொகுக்கப்பெற்ற பட்டினத்தாரின் 5 நூல்களுள் நான்காவதான திரு
ஏகம்பமுடையார் திருவந்தாதியில் (65)

 “ஆலையங்கார் கருகாவை கச்சூர் திருக்காரிக்கரை
     வேலையங்கேறு திருவான்மியூர் திருஊறல் மிக்க
     சோலையங்கார் திருப்’போந்தை’ முக்கோணம் தொடர் கடுக்கை
     மாலையன் வாழ் திருஆலங்காடு ஏகம்பம் வாழ்த்துமினே” 11.990

எனவரும் பாடலில்,
கச்சூர், திருவான்மியூர், ஊறல், ஆலங்காடு காரிக்கரை எனும் தொண்டைநாட்டுத் தலங்களுடனேயே
இப் போந்தையையும் பட்டினத்தார் பாடியுள்ளார்.

 

போந்தை எனும் சொல் அடிமரத்தில் குடம்போல் பருத்துக்காணும் உள்ளினமாகிய பனைவகையைக்
குறிக்கும் (புறம் 85) நன்கு வளர்ந்து விளங்கும் தொடர்பால் ஆகுபெயர்வழி ஓர் இடப்பொயரும் ஆனது

   “நாளிகேரம் செருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்
             கோளி சாலந்தம் ஆலம் குளிர்மலர்க் குரவம் எங்கும்
             தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்
             நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும்”
                    78 திருத்தொண்டர் புராணம்

என சேக்கிழார் பல்வகை பயிரினங்களைக் காட்டுமிடத்து நம் ‘போந்தை’யையும் குறித்துள்ளார். சங்க
நூல்களிலும் போந்தை பெரிதும் பயின்றுள்ளமை இக்கருத்துரைக் கடைக்கண் இணைப்பில்  காண்க.

நம் ‘போந்தை’த் தலத்தின் (‘போந்தை’வாக்கம்) அமைவிடம் (இணைத்துள்ள வரை படங்கள் காண்க)
ஆந்திர எல்லை மிகமிக அருகு சென்னை மாநகருக்கு ஏறக்குறைய 55 கிமீ வடமேற்காகவும், டில்லி
கல்கத்தா என வடக்காகச் செல்லும் பெருவழிக்கு (கவரப்பேட்டை) 15 கிமீ மேற்காகவும் காணலாம்.

தன்னார்வத் தொண்டர்கள் வைத்துள்ள சிதலம் அடைந்த பிசாலீசுவரர் கோவிலின் தோற்றம் காண்க.

தாய்நாட்டுப் பண்பாட்டை போற்றுவதில் தமிழ் மக்களை அவ்வப்போது விழித்தெழச்செய்யும் தூண்டுகோல்
ஏந்துவோர் மக்கட்தொகைக்கு ஏற்ப வளர்தலும் வேண்டும்.

திருச்சிற்றம்பலம்

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

புள்இரியும் புகர்ப்போந்தை            பட்டினப்பாலை 74

இரும்பனம் போந்தைத் தோடும்        பொருநர் ஆற்றுப்படை 141

போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள்        16 அகம் 238

முழாஅரைப் போந்தை பொருந்தி நின்று        7 புறம் 85

வட்கர் போகிய வளரிளம் போந்தை        3 புறம் 100

போந்தையம் தோட்டின் புனைந்தநர் தொடுத்து3 புறம் 265

மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே    10 புறம் 297

நெடுவேள் ஆதன் போந்தை அன்ன
பெருஞ்சீர் அருங்கொண் டியளே  கருஞ்சினை
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்        6 புறம் 338
(ஈங்கு போந்தை பனைதான் என்பது தெளிவு
மேலும்    இப்புப்பாடலின் தலைப்புக் கொளுவில்
“நெடுவேள் ஆதனுக்கு உரிய போந்தைப் பட்டினம்
பற்றிய குறிப்பு” என உள்ளமை வரியின் பொருளுக்கு
இயைய போந்தை இடப்பெயருக்கு இரட்டைச்சான்று)

முழா அரைப் போந்தை அரவாய் மாமடல்        4 புறம் 375

கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோட்டு    2 குறுந். 281

தூஇரும் போந்தைப் பொழில்அணி பொலிதந்து10 பதிற்று. 51

மறம்கெழு போந்தை வெண்தோடு புனைந்து    31 பதிற்று. 51

வண்டிசை கடாவாத் தண்பனம் போந்தை        6 பதிற்று. 70

புரைதீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன்    46 சிலம்பு 26 கால்கோள்

வாகை தும்பை மணித்தோட்டுப் போந்தை        70 சிலம்பு 26 கால்கோள்

போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை        219 சிலம்பு 26 கால்கோள்

தோடார் போந்தை தும்பையொடு முடித்து        45 சிலம்பு 27 நீர்ப்படை

தோடார் போந்தை தும்பையொடு முடித்த        112 சிலம்பு 27 நீர்ப்படை

போந்தைக் கண்ணிப் பொறைய கேட்டருள்    126 சிலம்பு 27 நீர்ப்படை

தோடார் போந்தை வேலோன் தன்னிறை         175 சிலம்பு 27 நீர்ப்படை

அரியிற் போந்தை அருந்தமி ழாற்றல்        189 சிலம்பு 27 நீர்ப்படை

தோள்நலம் உணீஇய தும்பை போந்தையொடு    248 சிலம்பு 27 நீர்ப்படை

போந்தைக் கண்ணிப் பொலம்பூந் தெரியல்    9 சிலம்பு 28 நடுகல்

போந்தைக் கண்ணிநின் ஊங்கண்ஓர் மருங்    134 சிலம்பு 28 நடுகல்

ஆரும் அணிஇளம் போந்தையும் வேம்பும்        262 பாண்டிக்கோவை

தொடுத்த வேம்பின்மிசை துதைந்த போந்தை     நச்சி. உரை மேற்கோள்

போர்எதிரில் போந்தையாம் பூ            பு வெ.மா.240

போந்தை வேம்பே ஆர்என வரூஉம்        5 தொல்.புறத்திணையியல்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *