கண்ணன் என் காதலன் – ‘கண்டால் சொல்லு!’
காதோரம் கிசுகிசுக்கும் காற்றேநீ கண்டாயோ?
ஆற்றோரம் அசைந்திருக்கும் நாற்றேநீ கண்டாயோ?
வானெங்கும் வட்டமிடும் வெண்ணிலவே கண்டாயோ?
தேனெடுக்க சுற்றிவரும் சின்னவண்டே கண்டாயோ?
மூடியுள்ள கண்ணுக்குள்ளே மோகனமாய் சிரித்திடுவான்!
நாடியென்றன் நெஞ்சுக்குள்ளே நர்த்தனங்கள் புரிந்திடுவான்!
கண்திறந்து பார்த்துவிட்டால் கணத்தினில் மறைந்திடுவான்!
மண்மயங்கும் வண்ணக்கண்ணன் மாயம்பல புரிந்திடுவான்!
ஆடும்மயில் கண்டாலோ அவன்நினைவே வருகுதடி;
பாடுங்குயில் குரலினிலே வேய்ங்குழலே ஒலிக்குதடி;
கார்மேகம் கண்டாலோ கண்ணமுகம் தெரியுதடி;
பார்புகழும் அவன்நினைவே மார்த்துடிப்பாய் ஆச்சுதடி;
கால்கடுக்க சுற்றிவரும் காற்றேநீ கண்டால் சொல்லு…
கடலேறி விளையாடும் அலையேநீ கண்டால் சொல்லு…
ஊருக்கெல்லாம் ஒளிகொடுக்கும் சூரியனே கண்டால் சொல்லு…
பாருக்குள்ளே மணியாம்என் மன்னவனைக் கண்டால் சொல்லு!
படத்துக்கு நன்றி: http://www.radhagopaljiutempel.com/srikrishnasriradhe.htm
எங்கெங்கு காணினும் கண்ணனே தென்படும் காதலியின் பிரிவுத்துயர்,கவிதை வரிகளில் துல்லியமாக வெளிப்படுகிறது. குறிப்பாக, ஆடும்மயில் கண்டாலோ அவன்நினைவே வருகுதடி….பாடுங்குயில் குரலினிலே வேய்ங்குழலே ஒலிக்குதடி…. வரிகள். படமும் மிக அருமையான தேர்வு. மிக்க நன்றி.
ரசித்தமைக்கு மிக்க நன்றி, பார்வதி!