Blog

  • பிக்கோலிம் புளுகு – 3

    தேமொழி

    (தொடர்ச்சி)

    முன் குறிப்பு:
    இது விக்கிபீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம்.

     

    இப்ரம்பூர் மோதல்:

    தங்கள் பேரரசின் தெற்கு எல்லையைப் பாதுகாக்க விரும்பிய மராட்டியர்கள் அது குறித்து கோவாவின் ஆட்சி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்பினர். ஆனால் அவ்வதிகாரிகள் அதற்கு உடன்பட மறுத்தனர் [9] [10]. அத்துடன் ஒரு கால கட்டத்தில் போர்சுக்கீசியர்கள் தங்களது கடற்படையை வடக்கு நோக்கி நகர்த்தி, கோலாப்பூர் பகுதியினை ஊடுருவி நோவா கான்கியுஸ்டாஸ் பகுதியில் உள்ள மராடியர்களை விரட்டியடிக்கவும் எண்ணினர். ஆனால் இந்த எண்ணத்தை அவர்கள் நிறைவேற்றத் தயங்கியதற்கு இருந்த ஒரே காரணம், இது மராட்டியர்களுக்கு வெறுப்பை ஏற்றி அவர்களை டச்சுக்காரர்களுடன் கூட்டணி அமைக்கச் செய்து, அந்தக் கூட்டணி போர்ச்க்கீசியர்களுக்கெதிராக மாறி அவர்களுக்கேப் பாதகம் ஏற்படுத்தக் கூடும் என்ற எச்சரிக்கை உணர்வினால்தான் [12].

    மோதலின் முதல் துவக்கம் ஏற்பட்டது பேர்நேம் பகுதியில் உள்ள சிறிய ஊரான இப்ரம்பூரில். இப்ரம்பூர் முக்கிய சாலை வழித்தடங்களுக்கும் சப்போரா (Chapora River) ஆற்றுப் பகுதியிலும் அமைந்திருந்தது. போர்ச்சுக்கீசியப் படைகள் இப்ரம்பூரில் குவிக்கப்படுவதாக பிக்கோலிம் பகுதியில் இருந்த மராட்டியர்களுக்குத் தவறான தகவல் கிடைக்கிறது [9]. ஆனால் உண்மையில் அந்த சமயத்தில் போர்ச்சுக்கீசியப் படைகள் எல்லையில் இருந்து வெகு தொலைவில் இருந்த ‘அலோர்னா’ (Alorna Fort) கோட்டைப் பகுதியில்தான் இருந்தது [13].

    மராட்டியர்கள் தங்கள் நாட்டின் எல்லையைக் கடந்து குதிரைப்படையை இப்ரம்பூருக்கு உளவு பார்க்க அனுப்பி வைத்தனர் [9]. ஆனால் போர்சுக்கீசியப் படை அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி அங்கு இல்லாது போனாலும், போர்ச்சுக்கீசியர்கள் படை அவ்விடத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கக்கூடும், எனவே இப்ரம்பூரை கண்காணிப்பது அவசியம் என்று மராட்டியப் படைத் தளபதி கருதினார். பிக்கோலிம் மற்றும் பேர்நேம் பகுதியின் போர்சுக்கீசியப் படைகள் ‘மேனுவல் டி எலாமினோஸ்’ (Manuel de Elaminos) தலைமையின் கீழ் வழிநடத்தப் பட்டது. இப்டைத் தளபதிக்கு மராட்டியர்கள் இப்ரம்பூரில் நுழைந்து விட்ட தகவல் கிடைத்தது. மராட்ரடியர்களின் ஊடுருவல் தகவல் கோவாவில் உள்ள வாஸ் கோட காமா நகருக்கும் அறிவிக்கப்பட்டது [13]. இத்தகவல் அறிந்ததும் போர்ச்சுக்கீசியர்கள் அலோர்னா கோட்டையினை பாதுகாப்பில்லாத நிலையில் விட்டு விட்டு இப்ரம்பூருக்கு படையை நகர்த்தி அங்கிருக்கும் மராட்டியர்களைத் தாக்க முடிவு செய்தனர் [13].

    ஆகஸ்ட் 1640 ஆம் ஆண்டு நடந்த போர்ச்க்கீசியத் தாக்குதல் விரைவாகவும் திறம்படவும் நடத்தப்பட்டது. இப்ரம்பூருக்குச் செல்லும் மேற்கிலும் வடக்கிலும் இருந்த இரு முக்கிய வழித்தடங்களும் சூழ்ந்து கொள்ளப்பட்டது. நகருக்கு அதிக சேதம் விளைவிப்பதைத் தடுக்கும் பொருட்டு காலாட்படைகளையே அடுத்தடுத்து அனுப்பி போர்ச்சுக்கீசியர்கள் போரை நடத்தினர். காலாட்படையினறுக்குச் சிறிய சேதம் ஏற்பட்ட நிலையில், மராட்டியர்கள் குவித்திருந்த சேனையின் அளவைக் கண்டதும் போர்சுக்கீசியர்கள் பின்வாங்கத் தொடங்கினர் [9]. போரில் தங்கள் கை மேலோங்கியிருப்பதை உணர்ந்த மராட்டியர்கள் போர்சுக்கீசியர்களை அலோர்னா கோட்டைக்கு செல்லும் வழியில் விரட்டியடிக்க முடிவெடுத்தனர் [9]. மராட்டியர்களின் குதிரைப்படை பின்வாங்கிய போர்ச்சுக்கீசியர்களின் காலாட்படையை மேலும் எல்லையையிலிருந்து துரத்தியது. தொடர்ந்த போரின் காரணமாக இப்ரம்பூரின் வடதிசைப் பாதுகாப்பில் இருந்த போர்ச்சுக்கீசியப் படைகள் மேற்குப் பகுதியில் நடைபெறும் போரில் உதவி புரிய வரவழைக்கப் பட்டனர் [9].

    ஆனால் ஒப்பிடும்பொழுது அளவில் மிகக்குறைவாக இருந்த வடதிசையின் போர்ச்சுக்கீசியப் படை, இப்ரம்பூரில் இருந்து முன்னேறிய மராட்டியக் காலாட்படைகளினால் தடை செய்யப் பட்டது [9]. அதனால் முதல் நாள் போரின் இறுதியில் இரு துருப்புகள் மட்டுமே எஞ்சின, இழப்புகளும் குறைவாகவே இருந்தது. அத்துடன் மேற்குப் பகுதியின் போர்சுக்கீசியப் படை கையாண்ட புத்திசாலித்தனமான போர் நடவடிக்கைகளினால் ஒரு ஒழுங்கு முறையில் கட்டுப்பாட்டுடன் அவர்களால் பின்வாங்க முடிந்தது [9]. ஆயினும், போரின் தீவிரமும், மராட்டியச் சேனையின் பெரும்பான்மை பலமும் போர்சுக்கீசியர்களால் உடனடியாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அத்துடன், இம்ரம்பூர் மக்கள் மராட்டியப் படைகளை ஆதரித்ததுடன் அவர்களது படைகளையும் பலப்படுத்திக் கொள்ள உதவியுள்ளனர் என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ளும் நிலைக்குப் போர்சுகீசியர்கள் தள்ளப் பட்டனர். இந்துக்கள் பெரும்பானையாக வசிக்கும் இப்ரம்பூர் போன்ற மற்ற பிற எல்லைப்புற ஊர்களுக்கும் இம்பரம்பூர் ஒரு தவறான முன்மாதிரியாக இருந்திருக்கும் என்றும் அவர்கள் நம்பத் தொடங்கினர் [14].

    தொடர்ந்து இரண்டு நாட்களாக அலோர்னா கோட்டையினை நோக்கி மராட்டியர்கள் விரட்டிய பின்பு கோவாவின் வாஸ் கோடா காமா பகுதியிலிருந்த போர்ச்சுக்கீசியப் படை போர்ச்சுக்கீசியர்களின் உதவிக்கு வந்து சேர்ந்தது [9]. இதனால் ஏற்பட்ட சமஅளவுள்ள படை பலத்தினால் போர்ச்சுக்கீசியர்களுக்கு மராட்டியர்களை எதிர்த்து நிற்கும் திறன் ஏற்பட்டது. அடுத்த நாள் மேற்கொண்ட திறமையான நடவடிக்கைகளினால் இருபடைகளும் ஒன்றை ஒன்று முன்னேறவிடாதவாறு முடக்கப் பட்ட நிலை ஏற்பட்டது. அடுத்து தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இந்த நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் நிகழவில்லை. இருதரப்பினரும் தேவையற்ற, ஆபத்து நிறைந்த வழிகளை மேற்கொண்டு இழப்புகளை அதிகப்படுத்தும் நிலையினைத் தவிர்க்க விரும்பினர் [9]. இருதரப்பினரும் தற்காப்பிற்காக மட்டுமே தாக்குதலை நடத்த முயன்றனர். போரின் முதல் இரு துவக்க நாட்களில் மராட்டியப் படை ஏற்படுத்திய சேதங்கள் போர்ச்சுக்கீசியர்களை அலோர்னா கோட்டையினை நோக்கி பின் வாங்க வைத்திருந்தது. ஆனால் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டு பின்வாங்குதல் நிறுத்துப் பட்டிருந்தது. தனது திறமையான குதிரைப்படையினை கையாண்ட விதத்தின் மூலம் போர்ச்சுக்கீசியர்களைத் தாக்காமல் அவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே மராட்டியப் படை தடை செய்தது [9].

    ஜூலை மாதத்தின் துவக்கத்தில், இம்பர்ம்பூரில் இருந்து வெகு தொலைவிற்கு நகர்த்தப் பட்டு விட்ட காரணத்தினால், போர்ச்சுக்கீசியர்கள் பீரங்கிகளை போரில் உபயோகப் படுத்த தங்கள் மேலிடத்தின் அனுமதியைப் பெற்றனர். பீரங்கித் தாக்குதல் மராட்டியக் காலாட்படையினை செயலிழக்கச் செய்ய உதவியது, ஆயினும் இத்தாக்குதலினால் ஏற்பட்ட சேதத்தின் அளவு குறைவே. தொடர்ந்த பீரங்கித் தாக்குதல் மராட்டியக் குதிரைப் படைகளைக் குறிவைத்தது. இதனால் சுடப்படக்கூடிய தாக்குதல் எல்லையிலிருந்து மராட்டியப் படைகள் பின்னடைந்தன [9].

    மராட்டியர்கள், அலோர்னா கோட்டையின் அருகாமையை விட்டு விலகி, மீண்டும் ஒருங்கிணைத்து, சாலையின் தென்திசையில் இருந்து வேகமாக முன்னேறித் தாக்கி எதிரியின் பீரங்கிப் படையைச் சிதறடித்து அவர்களுக்கு பேரிழப்பை உருவாக்கத் திட்டமிட்டனர் [9]. போர்ச்சுக்கீசியர்களின் கைவசம் இருந்த உயர் தொழில்நுட்ப போர்க்கருவிகளுக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் தங்களது போர்த் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு மராட்டியப் படைகள் தள்ளப்பட்டன.

    மராட்டியர்களின் போர்த்திட்டத்தைப் புரிந்து கொண்ட போர்ச்சுகீசியர்கள் விரைவில் தங்களது படைகளைப் பல பிரிவுகளாக்கி புதிய வேகத்துடன் முன்னேறிய மராட்டியப் படையினை எதிர்த்துத் தாக்கினர். இத்தாக்குதல் முறையினை சற்றும் எதிர்பாராத மராட்டியப் படை, எதிர் தாக்குதலில் நிலைகுலைந்து மேலும் தென் திசையை நோக்கி, சப்போரா ஆற்றினை நோக்கி நகர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது [9].

    சப்போரா ஆற்றினை அடைந்த மராட்டியக் குதிரைப் படை, மராட்டிய எல்லைக்குள் பின்வாங்கி தந்திரமாக போர்ச்சுக்கீசியப் படையினை அவர்களது பாதுகாப்பான கோவா பகுதியில் இருந்து நகரச் செய்து தங்களது மராட்டிய எல்லைக்குள் இழுக்க நினைத்தனர். ஆனால் போர்ச்சுகீசியப் படையோ சப்போரா ஆற்றினை நோக்கி முன்னேறுவதைத் தவிர்த்தனர் [9]. ஜூலை மாதத்தின் முடிவில் மராட்டியப் படைகள் தங்கள் எல்லைக்குள் ஒருங்கிணைந்தன. அலோர்னா கோட்டையினைப் பலப்படுத்திய பிறகு, ஆல்பெர்ட்டோ பின்ட்டோவின் தலைமையின் கீழ் போர்ச்சுக்கீசியப் படைகள் சப்போரா ஆற்றின் வடக்கில் பரவலாக நிலைகொண்டு தங்களது நிலையினை நன்கு பலப்படுத்திக் கொண்டனர் [11].

    (தொடரும்)

    படம் உதவி:
    அலோர்னா கோட்டை – http://www.portugal-india.com/en/sites/default/files/alorna4.jpg

    ______________________________________

    References:
    [1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
    [2] Thompson op cit. p 208.
    [3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
    [4] Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868. ISBN 8189004077
    [5] Hunter, William W, The Imperial Gazetteer of India, Trubner & Co, 1886
    [6] Thompson op cit. p 199.
    [7] Thompson op cit. p 200.
    [8] Thompson op cit. p 201.
    [9] Srinivasan Vasantakulan, Bharaitiya Struggles, (1000 AD – 1700 AD), Voice of India, 1998. ISBN 9789132145612
    [10] Thompson op cit. p 203.
    [11] D’Souza David, Roots of conflict in Portuguese Goa, Dakini Books, 1961. ISBN 9782354278882
    [12] Thompson op cit. p 211.
    [13] Thompson op cit. p 212.
    [14] Thompson op cit. p 206.
    [15] Kansarpal (http://www.hindubooks.org/templesofindia/sarvam_sakti_mayam/goa/kansarpal.htm) Hindu religious and cultural locations
    [16] Thompson op cit. p 215.
    [17] Thompson op cit. p 219.

    Further reading
    Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868
    Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996
    Sakshena, R.N, Goa: Into the Mainstream, Abhinav Publications, 2003

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
    சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து

    திருவாசகத்து சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் இந்தக் கடைசி நான்கு வரிகளில் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்’ என்பதை மிகவும் ஊன்றிப்பார்த்தால் புரியும், நாம் பாடும் பாடலின் பொருளை நாம் சரியாக அறிந்துகொள்ளவேண்டும் என்பதில் எத்தனை முனைப்பாக இருக்கிறார் என்பதும் தெரியவரும்.

    வடமொழியில் பாடப்படும் வேதத்தின் சாரமாகவே தமிழில் கொடுக்கப்பட்டதுதான் தேவார திருவாசகமும், திவ்வியப்பிரபந்தங்களும் என்பதை நம் முன்னோர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் சொல்லி வந்தனர்தாம். வடமொழி வேதங்கள் அவ்வளவு சுலபமாக அறியப்படுபவை அல்ல. அப்படியே வேதங்களை நாம் செவிவழியாகப் பயின்று அதை சரியானபடி படித்தாலும் பாடினாலும் அதன் பொருள் நிச்சயமாக நாம் அறிந்ததுதானா என்ற கேள்வி கூட வரும். இதனால் எல்லாம் வேதங்களுக்கும் வேதப் படிப்புக்கும், வேத ஞானத்துக்கும் நாம் எதிர்மறையாகப் பேசப்போவதில்லை. வேதங்களின் நாயகன் இறைவன் என்பதும் அந்த வேதமானது நம் சனாதன தர்மத்தின் ஆணிவேர் என்பதும் பாரத ஆன்மீக வரலாற்றில் பன்னெடுங்காலமாகவே போற்றப்பட்டு வந்ததுதான். இங்கு நாம் சொல்ல வந்த கருத்து கூட கையிலே வெண்ணெயிருக்க நெய்க்கலைவானேன், என்பது மட்டுமே

    ஈழத்தைச் சேர்ந்தவரும், வடமொழியில் தேர்ந்து, பைபிளையும் பயின்றவருமான தமிழ்ப் புலவர் சாமிநாதசர்மா, தேவாரத்தை பல்வேறு வகையில் வேதங்களின் மூலக் கருத்தோடு இணைத்து நூறாண்டுகளுக்கு முன்பாகவே நூல் படைத்திருக்கிறார். மானிடராய பிறந்த ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய நூல் தேவாரம் என்று எழுதுவதோடு வேதத்தின் பொருளை அறிந்து கொள்ள தேவாரம் பாடல்களைப் பொருளுணர்ந்து படித்தால் போதுமானது என்பார்

    பொருளுணர்ந்து பாடவேண்டும் என்கிறபோது, அதுவும் தேவாரப் பாடல்களை ஆழமாக உள்வாங்கி, உணர்ந்து பாடும்போதே அந்தப் பாட்டில் பொருள் நமக்கு சாதாரணமாகவேப் புரியும். சில சமயங்களில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமான பொருள் தரும் கட்டங்களும் வரும். அதில் ஒன்றுதான் அப்பர் சுவாமிகள் பாடிய ’நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்’ என்ற ஒரு அருமையான தேவாரப் பாடல். இதன் ஆழமான பொருளை திரு லோகநாதன் அவர்கள் சமீபத்தில் ஒரு மடலில் தந்துள்ளார். அந்தப் பாடலின் விளக்கத்தை அவர் மொழியில் கீழே தந்துள்ளோம்.

    வேதங்களிலிருந்து ஒரு சுலோகமும் அறியாதவனும் பல நாடுகளின் நல்ல ஞானியாக எழுந்துள்ளான். இவ்வாறு கோயில்களே இல்லாத பண்பாடுகளிலும் நல்ல ஞானிகள் உண்டு ஆக அனைவருக்கும் பொதுவாகிய ஓர் சாதனம் தான் யாது?
    இங்குதான் நம் அப்பர் பெருமான் உதவுகின்றார்.

    இறைவன் தான் யார்க்கும் குடி அல்லாதவன் அவனை நெருங்கினால்தான் அகத்தே ஞனபிரகாசம் தானே மலர்ந்திடும் ஞான அந்தகாரத்தைத் தரும் ஆணவ இருளும் உயிரை நெருங்காது.

    தான் யார்க்கும் குடியல்லாத சங்கரனின் நெருக்கத்தை, தான் யார்க்கும் குடியலாத் தனமையே வளர்க்கும், ஒவ்வொரு ஆன்மாவின் சுயத்தை மீட்கும் அதன் சுதந்திரத்தை வளர்க்கும் ஓர் போதனாமுறையே ஈட்டித் தரும்.

    அடிமைத் தனத்தை வளர்க்கும் எந்த சமய சாதனமும் பயனின்றி விழும், பண்பாட்டின் சிதைவுக்கும் அழிவுக்கும் வித்திடும்.

    அதுதானே இப்பொழுது தமிழ் மக்களிடையே நடந்து கொண்டிருக்கிறது?

    காவி உடுத்தி சாமியாராகத் திரியும் பெரும்பாலோர், அடியார்கள் அனைவரும் தனக்கே அடங்கி அடிமையாகி இருக்க வேண்டும் தன்னையே இறைவனாக நினைத்து தனக்கே உடல் பொருள் ஆவி அனைத்தையும அர்ப்பணிக்க வேண்டும் என்றல்லவா நினைக்கின்றார்கள்?

    இவரகட்கு ஏற்ப பெரும்பாலான மக்களும் இவ்வாறு ஒருவனுக்கு அடிமைப் பட்டு கிடத்தலையே விரும்பி அதுவே தக்க வழி என்று நினைத்து தன் சுயத்தை வளர்க்காது இப்பேற்ப்பட்ட சாமியாரகட்கும் இழக்கின்றார்கள்.

    அடிமை படுத்துபவன் உள்ளத்திலும் அடிமைப் படுகின்றவன் உள்ளத்திலும் ஆண்டவன் இருக்க மாட்டான் என்பதோடு அங்கே ஆணவ மலத்தை விரட்டும் ஞானப்பிரகாசமும் சுடராது.

    பண்பாட்டு வீழ்ச்சியின் முதன் படியே இப்படிப்பட்ட சுயத்தின் இழப்புதான். இன்றையத் தமிழர்கள் இப்படித்தான் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். இதனை நினைக்க மிகவும் வேதனையாகவும் இருக்கின்றது.. இதனால்தான் போலும் உலகிலேயே முதன் முதலில் மனித சுயத்தைப்பற்றி மிக ஆழமாக சிந்தித்து முழங்கிய அப்பர் பெருமானின் “நாம் யாருக்கும் குடி அல்லோம்” எனும் பாடல் போற்றுவாரின்றி வாளே கிடக்கின்றது. இளமை காலத்திலேயே எனை ஈர்த்து எனை சைவன் ஆக்கிய அந்தப் பாடலை இங்கு தருகின்றேன்– அனைவர் உள்ளதிலும் அது ஆழப் பதிய.

    961.

    நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
    நரகத்தில் இடர்படோம் நடலை யில்லோம்
    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
    இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
    தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
    சங்கரன் சங்கவெண் குழையோர் காதிற்
    கோமாற்கே நாமென்று மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர் சேவடி இணையே குறுகி னோமே

    ஓர் சிறிய நாட்டின் தலைவனாக இருக்கும் யாருக்கும் அடிபணிந்து அந்நாட்டின் குடியாக இருக்கமாட்டோம், அவ்வாறுசெய்யுங்கால் தண்டித்து கொலை நோக்கோடு வந்தாலும் நமனை அஞ்சோம்; பலவித தண்டனைகள் கொடுத்து வாழ்க்கையைநரகமாக்கினாலும் இடர்படோம் , நடுங்கவுஞ் செய்யோம்; எச்சூழ்நிலையிலும் மனங்குழையாது ஏமாப்புடனேயே இருப்போம்,எவ்வகையான பிணியும் அறியோம் என்பதின் பணிவோம் அல்லோம்; யாது நடந்தாலும் அது இன்பமே எந்நாளும் துன்பமில்லை. இவ்வாறு நாம் இருப்பதற்கு காரணம் தாம் யார்க்கும் குடியல்லாத சர்வ சுதந்திரத் தன்மையான அர்த்தநாரீ வடிவத்துவெண்குழையோர் காதில் அணிந்திருக்கும் சங்கரனை நம் தலைவராய்க் கொண்டு, அவனுக்கே மீளா ஆளாய் நின்று அவனது மலர்களைப் போன்ற சேவடிகளைத் தொழுவதற்கே நாம் குறுகினோம் என்பதால் என்றறிக

    தேவாரப்பாடல்கள் இப்போது முழுமையான பொருளில் தேவாரம் தளத்தில் கிடைக்கின்றன என்பது சிவன் அவன் திருவருள்தான். அதனுடன் திரு லோகநாதன் போன்றோர் இப்படிப்பட்ட ஆழமான பொருளையும் சேர்ந்து நமக்குத் தருவது என்பதும் நமக்கு கூடுதலான இன்பம்தானே.

    இந்தவாரத்தில் ஒரு இனிய பாடலுக்கு விளக்கமளித்த திரு லோகநாதன் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழு தேர்ந்தெடுக்கின்றது. அவருக்கு நம் வாழ்த்துகள்.

    http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-01-20-30-58/2008-12-01-20-31-36/2008-12-01-21-38-40 வல்லமையாளர் திரு லோகநாதன் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த தளத்திற்குச் செல்லுங்கள். நன்றி.

    கடைசி பாரா: சாந்தியின் ‘காகிதக் குறிப்புகள்’ லிருந்து

    அற்புதமானதாகவோ சாதாரணமாகவோ
    ஏதேனும் ஒரு
    கிறுக்கலையாவது பரிசளிப்பது மிக நன்று.
    அதை
    வெறுமையாகவே விட்டுச்செல்வதை விட.

    Share
  • “வரலாற்றின் மறுபக்கம்.”

    செல்வரகு

    (திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு)

    “வரலாற்றின் மறுபக்கம்.”

     

    சத்தியம் தொலைக்காட்சி வழங்கி வரும் உலகத்தரம் வாய்ந்த பிரமாண்ட படைப்பின் தமிழ் வடிவம் “வரலாற்றின் மறுபக்கம்.”

    இது வரைக்கும் பார்க்காத உலகத்தைப் பார்த்து வியக்க வைக்கும் ஆணவக் களஞ்சியமாக , திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் வரலாற்றின் மறுபக்கம் ஒளிபரப்பாகி வருகிறது .

    ஒவ்வொரு முறையும் உலகத்தில் நடக்கும் ஒரு புதிய நிகழ்வைப் பதிவு செய்து வரும் வரலாற்றின் மறுபக்கத்தில் , வருகின்ற வாரத்தில் ஒளிபரப்பாக இருக்கும் ஆவணத் தொடர்கள் :

    06.05.2013 . உலகத்தில் – இரண்டு முறை வாழலாம் .

    கற்பனைக்கு எப்போதும் தடையில்லை . இன்று இருக்கும் தொழில் நுட்ப வெளியில் மனிதர்கள் கம்யூட்டரின் மூலம் எல்லை கடந்து வாழலாம் -என்ற அறிவின் தேடலைப் பற்றிய ஒர் ஆவணமே “உலகத்தில் இரண்டு முறை வாழலாம்”

    07.05.2013 . பூட்டான் – மகிழ்ச்சியின் உச்சம் .

    தெரியாத மனிதர்களைத் தெரிந்து கொள்ளலாம் . பூட்டான் நாட்டில் தொழில் நுட்ப வளர்ச்சிகள் அவ்வளவாக இல்லையென்றாலும்,  உலகத்தின் மகிழ்ச்சியான மனிதர்கள் அங்கு வாழ்வதாகச் சொல்கிறார்கள். பூட்டான் மக்களின் கலாச்சாரத்தையும் , அவர்களின் புத்த மதக் கொள்கைகளையும் தெரிந்து கொள்ளுங்கள் .

    08.05.2013 . புதைந்த – இந்திய சுற்றுச் சூழல் .

    இந்தியா முழுக்க பரந்த ஒர் பார்வையில் சுற்றுச் சூழல் மாசுபாடுகளைத் தத்ரூவமாக ஆவணமாக்கியுள்ளார்கள் .

    09.05.2013 . ஆப்கானிஸ்தான் – ‘காபூல்’ கால்பந்து மன்றம் .

    33 வருடங்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் – பாக்கிஸ்தானுடன் உலக கால்பந்தாட்டத்தில் களம் இறங்கி , தகுதிச் சுற்றுக்குத் தயாராகிய நிகழ்வை இப்போது நீங்கள் காண இது ஒரு நல்லவாய்ப்பாக இருக்கும்.

    10.05.2013 . சௌத்ஆப்பிக்காவின் – முக்கிய நாசக்காரன் .

    சௌத்ஆப்பிக்காவில் , யூஜின் அலெக்சான்டர் எனும் கொடுமைக்காரனைப் பற்றிய சுயசரிதை பார்வையாளர்களை நிச்சயம் அதிர்ச்சியடையச் செய்யும் .

    வாரத்தின் 5 நாட்களும் தவறாமல் வரலாற்றின் மறுபக்கத்தைப் பாருங்கள். உலக நிகழ்வின் உருவாக்கத்தை உணருங்கள் .

    Share
  • பேரா. இ. அண்ணாமலையின் பதில்கள் – 48

    இன்றைய எழுத்துத் தமிழும்  பேச்சுத் தமிழும் வேறுவேறு மொழிகளா?

    -இணையக் குழுக்களில்  விவாதிக்கப்படும் கேள்வி

    வல்லமையில் என்  முப்பத்தைந்தாம் கேள்வி-பதிலில்  இன்றைய எழுத்துத் தமிழுக்கும்  பேச்சுத் தமிழுக்கும் உள்ள சில இலக்கண வேறுபாடுகளை  எழுதினேன். மேலே உள்ள கேள்வி அந்த மாதிரியான இலக்கண வேறுபாடுகள்  இரண்டு தமிழையும் வேறு மொழிகள்  ஆக்குகின்றனவா என்று கேட்கிறது. அதாவது, வேறுபாடு நடை அல்லது வெளிப்பாட்டு வேறுபாடா, அல்லது மொழி வேறுபாடா என்பதே கேள்வி.

    இந்தக் கேள்விக்குப் பதில் அளிப்பதற்கு முன் சில விளக்கங்கள் தேவை. எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் என்ற பெயர்கள் பெரும்பான்மை வழக்கு பற்றித் தரப்பட்ட பெயர்கள். மேடைப் பேச்சும் எழுத்துத் தமிழில் அடங்கும்; எழுதப்படும் கதைகளின் பாத்திரங்களின் உரையாடல்களும் சிரிப்புத் துணுக்குகளும் பேச்சுத் தமிழில் அடங்கும். எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் என்னும் வேறுபாடு, மொழி வெளிப்படும் ஊடக வேறுபாட்டைக் காட்டுவது மட்டுமல்ல; அது தமிழை வழங்குவோர்களிடையே உள்ள உறவின் தூரத்தையும் நெருக்கத்தையும் பொறுத்து வேறுபடுவது. இந்த வேறுபாடு மொழியின் இலக்கணத்தில் அல்லாமல் நடையிலும் பிரதிபலிக்கலாம். ஆனால், தமிழில் இலக்கணமும் இந்த வேறுபாட்டைப் பிரதிபலிக்கிறது. ஆகவே, இந்த இலக்கண வேறுபாடு மொழியை இரண்டாக்குகிறதா என்பதே கேள்வி.

    கொச்சைத் தமிழும்  கலப்புத் தமிழும் மட்டுமே  பேச்சுத் தமிழ் அல்ல. எல்லாரும்  பொதுவாகப் பொது இடங்களில்  பேசும் தமிழ் ஒன்று உண்டு. அதுவே எழுத்துத் தமிழோடு ஒப்பிடப்படுகிறது. இதைப் போலவே, பண்டிதர்கள், அறிவியல், சட்டம், ஆட்சியை நடைமுறைப்படுத்துவர்கள் எழுதும் தமிழ் மட்டுமே எழுத்துத் தமிழ் அல்ல. சிறப்புத் துறை சாராமல் பொதுக்கல்வி உடையவர்கள் எழுதும் தமிழே இங்கே பேச்சுத் தமிழோடு ஒப்பிடப்படுகிறது.

    ஒரு மொழிக் குழுவின் (linguistic community) மொழி வழக்கில் பல்வேறு மொழிகள் இருக்கலாம்; இதைப் பன்மொழியம் (multilingualism) என்பார்கள். ஒருவருடைய மொழி வழக்கில் பல வட்டார மொழிகளும் பல நடைகளும் இருக்கும். இது இயல்பு. இதைப் பன்மொழியம் என்பதில்லை; இதைப் பல்வழக்கியம் எனலாம். தமிழைப் பள்ளிகளில் கற்றவர்களிடம் உள்ள எழுத்து மொழி சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட மொழி வழக்கு, இருமொழியியமா, இருவழக்கியமா என்பதே கேள்வி.

    ஒரு மொழி இலக்கணத்தின் கட்டுமானம். இந்த இலக்கணம் மொழியின் கட்டை ஒரு கணித வாய்பாடு போல விளக்கும் வரையறை; மொழிக்குச் சட்டம் போலக் கட்டுப்பாடு விதிக்கும் குற்றக் கையேடு அல்ல. மொழி கலாச்சாரத்தின் கட்டுமானமும்கூட. அதன் கலாச்சாரத்தின் கட்டுமானத்தில் மொழிக்குழுவின் வரலாறும் அரசியலும் பெரும் பங்கு பெறும். தன்னை இனங்காட்டுவதாக வரித்துக்கொண்ட மரபுச் செல்வமும் வரலாற்றில் அடங்கும். மரபுச் செல்வத்தில் இலக்கியமும் தொன்மங்களும் பெரும் இடம் பெறும். எழுத்துத் தமிழை அறியாத தமிழர்களும் அதில் உள்ள இலக்கியம் தங்கள் மரபுச் செல்வம் என்ற உணர்வை உடையவர்கள். எழுத்துத் தமிழை அறிந்தவர்களும் காலந்தோறும் மாறிவரும் தமிழ் இலக்கியத்தின் வழிவருவதே இன்று பேச்சு மொழி கலந்து எழுதப்படும் தமிழ் இலக்கியம் என்று பார்ப்பவர்கள். தமிழகத்தின் பேச்சுத் தமிழுக்கு இலங்கையின் பேச்சுத் தமிழோடும் மலையாளத்தோடும் உள்ள தூரம் ஒப்பிடக் கூடியது என்றாலும், இலங்கைத் தமிழ் தனி மொழி அல்ல என்று தமிழின் மொழிக்குழு நினைப்பதற்கு இரண்டையும் பேசுபவர்கள் இலக்கியத்தை இருவருக்கும் பொதுவான கலாச்சாரப் பாரம்பரியமாகக் கொள்வது முக்கியமான காரணம். இதற்கு மேல் அரசியல் காரணமும் இருக்கிறது. இரண்டையும் வேறாகப் பார்ப்பதை விட ஒன்றாகப் பார்ப்பதில் அரசியல் நன்மை இருக்கிறது. மலையாளத்தைப் பொறுத்தவரை இந்த நன்மை தலைகீழானது. கலாச்சாரக் கட்டுமானம் என்னும் வகையில் எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் ஒரு மொழியே. இது சமூக மொழியியலாளர்களின் பார்வை.

    இலக்கண மொழியிலாளரின்  பார்வையில், இரண்டு வழக்குகள் அவற்றைப் பேசுபவர்கள் பயிற்சி இல்லாமலே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் அளவீடு முக்கியமானது. ஒரு வழக்கில் மற்றவருக்குப் புரியாத பகுதி பத்து அல்லது இருபது சதவிகிதத்திற்குள் இருந்தால், அந்த வழக்குகள் ஒரே மொழி என்று சொல்ல அவர்களுக்குத் தடை இல்லை. ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் பகுதி இலக்கண ஒற்றுமையாலும் அகராதி ஒற்றுமயாலும் அமையும். ஒரு மொழியைப் புரிந்துகொள்வது என்பது துல்லியமாகக் கணிக்க முடியாத ஒன்று; மேலும் நபருக்கு நபர் அவருடைய பின்னணியைப் பொறுத்து மாறும் ஒன்று. ஒரே மொழி என்றால் பயிற்சி இல்லாமல் புரிந்துகொள்ளக் கூடியது என்ற கருத்துக்கும் ஒரே மொழி எனபது கலாச்சாரத்தால் கட்டப்படுவது என்ற கருத்துக்கும் முரண்பாடு இருந்தால், பின்னைய கருத்தின் முடிவையே மொழிக்குழு ஏற்றுக்கொள்ளும். பேச்சில் இந்தி பேசுபவர்கள் உருதுவையும் உருது பேசுபவர்கள் இந்தியையும் புரிந்துகொள்ள முடியும் என்றாலும், அவர்களுக்கு இரண்டும் வேறு மொழிகள். இந்த எண்ணம் எழுத்துமுறை முதலாக அரசியல் ஈறாக உள்ள வரலாற்று விளைவினை ஒட்டி எழுவது. இந்தியர்கள் பேசும் ஆங்கிலத்திற்கும் ஆங்கிலேயர்கள் பேசும் ஆங்கிலத்திற்கும் புரிந்துகொள்வதில் அதிகமாகவே இடைவெளி இருந்தாலும் இரண்டும் ஆங்கில மொழியே என்று கருதுவது  வரலாற்றின் பிரதிபலிப்பு.

    நேரடியாக இலக்கண இடைவெளியை  வைத்து ஒரு மொழி, இரு மொழி என்று வேறுபடுத்தலாம் என்பது வரலாற்று மொழியியலாளரின் கொள்கை. அதாவது, இலக்கண மாற்றங்கள் ஒரு அளவிற்கு மேல் அதிகமானால், ஒரு மொழி பிரிந்து இரண்டாகும் என்பதே இந்தக் கொள்கையின் அடிப்படை. ‘எந்த அளவிற்கு’ என்பதற்குப் புரிதலோடு தொடர்பில்லாத ஒரு துல்லியமான கணக்கு இல்லை. எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் உள்ள வேறுபாடு அவற்றின் இலக்கண விதிகளுக்கு (அதாவது வாய்பாடுகளுக்கு) இடையே உள்ள வேறுபாடு; அது அளவில் அதிகம்; அதனால் அவை இரு வேறு மொழிகள் என்பது ஒரு வாதம். வேறு சிலர், அது இலக்கண விதிகளின் வேறுபாடு அல்ல; இலக்கண விதிகளை மீறுவதால் வரும் வேறுபாடு என்பார்கள், இவர்கள் இலக்கணத்தைக் காலத்தால் மாறாத சட்டப்பெட்டகமாகப் பார்ப்பவர்கள்; இந்தப் பார்வையில் புதிய விதிகள் தோன்றுவது பேசுபவர்களின் சோம்பேறித்-தனத்தாலோ கெட்ட புத்தியாலோ நடக்கும் செயல்; அதனால் மொழி விவாதத்தில், இது –தமிழ் பேசும் எல்லாரும் செய்யும் செயலாக இருந்தாலும்- ஒரங்கட்ட வேண்டிய செயல் என்று வாதிடுபவர்கள். இது ஒரு கற்பனையான நிலையை மொழி வழக்கில் பார்த்து, தமிழ் ஒன்றா, இரண்டா என்னும் கேள்விக்கே இடம் இல்லாமல் செய்ய முயலும் செயல்.

    பேச்சுத் தமிழுக்கென்று  ஒரு இலக்கணம் உண்டு என்று ஒப்புக்கொள்பவர்களில் சிலர் சில எளிய விதிகளின் மூலம் எழுத்துத் தமிழைப் பேச்சுத் தமிழோடு இணைக்கலாம். இரண்டுக்கும் உள்ள இலக்கண இடைவெளி பொருட்படுத்தத் தக்கது அல்ல என்று வாதிடுவார்கள். ஆனால். இதை மறுக்கும் தரவுகள் உண்டு. தமிழ்க் குழந்தை பேச்சு மொழிக் கலப்பில்லாத எழுத்துத் தமிழைப் பள்ளியில் கற்க நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எழுத்துத் தமிழ்மட்டும் படித்துவிட்டுப் பேச்சுத் தமிழைப் படிக்கும் வெளிநாட்டவருக்கு அதைப் படிக்கத் தனி மொழி படிக்கும் அளவிற்கு நேரம் எடுக்கிறது. அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் பேச்சுத் தமிழ் பத்துச் சதவிகித அளவுதான் புரிகிறது. (தமிழர்கள் தமிழை வேகமாகப் பேசுவதும் இதற்கு ஒரு காரணம் என்பார்கள்!). தமிழ் பேச மட்டும் தெரிந்தவர்கள் மேடைப் பேச்சை அமர்ந்து கேட்கிறார்கள் என்றால், அவர்களுடைய புரிதல் நூறு சதவிகிதம் என்று அர்த்தமல்ல. இன்னொரு மொழியில் இசைக் கச்சேரி கேட்பதைப் போல, ஒலியின் இனிமைக்கும் பேச்சாளரின் தமிழ்த் திறனுக்கும் மயங்கி இவர்கள் பேச்சைக் கேட்பதும் உண்மை. இதற்குப் புரிதல் முக்கியமல்ல.

    எழுத்துத் தமிழுக்கும்  பேச்சுத் தமிழுக்கும் இடைவெளி  எப்படி இருந்தாலும், பல சமூகக் காரணங்களால் இருபதாம் நூற்றண்டிலிருந்து இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது. பேச்சு மொழியின் புதிய தொடரிலக்கணக் கூறுகளும் சொற்பொருளின் கூறுகளும் எழுத்து மொழியில் இடம் பெறுகின்றன. அதில் எழுத்து மொழிக்கே உரிய கூறுகளும் பேச்சு மொழியிலிருந்து வந்துசேர்ந்த கூறுகளும் சேர்ந்து உள்ளன. இதனால் எழுத்து மொழியில் ஒன்றைக் கூற ஒன்றிற்கு மேற்பட்ட அமைப்பு முறைகள் உள்ளன. சொல்லின் உள்ளமைப்புக் கூறுகளும் இப்படியே. இரண்டும் அதிகமாக வித்தியாசமாக இருப்பது சொல்லின் ஒலியமைப்பில் மட்டுமே. சொல்லிலக்கணத்தில் காணப்படும் பெரும்பான்மை வேறுபாடுகள் ஒலியமைப்பால் வருவன. இதற்கான சான்றுகளை என்னுடைய Social Dimensions of Modern Tamil என்ற நூலில் (க்ரியா வெளியீடு) காணலாம்.

    மொழிப் பயன்பாட்டிலும் இடைவெளி குறைந்துவருகிறது. மேடைத் தமிழில் நகைச்-சுவைக்கும், வகுப்பறையில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே நடக்கும் கலந்துரையாடலிலும், செய்தித் தாள்களின் செய்தித் தலைப்பிலும், பேட்டிக் கட்டுரையிலும், திரைப்படத்தின் தலைப்பிலும் பாடலிலும் பேச்சுத் தமிழ் இடம் பெறுகிறது. பேச்சில் புதிதாக உருவாக்கப்பட்ட எழுத்து மொழிக் கலைச்சொற்கள் இடம் பெறுகின்றன.

    இயல்பாக நடக்கும் இந்த மாதிரியான  இடைவெளிக் குறைப்பை ஊக்குவிப்பதே தமிழ் ஒன்றா, இரண்டா என்ற கேள்வியின் தேவையைக் குறைக்கும். இடைவெளிக் குறைப்பில் எழுத்து மொழியில் பேச்சு மொழியின் தாக்கமே அதிகப் பங்கு வகிக்கிறது. இதற்கு மாறாக, தூய தமிழ் –அதாவது பழைய தமிழ்- வேண்டும் என்று பின்னோக்கிப் போய்ப் பழைய இலக்கண நூல்கள் சொல்லுவதைப் போல எழுத விரும்புவது இடைவெளியைக் கூட்டும். அப்படி எழுதுவதைப் போல் பேசி இடைவெளியைக் குறைக்கலாம் என்று சொல்வது எந்த மொழி வரலாற்றிலும் காணாத ஒன்று. தமிழை உன் தாயிடம் படிக்காதே, பழங்கால ஆசானிடம் மட்டுமே படி என்று சொல்வதைப் போன்ற நடக்க முடியாத செயல். இது சூடிதார் போடும் மகளைப் புடவைதான் கட்ட வேண்டும் என்று கட்டளையிடும் மனப்பாங்கின் வெளிப்பாடு. இதைச் செய்ய முடிந்தாலும், அது சர்வாதிகாரத்தினால்தான் முடியும். தமிழின் இயல்பான வளர்ச்சிக்குக் கடிவாளம் போடுவது தமிழை –தமிழ் பேசுபவர்களை- அடக்கியாளும் செயல். தமிழ் அதன் வரலாற்றில் என்றும் அடக்கியாளப் பட்டதில்லை; அதனாலேயே தமிழ் வழங்கு மொழியாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நிற்கிறது.

    Share
  • காகிதக்குறிப்புகள்..

     

    சாந்தி மாரியப்பன்

     

    காற்தடம் பதியாப்பாதையெனவும்,
    எழுதப்படாத வெற்றுக்காகிதமெனவும்
    முன் நீண்டு கிடக்கிறது
    இன்றைய தினம்.

    புட்களின் அதட்டலுக்குப் பயந்த
    விடிகாலைச்சூரியன்
    மேகப்போர்வை விலக்கி
    மெல்ல முகம் காட்டவும்
    தலையசைத்துப் பூமழை சொரிந்து
    பச்சையம் சுமந்த பயிர்களெலாம்.
    வரவேற்பு அளிக்கவுமென
    நன்றாகத்தான் ஆரம்பிக்கின்றன
    ஒவ்வொரு தினமும்,
    வெற்றுக்காகிதமென. (more…)

    Share
  • இந்த வார ராசி பலன் – (6 – 5 – 2013 – 12 – 5 – 2013)

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்: கலைஞர்கள் உங்கள் திறமையால் விசேஷ சலுகைகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால், தடைகளை எளிதில் தாண்டி விடலாம். பெண்கள் சிறு பூசல்களை பெரிதாக்காமல் இருப்பது புத்திசாலித்தனம். பெற்றோர்கள் பிள்ளைகளின் பற்களின் பராமரிப்பில் கவனமாய் இருந்தால், மருத்துவச் செலவுகளை குறைத்து விடலாம். பொது வாழ்வில் உள்ளவர்கள் சில நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமலிருந்தால், உங்கள் நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்வது கடினமாய் இராது. இந்த வாரம் வீடு மனை வாங்க எடுக்கும் முயற்சிகளில் மும்மரமாக ஈடுபடுவீர்கள்.

    ரிஷபம்: வியாபாரிகளுக்கு கிடப்பில் கிடந்த நல்ல திட்டங்களை மீண்டும் செயலாற்றும் வாய்ப்பு கிட்டும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணி பளுவால், மன இறுக்கம் தோன்றி மறையும்.கலைஞர்கள் தேவையற்ற விமர்சனங்களைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம். மாணவர்கள் காரியங்கள் முடியும் வரை கவனச்சிதறலுக்கு இடம் தராமலிருப்பது நல்லது. பெண்கள் உறவுகளை அனுசரித்து நடந்து கொண்டால், அதிக ஆதாயம் இருக்கும். அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் பயணங்களில் கவனமாக இருப்பது அவசியம். பெற்றோர்கள்பிள்ளைகள் தொடர்பான நல்ல விஷயங்களை உடன் முடித்து விடுவது நல்லது.

    மிதுனம்: சுய தொழில் புரிபவர்கள் சிறந்த திட்டங்களைத் தீட்டி அதன் படி நடந்தால், அதிக லாபம் பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் லட்சியங்களை நிறைவேற்ற அயராமல் பாடுபடுவர். குடும்ப அமைதிக்கு பங்கம் வராமலிருக்க, பெண்கள் முக்கிய விஷயங்களை குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையுடன் செயல் படுத் துவது அவசியம். இந்த வாரம் கை வேலைகளில் ஈடுபடுபவர்களின் பொருளுக்கு நல்ல லாபம் கிட்டும். பெற்றோர்கள் பிள்ளைகளின் கையில் அதிக பணம் தருவதைத் தவிர்த்தல் நலம். மாணவர்கள் தீய பழக்கங்களின் பக்கம் திரும்பாமலிருந்தால், நல்லோரின் ஆதரவு நிலையாக இருக்கும்.

    கடகம்: சேமிக்க வேண்டும் என்று நினைத்தாலும், பெண்கள் இந்த வாரம், பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். புதிதாக வேலையில் சேர்ந்தவர்கள், பணி நிமித்தமாக வெளி இடங்களில் தங்க வேண்டிய நிலை ஏற்படலாம். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு, உடன் இருப்பவர்களால், தேவையற்ற கவலை வந்து நீங்கும். பொறுப்பில் இருப்பவர்களுக்கு கூடுதல் உழைப்பு இருக்கும். கடன் விவகாரம் கட்டுக்குள் இருக்க, வியாபாரிகள் தேவையான முயற்சிகளை அவ்வப்போது .எடுக்கவும். கலைஞர்கள் வெளியிடங்களில், தங்களின் மதிப்பு, மரியாதை கெடாமல் கவனமாக பேசுவது நல்லது. மாணவர்கள் போடும் உழைப்பிற்கு நல்ல பலன் கிட்டும்.

    சிம்மம்: பொது சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் , உங்களைத் தேடி வருபவர்களுக்கு உதவும் குணம் இருந்தாலும், மற்றவர்கள் உங்களை ஏமாற்ற இடம் கொடாதீர்கள். இந்த வாரம் மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புக்கள் கிட்டும். வியாபாரிகள் தேவையான இடங்களில் கனிவையும், பணிவையும் பயன்படுத்தினால், அதிக லாபம் பெறலாம். பெண்கள் இழுபறியான காரியங்களை கையில் எடுக்கும் முன் தேவையான செய்திகளையும், பலத்தையும் திரட்டிக் கொண்டு செயல் படுவது நல்லது. ஏற்ற இறக்கமுள்ள பங்குச் சந்தையில் அகலக் கால் வைக்க வேண்டாம்.

    கன்னி: அதிகாரிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு அனுகூலமாக அமைவதால், உங்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, நினைத்த காரியத்தை முடிப்பதில் குறியாய் இருப்பீர்கள் இந்த வாரம் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பெண்கள் பொது இடங்களில் பிறரின் நிறை குறைகளை அலசாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் வீண் செலவுகளுக்கு வழி வகுக்கும் இடங்களுக்கு செல்லாமலிருப்பதே புத்திசாலித்தனமாகும். கலைஞர்கள் மன வருத்தங்களை வெளிப்படுத்த முடியாத சூழல் இருக்கும்.. நெருங்கிப் பழகிய பங்குதாரர்கள் சிறு பிணக்குகள் காரணமாகப் பிரிந்து போக நேரலாம்.

    துலாம்: .மாணவர்கள் தங்கள் ஒப்பனை, உடை அலங்காரம் ஆகியவை கண்ணியமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நலம். சக கலைஞர்களின் ஆலோசனையால் கலைஞர்கள் தங்கள் திறமைகளை மெருகேற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும். கடன் தொல்லைகளினால் பெண்களுக்கு சிறிது மன சஞ்சலம் ஏற்பட்டாலும், செலவுகளைச் சமாளிக்க சேமிப்பு கை கொடுக்கும். மாணவர்கள் பாடங்களை கவனமாக பயில்வதன் மூலம் கடைசி நேர பதற்றத்தை குறைத்துக் கொள்ளலாம். நிர்வாகத்தில் உள்ளவர்கள் சோம்பலையும், பணிகளை தள்ளிப் போடுதலையும் தவிர்த்தால், நல்ல வாய்ப்புக்களைப் பெறலாம்.

    விருச்சிகம்: இதமான அணுகுமுறை மூலம் வியாபாரிகள் பாக்கிகளை எளிதில் வசூலிக்கலாம். இந்த வாரம் உறவுகள் பாராமுகமாய் இருந்த போதிலும், அவர்களின் சுப நிகழ்ச்சிகளுக்கென்று பணமும், நேரமும் செலவு செய்யும் நிர்ப்பந்தமிருக்கும். முதியவர்கள் கண் சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் கவனிப்பது நல்லது. வீட்டை விரிவுபடுத்துவதில் அதிக பணம் முடங்கும். பெண்கள் இதமாகப் பேசினால் உறவுகள் தொடர்கதையாகும் என்பதை அவ்வப்போது நினவில் கொள்வது நல்லது. விலை உயர்ந்த ஆடைவகைகள், நவீன பொருட்கள் ஆகியவை மாணவர்கள் வசமாகும்.

    தனுசு: வேலை செய்யும் இடங்களில் மன உறுதியுடன் செயல்பட்டு வாருங்கள். குறை சொல்பவர்களின் எண்ணிக்கை தானே குறைந்து விடும். இந்த வாரம் சரளமான பண வரவு இருந்தாலும், வீண் செலவுக்கு ஆசைப்பட வேண்டாம். வியாபாரிகள் ,யோசனை செய்த பின் பிறர்க்கு வாக்குறுதிகளை அளியுங்கள். பணியில் உள்ளவர்கள் அதிகார எல்லையைக் குறைத்துக் கொண்டால், அன்பு வட்டம் தானே விரியும். செய்தொழிலில் சில பிரச்னைகள் இருந்தாலும், உங்கள் வளர்ச்சி சீராக இருக்கும். நன்மைகள் பல கலைஞர்களை நாடி வர, வீண் கௌரவத்திற்கும், ஆணவத்திற்கும் இடம் தராமலிருப்பது நல்லது.

    மகரம்: மாணவர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ள எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். இந்த வாரம் சொந்த பந்தங்கள் கேளாமலேயே உதவி செய்து உங்களை மகிழ்விப்பார்கள். பெண்கள் குடும்ப விவகாரத்தில் அடுத்தவர் தலையீட்டிற்கு இடம்கொடாமலிருந்தாலே கருத்து வேற்றுமைகள் தானாய் விலகி விடும். மேலும் அறிமுகமில்லாத இடங்களில் உரையாடல்கள் அளவாக இருப்பது அவசியம். உயர் படிப்பிற்காக வெளியிடம் செல்பவர்கள் எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நன்மை தரும். கலைஞர்கள் சேமிப்பைக் கரைக்கும் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுதல் மூலம், மன உளைச்சலைத் தவிர்க்கலாம்.

    கும்பம்: வியாபாரிகள் பணியாளர்கள் கொடுத்த பொறுப்புக்களை சரிவர செய்கிறார்களா என்று கவனித்துக் கொண்டால், பணமும், பொருளும் வீணாவதைத் தவிர்த்து விடலாம். கலைஞர்கள் தங்கள் பேச்சாற்றலை நல்ல முறையில் பயன்படுத்தினால், பல ஒப்பந்தங்கள் உங்கள் பக்கமே! பணியில் உள்ளவர்கள் நிதி நிலவரத்தை அனுமானித்தபின் காசோலைகளை பிறர்க்கு வழங்குவது நல்லது. பெண்கள் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால், வேண்டிய காரியங்களை எளிதில் நிறைவேற்றிக் கொள்ளலாம். உயர் பதவியில் இருப்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையாமல் பார்த்துக் கொண்டால் வேலைகள் சீராக நடக்கும்.

    மீனம்:இந்த வாரம், பெண்கள் பண விஷயத்தில், தகுந்த முடிவுகள் எடுக்கமுடியாத சூழலுக்குத் தள்ளப்படலாம். மாணவர்கள் செலவுகளில், கவனமாக இருந்தால், வாகனங்களால் உண்டாகும் வீண் செலவுகள் குறையும். தடுமாற்றத்தைத் தரும் விவகாரங்களிலிருந்து, கலைஞர்கள் ஒதுங்கியிருப்பதே புத்திசாலித்தனம். பணத்தேவையால், .வியாபாரிகளுக்கு நெருக்கடி தோன்றி மறையும். பொது வாழ்வில் உள்ளவர்கள், எதிலும், நல்ல பெயர் வாங்குவார்கள். பணியில் இருப்பவர்கள், சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது மூலம், வேலைகள் தேங்காமல் பார்த்துக் கொள்ளலாம். சுய தொழிலில் இருப்பவர்கள், புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது கவனத்துடன் செயல்படுவது அவசியம்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 70

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    **
    *(43)*
    **
    *”சாயல் வரி”
    “மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல் அல்லது ஆற்றுவிக்கும் பொருட்டுத் தோழி
    இயற்பழிக்க, தலைமகள் இயற்பட மொழிதல்”*

    தாழையை வேலியாகக் கொண்ட
    இக்கழியில்
    முன்னர் ஒருவர் வந்திருந்தார்;
    நாம் விளையாடிய
    பொய்தல் விளையாட்டை
    மறக்க வைத்துச் சென்ற அவர்
    நம் மையல் கொண்ட
    மனத்தைவிட்டு நீங்கி அகல்வாரல்லர்.

    *(44)*

    கடற்கரைச் சோலையை
    வேலியாகக் கொண்ட
    இக்கழியில்
    முன்னர் ஒருவர் வந்திருந்தார்;
    ‘நீ அருள்செய்வாய்” என்று
    வேண்டி நின்றிருந்த அவர்
    நம் மான் ஒத்த பார்வையை
    மறப்பாரல்லர்.

    *(45)*

    நேற்றைய நாளில்
    அன்னம் தன் துணையுடன்
    விளையாடக் கண்டிருந்தார் ஒருவர்.
    அதனையே நோக்கி நின்றிருந்த அவர்,
    பொன்னிறத்தில் நம் மேனிமீது
    படர்ந்திட்ட பசலை போல
    நம்மை விட்டு நீங்குவாரல்லர்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html<http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html>
    படத்துக்கு நன்றி:
    http://www.gunathamizh.com/2011_06_06_archive.html

    Share
  • ஆழ்வார்கள் வரிசையில் அடிகள்!…

    மேகலா இராமமூர்த்தி

    குடிமக்கள் காப்பியமாக இன்றளவும் கோலோச்சும் சிலப்பதிகாரத்தில்  இளங்கோவடிகள் பேசாத பொருளில்லை; பாடாத தெய்வமில்லை எனுமளவிற்குப் பல்வேறு துறைகளையும் தொட்டுக்காட்டி, நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றார்.

    சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், சமணம் என்ற பல்வேறு மதங்களின் வழிபடு தெய்வங்களையும் எவ்விதப் பேதமுமின்றிப் போற்றிப் பாடியுள்ளார். பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானையும், நீலமேனி நெடியோனாகிய திருமாலையும், அறுமுகச் செவ்வேளையும், மாலை வெண்குடை மன்னவனாகிய இந்திரனையும் பாடியுள்ளார்.

    மதுரைக் காண்டத்தில் ’வேட்டுவ வரி’ என்ற பகுதியில் கொற்றவையின் பெருமை வேட்டுவர்கள் மூலம் பேசப்படுகின்றது. வஞ்சிக் காண்டத்தில் இடம்பெற்றுள்ள இனிய பகுதியாகிய ‘குன்றக் குரவை’யில் மலைவாழ் மக்களாகிய குறவர், செவ்வேளாகிய முருகனைப் பாடிப் பரவிக் குரவையாடுகின்றனர். வெவ்வேறு தெய்வங்களைத் தொழுதேத்தும் வேறுபட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் மூலம் அத்தெய்வங்களின் சிறப்பை அடிகள் நமக்கு கூறிச்செல்கின்றார். அவ்வாறு அவர் நமக்கு சுட்டிச் செல்லும் ஓர் அழகிய பகுதியே ஆய்ச்சியர் (இடையர்குல மக்கள்) திருமாலைப் போற்றிப் பரவும் ‘ஆய்ச்சியர் குரவை.’ மேற்குறிப்பிட்ட ‘வேட்டுவ வரி’, ‘குன்றக் குரவை’ ஆகியவற்றினும் விஞ்சிய பக்திச்சுவை ’ஆய்ச்சியர் குரவை’ப் பாடல்களில் வெளிப்பட்டிருப்பது கற்பார்க்கு நன்கு புலனாகும்.

    திருமாலின் அவதாரப்  பெருமைகளையும், அவன் செய்த  அருளிச் செயல்களையும் இப்பகுதியில் படிக்கும்போது, அக்காட்சிகளை நாமும் நேரில் காண்பதுபோலவே அல்லவா செய்துவிடுகின்றார் அடிகள்! சிலம்பில் இளங்கோவின் முத்திரை பளிச்சிடும் பகுதிகளில் தலைசிறந்த ஒன்றாக ‘ஆய்ச்சியர் குரவை’ திகழ்கிறது என்று கூறினால் அஃது மிகையில்லை. அத்துணை சிறப்புமிகு ’ஆய்ச்சியர் குரவை’யைச் சற்றே நாமும் சுவைத்தின்புறுவோம் வாருங்கள்.

    ஆயர் முதுமகளான  ’மாதரி’ (கண்ணகிக்கும், கோவலனுக்கும் மதுரையில் அடைக்கலம் தந்தவள்) காலையில் எழுந்ததும் தயிர் கடைவதற்காகக் கடைகயிற்றுடன் தயிர்த் தாழியிடம் செல்கின்றாள். தாழியில் பால் உறையாதது கண்டு திகைக்கிறாள். அத்தோடு ஆநிரைகளின் (பசுக்கள்) கண்களிலிருந்து கண்ணீர் வழிவதையும், அவை நடுங்கி நிற்பதையும் கண்டு, ’நமக்கு ஏதோ தீங்கு வருவதற்கான அறிகுறிகளாக இவை தோன்றுகின்றனவே’ என்று கலங்கி, ’நம் ஆயர்குலத் தோன்றலான கண்ணன், தன் அண்ணனாகிய பலராமனுடனும், காதலியாகிய நப்பின்னையுடனும் சேர்ந்தாடிய பால சரிதங்களைக் குரவைக் கூத்தாக ஆடி அவனைப் பணிவோம். நம் ஆநிரைகளுக்கும், கன்றுகளுக்கும் ஏற்பட்ட துயரத்தை அந்தக் கடல்வண்ணன் களைவான்’ என்று தன் மகளாகிய ‘ஐயை’ என்பவளிடம் கூறியபடிக் குரவையாட ஏற்பாடு செய்கின்றாள்.

    குரவைக் கூத்தென்பது  பெண்கள் எழுவராகவோ அல்லது ஒன்பதுபேராகவோ இணைந்து, நண்டுபோல் (மோதிர விரலையும், நடுவிரலையும் மடித்து) கைகோர்த்துக் கொண்டு கண்ணனின் புகழ்பாடியபடியே ஆடும் கூத்தாகும். இங்கே மாதரி, ஆயர்குல மகளிர் எழுவரை வரிசையாக நிறுத்தி அவர்களுக்கு மாயவன், பலதேவன், நப்பின்னை என்று (குரவை முறைப்படி) பெயர்சூட்டுகின்றாள். பின்பு நப்பின்னை என்று பெயர் சூட்டப்பட்டவள் தன்னருகில் நிற்கும் மாயவன் கழுத்தில் துழாய் (துளசி) மாலையைச் சார்த்தி கூத்தாடிக் கொண்டே பாடுவதாக இப்பகுதி அமைகின்றது. அவள் கண்ணனைப் புகழ்ந்து பாடுவதாக ’அடிகள்’ இயற்றியுள்ள பாடல்கள் தேனில் தோய்த்தெடுக்கப்பட்ட பலாச்சுளைகளாக இனிக்கின்றன. அவற்றை நாமும் சற்றுக் காதுகொடுத்துக் கேட்போம்.

    ”கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
    இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
    கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ!

    கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன்
    எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
    முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ!”

    இப்பாடல்களில் கண்ணனின் லீலாவிநோதங்கள் சிறப்பாய்ப் பேசப்படுகின்றன. கண்ணனின் மாமனாகிய ’கம்சன்’ குழந்தைக் கண்ணனைக் கொல்ல எத்தனையோ வழிமுறைகளைக் கையாள்கின்றான்; கணக்கற்ற அரக்கர்களையும், அரக்கியரையும் ஏவுகின்றான். அந்த ஆபத்துக்களையெல்லாம் அத்தெய்வக் குழந்தை மிகச் சாதாரணமாக எதிர்கொண்டு அப்பலவான்களைப் பந்தாடிய வரலாறு மிகச் சுவையானது. அவ்வரலாறுகளில் சில இப்பகுதியில் காட்டப்பட்டுள்ளன.

    கண்ணனைக் கொல்ல  விளா மரமாக வந்து நின்றான் ஓர் அரக்கன்; மற்றொரு அரக்கனோ கன்றுக்குட்டியாக வந்து நின்றான். ஆனால் சகலமும் அறிந்த அந்த மாயக் குழந்தை என்ன செய்தது தெரியுமா? கன்றிக்குட்டியாக வந்த அரக்கனையே குணிலாகக் (குறுந்தடி) கொண்டு, மரமாக நின்ற அரக்கன் மீது மோதி விளாங்கனியைக் கீழே விழச்செய்து இருவரையும் ஏககாலத்தில் அழித்தொழித்தது.

    கண்ணனைக் கொல்வதற்குக் குருந்த மரமாக வடிவெடுத்து நின்றான் மற்றோர் அரக்கன். அம்மரத்தை முறித்து அரக்கனை அழித்தான் கண்ணன். இத்தனை மாயங்கள் செய்த அந்தக் கண்ணன் இப்போது நம் பசுக்கூட்டங்களுக்கு மத்தியில் வருவானேயானால், உலகையே மயக்கும் அவன் புல்லாங்குழல் இசையை நாமும் கேட்டு இன்புறலாமே தோழீ! என்று பாடியபடியே குரவை ஆடுகின்றனர் ஆய்ச்சியர்.

    ‘முன்னிலைப் பரவல், படர்க்கைப் பரவல்’ என்ற தலைப்புக்களில் இங்கு இடம்பெற்றுள்ள பாடல்கள் திருமாலின் பல்வேறு அவதாரச் செய்திகளையும், அவற்றின் சிறப்புக்களையும் அற்புதமாக விவரிக்கின்றன.

    ”வானுலகத்திலுள்ள அமரர்களும் ’அறுதியான உறுதிப் பொருள் இவனே’ என்று போற்றித் துதிக்கும் திருமால், துவாபர யுகத்தில் கண்ணனாய் அவதரித்தான் என்பது அனைவரும் அறிந்ததே. குழந்தையாக இருந்தபோது, பசியே இல்லாமல் அனைத்து உலகங்களையும் உண்டவன் அந்தக் கண்ணன். அப்படி உலங்களையெல்லாம் உண்டவன், ஆயர்பாடியில் எல்லா வீட்டிற்குள்ளும் திருடனைப்போல் புகுந்து உறியிலிருந்த வெண்ணெயையும் உண்டானே! துளசி மாலை அணிந்தவனே, இஃதென்ன மாயம்…..! அச்சமும், வியப்பும் மேலிடுகின்றதே!

    அமரர்களெல்லாம் தொழுதேத்தும் திருமால், மற்றொரு சமயம் வாமனனாக (குள்ளன்) அவதாரம் செய்தான். மாபலிச் சக்கரவர்த்தியிடம் சென்று, ’மூன்றடி நிலம் வேண்டும்’ எனக் கேட்டான். மன்னனோ ஏளனத்துடன் ’உனக்கு வேண்டிய மூன்றடியை நீயே அளந்து எடுத்துக்கொள்’ (இந்தக் குள்ளன் மூன்றடியால் எவ்வளவு தூரத்தை அளந்துவிடப் போகிறான்? என்ற எண்ணம்) என்று கூற, அதுவரையில் வாமனனாக இருந்தவன் வானளவு உயர்ந்த ’திரிவிக்கிரமனாக’ மாறித் தன் செந்தாமரை போன்ற சிவந்த பாதங்களினால் இரண்டே அடிகளில் மூன்று உலகங்களையும் (அவற்றின் இருள் நீங்குமாறு) அளந்தான் அல்லவா! அப்படிப்பட்டவன் சாதாரண மனிதன்போல் பாண்டவர்களுக்காகவும் ’துரியோதனிடம்’ தூதனாக நடந்து சென்றான். பிரகலாதனைக் காக்க ’நரசிங்கமாக’ அவதரித்துப் பகைவனாகிய ‘இரணியனை’ அழித்தவனும் இந்தத் திருமால்தான் அன்றோ! இவற்றையெல்லாம் எண்ணும்போது மனம் மருட்சிகொள்கின்றதே!”

    மேற்கண்ட நிகழ்ச்சிகள் அடிகளின் அமுதவரிகளில்…….

    ”………………………………………………………………………………………………………………………………………………

    அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த
    உறுபசியொன் றின்றியே உலகடைய வுண்டனையே
    உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
    வண்துழாய் மாலையாய்! மாயமோ? மருட்கைத்தே!

    திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
    இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
    நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
    மடங்கலாய் மாறட்டாய் மாயமோ? மருட்கைத்தே!”

    ”மூவுலகங்களையும் இரண்டடியால் அளந்த அந்தப் பரம்பொருள், திரேதா யுகத்தில் இராமனாக அவதரித்துத் தன் சிவந்த அடிகள் மேலும் சிவக்கத் தன்னருமைத் தம்பியாகிய இலக்குவனோடு கான் புகுந்து, தன் மனைவியை மீட்கும் பொருட்டு ’சோ’ என்ற அரணையும், இலங்கை நகரின் காவலையும் அழித்தவன் ஆயிற்றே! அவன் பெருமைகளைக் கேளாத செவி என்ன செவி? என்று சினந்து வினவுகின்றார் இளங்கோவடிகள்.

    அந்தப் பெரியவனை, மாயக்காரனை, உலகமெல்லாம் தன் உந்தியில் விரித்தவனை, கண்களும், திருவடிகளும், கைகளும், அழகிய வாயும் சிவந்து தோன்றும் கரு நிறமுடையவனைக் காணாதகண்கள் என்ன கண்கள்? (பயனற்ற கண்கள்). கண்ணிமைத்துக் காண்பாருடைய கண்கள்தாம் என்ன கண்கள்? (இறைவனின் அழகைக் கண்ணிமைக்காது காணவேண்டும் என்ற குறிப்பு இங்கே சொல்லப்படுகின்றது. இல்லையேல் அஃது பயனற்றது என்கிறார் இளங்கோ).

    அறியாமை நிறைந்த  கஞ்சனின் (கம்சன்) வஞ்சத்தை வென்றவனை, வேதங்கள் முழங்க, அனைவரும் புகழப் பாண்டவர்களுக்காக ’நூற்றுவரிடம்’ (நூறு பேர் -கவுரவர்கள்) தூதாக நடந்தவனைப் புகழாத நா (வாய்) என்ன நா? நாராயணா என்று சொல்லாத நா என்ன நா? என்று அடிகள் தொடுக்கும் சொல்லம்புகள் நம் அகக்கண்களைத் திறந்து திருமால்பால் காதல் கொள்ள வைக்கின்றன.

    பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட அடிகள் அருளிய அற்புதப் பாக்கள் நம் பார்வைக்கு…..

    ”மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
    தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
    சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
    சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே?
    திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே?

    பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
    விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
    திருவடியும் கையும் திருவாயும் செய்ய
    கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே?
    கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே?

    மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
    கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
    படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
    நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?
    நாராய ணாவென்னா நாவென்ன நாவே?”

    ஆழ்வார்களினும் விஞ்சிய  திருமால் பக்தியை, இறைக் காதலை இப்பாடல்களில் சிலப்பதிகார ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறினால் அஃது சற்றும் மிகையில்லை. திருமாலின் திருவருளின்றி இத்தகைய அற்புதப் பாடல்களை, அருட்பாக்களைப் படைத்திருக்க முடியாது என்பதில் ஐயமில்லை.

    ’ஆய்ச்சியர் குரவை’ வாயிலாய் நாம் அறியும் மற்றொரு முக்கியச்செய்தி, ‘இராமாயணம், மாபாரதம் போன்ற காவியங்கள் சங்க காலத்திற்கு முன்பிருந்தே நம் மக்கள் அறிந்த கதைகளாக வழக்கத்தில் இருந்திருக்கின்றன; அவை நமக்குப் புதியவை அல்ல’ என்பதே அது. (புறநானூறு, அகநானூறு போன்ற சங்க நூல்களிலும் இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன.)

    அடுத்து, திருமாலைப் போற்றிப் பாடிய பன்னிரு ஆழ்வார்களில் முதலாமவராகக் கருதப்படும் ‘பொய்கையாழ்வாரின்’ காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவரைவிடக் காலத்தால் மிக மூத்தவர் நம் இளங்கோவடிகள் (கி.பி இரண்டாம் நூற்றாண்டு). அடிகள் இயற்றிய ’ஆய்ச்சியர் குரவை’யே பின்னாளில் இயற்றப்பட்ட வைணவ பக்திப் பனுவல்களுக்கெல்லாம் முன்னோடியாகவும், தோற்றுவாயாகவும் விளங்கின்றது எனலாம்.

    சிலம்பில் இடம்பெற்றுள்ள ஓர் சிறிய பகுதியாகிய ’ஆய்ச்சியர் குரவை’யின் மூலம், கண்ணனின் குழந்தைப்பருவ மாயச் செயல்கள் தொடங்கி, அவன் வளர்ந்த பிறகு பாண்டவர்க்காகத் தூது சென்றது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளையும், திருமால் தன் மற்றைய அவதாரங்களில் நிகழ்த்திய அற்புதங்களையும், சாதாரண மக்கள் ஆடுகின்ற எளிய கூத்தின் வாயிலாக, அழகிய இசைப்பாடல் வடிவிலே சுருங்கச் சொல்லி விளங்கவைத்துவிட்ட ’கவிப்பேரரசர்’ இளங்கோவின் திறமையையும், நுண்மாண் நுழைபுலத்தையும் என்னவென்று புகழ்வது?

    இராமகாதை படைத்த கம்பரை நாம் ’கம்பநாட்டாழ்வார்’ என்று பெருமைப்படுத்தியுள்ளோம். கண்ணன் பாட்டுப் பாடிய மகாகவி பாரதியையும் ஆழ்வார்களில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டாடியுள்ளோம். இவர்கள் அனைவரிலும் காலத்தால் முற்பட்டவரும், திருமாலின் புகழை மிகச்சிறப்பாய் முதலில் எடுத்தோதியவருமான ’தெய்வக்கவி’ இளங்கோவடிகளை நாம் மூத்த ஆழ்வாராக, முதல் ஆழ்வாராகக் கருதிப் போற்றினால் தவறில்லை அல்லவா!

     

    படங்களுக்கு நன்றி:

    http://www.holydrops.com/photo-gallery/god/lord-krishna/5/83-lord-krishna-with-flute.htm

    http://www.holydrops.com/photo-gallery/god/lord-krishna/5/22-krishna-balram.htm

    Share
  • ஏப்ரல் (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்

    வெங்கட் சாமிநாதன்

    இம்மாதம் சிறுகதைகளின் வருகை இன்னமும் குறைந்துவிட்டது. வருத்தம் என்னவென்றால், போனமாதம் வந்த சிறுகதைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், நல்ல கதைகள் எண்ணிக்கை குறையவில்லை. இம்முறை அதற்கும் கேடுகாலம்.

    இம்மாதம் வந்துள்ள கதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று என்று சொல்லக் கூடியது பழையவரும் தேர்ந்த கையுமான பழமை பேசியினது தான். கொழுகொம்பு

    அன்னிய சூழலில் தொடர்ந்து இருந்த போதிலும், பிறந்த மண்ணின் வாசம் விடாது, அதே சமயம் வாழும் அன்னிய மண்ணின் சூழலில் ஆழ்ந்த அனுபவம் நிறைந்த வாழ்நிலைகளை எழுதுகிறவர். இம்முறை மனிதனுக்கும் நாய்க்கும் இடையேயான உறவில் வாய் பேசாத ஜீவனின் நம்பிக்கையை மனிதன் பொய்க்கைச் செய்யும் கணங்களில் மனிதன் அதைக் குற்ற உணர்வோடு உணரச் செய்வது நன்றாக இருந்தாலும் அதை அதிக அலங்கார வார்த்தைகளால் நிரப்பாது செய்திருக்கலாம். இது காறும் பழமை பேசியின் எழுத்துக்களில் நான் காணாத ஒரு புதிய மாற்றம் இது

    ஒரு உதாரணத்திற்கு ஆரம்பத்தையே எடுத்துக்கொள்ளலாம்,

    நித்திரை கலைந்து நினைவுக்கண் விழித்துக் கொண்டதிலிருந்து நாட்டம் எம்மை படுத்தி எடுத்திக் கொண்டிருந்தது. வீட்டில் மனைவி மக்கள் என்ன செய்கிறார்கள் எனச் சிரம் உயர்த்திப் பார்த்தேன். ஆழ்ந்த உறக்கத்தில் மெய்ப்புலங்கள் யாவும் நான்கு உருவங்களுக்குள் கட்டுண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. நான் மெதுவாய் எனும் கூட்டுக்குள் புகுந்து சன்னல் ஓரத்துக்குப் போய், சிறிதே சிறிதாய் திரை விலக்கிப் பார்த்தேன். ஒட்டு மொத்த நீலவண்ணத்தையும் வானக்கூரைக்கு அடித்திருந்தான் இயற்கை தேவன்.

    எனக்கு இது வேண்டாம் என்று தோன்றுகிறது. மற்றபடி, அவரது சுதந்திரம் இது.

    இருப்பினும் அவரது கதை கொழு கொம்பு தான் வந்தவற்றில் சிறந்தது

    பழமை பேசிக்கும், பங்கு கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    அன்புடன்,

    வெ.சா..

    இந்த மாத சிறுகதைப் போட்டியில் பங்கு பெற்ற கதைகள்:

    எழுச்சி

    கல்யாணப் புடவை

    “ ஐ லவ் யூ “

    “ திருட்டுப் பூனைகள் “

    மை லிட்டில் ரெட் வேகன்

    கொழுகொம்பு

    மனதின் உயரம்….

    அன்பு நண்பர்களே,

    ’சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பார்கள். படைப்புத் திறனும் அப்படித்தான் அல்லவா. எழுத எழுத மெருகேறிக் கொண்டேயிருக்கும் இல்லையா. வெ.சா. ஐயா போன்று சிறந்த விமர்சகரின் மோதிரக் கையால் குட்டுப்பட நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  அதனைப் பயன்படுத்தி நம் திறமையையும் வளர்த்துக் கொள்ளலாமே.. இன்னும் நிறைய சிறுகதைகளை எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து தங்கள் படைப்புகளை வரவேற்கிறோம். இந்த முறையும் பரிசுக்கு உரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு பழமைபேசி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (10)

    பவள சங்கரி

    இரசனையில் செல்வந்தராகவும், பொறாமையிலிருந்து விடுதலை பெற்றவராகவும், அடுத்தவரின் நன்மைகளைக் கொண்டாடுபவராகவும், இல்லாத மற்றும் இரக்கமற்ற வேளையிலும் இன்னும் நெருக்கமான பெருந்தன்மையுடனான இருதயத்தினாலான அன்பு – இவை அனைத்துமே பணத்தினால் வாங்க முடியாத பரிசுகள்.
    ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் (1850 – 1894)

    தயங்காமல் வழங்கவேண்டிய உற்சாகமான பரிசு!

    தத்தித் தத்தி முதல் அடி எடுத்து வைக்கும் குழந்தையைப் பார்த்தவுடன் யாருடைய குழந்தை என்ற பாரபட்சமில்லாமல் ‘ஆகா, அருமையாக நடந்துவிட்டாயே. நீ பெரிய ஆளாகிவிட்டாயே என் செல்லமே…’ என்றெல்லாம் மனமார பாராட்டத் தோன்றும். அந்தக் குழந்தையும் அதனைப் புரிந்து கொண்டு பெருமையாக அடுத்த அடியை எடுத்து வைக்க முயலும். அந்த சின்னச்சின்ன பாராட்டுகள் மூலமாகவே குழந்தை ஒவ்வொரு காரியமாக செய்து வளர்ந்து வருகிறது. வளர்ந்த பிறகும் மனிதர்களிடம் இந்த எதிர்பார்ப்பு அப்படியே நிலைத்துவிடுகிறது. பாராட்டுகளுக்கும், புகழுக்கும் பெருவிருப்பம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். நம்முடைய அந்த மனம் திறந்த நேர்மையான பாராட்டும் அவருக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. அது யதார்த்தமான நல்லெண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. இதனால் மனமும் இலகுவாகி நம் பணியையும் உற்சாகத்துடன் கவனிக்க வழிவகுக்கிறது. அடுத்தவர்களின் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அதிகரிக்கும் விதமாக எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நாம் செய்யும் இந்த சிறிய காரியம் அவருடைய நல்லலெண்ணத்தை முழுமையாக சம்பாதித்துக் கொடுத்துவிடுகிறது. ஆக நம் சூழலுக்கு ஏற்றவாறு நம்மைச் சுற்றியுள்ள நம் சக மனிதர்களிடம் நம்மைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்துவதன் மூலம் நம்மைச் சுற்றியும் நல்ல விசயங்கள் நடந்து நம் வெற்றிப் பாதையை சீரமைப்பதையும் உணர முடியும்.

    கடந்த காலத்தில் நடந்துபோன தவறுகளை இறுகப் பிடித்துக்கொண்டு குற்ற உணர்ச்சியிலிருந்து மீளாமல் தவிப்பது நம்மில் பலரின் இயல்பாகாவே இருக்கிறது. தவறே செய்யாத மனிதன் என்ற ஒருவன் இந்த உலகில் பிறந்திருக்கப் போவதில்லை. சின்னச் சின்ன தவறுகளே நம்மைப் புடம் போட்ட பொன்னாக ஆக்குகிறது. செய்த தவறையே திருத்திக் கொள்ளாமல் திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பது மட்டுமே நிம்மதியைக் குலைக்கக்கூடியது. குற்ற உணர்ச்சியை ஒதுக்கி விட்டு ஆக்கப்பூர்வமான பணிகளில் நம் மனதைச் செலுத்துவது அறிவார்ந்த செயல்.

    கடந்த காலம் என்பது உடைந்த பானை
    எதிர் காலம் என்பது மதில் மேல் பூனை
    நிகழ் காலம் என்பது கையில் வீணை

    மீட்க முடியாத கடந்த காலத்தை எண்ணிக் கொண்டிருப்பதை விட்டு, என்ன நடக்கப் போகிறது என்று உறுதியாக தெரியாத எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையையும் அளவாக நிறுத்தி, சுகமான இராகங்களை இசைக்கக் கூடிய வீணையான நிகழ் காலத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சுகமாக வாழலாமே. சில நேரங்களில் நம் உடன் பிறந்தே கொல்லும் வியாதியைப் போல அன்பான மனைவிக்கு சிடுமூஞ்சியான கணவனோ அல்லது அமைதியான கணவனுக்கு அதிரடியான மனைவியோ வாய்ப்பதும் உண்டு. இது போன்ற நேரங்களில் எதிர்மறையான அவர்களின் செயல்களைப் பொருட்படுத்தாமல், தவிர்த்து வந்தாலே நாளடைவில் அவர்களே சலிப்படைந்து தங்களுடைய எதிர் வினைகளை குறைத்துக் கொள்ளக் கூடும். அதை விடுத்து ஒவ்வொன்றிற்கும் எதிர்வாதம் செய்வது என்று ஆரம்பித்தால் நம் வாழ்நாளில் பெரும் பகுதி அதிலேயே கழிந்துப் போவதோடு நம் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் போகவும் வாய்ப்புள்ளது. எந்த ஒரு காரியத்தையும் நிதானமாகவும், மகிழ்ச்சியுடனும், செய்யும் வழமையை மேற்கொண்டாலே நம் அகம் குளிர்ந்து முகம் பொலிவுறும் என்பதில் ஐயமில்லை அல்லாவா? அகத்தின் அழகுதானே முகத்தில் தெரியும்?

    படத்திற்கு நன்றி:

    http://1.bp.blogspot.com/-_RbK8VLphH4/UOm42iJPH2I/AAAAAAAAAC0/FWP9rRUUZqY/s1600/inspirational-quotes-5.jpg

    Share
  • நட்சத்திர பரிதாபம்

     

     

    -தனுசு

     

    நாயும் அனாதையும்
    இங்கு
    ஒன்றானதடா!
    நாதியற்ற ஜீவன்களுக்கு
    வீதியே வீடடா!

    பேயும்
    பிசாசும்
    ஊருக்குள்ள வாழுதடா!
    மனித நேயமிங்கு
    மண்ணாகி நாறுதடா!

    நண்டு
    சிண்டு
    தடி
    கைத்தடி
    ஊருக்குள்
    அடங்காமல் ஆடுதடா!

    வியர்த்து
    களைத்து
    ஓடி
    உழைக்கும்
    உயிரெல்லாம்
    அடங்கிக் கிடக்குதடா!

    ஐந்தாண்டு திட்டங்கள்
    ஆரம்பமாச்சு
    அது
    ஐந்தாண்டுக்கொரு முறை
    புதுப்பிக்கலாச்சு
    ஐம்பதாண்டாய் இதே பேச்சு
    இன்று
    வேலைக்கு கூலியென்றாச்சு.

    நரிக்கூட்டம் நாட்டையாளும்
    நாடகத்தில்
    தொலை நோக்கு
    வறுமை போக்கு
    என்பெதெலாம் நடிப்படா!
    நம்பியிருக்கும்
    நாமெல்லாம்
    கண்டு களிக்க
    நடத்தும் கூத்துடா!

    அணு உலைக்கும்
    அரிசி விலைக்கும்
    பாதுகாப்பு இல்லையடா!
    இதில்
    ஏழைக் கிழவிக்கும்
    வாயில்லா ஜீவனுக்கும்
    எதிர்பார்த்தால்
    நீ ஒரு ஏமாளியடா!

    கருவறையும் இருட்டுடா
    கல்லறையும் இருட்டுடா
    இடைப்பட்ட பயணத்தில்
    வெளிச்சம் தருபவன் மனிதனடா!

    பணம்
    பதவி
    பட்டம் கொடுக்குமடா
    உயிர் விட்டால்
    பிணம்
    எனும் பட்டம்
    அனைவருக்கும் பொதுவடா!

     

    Share
  • பெண்மை

     

    -தமிழ்த்தேனீ

     

    ஏங்க ஒரு உதவி  என்றாள் காயத்ரி  சொல்லு என்றார் ஸ்வாமிநாதன். ஒண்ணும் இல்லே  இந்த உள்ளே  ஒரு வேலையா இருக்கேன் திடீர்ன்னு மழை வரா மாதிரி இருக்கு என்றாள் காயத்ரி

    பாத்துப் பாத்து கட்டின வீடு  மழையே வந்தாலும் அந்த உள்ளே  ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராது என்று கூறிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டார்  ஸ்வாமிநாதன்  ஏதோ விரதத்தை  மீறினாற்ப் போல்.

    அய்யே  போறும் வழியாதீங்க  கொல்லைப் புறம்  துணி காயப் போட்டிருக்கேன்   நனைஞ்சிடப் போகுது . அதையெல்லாம்  எடுத்துகிட்டு வாங்கன்னு சொல்ல வந்தேன்  என்றாள் காயத்ரி.

    சரி என்று சொல்லிவிட்டு  கொல்லைப்புறம் விரைந்தார் ஸ்வாமிநாதன்.  .

    அதிர்ந்தே பேசாமல்   இனிமையாகவே செஞ்சாலும் செய்வார், அப்பிடியே இஷ்டம் இல்லேன்னா    இனிமையாவே செய்யாம விட்டுடுவார் .கொஞ்சம் வழிஞ்சாலும்  நல்ல புருஷன்தான்  .

    அது சரி ஏன் இவரு  ரெண்டு நாளா இப்பிடி  கேட்ட கேள்விக்கு ஹும் ,இல்லே ,ஆமா  ன்னு  சுருக்கமா  பதில் சொல்றாரு  . ஏதோ  ரெண்டு வார்த்தை அவரை மறந்து பேசிட்டு  நாக்கை வேற கடிச்சிக்கறாரு , என்ன ஆச்சு இவருக்கு  திடீர்ன்னு காயத்ரிக்கு  சந்தேகம் .  சரி துணிகளை எடுத்திட்டு வரட்டும் கேப்போம் என்று  வேலையைத் தொடர்ந்தாள் காயத்ரி

    காயப் போட்ட துணிகளை எடுத்துக்கொண்டு  உள்ளே நுழைந்து மௌனமாக  ஒவ்வொரு துணியாக மடிக்கத்  தொடங்கினார் ஸ்வாமிநாதன்

    நான் மடிச்சு வெச்சிக்கறேன் .  ஆமா நீங்க பாட்டுக்கு  கலகலன்னு இருப்பீங்களே  என்ன ஆச்சு ஏன் ரெண்டு நாளா ஒரு மாதிரி இருக்கீங்க. ஏதாவது கேட்டா ஒத்தை வார்த்தையிலே  பதில் சொல்றீங்க.

    ஹும்ம்  ஒண்ணுமில்லே என்றார் ஸ்வாமிநாதன்

     

    இந்தாங்க காப்பி சாப்பிடுங்க என்று அவள் நீட்டிய காப்பியை வாங்கி ஒரு வாய் குடித்துவிட்டு  அப்படியே மேசை மேல் காப்பியை வைத்துவிட்டு   சோபாவில் உட்கார்ந்தார்  ஸ்வாமிநாதன் .. ஏன் காப்பி நல்லா இல்லையா வெச்சிட்டீங்க என்றாள் காயத்ரி

    எல்லாம் நல்லாத்தான் இருக்கு   என்று கூறிவிட்டு  தொலைக் காட்சியைப் பார்க்கத் தொடங்கினார்  ஸ்வாமிநாதன்

    ரெண்டு நாளா நான் கோவமா இருக்கேன் . ஒண்ணுமே தெரியாத மாதிரி எப்பிடி இவ்ளோ இயல்பா  இருக்கா இவ.  எனக்கு ரெண்டு நாளாக் கோவம்ன்னு இவளுக்கு  தெரியவே தெரியாதா ,  போச்சு ! எனக்கு கோவம்னே இவளுக்கு  தெரியலேன்னா  நான் கோவிச்சிகிட்டு  என்னா ப்ரயோசனம், இப்பிடி ஒரு நிலமை ஒரு ஆம்பிளைக்கு வரக் கூடாது என்று நினைத்துக்கொண்டார்  ஸ்வாமிநாதன்.

    சரி நீங்க டீவீ பாருங்க நான் போயி இருக்கற வேலையைக் கவனிக்கறேன் என்று எழுந்தாள் காயத்ரி.  இவளுக்கு எப்படியாவது  தான் கோபமாய் இருப்பதை உணர்த்த வேண்டும் என்று முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்வதாய் நினைத்துக்கொண்டு  சாதாரணமாய் வைத்துக்கொண்டார்.

    இதோ பாருங்க எனக்கு உங்களைப் பத்தி  நல்லாத் தெரியும் .உங்களுக்கு கோவப்படத் தெரியாது ஏன் அனாவசியமா முகத்தை கோவமா வெச்சிக்கணும்னு ட்ரை பண்ட்ரீங்க , என்றாள்   காயத்ரி

    சிரித்துக் கொண்டே என் மேலே கோவம்னா சொல்ல வேண்டியதுதானே   என்றாள் காயத்ரி.

    ஓ வாய்விட்டு சொன்னாத்தான் புரியுமா எனக்கு கோவம்னு , ரொம்பக் கஷ்டம் . என்னை கவனிச்சு பாத்திருந்தாலே  தெரிஞ்சிருக்குமே, அது சரி நீ எங்கே என்னைக் கவனிக்கறே   என்றார்  ஸ்வாமிநாதன் சுய இரக்கமாய் .

    சரி விடுங்க ரெண்டு நாளா  நிறைய வேலை, நான் ஏதோ நினைப்புலே உங்களை கவனிக்கலே  . உங்களுக்கு என் மேலே கோவமே வராதுன்னு நான் நெனைச்சிட்டு இருந்தேனே. உங்களுக்கு என் மேலே கோபம் கூட வருமா  . அடடா எங்க வீட்டுலே உங்களைப் பத்தி நல்லா விசாரிச்சுதானே  என்னை உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சாங்க ஒங்களுக்கு கோவமே வராதுன்னு சொன்னாங்களே  என்றாள் நமட்டுச் சிரிப்புடன் காயத்ரி .

    ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியைக் கொண்டு வந்து அவர் முகத்தருகே பிடித்துக்கொண்டு  இதோ இந்தக் கண்ணாடியிலே உங்க முகத்தை  பாருங்க,இப்போ சொல்லுங்க நீங்க கோவமா இருக்கீங்களா என்றாள் .

    அவருக்கே அவர் முகத்தைப் பார்க்க பாவமாய் இருந்தது. ஒரு சதவிகிதம் கூட அந்த முகத்திலே கோவமே தெரியலே. அட ஆமா என் முகத்திலே கோவமே தெரியலையே, நான் ரொம்பக் கோவமா முகத்தை வெச்சிண்டு இருக்கேன்னு  நெனைச்சிண்டு இருந்தேன். என்றார் ஸ்வாமிநாதன்.

    இப்போ சொல்லுங்க உங்களுக்கு என் மேலே, அதுவும் என் மேலே என்ன கோவம் என்றாள் காயத்ரி.  ஸ்வாமிநாதன் சொன்ன பதிலைக் கேட்டு  சிரிப்பாய் வந்தது காயத்ரிக்கு

    அதானே ப்ரச்சனை ! நான் எதுக்கு கோவிச்சிகிட்டேன்னு யோசிச்சு பாக்கறேன் . ஆனா ரெண்டு நாளா யோசிக்கறேன். எதுக்கு கோவம் வந்துதுன்னே  மறந்து போச்சே என்றார்  ஸ்வாமிநாதன். சிரித்தாள்  காயத்ரி

    இப்போ எதுக்கு சிரிக்கறே ! இந்தச் சிரிப்புலே மயங்கித்தானே கல்யாணமே பண்ணிகிட்டேன். உனக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கு நான் பயந்த சுபாவம் உள்ளவன் ஏமாளின்னு அதான் என்னை ஏமாத்தறே என்றார்  ஒரு விதப் பெருமையுடன்

    நீங்களா பயந்தவர் , நீங்களா ஏமாளி .  அடேங்கப்பா  என் கிட்டேயே இப்பிடி சொல்றீங்களே அப்பிடியே  கொஞ்சம் நேத்திக்கு  அந்த பஸ்லே நடந்ததை நெனைச்சுப் பாருங்க,  அப்பா என்னா வீரம்  என்னா வீரம்  நானே பயந்து போயிட்டேன், எல்லாருமே பயந்து போயிட்டாங்களே

    அதுவா அது ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்திலே என்னை அறியாம வந்துது. பின்ன  கல்யாணம் செஞ்சிண்டு முதன் முதலா ஆசையா உனக்குன்னு நான் ஒரு புடவை எடுத்துக் குடுத்தேன் , அதை ஒருத்தன் பஸ்லே எடுத்தான். அவ்ளோதான் எனக்கு எங்கேருந்து அவ்ளோ வீரம் வந்துதுன்னே தெரியலே. அவனைப் போட்டு சாத்து சாத்துனு நல்லா சாத்திட்டேன். ஆனா ஒண்ணு இப்போ நெனைச்சா கூட பயமா இருக்கு . அவன் என்னை ஒரு அடி அடிச்சிருந்தாக் கூட நான் மயங்கி விழுந்திருப்பேன். நல்ல வேளை கையும் களவுமா பிடிபட்டுட்டமேன்னு அவன் பயந்து போயிட்டான் அதுனாலே நான் தப்பிச்சேன் என்றார்.

    இதோ பாருங்க   கோபம் பாபம் சண்டாளம்னு சொல்வாங்க  இந்த உலகத்திலே யாரு நம்மைப் பார்த்து பயப்படறாங்களோ அவங்களுக்கு நம்ம மேலே கோவம் வரும் ,  யாரைப் பாத்து நாம பயப்படறமோ அவங்க மேலே நமக்கு   கோவம் வரும். நீங்க பயப்பட மாட்டீங்க,அதுனாலே  கோப்ப்படவும் மாட்டீங்க , வீரமான ஆம்பிள்ளை நீங்க என்றாள் காயத்ரி.

    ஸ்வாமிநாதனுக்கு அவரை நினைத்தே பெருமையாக இருந்தது

    ஏங்க உங்க கிட்டே சொல்லணும்னு நெனைச்சேன்  ஒரு குட்டிக் காக்காய் நம்ம வீட்டிலே  மரத்திலேருந்து கீழே விழுந்துடுத்து, அதுக்கு சாப்பாடு வைக்கலாம்னு போனா அந்தப் பெரிய காக்காய்  என்னைத் துரத்துது

    அட்டா பாவம் அந்தக் காக்காய் குஞ்சுக்கு பசிக்கும் இந்த மேசை மேலே இருக்கற இட்லியை போட்டுட்டு வரேன் என்றபடி புழக்கடைப் பக்கம் போய் இட்லியைக் காக்காய்க் குஞ்சுக்கு போட்டுவிட்டு  உள்ளே வந்து  காயத்ரி ஒரு அதிசியம் பாரேன்

    நான் இட்லியை போடலாம்னு போனேன். அதே காக்காய் என்னையும்  துரத்த ஆரம்பிச்சுது. நான் அந்தக் காக்காய்கிட்ட  உன் குட்டிக்கு வயிறு பசிக்கும் அதுக்குதான் இட்லி போடப் போறேன். நான் உன் குட்டியை ஒண்ணும்  செய்ய மாட்டேன்  அப்பிடீன்னு பேசினேன்.

    அது அந்தக் காக்காய்க்கு  என்ன புரிஞ்சுதுன்னு தெரியலே அப்புறம் என்னைத் துரத்தவே இல்லே , அமைதியா   மதில் சுவத்துமேலே உக்காந்து பாத்துகிட்டே இருக்கு . அதுக்கு நல்லது செய்யறவங்க யாருன்னும் புரியுது. ஆனாலும் குட்டிக்கு ஏதேனும் ஆபத்து வராம பாதுகாக்கணும்னு  ஜாக்கிரதையாவும் இருக்கு என்றார்.    ஏன் காயத்ரி இந்தக் காக்காய் கூட இவ்ளோ புரிஞ்சுக்கறதே ஆச்சரியமா இல்லே என்றார்.

    வாசலில் யாரோ ஆழைப்பு மணியை அழுத்தினார்கள் . எதிர் வீட்டு ஜானகியம்மா , அடேடே  வாங்க வாங்க   என்றாள் காயத்ரி

    இதோ பாருங்க  காயத்ரிம்மா ஏதோ என் பொண்ணு பஸ் ஸ்டாண்டிலே நின்னு ஒரு பையன்கூட  பேசிகிட்டு இருந்தாளாம் .நீங்க என் பொண்ணைக் கூப்பிட்டு கண்டிச்சீங்களாமே  என்றாள்

    ஆமாங்க ஒங்க பொண்ணு அந்தப் பையன்  நல்ல ப்ரெண்டுன்னு சொல்லுது அனுபவப் பட்டவங்களுக்கு  பாத்தவுடனே தெரியும் இது சாதாரண ப்ரெண்ட்ஷிப்  இல்லேன்னு. அந்தப் பையன்  சரியான பையன் இல்லே. நம்மவீட்டு எதிர்லே இருக்கீங்க ,உங்க பொண்ணு அவனை நம்பி ஏமாந்து போயிடப் போறாளேன்னு  எச்சரிச்சேன் . நானே உங்ககிட்ட வந்து சொல்லணும்னு இருந்தேன் நீங்களே வந்துட்டீங்க  என்றாள் காயத்ரி

    இதோ பாருங்க என் பொண்ணை எப்பிடி வளக்கணும்னு எனக்கு தெரியும். நீங்க அனாவசியமா அவகிட்ட பேசாதீங்க . நாங்க பாத்துக்கறோம் நீங்க உங்க வேலையைப் பாருங்க நான் வரேன் என்றபடி போனாள் ஜானகி

     

    என்ன காயத்ரி  இது உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. நீ நல்ல எண்ணத்திலே சொல்றேன்னு புரிஞ்சிக்காம பேசறாங்க அந்தம்மா

    அவங்களுக்கும் தெரியும் நான் நல்ல எண்ணத்திலேதான் சொல்றேன்னு. அவங்க பொண்ணு செய்யறதும் தெரியும்  இருந்தாலும் அதை என்கிட்ட ஒத்துக்க அவங்களுக்கு மனமில்லே அதுனாலெ  அவங்க பொண்ணு கெட்டுப் போகமாட்டா  நல்ல  பொண்ணு அப்பிடீன்னு அவங்களை அவங்களே  ஏமாத்திகிட்டு என் கிட்ட நடிக்கறாங்க

    முன்னாலே பள்ளம் இருக்குன்னு சொன்னா  ஒன் வேலையைப் பாத்துகிட்டு போ அப்பிடீன்னு சொல்லிட்டு    பள்ளத்திலே விழுந்துட்டு நீ வாயை வெச்சே நான் பள்ளத்திலே விழுந்துட்டேன்னு  சொல்றவங்கதான் மனுஷங்க

    ஆனா ஒண்ணுங்க அஞ்சறிவு படைச்ச எதுக்கும் நடிக்கத் தெரியாதுங்க , ஆறறிவு  மனுஷங்கதான்  நடிப்பாங்க என்றாள் காயத்ரி    நீ சொல்றது சரிதான்  என்று மீதி இருந்த காப்பியைக் குடிக்க ஆரம்பித்த அவருக்கு   திடீர்ன்னு ஒரு சந்தேகம்

    நமக்கும் நடிக்கத் தெரியலையே   அப்போ நமக்கு  அஞ்சறிவா, ஆறறிவான்னு !  மறுபடியும் அவருக்கு கோபம் வந்தது.

    அவரையே பார்த்துக்கொண்டிருந்த காயத்ரி

    அவர் மனதைப் படித்தாற்போல்  சிரித்தாள்

     

    Share
  • அறுமுகநூறு (12)

     

    -சச்சிதானந்தம்

     

    கிரியைச் சுற்றி வலம் வருவோம்,

    விரி மனமே என்று வணங்கிடுவோம்,

    உறியைச் சுற்றிய கண்ணன் மருமகன்,

    அடியைப் பற்றி நலம் பெறுவோம்!                                                                                  56

     

    வண்ண மயில் தோகையின் தண்டாக,

    வெண்முகம் கொண்ட வடிவேலா! மனம்

    வெண்டாகிச் சருகாகி, வன்மத்திற் கிரையாகி,

    உண்டான வடு நீக்கு வேலா!                                                                                             57

     

    நடந்து நடந்து நடைபழகித் துன்பத்தைக்

    கடந்து கடந்து துயர் விலகி,

    அடர்ந்து படர்ந்த அறியாமை நீங்கி,

    தொடர்ந்து உன்னைத் தொடர்ந்திடு வேனே!                                                                   58

     

    மனம் புரண்டு, தடம் இருண்ட

    நிலை கடந்து, நிறை வடைந்து,

    இறை உணர்வில் தினம் மகிழ்ந்து,

    எனை உனக்கு அர்ப்பணிக் கின்றேன்!                                                                               59

     

    அதி மதுர மதி முகத்தில்,

    எதி ரொலிக்கும் எழில் சிரிப்பில்,

    உதித் தெழுந்த பெரும் ஒளியில்,

    உழல் வினைகள் விலகி டுமே!                                                                                           60

     

    Share
  • உயிர்ப்பிழந்த சாசனங்கள்!!!

     

    -மகேந்திரன்

    நியாயத்தின் சாரங்களால்
    நியமனம் செய்யப்பட்ட
    நிதர்சன சாசனங்கள் – யாவும்
    நீர்த்துப்போன படிமங்களோ?!!

    படிமங்களாயின் பாதகமில்லை
    வடிவங்கள் உருமாறி
    நொடியிழந்த மணித்துளியாய் – தாவும்
    கடிவாளமற்ற புரவியாமோ?!!

    புரவியின் பிடரியாய் உலுக்காது
    நரம்புகள் தளர்ந்து
    தரங்களின் துணை தவிர்த்த – காவாம்
    நரகத்தின் காவலாமோ?!!

    காவலின் தொனியிலே
    பாவலன் போல் இறுமாந்து
    சேவகம் தனை மறந்து – பாழும்
    நாவடி பிறழ்ந்த வஞ்சகமோ!!

    வஞ்சகப் பேய்களுக்கு
    தஞ்சம் கொடுத்துவிட்டு
    நெஞ்சம் அழுகிப்போன – மேவும்
    மஞ்சம் வீழ்ந்த சாமரமோ!!

    சாமரத் தென்றல் வீசி
    கமல வதனம் சிவந்திருக்க
    கோமள நாண்பூண்டு – ஆங்கே
    தமனியன் தாள் புகுந்தாயோ!!

    புகுந்த வீட்டிலோ
    தகுந்த மரியாதை இல்லாது
    வெகுண்டால் வெண்காடு தானென – ஊதும்
    மகுடிக்கு அடங்கினாயோ!!

    அடங்கியதால் தவறென்று
    முடக்கியுனை போட்டுவிட்டு
    சடங்குகள் கொண்டாடி – உன்னை
    அடக்கிவைத்தல் நியாயம்தானே?!!

     

    Share