உயிர்ப்பிழந்த சாசனங்கள்!!!

 

-மகேந்திரன்

நியாயத்தின் சாரங்களால்
நியமனம் செய்யப்பட்ட
நிதர்சன சாசனங்கள் – யாவும்
நீர்த்துப்போன படிமங்களோ?!!

படிமங்களாயின் பாதகமில்லை
வடிவங்கள் உருமாறி
நொடியிழந்த மணித்துளியாய் – தாவும்
கடிவாளமற்ற புரவியாமோ?!!

புரவியின் பிடரியாய் உலுக்காது
நரம்புகள் தளர்ந்து
தரங்களின் துணை தவிர்த்த – காவாம்
நரகத்தின் காவலாமோ?!!

காவலின் தொனியிலே
பாவலன் போல் இறுமாந்து
சேவகம் தனை மறந்து – பாழும்
நாவடி பிறழ்ந்த வஞ்சகமோ!!

வஞ்சகப் பேய்களுக்கு
தஞ்சம் கொடுத்துவிட்டு
நெஞ்சம் அழுகிப்போன – மேவும்
மஞ்சம் வீழ்ந்த சாமரமோ!!

சாமரத் தென்றல் வீசி
கமல வதனம் சிவந்திருக்க
கோமள நாண்பூண்டு – ஆங்கே
தமனியன் தாள் புகுந்தாயோ!!

புகுந்த வீட்டிலோ
தகுந்த மரியாதை இல்லாது
வெகுண்டால் வெண்காடு தானென – ஊதும்
மகுடிக்கு அடங்கினாயோ!!

அடங்கியதால் தவறென்று
முடக்கியுனை போட்டுவிட்டு
சடங்குகள் கொண்டாடி – உன்னை
அடக்கிவைத்தல் நியாயம்தானே?!!

 

Share

Comments

11 responses to “உயிர்ப்பிழந்த சாசனங்கள்!!!”

  1. தேமொழி 

    எதுகை, மோனை ஆகியவற்றுடன் சிறப்புடன் அமைந்த இந்த அந்தாதிப்  பாடல் அருமை.  
    கவிஞருக்கு அன்பான பாராட்டுக்கள். 

    ….. தேமொழி 

  2. Selvalumar

    Excellent……….you have to write more and more….to reach each and everybody…..

  3. கருத்துச் செரிவுள்ள அருமையான கவிதை. வாழ்த்துக்கள் திரு மகேந்திரன்.

    அன்புடன்
    பவள சங்கரி

  4. சந்தமிகு சொற்கள் கோர்த்து அந்தாதி தனைத் தந்து சிந்தையினைக் குளிர வைத்த சொந்தமிகு சகோதரர் மகேந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  5. தனுசு

    சட்டம் தான் நீதி தரும். சட்டமே செத்து விட்டால்…. வெத்து வேட்டு தான்.

    சாப்பிட சாப்பிட வயிறு நிறைந்து விட்டாலும் அதன் சுவையால் கையும் வாயும் அதனை இன்னும் கேட்கும். அப்படித்தான் இந்தக்கவிதை திரும்ப திரும்ப படித்தாலும்
    சலிக்காமல் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது. இன்னும் இது போல் தாருங்கள்.

  6. மாதவன் இளங்கோ

    சாசனங்கள் – நீர்த்துப்போன படிமங்களோ? ; கடிவாளமற்ற புரவியோ?; நரகத்தின் காவலாமோ? நெஞ்சம் அழுகிப்போன, மஞ்சம் வீழ்ந்த சாமரமோ?;
    சாசனங்கள் – உண்மையிலேயே உயிர்ப்பிழந்து; மரித்தும் போய்விட்டன!!
    அருமை நண்பா! வாழ்த்துகள்! இந்தக் கவிதை வரிகளை முதலில் வாசித்தவன் என்கிற முறையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!!

  7. rajeshbabu

    Remba nalla irruku mahindra

  8. சச்சிதானந்தம்

    ஒவ்வொரு வரியும் அருமை. வாழ்த்துக்கள் திரு.மகேந்திரன்.

  9. மேகலா இராமமூர்த்தி

    கவிதை ஓட்டம் நன்றாக இருக்கிறது. சொற்களின் தேர்வும் சிறப்பு. தொடர்ந்து கவிமழை பொழிந்து வல்லமை வாசகர்களை நனைத்திடுங்கள். பாராட்டுக்கள்!!

  10. மகேந்திரன்

    அன்பின் தோழமைகளுக்கு வணக்கம்…
    சிறந்த கருத்துக்கள் பகிர்வுக்கு 
    எனது மனமார்ந்த நன்றிகள்.
    தொடர்ந்து படைப்புகள் கொடுக்க விழைகிறேன்…

  11. அழகாய் வந்த அந்தாதிக்கு வாழ்த்துகள். சோதரனே உங்கள் சொல்லாடல் எனக்குப் புதிதல்ல. வல்லமை உள்ள எழுத்துகளால் கவியுலகில் இறுக்கமாகக் கால் பதித்துள்ளீர்கள் . மறந்தும் அதை இழுத்தெடுக்காது தொடர்ந்து கவி படியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *