மேகலா இராமமூர்த்தி

குடிமக்கள் காப்பியமாக இன்றளவும் கோலோச்சும் சிலப்பதிகாரத்தில்  இளங்கோவடிகள் பேசாத பொருளில்லை; பாடாத தெய்வமில்லை எனுமளவிற்குப் பல்வேறு துறைகளையும் தொட்டுக்காட்டி, நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றார்.

சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், சமணம் என்ற பல்வேறு மதங்களின் வழிபடு தெய்வங்களையும் எவ்விதப் பேதமுமின்றிப் போற்றிப் பாடியுள்ளார். பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானையும், நீலமேனி நெடியோனாகிய திருமாலையும், அறுமுகச் செவ்வேளையும், மாலை வெண்குடை மன்னவனாகிய இந்திரனையும் பாடியுள்ளார்.

மதுரைக் காண்டத்தில் ’வேட்டுவ வரி’ என்ற பகுதியில் கொற்றவையின் பெருமை வேட்டுவர்கள் மூலம் பேசப்படுகின்றது. வஞ்சிக் காண்டத்தில் இடம்பெற்றுள்ள இனிய பகுதியாகிய ‘குன்றக் குரவை’யில் மலைவாழ் மக்களாகிய குறவர், செவ்வேளாகிய முருகனைப் பாடிப் பரவிக் குரவையாடுகின்றனர். வெவ்வேறு தெய்வங்களைத் தொழுதேத்தும் வேறுபட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் மூலம் அத்தெய்வங்களின் சிறப்பை அடிகள் நமக்கு கூறிச்செல்கின்றார். அவ்வாறு அவர் நமக்கு சுட்டிச் செல்லும் ஓர் அழகிய பகுதியே ஆய்ச்சியர் (இடையர்குல மக்கள்) திருமாலைப் போற்றிப் பரவும் ‘ஆய்ச்சியர் குரவை.’ மேற்குறிப்பிட்ட ‘வேட்டுவ வரி’, ‘குன்றக் குரவை’ ஆகியவற்றினும் விஞ்சிய பக்திச்சுவை ’ஆய்ச்சியர் குரவை’ப் பாடல்களில் வெளிப்பட்டிருப்பது கற்பார்க்கு நன்கு புலனாகும்.

திருமாலின் அவதாரப்  பெருமைகளையும், அவன் செய்த  அருளிச் செயல்களையும் இப்பகுதியில் படிக்கும்போது, அக்காட்சிகளை நாமும் நேரில் காண்பதுபோலவே அல்லவா செய்துவிடுகின்றார் அடிகள்! சிலம்பில் இளங்கோவின் முத்திரை பளிச்சிடும் பகுதிகளில் தலைசிறந்த ஒன்றாக ‘ஆய்ச்சியர் குரவை’ திகழ்கிறது என்று கூறினால் அஃது மிகையில்லை. அத்துணை சிறப்புமிகு ’ஆய்ச்சியர் குரவை’யைச் சற்றே நாமும் சுவைத்தின்புறுவோம் வாருங்கள்.

ஆயர் முதுமகளான  ’மாதரி’ (கண்ணகிக்கும், கோவலனுக்கும் மதுரையில் அடைக்கலம் தந்தவள்) காலையில் எழுந்ததும் தயிர் கடைவதற்காகக் கடைகயிற்றுடன் தயிர்த் தாழியிடம் செல்கின்றாள். தாழியில் பால் உறையாதது கண்டு திகைக்கிறாள். அத்தோடு ஆநிரைகளின் (பசுக்கள்) கண்களிலிருந்து கண்ணீர் வழிவதையும், அவை நடுங்கி நிற்பதையும் கண்டு, ’நமக்கு ஏதோ தீங்கு வருவதற்கான அறிகுறிகளாக இவை தோன்றுகின்றனவே’ என்று கலங்கி, ’நம் ஆயர்குலத் தோன்றலான கண்ணன், தன் அண்ணனாகிய பலராமனுடனும், காதலியாகிய நப்பின்னையுடனும் சேர்ந்தாடிய பால சரிதங்களைக் குரவைக் கூத்தாக ஆடி அவனைப் பணிவோம். நம் ஆநிரைகளுக்கும், கன்றுகளுக்கும் ஏற்பட்ட துயரத்தை அந்தக் கடல்வண்ணன் களைவான்’ என்று தன் மகளாகிய ‘ஐயை’ என்பவளிடம் கூறியபடிக் குரவையாட ஏற்பாடு செய்கின்றாள்.

குரவைக் கூத்தென்பது  பெண்கள் எழுவராகவோ அல்லது ஒன்பதுபேராகவோ இணைந்து, நண்டுபோல் (மோதிர விரலையும், நடுவிரலையும் மடித்து) கைகோர்த்துக் கொண்டு கண்ணனின் புகழ்பாடியபடியே ஆடும் கூத்தாகும். இங்கே மாதரி, ஆயர்குல மகளிர் எழுவரை வரிசையாக நிறுத்தி அவர்களுக்கு மாயவன், பலதேவன், நப்பின்னை என்று (குரவை முறைப்படி) பெயர்சூட்டுகின்றாள். பின்பு நப்பின்னை என்று பெயர் சூட்டப்பட்டவள் தன்னருகில் நிற்கும் மாயவன் கழுத்தில் துழாய் (துளசி) மாலையைச் சார்த்தி கூத்தாடிக் கொண்டே பாடுவதாக இப்பகுதி அமைகின்றது. அவள் கண்ணனைப் புகழ்ந்து பாடுவதாக ’அடிகள்’ இயற்றியுள்ள பாடல்கள் தேனில் தோய்த்தெடுக்கப்பட்ட பலாச்சுளைகளாக இனிக்கின்றன. அவற்றை நாமும் சற்றுக் காதுகொடுத்துக் கேட்போம்.

”கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ!

கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன்
எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ!”

இப்பாடல்களில் கண்ணனின் லீலாவிநோதங்கள் சிறப்பாய்ப் பேசப்படுகின்றன. கண்ணனின் மாமனாகிய ’கம்சன்’ குழந்தைக் கண்ணனைக் கொல்ல எத்தனையோ வழிமுறைகளைக் கையாள்கின்றான்; கணக்கற்ற அரக்கர்களையும், அரக்கியரையும் ஏவுகின்றான். அந்த ஆபத்துக்களையெல்லாம் அத்தெய்வக் குழந்தை மிகச் சாதாரணமாக எதிர்கொண்டு அப்பலவான்களைப் பந்தாடிய வரலாறு மிகச் சுவையானது. அவ்வரலாறுகளில் சில இப்பகுதியில் காட்டப்பட்டுள்ளன.

கண்ணனைக் கொல்ல  விளா மரமாக வந்து நின்றான் ஓர் அரக்கன்; மற்றொரு அரக்கனோ கன்றுக்குட்டியாக வந்து நின்றான். ஆனால் சகலமும் அறிந்த அந்த மாயக் குழந்தை என்ன செய்தது தெரியுமா? கன்றிக்குட்டியாக வந்த அரக்கனையே குணிலாகக் (குறுந்தடி) கொண்டு, மரமாக நின்ற அரக்கன் மீது மோதி விளாங்கனியைக் கீழே விழச்செய்து இருவரையும் ஏககாலத்தில் அழித்தொழித்தது.

கண்ணனைக் கொல்வதற்குக் குருந்த மரமாக வடிவெடுத்து நின்றான் மற்றோர் அரக்கன். அம்மரத்தை முறித்து அரக்கனை அழித்தான் கண்ணன். இத்தனை மாயங்கள் செய்த அந்தக் கண்ணன் இப்போது நம் பசுக்கூட்டங்களுக்கு மத்தியில் வருவானேயானால், உலகையே மயக்கும் அவன் புல்லாங்குழல் இசையை நாமும் கேட்டு இன்புறலாமே தோழீ! என்று பாடியபடியே குரவை ஆடுகின்றனர் ஆய்ச்சியர்.

‘முன்னிலைப் பரவல், படர்க்கைப் பரவல்’ என்ற தலைப்புக்களில் இங்கு இடம்பெற்றுள்ள பாடல்கள் திருமாலின் பல்வேறு அவதாரச் செய்திகளையும், அவற்றின் சிறப்புக்களையும் அற்புதமாக விவரிக்கின்றன.

”வானுலகத்திலுள்ள அமரர்களும் ’அறுதியான உறுதிப் பொருள் இவனே’ என்று போற்றித் துதிக்கும் திருமால், துவாபர யுகத்தில் கண்ணனாய் அவதரித்தான் என்பது அனைவரும் அறிந்ததே. குழந்தையாக இருந்தபோது, பசியே இல்லாமல் அனைத்து உலகங்களையும் உண்டவன் அந்தக் கண்ணன். அப்படி உலங்களையெல்லாம் உண்டவன், ஆயர்பாடியில் எல்லா வீட்டிற்குள்ளும் திருடனைப்போல் புகுந்து உறியிலிருந்த வெண்ணெயையும் உண்டானே! துளசி மாலை அணிந்தவனே, இஃதென்ன மாயம்…..! அச்சமும், வியப்பும் மேலிடுகின்றதே!

அமரர்களெல்லாம் தொழுதேத்தும் திருமால், மற்றொரு சமயம் வாமனனாக (குள்ளன்) அவதாரம் செய்தான். மாபலிச் சக்கரவர்த்தியிடம் சென்று, ’மூன்றடி நிலம் வேண்டும்’ எனக் கேட்டான். மன்னனோ ஏளனத்துடன் ’உனக்கு வேண்டிய மூன்றடியை நீயே அளந்து எடுத்துக்கொள்’ (இந்தக் குள்ளன் மூன்றடியால் எவ்வளவு தூரத்தை அளந்துவிடப் போகிறான்? என்ற எண்ணம்) என்று கூற, அதுவரையில் வாமனனாக இருந்தவன் வானளவு உயர்ந்த ’திரிவிக்கிரமனாக’ மாறித் தன் செந்தாமரை போன்ற சிவந்த பாதங்களினால் இரண்டே அடிகளில் மூன்று உலகங்களையும் (அவற்றின் இருள் நீங்குமாறு) அளந்தான் அல்லவா! அப்படிப்பட்டவன் சாதாரண மனிதன்போல் பாண்டவர்களுக்காகவும் ’துரியோதனிடம்’ தூதனாக நடந்து சென்றான். பிரகலாதனைக் காக்க ’நரசிங்கமாக’ அவதரித்துப் பகைவனாகிய ‘இரணியனை’ அழித்தவனும் இந்தத் திருமால்தான் அன்றோ! இவற்றையெல்லாம் எண்ணும்போது மனம் மருட்சிகொள்கின்றதே!”

மேற்கண்ட நிகழ்ச்சிகள் அடிகளின் அமுதவரிகளில்…….

”………………………………………………………………………………………………………………………………………………

அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே உலகடைய வுண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்துழாய் மாலையாய்! மாயமோ? மருட்கைத்தே!

திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ? மருட்கைத்தே!”

”மூவுலகங்களையும் இரண்டடியால் அளந்த அந்தப் பரம்பொருள், திரேதா யுகத்தில் இராமனாக அவதரித்துத் தன் சிவந்த அடிகள் மேலும் சிவக்கத் தன்னருமைத் தம்பியாகிய இலக்குவனோடு கான் புகுந்து, தன் மனைவியை மீட்கும் பொருட்டு ’சோ’ என்ற அரணையும், இலங்கை நகரின் காவலையும் அழித்தவன் ஆயிற்றே! அவன் பெருமைகளைக் கேளாத செவி என்ன செவி? என்று சினந்து வினவுகின்றார் இளங்கோவடிகள்.

அந்தப் பெரியவனை, மாயக்காரனை, உலகமெல்லாம் தன் உந்தியில் விரித்தவனை, கண்களும், திருவடிகளும், கைகளும், அழகிய வாயும் சிவந்து தோன்றும் கரு நிறமுடையவனைக் காணாதகண்கள் என்ன கண்கள்? (பயனற்ற கண்கள்). கண்ணிமைத்துக் காண்பாருடைய கண்கள்தாம் என்ன கண்கள்? (இறைவனின் அழகைக் கண்ணிமைக்காது காணவேண்டும் என்ற குறிப்பு இங்கே சொல்லப்படுகின்றது. இல்லையேல் அஃது பயனற்றது என்கிறார் இளங்கோ).

அறியாமை நிறைந்த  கஞ்சனின் (கம்சன்) வஞ்சத்தை வென்றவனை, வேதங்கள் முழங்க, அனைவரும் புகழப் பாண்டவர்களுக்காக ’நூற்றுவரிடம்’ (நூறு பேர் -கவுரவர்கள்) தூதாக நடந்தவனைப் புகழாத நா (வாய்) என்ன நா? நாராயணா என்று சொல்லாத நா என்ன நா? என்று அடிகள் தொடுக்கும் சொல்லம்புகள் நம் அகக்கண்களைத் திறந்து திருமால்பால் காதல் கொள்ள வைக்கின்றன.

பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட அடிகள் அருளிய அற்புதப் பாக்கள் நம் பார்வைக்கு…..

”மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே?
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே?

பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே?
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே?

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?
நாராய ணாவென்னா நாவென்ன நாவே?”

ஆழ்வார்களினும் விஞ்சிய  திருமால் பக்தியை, இறைக் காதலை இப்பாடல்களில் சிலப்பதிகார ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறினால் அஃது சற்றும் மிகையில்லை. திருமாலின் திருவருளின்றி இத்தகைய அற்புதப் பாடல்களை, அருட்பாக்களைப் படைத்திருக்க முடியாது என்பதில் ஐயமில்லை.

’ஆய்ச்சியர் குரவை’ வாயிலாய் நாம் அறியும் மற்றொரு முக்கியச்செய்தி, ‘இராமாயணம், மாபாரதம் போன்ற காவியங்கள் சங்க காலத்திற்கு முன்பிருந்தே நம் மக்கள் அறிந்த கதைகளாக வழக்கத்தில் இருந்திருக்கின்றன; அவை நமக்குப் புதியவை அல்ல’ என்பதே அது. (புறநானூறு, அகநானூறு போன்ற சங்க நூல்களிலும் இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன.)

அடுத்து, திருமாலைப் போற்றிப் பாடிய பன்னிரு ஆழ்வார்களில் முதலாமவராகக் கருதப்படும் ‘பொய்கையாழ்வாரின்’ காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவரைவிடக் காலத்தால் மிக மூத்தவர் நம் இளங்கோவடிகள் (கி.பி இரண்டாம் நூற்றாண்டு). அடிகள் இயற்றிய ’ஆய்ச்சியர் குரவை’யே பின்னாளில் இயற்றப்பட்ட வைணவ பக்திப் பனுவல்களுக்கெல்லாம் முன்னோடியாகவும், தோற்றுவாயாகவும் விளங்கின்றது எனலாம்.

சிலம்பில் இடம்பெற்றுள்ள ஓர் சிறிய பகுதியாகிய ’ஆய்ச்சியர் குரவை’யின் மூலம், கண்ணனின் குழந்தைப்பருவ மாயச் செயல்கள் தொடங்கி, அவன் வளர்ந்த பிறகு பாண்டவர்க்காகத் தூது சென்றது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளையும், திருமால் தன் மற்றைய அவதாரங்களில் நிகழ்த்திய அற்புதங்களையும், சாதாரண மக்கள் ஆடுகின்ற எளிய கூத்தின் வாயிலாக, அழகிய இசைப்பாடல் வடிவிலே சுருங்கச் சொல்லி விளங்கவைத்துவிட்ட ’கவிப்பேரரசர்’ இளங்கோவின் திறமையையும், நுண்மாண் நுழைபுலத்தையும் என்னவென்று புகழ்வது?

இராமகாதை படைத்த கம்பரை நாம் ’கம்பநாட்டாழ்வார்’ என்று பெருமைப்படுத்தியுள்ளோம். கண்ணன் பாட்டுப் பாடிய மகாகவி பாரதியையும் ஆழ்வார்களில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டாடியுள்ளோம். இவர்கள் அனைவரிலும் காலத்தால் முற்பட்டவரும், திருமாலின் புகழை மிகச்சிறப்பாய் முதலில் எடுத்தோதியவருமான ’தெய்வக்கவி’ இளங்கோவடிகளை நாம் மூத்த ஆழ்வாராக, முதல் ஆழ்வாராகக் கருதிப் போற்றினால் தவறில்லை அல்லவா!

 

படங்களுக்கு நன்றி:

http://www.holydrops.com/photo-gallery/god/lord-krishna/5/83-lord-krishna-with-flute.htm

http://www.holydrops.com/photo-gallery/god/lord-krishna/5/22-krishna-balram.htm

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “ஆழ்வார்கள் வரிசையில் அடிகள்!…

  1. தலைப்பே சிந்திக்க வைக்கிறது, ஆமாம் ஏன் கூடாது?  தவறில்லை என இலக்கிய ஆர்வலர்கள் ஒத்துக் கொள்வார்கள்.   அருமையான இலக்கிய  விருந்து, நன்றி மேகலா.  

    ….. தேமொழி 

  2. படிக்கப் படிக்க ஒவ்வொரு வரியும் தேன் போல் இனிக்கிறது. தங்கள் கருத்துக்கள் சரியென்றே நினைக்கின்றேன். ‘திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே’ என்றும், ‘பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே’ என்றும் பாடியவரை, ஆழ்வாராகக் கருதினால் தவறில்லை என்றே நினைக்கின்றேன். அடிகள் உரைத்த ஆய்ச்சியர் குரவையைத் தங்கள் எழுத்துக்களால் விவரிக்கப் படிப்பது மிக ஆனந்தமளிப்பதாக இருக்கிறது. . கட்டுரையின் ஆரம்பம், வெவ்வேறு மதங்களின் பால் அடிகளின் சமநோக்கு, ஆய்ச்சியர் குரவையை விவரித்திருக்கும் விதம், நிறைவாக, அடிகளும் ஆழ்வாரே என்று நிறுவுதல் என அனைத்தும் அற்புதமாக அமைந்திருக்கிறது. மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் மேகலா!!.

  3. கட்டுரையைப் படித்துத் தங்கள் கருத்துக்களையும், பாராட்டுக்களையும் வழங்கியுள்ள தோழிகள் தேமொழி, பார்வதி இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

  4. ஆம். அருமையான இலக்கிய விருந்து. தாங்கள் இது போன்ற கட்டுரைகளை தொடர்ந்து வழங்கி பழந்தமிழ் இலக்கியங்களை எளிமைப் படுத்தி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். வாழ்த்துக்கள் திருமதி.மேகலா இராமமூர்த்தி அவர்களே!

  5. தங்கள் கருத்துரைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு. சச்சிதானந்தம் அவர்களே. என்னாலியன்ற அளவிற்குத் தமிழிலக்கியங்களை எளிமைப்படுத்தி வல்லமை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *