பிக்கோலிம் புளுகு – 3
தேமொழி
(தொடர்ச்சி)
முன் குறிப்பு:
இது விக்கிபீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம்.
இப்ரம்பூர் மோதல்:
தங்கள் பேரரசின் தெற்கு எல்லையைப் பாதுகாக்க விரும்பிய மராட்டியர்கள் அது குறித்து கோவாவின் ஆட்சி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்பினர். ஆனால் அவ்வதிகாரிகள் அதற்கு உடன்பட மறுத்தனர் [9] [10]. அத்துடன் ஒரு கால கட்டத்தில் போர்சுக்கீசியர்கள் தங்களது கடற்படையை வடக்கு நோக்கி நகர்த்தி, கோலாப்பூர் பகுதியினை ஊடுருவி நோவா கான்கியுஸ்டாஸ் பகுதியில் உள்ள மராடியர்களை விரட்டியடிக்கவும் எண்ணினர். ஆனால் இந்த எண்ணத்தை அவர்கள் நிறைவேற்றத் தயங்கியதற்கு இருந்த ஒரே காரணம், இது மராட்டியர்களுக்கு வெறுப்பை ஏற்றி அவர்களை டச்சுக்காரர்களுடன் கூட்டணி அமைக்கச் செய்து, அந்தக் கூட்டணி போர்ச்க்கீசியர்களுக்கெதிராக மாறி அவர்களுக்கேப் பாதகம் ஏற்படுத்தக் கூடும் என்ற எச்சரிக்கை உணர்வினால்தான் [12].
மோதலின் முதல் துவக்கம் ஏற்பட்டது பேர்நேம் பகுதியில் உள்ள சிறிய ஊரான இப்ரம்பூரில். இப்ரம்பூர் முக்கிய சாலை வழித்தடங்களுக்கும் சப்போரா (Chapora River) ஆற்றுப் பகுதியிலும் அமைந்திருந்தது. போர்ச்சுக்கீசியப் படைகள் இப்ரம்பூரில் குவிக்கப்படுவதாக பிக்கோலிம் பகுதியில் இருந்த மராட்டியர்களுக்குத் தவறான தகவல் கிடைக்கிறது [9]. ஆனால் உண்மையில் அந்த சமயத்தில் போர்ச்சுக்கீசியப் படைகள் எல்லையில் இருந்து வெகு தொலைவில் இருந்த ‘அலோர்னா’ (Alorna Fort) கோட்டைப் பகுதியில்தான் இருந்தது [13].
மராட்டியர்கள் தங்கள் நாட்டின் எல்லையைக் கடந்து குதிரைப்படையை இப்ரம்பூருக்கு உளவு பார்க்க அனுப்பி வைத்தனர் [9]. ஆனால் போர்சுக்கீசியப் படை அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி அங்கு இல்லாது போனாலும், போர்ச்சுக்கீசியர்கள் படை அவ்விடத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கக்கூடும், எனவே இப்ரம்பூரை கண்காணிப்பது அவசியம் என்று மராட்டியப் படைத் தளபதி கருதினார். பிக்கோலிம் மற்றும் பேர்நேம் பகுதியின் போர்சுக்கீசியப் படைகள் ‘மேனுவல் டி எலாமினோஸ்’ (Manuel de Elaminos) தலைமையின் கீழ் வழிநடத்தப் பட்டது. இப்டைத் தளபதிக்கு மராட்டியர்கள் இப்ரம்பூரில் நுழைந்து விட்ட தகவல் கிடைத்தது. மராட்ரடியர்களின் ஊடுருவல் தகவல் கோவாவில் உள்ள வாஸ் கோட காமா நகருக்கும் அறிவிக்கப்பட்டது [13]. இத்தகவல் அறிந்ததும் போர்ச்சுக்கீசியர்கள் அலோர்னா கோட்டையினை பாதுகாப்பில்லாத நிலையில் விட்டு விட்டு இப்ரம்பூருக்கு படையை நகர்த்தி அங்கிருக்கும் மராட்டியர்களைத் தாக்க முடிவு செய்தனர் [13].
ஆகஸ்ட் 1640 ஆம் ஆண்டு நடந்த போர்ச்க்கீசியத் தாக்குதல் விரைவாகவும் திறம்படவும் நடத்தப்பட்டது. இப்ரம்பூருக்குச் செல்லும் மேற்கிலும் வடக்கிலும் இருந்த இரு முக்கிய வழித்தடங்களும் சூழ்ந்து கொள்ளப்பட்டது. நகருக்கு அதிக சேதம் விளைவிப்பதைத் தடுக்கும் பொருட்டு காலாட்படைகளையே அடுத்தடுத்து அனுப்பி போர்ச்சுக்கீசியர்கள் போரை நடத்தினர். காலாட்படையினறுக்குச் சிறிய சேதம் ஏற்பட்ட நிலையில், மராட்டியர்கள் குவித்திருந்த சேனையின் அளவைக் கண்டதும் போர்சுக்கீசியர்கள் பின்வாங்கத் தொடங்கினர் [9]. போரில் தங்கள் கை மேலோங்கியிருப்பதை உணர்ந்த மராட்டியர்கள் போர்சுக்கீசியர்களை அலோர்னா கோட்டைக்கு செல்லும் வழியில் விரட்டியடிக்க முடிவெடுத்தனர் [9]. மராட்டியர்களின் குதிரைப்படை பின்வாங்கிய போர்ச்சுக்கீசியர்களின் காலாட்படையை மேலும் எல்லையையிலிருந்து துரத்தியது. தொடர்ந்த போரின் காரணமாக இப்ரம்பூரின் வடதிசைப் பாதுகாப்பில் இருந்த போர்ச்சுக்கீசியப் படைகள் மேற்குப் பகுதியில் நடைபெறும் போரில் உதவி புரிய வரவழைக்கப் பட்டனர் [9].
ஆனால் ஒப்பிடும்பொழுது அளவில் மிகக்குறைவாக இருந்த வடதிசையின் போர்ச்சுக்கீசியப் படை, இப்ரம்பூரில் இருந்து முன்னேறிய மராட்டியக் காலாட்படைகளினால் தடை செய்யப் பட்டது [9]. அதனால் முதல் நாள் போரின் இறுதியில் இரு துருப்புகள் மட்டுமே எஞ்சின, இழப்புகளும் குறைவாகவே இருந்தது. அத்துடன் மேற்குப் பகுதியின் போர்சுக்கீசியப் படை கையாண்ட புத்திசாலித்தனமான போர் நடவடிக்கைகளினால் ஒரு ஒழுங்கு முறையில் கட்டுப்பாட்டுடன் அவர்களால் பின்வாங்க முடிந்தது [9]. ஆயினும், போரின் தீவிரமும், மராட்டியச் சேனையின் பெரும்பான்மை பலமும் போர்சுக்கீசியர்களால் உடனடியாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அத்துடன், இம்ரம்பூர் மக்கள் மராட்டியப் படைகளை ஆதரித்ததுடன் அவர்களது படைகளையும் பலப்படுத்திக் கொள்ள உதவியுள்ளனர் என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ளும் நிலைக்குப் போர்சுகீசியர்கள் தள்ளப் பட்டனர். இந்துக்கள் பெரும்பானையாக வசிக்கும் இப்ரம்பூர் போன்ற மற்ற பிற எல்லைப்புற ஊர்களுக்கும் இம்பரம்பூர் ஒரு தவறான முன்மாதிரியாக இருந்திருக்கும் என்றும் அவர்கள் நம்பத் தொடங்கினர் [14].
தொடர்ந்து இரண்டு நாட்களாக அலோர்னா கோட்டையினை நோக்கி மராட்டியர்கள் விரட்டிய பின்பு கோவாவின் வாஸ் கோடா காமா பகுதியிலிருந்த போர்ச்சுக்கீசியப் படை போர்ச்சுக்கீசியர்களின் உதவிக்கு வந்து சேர்ந்தது [9]. இதனால் ஏற்பட்ட சமஅளவுள்ள படை பலத்தினால் போர்ச்சுக்கீசியர்களுக்கு மராட்டியர்களை எதிர்த்து நிற்கும் திறன் ஏற்பட்டது. அடுத்த நாள் மேற்கொண்ட திறமையான நடவடிக்கைகளினால் இருபடைகளும் ஒன்றை ஒன்று முன்னேறவிடாதவாறு முடக்கப் பட்ட நிலை ஏற்பட்டது. அடுத்து தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இந்த நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் நிகழவில்லை. இருதரப்பினரும் தேவையற்ற, ஆபத்து நிறைந்த வழிகளை மேற்கொண்டு இழப்புகளை அதிகப்படுத்தும் நிலையினைத் தவிர்க்க விரும்பினர் [9]. இருதரப்பினரும் தற்காப்பிற்காக மட்டுமே தாக்குதலை நடத்த முயன்றனர். போரின் முதல் இரு துவக்க நாட்களில் மராட்டியப் படை ஏற்படுத்திய சேதங்கள் போர்ச்சுக்கீசியர்களை அலோர்னா கோட்டையினை நோக்கி பின் வாங்க வைத்திருந்தது. ஆனால் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டு பின்வாங்குதல் நிறுத்துப் பட்டிருந்தது. தனது திறமையான குதிரைப்படையினை கையாண்ட விதத்தின் மூலம் போர்ச்சுக்கீசியர்களைத் தாக்காமல் அவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே மராட்டியப் படை தடை செய்தது [9].
ஜூலை மாதத்தின் துவக்கத்தில், இம்பர்ம்பூரில் இருந்து வெகு தொலைவிற்கு நகர்த்தப் பட்டு விட்ட காரணத்தினால், போர்ச்சுக்கீசியர்கள் பீரங்கிகளை போரில் உபயோகப் படுத்த தங்கள் மேலிடத்தின் அனுமதியைப் பெற்றனர். பீரங்கித் தாக்குதல் மராட்டியக் காலாட்படையினை செயலிழக்கச் செய்ய உதவியது, ஆயினும் இத்தாக்குதலினால் ஏற்பட்ட சேதத்தின் அளவு குறைவே. தொடர்ந்த பீரங்கித் தாக்குதல் மராட்டியக் குதிரைப் படைகளைக் குறிவைத்தது. இதனால் சுடப்படக்கூடிய தாக்குதல் எல்லையிலிருந்து மராட்டியப் படைகள் பின்னடைந்தன [9].
மராட்டியர்கள், அலோர்னா கோட்டையின் அருகாமையை விட்டு விலகி, மீண்டும் ஒருங்கிணைத்து, சாலையின் தென்திசையில் இருந்து வேகமாக முன்னேறித் தாக்கி எதிரியின் பீரங்கிப் படையைச் சிதறடித்து அவர்களுக்கு பேரிழப்பை உருவாக்கத் திட்டமிட்டனர் [9]. போர்ச்சுக்கீசியர்களின் கைவசம் இருந்த உயர் தொழில்நுட்ப போர்க்கருவிகளுக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் தங்களது போர்த் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு மராட்டியப் படைகள் தள்ளப்பட்டன.
மராட்டியர்களின் போர்த்திட்டத்தைப் புரிந்து கொண்ட போர்ச்சுகீசியர்கள் விரைவில் தங்களது படைகளைப் பல பிரிவுகளாக்கி புதிய வேகத்துடன் முன்னேறிய மராட்டியப் படையினை எதிர்த்துத் தாக்கினர். இத்தாக்குதல் முறையினை சற்றும் எதிர்பாராத மராட்டியப் படை, எதிர் தாக்குதலில் நிலைகுலைந்து மேலும் தென் திசையை நோக்கி, சப்போரா ஆற்றினை நோக்கி நகர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது [9].
சப்போரா ஆற்றினை அடைந்த மராட்டியக் குதிரைப் படை, மராட்டிய எல்லைக்குள் பின்வாங்கி தந்திரமாக போர்ச்சுக்கீசியப் படையினை அவர்களது பாதுகாப்பான கோவா பகுதியில் இருந்து நகரச் செய்து தங்களது மராட்டிய எல்லைக்குள் இழுக்க நினைத்தனர். ஆனால் போர்ச்சுகீசியப் படையோ சப்போரா ஆற்றினை நோக்கி முன்னேறுவதைத் தவிர்த்தனர் [9]. ஜூலை மாதத்தின் முடிவில் மராட்டியப் படைகள் தங்கள் எல்லைக்குள் ஒருங்கிணைந்தன. அலோர்னா கோட்டையினைப் பலப்படுத்திய பிறகு, ஆல்பெர்ட்டோ பின்ட்டோவின் தலைமையின் கீழ் போர்ச்சுக்கீசியப் படைகள் சப்போரா ஆற்றின் வடக்கில் பரவலாக நிலைகொண்டு தங்களது நிலையினை நன்கு பலப்படுத்திக் கொண்டனர் [11].
(தொடரும்)
படம் உதவி:
அலோர்னா கோட்டை – http://www.portugal-india.com/en/sites/default/files/alorna4.jpg
______________________________________
References:
[1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
[2] Thompson op cit. p 208.
[3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
[4] Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868. ISBN 8189004077
[5] Hunter, William W, The Imperial Gazetteer of India, Trubner & Co, 1886
[6] Thompson op cit. p 199.
[7] Thompson op cit. p 200.
[8] Thompson op cit. p 201.
[9] Srinivasan Vasantakulan, Bharaitiya Struggles, (1000 AD – 1700 AD), Voice of India, 1998. ISBN 9789132145612
[10] Thompson op cit. p 203.
[11] D’Souza David, Roots of conflict in Portuguese Goa, Dakini Books, 1961. ISBN 9782354278882
[12] Thompson op cit. p 211.
[13] Thompson op cit. p 212.
[14] Thompson op cit. p 206.
[15] Kansarpal (http://www.hindubooks.org/templesofindia/sarvam_sakti_mayam/goa/kansarpal.htm) Hindu religious and cultural locations
[16] Thompson op cit. p 215.
[17] Thompson op cit. p 219.
Further reading
Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868
Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996
Sakshena, R.N, Goa: Into the Mainstream, Abhinav Publications, 2003